Saturday, 6 January 2018

நபிகளாரை அறிவோம்


முஹம்மது (ஸல்)
நபி (ஸல்) அவர்களுடைய அருமையான பெயர் முஹம்மது (ஸல்) ஆகும். முஹம்மது என்பதன் பொருள் மீண்டும் மீண்டும் எல்லையின்றி நிரந்தமாக புகழப்படுபவர் என்பதாகும். 

புதினமான பெயர்
முஹம்மது (ஸல்) என்ற பெயர் ஜாஹிலிய்யா எனும் மௌட்டீக காலத்தில் அரபுகள் தங்களுடைய குழந்தைக்கு நபி (ஸல்) அவர்களுக்கு முன்பாக சூட்டியது கிடையாது, என்று சொல்லுமளவுக்கு அந்தப் பெயர் மிகவும் குறைவாகவே காணமுடிகிறது.

அல்லாமா அபூ ஜஃபர் முஹம்மது பின் ஹபீப் பக்தாதீ அவர்கள் வெறும் ஏழு நபர்களுக்கு மட்டுமே இந்தப் பெயர் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். அப்படி வைத்த சிலரும் கூட பெரும்பாலும் இப்படியொரு நபி அரபுலகில் பிறப்பார், என்பதை வேதக்காரர்களின் மூலம் அறிந்ததால் தான் வைத்திருப்பார்கள். சுஃப்யான் என்பவர் ஷாம் தேசத்திற்கு சென்ற போது ஒரு பாதிரியிடம் தங்கியிருந்தார். அவர், அரபுகளிடம் ஒரு இறைத்தூதர் அனுப்பப்படுவார். அவருடைய பெயர் முஹம்மது என்று கூறினார். இதைக் கேட்ட சுஃப்யான் தன்னுடைய மகனுக்கு முஹம்மது என்று பெயரிட்டுக் கொண்டார். (தஃப்ஸீரெ மாஜிதி 1/658)


அப்துல் முத்தலிப்
நபி (ஸல்) அவர்களின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ். பாட்டானாரின் பெயர் அப்துல் முத்தலிப். ஹாஷிமின் மகன் தான் அப்துல் முத்தலிப். ஹாஷிம் ஷாம் தேசம் செல்லும் போது அங்கேயே மரணித்து விட்டார்கள். மதீனாவில் அவருடைய தாயாரிடம் ஏறத்தாழ எட்டு வருடங்கள் வரை வாழ்ந்தார்கள். அவர் பிறக்கும் போதே தலையிலி நரைமுடி இருந்ததால் அந்தப் பொருளைப் கொண்ட ஷைபா என்றே ஆரம்பத்தில் பெயர் வைக்கப்பட்டது.

பிறகு ஹாஷிமுடைய சகோதரர் முத்தலிப் மதீனாவுக்குச் சென்று எட்டு வயது நிறைந்த தன்னுடைய ஷைபாவை மக்காவுக்கு அழைத்து வந்தார். மக்காவாசிகள் ஷைபாவை முத்தலிபுடன் புதிதாதாகப் பார்த்தவுடன் இவர் அப்துல் முத்தலிப் - முத்தலிபின் அடிமை என்று அழைக்க ஆரம்பித்தனர். அதே பெயரில் அவர் பிரபல்யமாகிவிட்டார்.  (அத்தபகாதுல் குப்ரா - 156; ஃபத்ஹுல் பாரீ)


நபியவர்களின் ஆயுட்காலம்
காளீ சுலைமான் மன்சூர்பூரி (ரஹ்) அவர்கள், தங்களுடைய ரஹ்மதுல்லில்ஆலமீன் என்ற நூலில் நபி (ஸல்) அவர்கள் உலகில் 22,330 நாட்களும் ஆறு மணிநேரமும் உலகில் வாழ்ந்தார்கள். அதில் 8156 நாட்கள் தப்லீக் ரிஸாலத் எனும் இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொண்டார்கள், என்று ஒவ்வொரு வினாடியையும் நுணுக்கமாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்கள்.                                        நூல்: முஹாளராதெ ஸீரத் - பக்: 666. டாக்டர் மஹ்மூத் அஹ்மத் காஸீ


