Monday, 9 October 2017

பர்மா முஸ்லிமகளின் 1200 ஆண்டு வரலாறு






சமீப காலமாக மியான்மர் சர்வதேச அளவில் அதிகம் பேசப்படும் நாடாக மாறியுள்ளது. அந்நாட்டில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்கள் கொடூரத்திலும் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்படும் செய்தி ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் பார்வையையும் பர்மாவை நோக்கி திரும்பச் செய்திருக்கிறது. இப்படிப்படட சூழலில் பர்மாவில் முஸ்லிம்களின் வரலாறு என்ன? அவர்கள் அங்கு எவ்வளவு காலமாக தங்கியிருக்கிறார்கள்? அவர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்? இன்று வரை அவர்களுடைய உண்மையான நிலை என்ன? என்பது பற்றி நாம் அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


பர்மாவின் இருப்பிடம்
பர்மா எனும் மியான்மர் ஒரு தென்கிழக்காசிய நாடாகும். பர்மாவின் பெரும்பகுதி கடலோரத்தோடு சேர்ந்திருக்கிறது. பர்மாவின் தென்கிழக்கில் தாய்லாந்தும் கிழக்கில் லாவோஸும் வடகிழக்கில் சீனாவும் வடமேற்கில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களும் மேற்கில் பங்களாதேஷும் உள்ளன. கடைசி மொகலாய மன்னர் பகதூர் ஷா, ஆங்கிலேயனை எதிர்த்து போரிட்டதின் காரணமாக 1858 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அவரை ஆயுளுக்கும் பர்மாவில் உள்ள ரங்கூன் நகருக்கு நாடு கடத்தி விட்டனர். நான்கு வருடங்களுக்குப் பிறகு 1862 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி அங்கேயே அவர் மரணித்துவிட்டார்.


மியான்மர் முஸ்லிம்களின் எண்ணிக்கை
பர்மாவின் மக்கள் தொகை 2014 ஆம் ஆண்டின் கணக்குப்படி ஐந்து கோடியைவிடவும் சிறிது அதிகம். 80 சதவீதத்தினர் பௌத்தர்கள். மற்றவர்கள் கிருத்தவர்கள், முஸ்லிம்கள் மற்ற சிறுபான்மையினர்களும் உள்ளளர். அரசாஙக கணக்கின்படி முஸ்லிம்கள் 5 சதவீதம் என்று சொல்லப்பட்டாலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதைவிடவும் அதிகமாகவே இருக்கும். ஒரு கணிப்பின்படி மொத்தமுள்ள ஐந்து கோடி மக்கள் தொகையில் 50 லட்சத்திலிருந்து 80 லட்சம் வரை முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களில் ஒரு பெருந்தொகையினர் பௌத்தர்களின் வன்முறைத் தாக்குதலுக்கானதின் காரணமாக  இந்தியா, பங்களாதேஷ், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். சமீபத்திய கொடூரரத் தாக்குதலின் போது கூட மூன்று லட்சம் முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அராகான் எனும் ராக்கைன் மாகாணம்
பர்மாவும் இந்தியாவைப் போன்று ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. 1937 ஆம் ஆண்டு பகுதி சுதந்திரம் கிடைத்தது. 1948 ஆம் ஆண்டு முழுமையான சுதந்திரம் அடைந்தது. எனினும், சிறுபான்மையினர்களைப் பொறுத்தவரை இன்றுவரை சுதந்திரம் பெறவில்லை, என்றே சொல்ல வேண்டும்.  இந்நாட்டின் பழைய பெயர் பர்மா. பின்னர், மியான்மர் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. இந்தப்பெயரை இன்று வரை சில நாடுகள் அங்கீகரிக்கவில்லை. வங்க தேசத்தின் எல்லையை ஒட்டிய மியான்மரின் கடலோரத்தில் அராகான் (ராக்கீன்) என்றொரு மகாணம் உள்ளது. அங்குதான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அராகனுடைய வடக்கு எல்லை வங்கதேசத்துடன் இணைகிறது.

பர்மாவில் இஸ்லாம் வந்த வரலாறு
கி.பி. 763 ஆம் ஆண்டு முதல் 809 ஆம் ஆண்டு வரை அப்பாஸிய்யா குடும்பத்தைச் சார்ந்த கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் இஸ்லாமிய உலகை ஆட்சி செய்தார்கள். அந்த ஆட்சி காலத்தில் (ஏறத்தாழ இன்றிலிருந்து 1200 ஆண்டுகளுக்கு முன்பே) அராகான் மாநிலத்தில் இஸ்லாம் பரவியது. பர்மாவில் இஸ்லாமியர்கள் எந்த ராணுவ நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. அரேபிய முஸ்லிம் வியாபாரிகள் கடல் மார்க்கமாக அராகான் பகுதிக்கு வந்தனர். தங்களுடைய வியாபாரச் சரக்குகளுடன் முன்மாதிரி இஸ்லாமிய நற்குணங்களையும் செயல்ரீதியாக எடுத்து வந்தனர். அந்த வியாபாரிகளின் இஸ்லாமிய நற்குணங்களைப் பார்த்து அவர்களுக்கு இஸ்லாத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. தங்களுக்கு அந்த அழகிய நல்வாழ்க்கை கிடைக்க வேண்டுமென்ற பேரார்வத்தில் அந்த மக்கள் மனமுவந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அங்கு ஏராளமான மஸ்ஜிதுகள் கட்டப்பட்டன.

