மார்ச் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் தினம். டிசம்பர் 24 ஆம் தேதி தேசிய நுகர்வோர்
தினம்.
ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்ட
தினங்களை அறிவித்து அதன் மூலம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டுமென்பதே நோக்கமாகக்
கொள்ளப்படுகிறது. எனினும் வருடத்தில் அந்த ஒரு தினத்தில் மட்டும் அது தொடர்பாக விழாக்கள்
நடத்துவதால் மட்டும் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது.
பொருட்களைத் தயாரிப்பவர்கள் உற்பத்தியாளர்கள். அவற்றை
வாங்கி பயன்படுத்துபவர்கள், நுகர்வோர்கள் ஆவர். நாம் வாழ்நாள் முழுவதும் நுகர்வோர்களாக இருக்கிறோம்.
உணவு, மருந்து,
துணி, வீட்டு உபயோகப் பொருட்கள்,
தொலைபேசி வசதி,
மருத்துவ சேவை போன்ற
பல சேவைகளைப் பெறுகிறோம்.
இதில் எடை குறைப்பு, கலப்படம், உரிய பில் வழங்காமை, போலியான கம்பெனி இப்படி நுகர்வோரின்
உரிமை மீறல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சந்தையில் எந்த சரக்கை வாங்கினாலும் எந்த
சேவையை பெற்றாலும் இது நிஜமா? போலியா? என்ற பயம் உள்ளத்தை ஆட்கொண்டு விடுகிறது.
1986 ஆம் ஆண்டு வரை வாங்குவோரே உஷார் என்ற
தத்துவத்தின் கீழ் தான் விற்பனைச் சட்டம் அமைந்திருந்தது. ஒரு பொருளை விற்றுவிட்டால்
விற்பவரின் கடமை முடிந்து விடுகிறது. அப்பொருள் எப்படியிருந்தாலும் அது வாங்குபவரின்
தலையெழுத்து. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
1973 ல் மட்டும் உணவுக்கலப்படத்தால் 1063 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
1980 ல் நுகர்வோர்
பாதுகாப்புச் சட்டம் இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்று அந்தச்
சட்டமும் நீதிமன்றமும் பாமரமக்களின் கைக்கு எட்டாத உயரத்தில் உள்ளது.
நுகர்வோர் தொடர்பான எல்லாத் துறைகளிலும் மோசடிகளே மேலோங்கியுள்ளன.
இஸ்லாம் நுகர்வோர் தொடர்பான சட்டங்களை மட்டுமல்ல. அவற்றை நடைமுறைப்படுத்தக் கூடிய சமுதாயத்தையும்
உருவாக்கியது. மறுமை நாள் பயத்தையும் நல்லுபதேசத்தையும் நல்கி மனிதனுக்குள்ளே புதைந்து
விட்ட நியாய உணர்வை உசுப்பி விட்டது.
நுகர்வோர் தொடர்பான இஸ்லாத்தின் போதனையும் அதை இகழ்வோருக்கு
இஸ்லாம் கொடுத்த வேதனையும் அலாதியானது. நேர்மையான உண்மையான வியாபாரிகள் - நபிமார்கள்,
உண்மையாளர்கள்,
ஷுஹதாக்களோடு இருப்பார்கள்,
என்றும் நபி (ஸல்) கூறினார்கள்.
இதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பிற்கு இஸ்லாம் கொடுத்த
முன்னுரிமையை விளங்க முடிகிறது. இஸ்லாம் நுகர்வோர் உரிமைகளை பலவாறாகப் பட்டியல் போடுகிறுத.
அவற்றை வியாபாரிகள் குறிப்பாக இஸ்லாமிய வியாபாரிகள் கவனத்தில் வைத்தால் உலகிற்கு நாம்
தான் முன்மாதிரி சமுதாயம் என்பதை நிரூபிக்க முடியும்.
1. நேர்மை:
நேர்மையான முறையில் அளவை நிறுவையை முழுமையாக நிறைவேற்றுங்கள்.
