Wednesday, 26 November 2014

பற்றாக்குறை மின்சாரம்



பற்றாக்குறை மின்சாரம்


இன்று பணம், தண்ணீர், மின்சாரம், சமையல் எரிவாயு என எல்லா பொருட்களிலும் வரக்கூடிய வரவை விட செலவு மிகைத்து நம்மை திகைக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பற்றாக்குறை பட்ஜெட்டின் பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கிறது.

காலப்போக்கில் மின்சாரத்தையும் ரேஷன் கடையில் மட்டுமே பெறவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுமோ  என்று எண்ணத் தோன்றுகிறது. கடந்த 2001 ஆண்டு மின் உற்பத்தியில் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் தற்போது பற்றாக்குறையில் தவித்து வருகிறது. அரை நாள் மட்டுமே மக்களுக்கு மின்சாரம் வழங்க முடியும், என்று அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தற்போது 11500 மெகாவாட் மின்சாரம் அன்றாட உபயோகத்திற்கு தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பது 7500 லிருந்து 8000 மெகாவாட் மின்சாரம் தான். மின்உற்பத்தி குறையும் சமயங்களில் காற்றாலை மின்சாரம் கைகொடுத்து வருவதால் குறிப்பிட்ட சில மணி நேர மின்தடையுடன் மின்வாரியம் நிலைமையை சமாளித்து வருகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தனிமனித மின்நுகர்வு அதிகமாக, அதாவது ஆண்டிற்கு 1080 யூனிட் என்ற அளவில் உள்ளது. மற்ற மாநிலங்களில் 800 யூனிட் மின்சாரம் தான் தனிமனித நுகர்வாக உள்ளது. நாளுக்கு நாள் தொழில் பிரிவுகளின் எண்ணிக்கை, குடியிருப்புகளன் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மின்தேவை அதிகரிக்கும்.

தீர்வு என்ன?:
தற்போது மின்உற்பத்தியை அதிகரிப்பது என்பது அரசுக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல. மின் நிலையங்கள் அமைப்பதற்கான இடம், அதற்கான மூலப் பொருட்கள் பற்றாக்குறை உள்ளது. அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி பற்றாக்குறை அதிகளவில் உள்ளது.

ஒரு 500 முதல் 600 மெகாவாட் திறன் கொண்ட மின்நிலையம் ஆரம்பிக்க ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை ஆகிறது. இவற்றிற்கு மூலப்பொருட்கள் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தான் கொண்டு வரவேண்டும். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் மின்சாரம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

மின்துறை நிர்வாகத்தை சீர்படுத்துவது, மக்களை  சிக்கனமான மின்நுகர்வுக்கு தயார்படுத்துவது ஆகிய இருவழிகள் தற்போது கைகொடுக்கும். மற்ற மாநிலங்களில் குறைவான மின்நுகர்வுடன் மக்கள் வாழும் போது அது நம் மாநிலத்தில் மட்டும் சாத்தியமாகாதா?

தண்ணீர் - மின்சாரம்:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபுலகில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. அந்நிலையைச் சமாளிப்பதற்கு நபியவர்கள் இவ்விரண்டு முறையைத் தான் கையாண்டார்கள்.

மின்சாரம் தண்ணீரிலிருந்தும் உற்பத்தி செய்யப்படுகிறதை என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். மதீனாவை மழைகுறைவான பகுதியாக நபியவர்கள் அறிவித்தார்கள். (முஸ்னத் அஹ்மத் 3/177)

ஸஃது பின் உப்பாதா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் ஸஃதுடைய தாயார் மரணித்து விட்டார்கள். அவருக்காக எதை தர்மம் செய்வது சிறந்தது? என்று கேட்ட போது, நீர்ப்பற்றாக்குறையை உணர்ந்திருந்த நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் என்று பதிலளித்தார்கள். ஸஃது (ரலி) அவர்களும் உடனே ஒரு கிணற்றைத் தோண்டி, இது உம்மு ஸஃதுக்கு சமர்பபணம் எனறு தண்ணீர் தர்மம் செய்தார்கள். (நூல்: அபூதாவூத்)

இஸ்லாமிய பொதுப்பணித்துறையின் செயலாக்கம் இந்த தண்ணீர் தர்மத்தின் மூலமே ஆரம்பித்துள்ளது. (உஸ்வயே ஸஹாபா)

மதீனாவாழ் முஸ்லிம்களுக்கு தண்ணீர் பஞ்சம் இருந்த போது ஒரு யூதன் தனக்கு சொந்தமான கிணற்றுத் தண்ணீரை விலைக்கு விற்றுக் கொண்டிருந்தான். யார் இந்தக் கிணற்றையே விலைக்கு வாங்கி முஸ்லிம்களுக்கான நீர் வசதியைத் தாராளமாக்குவாரோ அவருக்கு சுவனம் பரிசாகக் கிடைக்கும், என அறிவித்தார்கள். உடனே உஸ்மான் கனீ (ரலி) அக்கிணற்றை வாங்கி முஸ்லிம்களுக்காக வக்ஃப் செய்தார்கள். (திர்மிதீ)

நீர் வாரியம்:
தண்ணீர் நிர்வகிக்கும் பொறுப்பாளர்கள் (அமைச்சர்கள்) எல்லோருக்கும் பங்கிட்டு விட்டு கடைசியில் தன் பங்கை எடுப்பராக இருக்க வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அபூதாவூத்)