பர்மாவில் முஸ்லிம்களின் ஆட்சி
பின்னர் வங்கதேசத்தின் உதவியுடன் கி.பி. 1430 ஆம் ஆண்டு முதல் அராகான் மாநிலத்தில் இஸ்லாமிய ஆட்சி நடைபெற்றது. 1430 முதல் 1784 ஆம் ஆண்டு வரை 354 ஆண்டுகளில் 48 முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்தனர். 1784 ஆம் ஆண்டு பௌத்த மதத்தைச் சார்ந்த பர்மிய மன்னர் அநியாயாமாக அராகானை கையகப் படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் முஸ்லிம்களின் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர். மஸ்ஜித்கள், மதரஸாக்கள், இஸ்லாமிய நூலகங்கள் என ஒவ்வொரு இஸ்லாமியச் சின்னத்தையும் சிதைத்தனர். அதுமட்டுமல்ல. முஸ்லிம்களின் மீது தீவிரவாதத் தாக்குதல் தொடுத்து அவர்களை கொன்று குவித்தனர். புத்தமத ஆலயங்களைக் கட்டி முஸ்லிம்களையும் புத்த மத வழிபாட்டில் நிர்பந்தமாக பங்கெடுக்கச் செய்தனர். இதனால் முஸ்லிம்கள் தங்களுடைய உயிரையும் ஈமான் எனும் இறைநம்பிக்கையையும் தற்காத்துக் கொண்டு பர்மாவை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். (இன்றும் அது தான் நடந்து கொண்டிருக்கிறது.)

பர்மிய முஸ்லிம்கள் மீதான வன்முறை வரலாறு
முஸ்லிம்களின் மீதான இந்த அடக்குமுறைத் தாக்குதலை நாற்பது வருடங்களாக கட்டவிழ்த்து விட்டது, பௌத்த அரசு. அக்காலத்தில் அவர்கள் இழைத்த கொடுமைகளையும் கொடூரத்தையும் இந்த வானமும் பூமியும் அது வரை பார்த்திருக்க முடியாது, என்கிற அளவுக்கு கொடுமைப் படுத்தினார்கள். (அக்காலத்தில் இன்றிருப்பது போல் சமூக வலைதளங்கள் இல்லாததால் அங்கு நடக்கும் கொடுமைகள் வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கப் பட்டுவிட்டன.)

நாற்பது வருடங்களுக்குப் பிறகு 1824 ஆம் ஆண்டு அராகான் உட்பட முழு பர்மாவையும் பிரிட்டானிய அரசு தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது.  அப்பொழுதும் பௌத்தர்கள் முஸ்லிம்களுடன் வெறுப்புணர்வு கொண்டே இருந்தனர். 1947 ஆம் ஆண்டு பர்மாவின் பல்வேறுபட்ட பிரிவினரைச் சார்ந்தவர்களையும் அழைத்து ஒரு மாநாட்டை பௌத்தர்கள் நடத்தினர். ஆனால், அதில் கலந்து கொள்வதற்காக முஸ்லிம் பிரதிநிதிகள் யாருக்கும் அழைப்பு கொடுக்கமால் தன்னுடைய விரோதத்தையே வெளிப்படுத்தியது.

1948 ஆம் ஆண்டு பர்மாவுக்கு ஆங்கிலேயனிடமிருந்து சுதந்திரம் கிடைத்தாலும் அராகான் முஸ்லிம்களுக்கு பௌத்தர்களிடமிருந்து சுதந்திரம் கிடைக்கவில்லை. முஸ்லிம்களின் மீதான அடக்குமுறை இன்று வரை தொடர்கிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சீ பர்மாவின் ஆட்சித் தலைவரான பிறகும் பலகீனமான முஸ்லிம்களின் மீதான கொடூரமான படுகொலைகள் தொடர்ந்த வண்ண்மாகவே இருக்கிறது. பௌத்தர்கள் இன்று வரை சர்வதேச சட்டங்களையும் கருத்தில் கொள்வதில்லை. எவ்வித மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்வதில்லை. கொடூரமான மிருகத்தனத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் புரியும் கொடூரத்தனத்தை மிருகங்களும் கூட சகித்துக் கொள்ள முடியாதது.

ஆனால், எப்பொழுதுமே முஸ்லிம்களை குறை கூறிக்கொண்டிருக்கும் மீடியாக்களும் உலக நாடுகளும் இதைக் கண்டித்து எழுதவும் கருத்து கூறவும் முன்வருவதில்லை. உலகிலேயே மிகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சமூகம் முஸ்லிம் சமுதாயம்தான். ஆனால், உலகம், அவர்களைத் தான் தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டுகிறது.  காட்டுமிரண்டித்தனமான பர்மியத் தாக்குதல் பற்றி அப்படிப்பட்ட வாசகங்கள் பயன்படுத்தப் படுவதில்லையே, ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை. இஸ்லாத்தின் உண்மைத்துவம் வெளிப்பட்டு கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் மக்களைப் பார்த்து இஸ்லாத்தின் வெற்றியைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்களோ என்னவோ?! 1948 ஆம் ஆண்டுக்குப் பிறகிலிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாகி விட்டனர். குழந்தைகள் அனாதைகளாகி விட்டனர்.

குர்பானிக்கு தடை
முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அநியாய அடக்குமுறை என்பது 1550 ஆண்டிலிருந்தே ஆரம்பித்து விட்டது. அச்சமயம் ஆட்சி செய்த  னுஹலுஐசூகூசூஹருசூழுடீ என்ற அரசன் ஹஜ்ஜுப் பெருநாள், மற்றும் குர்பானி கொடுப்பதில் கட்டுப்பாடுகளை விதிததார். பிறகு 17 ஆம் நூற்றாண்டில் பர்மிய அரசர் முஸ்லிம்களின் முக்கியமான நான்கு இமாம்களைப் பிடித்து கொலை செய்யுமாறு உத்தரவிட்டார். 1782 ஆம் ஆண்டு ஆட்சி செய்த மன்னர் முஸ்லிம் உலமாக்களை பன்றி இறைச்சி சாப்பிடுமாறு நிர்பந்தித்தார். அப்படி சாப்பிடாவிட்டால் மரண தண்டனை விதித்தார். இதன் மூலம் நிறைய உலமாக்களை கொலை செய்தார்.