(அல்குர்ஆன் - 6:152) நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு
வந்த சமயம், மக்கள் நிறுவை, அளவையில் மோசடி செய்ததை கண்டார்கள். அப்போது அல்லாஹுத்தஆலா (அளவை, நிறுவையில்) மோசடி செய்வோருக்கு
நாசம் தான், என்ற வசனத்தை இறக்கி வைத்தான். உடனே மக்களும் திருந்தி நேர்மையாக நடந்து கொண்டார்கள்,
என்று இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (இப்னுமாஜா)
நபித்தோழர்களுக்கு ஒரு இறைவசனம் அவர்களுடைய நீண்ட கால
நடைமுறைகளையும் சரிசெய்வதற்குப் போதுமானதாக இருந்தது. இறைவனுக்கு இணை வைத்தவர்கள் இதற்கு
முன்னர் அழித்தொழிக்கப் பட்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களில் ஷுஜப் (அலை) அவர்களின் சமுதாயத்தினர்
அளவை, நிறுவையில்
மோசடி செய்ததையும் அவர்களின் அழிவுக்குக் காரணமாகக் கூறுகிறது, அல்குர்ஆன்.(அளப்பதும் நிறுப்பதும்
சாதாரண வேலையில்லை) அவ்விரண்டிலும் அநியாயம் செய்ததின் காரணமாக பல முற்கால சமுதாயத்தினர்கள்
இறைவேதனையின் மூலம் நாசமாக்கப் பட்டிருக்கிறார்கள். (எனவே, நீங்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்)
என்று அளவை, நிறுவை வேலையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். என்று
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இன்றைய அகராதியில் மக்களை ஏமாற்றி தன் சரக்கை தள்ளிவிடுபவன்
தான் திறமையான வியாபாரி. நாம் வாங்கக் கூடிய ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஒரு எடை போடப்பட்டிருக்கும்.
ஆனால், நிறுத்துப்பார்த்தால்
குறைவாக இருக்கும்.
குறைவது, இரண்டு கிராமாகக் கூட இருக்கலாம். ஆனால், அதன் மூலம் அந்நிறுவனம் பெரும்
லாபத்தை ஈட்டுகிறது. 50 கிராம் காபிபொடி பாக்கெட்டில் 2.6 கிராம் குறைவாக கொடுத்து மூன்றே வருடத்தில் மூன்று கோடி
ரூபாய் அநியாயமாக சம்பாதித்த நிறுவனங்களும் இருக்கின்றன.
2. கலப்படம் கூடாது:
நபி (ஸல்) அவர்கள் கடைவீதியில் சென்று கொண்டிருந்த போது
ஒரு தானியக் குவியலில் கையை நுழைத்துப் பார்த்தார்கள். உள்ளே ஈரமான தானியம் இருந்தது.
உரிமையாளரிடம் விசாரித்த போது மழையின் காரணமாக ஈராமாகிவிட்டது, என்று கூறினார். ஈராமான தானியத்தை
மேலே வைத்திருக்கலாமே! என்று கூறிவிட்டு, ஏமாற்று வேலை செய்பவர் என்னைச் சார்ந்தவர் அல்ல,
என்று கூறினார்கள்.
(முஸ்லிம் - 147)
இங்கு வியாபாரி தானியத்தை தானாக ஈராமாக்கவில்லை. அப்படியிருந்தும்
கூட கடுமையான வார்த்தை கொண்டு எச்சரித்துச் சென்றார்கள். அப்படியானால் இன்று நடக்கக்
கூடிய கலப்படங்கள் முஸ்லிம் வியாபாரிகளை இஸ்லாத்திலிருந்து வெளியாக்காமல் இருக்குமென்பதற்கு
என்ன உத்தரவாதம்?
நவீன கால கலப்படம்:
ஒரு நேரம் வரை அரிசியில் கல்லைக் கலப்பது, பாலில் தண்ணீரைக் கலப்பது,
ஆட்டிறைச்சியில் மாட்டிறைச்சியைக்
கலப்பது தான் அதிகபட்ச கலப்படமாக இருந்தது. ஆனால் சமீப காலமாக வித்தியாசமான கலப்படதைக்
கையாள ஆரம்பித்திருக்கிறார்கள்.
பாலில் ஜவ்வரிசியை கட்டிப்போட்டு விடுவர். இதனால் பால்
கெட்டியாகி விடும். டீத்தூளில் முந்திரித் தோள், புளியங்கொட்டைத் தோல் கலக்கப்படுகிறது.
இதனால் திடமான டீ கிடைக்கும். இட்லி மாவில் பழைய சோற்றை ஆட்டி கலந்து விற்கின்றனர்.
சில் ஹோட்டல்களில் அரிசியை உலை வைக்கும் போதே சுண்ணாம்பைத்
துணியில் கட்டி அரிசியுடன் சேர்த்து கொதிக்க வைப்பர். இதில் வெந்த சோறு விரைப்பாக இருக்கும்.
