Monday, 7 October 2013

அரஃபா நோன்பு எப்போது?


 
ஹாஜிகள் அரபாவில் இருக்கும் போது தான் நாமும் அரபா நோன்பு வைக்க வேண்டுமா?

துல்ஹஜ் 9 ம் நாள் அரஃபா என்பது எல்லோருக்கும் தெரியும். பொதுவாக பிறைக் கணக்கு என்பது ஒவ்வொரு பகுதியிலும் முதல் நாளாக எந்த நாளை முடிவு செய்கிறார்களோ அந்த கணக்கின் படியே நோன்புப் பெருநாளை வைக்க வேண்டும் என்பதே ஹதீஸின் கருத்து. ஹாஜிகள் அரஃபாவில் இருக்கும் நாளில் தான் உலகின் ஏனைய பாகங்களில் அரஃபா நோன்பு வைக்க வேண்டும், என்ற சட்டத்தை எந்த ஃபிக்ஹ் நூலிலும் காணமுடியாது.


மாற்றமாக அரஃபா நாள் துல்ஹஜ் 9 ம் நாள் என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. தவிர தலைப்பிறையில் சந்தேகம் ஏற்பட்டு ஒரு நாள் தாமதமாக மாதம் ஆரம்பமானாலும் அரஃபா நாள் (மற்ற நாடுகளில்) பெருநாளாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் காரணமாக (நம்முடைய கணக்கின்படி 9 ம் நாளில்) நோன்பு வைப்பது ஹராமோ மக்ரூஹோ கிடையாது, என்று மஹல்­ என்ற நூலின் சிறப்புக் குறிப்பில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. (நூல்: ஹாஷயத்துல் கல்லியூபீ அலல் மஹல்லி­ - 2/73)


இணையதளத்தில் இப்படி ஒரு தகவல் படித்த ஞாபகம். ஒரு தடவை சீனாவில் ஹஜ்ஜுப் பெருநாள். அதே தினத்தில் மக்காவில் அரஃபா. ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள். ஹாஜிகள் அரஃபாவில் இருக்கும் போதுதான் நோன்பு வைக்க வேண்டுமென்றால் ஹஜ்ஜுப் பெருநாளன்று நோன்பு வைப்பது ஹராமாக்கப் பட்டிருக்கிறதே. 

இவர்களுக்கு மட்டும் இந்த நோன்பிலிருந்து விலக்களிக்கப்படுமா? மார்க்கத்தின் சட்டம் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் அதன்படி செயல்படுவதற்குத் தோதுவாகவே இருக்கும்.


ஒரு தடவை ஆயிஷா (ரலி) ஒருவர் அரஃபா நாளில் வந்தார். அவர் அரஃபா நோன்பு வைக்கவில்லை. இன்று ஹஜ்ஜுப் பெருநாளாக இருக்குமோ என்ற சந்தேகத்தினால் தான் அரஃபா நோன்பு வைக்கவில்லை, என்று கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் மக்கள் பிறை கண்டு நோன்பு வைக்கும் நாள் தான் நோன்பு நாள். மக்கள் பெருநாள் கொண்டாடும் நாள் தான் பெருநாள். (நாமாக ஒரு நாளை சந்தேகப்பட்டு நோன்பு நோற்காமல் இருக்க வேண்டிய அவசியமில்லை.) என்று கூறினார்கள். (நூல்: அல்பைஹகீ)



ஹாஜிகளோடு ஒப்புவமை:

அரஃபா நோன்பே அரஃபாவில் இருக்கும் ஹாஜிகளுக்காக துஆ செய்வதற்காகத் தான். அவர்களோடு நாமும் ஈடுபட வேண்டுமானால் அவர்கள் அரஃபாவில் இருக்கும் போது தானே நாமும் நோன்பு வைக்க வேண்டும், என்று கேட்கலாம்.