அஸ்மாவுர்ரிஜால்
நபி (ஸல்) அவர்களுடைய வரலாறு மட்டுமல்ல. அந்த வரலாற்றை உலகுக்கு அறிவித்துத் தந்த நபித்தோழர்கள், தாபியீன்கள், மற்றும் அவர்களுக்குப் பின் வந்தவர்களின் வரலாறுகளும் இன்று எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அஸ்மாவுர் ரிஜால் கலை என்று சொல்லப்படும். வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும் எழுத்து வடிவம் பெற்றபோது அறிவிப்பாளர்கள் அனைவரின் பெயர்களும் குறிப்புகளும் அவர்களுடைய வாழ்க்கை வரலாறும் பழக்க வழக்கங்களும் ஒழுக்கமும் நடத்தைகளும் பற்றிய தகவல்களும் எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இவ்வாறு தொகுக்கப் பட்டோரின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. முஸ்லிம்கள் உருவாக்கிய அஸ்மாவுர்ரிஜால் (அறிவிப்பாளர்களின் அறிமுகக்கலை) எனும் கலை போன்றதொரு அறிவுக்கலையை இன்று உலகில் வாழும் எந்த சமூகமும் கண்டறிந்ததில்லை.

அக்கலை மூலம் இன்றைய உலகம் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது, என்று நபி (ஸல்) அவர்களை விமர்சனம் செய்வதற்காகவே எழுதிய ஐரோப்பிய ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.                குதுபாதெ மதராஸ் - அல்லாமா ஸைய்யிது சுலைமான் நத்வீ (ரஹ்)


பத்து நாட்கள்
காலித் முஹம்மது காலித் என்ற நூலாசிரியர் நபி (ஸல்) அவர்களுடைய வெறும் பத்து நாட்களின் நிகழ்வுகளை மட்டும் அஷ்ரது அய்யாமின் ஃபீ ஹயாத்திர் ரஸுல் என்ற பெயரில் 190 பக்கங்களில் ஒரு நூலைத் தொகுத்துள்ளார். பாலூட்டும் பாக்கியம் நபி (ஸல்) அவர்களுக்கு பாலூட்டியவர்களின் சரித்திரத்தை ரஸுலெ அக்ரம் (ஸல்) கீ ரளாயீ மா - கண்ணியமிகு நபி (ஸல்) அவர்களுக்கு பால்கொடுத்த தாய்மார்கள் என்ற பெயரில் உர்தூ மொழியில் ஏறத்தாழ 170 பக்கங்களில் டாக்டர் முஹம்மது யாஸீன் தொகுத்துள்ளார். நபி (ஸல்) அவர்களுக்கு பாலூட்டியவர்களில் பிரபல்யமாக அறியப்படுபவர்கள் மூன்று பேர். 1. அவர்களுடைய தாயார் ஆமினா. 2. சுவைபா. 3. ஹலீமா ஸஃதிய்யா (ரலி)


நுக்தா இல்லாத நூல்
நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை பல விதங்களில் தொகுப்பாளர்கள் தொகுத்துள்ளனர். ஹாதியெ ஆலம் - உலகின் வழிகாட்டி என்ற பெயரில் கிதாபில் வரும் எழுத்துக்களில் ஒரு நுக்தா - புள்ளி கூட வராத விதத்தில் ஏறத்தாழ 400 பக்கங்களில் முஹம்மது வலீ ராஸீ தொகுத்துள்ளார்.

வரலாற்றுப் பாக்கியம்
ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் அரபு மொழிப் பேராசிரியரான மார்காலிஸ் என்பவர் அண்ணலாரின் வாழ்வைப் பற்றி விஷம் தோய்ந்த நச்சு மையினால் எழுதினார். அவர் ஒவ்வொரு நிகழ்வையும் தவறான கண்ணோட்டத்தில் அணுகி கீழ்த்தரமான முடிவையே முன்வைக்கிறார். அவரும் தன்னுடைய முன்னுரையில் ர் உண்மையை ஒப்புக் கொள்கிறார்:
முஹம்மதுவின் வரலாற்றை எழுதியோரின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அது ஒரு போதும் முடிவடையாது. அதில் இடம்பிடிப்பது உண்மையிலேயே கௌரவத்தை உயர்த்தும் செயல்.                      குதுபாதெ மதராஸ் -பக் 61. அல்லாமா ஸைய்யிது சுலைமான் நத்வீ (ரஹ்)