அதிகம் சாப்பிட முடியாது. ஹோட்டல் காரர்களுக்கு அரிசி செலவு குறையும்.
3. தீங்கிழைக்கக் கூடாது:
இஸ்லாத்தை பொறுத்த வரை சின்னச் சின்ன சிரமம் கொடுப்பது
கூட அவனை இஸ்லாத்தை விட்டுமே வெளியாக்கிவிடும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. தன்னுடைய கை மற்றும் நாவின் மூலம் (ஏற்படும் தீங்குகளை
விட்டும்) சக முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றால் தான் அவர் உண்மை முஸ்லிமாக முடியும்,
என்று நபி (ஸல்) அவர்கள்
உபதேசித்துள்ளார்கள்.
இந்த நபி மொழியிலிருந்து ஏராளமான சட்டங்களை மார்க்க வல்லுணர்கள்
கூறியுள்ளனர். எந்த ஒரு தனி நபரும் மற்றவர்களுடைய ஆரோக்கியத்திற்கு எந்த பங்கமும் ஏற்படுத்தக்கூடாது.
(அல்லாஹ்வின் நாட்டப்படி) நோயாளியின் கிருமி மற்றவர்களுக்கு தொற்றும் விதமாக நடந்து
கொள்ளக்கூடாது.
ஆனால் இன்று உடல் நிலைக்கு மட்டுமல்ல, உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது.
உணவுக்கலப்படத்தால் உயிரிழப்புகள் ஆயிரக்கணக்கில் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் கூறிக்கொண்டிருக்கின்றன.
சில முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை டெல்லியில்
உள்ள அரசு சாரா அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம் ஒன்று சோதனை செய்த போது டிரான்ஸ்
என்ற கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதனால் மாரடைப்பு, நீரிழிவு போன்ற வியாதிகள் வர வாய்ப்பிருக்கிறது,
என்று அந்த சுற்றுச்
சூழல் மையம் கூறியுள்ளது. யாரும் யாரையும் ஏமாற்றக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள்
கொடுக்கல் வாங்கல் பற்றி சிறந்த போதனைகளை உம்மத்துக்கு வழங்கியிருக்கிறார்கள்.
தனக்கு பிரியப்படுவதையே
தன்னுடைய சகோதரனுக்கும் பிரியப்படாத வரை உங்களில் யாரும் (உண்மையான) முஃமின்- விசுவாசியாக
முடியாது என்று கூறி ஏமாற்று வேலை ஈமானுக்கே பங்கம் விளைவித்துவிடும், என்பதை உணர்த்தியுள்ளார்கள்.
(புகாரி) மார்க்கெட் நிலை பற்றி எதுவும் தெரியாதவனை ஏமாற்றுவது வட்டி என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (பைஹகீ-10706)
4. இருக்கும் குறையை மறைக்கக் கூடாது:
சரக்கில் உள்ள குறைகளை தெளிவாக எடுத்தச் சொல்லிவிட வேண்டும்.
அதற்குப் பிறகு நுகர்வோரின் இஷ்டம். வாங்கலாம். வாங்காமலும் இருக்கலாம். ஆனால் இன்று
குறைகளை மறைத்து விற்பது தான் வியாபாரியின் திறமையாக பேசப்படும் காலம்.
குறைவான வெளிச்சத்தில் சரக்கைக் காட்டி குறையை மறைத்து
விடுகிறார்கள். அல்லது ஜவுளிக் கடைகளில் அளவுக்கதிகமான வெளிச்சத்தின் மூலம் துணியின்
தரம் மற்றும் கலரின் உண்மைத் தன்மையை மறைத்து விடுகிறார்கள்.
5. போலி உத்தரவாதம் கூடாது:
விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. ஆனால்
அவை அனைத்தும் கவர்ச்சிக்காக மிகைப்படுத்தப் பட்டதாகவே இருக்கும். போலியான சரக்கை தரமான
சரக்கு என்று சத்தியம் செய்து விற்கிறார்கள் சரக்கும் போலி; சத்தியமும் போலி.