மொகலாயர்களின் காலத்திற்குப் பிறகு பர்மாவில் வாழும் முஸ்லிம்களுக்கு ரோஹிங்கயா முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான் பர்மாவின் மீது தாக்குதல் தொடுத்த சமயம்  பிரிட்டானிய அரசு பர்மாவில் உள்ள முஸ்லிம்களை ஜப்பானுக்கு எதிராக ஆயுதம் தரிக்கச் செய்தது. இதில் ஏறத்தாழ ஐந்தாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சுமார் 22 ஆயிரம் பேர் உயிர் பிழைத்து வங்கதேசம் சென்றனர்.

1937 ஆம் ஆண்டு பர்மா பர்மியர்களுக்கு மட்டுமே என்றொரு இயக்கத்தை ஆரம்பித்தனர். அச்சமயம் முஸ்லிம்களை படுகொலை செய்ய ஆரம்பித்தனர். அத்துடன் 13 பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டுவிட்டது. முஸ்லிம்கள் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஜெனரல் வின் ஜிப் ஆட்சிக்கு வந்தபோது பர்மீஸ் நேஷனலீஸ் சடடத்தை நடைமுறைப்படுத்தி ரோஹிங்யா முஸ்லிம்களின் குடியுரிமையை ரத்து செய்துவிட்டார். திட்டமிடப்பட்ட சூழ்ச்சிகள்
1942 ஆம் ஆண்டு பௌத்தர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தனர். 1942 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மூன்று நாட்களில் மட்டும் ஒன்றரை லட்சம் முஸ்லிம்களை ஷஹிதாக்கினார்கள். பிறகு 1950 ஆம் ஆண்டில் மீண்டும் வன்முறை வெறியாட்டம் நடத்தி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள். முஸ்லிம்களை வீட்டை விட்டும் வெளியேற்றினார்கள்.

1962 ஆண்டு பர்மாவில் இராணுவ ஆட்சி அமைந்தது. பர்மிய ராணுவமும் அராகான் முஸ்லிம்களை பத்து வருடங்களாக கொடுமைப் படுத்தியது. அச்சமயம் 20 லட்சம் முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறினர். லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஷஹிதாக்கப்பட்டனர். 1971 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அராகான் பகுதிகளில் புத்த பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி இங்கு வாழும் முஸ்லிம்களை வங்கதேசத்திற்கு அனுப்பி விட வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். வங்கதேசமோ அவர்களை ஏற்க மறுத்துவிட்டது. பௌத்தர்களும் இனஅழிப்புக்கான சந்தர்ப்பத்தை தேடிக் கொண்டிருந்தார்கள். மஸ்ஜிதை தரைமட்டமாக்கி பர்மிய அரசு
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்த போது அவர்கள் புத்தருடைய சிலையை இடித்தனார். அச்சமயம் பர்மாவில் பௌத்தர்கள் முஸ்லிம்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டனர். தாங்கோ நகரில் இருந்த பழமை வாய்ந்த பள்ளிவாசலை இடித்துவிட வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம்களை கொலை செய்ய ஆரம்பித்தனர். அவர்களுடைய உடமைகளை நெருப்பிட்டு கொளுத்தினர். கடைசியாக அரசும் மஸ்ஜிதை புல்டோசர் கொண்டு தரை மட்டமாக்கியது. 1997 ஆம் ஆண்டு ஒரு பழமையான புத்த சிலையின் ஒரு பகுதி உடைக்கப்பட்டததையும் ஒரு பௌத்த பெண்மணி மானப்பங்கப் படுத்தப் பட்டதையும் முஸ்லிம்களின் மீது பலி சுமத்தினர். கடைசியில் அது பொய் என்பது நிரூபணமானது. முஸ்லிம்களின் மீது தவறான முறையில் பலிசுமத்தி 1500 முஸ்லிம்களை கொன்று குவித்தனர். வீடுகளை நெருப்பிட்டு கொளுத்தினர்.


அடக்குமுறைகள் முடிந்த பாடில்லை
அராகான் முஸ்லிம்கள் சுய தொழில் செய்ய அனுமதி கிடையாது. பெரும்பாலும் விவசாயம் மட்டுமே அவர்களுடைய வாழ்வாதாரம். அந்த விவசாயம் செய்வதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப் படும். தங்குவதற்கான வீடுகள் கட்டுவதற்கும் மராமத் வேலை பார்ப்பதற்கும் பல எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். வாக்குரிமையும் அவர்களுக்கு மறுக்கப்பட்டது. கடைசியாக வாழ்வுரிமையும் மறுக்கப் படுகிறது. உலகம் அதையும் வேடிக்கை பார்க்கிறது.

எமினிஸ்டீ இன்டர்னேஷனல் ஐநாவிடம் தற்சமயம் (ஆக - செப் 2017) நடக்கும் பர்மியர்களின் தாக்குதல் தொடர்பாக) தாக்கல் செய்த அறிக்கையில் வெறும் ஐந்து நாட்களில் 2100 கிராமங்கள் முஸ்லிம்கள் இருக்கவே நெருப்புக்கு இரையாக்காப் பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. நடமாடும் மனிதர்களை பிடித்து கட்டி வைத்து அவர்களுடைய உறுப்புக்கள் வெட்டப்படுகின்றன. அவர்களுக்கு முன்பாகவே அந்த வெட்டப்பட்ட உறுப்புக்களை மிருகங்களுக்கு உணவாகப் போடுகிறார்கள்.