இங்கு ஒரு விஷயத்தை விளங்க வேண்டும். அரஃபா நாளில் நோன்பு வைக்க வேண்டும் என்பது சட்டம். ஹாஜிகளோடு ஒப்பாக வேண்டும் என்பது ஹிக்மத் - அறிவார்ந்த விளக்கம். சட்டமென்பது நமக்கிடப்பட்ட கட்டளை. நாம் விளங்கும் ஹிக்மத்தை அடிப்படையாக வைத்து சட்டத்தை மாற்றிக் கொள்ள முயாது. கர்ப்பத்தை அறிவதற்குத் தான் இத்தா என்பதற்காக ஸ்கேன் மூலம் கருத்தரிக்க வில்லை என்று அறிந்த பின் இத்தா தேவையில்லை என்று சொல்ல முடியுமா

 கட்டளையின் அடிப்படையில் தான் சட்டத்தை நோக்க வேண்டுமே தவிர ஹிக்மத்தின் அடிப்படையில் அல்ல. இந்த ஹிக்மத் (அறிவார்ந்த விளக்கம்) என்பது நாமாகக் கூறுவதாகத் தான் இருக்கும். ஹதீஸில் நேரடியாக கூறப்பட்டிருக்காது.


அரஃபா நோன்புக்கு இந்த ஹிக்மத் மட்டுமல்ல. மேலும் பல காரணங்களும் கூற முடியும். அரஃபா நோன்பின் மூலம் கடந்த வருடம் மற்றும் வரப்போகும் வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப் படுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ) எனவே வரும் வருடத்தில் அல்லாஹ் பாவங்களை விட்டும் பாதுகாக்கிறான். அப்படியே பாவம் நிகழ்ந்து விட்டாலும் தௌபா செய்வதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறான்.


ஹாஜிகள் அரஃபா நாளில் நோன்பு வைக்க மாட்டார்கள். அவர்கள் ஹஜ்ஜின் மூலம் அன்று பிறந்த பாலகனைப் போல திரும்புகின்றனர். எனவே ஹஜ்ஜுக்கு செல்ல முடியாதவர்களுக்கு அரஃபா நோன்பின் மூலம் இவ்வளவு பெரிய சிறப்பை அளிக்கிறான் போலும். இதையும் இந்த நோன்புக்கு ஹிக்மத்தாக சொல்ல முடியும்.


இஸ்லாத்தில் இரண்டு பெருநாட்களும் அடியார்களின் சிறப்பான வணக்க வழிபாடுகளைத் தொடர்ந்து வர வேண்டும். ஒரு முஃமினின் மகிழ்ச்சியும் இபாதத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். நோன்புப பெரநாள் கடமையான நோன்பைத் தொடர்ந்து வருகிறது. அது போல் ஹஜ்ஜுப் பெருநாள் கடமையான ஹஜ்ஜைத் தொடர்ந்து வருகிறது. அரஃபா தான் ஹஜ் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


உலகின் மற்ற பகுதியில் உள்ளவர்களுக்கு அரஃபா நோன்பைத் தொடர்ந்து வருகிறது. இதையும் ஒரு ஹிக்மத்தாக கூறலாம். இப்படி அரஃபா நோன்புக்கு பல காரணங்களைக் கூறலாம். ஆனால் நமக்கிடப்பட்ட கட்டளை துல்ஹஜ் 9 ம் நாள் நோன்பு வைப்பது. மக்காவின் 9 ம் நாளல்ல. அவரவர் வாழும் பகுதியின் 9 ம் நாள் தான்.


அரஃபா நோன்பில் ஹாஜிகளோடு ஒப்பாக வேண்டும் என்ற காரணம் (ஹிக்மத்) அரஃபா நாள் மக்காவோடு ஒத்துவரும் நாடுகளுக்கு மட்டுடே பொருந்தும். மற்ற நாடுகளுக்கு இது பொருந்தாது, என்பதே இயற்கை.


இந்தியாவுக்கு மக்காவுக்கு இரண்டரை மணி நேரம் வித்தியாசம் உள்ளது. நாம் நோன்பு திறக்கும் போது அரஃபாவில் இருப்பவர்களுக்கு மணி 3.30 அல்லது நான்கு மணியாகும். அந்த நேரம் தான் அரபாவின் முக்கியமான நேரம்.அந்நேரத்தில் நம்முடைய நோன்பு முடிந்திருக்கும்.


இதைத் தவிர மக்காவில் பகலாக இருக்கும் போது உலகின் ஒரு பகுதி இரவாக இருக்கும். அந்த நாடுகளில் ஹாஜிகளோடு ஒப்பாக வேண்டும் என்பதற்காக இரவில் நோன்பு வைக்க முடியுமா? நமக்கு அரஃபா நாள் ஒரு நாள் தாமதமாக வந்தாலும் நாம் நோன்பிருந்து ஹாஜிகளுக்காக செய்யும் துஆவை ஏற்றுக் கொள்வதில் அல்லாஹ்வுக்கு எந்த சிரமமுமில்லை.


