Tuesday, 7 April 2015

ஆண்களுக்கும் வேண்டும் பொறுப்புணர்வு




பெண்ணுடைய செயற்களம் வீடு தான், அவள் வரம்பு மீறி வெளியே செல்வதால் தான் தகாத சம்பவங்கள் நடக்கின்றன, என்று அழுத்தமாகச் சொல்கிறோம். கண்டிப்பாக சொல்லவும் வேண்டும். அதே சமயம், மார்க்கம் பெண்ணுக்கு வழங்கியிருக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் முழுமையாகக் கொடுப்பதில் ஆண் சமுதாயம் காட்டும் கவனக்குறைவு பல சமயங்களில் பெண்களை மார்க்க வரம்புகளை மீற வைத்து விடுகிறது, என்பது மட்டுமல்ல; இஸ்லாத்திற்கும் கெட்ட பெயரை வாங்கித் தந்து விடுகிறது, என்பதையும் முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். 

பெண்களின் ஆடைக்குறைப்பு கலாச்சாரம் ஆண்களைத் தூண்டிவிடத்தான் செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனினும் ஆண்களும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாத்தின் போதனை. ஹஜ்ஜத்துல் விதாவின் போது ஒரு பெண் நபியவர்களிடம் வந்து மார்க்க விளக்கம் கேட்டுக் கெர்ணடிருந்தார்கள். இஹ்ராமுடைய நிலையில் இருந்ததால் அந்தப் பெண் முகத்தை மறைக்க வில்லை. நபி (ஸல்) அவர்களுடன் ஒட்டகத்தில் இருந்த ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களுடைய பார்வை அந்தப் பெண்ணின் மீது விழுந்தது. உடனே நபி (ஸல்) அவர்களுடைய முகத்தை திருப்பி விட்டார்கள், என்பதை ஹதீஸ் கிரந்தங்களில் காண முடியும். உணவு, உடை, இருப்பிடம்:


ஆண்கள் தங்களுடைய கடமைகளை செய்வதில் எந்தக் குறைவும் வைக்கக் கூடாது. தலாக் போன்ற தங்களுடைய உரிமைகளை முறைதவறியும் பயன் படுத்தக்கூடாது. திருமணத்திற்குப் பின் மனைவிக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் கொடுக்க வேண்டும். குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் பல இடங்களில் மனைவிக்கு வாழ்வாதாரம் வழங்குவது பற்றி கூறப்பட்டுள்ளது. 

அல்லாஹ் அவர்களில் சிலரை சிலரை விட மேன்மைப் படுத்தியிருப்பதாலும் ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்வதாலும் ஆண்கள் பெண்களை நன்கு நிர்வகிப்பவர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன்- 4:34) 

இந்த வசனம் பெண்களை நல்ல விதத்தில் நிர்வகிப்பவர்கள் ஆண்கள் என்று சொல்லிவிட்டு அதற்குரிய காரணமாக அவர்கள் மனைவிமார்களுக்கு செலவு செய்கின்றனர், என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. எனவே அவர்களுக்கு முறையான வசதிகளை செய்து கொடுப்பது தான் அவர்களுடைய நிர்வாகத்தின் முக்கிய அம்சமே தவிர பெண்களின் மீது ஆட்சி செய்வதாக நினைத்துக் கொள்ளக் கூடாது. 

ஹஜ்ஜத்துல் விதாவின் இறுதி உரையில் நபி (ஸல்) பின்வருமாறு கூறினார்கள். மனைவிமார்களுக்கு நல்ல விதத்தில் உணவளிப்பதும் உடை கொடுப்பதும் (ஆண்களாகிய) உங்களுடைய கடமையாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத் - 1907) 

