Tuesday, 29 December 2015

நவீனமா? அறிவீனமா?





ஒரு பொருளோ அல்லது ஒரு சிந்தனையோ அது புதிதாக இருக்கிறது, என்பதற்காக மட்டும் அதை விரும்புவதோ அல்லது வெறுப்பதோ இஸ்லாத்தின் நிலைபாடு கிடையாது. அதே சமயம் நவீன சிந்தனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் லாபங்கள் ஏராளமாக இருப்பது போல் நஷ்டங்களும் தாராளமாகவே இருக்கின்றன.

ஹிட்லரும் முஸோலினியும் நவின சிந்தனைகள் என்ற விதைகளில் வளர்ந்த மரமில்லையா? நிர்வாண - ஆபாச கலாச்சாரத்திற்கும் விபச்சாரத்திற்கும் தரச்சான்றிதழ் கேட்கும் மனோநிலையும் தரம் தாழ்ந்த நவீனம் நல்கிய தைரியமில்லையா? பெண்ணுரிமை பேனர்களுடன் வீதியில் உலா வரும் கட்டுப்பாடற்ற சுதந்திரமும் ஓரினத் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கும் சட்ட சுதந்திரமும் புதுமைப் பித்தர்களின் முதல் வரிசையில் அணிவகுக்கும் அற்புத மன்மத சிந்தனையில்லையா?


எது அளவுகோல்?:
எனவே, நவீனம் ஒரு புறம் நன்மையைக் கொடுப்பது உண்மையென்றால் அதன் மூலம் விளையும் தீமைகள் நிரூபிக்கப் பட வேண்டிய அவசியமில்லாத நிதர்சனங்கள். அப்படியானால் புதுமைச் சிந்தனையை நடைமுறையை ஏற்றுக்கொள்வதா? மறுப்பதா? அல்லது எதை ஏற்றுக்கொள்வது? எதை மறுப்பது? என்பதற்கு தெளிவான அளவுகோல் கட்டாயம் தேவை.

ஆனால், இன்று உலகம் தன்னுடைய அரைகுறை அறிவையே அளவுகோலாகக் கொண்டுள்ளது. நடுநிலையான அறிவு என்பது வஹியுடைய வழிகாட்டலின் சிந்தனையில் தான் சாத்தியமாகும், என்பதற்கு இன்றைய அறிவுஜீவிகளின் அரைவேக்காட்டுச் சிந்தனையின் மூலம் உருவான கலாச்சாரச் சீரழிவே போதுமான ஆதாரம். பொதுவாக ஒவ்வொரு பொருளும் அது எதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறதோ அந்த நோக்கத்தை மட்டுமே நிறைவு செய்ய முடியும்.

கண்ணுடைய வேலையை காது செய்ய முடியாது. காதுடைய வேலையை கண் செய்ய முடியாது. அவ்வாறே அறிவுக்கும் ஒரு வரம்பு உண்டு. ஒரு பொருளைப் பார்த்தால் அது தானாக உருவாகவில்லை. அதைத் தயாரித்தவன் ஒருவன் கண்டிப்பாக இருக்க வேண்டுமென்பதை அறிவால் உணர்ந்து கொள்ள முடியும். அதேசமயம், அந்த பொருளை எப்படி உபயோகித்தால் இம்மையில் நிறைவான லபாமும் மறுமையில் அல்லாஹ்வின் பொருத்தமும் கிடைக்கும் என்பதை அறிவால் விளங்கிக் கொள்ள முடியாது. ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்தவன் தான் அதை இயக்கும் முறையை கற்றுத் தரவேண்டும்.

அவ்வாறே இந்த மாறும் உலகதில் மனிதன் தன்னை எவ்வாறு இயக்க வேண்டுமென்பதை படைத்த இறைவன் தான் சொல்லித் தரமுடியும். இறைத்தூதர்களின் வழிகாட்டல் கலந்த அறிவு சிநற்ததா? மனிதர்களுடய மனோஇச்சை கலந்த அறிவு சிறந்ததா? என்றால் முன்னது தான் முக்கியமும் சிறந்ததும் என்பது நடுநிலையாளர்களுக்குப் புரியும். நபிமார்களின் வழிகாட்டலை நகைத்துவிட்டு தங்களுடைய மனோஇச்சைப் படி ஒரு முடிவு செய்துவிட்டு, அதுதான் அறிவுப்பூர்வமானதும் நாகரிக காலத்திற்கு ஏற்றதும், என்று வாதிட்டால் அது அறிவின் இலக்கணத்தை அறியாததால் விளையும் வாதம், என்று தான் சொல்ல முடியும். நவீன பிரச்சினைகளுக்கு இச்சைக்கு அடிமையான அறிவைக் கொண்டு மட்டும தீர்வு செய்வதால் ஏற்படும் கெட்டவிளைவுகளில் சில:


அணு ஆயுத அற்புதம்:
உலக மாக யுத்தத்தின் போது ஹிரோஷிமா நாகசாகியின் மீது வீசப்பட்ட அணுகுண்டுகளின் தாக்கம் இன்று வரை உணரப்படுவது யாவரும் அறிந்ததே! இருக்கும் அப்பாவிகள் இறப்பது மட்டுமல்ல, பிறக்கப் போகும் பச்சிளங்குழந்தைகளும் நாம் எந்த குற்றத்திற்காக இப்படி ஊனமாகப் பிற்ககிறோம், என்று தெரியாமலேயே உடலாலும் மனதாலும் பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலையைக் கண்டு அணு ஆயுதத்தின் கொடுமையைப் பற்றி யாரால் தான் சிந்திக்க முடியாது?!

எனினும் அரைகுறை அறிவு, காலம் காலமாக பிறக்கும் குழந்தைகளின் ஈடுசெய்ய முடியாத நஷ்டத்தைப் பற்றி சிந்திக்காமல் அப்போதைய இராணுவ வீரர்களின் லாபத்தையே பெரிதாக நினைக்கிறது, எனவே தான், பத்து லட்சம் அமெரிக்க வீரர்களின் உயிரையும் இரண்டரை லட்சம் பிரிட்டானிய வீரர்களின் உயிரையும் பாதுகாத்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது, அணு ஆயுதமே, என்று முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மதிப்பிட்டிருக்கிறார். (இஸ்லாம் அவ்ர் ஜித்தத் பஸன்தீ)

இப்படிப்பட்ட மூளைச்சலவை செய்யப்பட்ட சிந்தனையை வைத்துக்கொண்டு நவீன உலகம் உயிர் பெறுமா? அழிவை நோக்கி நடை போடுமா? என்பதை யோசிக்க வேண்டும்.

மகளுடன் திருமணம்:
நவீன காலத்தில் பல கொள்கைக் குழப்பவாதிகள் தோன்றுவது போல் இஸ்லாமிய வரலாற்றின் பக்கங்களில் பாத்தினிய்யா என்ற வழிகெட்ட குழப்பவாதிகளையும் காண முடியும். அந்த கூட்டத்தாரின் பிரபல்யமான தலைவர் உபைதுல்லா கைருவானீ என்பவர் கூறுவதையும் ஆவேசப்படாமல் அமைதியாகப்  படித்துக் கொள்ளுங்கள்:

ஒருவர் தன்னை அறிவாளி என்று வாதிட்டுக் கொள்கிறார். அவருக்கு அழகான சகோதரியும் மகளும் உண்டு. அவனுடைய மனைவி கூட அவ்வளவு அழகாக இல்லை. அப்படியிருந்தும் அந்த மகளை, சகோதரியை தன் மீது ஹராமாக்கி விடுகிறான். இவன் தன்னை அறிவாளி என்று வாதிடுவதை விட பெரிய ஆச்சரியம் என்ன இருக்க முடியும். இந்த மடையன் அறிவு பெற்றிருந்தால் தனக்கு ஓர் அந்நியப் பெண்ணை விட வீட்டில் இருக்கும் மகளும் சகோதரியும் தான் தனக்கு பொருத்தமானது, உரித்தானது, என்பதை விளங்கிக் கொள்வான்.  அவர்களுடைய எஜமான் அதற்கு தடை விதித்திருக்கிறார், என்பதைத் தவிர வேறெந்த காரணமும் இல்லை. (அல்ஃபர்கு பைனல் ஃபிரக் - அப்துல் காஹிருல் பக்தாதீ - இஸ்லாம் அவர் ஜித்தத் பஸன்தீ))


மனைவியிடம் அனுபவிக்கும் அனைத்து இன்பங்களையும் எந்த பெண்ணிடமும் அனுபவிக்க முடியும். அவள் மகளாகவோ சகோரியாகவோ இருந்தால் என்ன? (எழுதுவதற்குக் கூட அவ்வளவு கூச்சமாகவும் அசிங்கமாகவும் இருக்கிறது. ஆனால், இந்த அசிங்கத்தை நியாயப்படுத்துபவனைப் பற்றி அவனுடைய முகத்திரையை கிழிக்காமல் இருக்க முடியமா என்ன?)

