மறுமை நாள் நெருங்கிவிட்டால் மனிதனுக்கு தன்னுடைய பிள்ளையை
வளர்ப்பதை விட நாய்க் குட்டியை வளர்ப்பது நல்லதாகத் தெரியும் என்ற நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள. (ஹாகிம் - 3/386)
ஏறக் குறைய இன்று அதே நிலை தான் உள்ளது. பிள்ளைகளை ஒழுக்க
சீலர்களாக ஆக்குவதற்காக பெற்றோர் படாதபாடு படுகின்றனர். குழந்தை பிற்நது விட்டால் முதலாவதாக
குழந்தையின் வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் சொல்வது நபிவழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்கள்கள் பிறந்த சமயம்
வலது காதில் அதானும் இடது காதில் இகாமத்தும்
சொன்னார்கள். (அல்பைஹகீ)
அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடாது. அவனை வணங்க வேண்டும்.
பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும், என பல விஷயங்களை லுக்மான (அலை) அவர்கள் தனது மகனுக்கு
கற்றுக் கொடுத்தார்கள். தந்தையின் உபதேசத்தைக் கேட்டு அதன்படியே நடந்ததாகவும் வரலாறு.
(தஃப்ஸீருல் ஜமல்)
விபச்சார சிந்தனை கூட இல்லாத ஒரு சூழலை உருவாக்குவதற்குத்
தேவையான வழிகாட்டு நெறிகள் அனைத்தும் சொல்லப்பட்டுள்ளன. பிள்ளைக்ள வயதுக்கு வருவதற்கு
முன்னரே வாழ்க்கையைப் பாழடிக்கக்கூடிய பாலியல் சிந்தனை தூண்டப்படாமல் இருபபதற்காக குர்ஆன்
பின்வருமாறு போதிக்கிறது.:
இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுடைய அடிமைகளான ஆண்களும்
பெண்களும் பருவ வயதை அடையாத உங்கள் சிறுவர்களும் உங்களிடம் வருவதற்கு மூன்று நேரங்களில்
அனுமதி பெற்றுக் கொள்ளட்டும். ஃபஜ்ர் தொழுகைக்கு முன், மதிய வேளையில் நீஙகள் உங்கள் ஆடைகளை
களைந்திருக்கும் போது இஷா தொழுகைக்குப் பின்னர் ஆகிய இம்மூன்று நேரங்களும் நீங்கள்
மறைவாக இருக்க வேண்டிய நேரங்கள். (அல்குர்ஆன் - 24:58)
பெற்றோர் தனிமையில் இருக்கும் போது பிள்ளைகள் படுக்கையறைக்கு
வந்துவிட்டால் தாங்கள் கண்டதை பிறரிடம் சொல்லிக்காட்டும் என்பது மட்டுமல்ல,
அவர்களுடைய உள்ளங்களில்
தவறான எண்ணங்களை விதைத்துவிடும். வீட்டுப் பிள்ளைகளுக்குக் கூட இது போன்ற உயரிய பண்பாட்டைப்
போதிப்பது குர்ஆன் மட்டுமே!
படுக்கையைத் தனியாக்குங்கள்:
உங்களுடைய பிள்ளைகள் ஏழு வயதை அடைந்து விட்டால் தொழுமாறு
ஏவுங்கள். பத்து வயதை அடைந்து(ம் தொழா)விட்டால் அவர்களை தொழச் சொல்லி அடியுங்கள். அவர்களுடைய
படுக்கையை பிரித்து விடுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். (அபூதாவூத்)
தொழுகைக் கல்வி:
நபி (ஸல்) அவர்கள் எப்படி தொழுகிறார்கள்?, என்று பார்த்து அறிவதற்காகவே
நபித்தோழர்கள் நீண்ட பயணம் செய்து மதீனா வந்திருக்கிறார்கள். வாயிலுப்னு ஹுஜுர் (ரலி)
அவர்கள் யமன் தேசத்திலிருந்து வரும்போதே நபி (ஸல்) அவர்கள் தொழும் முறையை நன்கு கவனித்து
பார்ப்பேன், என்று முடிவு செய்திருந்தார்கள். (திர்மிதீ)
நபியவர்களின் தொழுகையைப் பற்றி தங்களுக்கு மத்தியில் நபித்தோழர்கள்
பேசிக் கொண்டவை தான் இன்று நம்முன் காட்சியளிக்கின்றன.
ஒரு தடவை பத்து நபித்தோழர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடினர்.
அப்பொழுது அபூகதாதா (ரலி) அவர்கள் நபியவர்களின் தொழுகையைப் பற்றி உங்களை விட எனக்கு
நன்கு தெரியும், என்று கூறுகிறார்கள். அதற்கு மற்றவர்கள் நீங்கள் நபியவர்களிடம் எங்களை விட முந்நி
வந்தவருமில்லை. நபியவர்களோடு எங்களைவிட அதிகமாக சேர்ந்திருக்கவுமில்லை. பிறகெப்படி
அழகிய முறையில் அறிந்திருக்க முடியும்? என்று கேட்டனர்.