அபூஸுஃப்யான் (ரலி) அவர்களுடைய மனைவி ஹந்தா நபியவர்களிடம் வந்து தம்முடைய கணவர் கஞ்சத்தனமாக நடந்து கொள்வதைப் பற்றி புகார் செய்தார். நபி (ஸல்) அவர்களும் உனக்கும் உன்னுடைய பிள்ளைகளுக்கும் போதுமான அளவுக்கு அவருடைய அனுமதியின்றியே எடுத்துக்கொள், என்று கூறி அனுப்பினார்கள். (புகாரி)  

மனைவி, கணவன் சார்பாக ஏதாவது விருந்து சாப்பிட்டால் அன்றைய உணவுக்கான செலவை கணவன் கொடுக்கத் தேவையில்லை. அந்த விருந்து மனைவியின் சார்பாக இருக்குமேயானால் அந்த தினத்திற்கும் கணவன் செலவுக்குப் பணம் கொடுத்தாக வேண்டும், என்கிற அளவுக்கு ஃபிக்ஹ் நூற்களில் கூறப்பட்டுள்ளது. (துஹ்ஃபதுல் பாரீ)

 மனைவி வசதியாக இருந்தாலும் அவளுடைய செலவினங்களுக்கு கணவனே பொறுப்பு. அதே சமயம் அவள் பொருளாதார விஷயத்தில் கணவருக்கு உதவி செய்கிறாள். அல்லது அவளாக விரும்பி கணவரிடமிருந்து வாங்கும் பணத்தை குறைத்துக் கொள்கிறாள், என்றால் அது அவளுடைய தாராள மனப்பான்மை. தலாக் விடப்பட்ட பெண்களுக்குக் கூட இத்தா இருப்பதற்காக கணவன் தங்குமிடம் (வீடு) கொடுக்க வேணடும், என்பதே குர்ஆனுடைய கட்டளை.

 மனைவி தன்னுடைய வீட்டை கணவனுக்கு வாடகைக்கு கொடுத்து விட்டு தானும் கணவனுடன் சேர்ந்து குடியிருந்தால் கணவனிடம் வாடகை வாங்கிக் கொள்ளலாம். (ரத்துல் முஹ்தார்) இந்த அளவுக்கு கணவனுடைய பொறுப்பு இருக்கிறது, என்பதை ஆண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். குடும்ப விஷயத்தில் கணவனும் மனைவியும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் மனோபாவத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்பது வேறு விஷயம்.


வீட்டுச் சாமான்கள்:
மனைவியின் படுக்கை வசதிகளையும் கணவனே செய்து கொடுக்க வேண்டும். நடைமுறைக்குத் தோதுவாக படுக்கை விரிப்புகள், தலையணை, போர்வை போன்றவற்றை வழங்க வேண்டும். (முக்னில் முஹ்தாஜ்) சமையல் பாத்திரங்கள், திருகை, சாப்பிடும் தட்டு, டம்ளர் போன்ற வீட்டுச்சாமான்களைக் கொடுப்பதும் கணவனுடைய கடமை. 

அந்தப் பெண், மண் பாத்திரங்களைப் பயன்படுத்தாக வசதி வாய்ந்த குடும்பத்துப் பெண்ணாக இருந்தால் பித்தளை, செம்புப் பாத்திரங்கள் வழங்கப்பட வேண்டும். உயர் குடும்பத்துப் பெண்களுக்கு நடைமுறைக்குத் தோதுவாக செம்புப் பாத்திரங்களை வழங்குவது கட்டாயம் என்று இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ரவ்ளா)

 அப்படியானால் தற்காலத்தில் கேஸ் அடுப்பு, கரண்ட் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், வாஸிங் மெஷின், பிரீஸர், கட்டில், மெத்தை போன்ற பொருட்களை (அந்தந்த நபரின் வசதிக்குத் தகுந்த படி) கணவன் மனைவிக்கு வாங்கிக் கடுக்க வேண்டும். ஓர் ஆண் திருமணம் முடிக்கும் முன் மனைவிக்குத் தேவையான இந்த எல்லா சாமான்களையும் வாங்கி முடித்த பின் தான் திருமணத்திற்குத் தயாராக வேண்டும்.