மிருகவெறி கொண்ட பர்மியர்கள் முஸ்லிம்களுடைய உடலில் பல இடங்களில் வெட்டுகிறார்கள். அந்த இடத்திலிருந்து இரத்தம் ஓடும்போது அந்த இடத்தில் மிளகாய்த் தூளை தூவிவிட்டு சித்திரவதை செய்கிறார்கள். உலகில் எங்காவது குண்டு வெடிப்பு நடந்து வெறும் ஐந்து பேர் இறந்திருந்தாலும் சர்வதேச மீடியாக்களும் உலக நாடுகளில் தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு கண்டனம் தெரிவிப்பார்கள். ஆனால் இன்றோ மிருகத்தனமான சித்திரவதை பற்றி ஒரு வார்த்தை கூற ஆளில்லை.

2012 ஆம் ஆண்டு மனித உரிமைக் கலகம் மற்றும் ஐநாவின் முயற்சியால் நடக்கும் நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்கான ஒரு கமிஷன் உருவாக்கப்பட்டது. ஆனால், தக்க தருணத்தில் மியான்மர் அரசு அந்தக் கமிஷனை நிராகரித்துவிட்டது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐநா சபையின் உயர்மட்டக் குழு பாதிக்கப் பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு நடந்த அநியாயங்கள் தொடர்பான ஒரு அறிக்கையை தயார் செய்தது. எனினும், கொடூரத் தாக்குதல்கள் குறைந்தபாடில்லை.

கார்ஜீன் என்ற பிரிட்டானிய பத்திரிக்கைக்கு சமீப காலமாக பர்மாவில் கொடூரத் தாக்குதலுக்குள்ளான பெண்கள் பின்வருமாறு தங்களுடைய வேதனைகளை வருணிக்கிறார்கள்: என்னுடைய கண்களுக்கு முன்னாலேயே என்னுடைய கணவரும் என்னுடைய ஏழு பிள்ளைகளும் துண்டு துண்டாக வெட்டப்பட்டார்கள், என்று நூர் ஆயிஷா என்ற பெண்மணி கூறுகிறார். மற்றொரு நாற்பது வயது பெண்மணி கூறியதாவது: என்னுடைய வீட்டின் மீது இருபது ராணுவ வீரர்கள் தாக்குதல் தொடுத்தனர். பிறகு என்னுடைய ஐந்து பிள்ளைகளையும் ஒரு அறையில் அடைத்து அந்த அறைக்கு நெருப்பு வைத்து விட்டனர். அவர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். அதன் பிறகு என்னை ஒரு தூணில் கட்டி வைத்தனர். என் கண்ணெதிரிலேயே என்னுடைய இரண்டு மகளையும் கற்பழித்து கொன்று விட்டனர். பின்னர், என்னுடைய கணவரையும் கொன்று விட்டனர்.

இது போன்று மேலும் பல நெஞ்சை உறுக்கும் நேர்காணல்கள் வெளிவந்துள்ளன. பச்சிளங்குழந்தைகளை கண்டதுண்டமாக வெட்டிக் கொலை செய்து இந்த உலகில் எதை சாதிக்கப் போகிறார்கள்? என்பது தான் புரியவில்லை. இவ்வளவு கொடூரமான எந்த செய்திகளையும் நம்முடைய மீடியாக்கள் வெளியிடுவதில்லை. ஆனால், தினமணி, ரோஹிங்ய முஸ்லிம்களின் சண்டை நிறுத்த அறிவிப்பை ரோஹிங்கயா தீவிரவாதிகள் சண்டை நிறுத்த அறிவிப்பு என்று (11 செப் - 2017  12:49 டெய்லி ஹன்ட்) செய்தி வெளியிட்டுள்ளது. மீடியாக்களின் இந்த நடைமுறை நமக்கு பழகிப்போன ஒன்று. கண்டிப்பாக எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய நேரம் அனைவருக்கும் வந்தே தீரும் என்பதில் எந்த சந்தேகமும். இல்லை. மறுமையின் சுவர்க்க நரகம் மட்டுமே நமக்கு மாபெரும் ஆறுதலான செய்தி.
                                     யூசுபிய்யயா ராஷித்  - அக்டோபர் 2017

சந்திர (ஹிஜ்ரீ) வருடக் கணக்கில் நாம் சிந்திக்க மறந்தவை





ஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டு முடிந்து 1439 ஆண்டு துவங்கும் தருணம் இது. மார்க்க ரீதியான காரியங்களில் நம்முடைய காலண்டர் எந்த அடிப்படையில் அமைய வேண்டும்? என்பதை மார்க்கம் தெளிவு படுத்தியிருந்தாலும் பொதுவாக மக்களிடம அது தொடர்பான விழிப்புணர்வு மிகமிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். இன்று ஆங்கிலேய மாதங்கள் (சூரியக்கணக்கு) தான் நம்முடைய நடைமுறையில உள்ளன. ஆனால், ஷரீஅத்தில் காலம் தொடர்பான எல்லா சட்டங்களிலும் சந்திர (ஹிஜ்ரீ) ஆண்டையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் காலம் முதல் இதுவே நடைமுறை.

ஆரம்பக் காலங்களில் உலக நடைமுறையிலும் சந்திரனின் தோற்றத்தைப் பொறுத்தே ஆண்டு கணக்கிடப்பட்டது. இன்று வரை நம்முடைய சகோதர சமயத்தவர்கள் தீபாவளி கொண்டாடும் நாளைக் கவனித்தால் இதை நன்கு விளங்கிக் கொள்ள முடியும். ஒவ்வொரு ஐப்பசி மாதத்திலும் வரக்கூடிய அமாவாசை தினமே தீபாவளியாகக் கொண்டாடப்படும். அமாவாசை என்பது சந்திரனோடு தொடர்புள்ளது, என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. முதன் முதலில் 365 நாட்களைக் கொண்ட காலண்டர் ஆண்டு கி.மு. 4236 -ம் ஆண்டில் பழக்கத்திற்கு வந்தது. எனவே சந்திரனை வைத்துக் கணக்கிடுவதே இயற்கையானது. அடிவோ என்ற வார்த்தையும் கூட அடிடி என்ற சொல்லிலிருந்து வந்தது தான்.

