Monday, 11 February 2019

E CODE ஹலால் ஹராம்


எதைச் சாப்பிடலாம்? எதைச் சாப்பிடக்கூடாது? என்பதற்கும் இஸ்லாம் தெளிவான வரையறைகளை வகுத்திருக்கிறது. மனிதன் சாப்பிடும் உணவுப் பொருட்களுக்கும் அவனிடமிருந்து வெளிப்படும் செயல்பாடுகளுக்கும் மத்தியில் நெருங்கிய தொடர்பு உண்டு. நல்லவற்றைச் சாப்பிடும் போது அவனிடமிருந்து நல்ல செயல்பாடுகளையும் நல்ல குணங்களையும் எதிர்பார்க்கலாம்.

உணவுப்பொருட்கள் கெட்டவையாக இருக்கும் போது அவனிடமிருந்து வெளிப்படும் செயல்களும் குணங்களும் சகித்துக் கொள்ள முடியாதவையாகவே இருக்கும். எனவே தான், அல்லாஹ் குர்ஆனில் இறைத்தூதர்களுக்குக் கூட தூதர்களே! நீங்கள் நல்லவற்றிலிருந்து சாப்பிடுங்கள்! மேலும் (தரமான) நல்லமல்களைச் செய்யுங்கள்! , என்று உத்தரவிடுகிறான்.

உணவுக்கலாச்சாரம்
உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் உண்டுதான் உயிர்வாழ்கின்றன, உண்பதும் குடிப்பதும் உலகின் இயல்பான நடைமுறையாகவே பார்க்கப் பட்டாலும் இஸ்லாத்தின் பார்வையில் உண்பதும் குடிப்பதும் மிக உயர்ந்த இஸ்லாமிய கலாச்சாரமாகவும் கருதப்படுகிறது. யார் நம்முடைய தொழுகையைத் தொழுது நம்முடைய கிப்லாவை முன்னோக்கி நம்முடைய தபீஹா எனும் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட உணவைச் சாப்பிடுகிறாரோ அவர் தான் முஸ்லிம், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது இங்கு நினைவுகூரத் தக்கது. (புகாரி - 391)


தங்களுக்கு எது ஹலால்? எதைச் சாப்பிடலாம்? எதைச் சாப்பிடக்கூடாது? எந்த வியாபாரம் ஹலால்? எந்த வியாபாரம் ஹராம்? என்று நபித்தோழர்கள் கேட்ட கேள்விகளும் பதில்களும் குர்ஆனிலும் ஹதீஸிலும் நிரம்பவே காணக்கிடைக்கும். அதன் மூலம் உணவுப்பொருட்களுக்கான மார்க்க வரம்புகளின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களுக்கு தங்களுடைய முஸ்லிமல்லாத தாயார் கொண்டு வந்த அன்பளிப்பை வாங்கலாமா? வாங்கக் கூடாதா? என்பதை அறிவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் மார்க்கச் சட்டம் கேட்டிருக்கிறார்கள், என்றால் கிடைத்ததையெல்லாம் உண்பதென்பது உம்மத்தெ முஹம்மதிய்யாவின் உன்னத நடைமுயைக இருக்க முடியாது, என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

எது ஹராம்?
இஸ்லாத்தைப் பொருத்தவரை ஐந்து காரணங்களில் ஏதாவது ஒரு காரணம் ஒரு பொருளில் இருந்தால் அந்தப் பொருளைச் சாப்பிடுவது தடை செய்யப்பட்டதாகக் கருதப்படும்.