(பொய்) சத்தியம் செய்து வியாபாரம் செய்பவனை அல்லாஹ் தஆலா
முகம் திரும்பி கூட பார்க்க மாட்டான் என்று
நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (திர்மிதீ) வியாபாரிகள் பாவிகள் ஏனெனில் அவர்கள்
பேசுகிறார்கள்; பொய் சொல்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மூன்று பேர் இருக்கிறார்கள். அவர்களை மறுமை நாளில் அல்லாஹ்
(கருணைக் கண் கொண்டு) பார்க்கவும் மாட்டான். (நரகை விட்டும் பாதுகாத்து) அவர்களை தூய்மைப்
படுத்தவும் மாட்டான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறய போது அல்லாஹ்வின் தூதர் அவர்களே! கைசேதத்திற்குள்ளாகி
விட்டார்கள். நஷ்டப்பட்டுப் போனார்கள் அவர்கள் யார்? என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
1. உபகாரம் செய்து விட்டு சொல்லிக் காட்டுபவர்.
2. கரண்டைக்குக் கீழ் உடை உடுத்துபவர்.
3. பொய் சத்தியம் செய்து சரக்கை தள்ளிவிடுபவர்,
ஆகிய மூவர் என்று கூறினார்கள்
(திர்மிதி - 1132)
6. பதுக்கல் கூடாது:
மக்களுக்கு தேவை இருக்கும் போது சரக்கை விற்காமல் விலை
கூடும் வரை பதுக்கி வைப்பது. மக்களுக்கு தேவையான பொருள் கிடைக்காததால் எந்த விலைக்கும்
வாங்கத் தயாராகி விடுவார்கள். இந்த பதுக்கலை மார்க்கம் தடை செய்திருக்கிறது.
பதுக்கல் காரன்
சபிக்கப்பட்டவன்; அவன் பாவி, என்று நபியவர்கள் எச்சரித்திருககிறார்கள். நாற்பது நாட்களுக்கு உணவுப் பொருட்களை
பதுக்கி வைத்துவிட்டு பிறகு அவற்றை செய்தாலும் அது பதுக்கல் குற்றத்திற்கு பரிகாரமாக
முடியாது. (மிஷ்காத் 1/251)
7. வாக்குறுதிகளை நிறைவேற்றுவது:
வியாபாரிகள் நிறைய வாக்குறுதிகள் கொடுப்பார்கள். நுகர்வோர்
அவற்றை நம்பியருக்கும் பட்சத்தில் ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும். கியாரண்டி,
வாரண்டி கொடுக்கும்
போது அதற்குரிய சேவைகளை அந்நிறுவனம் முறையாக அளித்திடல் வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நபியாக ஆவதற்கு முன் வியாபாரம் செய்திருக்கிறார்கள்.
அச்சமயம் அப்துல்லாஹ் பின் அபில்ஹம்ஸா (ரலி) அவர்கள் நபியவர்களுடன் கொடுக்கல் வாங்கல்
ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். தன்னுடைய அனுபவத்தை இவ்விதம் கூறுகிறார்கள்: நான் ஒரு
தடவை நபி (ஸல்) அவர்களிடம் வியாபார ஒப்பந்தம் செய்தேன். ஒப்பந்தம நிறைவடைவதற்கு முன்
இதே வருகிறேன், என்று வாக்குறுதி கொடுத்து விட்டு சென்றுவிட்டேன். பிறகு எதிர்பாராவிதமாக மூன்று
நாட்களுக்கு அந்த வாக்குறுதி ஞாபகத்திற்கு வரவில்லை. மூன்று நாட்களுக்குப் பின் அந்த
இடத்திற்கு சென்று பார்த்த போது அதே இடத்தில் எதிர்பார்த்திருப்பதைக் கண்டேன். (அபூதாவூத்
- 4344)
இப்படிப்பட்ட உயர்தரமான போதனைகளை மார்க்கம் போதிக்கிறது.
தென்னிந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இஸ்லாமிய வியாபாரிகளின் மூலம் தான் இஸ்லாம்
பரவியது. இஸ்லாமிய பொருளாதார போதனைகளின் படி நடந்து காட்டிய வியாபாரிகள் முஸ்லிமல்லாதவர்களையும்
இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தனர். ஆனால் இன்று அதே போதனைகளின் படி நடப்பது முஸ்லிம்களுக்குக்
கூட சிரமமாக இருக்கிறது. அநத போதனைகளின் படி நடந்தால் வியாபாரத்தில் முன்னேற முடியாது,
என்று பேசினால் கோளாறு
கொள்கையில் இல்லை. மனித சிந்தனை தான் கோளாரு இருக்கிறது, என்றே அர்த்தமாகும்.
No comments:
Post a Comment