Tuesday, 7 April 2015

சிந்திக்க வைக்கும் சூரியன்



 ஏப்ரல், மே மாதம் வந்து விட்டால் சூரியக்கதிர் செங்குத்தாக நம்மீது விழுவதால் வெப்பம் அதிகமாகிவிடுகிறது. வெப்பத்தைத் தணிப்பதற்கான எல்லா முறைகளையும் கையாளுகிறோம். அவசியம் செய்யவும் வேண்டும். உடல் நலத்தைப் பாதுகாப்பதற்காக உணவு, உடை போன்றவற்றில் வெயிலுக்குத் தோதுவாக மாற்றம் செய்யதுகொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள்) வெப்பம் அதிகமாக இருக்கும் போது ளுஹர் தொழுகையை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். (புகாரி)

சூரிய வெப்பத்தின் கடுமையை நரக வெப்பத்தின் பரவல் என்று கூறி நரகைப் பற்றியும் ஞாபகமூட்டி அல்லாஹ்வின் பக்கம் சிந்தனையை திருப்பி விட்டிருக்கிறார்கள். நயவஞ்சகர்கள், மக்களிடம் கடுமையான வெப்பத்தில் (தபூக்) யுத்தத்திற்கு செல்லாதீர்கள், என்று கூறும் போது நரக வெப்பம் அதைவிடக் கொடுமையானது என்று தௌபா அத்தியாயத்தில் எச்சரிக்கிறான். 

எனவே, வெப்பத்தைக் கொட்டிக் கொண்டிருக்கும் சூரியன் கற்றுத் தரும் பாடத்தையும் படித்தாக வேண்டும். சூரியன் எப்படி அல்லாஹ்வின் வல்லமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது, என்பதை சிந்தித்துணர வேண்டும். அதைப் பற்றி குர்ஆனும் பல இடங்களில் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

எரியும் ஒளி விளக்கு:
அதிக வெப்பமும் ஒளியும் கொண்ட ஒரு விளக்கையும் நாம் ஆக்கினோம். அல்குர்ஆன் - 78:13) இந்த வசனம் சூரியனை அதிக வெப்பம் கொண்டதாகக் கூறுகிறது. நெருப்பாக எரிந்து கொண்டிருக்கும் விளக்கு. பார்ப்பதற்கு வட்டமான ஒளிவிளக்காகக் காட்சயளித்தாலும் அது கொழுந்து விட்டு எரியும் ஒரு நெருப்பு மலை.

பூமியில் ஹைட்ரஜன் குண்டுகளை வெடித்தால் என்ன நிகழுமோ அது சூரியனில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சூரியன் தோன்றியது முதல் அதன் உட்பகுதியில் ஒவ்வொரு வினாடியும் 584 மில்லியன் டன் ஹைட்ரஜன் 580 மில்லியன் டன் ஹீலியமாக மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

எனவே, ஒவ்வொரு வினாடிக்கும் நான்கு டன் பொருட்செரிவை இழக்கிறது. இவ்வாறு இழந்து கொண்டே போனால் ஒரு நாள் இந்த சூரியன் ஒன்றுமில்லாமல் போய்விடும். அதற்கு இன்னும் 500 கோடி ஆண்டுகள் ஆகும், எனக் கருதுகின்றனர்.

சூரியனுடைய மேற்பரப்பில் அதனுடைய வெப்பம் 6000 டிகிரி சென்டிகிரேட். அதன் உட்பகுதியோ இரண்டு கோடி டிகிரி சென்டிகிரேட் ஆகும். இவ்வளவு வெப்பம் கொண்ட சூரியன் நேரடியாக முழு வெப்பத்தையும் அப்படியே அள்ளிக்கொட்டினால் ஒரு வினாடி கூட நாம் இந்த பூமியில் உயிர் வாழமுடியாது. சூரிய வெப்பத்தை 200 கோடியாக பிரித்தால் அதில் ஒரு பகுதி மட்டுமே பூமியை வந்தடைகிறது.


அபாயகரமான கதிர்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்காக நம்மைச்சுற்றியுள்ள வளிமண்டலம் - ஓசோன் படலம் மூலம் வெப்பம் வடிகட்டப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் வெயிலை திட்டாமல் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.  