இன்று மின் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், ஆட்சயாளர்களின் நிலை எப்படி இருக்கிறது? என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.  ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபியவர்களுடன் பிரயாணத்தில் இருந்தோம். தண்ணீர்ப்  பகுதியை நெருங்கிய போது தண்ணீரை முறைப்படுத்தி சுத்தமாக்கி உபயோகிப்பதற்குத் தோதுவாக ஒரு தடாகத்தில் சேகரிப்பதற்காக இரண்டு நபர்களை முன்கூட்டியே அனுப்பி வைத்தார்கள். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

அவ்விருவரின் உழைப்பால் உண்டான ஹவுள் என்பதால் நபி (ஸல்) அவர்கள் கூட அந்த இரண்டு தோழர்களின் அனுமதியுடன் தான் தண்ணீரை உபயோகித்தார்கள். (முஸ்லிம்)

மற்றொரு முறை நபி (ஸல்) தோழர்களுடன் சென்ற போது நாளை தபூக்கின் நீர் ஊற்றுக்கு வருவீர்கள். நீங்கள் அவ்விடத்தை அடைந்தால் நான் வருவதற்கு முன் அந்த தண்ணீரை யாரும் தொடக்கூடாது, என்று உத்தரவிட்டார்கள். அந்த ஊற்றில் சிறிதளவு நீரே ஊறிக் கொண்டிருந்தது. (முஸ்லிம்)

ஆறு, மற்றும் ஏரிகளை முறைப்படுத்தி தண்ணீர் பங்கீட்டுக்காக ஓர் அமைச்சகத்தையே இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் நிறுவியிருந்தார்கள். (அல்ஃபாரூக்)
தற்கால மின்துறையும் நிர்வாகச் சீர்திருத்தத்தை மேற்கொண்டால் மிகுந்த பலன் அடையலாம். மின் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும். மின் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்சமயம் நடைமுறையில் இருக்கும் மின் உற்பத்தி முறையைத் தவிர மற்ற தொழில் நுட்பத்தின் மூலம் மின் உற்பத்தி செய்ய முடியுமா? என்பது பற்றி யோசிக்க வேண்டும்.

ஜெர்மன் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறது. அந்த தொழில் நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்தியாவும் அந்நாட்டுடன் இணைந்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியிருப்பது வரவேற்கத் தக்கது.

இந்தியாவை விட அதிக அளவில் அணுசக்தியைப் பயன்படுத்தி வரும் ஜெர்மனி, சூரிய சக்தியை அதிக அளவில் ஊக்குவிக்கிறது. அதில் முக்கியமானது சூரிய ஒளி வீடு.
வீட்டின் கூரையில் சூரிய ஒளியை உள்வாங்கும் தகடுகளைப் பொருத்தி வீட்டிற்குள் உள்ள கருவி மூலம் சேகரித்து வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தைப் பூர்த்தி செய்கிறது. அதிலும் வீட்டில் சூரிய ஒளி படும் பிற பகுதிகளிலும் தகடுகளை வைத்து மொபைல் போன்களுக்கு சார்ஜ் செய்யப்படுகிறது. சூரிய சக்தியை உள்வாங்கி வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் திட்டத்தையும் முன்வைத்துள்ளது.

இருபது அணுசக்தி நிலையங்கள் முழு வீச்சில் தயாரிக்கக் கூடிய 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை, சூரிய சக்தி மூலம், ஒரு மணி நேரத்தில் தயாரித்து உலக சாதனை படைத்திருக்கிறது ஜெர்மன். மின்சாரத் தேவை அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்நிலையில் இது போன்ற புதிய புதிய தொழில் நுட்பத்தை ஆராய்ந்தால் மட்டுமே எதிர் காலத்தின் நெருக்கடியை சமாளிக்க முடியும்.
மின் சிக்கனம்:
இரண்டாவதாக மக்களை சிக்கனமான மின்நுகர்வுக்கு தயார் படுத்த வேண்டும். மின்சார சக்தியை வீண்விரயமின்றி பொறுப்புணர்வுடன் பயன்படுத்தினாலே ஓரளவுக்க மின்சக்தியை சேமித்து விடமுடியும். இதில், இருக்கும் சக்தியைப் பாதுகாத்து அதைச் சிக்கனமாக செலவு செய்வது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இஸ்லாம், உணவு, நீர், பணம், போன்ற அனைத்திலும் வீண்விரயத்தை தடை செய்திருக்கிறது. சாப்பிடுங்கள் குடியுங்கள் என்று கூறும் குர்ஆன் வீண்விரயம் செய்யாதீர்கள்! என்றும் உத்தரவிடுகிறது.

விளைச்சலுக்குரிய ஜகாத்தை கொடுங்கள் என்று கடமையை நிறைவேற்றும்படி குர்ஆன் கட்டளையிடும் போது கூட எல்லை மீறி விடாதீர்கள்! விரயம் செய்திடாதீர்கள்! என்பதையும் சேர்த்தே கூறுகிறது. இப்படி தனக்காக உபயோகித்தாலும் மற்றவர்களுக்கு கொடுத்தாலும் எதிலும் இஸ்ராஃப் எனும் வீண்விரயம் விலக்கப்பட வேண்டுமென்பதை மார்க்கம் வலியுறுத்துகிறது.