இந்த இயற்கையான எளிதான வருடத்தையே மார்க்கமும் தேர்ந்தெடுக்கிறது. அல்லாஹ் குர்ஆனில், (தேய்ந்து வளரும் இந்த) பிறைகள் பற்றி (நபியே) உம்மிடம் கேட்கிறார்கள். அவை மக்களுக்குக் காலங்காட்டியாகவும் ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன, என்று நீர் கூறும்...., என்று கூறுகிறான். (அல்குர்ஆன் - 2: 189)

நோன்பு, பெருநாள், ஜகாத், ஹஜ், இத்தா, கர்ப்ப காலம் போன்ற காலம் தொடர்பான அனைத்து மார்க்கச் சட்டங்களுக்கும் சந்திர மாதம் மற்றும் வருடம் தான் அடிப்படையாகக் கொள்ளப்பட  வேண்டும். தலைப்பிறை மூலம் தான் சந்திர மாதத்தின் துவக்கம் உறுதி செய்யப்பட வேண்டும். ரமளானுடைய ஆரம்பமும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாளும் (பிறை பார்த்து) சந்திர மாதத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்யப் படவேண்டும். அரஃபாவில் தங்குவது கல்லெறிதல், தவாஃப் ஸயீ போன்ற ஹஜ்ஜின் அமல்களைச் சரியாக நிறைவேற்றுவதற்கும் பிறைபார்த்து மாத ஆரம்பத்தை துல்லியமாக முடிவு செய்வது கட்டாயமாக இருக்கிறது.

ஜகாத் ஆண்டு:
ஆண்டுக்கு ஒருமுறை ஜகாத் என்பது ஆங்கில மாதத்தின் அடிப்படையிலல்ல. சந்திர மாதத்தின் அடிப்படையில் தான் நிறைவேற்ற வேண்டும். அப்படி யாராவது தொடர்ந்து ஆங்கில மாதத்தின் அடிப்படையில் கொடுத்து வந்தால் 32 வருடங்களுக்குப் பிறகு ஒரு வருடம் ஜகாத் கொடுக்காத குற்றத்திற்கு ஆளாக நேரிடும். ஏனெனில் 32 சூரிய ஆண்டுகள் முடிந்தால் 33 சந்திர ஆண்டுகள் முடிந்திருக்கும்.

வயதுக்கு வருதல்:
மார்க்கத்தின் பார்வையில் பதினைந்து வயதாகி விட்டால் அவரின் மீது தொழுகை, நோன்பு, ஹஜ் உட்பட மார்க்கத்தின் அனைத்துக் கடமைகளும் கட்டாயமாகிவிடும். அவர் வயதுக்கு வந்தவராகக் கருதப்படுவார். அந்த பதினைந்து வயது என்பதும் சூரிய ஆண்டின் கணக்கில் அல்ல, சந்திர ஆண்டின் படிதான் கணக்கிட வேண்டும்.

இதன்படி ஆங்கில வருடத்தின் பதினைந்து ஆண்டுகள் முடிவதற்கு 165 நாட்களுக்கு (ஐந்தரை மாதங்களுக்கு) முன்பாக சந்திர ஆண்டின் படி பதினைந்து வயதாகிவிடும். சந்திர ஆண்டின் படி பதினைந்து வயதாகி விட்டால் (அதாவது சூரிய ஆண்டின் பதினைந்து வருடம் முடிவதற்கு ஐந்தரை மாதங்களுக்கு முன்பாக) தொழுகை போன்ற கடமைகள் கடமையாகிவிடும், என்பதை நன்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மார்க்க விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படவேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை அனைத்துத் தரப்பு மக்களும் விளங்கவும் வேண்டும். அதற்கான செயல்பாட்டில் இறங்கவும் வேண்டும். செவிலித் தாய்மார்களிடம் குழந்தைகளை பால் குடிப்பாட்டுவதற்காக கொடுக்கும் போது இரண்டு வயதுக்குள் குழந்தை பால்குடித்தால் அந்தத் தாயுடன் பால்குடி உறவு ஏற்படும். அந்த உறவுக்காரர்களுடன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது, என்ற சட்டம் அமுலுக்கு வரும். இந்த இரண்டு வயது என்பதும் சந்திர மாதங்களின் அடிப்படையில் தான் கணக்கிட வேண்டும்.

ஏழு வயதாகிவிட்டால் பிள்ளைகளை தொழுமாறு ஏவுங்கள். பத்து வயதாகி விட்டால் அடித்துத் தொழச் செய்யுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த வயதுக் கணக்கும் சந்திர மாதங்களின் அடிப்படையில் தான் கணக்கிட வேண்டும். சந்திர வருடத்தின் ஏழு வயது என்பது சூரிய வருடத்தின் ஏழு வயதை விட 77 நாட்கள் குறைவாகும்.

பிறந்தநாள் யாருக்குத் தான் தெரியும்?:
பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதே மார்க்கத்தில் சொல்லப்படாத ஒன்று. அதையும் கூட 11 நாட்கள் தாமதமாக முடியும், சூரியஆண்டின் கணக்கின் படி தான் கொண்டாடுகின்றனர். சந்திர ஆண்டு சூரிய ஆண்டை விட 11 நாட்களுக்கு முன்பாகவே முடிந்துவிடும். தங்களுடைய குழந்தைக்கு ஒர் ஆண்டு  பூர்த்தியாகி 11 நாட்களுக்குப் பிறகு தான் ஒரு வயது நிறைவடைந்ததாக பெற்றோர்கள் கருதிக் கொண்டிருக்கின்றனர். இன்று (மார்க்கத்தில் இல்லாத) பிறந்த நாளைக் கொண்டாடும் எத்தனை பேருக்கு தங்களுடைய பிறந்த நாளை சந்திர ஆண்டின் கணக்கின்படி சரியாகச் சொல்லத் தெரியும்?!