இரவும் அவர்களுக்கோர் அடையாளச் சின்னமே. அதிலிருந்து பகலை உறித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில மூழ்கி விடுகிறார்கள். சூரியன் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலைக்களத்தை நோக்கி விரைந்தோடுகிறது. அது, அறிந்த - மேலோங்கியவனின் நிர்ணய ஏற்பாடு.  (அல்குர்ஆன் - 36:3738)


குர்ஆன் இறக்கப்பட்டதன் நோக்கம், மக்கள் நேர்வழி - ஹிதாயத் பெறவேண்டும், என்பது மட்டுமே! விஞ்ஞானம், மருத்துவம், போன்றவற்றின் கொள்கைகளை அறிவிப்பது முழுமுதல் நோக்கமல்ல. எனவே, கால ஓட்டத்தில் மாறிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு விஞ்ஞானக் கருத்தையும் குர்ஆனில் தேடிக் கொண்டிருப்பதற்கு குர்ஆன் ஒன்றும் அறிவியல் நூலல்ல.

எனினும், அல்லாஹ் ஒருவன். குர்ஆன் அவனால் இறக்கி வைக்ப்பட்டது. மறுமை வாழ்க்கை நிச்சயம் போன்ற கொள்கைகளை உண்மையென நிரூபிப்பதற்கு இந்தப் பிரபஞ்சத்தில் பரவிக்கிடக்கும் படைப்புகளை ஆதாரமாகக் கூறுகிறான். இந்த வேதம் கியாம நாள் வரை வரும் மக்களுக்கு வழிகாட்டி என்பதால் குர்ஆனில் கூறப்படும் விஞ்ஞான (நவீன) கருத்துக்கள் அக்காலத்தவர்களும் விளங்கிக்கொள்ளும் படியான வாசகங்களாகவே அமைந்திருக்கும்.


பூமி உருண்டையில் இரவின் பவனி:
நாம் ஒவ்வொரு நாளும் இரவைப் பார்க்கிறோம். சூரியன் மறைகிறது. உடனடியாக நம் கண்ணுக்கெட்டிய தூரம் முழுவதும் இருளாகி விடுகிறது. இதனால், உலகமே இருண்டு விட்டதாகவே கருதுகிறோம். ஆனால், உண்மை அவ்வாறல்ல. உலகின் மறுபகுதி பகலாகவே இருக்கிறது. இந்த உண்மையை குர்ஆன் சூசகமாக தெளிவு படுத்துகிறது.

இவ்வசனத்தில் பயன் படுத்தப்பட்ட நஸ்லகு என்ற பதம் ஆட்டின் தோலை உறிப்பதற்கும் பாம்பு சட்டை கழட்டுவதற்கும் சொல்லப்படும். தோலை உறிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சதைப்பகுதி வெளிப்பட்டுக் கொணடே வரும். அப்படியானால் ஏனைய பகுதிகள் பகலாகவே இருக்கும்.

வசனத்தின் இறுதியில் ஃபயிதா ஹும் முள்லிமூன் பகலை கழட்டிய உடன் அவர்கள் இருளில் மூழ்கிவிடுகிறார்கள் என்று தான் கூறப்படுகிறதே தவிர முழு பூமியும் இருண்டு விடுகிறது, என்று கூறவில்லை. பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் இரவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இது உலக முடிவு நாள் வரை தொடரும் அல்லாஹ் பூமியை சுற்றவைத்துக் கொண்டே இருக்கிறான். இதனால், பகல் நேரம் முடிந்து இரவு நேரம் வந்து கொண்டே இருக்கிறது.

பூமி தட்டையா? பூமி தட்டையாக இருந்தால் ஒரே நேரத்தில் ஒரு பகுதி பகலாகவும் மறுபகுதி இரவாகவும இருக்க வாய்ப்பில்லை. எனவே, இவ்வசனம் பூமி உருண்டை என்பதை பறைசாற்றுகிறது. 

சூரிய ஓட்டங்கள்:
வஷ்ஷம்சு தஜ்ரீ சூரியன் ஓடுகிறது, என்ற வாசகத்திலிருந்து கிழக்கிலிருந்து மேற்காக ஓடும் வெளிப்படையான ஓட்டத்தையே ஆரம்ப காலத்தில் விளங்கப்பட்டது. தவிர, நீண்ட காலமாக, சூரியன் இயங்கவில்லை. ஒரே இடத்திலேயே இருக்கிறது, என்றே விஞ்ஞானிகள் கருதி வந்தனர்.

