Monday, 18 September 2017

குமர் காரியத்திற்காக வசூல் ஒரு சமூக அவமானம்



விருந்தோம்பல் இஸ்லாத்தில் மிகவும் நன்மைக்குரிய காரியம். நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப் படுவதற்கு முன்பே மௌட்டீக காலத்திலும் அரபு மக்களிடம் விருந்து உபசரிக்கும் நல்ல பண்பாடு இருந்தது, என்று வரலாற்றாசிரியாகள் கூறுவர். அப்துல்லாஹிப்னு ஸலாம் (ரலி) அவர்கள் முதலில் யூதராக இருந்து பின்னர் இஸ்லாத்தைத் தழுவினார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது அப்துல்லாஹிப்னு ஸலாம் (ரலி) அவர்கள் நபியவர்களை காண்பதற்காக வந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களின் முகத்தைப் பார்த்தவுடன் இது பொய்யருடைய முகமல்ல, என்று விளங்கிக் கொண்டேன், என்று கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் பேசியதில் முதல் பேச்சு, ஸலாமைப் பரப்புங்கள். உண்ண உணவளியுங்கள். மக்கள் நித்திரையில் இருக்கும்  போது தொழுங்கள். (அப்படியானால்) நீங்கள் நிம்மதியாக சுவனத்தில் நுழைவீர்கள், என்கிற உத்தரவுகள் தான், என்று அப்துல்லாஹிப்னு ஸலாம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: திர்மிதீ)

விருந்தும் விரயமும்
விருந்தோம்பல் மிக நல்ல காரியம், என்பது தவறாக விளங்கப்பட்டு விடக்கூடாது. திருமணத்தில் விருந்துகளில் பல லட்சங்கள் செலவாகுவதும் அவற்றில் பெரும்பாலானவை பெண்வீட்டார் மட்டுமே செய்ய வேண்டும் என்பதும் மார்க்க ரீதியாக நல்ல காரியம் அல்ல, என்பது மட்டுமல்ல. தடை செய்யப்பட்டதும் கூட. சாப்பாட்டுக்காக செலவு செய்யப்படும் பணம் ஹலாலாக சம்பாதிக்கப் பட்டிருந்தாலும் கூட விரக்தியிலும் கடன் பட்டும் வேறு வழியின்றி பல சிரமங்களுக்கு மத்தியில் வெறுப்புடன் நடத்தப்படும் விருந்துகளில் கலந்து கொண்டு சாப்பிடுவதால் அந்த உணவு ஹலாலா? ஹராமா? என்கிற சிந்தனை ஏற்பட்டுவிடும். எந்த மனிதருடைய செல்வமும் அவருடைய முழு மனதிருப்தியின்றி மற்றவர்களுக்கு ஹலால் ஆகாது, என்ற நபிமொழி எப்பொழுதும் நினைவில் இருக்க வேண்டும். ஹலால், ஹராம் பற்றி எந்த சிந்தனையும் இல்லையானால் அது போன்று மாபெரும் நஷ்டம் வேறெதுவும் இருக்க முடியாது.

நம்முடைய நடைமுறையில் உள்ள விருந்து வகைகளை கட்டாயம் சீர்த்திருத்தம் செய்யப் பட்டாக  வேண்டும். இன்று தண்ணீருக்குப் பஞ்சம். பொருளாதார நஷ்டம். அரசின் ஏகப்பட்ட வரிவிதிப்புகள் இவையனைத்தும் சேர்ந்து மக்களை ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது. இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கு சிக்கனத்தை மாபெரும் ஆயுதமாக எடுத்துக் கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருக்கின்றனர்.

வலீமா என்பது....
திருமண விருந்தில் வலீமா விருந்து தான் சுன்னத்தான விருந்தாகும். அந்த விருந்தைக்கூட நபி (ஸல்) அவர்கள் மிகவும் எளிமையாகவே நடத்தியிருக்கிறார்கள். சில சமயம் பயணத்தில் இருக்கும் போது தோழர்களிடம் இருக்கும் உணவுப் பொருட்களை ஒன்று சேர்த்து அதை எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். அதுவே கூட வலீமாக விருந்தாகி விடும். ஆயிஷா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் நிகாஹ் செய்த போது பால் தான் வலீமாவுடைய இடத்தில் இருந்தது. என்பதும் சரித்திரத்தில் காணக்கிடைக்கிறது.