தொழுகை போன்ற வணக்கத்திற்காக செய்யப்படும் உளூவிலும் கூட நீர் விரயத்தை நபியவர்கள் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். ஓடும் ஆற்றில் உளூ செய்தாலும் வீண்விரயம் கூடாது, என எச்சரித்தருக்கிறார்கள். (இப்னுமாஜா)

ஓடும் நீரில் இஸ்ராஃப் ஏற்படவே செய்யாது, என்றாலும் நபியவர்கள் தோழர்களுக்கு கொடுத்த முதல் தரமான பயிற்சி. அத்துடன் நேர விரயமும் தடுக்கப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் சிறுதுவாரமுள்ள தோல் பையிலிருக்கும் தண்ணீரால் உளூ செய்வார்கள். தண்ணீரை மிகவும் குறைவாக விழச் செய்வார்கள், என இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இப்னுமாஜா)

இன்று நாம் உளூ செய்ய நீர்க்குழாயைத் திறந்தால் அந்த தண்ணீரால் குளித்தே விடலாம். தண்ணீரை சிக்கனமாக செலவு செய்வது அவசியம் என்பது போல் மின்சாரத்தையும் சிக்கனமாக செலவு செய்து பழக வேண்டும். இதில் நமக்கும் இலாபம் இருக்கிறது. அரசுக்கும் இலாபம் இருக்கிறது.

பொது மக்களுடைய மின்சாரத் தேவைக்கும் நாம் உதவி செய்தவர்களாகி விடுவோம். அறைக்குள் நுழைந்தாலே மின்விசிறியை இயக்க வேண்டும், என்பது கட்டாயமல்ல. பசித்தால் சாப்பிட வேண்டுமென்பது போல் வியர்க்கும் போது ஃபேனை உபயோகிக்கலாம். ஒரு விளக்கு எரிவதால் எவ்வளவு இலாபம்? எரியாவிட்டால் எவ்வளவு நஷ்டம்? என்பதை யோசித்து செயல்படலாம். அறையை விட்டு வெளியே வரும் போது மறக்காமல் மின்விசிறி மற்றும் மின்விளக்குகளை சுவிட்ச் ஆஃப் செய்வதில் கவனம் இருக்க வேண்டும்.

பல சமயங்களில் வீடுகளில் தேவையின்றி ஃபேன் ஓடிக்கொண்டிருக்கும். விளக்கு எரிந்து கொண்டிருக்கும். கழிவறைகளில் விளக்குகள் அணைக்கப்படாமல் இருக்கும். இவற்றைக் கவனித்து சீர் செய்து விட்டாலே போதுமான அளவுக்கு மின்சாரத்தை சேமித்து விட முடியும்.  அவசியத் தேவை தவிர மற்ற சமயங்களில் சி.எஃப். எல் பல்புகளை உபயோகிக்கலாம். 


சரித்திரம் படிப்போம்! சாதனை படைப்போம்!!


சரித்திரம் படிப்போம்! சாதனை படைப்போம்!!