பிற்கால விஞ்ஞான வளர்ச்சியால், சூரியன் 30 நாளைக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுகிறது, என்றும் வினாடிக்கு 20 கி.மீ. மற்றும் 206 கி.மீ. என்ற வேகத்தில் இரு வேறு இயக்கத்தோடு சூரியன் பறந்து கொண்டிருக்கிறது, என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, சூரியன் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்த நம்முடைய கேலக்ஸி - பால்வழிமண்டலம் (மில்கீவே) வினாடிக்கு 980 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் விண்வெளியில் பாய்ந்து கொண்டிருக்கிறது.

குர்ஆன் பயன்படுத்திய தஜ்ரீ என்ற வார்த்தை சாதாரண ஓட்டமல்ல, விரைந்தோடும் பலத்த ஓட்டத்திற்கே சொல்லப்படும். இதன் மூலம் குர்ஆனுடைய உண்மைத்துவமும் புனிதத்துவமும் பளிச்சிடுகிறது.


சூரிய இலக்கு:

லிமுஸ்தகர்ரின் லஹா - என்ற வாசகத்தில் உள்ள முஸ்தகர் என்பது, ஒரு பொருள் இயன்ற வரை இயங்கி ஒரு நேரத்தில் - ஒரு இடத்தில் தன் இயக்கத்தை முடித்துகொண்டு நிலைபெறும் இடத்தையோ அல்லது காலத்தையோ குறிக்கும்.

அப்படியானால் சூரியனின் இலக்கு எது? எந்த நேரத்தில் எந்த இடத்தில் தன் இயக்கத்தை முடித்துக் கொள்கிறது? வெளிப்படையாகப் பார்த்தால் காலையிலிருந்து மாலை வரை இயங்குகிறது. பிறகு மேற்கே அஸ்தமிக்கிறது. ஆனல், உண்மையில் மாலை நேரத்தோடு சூரிய இயக்கம் முடிவடைவதில்லை, என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சூரியன் படைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை ஆகாயத்தில் பறந்தோடிக் கொண்டிருக்கிறது. இன்ஷாஅல்லாஹ் கியாமத் நாள் வரை இந்தப் பேரோட்டம் தொடரும். இக்கருத்தை முற்கால முஃபஸ்ஸிரீன்களும் கூறியுள்ளனர். இப்னு அப்பாஸ் (ரலி) இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் லா முஸ்தகர்ர லஹா (அதற்கு ஓய்வோ அமைதியோ கிடையாது. இரவு பகலாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும்.) என்று ஓதியிருக்கிறார்கள்.

சூரியனையும சந்திரனையும் (முறைப்படி தத்தம் வழிகளில் தொடர்ந்து) அவ்விரண்டும் சென்று கொண்டேயிருக்க அவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். என்ற வசனமும் இந்த கருத்தை உறுதிப்படுத்துகிறது. (14:33)

 சூரியன் ஸஜ்தா செய்கிறதா?:

ஒவ்வொரு நாளும் சூரியன் அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் ஸஜ்தா செய்கிறது. மீண்டும் உதயமாவதற்கு அனுமதி கேட்கிறது, என்ற கருத்தில் ஹதீஸ் வந்துள்ளது. ஆனால், விஞ்ஞான ரீதியாக அப்படியொன்றும் நடப்பதாகத் தெரியவில்லையே!, என்று தோன்றலாம். சூரியன் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் பேசும்போது விஞ்ஞானக் கொள்கைகளை விளக்கும் நோக்கத்தில் பேசுவது கிடையாது. அல்லாஹ்வின் பக்கம் கவனத்தை திருப்பும் பேச்சாகவே இருக்கும். சூரியன் மறையும் போது மனிதனுடைய பார்வையில் உலகமே இருட்டாகி விடுகிறது. உதயமாகும் போது உலகமே வெளிச்சமாகி விடுகிறது.