 இந்த இடத்தில் தற்காலத்து நிலையையும் சிந்திப்போம். கணவன் தர வேண்டிய எல்லா பொருட்களையும் மனைவி தன்னுடைய வீடடிலிருந்து கொண்டு வரவேண்டுமென்ற கட்டாய நிலையில் இருக்கிறாள். வீட்டுச் சாமான்கள் மட்டுமல்ல; கணவனுக்குத் தேவையான வாகனம் உள்ளிட்ட பொருட்களையும் பெண்வீட்டாரிடமே வாங்கிக் கொள்வது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு. பெண்வீட்டார் முழு மனதிருப்தியுடன் தான் இவற்றைக் கொடுத்தார்கள், என்பதை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் முடிவு செய்திட முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக மார்க்க முறைப்படி ஊர் நடைமுறையை ஏன் மாற்றிக்கொள்ளக் கூடாது?


திருமணத்திற்குப் பின்பும் மரணம் வரை மனைவிக்குத் தேவையான முறையான வசதிகளை கணவன் அவனுடைய வசதிக்குத் தகுந்தாவறு செய்து கொடுத்தாக வேண்டும். இன்று குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய ஆண்கள் ஊதாரியாக சுற்றுகிறார்கள். மதுவுக்கு அடிமையாகி அலைகிறார்கள். வாங்கும் சம்பளத்தில் பெரும் பகுதியை சாராயத்தில் கரைத்து விடுகிறார்கள். கள்ளத் தொடர்பு பற்றி சொல்ல வேண்டியதில்லை. இந்நிலையில் அவருடைய குடும்பம் எப்படி வாழமுடியும்? குடும்பத்துக்கு செலவு செய்யாமால் பணத்தை வீணாக்கி விட்டால் அந்த குடும்பத்து பெண்கள் எப்படி சாப்பிடுவார்கள்

மதுவுக்கு அடிமையாகி மாதர்களுடன் சுற்றக் கொண்டிருந்தால் மனைவியின் மனைவியின் நிலை என்னவாகும்? இதையெல்லாம் காரணம் காட்டி பெண்கள் முறை தவறி சுற்றக் கூடாது. வீட்டுக்குள் இருக்க வேண்டும், என்பது தான் சட்டம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயம் ஆண்களும் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ளவேண்டும், என்பதிலும் சமூகம் கவனம் செலுத்த வேண்டும். 


தலாக்:
தலாக் கொடுக்கும் உரிமை ஆண்களுக்குத் தான் இருக்கிறது. அந்த உரிமையை ஆண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. சின்னச் சின்ன காரணத்துக்கெல்லாம் தலாக் கொடுத்தால் அதனால் பெண்ணுடைய வாழ்க்கை கெடுவதுடன் இஸ்லாத்தின் பெயரும் கெடும். தலாக், பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது, என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து நான் என்னுடைய மனைவியை தலாக் விடப் போகிறேன், என்று கூறினார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் ஏன்? என்று கேட்டார்கள். அம்மனிதர், நான் அவளை விரும்பவில்லை, என்று கூறினார். உடனே உமர் (ரலி) அவர்கள், என்ன எல்லா குடும்பமும் விருப்பத்துடனும் பிரியத்துடனுமா சென்று கொண்டிருக்கிறது. கண்டு கொள்ளாமல் போவதும் பொறுப்புணர்வுடன் இருப்பதும் இறங்கிப் போவதும் என்ன ஆனது? என்று கேட்டு இதற்கெல்லாம் தலாக் கொடுக்கக் கூடாது, என்று சொல்லி அனுப்பினார்கள். 