ஜைனப் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவாகள் நிகாஹ் செய்யும் போது ரொட்டியும் இறைச்சியுமாக வலீமா விருந்து வைத்தார்கள். நபியவர்கள் வலீமாவிலேயே இது தான் கூடுதலான விருந்து என்ற செய்தியும் சரித்திரத்தில் காணக்கிடைக்கிறது. அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் திருமணம் செய்யும் போது ஒரு ஆட்டை அறுத்தாவது வலீமா விருந்து வையுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே வலீமா விருந்து என்பது நாம் நினைப்பது போன்று ஆயிரக்கணக்கான நபர்களை அழைத்து விருந்து கொடுக்க வேண்டுமென்று கிடையாது. நல்ல வசதியுள்ளவர்கள். பெருமை, பகட்டு ஆடம்பரம் இல்லாமல் நல்ல எண்ணத்தில் ஏழைகள், வறியவர்கள் உட்பட அதிகமானோருக்கு விருந்து கொடுத்தால் தவறு இல்லை தான். ஆனால், இன்று நடக்கும் எல்லா விருந்துகளும் அப்படித்தான் நடக்கிறது, என்று சொல்லிவிட முடியாது.

பெண் வீட்டார் விருந்து?
நாம் மேலே குறிப்பிட்ட வலீமா விருந்து என்பது மாப்பிள்ளை வீட்டார் வைக்க வேண்டிய விருந்தாகும். பெண்வீட்டார் விருந்து வைப்பது சுன்னத்தோ வாஜிபோ கிடையாது. ஆனால், இன்றைய நிலையைப் பார்த்தால் பெண்வீட்டார் தான் அதிகமான விருந்து வைககம்  நிலைக்கு ஆளாகிறார்கள். திருமணத்திற்கு முன்பும் திருமணத்தின் போதும் மட்டுமல்ல. திருமணத்திற்குப் பிறகும் குழந்தை பெறும் காலத்திலும் வகை வகையான பெயர்களில் விருந்து வகைகளை ஏற்பாடு செய்யும் நிர்பந்தம் பெண்வீட்டாருக்கு உண்டு.

ஏழாம் நாள் சடங்கு
குழந்தை பிறந்து ஏழாம் நாள் செய்ய வேண்டிய சுன்னத்தான கரியங்கள் நிறைய உண்டு. ஆனால், அவற்றைச் செய்வது மிகவும் குறைவு. அதே சமயம் ஒவ்வொரு ஊரிலும் அவரவர்களுடைய ஊர் வழக்கின் படி ஏதாவது சடங்குகளைச் செய்வார்கள். பிற்ந்த ஏழாம் நாள் தலை முடி எடுக்க வேண்டும். பெயர் வைக்க வேண்டும். அகீகா கொடுக்க வேண்டும். முடிந்தால் கத்னாவும் செய்து விடலாம். ஆனால், இந்த காரியங்கள் யாருடைய நினைவிலும் வராது. சுன்த்தான நடைமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு நாம் பழகிவிட்ட சடங்குகளும் விருந்துகளும் தான் தடபுடலாக நடந்து கொண்டிருக்கும். அந்தச் செலவுக்கும் பெண்வீட்டார் தான் பொறுப்பாக வேண்டும்.