மனைவி செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் மகளும் சகோதரியும் செய்ய முடியும். என்னுடைய தேவையும் விருப்பமும் என்ன என்பதைப் பற்றி அந்நியப் பெண்ணை விட வீட்டுப் பெண்கள் தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம்.  என்னுடைய துணியை துவைக்க முடியும். எனக்கு சமைத்துத் தரமுடியும். அப்படியிருக்கும் போது அந்தத் தேவைக்காக மட்டும் அந்நியப் பெண்ணை எதற்காக திருமணம் முடிக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு வஹியின் வழிகாட்டலின்றி அறிவைக் கொண்டு மட்டும் பதிலளிக்க முடியாது.

அப்துல்லாஹ் கைருவானீ யுடைய சிந்தனைக்கு இன்று மேற்கத்திய நாடுகளில் அமோக ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்கிறது. சில மேற்கத்திய நாடுகளில் சகோதரியுடன் வாழ்க்கை நடத்துவதற்கு அங்கீகாரம் கேட்டு குரல் எழுப்பப் படுகிறது. சமூகத்தில் உருவாகும் பிரச்சினைகளுக்கான தீர்வு அறிவைக் கொண்டு மட்டும் தான் செய்ய முடியும், என்று முடிவு செய்து விட்டால் இதைவிடவும் மோசமான சீரழிவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இன்று உலகம் சந்தித்துக் கொண்டிருப்பது மட்டும் சாதாரணமான சீரழிவல்ல. ஆண்கள் ஆண்களை திருமணம் செய்து கொள்வதற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்த சட்டாம்பிள்ளை நாடுகளும் உலகத்தில் உண்டு. இது போன்ற ஏகப்பட்ட ஜோடிகள் திருமணம்? செய்து குடும்பம்? நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

தனக்குத் தானே திருமணம்:
சமீபத்தில் அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் நாற்பது வயது கொண்ட ஒரு பெண் தனக்குத் தகுதியான ஜோடி அமையவில்லை, என்பதற்காக தனக்குத் தானே திருமணம் செய்து கொண்டதாக பத்திரிக்கைத் தகவல். அந்த திருமண விழாவில் நண்பர்களும் உறவினர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினார்களாம். அதனால் அந்தப்பெண் மகிழ்ச்சியடைந்தாராம். (தினமலர் 7-2-2015)

இந்த திருமணம் பற்றி உங்களுக்கு ஏதாவது விளங்குகிறதா? இந்தத் திருமணத்திற்கு ஒரு விழா வேறு. அதில் வாழ்த்து தெரிவிப்பவர்கள், இவர்களையெல்லாம் பாத்து என்ன சொல்வது? ஒன்றுமே புரியவில்லை. இது போன்ற மடத்தனத்திற்கு ஊடகங்கள் வைத்த நவீன பெயர் விநோதம். எல்லாருடைய அறிவும் ஒரே மாதிரி சிந்திக்காது, என்பது மட்டுமல்ல. எதிரும் புதிருமாகவே சிந்திக்கும்.  மனித அறிவின் சிந்தனைத் திறன் வித்தியாசமானது. மனோநிலையும் வித்தியாசமானது.

மனிதன் எந்த சூழ்நிலையில் வாழ்கிறானோ வளர்கிறானோ அந்தப் பகுதியின் பழக்கவழ்க்கங்கள் அவனுக்கு சிறந்ததாகவும் பெரியதாகவும் தெரியும். நடுநிலையாக சிந்திப்பதற்கோ முறையான முடிவு எடுப்பதற்கோ மனித அறிவு இடம் கொடுக்காது, என்பது உலகியல் நடைமுறை.

குர்ஆன் வழங்கிய பெயர்:
வஹியின் வழிகாட்டல் இல்லாமல் அறிவு சுயமாக செயல்பட ஆரம்பித்தால் அது நடுநிலையான தூய அறிவாக செயல்பட முடியாது. அது மனோஇச்சைக்கும் மனிதனுக்குள் புதைந்து கிடக்கும் மிருகத்தனத்திற்கும் அடிமையாகி விடுவதுதான் நிதர்சனம். இந்த அறிவுக்கு குர்ஆன் வைத்த பெயர் பகுத்தறிவு அல்ல. ஹவா எனும் மனோஇச்சை.

சத்தியம் இவர்களுடைய மனோஇச்சைகளப் பின்பற்றி அவற்றுக்கு ஒத்துப் போகுமேயானால் வானங்களிலும் பூமியிலும் அவற்றில் உள்ளவர்களிடமும் (முழு பிரபஞ்சத்திலும் கடுமையான) குழப்பம் ஏற்பட்டு பிரபஞ்சமே சீர்குலைந்து விடும். (அல்குர்ஆன் - 23:71)

இப்படிப்பட்ட அறிவின் மூலம் இயற்றப்படும் சட்டங்களும் தீர்வுகளும் முன்னேறிய நாகரிக மனித சமுதாயத்திற்கு பயன் தரக்கூடியதாக அமையாது. மாற்றமாக, மனித இனத்தை மிருகத்தன்மை கலந்ததாக மாற்றிவிடும். பெயரளவில் கூட வெட்கத்தைப் பார்க்க முடியாது.

இஸ்லாம் நவீனத்தை எதிர்க்கிறதா?





என்றுமில்லாத அளவுக்கு இன்று உலகின் நிலைபாடு முற்றிலும் மாறியுள்ளது. இறையியல், இயற்பியல், தொழில் துறை, அரசியல், பொருளியல், விஞ்ஞானம், மருத்துவம், ஊடகம், தனிமனித சூழல், சமூக சூழல், குடும்ப சூழல் என அனைத்துத் துறைகளும் ஆகப் பெரும் வளர்ச்சி கண்டு வளர்ச்சிக்கும் வளர்ச்சி தேடிக்கொண்டிருக்கிறது, உலகம். நவீன உலகம், நவீன கண்டுபிடிப்பு, நவீன வாகனம், நவீன பிரச்சினை, நவீன தீர்வு என எல்லாவற்றிலும் நவீனம் என்ற வார்த்தை இரண்டறக் கலந்துவிட்டது.

இப்படிப்பட்ட நவீன உலகில் பழங்காலத்து கொள்கைகளோ மதங்களோ ஈடுகொடுக்க முடியாது. எனவே, அரசியல் வேறு; மதம் வேறு, விஞ்ஞானம் வேறு; மதம் வேறு, உலகியல் வேறு; இறையியல் வேறு, என்று பாகுபடுத்திப் பார்க்கப்படும் இந்த உலகில் மதங்கள் தங்களுடைய இருப்பை நிலைப்படுத்திக் கொளவதற்கு நவீனத்துடன் போட்டி போட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன.

ஆனால், இஸ்லாம் இதற்கு விதிவிலக்கானது, என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. பிரச்சினைகள் என்பது முடிவில்லாதவை. ஒரு வரம்புக்குட்பட்டவையல்ல. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பல பிரச்சினைகள் தீர்வுக்காக அணி வகுத்து நிற்கின்றன. எனினும் குர்ஆனும் ஹதீஸும் வார்த்தைகளளவில் வரம்புக்குற்பட்டவை. குர்ஆனில் உள்ள இறைவசனங்களும் ஹதீஸ் கிரந்தங்களில் தொகுக்கப்பட்டுள்ள நபிமொழிகளும் மட்டும் தான் நம்முன் உள்ளன. எனினும் அவற்றின் உட்கருத்துக்கள் ஆழமானவை. யுக முடிவு நாள்வரை தோன்றும் அனைத்து நவீன பிரச்சினைகளுக்கும் தங்குதடையின்றி தீர்வுகளை அள்ளித் தந்து கொண்டிருக்கும் திறன் படைத்தவை. 