அந்தக் காலத்தில் தலாக் கொடுப்பதென்றால் நல்லவர்களிடம் பெரியவர்களிடம் ஆலோசனை செய்வதும் நடைமுறையில் இருந்துள்ளதை அறிய முடிகிறது. இந்தக் காலத்தில் எதைப்பற்றியும் யோசிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு உடனடியாக தலாக் கொடுத்துவிடுகிறார்கள். பின்விளைவு எவ்வளவு மோசமாக வெளிப்படும், என்பதை அப்போது சிந்திப்பதில்லை. அதிலும் தலாக் கொடுக்கும் முறையைக் கூட யாரும் படிப்பதில்லை. தலாக்கையும் படிக்க வேண்டும். தலாக் கொடுப்பதற்காக அல்ல; தலாக்கை விட்டும் தப்பிப்பதற்காக! வாரிசுரிமை, ஹஜ், தலாக் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள்! ஏனெனில் அவையும் உங்களுடைய மார்க்க (நடைமுறையாகவே) இருக்கிறது, என்று இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஸுனனுத் தாரிமீ 2/344)


தலாக் என்றால் முத்தலாக் மட்டுமே என்று சமூகம் விளங்கி வைத்தது போல் தெரிகிறது. எதற்கெடுத்தாலும் முத்தலாக் சொல்லிவிட்டு பிறகு அப்படியே சேர்ந்து வாழ நினைப்பவர்கள் ஏராளம். முத்தலாக் மொத்தமாக ஒரே நேரத்தில் கொடுப்பதை மார்க்கம் வன்மையாகக் கண்டித்திருக்கிறது. தலாக் தொடர்பான வழிகாட்டலை ஒட்டுமொத்தமாக மறந்து விடுவதால் இஸ்லாத்தின் நற்பெயருக்கே களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. நாமே இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்துவது எவ்வகையில் நியாயம்

ஜீவனாம்சம்:
முஸ்லிம்கள் மார்க்கத்தின் வழிகாட்டலை நடைமுறைப் படுத்தாததால் தான் ஜீவனாம்சத்தின் பிரச்சினையும் உருவாகிறது, என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தலாக் விட்டவர்தான் அவளுடைய மரணம் வரை ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. அந்த பெண்ணுடைய வாழ்வாதாரத்திற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் ஷரீஅத் நிறைவாக செய்து வைத்திருக்கிறது. 

தலாக் விடப்பெட்ட பெண்கள் தங்களுடைய இத்தாவை முடித்த பின் மறுமணம் செய்து கொள்ளும் உரிமையை மார்க்கம் பெண்களுக்கு வழங்கியிருக்கிறது. ஆனாலும் பெண்கள் பெரும்பாலும் அதற்கு தயாராகாமல் இருப்பது, இந்த சமூகம் மார்க்கத்திற்கு முரணான சிந்தனையை வளர்த்து வைத்திருப்பது தான் காரணம்.

 மறு மணம் என்பது பெரும் குறையாக கருதப்படுகிறது. ஆண்களில் பெரும்பாலோனோர் அந்தப் பெண்களை மணந்து கொள்வதற்கு முன்வருவதில்லை. அப்படியே திருமணம் முடித்துக் கொண்டாலும் முதல் கணவனின் மூலம் பிறந்த குழந்தை தன்னோடு வாழக்கூடாது, என்று பலர் நினைக்கின்றனர். அப்படியே தன்னுடன் வாழ்ந்தாலும் அந்தக் குழந்தையை முறையாக பராமறிப்பதில்லை. இந்நிலையில் பெண்கள் மறுமணம் செய்யத் தயங்குகின்றனர். தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு மார்க்கத்தின் வரம்புகளை மீறி எதையாவது செய்ய வேண்டியதிருக்கிறது. அல்லது ஜீவனாம்சம் வேண்டும், என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