1. உடலுக்கோ அறிவுக்கோ தொல்லை தரக்கூடியதாக இருந்தால் அவற்றை அருந்துவது கூடாது. தற்கொலை செய்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது, என்பது யாரும் அறியாத ஒன்றல்ல. உங்களை நீங்களே கொன்று விடாதீர்கள்! (அல்குர்ஆன் - 4:29)
உங்களுடைய கரங்களாலேயே நீங்கள் உங்களைஅழிவில் போட்டுக் கொள்ளாதீர்கள், (அல்குர்ஆன் - 2:195) என்பவை குர்ஆனுடைய உத்தரவுகள். எனவே தனக்கு தொல்லை தரும் பொருட்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். யார் விஷத்தைக் குடித்து தற்கொல் செய்து கொள்கிறாரோ அவர் விஷத்தை குடித்த நிலையிலேயே நரகில் சதாவும் நிரந்தரமாக கிடப்பார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது - 10198)
2.  போதையூட்டகூடிய பொருட்கள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது, என்பது வெளிப்படை.
3. அசுத்தமான பொருட்களை உண்பதும் குடிப்பதும் தடை செய்யப்பட்டவையாகும். (நபியே நீர் இவர்களிடத்தில்) கூறும்! எனக்கு அருளப்பபட்ட வஹியில் உண்பவர்களுக்கு எந்த உணவும் தடை செய்யப்பட்டதாக நான் பெற்றுக் கொள்ள வில்லை. ஆனால், செத்த பிராணியையும் ,ஓடும் இரத்தத்தையும் பன்றி இறைச்சியையும் தவிர. திட்டமாக இவை அசுத்தங்களாகும்... (அல்குர்ஆன் - 6:145)
4. நடுநிலையான மனித இயல்புக்கு ஒவ்வாத அருவறுப்பான அசூசையான பொருட்களும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. எச்சில், சலி போன்றவை அசுத்தம் இல்லையானாலும் மனித சுபாவத்திற்கு ஒவ்வாதவையாகும். இது போன்ற பொருட்களையும் சாப்பிடக்கூடாது. .... மேலும் (அந்த நபி) அவர்களுக்கு தூய்மையானவற்றை ஆகுமாக்கி அனுமதிக்கின்றார். தூய்மையற்ற அருவறுக்கத்தக்கவற்றை தடை செய்கிறார்.... (அல்குர்ஆன் - 7:157)
5. ஒருவர் தனக்கு சொந்தமில்லாத அடுத்தவர்களுடைய பொருட்களை அவருடைய முழு மனதிருப்தியுடனான அனுமதி இருந்தாலே தவிர அந்தப் பொருள் அவருக்கு ஹலலாகாது.

பன்றி, நாய் போன்ற பிராணிகள் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. அவ்வாறே ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை உண்பது ஆகுமாக்கப் பட்டிருந்தாலும் ஷரீஅத் முறைப்படி ஒரு முஸ்லிம் (அல்லாஹ்வின் பெயர் கூறி) முறைப்படியாக அறுத்திருக்க வேண்டும். இல்லையானால் அதை உண்பது ஹலாலாகாது. அவ்வாறே, அறுக்கப்படாமல் தானாகவே இறந்து விட்டாலும் அது செத்த பிராணி என்ற பட்டியலில் சேர்ந்து உண்பது ஹராமாகிவிடும்.

பன்றிக் கொழுப்பு
பெரும்பாலும் எல்லா மேற்கத்திய நாடுகளிலும் முதலாம் வகை மாமிசமாக தேர்ந்தெடுக்கப்படுவது பன்றியாகவே இருந்தது. எனினும், பன்றியின் கொழுப்பை ஒதுக்கி விடுவார்கள். அதை எதற்கு வீணாக்க வேண்டும், என்பதற்காக முதலகட்டமாக அதன் மூலம் சோப்புகளை தயார் செய்தனர். அதில் வெற்றி கண்டனர்.

அடுத்த கட்டமாக முழுவீச்சில் இந்த பன்றிக் கொழுப்பை பல வேதியியல் நொதிப் பொருட்களைக் கொண்டு அமிலங்களாக மாற்றி விற்பனைக்கு இறக்கி விட்டனர். எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் போது உணவுப் பொருளாக இருந்தாலும் மருந்துப் பொருளாக இருந்தாலும் அப்பொருட்களின் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகளை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். என்ற சட்டம் ஐரோப்பாவில் இருந்தது.

இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதை பன்றிக் கொழுப்பு (Pig fat) என்றே குறிப்பிட்டு வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இதனால், இஸ்லாமிய நாடுகளில் அப்பெருட்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது. எனவே, பன்றிக்கொழுப்பு என்பதற்குப் பதிலாக விலங்குகள் கொழுப்பு (Animals fat) என்று எழுதினர்.

ஆனால், அது எந்த விலங்கு என்று தெரியாது. ஆடு, மாடுகளாக இருந்தாலும் அவை இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்டவையா? என்பதும் தெரியாது. எனவே, இஸ்லாமிய நாடுகளில் அப்பொருட்கள் விலை போகவில்லை. எனவே, அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்று எழுதுவதையும் தவிர்த்துவிட்டு குறியீட்டு மொழியை (Coding language) பயன்படுத்தத் துவங்கினர்.

இந்த வகையான ஈ கோடு பற்றிய விபரம் அப்பொருட்களைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சற்றும் அறிய வாய்ப்பில்லை. பற்பசை, ஷேவிங் கிரீம், சிவிங்கம், சாக்லேட், பிஸ்கட்ஸ், இனிப்புப் பண்டங்கள், டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். (இணைய தளச் செய்தி)

E code குழப்பங்கள்
இணைய தளங்களில் சில ஈகோடுகளைக் கொடுத்து அவையனைத்தும் பன்றிக் கொழுப்பிலிருந்து செய்யப் பட்டவையாகும், என்றும் கூறப்பட்டுள்ளது. அவற்றில் சில: E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234. E252, E270, E280, அதே சமயம் இணைய தளங்களில் இதற்கு மாற்றமான செய்திகளும் வராமல் இல்லை. பல நு இலக்கங்களை ஹராம் என்று அடையாளமிடப்பட்டு அவற்றை விட்டு விலகி இருக்குமாறு அறிவுரை கூறப்ப்டுகிறது. இவற்றின் உண்மைநிலை என்ன? என்பது பற்றி அறியாமலேயே நல்ல தகவலைத் தான் பரப்புகிறோம், என்ற அடிப்படையில் பலரும் இவற்றை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

கேட்பதையெல்லாம் பேசிக் கொண்டிருந்தால் அவன் பொய்யன் என்பதற்கு அதுவே போதுமான ஆதாரமென்பது நபியவர்களின் கூற்றில்லையா? ஈ இலக்கத்தை வழங்கும் ஏக நிறுவனமான ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ கருத்துப் படி உணவு சேர்மானங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இலகுத் தன்மைக்காகவுமே இந்த ஈ இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

எல்லா ஈ இலக்கங்களும் பன்றிக் கொழுப்பைத் தான் உணர்த்துகின்றன, என்பது தவறான வாதமாகும். உதாரணமாக நு100 இது செம்மஞ்சள், மஞ்சள் நிறத்தைத் தருவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை நிறப்பொருளாகும். இவ்வகை நிறப்பொருள் மஞ்சள் தாவரத்தின் ஒரு வகை கிழங்கிலிருந்து பிரித்தெடுக்கப் படுகிறது.

ஈ 110 - மஞ்சள் நிறத்தை தரக்கூடிய ஒரு நிறப்பொருளாகும். இது இராசாயன செய்முறை மூலம் பெறப்படுகிறது.

ஈ 120 சிவப்பு நிறத்தைத் தரக்கூடிய நிறப்பொருளாகும். இது ஒரு வகை பெண்வண்டின் உலர்ந்த உடல் பகுதிகளிலிருந்து பெறப்படுகிறது.

ஈ 140 பச்சை நிறத்தைத் தரக்கூடிய நிறப்பொருளாகும். இது முழுக்க முழுக்க தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது.

ஈ 153 இந்த நிறப்பொருளும் தாவர மூலப் பொருட்களிலிருந்தே பிரித்தெடுக்கப்படுகிறது. ஆக மேலே கூறப்பட்டுள்ள பெரும்பாலான

ஈ இலக்கங்கள் பன்றிக் கொழுப்பை அறிவிக்காது என்பதையே ஆய்வுகள் உணர்த்துகின்றன.