அகீகாவுடைய செலவு உட்பட குழந்தையின் எல்லாச் செலவுகளுக்கும் குழந்தையின் தந்தை தான் பொறுப்பாக வேண்டும், என்பதை சொல்வோரும் இல்லை. கேட்போரும் இல்லை. அதற்கான விழிப்புணர்வு மிகமிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். யாராவது சொன்னால் கூட அதையும் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர். இதைச் சொல்பவர்களுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்குமோ என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற இஸ்லாத்தின் கலாச்சார நடைமுறைகள் என்னவென்பதை அறிய முற்படுவதில்லை.  மார்க்க நடைமுறைகள் நடத்தப்படாவிட்டாலும் பரவாயில்லை. தங்களுடைய சடங்கு சம்பிரதாயங்களுக்கு எந்தப் பங்கமும் வந்து விடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

குமர் காரியத்திற்கு வசூல்!?
பல சமயங்களில் குமர் காரியத்திற்காக வசூல் செய்வதற்காக வரிசையில் நிற்பவர்களைப்  பார்த்திருப்போம். நம்முடைய சமுதாயப் பிரமுகர்களும் இவர் குமர் காரியத்திற்காக வந்திருக்கிறார். தாராளமாக உதவி செய்யுங்கள், என்று பகிரங்க அறிவிப்பும் செய்வார்கள். ஆனால் மார்க்க நடைமுறைப்படி குமர் காரியத்திற்காக அப்படியென்ன பெரிதாக வசூல் செய்ய வேண்டியிருககிறது? என்பதை யாரும் யோசிப்பதில்லை. ஒரு பெண் பெண்ணாக இருக்கிறாள், என்பதைத் தவிர திருமணத்திற்கு அவளிடம் வேறென்ன தகுதி தேவை இருக்கிறது?

அடுக்கடுக்காக நகை போடுவதும் சீர்வரிசை செய்வதும் வரதட்சணை கொடுப்பதும் வகைவகையான விருந்து வைப்பதும் மார்க்கம் கட்டாயமாக்காத அனுமதிக்காத அனுஷ்டானங்கள் இல்லையா? குமர் காரியத்திற்கு உதவி செய்யுமாறு அறிவிப்பு செய்யும் நாம் அப்படியொரு வசூலே கிடையாது, என்பதை உணர்த்தி சமூகத்தின் இந்தப் பொருளாதார அனாச்சாரங்களை தடுப்பதற்காக ஒரு அடியாவது நாம் முன்னெடுத்து வைத்திருக்கிறோமா? என்பதை யோசிக்க வேண்டும். குமர் காரியத்திற்காக வசூல் என்கிற நிலை சமூகத்தில் நாமாக ஏற்படுத்தி வைத்திருக்கும் கேவலமான கலாச்சாரம், என்பதை உணர்ந்தாக வேண்டும்.

குமரன் காரியத்திற்கான வசூல்
திருமணச் செலவுக்கான எல்லாப் பொறுப்பும் மணமகனுக்குத் தான் இருக்கிறது. அவனுக்கு வசதி இல்லையானால் சம்பாதிக்க வேண்டும். தேவைப்பட்டால் யாரிடமாவது உதவி பெற்றுக்கொள்ளலாம். திருமணத்திற்கு வசூல் என்றால் அது குமர் காரியத்திற்காக இருக்கக் கூடாது. தேவைப்பட்டால் அது குமரனுக்கு - மாப்பிள்ளைக்கான திருமணச் செலவுக்கான வசூலாக இருக்லாம். எங்காவது மாப்பிள்ளை தன்திருமணச் செலலவுக்கு வசூல் செய்வதைப் பார்த்திருப்பீர்களா? அதற்காக நான் வசூல் செய்ய வேண்டுமென்று சொல்ல வரவில்லை. வேறு வழி இல்லையென்றால் சமுதாயத்தின் உதவியை ஒரு மணமகன் - மாப்பிள்ளை நாடுவது தவறில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் யாராவது ஆண்கள், நான் திருமணம் முடிக்கப் போகிறேன், என்றால் நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள், என்று கேட்பது தான் நடைமுறை. ஏனெனில், அவர்தான் மஹர் கொடுக்க வேண்டும். வலீமா விருந்து வைக்க வேண்டும்.

சில சமயம் நபித்தோழர்களில் சிலர் திருமணம் செய்வதற்கான வசதி இல்லை, என்று கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அவருடைய திருமணச்செலவுக்கான பொருளாதாரத் தேவையை நபித்தோழர்களிடம் வசூல் செய்து கொடுத்த நிகழ்வையும் சரித்திரத்தில் காண முடியும். ஆனால், இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கும். உண்மை அது தான்.

ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் ரபீஆ (ரலி) அவ்களிடம் திருமணம் முடித்துக் கொள்ளலாமே என்று கூறினார்கள். அதற்கவர்கள் பல தடவை மறுத்துவிட்டு கடைசியாக, அல்லாஹ்வின் தூதர் அவர்களே தாங்கள் உத்தரவிட்டால் செய்கிறேன், என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் இன்ன குடும்பத்தாரிடம் சென்று நான் சொன்னதாகச் சொல்லி பெண் கேளுங்கள், என்று கூறி அனுப்பினார்கள். ரபீஆ (ரலி) அவர்களும் சென்று கேட்டார்கள். அந்தக் குடும்பத்தினர் நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்த தூதரை வரவேற்று திருமணம் முடித்து வைத்தார்கள்.

எனினும் ரபீஆ (ரலி) அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபியவர்கள் காரணம் கேட்டதற்கு, அல்லாஹ்வின் தூதர் அவர்களே, என்னிடம் எந்த ஆதாரமும் கேட்காமல் நான் சொல்வதை அப்படியே நம்பி எனக்கு திருமணம் முடித்து வைத்துவிட்டார்கள். ஆனால், எனக்கு மஹர் கொடுப்பதற்கான எந்த வசதியும் இல்லையே, என்று வேதனைப் பட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அவருடைய கோத்திரத்தைச் சார்ந்தவர்களிடம், இவருக்கு மஹர் கொடுப்பதற்காக பேரீத்தம்பழக் கொட்டை அளவுக்கு தங்கத்தைச் சேர்த்து (வசூல் செய்து) வாருங்கள், என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் மஹரை சேர்த்துக் கொண்டு வந்தார்கள். ரபீஆ (ரலி) அவர்களும் கொண்டு போய் கொடுத்தார்கள். பெண்வீட்டார், இதுகூட மிக அதிகம் தான் என்று கூறி பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார்கள். (இன்று அந்த பெருந்தன்மை மாப்பிள்ளை வீட்டாரிடம் கூட இருப்பதில்லை)

பிறகும் ரபீஆ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கவலை தோய்ந்த முகத்துடன் வந்தார்கள்.  நபி (ஸல்) அவர்கள் காரணம் கேட்ட போது பெண்வீட்டார் மிகவும் மகிழ்ச்சியாகவும் கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர். நான் கொடுத்த குறைந்த மஹரையும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டனர். எனினும், எனக்கு வலீமா விருந்து வைப்பதற்கான வசதி இல்லையே, என்று வருந்தினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அவருடைய அஸ்லம் கோத்திரத்தாரிடம் வலீமாவுக்காக (வசூல் செய்து) ஒரு ஆட்டை கொண்டு வருமாறு உத்தரவிட்டார்கள். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். (சரித்திரம் இதைவிடவும் நீண்டது. இங்கே சுருக்கம் மட்டுமே கூறப்பட்டுள்ளது.) (முஸ்னத் அஹ்மத் -16627)

இங்கே ஒரு ஆணுக்காக - மணமகனுக்காக (குமர் காரியத்திற்க அல்ல) குமரனுக்காக வசூல் செய்யப்பட்டிருக்கிறது. இதுதான் எதார்த்தமானதும் கூட. எனினும், நாம் எல்லாவற்றையுமே தலைகீழாக்கி விட்டோம். மார்க்க நடைமுறைகளை மறந்து விட்டோம். பொருளாதார ரீதியாக பெரிய நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.  இந்நாட்டில் அரசுக்கு சார்பானவர்களின் மூலம் இந்த சமுதாயம் பெரும் வேதனையையும் நஷ்டங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இனிமேலும் நாம் விழித்துக் கொள்ள வில்லையானால் விளைவு எப்படி இருக்குமென்று தெரியாது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
யூசுபிய்யயா ராஷித் - செப்டம்பர் 2017