வரலாற்றுக் கலை பழமையானது. உலகின் முதல் கலை வரலாற்றுக் கலை தான் என்று சொன்னாலும் மிகையாது. ஏனெனில் நடந்த நிகழ்வுகளை கோர்வை செய்வது தான் வரலாறு. எனவே, உலகம் உருவானதுடன் வரலாற்றுக் கலையும் ஆரம்பமாகிறது.
வரலாறு படிப்பதென்பது மார்க்கத்திற்கு தொடர்பில்லாத உலகம் தொடர்பான காரியமாக மட்டும் எண்ணிவிடக்கூடாது. இஸ்லாமிய வரலாறு அவ்வளவு சாதாரணமானதல்ல. எனவே தான் இமாம் ஜுஹ்ரீ (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய யுத்தங்கள் தொடர்பான வரலாற்றுக் கலை பற்றி பேசும்போது அது இம்மை மற்றும் மறுமைக்கான கல்வி, என்று கூறினார்கள். (முக்தஸரு தாரீகி திமஷ்க்)  வரலாற்றின் நோக்கம்:
சரித்திரத்தை சரித்திரமாக படிக்கவேண்டுமே தவிர நாவலாக படிக்கக்கூடாது. சமுதாயத்தின் எதிர்காலம் கடந்த காலத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. காலம் என்பது அறுந்து போகமுடியாத ஒரு சங்கிலித்தொடர். நிகழ்காலத்தில், சாதனைகள் பல நிகழ்த்த வேண்டுமென்றால் கடந்த கால வரலாற்றின் மூலம் படிப்பினை பெற்றாக வேண்டும். நம்முடைய சரித்திரத்தை நாம் படிக்கவில்லையானால் நம்முடைய தகுதியையும் திறமையையும் நாம் சரியாக அளவிட முடியாது. `சரித்திரம் பெருமை பட்டுக்கொள்வதற்காக அல்ல; படிப்பினை பெறுவதற்காக` என்பதை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளவேண்டும். இஸ்லாமிய வரலாற்றின் ஒவ்வொரு வரியும் வைர எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அது மனித வாழ்க்கையின் உயர்வை உண்மையாக்கும் உரைகல். இஸ்லாமிய சரித்திரத்தைப் பற்றி மட்டும் தெரிந்து கொள்ளக்கூடாது. இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கைகளையும் அதன் சரித்திர நிகழ்வுகளையும் நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் ஒவ்வொரு காலத்திலும் தோன்றக்கூடிய இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகளை எதிர்கொள்ள முடியும். எனவே தான், உமர் (ரலி) அவர்கள் ஒருவர் இஸ்லாத்தில் வளர்ந்து இஸ்லாமிய சரித்திரம் மற்றும் அதன் கொள்கைகள் பற்றி நன்கு அறிந்திருநது ஜாஹிலிய்யா எனும் மௌட்டீக காலத்து நிலைபற்றி அறியவில்லையானால் அவர் இஸ்லாத்தை படிப்படியாக அலைக்கழித்துவிடுவார், என்று எச்சரித்தார்கள். (மாதா கஸிரல் ஆலம் .....) அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தங்களுடைய மாணவர்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பதற்காக சிறப்பானதொரு பாடத்திட்டத்தை வகுத்திருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் மார்க்கச் சட்டங்கள் பற்றி மட்டுமே போதிப்பார்கள். ஒரு நாள் குர்ஆன் விளக்கவுரை மட்டுமே நடத்துவார்கள். ஒரு நாளை இஸ்லாமிய வரலாறுப் பாடத்துக்காக மட்டும் ஒதுக்குவார்கள். ஒரு நாள் அரபுக்கவிதைகள் பற்றி விளக்கம் கொடுப்பார்கள். ஒரு நாள் அரேபியர்களின் பழங்காலத்து வரலாற்றை போதிப்பார்கள். இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் வரலாற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இஸ்லாமிய வரலாற்றை மட்டும் போதிக்கவில்லை. மௌட்டீக காலத்து அரேபிய வரலாற்றையும் போதித்திருக்கிறார்கள். இன்று பாலஸ்தீனம், இஸ்ரேல், பைத்துல் முகத்தஸ் போன்ற வார்த்தைகள் சமூக வளைதளங்களின் மூலம் ஆண்கள், பெண்களுக்கிடையே பரவலாக அறியப் பட்டிருக்கின்றன. எனினும், பைத்துல் முகத்தஸ் - ஜெருஸத்தின் ஆரம்பகால, தற்கால வரலாற்றை நிறைவாக அறிந்து கொள்ளாத வரை மத்திய கிழக்கு பிரச்சினையில் நிறைவான முடிவான வெற்றி பெறுவதென்பது சாத்தியமில்லை, என்றே சொல்ல வேண்டும். தேசிய வரலாற்று தினம்:
ஆரம்பத்தில் வரலாற்றை அறிவதற்காக பாடத்திட்டத்தில் வரலாற்றுக்கலை அறிமுகப்படுத்தப் படவில்லை. யாராவது சரித்திரம் தெரிய வேண்டுமென்றால் அந்தக் கலை சார்ந்த நூற்களைத் தேர்ந்தெடுத்து தாங்களே படித்து தெரிந்து கொள்வார்கள். முஸ்லிம்கள் தான் தங்களுடைய ஆட்சிகாலத்தில் இஸ்லாமிய வரலாற்றை தனிப்பாடமாக தயாரித்து பாடத்திட்டத்தில் சேர்த்தார்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாறு மற்றும் நபித்தோழர்களின் வரலாற்றின் மீது தான் இஸ்லாத்தின் அடிக்கல் நாட்டப் பட்டிருக்கிறது. (ஹிந்துஸ்தான் மே முஸல்மானோங்கா நிஜாமெ தஃலீமோ தர்பியத்)