நபித்தோழர்களின் காலத்தில் முழு இஸ்லாமிய நாடுகளிலும் 

எப்போதும் ஒரே நாளில் நோன்பு ஆரம்பித்து பெருநாள் 
கொண்டாட வில்லை, என்பது நபிமொழிகளின் மூலம் தெளிவாகத் தெரிய முடியும். மதீனாவுக்கும் சிரியாவுக்கும் ரமளானில் ஒரு நாள் வித்தியாசம் இருந்ததை முஸ்லிம் ஷரீபில் உள்ள ஹதீஸின் மூலம் விளங்க முடிகிறது. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதா - இறுதி ஹஜ் செய்த (ஹிஜ்ரி 10 ம்) ஆண்டு கூட ஹஜ்ஜுப் பெருநாளில் மக்காவுக்கும் மதீனாவுக்கும் மத்தியில் ஒரு நாள் வித்தியாசம் இருந்ததாக கூறப்படுகிறது. (நூல்: சந்த் மகாதீப்)


ஹாஜிகள் அரஃபாவில் இருக்கும் போது தான் அரஃபா நோன்பு வைக்க வேண்டுமென்று ஷரீஅத்தில் வலியுறுத்தப் பட்டிருந்தால் அதில் நபித் தோழர்கள் நம்மை விட அதிக அக்கறை காட்டியிருப்பார்கள். துல்ஹஜ் பிறை பிறந்து ஒன்பதாம் நாள் தான் அரஃபா நாள். எட்டு நாள் அவகாசம் இருக்கிறது. எனவே நாட்டின் பல பாகத்திலுள்ள நபித் தோழர்கள் மக்காவில் அரஃபா நாள் எப்போது? என்று அறிவதற்கு ஏற்பாடு செய்திருப்பார்கள்.


உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில் தகவல் தொடர்புத் துறையை துரிதப்படுத்துவதற்கு பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் மக்காவின் அரஃபா நாளை மதீனாவிலோ அல்லது மற்ற பகுதிகளிலோ அறிவிப்பதற்கு எந்த ஏற்பாடும் செய்ய வில்லை. எனவே நமக்கு நாம் துல்ஹஜ் பிறை கண்ட 9 ம் நாளில் அரஃபா நோன்பு வைப்பதே சுன்னத்தாகும்.



எது அரஃபா நாள்?
அரஃபா நோன்பு பற்றிய நபிமொழிகளில் அரஃபா நாளன்று நோன்பு வைக்க வேண்டும், என்று தானே வந்திருக்கிறது. துல்ஹஜ் 9 ம் நாள் என்று வரவில்லையே, ஆஷுரா நோன்பு பற்றி ஆஷூரா பத்தாம் நாள் என்று வந்திருக்கிறதே, என்ற வாதமும் அர்த்தமற்றது. துல்ஹஜ் 9 ம் நாள் என்று ஹதீஸில் வரவில்லையே என்ற கேள்வி வேடிக்கையானது.



துல்ஹஜ் 9 ம் நாளுக்குப் பெயர் தான் அரஃபா நாள் என்பது சாதாரண மார்க்க அறிவுள்ளவர்களும் விளங்கிக் கொள்ளமுடியும். அரபியில் நாட்களுக்கு பெயர்கள் இருக்கும். அந்தப் பெயரை வைத்து மட்டும் யாரும் சட்டம் சொல்லிட முடியாது. ஜும்ஆவுடைய நாள் என்பது வாரத்தின் குறிப்பிட்ட ஒரு நாளின் பெயர். உலகில் எங்காவது நமக்கு இரவாக இருக்கும் போது  ஜும்ஆ தொழுகை நடந்து விட்டால் உடனே நாமும் அதே நேரத்தில் தான் ஜும்ஆ தொழவேண்டும், என்று யாரும் சொல்லமுடியாது.