உலகில் பெரும் மாற்றம் ஏற்படும் இந்நிலையை நபியவர்கள் மனிதன் அல்லாஹ்வுடைய வல்லமையை விளங்கி அல்லாஹ்வுக்கு கட்டுப்பட வேண்டுமென்ற நோக்கில் சூரியனுடைய நிலையை வர்ணிக்கிறார்கள்.

சூரியனே அல்லாஹ்வுடைய கட்டளைக்கு கட்டுப்படும் போது மனிதன் ஏன்? அப்படியிருக்கக்கூடாது?, என்று சிந்திக்க வைக்கிறார்கள். சந்திரன் வளர்வது தேய்வது பற்றி மக்கள் கேட்ட போது கூட விஞ்ஞான உண்மையைப் பற்றிச் சொல்லாமல் அது மக்களுக்கு ஹஜ் போன்ற வணக்கம் உட்பட மக்களுக்கு காலம்காட்டியாக இருக்கிறது, என்று தான் அல்லாஹ் பதில் கூறினான். எனினும் குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்ட எந்தக் கருத்தும் உறுதியான உண்மையான விஞ்ஞானக் கோட்பாடுகளுக்கு முரணாக இருக்காது.

சூரியன் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியதும் நவீன அறிவியலுக்கு முரணானதல்ல. ஏனெனில் அல்லாஹ்வுடைய அர்ஷ், வானங்களிலும் பூமியிலும் விசாலமாக பரவியிருக்கிறது. எனவே, சூரியன் ஒவ்வொரு வினாடியும் அர்ஷின் கீழ் தான் இருக்கிறது. அவ்வாறே சூரியன் ஒவ்வொரு வினாடியும் ஒரு இடத்தில் உதயமாகி மற்றொரு இடத்தில் மறைந்து கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வினாடியும் அல்லாஹ்விடம் அனுமதி கேட்டு உதயமாகிக் கொண்டிருக்கிறது. மறைந்து கொண்டிருக்கிறது. சூரியன் சுற்றி முடிந்து கடைசியாக நிலைபெறும் இடம் எதுவாக இருக்கும்? என்ற கேள்விக்கு உறுதியான பதிலை யாரும் சொல்ல முடியாது.

நம்முடைய சூரியன் வீகா என்ற நட்சத்திரத்தை நோக்கி வினாடிக்கு 20 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. வீகா தான் சூரியனின் நிலைக்களமாக இருக்கும், என்று கூறப்படுகிறது. உண்மையிலேயே வீகா தான் நிலைக்களம் என்றால் இரண்டுக்குமிடையில் உள்ள தூரம், சூரியனுடைய வேகம் இவற்றை வைத்து உலக அழிவு நாளை கணக்கு போடலாம்.

இது தான் நிலைக்களம், என்பது உறுதியானதல்ல, என்பதை விட விந்தை என்னவெனில் வீகா என்ற அந்த நட்சத்திரமும் விண்ணில் விரைந்தோடிக் கொண்டிருக்கிறது. யார் கணக்கு போடுவது? கியாமத் எப்போது வரும்? என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும், என்பது மகாஉண்மை.

வியக்க வைக்கும் அளவீடு:
சூரியனும் சந்திரனும் பார்ப்பதற்கு ஒரே அளவாகத் தெரியும். உண்மையில் சூரியன் சந்திரனைவிட 400 மடங்கு பெரியது. எனினும், சந்திரன் பூமியிலிருந்து இருக்கும் தூரத்தைப் போல் 400 மடங்கு அதிகமான தூரத்தில் சூரியன் இருக்கிறது. எனவே தான், கிரகண சமயத்தில் அளவில் சிறிய சந்திரன் பெரிய சூரியனை துல்லியமாக மறைக்க முடிகிறது. இது தான் அல்லாஹ்வின் நிர்ணய அளவீடு.

புள்ளி மாறாமல் துல்லியமாக தேவையான தூரத்தில் சூரியனையும் சந்திரனையும் நிறுத்தி ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பாதை போட்டுக் கொடுத்து கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே அதனதன் வேலையை செய்ய வைத்திருப்பது அல்லாஹ்வின் வல்லமை. ஏகவலிமை கொண்ட யாவற்றைம்யும் அறிந்த அல்லாஹ்வின் துல்லியமான நிர்ணய ஏற்பாட்டையே இப்படைப்புகள் பிரதிபலிக்கின்றன.    

No comments:

Post a Comment