இன்று முஸ்லிம்கள் தங்களுடைய வரலாற்றை படித்து பாதுகாப்பதில் படிப்பினை பெறுவதில் எந்த அளவுக்கு அக்கரை செலுத்துகிறார்களோ தெரியவில்லை. எனினும்,  அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 ஆம் தேதியை தேசிய வரலாற்று தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மக்காவில் கூடி இபுறாஹிம் (அலை) அவர்களுடைய குடுபம்பத்தினரின் தியாக வரலாற்றைத் தானே நினைவுகூருகிறார்கள்.  இஸ்லாம் இதுபோன்ற தினங்களை அங்கீகரிக்குமேயானால் அந்நாட்களை சர்வதேச வரலாற்று தினங்கள் என்று கூடச் சொல்லலாம்.  நபி (ஸல்) அவர்களுடைய மற்றும் நபித்தோழர்களின் வரலறு மக்களுக்கு மத்தியில் பரவலாக பேசப்பட்டாலும் நபி (ஸல்) அவர்களுடைய பெயர் கூடத் தெரியாத பெயர்தாங்கி முஸ்லிம்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். நபித்தோழர்களின் காலத்துக்கு பிந்தைய இஸ்லாமிய வரலாறு பேசப்படுவதென்பது அரிதாகவே காணப்படுகிறது. முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் வரலாறுகளில் பகுத்தறிவுடையோருக்கு அரிய படிப்பினை உள்ளது....  (12:111) என்று கூறுகிறது குர்ஆன். எனவே தான் இறைவேதத்தில் சரித்திரங்கள் திரும்பத்திரும்ப கூறப்பட்டுள்ளன. வரலாற்றின் மூலம் படிப்பினை பெறுபவர்கள் தான் அறிவாளிகள் என்ற கருத்தை சூசகமாக விளக்கும் இந்த வசனம் சரித்திரத்தை எந்த நோக்கத்தில் படிக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. நாவல் படிப்பது போல் பொழுது போக்குவதற்காக இல்லாமல் வாழ்க்கையில் தேவையான திருப்பத்தை ஏற்படுத்துவகற்காக படிக்க வேண்டும்.       `உங்களில் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்கு அல்லாஹ் வாக்குறுதி அளிப்பது என்னவெனில் அவர்களை பூமியில் ஆட்சி (அதிகாரத்தை கொடுத்து) பிரதிநிதிகளாக்குவான்; அவர்களுக்கு முன் சென்ற மக்களை பிரதிநிதிகளாக்கியது போன்று! மேலும் அல்லாஹ் அவர்களுக்காக எந்த மார்க்கத்தை விரும்பினானோ அந்த மார்க்கத்தை வலுவாக நிலைநாட்டுவான். மேலும் அவர்களின் அச்சநிலையை அமைதிநிலையாக மாற்றித் தருவான். அவர்கள், என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணையாக்க மாட்டார்கள். இதன் பிறகும் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களே பாவிகள் ஆவர்` (அல்குர்ஆன் 24;55)
அல்லாஹ்வின் இந்த வாக்குறுதியை வரலாற்றின் ஒவ்வொரு பக்கமும் உண்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஃபிரான்சுடைய எல்லையிலிருந்து மங்கோலியா வரை முஸ்லிம்களின் பேரரசு முரசு கொட்டிக்கொண்டிருந்தது. பிறுகு என்ன ஆனது? அவர்கள் எங்கே போனார்கள்? சாதனை படைத்தவர்களின் வரலாற்றின் இறுதிப்பக்கங்கள் ஏன் இருட்டாகிவிட்டன? அந்த இறுதிப் பக்கங்கள் தான் இன்றைய சமுதாயம் படிப்பினை பெற வேண்டிய முதன்மைப்பக்கங்கள். நம்முடைய கடந்த கால வரலாற்றையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசத்தை உணரமுடிகிறது. நபித் தோழர்கள் வரலாற்றுத் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். பிள்ளைகளுக்கு குர்ஆனைக் கற்றுக்கொடுப்பது போல் சரித்திர நிகழ்வுகளை மனதில் பதிய வைத்திருக்கிறார்கள. என்னுடைய தந்தை எனக்கு இஸ்லாமிய சரித்திரத்தில் யுத்த நிகழ்வுகளை கற்றுகொடுத்துவிட்டு மகனே! இது உங்களுடைய மூதாதையர்களின் சிறப்புக்குரிய அம்சங்களாகும். அவற்றை நினைவுகூராமல் விட்டுவிடுவதின் மூலம் வீணாக்கிவிடாதீர்கள், என்று கூறுவார்கள், என்று ஸஃதுபின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுடைய மகனுடைய மகன் (பேரர்) இஸ்மாயீல் பின் முஹம்மது (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (முஹம்மதுர்ரஸுலுல்லாஹ்)

குர்ஆனுடைய அத்தியாயத்தை கற்றுக் கொள்வது போல் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடைய யுத்த வரலாற்றைக் கற்றுக்கொள்வோம், என்று ஜைனுல் ஆபிதீன் பின் ஹுஸைன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.  (அல்பிதாயா வந்நிஹாயா)