பிரச்சினைகளின் தீர்வு அல்குர்ஆன்:
ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் மஸ்ஜிதில் கடந்து சென்றேன். அப்பொழுது மக்கள் (தவறான தேவையில்லாத) பேச்சுக்களை பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அலீ (ரலி) அவர்களிடம் அமீருல் முஃமினீன் அவர்களே! மக்கள் (குர்ஆன் மற்றும் திக்ருகளை விட்டுவிட்டு சத்தியத்திற்குத் தொடர்பில்லாத கதைகளையும் தேவையில்லாத) பேச்சுக்ளளை(யும்) பேசிக்கொண்டிருக்கிறார்கள், என்று கூறினேன். அதற்கு அவர்கள் அப்படியா செய்கிறார்கள், என்று கேட்டார்கள். நானும் ஆம் என்றேன். அலீ (ரலி) அவர்கள், மிக விரைவில் (மிகப்பெரும்) ஃபித்னா - குழப்பம் ஏற்பட இருக்கிறது, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களே அப்படியானால் அதிலிருந்து மீள்வதற்கான தீர்வு என்ன? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:

(அதற்கான தீர்வு) அல்லாஹ்வுடைய வேதம் தான். அதில், உங்களுக்கு முன்பு நடந்த தகவல்களும் உங்களுக்குப் பிறகு நடக்கப் போகும் செய்திகளும் உங்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வும் இருக்கிறது..... திர்மிதீ - 2906


எனவே, எப்படிப்பட்ட பிரச்சிகைனகள் வந்தாலும் அவை பொருளாதார ரீதியாக இருந்தாலும் சரி குடும்பவியல் ரிதியாக இருந்தாலும் சரி, சமூகம் தொடர்பாக இருந்தாலும் சரி, தனி மனிதன் தொடர்பாக இருந்தாலும் சரி அரசியல் தொடர்பானதாக இருந்தாலும் சரி ஆன்மீகம் பற்றியதாக இருந்தாலும் சரி அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் குர்ஆன் மூலம் தெளிவான தீர்வு காணமுடியும், என்பதை சந்தேகத்திற்கிடமின்றி சொல்ல முடியும்.

நவீன பிரச்சினைகளுக்கு தீர்வுகளை மதங்களின் இடிபாடுகளுக்கிடையே தேட முடியுமா? என்று சவால் விடப்படும் இந்நாளில் இல்லை; இனிய இஸ்லாத்தின் அழகிய அரண்மனைக்குள் அமுதம் கொட்டும் அழகான தீர்வுகளை அள்ளித் தரமுடியும், என்று மார்தட்டிச் சொல்லும் துணிச்சல் முஸ்லிம்களுக்கு மட்டுமே உண்டென்றால் அது மிகையல்ல. ஏன் நவீன சிந்தனை கூட இஸ்லாம் இட்ட பிச்சை என்று சொன்னாலும் மிகையாகாது.


சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் வணங்கிக் கொண்டிருந்த காலத்தில் அவற்றை சிந்தித்துணர்ந்து படைத்த அல்லாஹ்வின் வல்லமையை புரிந்து கொள்ளுமாறு உபதேசித்தது குர்ஆன் தானே! பேருந்துக்கு முன்னால் நின்று கொண்டு அதற்கும் ஒரு கும்பிடு போட்டு விட்டு பேருந்தை இயக்க ஆரம்பிப்பவர்களைப் பார்த்ததில்லையா? குலதெய்வம் முதற்கொண்டு செய்யும் தொழிலையும் தெய்வமாகக் கருதி சிந்தனைச் சக்திக்கு அணை கட்டிக் கொண்டிருக்கும் காலத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம் அல்லவா?


நவீனத்தை ஏன் ஏற்கக்கூடாது?:
இஸ்லாம் நவீனத்தை விரும்பாது, என்று சில நவீன விரும்பிகள் நம்பலாம். ஆனால், புதியதை விரும்புவததென்பது மனினுடைய இயல்பு என்பதை யார் தான் மறுக்க முடியும். நவீனத்தை விரும்பவில்லையானால் மனிதன் கற்காலத்திலிருந்து தற்காலத்திற்கு மாறியிருக்க முடியாது. குதிரையையும் ஒட்டகத்தையும் விட்டுவிட்டு விண்வெளிக் கப்பலிலும் விண்கலங்களிலும் பயணித்திருக்க முடியாது. மண்விளக்குகளில் வெளிச்சம் தேடிக் கொண்டிருந்தவர்கள் மின் விளக்குகளில் மினுமினுக்க முடியாது. கையில் கிடைத்த அனைத்தும் ஆயுதம் என்ற நிலையிலிருந்து அணு ஆயுதம் வரை முன்னேறியிருக்க முடியாது.


அப்படியானால் நவீனத்தை விரும்புவது மனித இயல்பு. இஸ்லாம் ஒருபோதும் அதன் குறுக்கே நிற்காது. ஒரு கண்டுபிடிப்பையோ அல்லது நடைமுறையையோ அது புதியது என்பதற்காக மட்டும் இஸ்லாம் அதைத் தடை செய்யாது. பல சமயங்களில் அதை வரவேற்கவும் செய்யும். அதற்கு முக்கியத்துவமும் கொடுத்திருக்கும்.

அகழ் யுத்தம்:
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் அரபகத்திற்கு வெளியிலிருந்து வந்த பல நடைமுறைகளை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். இஸ்லாமிய வரலாற்றில் கந்தக் - அகழ் யுத்தம் மிகவும் பிரபல்யமானது. முழு அரபுலகமும் திரண்டு வந்து மதீனாவை முற்றுகையிட்டது. இன்றோடு இஸ்லாத்திற்கு சமாதி கட்டி விட வேண்டுமென்ற திட்டத்தில் எதிரிகள் மதீனாவை முறறுகையிட்டார்கள்.

இந்நிலையில் நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள். அப்போது ஸல்மான் ஃபாரிஸீ (ரலி) அவர்கள் தங்களுடைய நாட்டில் உள்ள நடைமுறையைக் கூறினார்கள். அதாவது, நமக்கும் எதிரிகளுக்கும் மத்தியில் மிகப்பெரும் அகழ் தோண்ட வேண்டும். இதனால் எதிரிகள் அதைத் தாண்டி வந்து நம்மைத் தாக்க முடியாமல் போகும். நபி (ஸல்) அவர்கள் இந்த யோசனையை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். இது பாரசீகர்களின் பழக்கமாச்சே! என்ற காரணம் கூறி அந்த யோசனையை மறுக்கவில்லை. எதிரிகள் இந்த திட்டத்தைக் கண்டு திகைத்துப் போய் நின்றார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது ஒரு சூழ்ச்சி. இப்படிப் பட்ட சூழ்ச்சியை அரேபியர்கள் ஒரு போதும் தேர்ந்தெடுத்தது கிடையாது, என்று கூறினார்கள். (அஸ்ஸீரதுந் நபவிய்யா லிப்னி கதீர்)


ஆனால், அரேபியர்கள், அரேபிய போர்த் தந்திரத்தை மட்டும் தான் கையாள வேண்டும், என்று இஸ்லாம் வலியுறுத்தவில்லை. அரேபியன் என்ற தேவையற்ற தேசப்பற்று கொண்ட எதிரிகள் வேண்டுமானால் அதைத் தவறாகப் பார்க்கலாம். ஆனால், நபி (ஸல்) அவர்களுடைய மனதில் அகழ் தோண்டும் திட்டத்தை சரியானதாகவே அல்லாஹ் காட்டிக் கொடுத்தான். இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரணாக இல்லாதவரை மாற்றார்களின் நல்ல திட்டங்களை நாம் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?

நிதியமைச்சகம்:
ஏறத்தாழ ஹிஜ்ரி 15 ஆம் ஆண்டு உமர் (ரலி) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களை பஹ்ரைனுக்கு அதிகாரியாக நியமித்தார்கள். அவர்கள் வருட இறுதியில் ஐந்து லட்சம் (திர்ஹத்தைக்) கொண்டு வந்தார்கள். கலீஃபா அவர்கள் ஆலோசனைக் குழுவைக் கூட்டி பஹ்ரைனிலிருந்து பெரும் தொகை வந்துள்ளது. இதை என்ன செய்யலாம்? என்று ஆலோசனை கேட்டார்கள்.