இத்தாவுடைய காலம்:
கணவர் மரணித்து விட்டால் நான்கு மாதமும் பத்து நாட்களும் இத்தா இருக்க வேண்டும், என்று குர்ஆன் உத்தரவிட்டுள்ளது. இந்த இத்தாவுடைய காலம் சந்திர மாதத்தைக் கொண்டே கணக்கிட வேண்டும். கணவர் தலாக் கொடுத்து மனைவி மாதவிடாய் வராத அளவுக்கு வயது முதிர்ச்சி அடைந்து விட்டால் மூன்று மாதங்கள் இத்தா இருக்கா வேண்டும். இந்த மாதமும் சந்திர மாதத்தை அடிப்டையாக வைத்தே கணக்கிட வேண்டும். இத்தாவுடைய கால அளவை நன்கு கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்!, என்று குர்ஆன் உத்தரவிடுவதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

கர்ப்ப காலம்:
குறைந்த பட்ச கர்ப்ப காலம் ஆறு மாதங்கள், என்று இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் கூறுவார்கள். இதையும் சந்திர மாதத்தைக் கொண்டே கணக்கிட வேண்டும். இந்த கர்ப்ப காலத்துடன்  வாரிசுரிமைச் சட்டங்களும் குழந்தையின் வமிசத் தொடர்பு உறுதிப்படுத்தப் படவேண்டியதும் சம்பந்தப் படுவதால் அந்தக் காலத்தை துல்லியமாக கணக்கிடுவதின் முக்கியத்துவம் மேலும் அதிகமாகி விடுகிறது.  தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு இரண்டு வருடம் பால் குடிப்பாட்ட வேண்டுமென்று குர்ஆன் கூறுகிறது. அவ்விரண்டு வருடமும் சந்திர வருடத்தை அடிப்படையாகக் கொண்டதே! சந்திர மாதத்துடன் இதுபோன்ற இன்னும் அதிகமான சட்டங்கள் தொடர்பு கொண்டிருப்பதால் அந்த மாதத்தைச் சரியாக கணக்கிடுவதும் பிறை பார்ப்பதும் எவ்வளவு முக்கியமானது? என்பதையும் மனதில் பதிய வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
தலைப்பிறை பார்ப்பது எளிது!

ஷரீஅத்துடைய பல சட்டங்கள் காலத்தோடு சம்மந்தப்படுகின்றன, அவற்றில் சந்திரனின் கணக்குப்படியே கணக்கிட வேண்டும். அப்படியானால் ஒவ்வொரு மாதமும் தலைப்பிறை பார்ப்பதில் அதிக முக்கித்துவம் காட்ட வேண்டுமென்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ரமளான், இரு பெருநாட்கள் ஆகிய சமயத்தில் மட்டுமே தலைப்பிறை பற்றி பரவலாகப் பேசப்படுகிறது. மற்ற மாதங்களில் அதுபற்றி யாரும் கண்டு கொள்வதில்லை.

பல தடவை இலங்கையில் நமக்கு ஒரு நாள் முன்பாக பிறை பார்க்கப்பட்டு பெருநாளும் நோன்பும் அனுஷ்டிக்கப் பட்டிருகிறது. தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இக்காலத்தில் பெரும்பாலும் மக்ரிப் தொழுகை முடிந்தவுடன் அங்கிருந்து பிறை பார்க்கப்பட்ட தகவல் வந்து விடுகிறது.  இலங்கை நமக்கு கிழக்கே இருக்கும் நாடாகும். கிழக்குப் பகுதியில் பிறை தென்பட்டால் மேற்குப் பகுதியில் இருப்பவர்கள் ஏற்று அமல் செய்ய வேண்டுமென்று நம்முடைய (ஷாஃபியீ) ஃபிக்ஹ் (சட்ட) நூற்களில் கூறப்பட்டுள்ளது.

ஏனெனில், கிழக்கில் பிறை பார்க்கப்பட்டால் மேற்கில் கண்டிப்பாக பிறை தென்பட்டிருக்க வேண்டுமென்பதே இயல்பு. இலங்கையில் ஒவ்வொரு மாதமும் கரையோரப் பகுதிகள் உட்பட நாட்டின் பல பாகங்களில்  பிறை பார்ப்பதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப் படுகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளும் நினைவூட்டல்களும் அறிவிப்புகளும் ஒவ்வொரு மாதமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிறை பார்க்கப்பட வேண்டிய நாளில் அதற்கான விசேஷ அறிவிப்புகள் சமூக வலைதளங்கள் மூலம் செய்யப்படுகின்றன.

பிறை தென்படாமல் போவதற்கு மேகமூட்டம் ஒன்று மட்டுமே காரணமாக இருந்தால் அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதே சமயம், நம்முடைய பகுதிகளில் பிறை பார்ப்பதில் மக்கள் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார்கள்? என்பதையும் யோசிக்க வேண்டும். அவ்வாறே ஒவ்வொரு மாதத்திலும் பிறை பார்ப்பதில் முக்கியத்துவம் காட்டப்படுகிறதா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.    