ஈ 120 எனப்படும் உணவுச் சேர்மானம் மட்டுமே ஒரு வகை வண்டிலிருந்து பெறப்படுவதும் ஏனையவை பல தாவரப் பொருட்களாகவும் இரசாயனச் சேர்க்கைகளாகவும் காணப்படுகிறது. (டபிள்யூ டபிள்யூ டபிள்யூ . ஜஃப்னா முஸ்லிம் டாட் காம்)

இந்த ஈகோட் தற்பொழுது சர்வதேச ரீதியில் ஐ.என்.எஸ் எனவும் அழைக்கப்படுகிறது.  இருப்பினும் இது உணவுச் சேர்க்கைகளின் மூலங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு முமைமை அல்ல. ஒரே ஈ இலக்கம் கொண்ட பலபதார்த்தங்கள் ஹலால் மூலப் பொருட்களிலிருந்தும் ஹராம் மூலப் பொருட்களிலிருந்தும் தயாரிக்க முடியும். எனவே, இந்த முறைமையை வைத்து ஓர் உணவு உற்பத்தி ஹலாலா? இல்லையா? என்பதைக் கண்டுபிடிப்பது எளிதான காரியமல்ல(www.hac.ik/ta)

E code  பற்றிய தெளிவுகள்
ஈ இலக்கங்கள் தொடர்பான இணையதளத்தில் பரவலாக பகிரப்படும் செய்திகள் இவை. இந்நிலையில் ஹலால் ஹராம் தொடர்பாக நாம் எம்மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டுமென்பதற்கு சில அடிப்படையான செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.ஹலால் ஹராம் - வார்த்தைகளில் கவனம்
1. மார்க்கத்தில் ஹலால், ஹராம் என்கிற வார்த்தை யாரும் எந்த இடத்திலும் அவரவர் இஷ்டத்திற்கு உபயோகப்படுத்தும்படியான சாதாரண வார்த்தைகள் அல்ல. அந்த வார்த்தைகள் முழு மனித சமுதாயத்திற்கும் வாழ்க்கையின் வரம்பை வரையறுக்கக் கூடியவை. எனவே, தான் மார்க்கச் சட்ட வல்லுணர்கள் சட்டத்திற்குட்பட்ட வார்த்தைகளை தரம் வாரியாக வகைப்படுத்தியுள்ளனர்.
சிலவற்றுக்கு ஃபர்ளு, என்றும் சிலவற்றுக்கு வாஜிப் என்றும் சிலவற்றுக்கு சுன்னத் சிலவற்றுக்கு ஹராம் என்றும் சிலவற்றுக்கு மக்ரூஹ் தஹ்ரீமீ என்றும் சிலவற்றுக்கு மக்ரூஹ் தன்ஜீஹ் என்றும் இது போன்ற இன்னும் பல வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஏனெனில், குர்ஆன், சுன்னாவுடைய ஆதாரங்களின் தரங்களின் வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு அந்த மாறுபட்ட வார்த்தைகளின் மூலம் தெளிவு படுத்தியுள்ளனர்.

மனிதக் காரியங்களுக்கான (கூடும், கூடாது) போன்ற சட்டங்களை வகுக்கும் போது சட்டத்தின் வார்த்தைகள் மிக முக்கியமானவை. இது நாட்டுச் சட்டத்திலும் கவனிக்கப்படும் அம்சமாகும். சட்ட வல்லுணர்கள் மிகுந்த பேணுதலுடன் சட்டத்தின் நிலைகளை பல்வேறு வார்த்தைகளின் மூலம் தெளிவு படுத்தியுள்ளனர்.

நாமாக எதையும் ஹலால் என்றோ ஹராம் என்றோ எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் சில வெளிப்படையான அடையாளங்களை மட்டும் வைத்து முடிவு செய்துவிடக்கூடாது. அல்லாஹ்வின் மீது பொய்யை ஏற்றிச் சொல்வதற்காக உங்கள் நாவுகள் பொய்யாக வர்ணிப்பதை (சில பிராணிகள் பற்றி) இது ஹலால் (வேறு சில பிராணிகள் பற்றி) இது ஹராம், என்று கூறாதீர்கள்.... என்ற திருக்குர்ஆன் வசனம் (16:116) இங்கு நினைவு கூரத்தக்கது.