அலி (ரலி) அவர்கள் அந்தந்த வருடத்தில் அவற்றை செலவு செய்து விடவேண்டும். கஜானாவில் வைக்கக் கூடாது என்று கூறினார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமான கருத்தைத் தெரிவித்தார்கள். அப்போது அங்கிருந்த வலீத் பின் ஹிஷாம் அவர்கள், சிரியா தேசத்து மன்னர்களிடம் நிதிக்காக தனித் துறை இயங்கியதை நான் கண்டிருக்கிறேன், என்று கூறினார். உமர் (ரலி) அவர்கள் இந்த கருத்தை வரவேற்று பைத்துல்மால் எனும் நிதியமைச்சகத்திற்கு அடித்தளமிட்டார்கள்.

நவீன ஆயுதங்கள்:
நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கைபர் வெற்றியின் போது ஸஃப் என்ற கோட்டை முஸ்லிம்களிடம் வீழ்ந்தது. அந்தக் கோட்டையின் சுரங்கக் கிடங்கில் சோதனையிட்ட போது அங்கே ஏராளமான போராயுதங்களும் தற்காலத்து துப்பாக்கி மற்றும் பீரங்கி போன்ற ஆயுதங்களும் கிடைத்தன.

யூதர்கள், அந்த ஆயுதம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை ரோமர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இந்த நவீன ஆயுதங்கள் ரோமர்களின் தயாரிப்பு, என்று கூறி அவற்றை நிராகரிக்கவில்லை. தாயிஃப் நகரத்தை நபி (ஸல்) அவர்கள் முற்றுகையிட்ட போது அவர்களுடைய எதிர்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள்.

ஸல்மான் ஃபாரிஸீ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே இது போன்ற சமயத்தில் நாங்கள் பாரசீக நாட்டில் மன்ஜனீக் எனும் கல் எறியும் ஆயுதத்தை பயன்படுத்துவோம். எதிரிகளும் எங்களுக்கு எதிராக அதைப் பயன்படுத்துவார்கள். கோட்டையை வீழ்த்துவதற்கு நாமும் அவ்வாறு செயல்படலாமே, என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த ஐடியாவை அங்கீகரித்தவர்களாக ஸல்மான் ஃபாரிஸீ (ரலி) அவர்களையே அந்த துப்பாக்கி போன்ற இயந்திரத்தை தயாரிக்கும் படி கூறினார்கள். (அல்மகாஸீ லில்வாகிதீ)

நவீன தொழில் நுட்பம்:
நபி (ஸல்) அவர்கள் அத்துடன் நிறுத்திக் கொள்ள வில்லை. நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை நபித்தோழர்கள் கற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்பது அதைவிட முக்கியமானது. உர்வதுப்னு மஸ்வூத் (ரலி) கைலான் பின் ஸலமா (ரலி) ஆகிய இரு நபித் தோழர்களும் தாயிஃப் நகர முற்றுகையிலும் ஹுனைன் யுத்தத்திலும் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் அவ்விருவர்களும் யமன் தேசத்தில் ஜுரஷ் என்ற நகரத்திற்கு தப்பாபா, மன்ஜனீக் - துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களின் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வதற்காக சென்றிருந்தார்கள். (அல்பிதாயா வந்நிஹாயா)

நூஹ் (அலை) அவர்களுக்கு கப்பல் கட்டும்படி உத்தரவிட்டான். அந்த கப்பலில் எல்லா உயிரனங்களின் ஒரு ஜோடியையும் ஏற்றிக்கொள்ளும்படியும் உத்தரவிட்டான். அப்படியானால் அந்தக் கப்பல் எவ்வளவு பெரிதாக இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்ய முடிகிறதா? இஸ்லாம் இது போன்ற நவீன கண்டுபிடிப்புகளை அறிந்து கொள்வதற்கும் மார்க்கம் அனுமதித்த முறையில் அவற்றைப் பயன்படுத்துவதற்கும் ஆர்வமூட்டுகிறதே தவிர தடுக்கவில்லை. ஆனாலும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் சிந்தனையில் ஊறிப்போனவர்கள் ஏதாவது ஒரு புதிய சக்தியைக் கண்டால் அதையும் வணங்க ஆரம்பித்து விடுகின்றனர்.

நூஹ் நபியின் கப்பல் ஒதுங்கிய இடத்தில்  கப்பல் ஆலயம் என்ற பெயரில் ஓர் ஆலயத்தையே எழுப்பி விட்டனர். கி. பி. எட்டாம் நூற்றாண்டு வரை அந்த ஆலயம் இருந்ததாக வரலாறு. (கஸஸுல் குர்ஆன்)

Monday, 28 December 2015

கலாச்சார மோதல் - களமிறங்கிய காவலர்கள்





உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக பரிபூரணமாக்கிவிட்டேன்.... (5:3) என்ற இறைவசனம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறங்கிவிட்டது. அதே சமயம் வாழ்வியல் ரீதியான எல்லா துறைகளிலும் பெருவளர்ச்சியும் மாற்றமும் அடைந்து கொண்டு வருகிறது. ஒரு பக்கம் மாற்றம் என்றால் மறுபக்கம் தொடரும் சோதனைகள். சொல்லாலும் செயலாலும் இஸ்லாம் தாக்கப்பட்டது போல் வேறெந்த மதமும் தாக்கப் பட்டிருக்காது.


எந்தப் பெருவெள்ளத்திலும் அடித்துச் செல்லப்பட்டு விடக்கூடாது, என்பதற்காக இஸ்லாத்தை கறைபடியாமல் பாதுகாக்கும் செயல் வீரர்களை ஒவ்வொரு காலத்திலும் அல்லாஹ் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறான். எனவே தான் இஸ்லாம் இன்றும் (என்றும்) தனித்தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இமாம் அபூஹனீஃபா(ரஹ்)
இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களை ஆட்சியாளர்கள் நீதிபதியாக்குவதற்கு முயற்சித்தனர். எனினும் நீதிபதியாகிவிட்டால் அநியாயக்கார ஆட்சியாளர்களுக்கு உதவி செய்வதாகிவிடும், என்பதால் இமாமவர்கள் அதை மறுத்துவிட்டார்கள். இராக்குடைய ஆட்சியர் இப்னு ஹுபைராவின் மூலம் இமாமுக்கு 100 கசையடி கொடுக்கப்பட்டது. அத்துடன் விஷம் கொடுக்கப்பட்டதாகவும் சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் இமாம் (ரஹ்) கொள்கையில் உறுதியாக இருந்தார்கள்.


இமாம் மாலிக்(ரஹ்):
ஹிஜ்ரி 130 களில் உமையாக்களுடைய கிலாஃபத் வீழ்ந்து அப்பாஸிய்யாக்களுடைய ஆட்சி ஆரம்பமானது. அப்பாஸிய்யாக்கள் தங்களுடைய கிலாஃபத்தை ஏற்றுக்கொண்டே தீர வேண்டும், என்று மக்களை நிர்பந்தப்படுத்தினர். தங்களுடன் செய்து கொண்ட கிலாஃபத் உடன்படிக்கைக்கு மாறுசெய்தால் அவருடைய மனைவி தலாக்காகிவிடும், என்றும் சத்தியம் வாங்கினார்கள். மக்களுக்கு அது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது.

இந்நிலையில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் நிர்பந்த நிலையில் கொடுக்கப்பட்ட தலாக் செல்லாது, என்று ஃபத்வா கொடுத்தார்கள். அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யுமாறு இமாம் மக்களை ஏவவில்லை. மார்க்கத்தீர்வு தான் கொடுத்தார்கள். எனினும், ஆட்சியாளர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஹிஜ்ரி 146 ஆண்டு மதீனாவின் ஆட்சியராக இருந்த ஜஃபர் பின் சுலைமான் அப்பாஸீ இமாமுக்கு சாட்டையடி கொடுத்தார். அடி தாங்கமுடியாமல் மயக்கமுற்றார்கள். உணர்வு வந்தவுடன் அடிப்பவர்களை நான் மன்னித்துவிட்டேன், மக்களே இதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்!, என்று கூறினார்கள். அந்த தண்டனையின் தாக்கத்தினால் அதற்குப்பிறகு கையை முழுமையாக உயர்த்த முடியாமல் போய்விட்டது. (ஹஜ்ரத் இமாம் அபூஹனீபா கீ ஸியாஸீ ஜின்தகீ பக்:338-384)