Wednesday, 6 September 2017

இஸ்லாம் முன்வந்து வழங்கிய உரிமைகள்





எந்த ஒரு போராட்டமும் நடத்தப்படாமலேயே பெண்களுக்கான முழு உரிமைகளையும் இஸ்லாம் வழங்கியிருக்கிறது, என்பது மட்டுமே இஸ்லாத்தின் உண்மைத்துவத்திற்கு போதுமான ஆதாரமாகும். உலகின் முக்கிய மதங்கள் என்று கருதப்படக்கூடிய மதங்களில் கூட பெண்ணை பாவத்தின் ஆணிவேராகவே கருதப்படுகிறது. சுவனத்தில் ஆதம் (அலை) ஹவ்வா (அலை) ஆகிய இருவரையும தங்க வைத்தபோது ஒரு குறிப்பிட்ட மரத்தைச் சுட்டிக்காட்டி இதன் பக்கத்தில் கூட போக வேண்டாமென்று அல்லாஹ் கூறினான்.

எனினும், ஷைத்தானுடைய ஊசலாட்டத்தின் மூலம் அவ்விருவரும் அந்தக் கனியை உண்டுவிட்டார்கள். இந்தத் தவறு நடந்தது பெண்ணின் தூண்டுதலினால் தான் நடந்தது. எனவே, எல்லா பாவங்களுக்கும் பெண்தான் அடிப்படைக் காரணம் என்ற ஐதீகம் உருவாக்கப்பட்டது. ஆனால், ஆதம் (அலை) அவர்களுடைய சரித்திரம் குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. எனினும், எந்த இடத்திலும் பெண்னை கேவலப்படுத்தும் விதமாக ஒரு வார்த்தை கூட சொல்லப்படவில்லை. ஆணுடைய பொறுப்பை உணர்த்தும் விதமாக சில இடங்களில் ஆதம் (அலை) அவர்களை மட்டும் குறிக்கும் விதமாக ஒருமையில் வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கும். மற்ற இடங்களில் அந்த சம்பவத்தின் நிலைபாட்டை விளக்கும் போது இருமையைக் குறிக்கும் வாசகமே பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

அதாவது ஆதம், ஹவ்வா (அலை) ஆகிய இருவருக்கும் சுவனத்தில் தங்கும்படியும் நாடிய விதத்தில் சாப்பிடும்படியும் இருவரும் குறிப்பிட்ட மரத்தை நெருங்க வேண்டாமென்றும் கூறப்பட்டிருக்காது. எனினும் அவ்விருவரும் சாப்பிட்டு விட்டார்கள். அவ்விருவருடைய மறைவிடமும் திற்நதுவிட்டது. அவ்விருவரும் இலைகளைக் கொண்டும் உடலை மறைத்தார்கள், என்று இருமையாகவே கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வுடைய எச்சரிக்கையும் இருவரையும் நோக்கியே வந்தது. நான் உங்கள் இருவரையும் அந்த மரத்திறகு நெருங்க வேண்டாமென்று தடை செய்யவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்க விரோதி என்றும் சொல்லவில்லையா?

அது மட்டுமல்ல. தவற்றை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கும் போது கூட அவ்விருவரும் இரட்சகனிடம் பாவமன்னிப்பு தேடினார்கள், என்று குர்ஆன் கூறுகிறது. குர்ஆனில் எந்த இடத்திலும் பெண்ணைக் கேவலப்படுத்தும் விதமாக வாசகங்கள் அமையவில்லை. குற்றம் தொடர்பாக கூறுவதாக இருந்தாலும் கூட ஆணையும் பெண்ணையும் சமமாகவே இஸ்லாம் பார்க்கிறது.

எனவேதான் தண்டனை தொடர்பான வசனங்களில் திருடக்கூடிய ஆண் திருடக்கூடிய பெண், விபச்சாரம் செய்யும் பெண், விபச்சாரம் செய்யும் ஆண் என்று இருஇனத்தாரையும் தனித்தனியாகக் கூறி இருவருக்கும சமமான தண்டனையே குர்ஆனில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மனிதர்கள் செய்யும் நற்காரியங்களுக்கு ஆண், பெண் வேறுபாடின்றி சமமாகவே நற்கூலி வழங்கப்படுகிறது. நற்காரியத்தை ஆண் செய்தால் மட்டுமே நன்மை என்று அறிவிக்கப்படவில்லை.