ஒரு ஹராமை ஹலாலாக்குவது எவ்வாறு குற்றமோ அவ்வாறே ஒரு ஹலாலை ஹராமாக்குவதும் குற்றமாகும். எனவே, நாங்கள் மிகவும் பேணுதலாக இருக்கிறோம், என்று நினைத்துக் கொண்டு சந்தேகத்திற்கிடமானவற்றையெல்லாம் ஹராம் ஹராம் என்று சொல்லிவிடக்கூடாது.

இறைவிசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலால் ஆக்கிய தூய்மையானவற்றை ஹராமாக்காதீர்கள்! . நீங்கள் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான். என்ற திருக்குர்ஆன் வசனமும் (5:87) கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.


துறை சார்ந்த ஆய்வுக் குழுக்களின் அவசியம்
2. பன்றி இறைச்சி, பன்றிக் கொழுப்பு உட்பட பன்றியின் அனைத்து பாகங்களும் ஹராம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆடு மாடுகளாக இருந்தாலும் முறைப்படியாக அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்படாவிட்டாலோ அல்லது தானாக இறந்து விட்டாலோ அவையும் ஹராம் என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை.


அதே சமயம் பன்றிக் கொழுப்புகள் உட்பட ஹராமான பொருட்கள் கலக்கப் பட்டிருக்கின்றன, என்றால் வெறும் இணைய தளத் தகவல் மூலமாக மட்டுமோ அல்லது ஏதோ ஒரு ஆய்வாளர் அல்லது மருத்துவர் சொல்வதை வைத்து மட்டுமோ அதில் ஹராமான பொருட்கள் கலந்திருக்கிறது, என்று முடிவு செய்து ஹராம் ஃபத்வா கொடுத்து விடக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட சமயம் ஒரு பாலாடைக் கட்டிகைப் பார்த்துவிட்டு இது என்ன? என்று கேட்டார்கள். சுற்றி இருந்தவர்கள, இது அரபு நாட்டுக்கு வெளியே செய்யப்படும் ஒர் உணவு வகை. அதில் கத்தியை வையுங்கள்! அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடுங்கள்! , என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகீ - 20177)


நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பன்றிக் கொழுபு கலந்து செய்யப்படக்கூடிய ஆடை மற்றும் பன்றியின் கோரோசனை கலந்து செய்யப்படக்கூடிய ஷாம் தேசத்து பாலாடைக்கட்டி, என்று மக்களுக்கு மத்தியில் பிரபல்யமாக பேசப்பட்டது. நபியவர்களிடம் அங்கிருந்து பாலாடைக்கட்டி வந்த போது நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். அது பற்றி எதுவும் விசாரிக்க வில்லை, என்று பரவலாக ஃபத்ஹுல் முயீன் போன்ற ஃபிக்ஹ் நூற்களில் கூறப்பட்டுள்ளது.


ஈ இலக்கங்கள் தொடர்பான இணையதளத் தகவல்களை மேலே பார்த்தோம். அதிலேயே அவ்வளவு குழப்பம் இருக்கிறது. சிலர் சில இலக்கங்களை பன்றிக் கொழுப்பு என்று சொன்னால் வேறு சிலர் அவற்றில் முழுக்க முழுக்க தாவர இனம் என்று அடித்துக் கூறுகின்றனர். இது போன்ற நிலைகளில் அந்தத் துறை சார்ந்த வல்லுணர்கள் அறிஞர்கள் கொண்ட குழு இருக்க வேண்டும். அவர்களின் மூலம் முறையான ஆய்வுகள் செய்யப்பட்டு உண்மையிலேயே அவற்றில் ஹராமான பொருட்கள் கலந்துள்ளனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

எந்த ஆய்வும் இன்றி சில சமூக வலைதளங்களின் தகவல்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை சர்வ சாதாரணமாக ஹராம் என்று சொல்லி விடுவது மார்க்கச் சட்டங்களுடன் விளையாடுவதற்குச் சமமாகி விடும். எனவே, ஹராமான பொருட்கள் கலக்கப்படுகிறது, என்ற தகவல் சந்தேகத்திற்கிடமின்றி உறுதி செய்யப்பட வேண்டும்.