அதற்கவர் ஆம் உண்மைதான், என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்களின்
தொழுகையைப்பற்றி நிறைவாகவும் சிறப்பாகவும் எடுத்துக் கூறினார். (திர்மிதீ)
இன்று நமக்கு மத்தியில் தொழுகை முறைகளைப் பற்றி பேசிக்
கொள்வதற்கு எங்கே நேரம் கிடைக்கிறது? இஸ்லாத்தின் முக்கியக் கடமை பற்றி முழுமையாகக் கற்றுக்
கொள்ள வேண்டுமென்பதில் நபி (ஸல்) அவர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள்.
எனவே தான் என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அப்படியே தொழுங்கள்!,
என்று கூறிய நபி (ஸல்)
அவர்கள் (தொழுகை முறைகளை நன்கு புரிந்து கிரகிக்கக் கூடிய) விளக்கமுள்ளவர்கள் எனக்குப்
பக்கத்தில் (முதல் வரிசையில்) நிற்க வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். (திர்மிதீ)
குழந்தையை நல்லவனாகவும் தீயவனாகவும் மாற்றுவது பெற்றவர்களே!
குழந்தையின் தொடக்கப்பள்ளி தாயுடைய மடி தான், என அலி (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும் நூலைப் போல சேலை. தாயைப் போல பிள்ளை என்றும் தொட்டில் பழக்கம் சுடுகாடு முட்டும்,
ஐந்தில் வளையாதது ஐம்பதில்
வளையுமா? என்றெல்லாம்
பழமொழிகள் உள்ளன.
இதே போன்று குழந்தையை மனிதப் புனிதனாக ஆக்கிய பெற்றோர்களும்
இருக்கின்றனர். குழந்தையை மனிதகுலத்தின் அணுகுண்டுகளாக மாற்றிய பெற்றோர்களும் உண்டு.
ஒரு பெண்ணை அவளுடைய செல்வத்துக்காகவும் கோத்திர உயர்வுக்காகவும்
அவளுடைய அழகுக்காகவும் அவளுடைய மார்க்கப் பற்றுக்காகவும் ஒரு பெண் திருமணம் முடிக்கப்படுகிறாள்.
எனவே, நீங்கள்
மார்க்கப் பற்றுள்ள பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள். (புகாரி)
மார்க்கப்பற்றுள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் அந்தப்
பெண்மூலம் இவருக்கு கண்குளிர்ச்சி ஏற்படும். அவள் தனது கணவருடைய பொருளை பாதுகாப்பாள்.
குழந்தைகளுக்கு ஒழுக்கம் கற்பித்துக் கொடுப்பாள். தனது சொல், செயல் மூலம் முன்மாதிரியாக
இருபபாள். குர்ஆன் மற்றும் நபிவழியை குழந்தைக்கு போதிப்பாள். ஹலால் ஹராம் பற்றி கற்றுக்கொடுப்பாள்.
நபி (ஸல்) மற்றும் நபித்தோழர்களின் தியாக வரலாற்றை அறியச்
செய்வாள். எனவே, யார் தன்னுடைய பிள்ளைகள் நற்குண சீலர்களாக திகழ வேண்டும், என்று விரும்புகிறாரோ அவர்
மார்க்கப்பற்றுள்ள ஸாலிஹான பெண்மணியை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
மணப்பெண் கல்யாண பத்திரிக்கையில் மட்டும் தீன்குலச் செல்வியாக
இருக்கக் கூடாது. வாழ்க்கை முழுவதும் தீன் மணம் கமழ வேண்டும்.
இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களுடைய தாயார் தனது மடியில் குழந்தை
பால் குடிக்கும் போதும் தூங்கும் போதும் பேசும்போதும் எல்லா நிலையிலும் குர்ஆனைக் கற்றுக்கொடுத்தார்கள்.
இமாமவர்கள் பெரியவர் ஆனதும் ஏழு வயதிலேயே குர்ஆனை மனனமாக ஓதுபவர்களாக மாறிவிட்டார்கள்.
இது எப்படி சாத்தியமானது? குழந்தையை வளர்த்த தாயின் மும்முரமான
முயற்சி என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? அவ்வாறே இமாம் புகாரி (ரஹ்) அவர்கள்
தங்களுடைய தாயிடமிருந்து குர்ஆனைக் கற்றுக் கொண்டார்கள், என்று வரலாறு கூறுகின்றது. (அஹ்வாலுத்
தாபியீன்)
தாய் மார்க்க விரும்பியாக இருக்கும் போது குழந்தையையும்
மார்க்க தண்ணீர் ஊற்றி வளர்க்கிறாள். தாய் மார்க்கத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாதவளாக
இருந்தால் குழந்தையும் காலப்போக்கில் அதே நிலைக்கு ஆளாகவிடுகிறது.
நூஹ (அலை) அவர்களுடைய மனைவியைப் பார்த்து அவருடைய குழந்தையும்
காஃபிராக மாறியுள்ளார். (இப்னு கதீர்) ஆனால் பிறக்கும் போது தந்தையை இழந்து பிறந்து
தன்னுடைய ஆறாவது/ ஏழாவது வயதில் தாயையும் இழந்த நபி (ஸல்) அவர்கள் மனித சமுதாயத்திற்கே
முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள், என்றால் அது அல்லாஹ்வுடைய கருணை என்பதில்
எந்த சந்தேகமுமில்லை.