Monday, 11 February 2019

டிசம்பர் 6


1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி பாபர் மஸ்ஜித் இடித்து(த் தரைமட்டமாக்கப் பட்ட போது) ஷஹிதாக்கப் பட்ட போது தமிழகம் உட்பட முழூ இந்தியாவும் கொந்தளித்தது. இந்தியாவின் மீது சர்வதேச அளவில் நீங்காத கரையை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. நாம் வாழும் காலமெல்லாம் மட்டுமல்ல.

உலக இறுதி நாள் வரை மறக்க முடியாத அளவுக்கு சந்ததி சந்ததியாக நினைவுகூரப்பட வேண்டிய வேதனையான நிகழ்வு.
சர்வதேச அளவில் இந்தியர்களாகிய எங்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய நாள் டிசம்பர் 6.
இந்திய வரலாற்றின் கருப்பு நாள் டிசம்பர் 6.
மனிதாபிமானம் குழி தோண்டி புதைக்கப்பட்ட நாள் டிசம்பர் 6.
மத சுதந்திரம் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள்  டிசம்பர் 6.
மதசார்பின்மைக்ககு மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நாள்  டிசம்பர் 6. ஜனநாயகம் சரிந்து விட்ட நாள்  டிசம்பர் 6.
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஆறாத வடுவை அழுத்தமாக பதிய வைத்த நாள்  டிசம்பர் 6.
 பாபர் மசூதி என்று பெயர் வைக்கப் பட்டதால் அது பாபருக்கு சொந்தமானதல்ல. தமிழகத்தில் கூட மக்கா மஸ்ஜித். மதீனா மஸ்ஜித் என்றெல்லாம் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் இந்தியன் மஸ்ஜித் உள்ளது. அவ்வாறே நபர்களின் பெயராலும் மஸ்ஜிதுகள் உள்ளன. மஸ்ஜித் ஈஸப்னு மர்யம், மஸ்ஜித்  பிலால, என்றெல்லாம் பெயர்கள் உண்டு. ஆனாலும் அனைத்து மசூதிகளும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை. எந்தவொரு தனி நபருக்கும் சொந்த மானவையல்ல.

திட்டமாக வணக்கஸ்தலங்கள் அல்லாஹ்வுக்கு சொந்தமானவை; எனவே, (அங்கே) அல்லாஹ்வுடன் வேறெதையும் அழைக்காதீர்கள்!, என்று குர்ஆன் அழுத்தமான கட்டளையிடுகிறது.

எனவே உலகில் உள்ள அனைத்து மஸ்ஜிதுகளும் அல்லாஹ்வுக்கு சொந்தமானவை. அதில் யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அந்த இடத்தை அபகரிப்பதற்கு எந்த நபருக்கும் அரசாங்கத்திற்கும் அதிகாரம் இல்லை. ஒரு தடவை மஸ்ஜிதாக ஆக்கப்பட்டு விட்டால் அந்த இடம் உலக இறுதி நாள் வரை அது மஸ்ஜிதாகவே இருக்கும்.

அந்த இடத்தில் பூமியின் ஆழத்திலிருந்து வானம் வரையிலும் மஸ்ஜிதாகவே இருக்கும். அந்த மஸ்ஜித் இடிக்கப்பட்டாலும் அந்த இடம் மஸ்ஜிதின் நிலைபாட்டை விட்டும் மாறிவிடாது. அங்கு வேறு எந்த வீடோ அல்லது கடையோ கம்பெனியோ அல்லது வணக்கத்தலமோ கட்டப்பட்டுவிட்டாலும் அது மஸ்ஜித் என்ற நிலையிலிருந்து மாறிவிடாது. அங்கு சிலைகள் வைத்து வணங்கப்பட்டாலும் அது மஸ்ஜித் என்ற நிலையிலிருந்து மாறிவிடாது.

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஏக இறைவானை மட்டுமே வணங்குவததற்காகக் கட்டப்பட்ட கஃபதுல்லாவிலும் ஏராளமான சிலைகளை வைத்து வணங்கிக் கொண்டிருந்தனர். அந்நிலையிலும் அது இறையில்லம் என்கிற நிலையை விட்டும் மாறி விடவில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு நபிப்பட்டம் வழங்கி நபியாக ஆக்கப்பட்ட பிறகும் ஏறத்தாழ இருபது வருடத்திற்கும் மேலாக சிலைகள் வணங்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனாலும் அது இறுதியில் ஏக இறைவனைகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்கப்படுவதற்கான இறையில்லமாக மாறியது.

யாருடைய இடத்தையாவது அபகரித்து மஸ்ஜிதாகக் கட்டப்பட்டால் அந்த கட்டிடம் மஸ்ஜிதாகவே ஆகாது. அவ்விடத்தில் தொழுகை நடத்தவும் கூடாது. அந்தத் தொழுகை கூட பாவத்திற்குக் காரணமாகி விடும். இஸ்லாத்தின் வக்ஃபுடைய சட்டம் அவ்வளவு தெளிவானவை. யாருடைய இடத்தையும் அபகரித்து மஸ்ஜித் கட்ட வேண்டிய எந்த அவசியமும் முஸ்லிம்களுக்குக் கிடையாது.

பாபர் மசூதி இருக்கும் இடம் முறையாக வக்ஃப் செய்யப்பட்டு அது முஸ்லிம்களுக்கான இடம் என்பதற்கான தெளிவான உறுதியான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆகிய இரு தேதிகளுக்கிடையில் உள்ள இரவில் அநியாயமாக அந்த இறையில்லத்தில் சிலைகள் வைக்கப்பட்டன.

பின்னர் மஸ்ஜித் இழூத்து மூடப்பட்டது. 1986 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதியன்று மஸ்ஜித் திறக்கப்பட்டு ஹிந்துக்களுக்கு பூஜை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பட்டப்பகலில் மசூதி இடிக்கப்பட்டு நீதத்தையும் சட்டத்தையும் அந்த இடிபாடுகளுக்கிடையே புதைக்கப் பட்டுவிட்டது.

இந்தியாவில் பல மதத்தைச் சார்ந்தவர்கள் வாழ்கின்றனர். அனைவரும் ஒன்றுபட்டு விடக்கூடாது, என்பதில் மிகவும் உறுதியாக இருந்த ஆங்கிலேய ஆட்சியாளன் முஸ்லிம்களுக்கும் ஹிந்துக்களகுக்கும் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்தி மக்களை பிளவு படுத்தி குளிர் காய்ந்து கொண்டிருந்தான். இல்லையானால் பாபர் மசூதி பிரசிசினை இந்து முஸ்லிம்களுக்கு மத்தியிலான பிரச்சினையாக ஆரம்பத்தில் இருக்க வில்லை.

ஆனால், இன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியை மீற்பதற்கான முயற்சி மேற்கொண்டால் அதுவும் கூட இந்து முஸ்லிம் பிரச்சினையாகவே திசை திருப்பப் பட்டுவிடுகிறது. முஸ்லிம்கள் அனைத்துத் தரப்பு மக்களுடனும் சுமூகமாக நடந்து கொள்வதையே கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர். பாபர் மசூதி பிரச்சினை உச்ச நீதி மன்றத்தில் இருக்கிறது.

அரசியல் சாசனத்தின் அடிப்படையிலும் ஆதாரங்களின் அடிப்படையிலும் வழங்கப்படுகிற நீதிமன்றத் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டு செயல்படுவதே சிறந்த வழியாகும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது யார் தன்னிச்சையாக கருத்துக்களை வெளியிட்டாலும் அது சமூக அமைதியைப் பாதிக்கவே செய்யும்.

குறிப்புகள்
1. பாபர் மசூதி 1528 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1992 ஆம் ஆண்டு சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டவர்களால் ஷஹிதாக்கப்பட்டது.

2. ஒரு மசூதில் எத்தனை வருடங்கள் தொழுகை நடத்துவது விடப்பட்டிருந்தாலும் அந்த இடம் மஸ்ஜித் என்ற நிலைபாட்டிலிருந்து மாறவே மாறாது.

3. பாபர் மசூதியைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவது முஸ்லிம்களின் ஃபர்ளு எனும் கட்டாயக் கடமையாகும். யார்யார் முயற்சிப்பார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் நற்கூலி பெறத் தகுதிகயானவர்கள்.

அதைப் பாதுகாப்பதில் இறந்து போனவர்கள் ஷஹிதுடைய அந்தஸ்தைப் பெற்றவர்கள், என்று இருபது வருடங்களுக்கு முன்பாகவே தாருல் உலூம் தேவ்பந்த் ஃபத்வா கொடுத்துள்ளது.

4. மஸ்ஜிதை விட்டுக் கொடுக்க முடியாது என்பது மட்டுமல்ல; மசூதியில் தொழ வருபவர்கள் மலஜலம் கழிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள் கழிவறையின் இடங்களைக் கூட விட்டுக் கொடுக்க முடியாது. ஏனெனிலும் அவை அனைத்து வக்ஃப் சொத்துகக்களாகும். (இது, தாருல் உலூம் அஷ்ரஃபிய்யா வழங்கிய ஃபத்வாவின் சில வரிகள்)

5. 1881 ஆம் ஆண்டின் எம்பீரியல் கெஜட்டியரில் ற.ற. ஹுண்டர், அயோத்தியாவைப் பற்றி எழுதும் போது அங்கு 26 பள்ளிவாசல்கள் இருந்ததாக எழுதியுள்ளார்.

 6. 1528 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாபர் மசூதி 1855 ஆம் ஆண்டு வரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. 1855 ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் அதை மஸ்ஜித் என்றே ஏற்றுக் கொள்ளப் பட்டது. தொடர்ந்து அதை மஸ்ஜித் என்றே அரசுப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வந்திருக்கிறது. பாபர் மசூதி பிரச்சினை இந்தியாவில் இந்து முஸ்லிம்களுககு மத்தியில் மோதலை உருவாக்குவதற்காக ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிரச்சினையாகும்.


பாபர் மத துவேஷம் கொண்டவரா?
7. பாபர் மசூதி கட்டப்பட்ட அதே வருடத்தில் தான் பாபர் தன்னுடைய மகன் ஹுமாயூனுக்கு எழுதிய வஸிய்யத்தில் மகனே! இந்தியா பலதரப்பட்ட மதத்தைச் சார்ந்த மக்களைக் கொண்டதாகும். அதிகாரத்தை வழங்கிய அல்லாஹ்வுக்கே நன்றிகள்! உன்னுடைய உள்ளத்திலிருந்து மதரீதியான கடும்போக்கு நிலையை கைவிட்டுவிட்டு ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் மத விதிமுறைகளின் படி நீதி வழங்க வேண்டும். குறிப்பாக பசுமாட்டை குர்பானி கொடுப்பதை விட்டுவிடுங்கள் அதன் மூலம் இந்தியர்களின் உள்ளங்களை வசப்படுத்தி விடமுடியும், என்று எழுதியுள்ளார். இப்படிப்பட்ட பாபர் நிலத்தை அபகரித்து மசூதி கட்டியதாக எப்படி சொல்ல முடியும்?!

முன்னால் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரஷாத் மன்னர் பாபரின் இந்த இந்த வஸிய்யத் நாமாவை தன்னுடைய என்ற நூலில் இணைத்து பாபரை கடும்போக்கான மதவாத சிந்தனைக்கு அப்பபாற்பட்டவர் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். அவ்வாறே பேராசிரியர் சிரி ராம் ஷர்மா உடைய மொகல் எம்பைர் ஆஃப் இன்டியா எனும் நூலில் முதல் பாகம் 54, 55 ஆம் பக்கத்தில் பாபருடைய இந்த வஸிய்யத் நாமாவை எழுதியுள்ளார்.

எனவே தான் பேராசிரியர் அவர்கள் பாபர் ஏதாவது கோயிலை இடித்தார், என்பதற்கோ எந்த ஹந்துவையும் அவர் ஹிந்துவாக இருக்கிறார், என்பதற்காக தொல்லை கொடுத்தார், என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை, என்றும் குறிப்பிட்டுள்ளார். (இந்த இதழில் பாபர் மசூதி தொடர்பான தகவல்கள் பாப்ரீ மஸ்ஜித் ஃபௌவுண்டேஷன் வெளியிட்ட பாப்ரீ மஸ்ஜித் கீ ஷரயீ ஹைஸிய்யத் என்ற நூலிலிருந்தும் ஸைய்யித் ஸலாஹுத்தீன் அப்துர்ரஹ்மான் அவர்களுடைய பாப்ரீ மஸ்ஜித் - தாரீகீ பஸெமன்ஸர் அவ்ர் பேஷெ மன்ஸர் கீ ரோஷ்னீ மே, என்ற நூலிலிருந்தும் தொகுக்கப்பட்டவையாகும்.)

No comments:

Post a Comment