ஹராம் என்பதற்கான வரையறை
மது விநிகராக மாறிவிட்டால் ஹலாலாகிவிடும். எனவே, அந்த ஹராமான பொருள் தன்னுடைய ஒரிஜினாலிட்டியை இழக்காமல் அதன் அசல் தன்மையை விட்டும் மாறாமல் அப்படியே இருக்க வேண்டும். இதுவும் துறை சார்ந்த ஆய்வாளர்களின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.

கலக்கப்பட்ட ஹராமான பொருள் தன்னுடைய தனித்தன்மையை இழந்து மற்ற பொருட்களுடன் சேர்ந்து வேறொரு பொருளாக மாறிவிட்டால் அப்பொருள் கலக்கப்பட்ட பொருட்களை ஹராம் என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதை விட்டும் மக்களை தவிர்க்க முடியாத அளவுக்கு பரவலாகி விட்டபடியால் ஹராமான பொருட்கள் தன்னுடைய ஒரிஜினாலிட்டியை இழக்கும் போது அதை ஹராம் என்று சொல்லத் தேவையில்லை. (ரத்துல் முஹ்தார்)

அசுத்தமாகிவிட்ட ஜைத்தூன் எண்ணெய் அதை சோப்பாக ஆக்குவதின் மூலம் சுத்தமாகிவிடும்.  (அத்துர்ரு)

இறந்துவிட்ட கழுதை உப்பாகி விட்டால் அதை பயன்படுத்துவதில் தவறில்லை. இறந்து விட்ட பன்றி உப்பாகிவிட்டால் அதுவும் சுத்தமாகிவிடும். (ரத்துல் முஹ்தார்)

சர்கரையில் மாட்டின் எலும்புகள் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அது மார்க்க முறைப்படி அறுக்கப்பட்டதா? இல்லையா? என்று தெரியாது. எனினும், பரவலாக மக்கள் பயன்படுத்தும் அந்த சர்க்கரையை மார்க்க வல்லுணர்கள் ஹராம் என்று அவ்வளவு சீக்கிரத்தில் ஃபத்வா கொடுப்பதில்லை. அந்த எலும்புத்தூள்கள் தன்னுடைய ஒரிஜினாலிட்டியை - உண்மைத் தன்மையை இழந்து விடுவதாகவும் கூறுகின்றனர். (கிதாபுல் ஃபதாவா லி காலித் ஸைஃபுல்லாஹ் ரஹ்மானீ)

ஜெலட்டின்
ஹராமான பொருட்களைக் கலந்து தான் இன்று ஜெலட்டின் தயாரிக்கப்படுகிறது. ஜெலட்டின் கேப்ஸ்யூல்கள், வைட்டமின் சத்து மாத்திரைகள் போன்ற மருந்துப் பொருட்கள் மாட்டின் எலும்புகள், தோல், கால்நடைகளின் திசுக்கள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப் படுகின்றன.

2004 ஆம் ஆண்டு இந்திய இஸ்லாமிக் ஃபிக்ஹ் அகாடமீ நடத்திய செமினாரில் ஜெலட்டின் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. அதில், துறை சார்ந்த அறிஞர்கள், மிருகத்தின் எலும்புகள் மற்றும் தோல்கள் ரசாயண மாற்றங்களுக்கு உட்பட்டு தன்னுடைய அசல் உண்மைத் தன்மையை இழந்து விடுகிறது, என்று தீர்வு செய்ததை முன்வைத்து அதை உபயோகிப்பது தவறில்லை, என்று செமினாரில் முடிவு செய்யப் பட்டது. (நயே மஸாயில் அவ்ர் ஃபிக்ஹ் அகாடமீ கே ஃபைஸலே)