இமாம் ஷாபியீ (ரஹ்):
அப்பாஸிய்யாக்களின் ஆட்சி காலத்தில் கிரேக்க தத்துவ நூற்கள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன. அவை விஞ்ஞான ரீதியாக முஸ்லிம்களுக்கு பெரிதும் உதவின, என்பதில் சந்தேமுமில்லை. எனினும் சில கிரேக்க தத்துவங்கள் இஸ்லாமிய கொள்கைகளை காயப்படுத்தின. கிரேக்க தத்துவ நூற்களை முஸ்லிம்களுக்கு அனுப்பி வைப்பதற்கு கிருத்துவ மன்னர் தயங்கிய போது பாதிரிமார்கள், இந்த நூற்களை படிப்பவர்களுக்கு கண்டிப்பாக தங்களுடைய மார்க்கக் கொள்கையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும், என்று கூறி அவற்றை அனுப்பி வைக்கும்படி கூறினார். பாதிரிமார்கள் நினைத்தது நிதர்சனமாக நடக்கவும் செய்தது. மார்க்கத்தின் எந்தக் கொள்கையாக இருந்தாலும் அது வஹியின் மூலம் நமக்கு வந்திருக்கிறது, என்பதை மறந்து ஃபல்ஸஃபா எனும் கிரேக்க தத்துவம் என்ற கல்லில் உரசிப்பார்க்க ஆரம்பித்தனர். அறிவியல் சரி என்று சொன்னால் தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற சிந்தனை மக்களிடம் ஏற்பட்டது.

எனவே இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் யார் இதைப் படிப்பார்களோ அவருக்கு சாட்டையடியும் செருப்படியும் கொடுத்து தெருத்தெருவாக சுற்ற வைத்து குர்ஆன் சுன்னாவுடைய போதனைகளை விட்டவருக்குரிய தண்டனை இது தான் என்று பகிரங்கப்படுத்த வேண்டுமென்று கூறினார்கள். (முஸல்மானோங்கா உரூஜோ ஜவால்)


இமாம் அஹ்மது (ரஹ்)
முஸ்லிம்களில் முஃதஜிலாக்கள் என்றொரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் சுன்னத் ஜமாஅத்திற்கு முரணாக குர்ஆன் படைக்கப்பட்ட பொருள் என்று வாதிட்டனர். ஹிஜ்ரி 3 ஆம் நூற்றாண்டில் அப்பாஸிய கலீஃபாக்கள் முஃதஜிலாக்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இந்த குர்ஆன் தொடர்பான கொள்கையில் அரசு சுன்னத் ஜமாஅத்தினருடன் கடுமையாக நடந்து கொண்டது. அதில், பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இமாம் அஹ்மது (ரஹ்) முஃதஜிலாக்களுடைய கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக இமாமவர்கள் 28 மாதங்கள் சிறையில் அடைக்கப்ட்டார்கள்.

சத்தியத்தை விடடுவிட வேண்டுமென்பதற்காக 33 அல்லது 34 தடவை சாட்டையால் அடிக்கப்பட்டார்கள். அவற்றில் ஒரு அடி யானையின் மீது விழுந்திருந்தாலும் யானை கூட வெருண்டேடியிருக்கும். இமாமவர்கள் ஹிஜ்ரி 241 ஆம் ஆண்டு ரபீவுல் அவ்வல் 12 ஆம் நாள் வஃபாத்தானார்கள். ஒரு கணிப்பின் படி 8 லட்சம் ஆண்களும் 60 ஆயிரம் பெண்களும் ஜனாஸா தொழுகையில கலந்து கொண்டனர். அஹ்மது (ரஹ்) அவர்கள் சத்தியக் கொள்கையில் நிலைத்து நின்றதின் காரணமாக முஃதஜிலாக்களுடைய கொள்கை தடம் தெரியாமல் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது.

நபி (ஸல்) அவர்கள் வஃபாத்தான சமயம் பலகீனமான முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய போது அதைத் திறமையாக எதிர்கொண்டு சாதித்த முதல் நபர் அபூபக்ர் (ரலி) அவர்கள் என்றால் சத்தியத்தை தலை நிமிரச்செய்த இரண்டாம் நபர் அஹ்மது பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் தான் என்று வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.


இமாம் கஜ்ஜாலி (ரஹ்)
இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அவர்கள் தங்களுடைய காலத்தில் ஆட்சியாளர்களிடம் இருந்த கவனக்குறைவை சுட்டிக்காட்டத் தவறவில்லை. மக்கள் பசி, பட்டினியாலும் அநீதியாலும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். மக்களுடைய நிலை நன்றாக இருக்கிறது, என்று யாராவது கூறினால் அவர் உன்னுடைய மார்க்க விரோதி என்பதை கவனத்தில்கொள்! பாதிக்கப்பட்ட மக்களின் துஆவை பயந்துகொள்! என்று ஆட்சியாளருக்கு இமாம் கடிதம் எழுதினார்கள். அத்துடன் மக்களுடைய நடைமுறை பற்றியும் முழுமையாக அறிந்திருந்தார்கள். இதற்கு அவர்களுடைய இஹ்யாவு உலூமித்தீன் என்ற பிரசித்தி பெற்ற நூலே போதுமான சான்று. அந்நூலின் மக்களிடம் இருந்த மார்க்கத்திற்கு முரணான எல்லா அம்சங்களைப் பற்றியும் எழுதியுள்ளார்கள்.

மஸ்ஜித், கடைவீதி, தெருக்கள், பொது குளியலைறை, விருந்து உபசரிப்பு என ஒவ்வொன்றிலும் மக்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற மார்க்கத்திற்கு முரணான நூதன அனுஷ்டானங்களை கடுமையாக விமர்சனம் செய்து எழூதியிருக்கிறார்கள். அவர்கள் அண்டை வீட்டார்களை பசி, பட்டினியில் விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் ஹஜ் செய்யக்கூடிய செல்வந்தர்களைப் பற்றியும் தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு கஞ்சத்தனம் செய்யும் செல்வந்தர்களைப் பற்றியும் இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அந்நூலில் கடுமையாக கண்டித்து எழுதுகிறார்கள்.

ஷைக் முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்)
ஷைக் அவர்களின் சீர்த்திருத்தப் பணியும் சரித்திரப் புகழ்பெற்றது. அவர்கள் சிலை வணக்கத்தை மட்டும் தடுக்கவில்லை. முஸ்லிம் என்ற பெயரில் இருந்து கொண்டு அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் சக்தி இருக்கிறது, என்று நம்புவதையும் கடுமையாக சாடியிருக்கிறார்கள்.

ஒரு தடவை இப்படி கூறினார்கள்: நீ உன் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கிறாய். படைப்புகளின் மீதும் தீனார், திர்ஹத்தின் (காசு, பணத்தின்) மீதும் கொடுக்கல், வாங்கல் மீதும் உன்னுடைய ஆட்சி அதிகாரத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறாய். நீ எதன் மீதெல்லாம் நம்பிக்கை வைத்திருக்கிறாயோ அவையனைத்தும் உன் கடவுளே! நீ எதையெல்லாம் பயப்படுகிறாயோ ஆறுதல் கொள்கிறோயோ அதுவும் உன்னுடைய கடவுள்! அல்லாஹ்வின் வல்லமையின்றி எந்த ஒரு பொருளும் நேரடியாக பலனையோ தீங்கையோ விளைவிக்கிறது என்று நம்பினால் அதுவும் உன்னுடைய கடவுள்! (என்று நீ நம்புகிறாய்).