ஆணாயினும்  பண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராக இருக்கும் நிலையில் நற்செயல் புரிகிறாரோ அவரை (இவ்வுலகிலும்) தூய - மணமான வாழ்வு வாழச்செய்வோம். (மறுமையிலும்) அவர்கள் புரிந்த நற்காரியங்களில் மிகச்சிறந்தவற்றுக்கு (ஏற்ப) கூலி வழங்குவோம். (அல்குர்ஆன் - 16:97)

உங்களில், ஆண், பெண் யாருடைய நற்செயலையும் வீணாக்க மாட்டேன், என்றும் குர்ஆன் கூறுகிறது. (3:195)

நன்மை வழங்கும் விஷயத்தில் ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாகக் கூட சில இடங்களில் குர்ஆன் எடுத்துரைக்கும். உதாரணமாக, நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள், முஸ்லிமான பெண்கள், இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள், இறைநம்பிக்கை கொண்ட பெண்கள், பொறுமையுள்ள ஆண்கள், பொறுமையுள்ள பெண்கள், தானதர்மம் புரியும் ஆண்கள், தானதர்மம் புரியும் பெண்கள், நோன்பு நோற்கும் ஆண்கள், நோன்பு நோற்கும் பெண்கள், தங்களுடைய மறைவிடங்களைப் பாதுகாக்கும் ஆண்கள், மறைவிடங்களைப் பாதுகாக்கும் பெண்கள், அல்லாஹ்வை அதிகம் நினைவுகூரும் ஆண்கள், அல்லாஹ்வை அதிகம் நினைவுகூரும் பெண்கள் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான். (அல்குர்ஆன் - 33:35)

பெண்களுக்கு வாழ்வுரிமை வழங்கியது இஸ்லாத்தின் மிகப்பெரும் சாதனையாகும். ஏனெனில், உலகின் பல மதங்களில் பெண்களை ஒரு மனித இனமாகக் கூடப் போற்றப்படவில்லை.

நபி (ஸல்) அவர்கள் பிறந்த பிறகுகி.பி. 586 ஆம் ஆண்டு ஃபிரான்ஸில் பெண்களின் நிலை பற்றி விவாதிப்பதற்காக கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் நீண்ட  விவாதங்களுக்குப் பின் பெண்ணும் மனித இனம் தான். எனினும் அவள் ஆண்களுக்கு ஊழியம் செய்வதற்காக படைக்கப்பட்டிருக்கிறாள், என்று தீர்மானித்தார்கள். (மஆரிஃபுல் குர்ஆன் - 1/197)

ஆனால், குர்ஆன் விந்துத்துளியிலிருந்தே ஆணும் பெண்ணும் படைக்கப் பட்ட சமத்துவக் கொள்கையை பல இடங்களில் எடுத்துக் கூறும். ஹிந்து மதத்தில் கணவர் இறந்து விட்டால் அவரது பிணத்தோடு மனைவியையும் சேர்த்து உயிரோடு உடன்கட்டை ஏற்றி பொசுக்கி விடுவது, மதத்தின் அங்கமாக கருதப்பட்டது. உலகில் இன்றைய இஸ்லாம் தோன்றுவதற்கு முன் ஒட்டுமொத்த பாகப்பிரிவினை முறைகளும் முறையற்றதாகவே இருந்தன.

அய்யாமுல் ஜாஹிலிய்யா எனும் மௌட்டீக காலத்தில் சொத்துரிமை கொண்டாடுவதற்கு பலமுள்ள ஆணாக இருப்பது மட்டுமே தகுதியாக கருதப்பட்டது. எனவே யுத்தத்தில் பங்குகொள்ளுமளவுக்கு பலம் வாய்ந்த வாலிபர்களுக்கே எல்லா சொத்துக்களும் கிடைக்கும். பெண்களுக்கோ சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கோ அறவே சொத்து கிடைக்காது.