பொதுவாக (ரமளான், ஷவ்வால், துல்ஹஜ் ஆகிய மாதங்களில் மட்டும்) தலைப்பிறை பற்றி முடிவு செய்யும் போது நமக்கு அறிமுகமானவர்களிடம் போன் செய்து பிறைத் தகவல் பற்றி கேட்கிறோம். மற்றவர்களும் நம்மிடம் கேட்கிறார்கள். இதில் கேட்கப்படுபவர்கள் யாரும் பிறை பார்ப்தற்கான பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டவர்கள் அல்ல. ஏதாவது தகவல் வந்தால் அதன்படி முடிவு செய்து விடுகிறோம். ஒவ்வொரு ஊரிலும் குறிப்பாக கிராமங்களில் பிறை பார்ப்பதற்கான குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். நகரத்தை விட கிராமங்களில் புகை, தூசி குறைவு என்பதால் பிறை தென்படுவதற்கான வாய்ப்பு அங்கு அதிகமாக இருக்கும். எனவே கிராமப் பகுதிகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கட்டிடம், மரம் போன்ற எந்தத் தடையும் இல்லாத இடத்திலிருந்து பார்க்க வேண்டும். சந்திரன் எந்த நேரத்தில் மறையும், என்பது வினாடி உட்பட துல்லியமாக கணிதத்தின் மூலம் இன்று அறிந்து கொள்ள முடியும். நவீன வசதி கொண்ட மொபைல் போன்களில் (sunmooncal போன்ற) அதற்குரிய மென்பொருளை இன்ஸ்டால் செய்து அதன் மூலமே இதை அறிந்து கொள்ளலாம். அந்தந்த மாதத்தில் (வடமேற்கு, தென்மேற்கு, நேர்மேற்கு போன்ற) பிறை (மறையும் இடத்தையும்) தெரியும் இடத்தையும் முன்னரே அறிந்து கொள்ள வேண்டும். சந்திரன் மறையும் நேரம் வரை (குறிப்பாக பிறை தெரியும் இடத்தை) தொடர்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில் விண்ணில் இடையிடையேயுள்ள மேகம், தூசி போன்ற தடைகளால் வானம் தெளிவாக இருக்கும் ஒரு சிறிய இடத்தில் எந்த வினாடியும் பிறை தெரிந்து பிறகு மீண்டும் அடுத்திருக்கும் மேகத்திற்குள் சென்றுவிடலாம்.

இதற்கு முன்பு, குறிப்பிட்ட குறுகிய நேரத்தில் பிறை தெரிந்து விட்டு, பிறகு மேகத்தில் மறைந்த காட்சிகளை நாம் நேரடியாகவே கண்டிருக்கிறோம். ஆனால், இன்று நாம் பாங்கு சொல்லி மக்ரிப் தொழுது முடித்துவிட்டு அதற்குப் பிறகு சுன்னத்தும் தொழுது முடித்த பிறகு தான் பிறை பார்க்க முற்படுகிறோம். பிறை தெரியும் நேரத்தை இடத்தை அறிந்து பார்ப்பதை விடுத்த நாம் பார்கக வேண்டிய நேரத்திலும் நாம் பார்க்கும் திசையிலும் பிறை தெரிய வேண்டுமென்று நினைக்கிறோம். ஒவ்வொரு மாதமும் பெருநகரங்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பாக மேற்குக் கரையோரங்களில் - கடற்கரைப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் பிறை பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் முன்னரே சென்று அதிமுக்கியத்துவம் கொடுத்து பிறை தென்படும் இடத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இப்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் பிறைபார்த்து அதற்கான தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் போது (தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில்) பரவலாக ஏற்படும் பிறைக் குழப்பத்தை ஓரளவு தவிர்த்துக் கொள்ள முடியும். ஆனால், நடைமுறையில் கடற்கரைப் பகுதிகளில் சென்று ஒவ்வொரு மாதமும் பிறை பார்ப்பதில் அதிக கவனம் செலுத்தப் படுவதில்லை. ஏன்? இருந்த இடத்தில் இருந்து கொண்டு கூட அதில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவு, என்றே சொல்ல வேண்டும். வானத்தில் பார்க்கப்பட வேண்டிய பிறையை நாம் வாட்ஸப்பில் தேடிக்கொண்டிருக்கிறோம், என்பதே நடப்பு உண்மை.

கடந்த (1438) துல்கஃதா மாதம் தமிழகத்தில் பரவலாக பிறை தென்படவில்லை, என்ற தகவலே வந்தது. என்று சொல்வதை விட பிறை தெரிந்தது, என்றோ தெரியவில்லை என்றோ அது தொடர்பான எந்தத் தகவலும் வரவில்லை. ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு பேர் தலைப்பிறை பார்ப்பதற்கு முயற்சி செய்தார்கள், என்பது தெரியவில்லை. ஆனால், துல்கஃதா மாதத்தின் தலைப்பிறை பார்க்கப்பட வேண்டிய நாளான ஜூலை மாதம் 24 ஆம் தேதி திண்டுக்கல்லில் சூரியன் மறைவு 6 மணி 43 நிமிடங்களாகும். அன்று சந்திரன் மறைவு 7 மணி 40 நிமிடங்களாகும். சூரியன் மறைவுக்கும் சந்திரன் மறைவுக்கும் மத்தியில் ஏறத்தாழ ஒரு மணி நேரம் வித்தியாசம் இருந்துள்ளது. தமிழகத்தின் மற்ற ஊர்களில் ஒரு சில நிமிடங்கள் வித்தியாசமிருக்கும்.

 பிறை தெரிவதற்கான வாய்ப்பு மிகத் தெளிவாக இருந்தும் பரவலாக தமிழகத்தில் பிறை பார்க்கப்பட வில்லை. ளரஅடிடிஉயட  என்ற மென்பொருளிலும் பிறை புறக்கண்ணுக்கு எளிதாக தென்படும் என்ற தகவலே கொடுக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் அன்று திண்டுக்கல்லில் மக்ரிப் தொழுகை முடிந்த பின் வானம் தெளிவாக இருந்தது. பிறையும் மிகத் தெளிவாகத் தெரிந்தது. பிறை பார்த்தவர் திண்டுக்கல்லில் மற்றொருவருக்கும் அதே நேரத்தில் போன் மூலம் தகவல் கொடுத்து குறிப்பிட்ட இடத்தில் பிறை பார்க்குமாறு கூறியதை அடுத்தும் அவரும் அவ்விடத்தில் இருந்த வேறு சிலரும் துல்கஃத் தலைப்பிறையைத் தெளிவாக பார்த்துள்ளனர். அதன் பிறகு காரைக்காலிலும் (பாண்டிச்சேரி) பிறை பார்த்ததாக தகவல் கிடைத்தது. அதன் படி 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை துல்கஃதா பிறை ஒன்று என தமிழ்நாட்டில் மட்டுமல்ல. வடநாட்டிலும் அறிவிக்கப்பட்டது.