மஸ்ஜிதில் வரலாற்று வகுப்பு:
உமருப்னு அப்தில் அஜீஸ் (ரஹ்) அவர்களுடைய ஆட்சி காலத்தில் டெமாஸ்கசுடைய மஸ்ஜிதில் வரலாற்றுப் பாடத்துக்காக ஏற்பாடு செய்து அதற்குத் தகுதியான வரலாற்று ஆசிரியரையும் நியமித்தார்கள், என்பது வரலாறு. கதாதா பின் நுஃமான் (ரலி) அவர்களுடைய பேரர் ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் நபி மொழிகளை அறிவிப்பது போல் வரலாற்றுத் துறையிலும் தேர்ந்திருந்தார்கள். மஸ்ஜிதில் இஸ்லாமிய சரித்திரத்தையும் நபித்தோழர்களின் சிறப்புக்களையும் மக்களுக்கு விளக்கி வைக்குமாறு ஆஸிம் (ரஹ்) அவர்களுக்கு உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (தஹ்தீபுத்தஹ்தீப்)
இன்று நபித்தோழர்களின் வரலாறு முறையாக தெரியாததால் இஸ்லாமிய இளைய தலைமுறை பல வழிகெட்ட கூட்டங்களில் இணைந்து விடுகிறது. பெயர்தாங்கி முஸ்லிம்களே கூட நபித்தோழர்களின் வரலாற்றில் ஏகப்பட்ட இடைச்செருகல்களை சேர்த்து வைத்திருப்பதால் நபித்தோழர்களின் மீதே தவறான எண்ணத்தை உண்டாக்கி விடுகிறது.நபிமொழிகள் திரட்டப்பட்ட அருமையான வரலாற்றை நிறைவாக சமுதாயம் அறிந்திருந்தால் ஹதீஸை மறுக்கும் வழிகேட்டிலிருந்து மிக எளிதாக பாதுகாப்பு பெறமுடியும்.  நம்முடைய சரித்திரம் சாதாரணமானதல்ல. ஒரு நேரத்தில் விஞ்ஞானம் அறிய வேண்டுமென்றால் அரபி படித்தாக வேண்டிய நிர்பந்தம் இருந்தது. பாதிரிமார்கள் கிருத்தவர்களை அரபி கற்றுக்கொள்ளும்படி தூண்டுவார்கள். ஒரு காலத்தில் இன்றைய அமெரிக்காவைப் போன்று பக்தாத் தான் உலகச் சந்தையாக செயல்பட்டது. பக்தாதுடைய நாணயம் அங்கீகரிக்கப்பட்ட நாணயமாகத் திகழ்ந்தது. உலகின் உற்பத்திப் பொருட்களுக்கு பக்தாதின் சந்தை தான் விலை நிர்ணயம் செய்யும். இன்று ஒரு பக்கம் அந்த நிலை மாறிவிட்டதென்றால் மறுபக்கம் முஸ்லிம்களின் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டும் மாற்றப்பட்டும் இருக்கிறது. இந்திய முஸ்லிம் ஆட்சியாளர்கள் பற்றியும் இந்திய முஸ்லிம்கள் இந்நாட்டிற்காக செய்த தியாகம் பற்றியும் உண்மைக்கு மாறான தகவல்கள் உலாவருவதே இதற்கு போதுமான சான்று. எனினும் இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் தங்களுடைய படைப்புகளில் நேர்மையை கையாண்டிருக்கிறார்கள். மாற்றுமதத்தவர்களாக இருந்தாலும் அப்படியே பதிவு செய்திருக்கிறார்கள். யூனானீ மருத்துவத்துறையில் முஸ்லிம்கள் பல புதிய முறைகளைக் கொண்டுவந்தனர். தங்களுடைய ஆய்வு முடிவுகளையும் அதில் சேர்த்தனர். எனினும் முஸ்லிம்கள் வரலாற்றைத் திரிக்க முயற்சிக்க வில்லை.  யூனானீ மருத்துவம் என்ற பெயரில் கூட எந்த மாற்றமும் செய்யவில்லை. அந்த அளவுக்கு நேர்மையாக நடந்து கொண்டார்கள். மர்ராகேஷைச் சார்ந்த அல்லாமா முஹ்யுத்தீன் அபூ முஹம்து அவர்கள் அல்முஃஜப் ஃபீ அக்பாரில் மக்ரிப் என்ற ஒரு வரலாற்று நூலை கோர்வை செய்துள்ளார்கள். அதில் ஸ்பெயினுடைய வரலாற்றைத் தொகுத்துள்ளார்கள். அந்த நூலில் முஸ்லிம்களுக்கு பாதகமான பின்வரும் நிகழ்வையும் மறைக்காமல் பதிவு செய்துள்ளார்கள். ஒரு தடவை முஸ்லிம்களுக்கும் கிருத்தவர்களுக்கும் மத்தியில் யுத்தம் நடந்த போது கிருத்தவர்கள் முற்றுகையிடப்பட்டார்கள். தண்ணீர் செல்லும் பாதை கூட அடைக்கப்பட்டு விட்டது. தண்ணீர் கிடைக்காமல் பலர் இறக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் கிருத்துவர்கள் ஒன்று கூடி பிரார்த்திக்க ஆரம்பித்தனர். (எதிர்பாராவிதமாக) திடீரென மழை பொழிந்தது. அதன் பிறகு எதிரிகள் பலம் பெற்றுவிட்டனர். வேறு வழியின்றி அமீருல் முஃமினீர் அபூ யஃகூப் முற்றுகையை விலக்கிக் கொள்ளவேண்டிய கட்டாயமாகிவிட்டது.  (ஹிந்துஸ்தான் மே முஸல்மானோங்கா நிஜாமெ தஃலீமோ தர்பியத்)