முஸ்லிம்களின் பொறுப்புணர்வு
இஸ்லாமிய உற்பத்தியாளர்கள் ஹராமான பொருட்கள் கலக்கப்படாத உற்பத்திகளை வெளிக்கொண்டுவருவதற்கான பெருமுயற்சி எடுக்க வேண்டும். அதன் மூலம் முஸ்லிம்கனை ஹராம் தொடர்பான சந்தேகத்திலிருந்து விலகிக் கொள்வதற்கான வழி ஏற்படும்.

முஸ்லிம்கள் ஹராமான பொருட்கள் கலந்திருப்பதாகக் கூறப்படும் திண்பண்டங்களை விட்டும் தவிர்ந்தே இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான பொருட்களை விட்டும் தவிர்ந்திருப்பதே மார்க்கப்பற்றுள்ள முஸ்லிமுக்கு ஏற்றதாகும்.

நபி (ஸல்) அவர்களும் உனக்கு சந்தேகம் தருபவற்றை விட்டும் விலகி சந்தேகத்திற்கிடமில்லாதயே தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு உபதேசித்துள்ளார்கள். எனவே, ஹராமான பொருட்கள் கலந்திருப்பதாக சந்தேகம் வரும் பொருட்களை விட்டும் தவிர்ந்து கொள்வதே உண்மை முஸ்லிமின் அடையாளமாகும்.

அதே சமயம் அப்படிப்பட்ட பொருட்களை யாராவது சாப்பிட்டால் அவரிடம் நீங்கள் ஹராமைச் சாப்பிடுகிறீர்கள், என்று சொல்வதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். மனித உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கிழைக்கக் கூடியதாக இருக்கக் கூடிய பொருட்களை முற்றிலும் ஒதுக்கி விட வேண்டும்.

அவற்றில் ஹராமான பொருட்கள் கலக்கப்படா விட்டாலும் சரியே! யார் மண்ணைச் சாப்பிடுவாரோ அவர் தன்னைக் கொலை செய்வதற்கு முயற்சி செய்தவரைப் போல் ஆகிவிடுவார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகீ) எனவே, தான், இறைச்சி துர்நாற்றம் எடுத்துவிட்டால் அதைச் சாப்பிடுவது கூடாது, என்று சட்டவல்லுணர்கள் கூறியுள்ளனர்.

அஜினமோட்டோ
அஜினமோட்டோ இயற்கையாக விளைவிக்கப்படும் கரும்பிலிருந்தே தயாரிக்கப் படுவதாக கூறப்படுகிறது. எனவே அதைத் தயாரிப்பவர்கள் அதில் தீங்கு இல்லை, என்று சொன்னாலும் பலவிதமான தீங்குகள் அதில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜினமோட்டோவின் மூலம் தலைவலி, நரம்பு பாதிப்பு, இதயப் பாதிப்பு, மலட்டுத் தன்மை போன்றவை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

உண்மையிலேயே இபபடியான தீங்குகள் அவற்றில் இருந்தால் அதைச் சாப்பிடக்கூடாது. தொடர்ந்து சாப்பிடுவதால் தர்ன இப்படியான தொல்லைகள் ஏற்படும், என்றால் எப்பொழுதாவது சாப்பிடுவதை ஹராம் என்று சொல்லக்கூடாது. அவற்றில் ஹராமான பொருட்கள் ஏதும் கலக்காத வரை பொதுவாக எல்லா நிலையிலும் தீங்கு இல்லாவிட்டாலும் அதை ஹராம் என்று சொல்லக்கூடாது.



5 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரகலல்லாஹ்

    ReplyDelete
  2. கட்டுரையின் சுருக்கத்தை தொடக்கத்தில்/கடைசியில் கூறினால் மிக பயனுள்ளதாக அமையும்.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் சந்தேகம் தெளிவாகிவிட்டது

    ReplyDelete