ஒரு தடவை கலீஃபா அநியாயக்கார நீதிபதியை நியமனம் செய்த போது ஷைக் அவர்கள் மிம்பரில் நின்று கொண்டு கலீஃபாவைப் பார்த்து மாபெரும் அநியாயக் காரரை முஸ்லிம்களுக்கு நீதிபதியாக நியமித்திருக்கிறீரே! நாளை கருணையாளனுக்கெல்லாம் கருணையாளனாகிய ரப்புல் ஆலமீனிடத்தில் என்ன பதில் சொல்லப் போகிறீர்? என்று வினவினார்கள். இதைக் கேட்டு நடுங்கிய கலீஃபா உடனடியாக நீதிபதியை பதவிநீக்கம் செய்தார். (ரிஜாலுல் ஃபிக்ர் வத்தஃவா ஃபில் இஸ்லாம்)


முஜத்தித் அல்ஃப தானீ (ரஹ்)
இந்தியாவில் மொகலாயர்களுடைய ஆட்சி நடந்ததை யாரும் அறியாமல் இருக்க முடியாது. ஹிஜ்ரி 11 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்தார். மார்க்க போதனைகள் பற்றிய போதிய அறிவு இல்லாததால் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்திற்கு முரணான கொள்கைகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

ஹோலி, தசரா பண்டிகையில் முஸ்லிம்களும் பங்கெடுக்க வேண்டும். பசு அறுக்கக் கூடாது. மதுவும் பன்றி இறைச்சியும் சாப்பிடலாம். இது போன்று ஏராளமான கொள்கைக் குழப்பங்களை மக்களிடம் ஏற்படுத்தினார். இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியிலேயே இப்படி நடப்பதைக் கண்ட இமாம் அஹ்மத் முஜத்தித் அவர்கள் மனவேதனை அடைந்தார்கள். இந்நிலையில் அக்பர் மரணித்தார். ஜஹாங்கீர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். முஜத்தித் (ரஹ்) அவர்கள் மன்னரை சந்திக்க சென்ற போது மன்னருக்கு பணிந்து ஸஜ்தா செய்யவில்லை. ஸலாம் சொல்லி உள்ளே நுழைந்தார். அரசவை நடைமுறைக்கு மாற்றமாக இமாமவர்கள் நடந்து கொண்டதால் குவாலியர் சிறையில் சில வருடம் அடைக்கப் பட்டார்கள். ஷைக் அவர்கள் அங்கே இறைவழிபாட்டில் ஈடுபட்டதுடன் சிறைவாசிகளை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுத்தார்கள். நூற்றுக்கணக்கான சிறைக்கைதிகள் இஸ்லாத்தைத் தழுவினர்.
நிரபராதி என்று நிரூபிக்கப்பட்ட பின் ஷைகின் மீது அரசரின் கவனம் திரும்பியது. அரசவையினருக்கும் ஷைகின் நம்பிக்கை ஏற்பட்டது. முஜத்தித் (ரஹ்) அவர்களுக்கு மார்க்க விஷயங்களை கடிதம் மூலம் எழுதி அனுப்புவார்கள். அந்தக் கடிதத்தில் தங்களுடைய மனவேதனையை முழுமையாக வெளிப்படுத்துவார்கள். கைசேதமே! இந்த நாட்டுக்கு ஏற்பட்ட சோதனையை என்னவென்று சொல்வது?! முஹம்மது (ஸல்) அவர்களை பின்பற்றக்கூடியவர்கள் அவர்களுடைய சொந்த நாட்டிலேயே கேவலப்படுத்தப் படுகிறார்களே! விரோதிகளோ கௌரவிக்கப்படுகிறார்கள். மார்க்கத்தின் வழிகாட்டல் படி ஒரு முஸ்லிம் வாழ்ந்தார், என்ற காரணத்திற்காகவே சிறைவைக்கப்பட்ட தண்டிக்கப்பட வேண்டிய ஒரு அவலமும் இந்நாட்டில் நடக்க வேண்டியதாகி விட்டதே! என்று எழுதுவார்கள்.

தங்களுடைய மனவேதனையை இராணுவத் தளபதி வரையும் கடிதம் மூலம் வெளிப்படுத்தினார்கள். இதன் மூலம் மாபெரும் திருப்பம் ஏற்பட்டது. ஔரங்கசீப் (ரஹ்) அவர்களை சிறு வயதிலிருந்தே நல்ல மார்க்கப் பற்றோடு வளர்ப்பதற்கு ஷைக் முஜத்தித் (ரஹ்) அவர்களுடைய தனிப்பெரும் முயற்சி தான் காரணமாயிருந்தது. தீனெ இலாஹி என்ற பெயரில் இஸ்லாத்தின் தனித்தன்மையை தகர்க்க நினைத்தவர்கள் ஆண்ட நாட்டில் ஔரங்கசேப் போன்ற இறைநேசர்கள் இந்நாட்டில் ஆளும் நிலை உருவானது, என்றால் அதற்கான விதை விதைத்தவர்கள் ஷைக் முஜத்தித் அல்ஃபெ தானீ (ரஹ்) அவர்கள் தான் என்று சரித்திரம் சொல்லும். (அத்தஃவதுல் இஸ்லாமிய்யா ஃபில்ஹிந்த்)   


தாருல் உலூம் தேவ்பந்த்:
1857 ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போரில் (சிப்பாய் கலகம்) மௌலானா காஸிம் நானூத்தவி (ரஹ்) ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்) போன்றோர்கள் நேரடியாக பங்கெடுத்தார்கள். முஸ்லிம்களிடம் இருந்த ஆழமான தேசப்பற்றை உணர்ந்த ஆங்கிலேயன், அதற்கு அடிப்படைக் காரணமாக இருந்த இஸ்லாமிய உணர்வை அடியோடு அகற்றிட திட்டமிட்டான். குர்ஆனும் ஆலிம்களும் இருக்கும் வரை நாம் வெற்றி பெறமுடியாது, என்ற விசேஷ அறிக்கையின் படி 1861 - ல் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குர்ஆன் பிரதிகளை பொசுக்கினர். 14000 உலமாக்கள் தூக்கிலிடப்பட்டனர். டெல்லியில் இருந்த ஆயிரத்துக்கும் அதிகமான மத்ரஸாக்கள் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டன. மௌலானா ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களுடைய மத்ரஸாவை புல்டோஷர் மூலம் இடித்துத் தரைமட்டாக்கினர்.

இதுவெல்லாம் எதற்காக இஸ்லாமிய போதனையை ஐரோப்பிய போதனையாக மாற்ற வேண்டும். பிறப்பால், நிறத்தால் இந்தியனாக இருந்தாலும் சிந்தனையால் ஆங்கிலேயனாக இருக்க வேண்டுமென்ற லார்ட் மெக்காலே உடைய திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக!  இதைக்கண்டு வேதனையடைந்த மௌலானா காஸிம் நானூத்தவி (ரஹ்) இஸ்லாமிய கலாச்சாரத்தை பாதுகாக்கும் மத்ரஸாக்கள் இல்லாததால் இந்திய முஸ்லிம்களின் இஸ்லாமிய உணர்வும் கலாச்சாரமும் காலாவதியாகிவிடக்கூடாது என்பதற்காகவும்; மககாவுக்கு ஹிஜ்ரத் செய்து சென்ற ஹாஜி இம்தாதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் டெல்லிக்குப் பக்கத்தில் ஓர் இடத்தில் ஷாஹ் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களுடைய (இடிக்கப்பட்ட) மத்ரஸாவைப் போல் ஒரு மத்ரஸாவைத் திறந்து தியாகம் செய்யும் உலமாக்களை உண்டாக்கும் படி யோசனை தெரிவித்ததின் அடிப்படையிலும் மொளலானா காஸிம் நானூத்தவி (ரஹ்)

1867, மே - 30 ஆம் தேதி தேவ்பந்தின் ஒரு மரத்தடியில் தற்போதைய தாருல் உலூம் கலாசாலையை நிறுவினார்கள். ஆங்கிலேயனை இந்தியாவிலிருந்து வெளியாக்குவதற்கு சமுதாயத்தை தாயாராக்குவதே தேவ்பந்த் மத்ரஸாவின் முக்கிய நோக்கம், என்று என்ஸைக்ளோபேடியா ஆஃப் இஸ்லாம் கூறுகிறது. (முதாலஆ பரேலவிய்யத்)  1912 -ம் ஆண்டு எகிப்தைச் சார்ந்த அல்லாமா ரஷீத் ரிளா அவர்கள தேவ்பந்த் வந்த போது, பிரமிக்க வைக்கும் உங்களுடைய மார்க்கப் பணிக்கு உலக முஸ்லிம்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள். இந்த மத்ரஸாவை நான் பார்க்க வில்லையானால் இந்தியாவிலிருந்து பெரும் கவலையோடு திரும்பியிருப்பேன், என்று புகழாரம் சூட்டினார்.