Thursday, 6 November 2014

குர்ஆன் சொல்லும் பெருவெடிப்பு big bang


குர்ஆன் சொல்லும் பெருவெடிப்பு big bang


ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த கட்டுரையைப் படிக்கும் போது அந்த தினம் முடிந்திருக்கும். எனினும், குர்ஆனிய அறிவியல் தொடர்பான சில செய்திகளையும் அறிந்து கொள்வோம். சூரியன், சந்திரன், பூமி இவற்றைப் பற்றி அறியாதவர் இந்த பூமியில் இருக்கமுடியாது. நாம் வாழக்கூடிய வீடு, சென்னையில் உள்ள ஒரு பகுதியின் வீதியில் உள்ளது. சென்னை தமிழத்தின் ஒரு மாவட்டம். தமிழகம் இந்தியாவின் ஒரு மாநிலம். இந்தியா ஆசியாக் கண்டத்தின் ஒரு நாடு. ஆசியா உலகின் ஏழு கண்டங்களில் ஒரு கண்டம். ஏழு கண்டங்களையும சேர்த்து பூமியின் கால்பகுதி கூட இருக்காது. இந்த பிரபஞ்சத்தில் பூமி முழுவதும சேர்ந்தாலும் அது பூமியில் நம்முடைய வீடு அளவுக்குக் கூட இருக்காது. இந்த இந்த பூமி சூரியனை மையமாக வைத்து சுற்றிவரக் கூடிய ஒன்பது - இல்லை- எட்டு கோள்களில் ஒன்று. நாம் பார்க்கக்கூடிய சூரியன் இரவில் நம் கண்ணுக்குத் தெரியும் நட்சத்திரங்களைப் போல ஒரு நட்சத்திரம் தான். மற்ற நட்சத்திரங்களை விட சூரிய நட்சத்திரம் நமக்கு நெருக்கமாக இருப்பதால் வட்டமாகவும் பெரிதாகவும் தெரிகிறது. இது போன்ற கோடானு கோடி நட்சத்திரங்கள் சேர்ந்தது தான் ஒரு கேலக்ஸி. நம்முடைய சூரியன் இருக்கும் நட்சத்திரக் கூட்டத்திற்கு பால்வழி மண்டலம்  மில்கீ வே என்று சொல்லப்படும். இது போல் இந்த பிரபஞ்சத்தில் 600 மில்லியனுக்கும் அதிகமான கேலக்ஸிகள் உள்ளன. ஒவ்வொரு கேலக்ஸியிலும் பில்லியன் கணக்கில் நட்சத்திரங்கள் இருக்கும். அப்படியானால், இந்த பூமியில் வாழும் நாமும் நம்முடைய பங்களாவும் எவ்வளவு பெரியது? என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள். எண்ணலடங்காத கேலக்ஸிகள் கொண்ட விரிவான அதே சமயம் வினோதம் நிறைந்த இந்த நம்முடைய பிரபஞ்சம் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு நொடியில் அணுவினும் சிறிய ஒன்றிலிருந்து பெருவெடிப்பினால் தோன்றியிருக்கும், என்று அறிவியல் கொள்கை கூறுகிறது. மொத்தத்தில் நாம் பார்க்கும் படைப்புகள் அனைத்தும் ஆரம்பத்தில் ஏதோ ஒன்றிலிருந்து வெடித்துச் சிதறியதன் மூலம் உண்டாகியிருக்கின்றன. இது பற்றி குர்ஆனில் ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா? என்று பார்ப்போம். பிக்பேங்க்:
குல்அவூது பிரப்பில் ஃபலக். மின்ஷர்ரி மாகலக்.... - (இருட்டிலிருந்து வெடித்து வரும்) அதிகாலையின் இரட்சகனைக் கொண்டு, அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்து பாதுகாவல் தேடுகிறேன், என்று நபியே நீர்கூறுவீராக!
ஃபலக் என்ற சொல் ஃபல்க்- திடீரென பிளக்குதல், வெடித்தல் என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்த வார்த்தை. அதாவது ஒரு மாபெரும் வெடிப்பின் (க்ஷஐழு க்ஷஹசூழு) மூலம் வெளியானவை என்பதே இந்த வார்த்தையின் பொருள். எனினும் பயமுறுத்தக்கூடிய இருளிலிருந்து வெடித்துக் கொண்டு பகல் வருவதால் நடைமுறையில் ஃபலக் என்ற வார்த்தைக்கு காலை - சுபுஹ் நேரம் என்று தஃப்ஸீர்களில் பரவலாக கூறப்பட்டுள்ளது. இல்லையானால் ஃபல்க் என்ற வார்த்தை எல்லா வகையான வெடிப்புக்கும் சொல்லப்படும். இமாம் ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள், ஃபலக், என்ற வார்த்தை முழு படைப்பையும் உள்ளடக்கிக் கொள்ளும், என்று கூறியுள்ளார்கள். (தஃப்ஸீருல் குர்துபீ) பிக் பேங்க் பற்றி தஃப்ஸீரில்:
அல்லாஹ் (மற்றொன்றிலிருந்து) எதையெல்லாம் பிளந்தெடுக்கிறானோ அவையனைத்தையும் ஃபலக் என்ற வார்த்தை உள்ளடக்கிக் கொள்ளும், என்று தஃப்ஸீர் ராஜியில் கூறப்பட்டுள்ளது. இவ்விளக்கத்தைக் கூறிய இமாம் ராஸீ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு எழுதுகிறார்கள்: நீ படைப்புகளை சிந்தித்துப் பார்த்தால் அவற்றில் அதிகமானவை வெடிப்பின் மூலம் தான் வெளியாகியிருக்கும், என்பது மட்டுமல்ல, ஆரம்பத்தில் இல்லாமை என்ற இருட்டுக் கடலை படைத்தல் - உண்டாக்குதல், என்ற பிரகாசத்தைக் கொண்டு வெடிக்கச் செய்தான். இந்த கருத்தே மிகவும் பொருத்தமானது.,  (தஃப்ஸீர் ராஜி - 11/372)
இன்றைய விஞ்ஞான ஆய்வுகளும் இக்கருத்தையே நரூபிக்கின்றன. பிக்பேங்க் எனும் மகா வெடிப்பு ஒரு சூன்யமில்லாத சூன்யத்திலிருந்து மிகப் பெரிய சக்தி வெடித்துச் சிதறி இந்த பிரபஞ்சம் படிப்படியாக உருவானது, என்று விஞ்ஞானம் கூறுகிறது. பாதுகாப்பு தேடுங்கள்:
மாபெரும் வெடிப்பின் மூலம் சிதறி ஓடிக்கொண்டிருக்கும் இந்த அனைத்து படைப்புகளுக்கும் இரட்சதகன் நான் தான். என்னுடைய கட்டளையின் மூலம் தான் இந்த பெருவெடிப்பு நடந்தது. இருட்டைப் பிளந்து பகல் வெளியாவதும் என்னுடைய கட்டளையால் தான். தரையைப் பிளந்து மரம் வெளியாவதும் என்னுடய கட்டளையால் தான். மேகத்தைப் பிளந்து கொண்டு மழை கொட்டுவதும் என்னுடைய கட்டளையால் தான். பாறையைப் பிளந்து தண்ணீர் வெளியாவதும் என்னுடைய கட்டளையால் தான். அறியாமையைப் பிளந்து அறிவாற்றல் வெளிப்படுவதும் என்னுடைய கட்டளையால் தான். கருமுட்டை வெடித்து கருதரிப்பதும் என்னுடைய கட்டளையால் தான். வயிற்றைப் பிளந்து குழந்தை வெளியாவதும் என்னுடைய கட்டளையால் தான். ஒன்றுமே இல்லாத, ஆனால், மிகவும் அடர்த்தியான ஒரு சூன்யத்திலிருந்து ஒரு சில மைக்ரோ வினாடி காலத்தில் பெரு வெடிப்பின் மூலம் இந்த முழு பிரபஞ்சமும் வெளிவந்ததும் என்னுடைய உத்தரவினால் தான். எனவே எல்லா படைப்புகளும் என்னுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. அவற்றின் மூலம் நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் என்னுடைய வல்லமையைக் கொண்டு தான் நடைபெறும். ஆகையால் பட்புகளின் தீங்கிலிருந்து, வெடித்துச் சிதறியவற்றின் இரட்சகனாகிய என்னைக் கொண்டே பாதுகாவல் தேடுங்கள், என்று அல்லாஹ் கூறுவது போல் உள்ளது. (குல்அவூது பிரப்பில் ஃபலக்) விரிவடையும் பிரபஞ்சம்:
பெருவெடிப்புக்குப் பிறகு என்ன நடந்தது? விஞ்ஞானி ஜன்ஸ்டீன் இந்த பிரபஞ்சத்தை ஒரு பலூனுக்கு ஒப்பிடுகிறார். அந்த பலூன் மீது ஆங்காங்கே இருக்கும் புள்ளிகளை கேலக்ஸிகளாக கற்பனை செய்வோம். தொடந்து அந்த பலூனை ஊதிக்கொண்டிருந்தால் அந்த புள்ளிகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகும். ஊதப்படாமல் இருந்த பலூன் மீது நெருக்கமாக இருந்த புள்ளிகள் பலூனை ஊத ஊத விலகிக் கொண்டே செல்வதைக் காணலாம். இதே போன்று பெருவெடிப்புக்குப் பிறகு இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இன்றும் விரிகிறது. இனியும் விரியும். ஒரு கணக்குப்படி ஒரு கேலக்ஸி மற்றொரு கேலக்ஸியை விட்டும் வினாடிக்கு 980 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று கொண்டிருந்தால் இந்த பிரபஞ்சத்தின் பரப்பளவைத் தான் கற்பனை செய்ய முடிகிறதா?
இதைத் தான் அல்லாஹ் குர்ஆனில்,
வானத்தை (பிரபஞ்சத்தை) நாம் நம் வலிமையினால் படைத்தோம். மேலும் நாம் விரிவுபடுத்துபவர்களாகவும் இருக்கிறோம், (51:47) என்று கூறுகிறான் போலும். இந்த வசனத்தின் பல கருத்துக்களில் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருப்பதையும் ஏற்றுக்கொள்ளலாம். இங்கு விரிவுபடுத்தினோம், என்றோ விரிவுபடுத்துவோம் என்றோ கூறவில்லை. தொடர்ந்து விரிவடைதல் என்ற கருத்தைத் தரும் விரிவுபடுத்தக்கூடியவன் - விசாலமாக்குபவன் என்ற வார்த்தை ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. தொடர்ந்து இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. ஒரு கேலக்ஸி மற்றொரு கேலக்ஸியை விட்டும் ஒவ்வொரு வினாடியும் 980 கி.மீ. தூரம் விலகிச் செல்கிறது, என்றால் அல்லாஹ்வின் இந்த வசனம் நடப்பு விஞ்ஞானத்துடன் எந்த அளவுக்கு பொருந்திப் போகிறது, என்பதை சிந்திக்க முடிகிறது. இப்பவும் ஒரு எழுத்து எழுதுவதற்குள் நாம் 980 கி.மீ. தூரம் தூக்கி வீசப்பட்டு விட்டோம். இவ்வளவு வேகமான பயணத்திற்கு மத்தியிலும் அதைப் பற்றிய எந்த உணர்வும் சிந்தனையும் இல்லாமல் நம்முடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதே போன்று வாழ்க்கையில் ஏற்படும் எப்படிப்பட்ட பிரச்சினையிலும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே இலக்காகவும் இலட்சியமாகவும் கொள்ள வேண்டும். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களையெல்லாம் கூட ஒதுக்கிவிட்டு ஒரு ஆரம்பகால மாணவனைப் போல் படித்தால் கூட வானவியல் - விண்வெளி உங்களைச் சுண்டி இழுத்துவிடும். ஏனென்றால் இந்தப் பிரபஞ்சம் அத்துனை வசீகரமாக இருக்கிறது. பல ஆச்சர்யங்களயும் அதிசயங்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது. இதைக் காணும் போதெல்லாம் நாம் எத்தனை சிறிய அற்பமான ஓர் உயிர் என்பது நமக்கு வெளிப்பட்டு நம்முடைய சாமான்யத்தன்மை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அல்லாஹ்வின் செயலாகிய இந்த படைப்பில் நம்மை ஈர்க்குமளவுக்கு அதிசயங்கள் நிறைந்திருக்கிறதென்றால் அவனுடைய கலாம் - பேச்சாகிய குர்ஆனுடைய வசனங்களில் நாம் ஆழ்ந்து கவனம் செலுத்தினால் எவ்வளவு நிறைவான அதிசயங்களையும் அறிவுப் பொக்கிஷங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்! ஒருமுறை சர். சி.வி.ராமன், கப்பலில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிக்கொண்டிருந்த போது, "கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது' என யோசித்தார். இதை அவர் ஆராய்ந்து 1928, பிப்., 28ல், "ராமன் விளைவை' கண்டுபிடித்தார். "நீர் மற்றும் காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம், தண்ணீரில் தோன்றுகிறது' என கண்டுபிடித்தார். இதற்காக 1930ம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.