யூதர்கள் தௌராத் எனும் உண்மையான இறைவேதத்தை இருட்டடிப்பு செய்துவிட்டனர். இப்பொழுதிருக்கும் கையாடல் செய்யப்பட்ட அவர்களுடைய வேதத்தின் படி ஆணுக்கு மட்டுமே சொத்து கிடைக்கும் என்பதே அவர்களுடைய மதச்சட்டம். எனவே இறந்தவருடைய தாயாருக்கோ அல்லது மகளுக்கோ மனைவிக்கோ சகோதரிக்கோ யாருக்கும் சொத்து கிடைக்காது. வேடிக்கை என்னவென்றால் அவர்களில் ஒரு பெண் இறந்துவிட்டால் அவளுடைய கணவருக்கு சொத்து கிடைக்கும். ஆனால் கணவர் இறந்து விட்டால் மனைவிக்கு சொத்து கிடைக்காது.

ரோமன் சட்டம் நியாயத்தின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டம் என மேற்குலகம் பெருமையாக பேசிக்கொள்கிறது. ஆனால் அந்தச் சட்டத்தின் படி திருமணமான பெண்களுக்கு அவர்களுடைய தந்தையின் சொத்திலிருந்து பங்கு கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. ஆண்களுக்கு எந்நிலையிலும் சொத்து கிடைக்கும். அவன் முறையான திருமண உறவின் மூலம் பிறந்திருந்தாலும் சரி, அல்லது விபச்சாரத்தின் மூலம் பிறந்திருந்தாலும் சரி.

ஹிந்து மதத்தின் அசல் வேதத்தில் கூறப்பட்டுள்ள வாரிசுரிமைச் சட்டப்படி பெண்களுக்கு அறவே சொத்து கிடைக்காது என்பது மட்டுமல்ல. ஆண்களிலும் கூட மூத்த மகனைத்தவிர வேறு எந்த மகனுக்கும் சொத்துரிமை கிடையாது. தாய், தந்தையரின் எல்லா சொத்துக்களையும் மூத்த மகனே பெற்றுக்கொள்ள வேண்டும், என்று மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது. (நூல்- தக்ஸீமெ மீராத்(ச்) - மௌலானா அய்யூப் நத்வீ)

இஸ்லாத்தில் ஆணுக்கு எவ்வாறு சொத்தில் பங்கு இருக்கிறதோ அவ்வாறே பெண்ணுக்கும் பங்கு இருப்பதாக குர்ஆன் கூறும். (மரணத்திற்குப் பின்) தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச்சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. (அவ்வாறே) தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச்சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அசசொத்து குறைவாகவோ அதிகமாகவோ இருந்தாலும் சரியே! (இது) அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்ட்ட பங்காகும். (அல்குர்ஆன் - 4:7)

பெண்ணுக்குக் கிடைத்த சொத்தில் அவளுக்கு முழு உரிமை உண்டு. அதை அவள் சுயமாக செலவு செய்ய அதிகாரம் பெறுகிறாள். அவளுடைய உரிமையில் கணவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவளாக விரும்பி கணவனுக்கு ஏதாவது கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம். இல்லையானால், அதை அனுபவிப்பதற்கு கணவனுக்கு உரிமையில்லை. அதே சமயம், எல்லா சொத்துக்களும் மனைவிக்கு இருந்தாலும் கணவனே அவளுடைய செலவினங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ஒருவன் திருமணம் முடித்து விட்டால் அவனுடைய மனைவியின் சொத்துக்களில் கணவனும் கூட்டாளியாக ஆகிவிடுவான், என்பது தான் ஐரோப்பாவில் நீண்ட காலச் சட்டமாக இருந்தது. (நூல்: வலைஸத்தகரு கல்உன்ஸா)ஆனால், குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பே அண்கள் அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப பங்கு உண்டு. பெண்கள் அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப பங்கு உண்டு, என்று பிரகடனப்படுத்திவிட்டது. (4:32)