ஆஷுராவுடைய நாளில் நோன்பு வைப்பது பற்றி ஹதீஸ்களில் வந்துள்ளது. ஆஷுரா என்ற வார்த்தைக்கு  பத்தாம் நாளின் இரவு என்றுதான் பொருள். (ஃபத்ஹுல் பாரி) 

அதற்காக இரவில் நோன்பு வைக்க வேண்டும், என்று சொல்லமுடியுமா? பத்தாம் நாள் என்றால் ஏதாவது மாதத்தின் பத்தாவது நாளில் நோன்பு வைக்க முடியுமா? முஹர்ரம் மாதத்தின் 10 ம் நாளுக்குத் தான் ஆஷுரா என்று சொல்லப்படும். ஷரீஅத்தில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளுக்கு அகராதியில் மட்டும் பொருள் தேடாமல் நபி யவர்களும் நபித்தோழர்களும் எப்படி பொருள் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். 

சவூதியிலோ மற்ற பாகங்களிலோ 10 ம் நாளாக இருக்கும் போது நாமும் நோன்பு நோற்றுவிட முடியுமா?



நபியவர்கள் அய்யாமுல் பீள் நாட்களில் 13, 14, 15 ம் நாட்களில் நோன்பு வைத்திருக்கிறார்கள். அய்யாமுல் பீள் என்றால் வெண்மை நாட்கள் என்று பொருள். அது எந்தெந்த நாட்கள் என்பதை நாமாக முடிவு செய்திட முடியாது.



பெருநாளன்று தொழும் தொழுகை பற்றி நபிமொழிகளில் வரும் போது ஈதுடைய தொழுகை (ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா) என்று வருகிறது. ஷவ்வால் முதல் நாள் தொழுகை என்றோ துல்ஹஜ் பத்தாம் நாளுடைய தொழுகை என்றோ வரவில்லை. ஷவ்வால் முதல் நாள் தான் பெருநாள் கொண்டாடுகிறோம். உலகில் எங்காவது ஈதுல் ஃபித்ர் கொண்டாடிவிட்டால் நாமும் பெருநாள் தொழுகை தொழுதிட முடியுமா?


அவ்வாறே அரஃபாவுடைய நாள் என்பது ஹாஜிகள் அரஃபாவில் இருக்கும் நாள் என்று மட்டும் பொருள்கொண்டுவிட முடியாது. ஹாஜிகள் எந்த அடிப்படையில் அரஃபாவில் தங்குகிறார்கள். அவர்களாக ஒரு நாளை முடிவு செய்து தங்கிவிடுகிறார்களா? இல்லையே? துல்ஹஜ் 9 ம் நாளைத்தான் அரஃபாவில் தங்கும் நாளாக சவூதி அரசு அறிவிக்கிறது.


ஆஷூரா என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளுக்கு பெயர் என்பது போல் யவ்மு அரஃபா என்பது துல்ஹஜ் 9 ம் நாளுக்குதான் பெயர். ஹாஜிகள் தங்கும் நாளுக்குப் பெயர் அல்ல. ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் போது தான் அரஃபா நோன்பு வைக்க வ்ேணடும், என்பது நாமாக கூறிக்கொள்ளும் விளக்கம் தானே தவிர நபிமொழிகளில் அவ்வாறு கூறப்பட வில்லை. ஹாஜிகள் தங்கும்போது தான் நாம் நோன்பு வைக்க வேண்டும், என்று கூறினால் அதன்படி முழுஉலகிலும் செயல்படுவதற்கு சாத்தியமே இல்லை. இஸ்லாம் அப்படியொரு சட்டத்தை இயற்றாது.


யவ்முந்நஹர் - அறுக்கும் நாள் என்றும் ஹதீஸ்களில் வருகிறது. நபி (ஸல்) அவர்கள் யவ்முந்நஹóர் அறுக்கும் நாளில் (ஹஜ்ஜுப் பெருநாள் அன்று) பெருநாள் தொழுகை தொழுதார்கள். பிறகு குர்பானி கொடுக்கும் படி கூறினார்கள். 

யவ்முந்நஹóர் அறுக்கும் நாள் என்றால் துல்ஹஜ் பத்தாம் நாள் என்று தான் பொருள். ஹாஜிகள் அரஃபாவுக்கு மறுநாள் தங்களுடைய பிராணிகளை அறுக்கிறார்கள், என்பதற்காக அது தான் யவ்முந்நஹóர். நாமும் அந்த தினத்தில் தான் அறுக்க வேண்டும், என்று சொல்லமுடியுமா?  சவூதயை விட நமக்கு ஒரு நாள் தாமதாமானால் நம்முடைய பெருநாளைக்கு முன்பு அறுக்கப்பட்ட குர்பானியே கூடாது.