ரஹ்மதுல்லாஹ் கீரானவீ (ரஹ்)
இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களை கிருத்தவர்களாக்க திட்டம் தீட்டினர். காவல் துறை உதவியுடன் இஸ்லாமிய கொள்கைகள் மீது பாதிரியார்கள் சேற் வாரி வீசினர். இதையும் இந்திய உலமாக்கள் எதிர்கொண்டு சமாளித்தனர். 1854 ஆம் ஆண்டு கிருத்தவர்களின் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்த முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரஹ்மதுல்லாஹ் கீரானவீ (ரஹ்) பாதிரி ஃபண்டரிடம் விவாதம் நடத்தி மாபெரும் வெற்றி கண்டார்கள். அதாரப்பூர்வமான பதில் கொடுக்க முடியாத நிலையில் ஆங்கிலேயர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி கீரானவீ (ரஹ்) அவர்களை கைது செய்ய முயற்சித்தனர். எனினும் அவர்கள் மக்காவுக்கு தப்பிச் சென்றுவிட்டார்கள்.

அங்கு ஸௌலதிய்யா என்ற மத்ரஸாவை நிறுவினார்கள். இன்றும் ஹரமுக்குப் பக்கத்தில் சிறந்த சேவை செய்கிறது ஸௌலதிய்யா. கீரானவீ (ரஹ்) மக்காவில் இருக்கும் தகவல் அறிந்த கலீஃபா அவர்கள் துருக்கி வரும்படி வேண்டிக்கொண்டார்கள. அவர்களிடம் விவாதத்திலல் நடந்த எல்லா கேள்வி பதில்களையும் தொகுத்துத் தரும்படி கேட்டுக் கொண்டதையடுத்து இள்ஹாருல் ஹக் என்றொரு நூலை எழுதினார்கள். அந்நூல் 1863 ல் இஸ்தாம்புல் நகரில் வெளியிடப்பட்டது. இந்நூலைப் படித்த பல கிருத்தவர்கள் முஸ்லிமானார்கள். அந்நூல் ஆங்கிலத்தில் வெளிவந்த போது, மக்கள் இந்நூலைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தால் உலகில் கிருத்தவம் முன்னேற முடியாது, என்று டைம்ஸ் ஆப் லண்டன் கருத்து வெளியிட்டது.

இல்யாஸ் (ரஹ்):
ஹிஜ்ரி 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்த இல்யாஸ் (ரஹ்) இன்று உலக அளவில் நடைபெற்று வரும் தஃவத் தப்லீகுடைய பணியை துவக்கி வைத்தார்கள். மேவாத் மக்கள் திருட்டிலும் கொள்ளையடிப்பதிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். இந்தத் திருடர்களைப் பயந்து சூரியன் மறைவுக்குப் பின் பெருநகரத்தின் கோட்டைச்சுவர்கள் மூடப்பட்டன. அப்படிப்பட்ட மக்களிடம் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவந்தவர்கள் இல்யாஸ் (ரஹ்) அவர்கள்.

இந்த மாற்றத்திற்கு ஒரு மனிதரைத் தவிர வேறெந்த இயக்கமோ கலாசாலையோ பத்திரிக்கையோ காரணமில்லை, இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் எப்படி தஃவத் நடந்ததோ அது போன்றதொரு முறையில் நடந்தது. அதற்காக பெரிய செலவுகளோ பொருளாதார உதவியோ தேவைப்படவில்லை. அந்த மனிதரின் மூலம் நபித்தோழர்களின் மனஉறுதியை (இறைநம்பிக்கையை) எனக்கு விளங்க முடிந்தது, என்று இல்யாஸ் (ரஹ்) அவர்கள் பற்றி அல்லாமா அலீமியான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (அத்தஃவதுல் இஸ்லாமிய்யா)  

அஹ்மத் பின் இர்ஃபான் (ரஹ்)
ஹிஜ்ரி 13 ம் நூற்றாண்டில் இமாம் அஹ்மத் பின் இர்ஃபான் (ரஹ்) அவர்கள் இந்தியாவில் மிகச்சிறந்த மார்க்க சேவை ஆற்றியிருக்கிறார்கள். அதிகமான பேர் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அவர்களுடைய சீரிய உபதேசத்தினால் கோல்கத்தா போன்ற பெருநகரத்தின் மது விற்பனையே ஆட்டம் கண்டுவிட்டது. மது விற்பனை மந்தமானதால் அரசுக்கு வரி கட்டமுடியாது, என்று மதுவியாபாரிகள் முறையிட்டனர்.
அலீமியான் (ரஹ்) அபுல்ஹஸன் அலீ நத்வீ அவர்களுடைய மார்க்கப்பணியும் சாதாரணமானதல்ல. சர்வதேச அளவில் அவர்களுடைய பணி பல மாற்றங்களை ஏற்படுத்தியது. கடந்த காலத்தில் இஸ்லாத்திற்காக தங்களை அர்ப்பணித்த நல்லோர்களில் சரித்திரத்தை தமக்கே உரிய பாணியில் தெளிவாக சமுதாயத்தின் முன் வைத்தவர்கள் அலீமியான் (ரஹ்) அவர்கள் தான். இக்கட்டுரை கூட பெரும்பாலும் அவர்களுடைய ஆக்கங்களைத் தழுவியே எழுதப்பட்டிருக்கிறது.


துனீஸியா:
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து  துனீஸியா 1957 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. சுதந்திர நாட்டின் முதல் அதிபர் அல்ஹபீப் போர்கீபா. இவர் மேற்கத்தியர்களின் கைப்பாவையாக செயல்பட்டார்.
பலதார மணத்தை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தார். நீதிமன்றத்தின் மூலமே தலாக் - விவாகரத்து செய்ய வேண்டும் என்று சட்டமாக்கினார். பெண்களுடைய பார்தா முறை காற்றில் பறந்தது. அரசவைகளில் அந்நிய ஆண்களையும் பெண்களையும் அருகருகே அமரச் செய்தார். குர்ஆனில் முரண்பாடு இருக்கிறது என்று வாதிட்டார்.முஹம்மது (ஸல்) அவர்கள் அதிகமாக அரேபிய பாலவனங்களில் பயணம் செய்வதால் பயணத்திற்கிடையில் தான் கேட்டு வந்த பொய்யான செய்திகளையே குர்ஆன் என்று கூறினார். முஸ்லிம்கள் முஹம்மது (ஸல்) அவர்களை கடவுளாக ஆக்கிவிட்டனர் (நவூது பில்லாஹ்) 

இவருடைய இந்த கொள்கைகளைப் பற்றி விவாதிப்பதற்காக மதீனா முனவ்வராவிலல் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஏராளமான மூத்த உலமாக்கள் கலந்துகொண்டனர். இந்தியாவிலிருந்து அலீமியான் (ரஹ்) கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. உலமாக்களின் சார்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சிந்தனையாளர் முஸ்லிமாக இருக்க முடியாது, என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. (நூல்: அஸ்ஸிராஃ)


லிபியா:
1969 ஆம் ஆண்டு லிபியாவில் ராணுவப் புரட்சி ஏற்பட்ட போது முஅம்மர் கதாஃபீ அதிபரானார். இவரும் டுனீஸிய அதிபர் போர்கீபாவைப் போல குர்ஆனும் ஹதீஸும் தற்காலத்தின் முன்னேற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாது, என்று கூறி மார்க்கத்தை வணக்க வழிபாடுகளோடு மட்டும் கட்டுப்படுத்த முயன்றார்.  நபிமொழிகளின் நம்பகத் தன்மையிலேயே சந்தேகம் கொண்டார். பல தரப்பட்ட இஸ்லாமிய நாடுகளின் மார்க்க அறிஞர்கள் அடங்கிய ஒரு குழு ராபிததுல் ஆலமில் இஸ்லாமிய்யா சார்பாக கதாஃபியை சந்தித்து நபி மொழிகள் விஷயத்தில் தங்களுடைய கொள்கையை மாற்றிக் கொண்டு பகிரங்கமாக தௌபா (பாவமன்னிப்பு) செய்யுமாறு கூறிய போதும் அதை அவர் ஏற்கவில்லை. (அஸ்ஸிராஃ) டுனீசியாவிலும் லிபியாவிலும் இவர்களின் நிலை என்னவானது? என்பது பற்றி வாசகர்களுக்கு விளக்கத் தேவையில்லை.