இந்தியா முழுவதற்கும் திண்டுக்கல்லில் பார்க்கப்பட்ட பிறை மூலமே முடிவு செய்யப்பட்டது, என்பதும் ஓர் அரிய செய்தி. ஏனில், தாருல் உலூம் தேவ்பந்த் - தாருல் இஃப்தாவிலிருந்து பிறை பார்த்தவரை போனில் அழைத்து பிறைத் தகவலை உறுதிப் படுத்திக் கொண்டார்கள்.  திண்டுக்கல்லிலும் கூட சிறிது நேரம் மறதியாக இருந்துவிட்டால் அந்தப் பிறை பார்க்கப் படாமல் போயிருக்கலாம். அந்த அளவுக்கு மிக மெல்லியதாகவும் அதுவும் அடிவானத்தில் தெரிந்தது. பரவலாக தமிழகத்தின் கிராமங்கள் உட்பட பல ஊர்களில் அன்று பிறை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் கண்டிப்பாக தமிழகத்தின் ஏராளாமான இடங்களில் பிறை தெரிந்திருக்கும், இன்ஷாஅல்லாஹ். ஒரு மாதத்தில் நிகழும் அலட்சியம் அடுத்தடுத்த மாதங்களிலும் பிரதிபலிப்பை ஏற்படுத்திவிடும், என்பதை யார் தான் மறுக்க முடியும்?!

Night sky tools
நைட் ஸ்கை டூல்ஸ் என்ற மென்பொருளை உங்களுடைய மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டால் அதன் மூலம் பிறையை எந்தத் திசையில் பார்க்க வேண்டும், என்பதை துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும்.  நீங்கள் மொத்த வானிலும் பிறையை சிரமப்பட்டுத் தேட வேண்டியதில்லை. பிறை இந்த இடத்தில் இருக்கிறது, என்பதை மிகத் துல்லியமாக இந்த மென்பொருள் காட்டும்.
இந்த மென்பொருளில் உள்ளே சென்று ஜெனரல் - செலக்ட் செய்து ஸ்கை மேப் என்பதை அழுத்தினால் நான்கு சுவர்களுக்குள்ளே இருட்டறையில் உட்கார்ந்து கொண்டு மொத்த வானத்தையும் மொபைல் திரையில் பார்க்கலாம். சூரியன் உச்சத்தில் இருக்கும் போது உங்களுடைய அறைக்குள்ளே  இருந்தவாறு மொபைலை தலைக்கு மேல் வானத்தை நோக்கிக் காட்டினால் மொபைல் ஸ்கிரீனில் வானில் இருக்கும் சூரியன் தெளிவாகத் தெரியும். சூரியன் மட்டுமல்ல. நீங்கள் மொபைலை எந்தத் திசையில் வானத்தை நோக்கி காட்டுகிறீர்களோ அந்தத் திசையில் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் எதுவெல்லாம் இருக்கிறதோ அனைத்தையும் காட்டிவிடும்.

போனை உங்கள் மூடிய அறைக்குள் இருந்து கொண்டே வானை நோக்கிக் கட்டினால் போதும். நீங்கள் காமெராவில் போட்டோ எடுப்பது போன்று வானில் இருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களும், கோள்களும், ராசிகளும் அவற்றின் பெயர்களுடன் உங்கள் போனின் திரையில் தெரியும்.  தலைப்பிறை பார்க்கும் நாளில் சூரியன் மறைந்த பிறகு உங்கள் போனில் உள்ள நைட்ஸ்கை டூல்ஸ்  - ஜெனரல் - ஸ்கை மேப்பை ஓப்பன் செய்து மேற்கு வானத்தை நோக்கிக் காட்டினால் அடிவானத்திற்குக் கீழே மறைந்த சூரியனையும் காட்டும். அதற்கு மேல்பகுதியில் தலைப்பிறை எந்த இடத்தில் இருக்கிறது, என்பதையும் காட்டும்.

போனை விலக்கி விட்டு வானத்தில் அந்த இடத்தில் பிறையைத் தேடிக் கொள்ளலாம். வானம் முழுவதும் அலச வேண்டிய தேவையில்லை. பிறை நேர் மேற்கில் தெரியுமா? அல்லது மேற்கிலிருந்து தெற்காக சாய்ந்து தென்மேற்கில் தெரியுமா? அல்லது மேற்கிலிருந்து வடக்காகச் சாய்ந்து வடமேற்கில் தெரியுமா? என்பதையும் இந்த மென்பொருள் தெளிவாகக் காட்டிவிடும்.

குறிப்பு: இந்த மென்பொருள் உங்கள் மொபைலில் இயங்குவதற்கு accelerometer வசதி மட்டும் இருந்தால் போதாது. உங்களுடையடைய மொபைலில் காம்பஸ் சென்ஸார் வசதி இருக்க வேண்டும். அந்த வசதி இல்லையானால் இந்த மென்பொருளைப் பயன்படுத்த முடியாது. கிப்லா காட்டி தொடர்பான எந்த மென்பொருளும் இயங்காது. உங்கள் மொபைலில் கிப்லா காம்பஸ் செயல்பட்டால் இந்த மென்பொருளும் இயங்கும்.