மறுமணம்:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில், தலாக் விடப்பட்ட பெண் இத்தாவில் இருக்கும் போதே ஆண்கள், பெண் கேட்டுவருவதற்குத் தயாராகி விடுவார்கள், என்பதை குர்ஆன் மூலம் விளங்க முடிகிறது. (விதவையான) பெண்களை திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை இத்தா காலத்தில் நீங்கள் சாடையாக தெரிவிப்பதிலோ, உள்ளங்களில் மறைத்து வைப்பதிலோ உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. (ஏனெனில் நீங்கள் இத்தா முடிந்த பின்) அவர்களை நிச்சயமாக நீங்கள் எண்ணிப்பார்ப்பீர்கள், என்பதை அல்லாஹ் அறிவான். எனினும் நீங்கள் கண்ணியமான முறையில் (சைக்கினையாக) கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில் திருமணத்தைப் பற்றி) அவர்களுடன் இரகசியமாகவும் வாக்குறுதி செய்யாதீர்கள். இன்னும் நிர்ணயிக்கப்பட்ட (இத்தா) தவணை நிறைவடையும் வரை நீங்கள் திருமண ஒப்பந்தம் செய்ய தீர்மானிக்காதீர்கள்.... (அல்குர்ஆன் - 2:235) 

மறுமணம் செய்து கொள்வதற்கு ஆண்கள் போட்டி போட்டுக் கொண்டிருப்பதால் தான் இத்தா காலத்தில் திருமணம் பற்றி வெளிப்படையாக பேசக்கூடாது, என்பது பற்றி இந்தஅளவுக்கு வலியுறுத்த வேண்டியதாகிவிட்டது.


இக்காலத்தில மறுமணம் செய்து கொண்டாலும் மனைவிக்கு ஏற்கனவே முதல் கணவனின் மூலம் குழந்தைகள் இருந்தால் அவர்களை தங்களுடைய பிள்ளைகளை கவனிப்பது போல் முறையாக கவனிப்பதுமில்லை. கண்டுகொள்வதுமில்லை. என்பது மட்டுமல்ல; பல இடங்களில் அந்த குழந்தைகள் புதிய கணவன் மூலம் புறக்கணிக்கப் படுகிறார்கள். அனாதைக் குழந்தைகளைப் பார்க்க வைத்துவிட்டு தங்களுடைய பிள்ளைகளுக்கு மட்டும் திண்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பதும் ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருக்கிறது.


..... நீங்கள் உடலுறவு கொண்ட உங்கள் மனைவியர் (தம் முன்னாள் கணவர் மூலம்) பெற்றெடுத்து உங்கள் மடிகளில் வளர்ந்துள்ள புதல்விகளை (நீங்கள் மணமுடிப்பதும் விலக்கப்பட்டதாகும்) (4:23) என்ற இறைவசனம் தனக்குப் பிறக்காத குழந்தையாக இருந்தாலும் தன்னுடைய பிள்ளையைப் போல் மடியில் வைத்து பாசத்துடன் வளர்க்க வேண்டும், என்ற உட்கருத்தையும் பொதிருப்பதை யாரும் மறுக்க முடியாது.

 நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களை திருமணம் முடிக்கும் போது அவருடைய முன்னாள் கணவர் அபூஸலமா (ரலி) அவர்களின் மூலம் பிள்ளைகள் இருந்தன. நபியவர்கள் அவர்களை பாசத்துடன் வளர்த்தார்கள். ஒரு தடவை நபி (ஸல்) அவர்களிடம் உணவு வந்தது. அப்பொழுது நான் தட்டின் ஓரத்திலிருந்து சாப்பிடாமல் ஆங்காங்கே இருந்து எடுத்தேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம் மகனே! உனக்குப் பக்கத்தில் உள்ளதை எடுத்து சாப்பிடு. பிஸ்மில்லாஹ் சொல், என்று என்னிடம் அறிவுறுத்தினார்கள், என உம்முஸலமாவுடைய மகன் உமருப்னு அபீஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (அஹ்மது, தப்ரானி)


இப்படிப்பட்ட உயர்ந்த பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இஸ்லாம் போதிக்கும் போது அவற்றுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது போல் நடந்து கொண்டால் அதனால் சமூகம் நஷ்டமடைவது மட்டுமல்ல, இஸ்லாத்திற்கும் அவப்பெயரையே ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment