Monday, 11 February 2019

விவாதப் பொருளாகும் மரண தண்டனை


உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் முதல் நாடாக இருக்கிறது, என்ற ஆய்வு முடிவுகள் வந்தபிறகும் கூட பெண்களுக்கான பாதுகாப்பு இன்னும் உறுதி செய்யப்படாத நிலையே நீடித்துக் கொண்டிருக்கிறதோ என்று எண்ணுமளவுக்கு கற்பழிப்பு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அதே சமயம் மத்தியப் பிரதேச பலாத்கார வழக்கில் போக்ஸோ சட்டத்தின் படி வெறும் 46 நாட்களில்  குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப் பட்டிருக்கிறது. நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறே ஹாசினி கொலை வழக்கிலும் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்து சென்னை உயர்நீதி மன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது.

ஒரு பக்கம் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்று குரல் கொடுக்கப்பட்டாலும் சமூகத்தின் ஒரு பிரிவினர் தங்களை மனித உரிமைக்கு ஊனம் ஏற்படாமல் பாதுகாப்பவர்கள், என்று மார்தட்டிக் கொள்பவர்கள் மரண தண்டனையை விமர்சிக்கவும் செய்கின்றனர். நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் இச்சட்டம் ஒழிக்கப் பட்டுவிட்டதாகவும் ஓங்கி ஒலிக்கின்றனர்.

நிர்பயா  வழக்கில் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது குறித்து கூட, மரண தண்டனை ஒருபோதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தீர்வாக அமைந்ததில்லை, என்று சர்வதேச மனித உரிமை நிறுவனமான அம்னெஸ்டி கருத்து கூறியுள்ளது. இஸ்லாம் கூறும் ஒழுக்க நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப் படும் போது கண்டிப்பாக இது போன்ற குற்றங்கள் குறையும், என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆனால், அவற்றையெல்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானதாக பார்க்கும் சமூகத்தில் சிறிய மாற்றத்தைக் கூட எதிர்பார்க்க முடியாது. இச்சூழலில் மரண தண்டனையும் வேண்டாம், என்றால் கற்பழிப்பும் கொலையும் சர்வ சாதாரணமாக நடக்கும். குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவார்கள். மனிதன் தனக்குத் தானே சட்டமியற்றிக் கொண்டால் இப்படிப்பட்ட எதிர்மறையான எண்ணங்கள் தான் மோதிக் கொள்ளும்.

எந்திரத்தைக் கண்டுபிடித்தவன் தான் இயக்கும் முறையைச் சொல்லித் தரமுடியும். மனிதனைப் படைத்தவன் தான் மனிதன் வாழும் முறையைச் சொல்லித் தரமுடியும். மரண தண்டனையைக் கொடூரம் என்றோ மனித நேயத்திற்கு முரண் என்றோ காரணம் கூறி தண்டனையையே சட்ட நூற்களிலிருந்து நீக்கி விட்டால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை எக்காலத்திலும் நீக்க முடியாது. எல்லா நாடுகளிலும் சட்டமெல்லாம் இருந்தும் கூட அரசியல் மற்றும் பணபலத்தாலும் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி குற்றவாளி நிரபராதியாகி விடுகிறான்.

மரண தண்டனையே இல்லையானால் இந்த பூமியே கொலைக்களமாகி விடும். ஒவ்வொரு நாட்டிலும் குற்றக் கடிகாரம் வேகமாகவே சுழன்று கொண்டிருக்கிறது. நிமிடத்திற்கு நிமிடம் வினாடிக்கு வினாடி கொலை நடந்து கொண்டிருக்கிறது. பெண்களின் பாதுகாப்பு என்பது முற்றிலும் பழுதடைந்து போய்விட்டது, என்று தான் சொல்ல வேண்டும்.  பெண்களின் உயிருக்கும் பாதுகாப்பில்லை. மானம் மரியாதைக்கும பாதுகாப்பில்லை. கற்புக்கும் பாதுகாப்பில்லை. சிறுமிகளை கற்பழித்துக் கொன்று விடுவது என்பது சர்வ சாதாரணமான காரியமாகி விட்டது.

கடவுளே வந்தாலும் கற்பழிப்பைத் தடுத்து நிறுத்த முடியாது, என்ற மனோநிலை உருவாக்கப் படுகிற ஒரு சமூகத்தில் பெண்களும் சிறுமிகளும் உடல்பசிக்கு விகாரமான விருந்தாகிப் போவதை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறோம், என்று தெரியவில்லை. மொத்தத்தில் பேரச்சத்தின் அதிகாரத்தில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

நாட்டு மக்களில் ஒரு சாரார் அடித்தே கொல்லப் படுவது கொடூரமில்லையா? அப்படிப்பட்ட கொலைக் குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்கப்படுவது கொடூரத்திலும் கொடூரம். மனித நேயம் பற்றி பேசுபவர்கள் மனிதன் என்ற பெயர் குற்றவாளியாக மாறிவிடக் கூடாது. என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாத்தைப் பொறுத்தவரை கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனையே சரியான தண்டனை.

மரண தண்டனையில் தான் மனிதப் பாதுகாப்பு இருப்பதாகக் கருதுகிறது, இஸ்லாம். பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் வாழ்வு இருப்பதாக அறிவாளிகளைப் பார்த்து கூறுகிறது. இஸ்லாம் கூறும் தண்டனை மனிதனை வாழ வைப்தற்காகத் தான் என்பதை அறிவாளிகள் தான் உணர முடியும். மனித உயிரை இஸ்லாமிய சட்டவியல் மதித்துப் போற்றியது போன்று வேறு எந்த மதமோ மனிதச் சட்டமோ போற்றியிருக்க முடியாது.

ஓர் உயிரைக் கன்றால் முழு மனித இனத்தையும் கொன்றது போலவும் ஓர் உயிரை வாழ வைத்தால் மனித இனத்தையே வாழவைத்தது போலவும் வான்மறை உணர்த்துகிறது. மனித உயிரென்ன? முஸ்லிமுடைய மானம் மரியாதை கூட முதல் இறையில்லமான கஃபதுல்லாவை விட உன்னதமானது, என்று நபி (ஸல்) நம்பச் சொன்னார்கள். மக்களினஉயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கொடுப்பவன் தான் உண்மையான இறைநம்பிக்கையாளன், என்று உபதேசிக்கிறது, இஸ்லாம்.

இப்படி மனித உயிரைப் பாதுகாப்பதற்கு எல்லா வித ஒழுங்குமுறையும் செய்த பிறகும் குற்றம் நடந்தால் அதற்கு முறையான தண்டனை கொடுப்பதுதானே சரியாகும். அதில் யார் தான் குறை காணமுடியும். சாலைகளில் செல்லும் பேருந்துகளை விபத்திலிருந்து தடுத்திட போக்குவரத்துத் துறை எத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆங்காங்கே வேதத்தடை. இந்த இடத்தில் வனைவு உண்டு. இது நாற்சந்தி. இது முச்சந்தி இது விபத்துப் பகுதி, அபாயம் போன்ற எச்சரிக்கைப் பலகைகள். இவற்றையும் மீறி ஓட்டுநர் தவறு செய்தால் அவரின் மீது இரக்கம் காட்டுவது தான் மனிதநேயம் என்கிறார்களா?

மரண தண்டனை ரத்துக்கு வாக்காலத்து வாங்குபவர்கள். அப்படியானால் பாதிக்கப் பட்ட்ட பயணிகளின் நிலை தான் என்ன? இது அவர்களுக்குச் செய்த துரோமாகாதா? குற்றவியல் சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்களைத் தடுக்க முடியும். குற்றத்தின் கடுமைக்கு தகுந்தவாறு இஸ்லாமிய குற்றவியல் சட்டம் அமைந்திருக்கிறது, என்பதில் சந்தேகமில்லை. அந்நூர் என்ற அத்தியாயத்தின் ஆரம்பத்தில் விபச்சாரத்தின் தண்டனை பற்றி விளக்கப்படுகிறது.

விபச்சாரம் ஒரு குற்றம் என்பதுடன் ஏகப்பட்ட குற்றங்களை தூண்டக்கூடியதாகவும் இருக்கிறது, என்பதற்கு ஆதாரம் சொல்லத் தேவையில்லை. அதில் தான் முழு மனித சமுதாயத்தின் அழிவும் புதைந்திருக்கிறது. தவறான நடத்தைக்கு இணங்காததற்காக எத்தனையோ பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப் படுகின்றனர். அல்லது தற்கொலை செய்து கொள்கின்றனர். தண்டனை கொடுப்பதன் மூலம் தான் குற்றவாளியின் மீதும் முழு சமுதாயத்தின்  மீதும் பரிவு காட்டியதாக அமையும். அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் நோயாளியின் மீது தவறான இரக்க உணர்வு கொண்டு விட்டால் நோயாளி குணமடைய முடியுமா?

ஒரு சமுதாயத்தின் சிகிச்சையே ஒரு குற்றவாளியைத் தண்டிப்பதில் புதைந்து கிடந்தால் அதை எப்பாடுபட்டாவது தோண்டி எடுக்காமால் இருக்க முடியுமா? ஆப்ரேஷன் செய்வது தான் மருத்துவர்களின் இரக்க உணர்வை வெளிப்படுத்தும். இப்பூவுலகில் நிறைவேற்றப்படும் தண்டனை - ஹத்து உலக மக்களுக்கு நாற்பது நாற்கள் மழை பொழிவதை விடச் சிறந்ததாகும் என்று நபியவர்கள் கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது. (இப்னு மாஜா - 2538;

கொலைக்கு பழிக்குப்பழி என்று கூறும் இஸ்லாம், பாதிக்கப்பட்டவன் குற்றவாளியின் மீது இரக்கப்பட்டு மன்னித்துவிட்டால் இஸ்லாம் அதையும் வரவேற்கிறது. ஆனால், இது கொலை செய்யப்பட்டவரின் காப்பாளருக்குக் கடுக்கப்பட்ட உரிமை தானே தவிர எல்லாக் கொலையாளியும் மன்னிக்கப்பட வேண்டுமென்று சட்டமியற்ற முடியாது. மனித உயிரை மதிக்கும் அதே நேரத்தில் பாதிக்கப் பட்டவர்களின் உணர்வுகளுக்கும் இஸ்லாம் உரிய மதிப்பளித்திருப்பதையே இது பறைசாற்றுகிறது.

No comments:

Post a Comment