தமிழகத்திலும் பாக்கியத்தின் நிறுவனர் அஃலா ஹள்ரத் (ரஹ்) முதற்கொண்டு அல்லாமா கீரனூரி ஹள்ரத், புரசைவாக்கம் நிஜாமுத்தீன் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் வரை தங்களின் இறுதி மூச்சு வரை மார்க்கத்திற்காக அயராது பாடுபட்டுவிட்டு நிரந்தர ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இன்றும் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் தீனுல் இஸ்லாத்திற்காக ஏராளமானோர் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு பலன் கொடுக்கக் கூடியவை பூமியில் நிலைத்து நிற்கும் (13:17) என்ற இறைவசனத்தின் படி இது யுக முடிவு நாள் வரை தொடரும். (இன்ஷாஅல்லாஹ்)

Saturday, 19 December 2015

வக்ஃபு - சட்டமும் நடப்பும்




வக்ஃபு என்பது ஒரு நிலம் அல்லது கட்டிடத்தை ஏதாவது நல்ல காரியத்திற்காக அர்ப்பணித்து அதன் மூலம் வரும் வருமானத்தை அந்த நல்ல காரியத்திற்காக செலவிடுவதற்கு சொல்லப்படும். அந்த சொத்து அப்படியே இருக்கும். பணத்தை ஏழைகளுக்கு செலவிட்டாலோ அல்லது ஒரு நிலத்தை அனாதைக்கு கொடுத்து விட்டாலோ அத்துடன் அந்த தர்மம் முடிந்துவிடும். பிறகு அந்த அனாதை வயதுக்கு வந்த பின் அந்நிலத்தை விற்கவும் செய்யலாம். அல்லது வேறு யாருக்கும் அன்பளிப்பாகவும் கொடுத்து விடலாம். ஆனால் வக்ஃபு என்பது கியாமத் வரை அசல் அப்படியே இருக்கும். அதன் வருமானத்தை மட்டும் பாத்தியப்பட்டவர்கள் அனுபவிப்பார்கள்.

வக்ஃபின் சிறப்பம்சம்:
உலகுக்கு இந்த வக்ஃப் நமுறையை அறிமுகப்படுத்தியது இஸ்லாத்தின் தனித்தன்மை. மௌட்டீக காலத்தில் அரபுலகில் வக்ஃப் இருந்தாக அறியப்படவில்லை, என்று இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். வக்ஃப் என்ற வார்த்தை நடைமுறையில் உள்ள அர்த்தத்தில் ஆரம்ப காலத்தில் பரவலாக இருக்க வில்லை.

இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் தான் வக்ஃப் என்ற வார்த்தை பரவலாக பயன் பாட்டுக்கு வந்தது. அரபு இலக்கியத்தில் கூட வக்ஃப் என்ற பதம் நடைமுறை அர்த்தத்தில் பயன்பபடுத்தப் படவில்லை. எனவே தான் சில வரலாற்றாசிரியர்கள் வக்ஃபை முதன் முதலில் இஸ்லாம் தான் அறிமுகப்படுத்தியது, என்று கூறுகின்றனர். முற்கால முஸ்லிம்களையும் தற்கால முஸ்லிம்களையும் இணைக்கும் ஒரு பாலமாக வக்ஃப் செயல்படுகிறது. நல்லோர்கள் வழங்கிய நன்கொடைகளை அவர்களின் முகத்தையோ முகவரியையோ அறியாமல் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு விருப்பமானவற்றை செலவழிக்காத வரை நீங்கள் நன்மையை அடைந்திடவே முடியாது, என்று குர்ஆன் கூறும். (3:92). அபூதல்ஹா (ரலி) அவர்கள் பைருஹா என்ற தன்னுடைய தோட்டத்தை அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் ரூமா என்ற கிணற்றை முஸ்லிம்களுக்காக அர்ப்பணித்தார்கள். இது போன்று அதிகமான நபித்தோழர்களும் பின்னர் வந்த நல்லோர்களும் வக்ஃபு செய்துள்ளனர்.


வக்ஃபின் வரலாற்று சாதனை:
வக்ஃபுகளில் மஸ்ஜித்களும் மத்ரஸாக்களும் முதலிடம் பெறுகின்றன. மஸ்ஜித்கள் மூலம் ஒவ்வொரு முஸ்லிமின் இறைக்கடமைகள் நிறைவடைகின்றன. மத்ரஸாக்கள் மார்க்க நிபுணர்களை உருவாக்குகின்றன. இன்று கோடிக்கணக்கில் இஸ்லாமிய நூலகங்களும் சட்ட ஆய்வாளர்களும் நம் சமூகத்திற்கு கிடைத்திருப்பதெல்லாம் இந்த வக்ஃபின் மூலம் உதித்தவர்கள் தான்.

நூலகங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக வரும் ஆய்வாளர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. அவர்களுக்காக சிறப்பு மருத்துவ நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அவ்வப்போது அவர்களுடைய உடல்நலத்தை சோதனை செய்வார்கள். உடல்நலக்குறைவோ சோர்வோ இன்றி முழுமையாக அவர்கள் மார்க்கப்பணியில் ஈடுபடுவதற்காக வக்ஃப் சொத்துக்கள் எவ்விதக்குறைவுமின்றி செம்மையாக செலவு செய்யப்பட்டன. இமாம் கஸ்ஸாலி (ரஹ்) இமாம் நவவீ (ரஹ்) போன்ற மார்ககவல்லுணர்கள் இந்த மத்ரஸாக்களின் மூலமே வெளியானார்க்ள. 

இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் ஒரு மத்ரஸாவை நிறுவி அதற்காக தம்முடைய வீட்டையே வக்ஃப் செய்தார்கள்.  டெமாஸ்கஸ் நகரை சுற்றிப்பார்த்த இப்னு ஜுபைர் அந்நகரில் மட்டும் 400 மத்ரஸாக்கள் வக்ஃப் செய்யப்பட்டிருந்ததாகக் கூறுகிறார். ஷாஃபியீ மத்ஹபுடைய சட்டங்களை போதிக்கக்கூடிய 63 மத்ரஸாக்களும் ஹனஃபீ மத்ஹபுடைய சட்டங்களை போதிக்கக்கூடிய 52 மத்ரஸாக்களும் ஹன்பலீ மத்ஹபை போதிக்கக்கூடிய 11 மத்ரஸாக்களும் ஒரு டெமாஸ்கஸ் நகரில் மட்டும் இருந்திருக்கிறது.


வக்ஃப், மஸ்ஜித் மத்ரஸாவோடு மட்டும் நிற்கவில்லை. வரலாறு நெடுகிலும் வக்ஃபின் பல வகைகளைக் காணலாம். சில வக்ஃபுகள் உலகையே பிரமிக்கச் செய்துவிடும். உதாரணமாக பூனைகளுக்கு உணவளிப்பதற்காக வக்ஃப்; வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்கள் வீட்டுப் பாத்திரங்களை தவறி விழுந்துவிடுவதால் உடைந்துவிடும் போது முதலாளி கோபப்பட்டு பலிவாங்கும் எண்ணத்துடன் அவர்கள் மீது நஷ்டயீடு விதிப்பார்கள். இதற்காக வேலைக்காரர்களுக்கான வக்ஃப் செய்யப்பட்டிருந்தது. உலகில் இது போன்ற வக்ஃபுக்கு நிகராக வேறொன்றைப் பார்க்க முடியாது.

நோயாளிகளுக்காக வக்ஃப் என்பது பெரிய விஷயமல்ல. எனினும் அந்த நோயாளிகளை பராமரிப்பவர்களுக்காகவும் முன்னோர்கள் வக்ஃப் செய்திருக்கிறார்கள். (மௌஜூதா அஹம் ஸமாஜீ மஸாயில் கே ஹல் கேலியே வக்ஃப் கீ அஹ்மிய்யத் அவ்ர் தரீகயெ கார்)  வக்ஃபின் சட்டங்கள்:


உமர் (ரலி) அவர்களின் வக்ஃபின் மூலம் அதற்குரிய சட்டங்களை அறிய முடிகிறது. உமர் (ரலி) அவர்கள் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நபியவர்களிடம் வந்து இப்பொழுது நான் ஒரு நிலத்தைப் பெற்றிருக்கிறேன். இதைவிட விலையுயர்ந்த ஒரு நிலத்தை நான் பெற்றதில்லை. எனவே தங்களது உத்தரவின் படி செயல்படுகிறேன், என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் விரும்பினால் அதன் அடிமனையை தடுத்து வைத்துக்கொண்டு (அதிலிருந்து வரும் லாபத்தை) தர்மம் செய்து விடுங்கள், என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே தர்மம் செய்து விட்டார்கள். இந்நிலம் விற்கப்படக் கூடாது; அன்பளிப்பாக வழங்கடக்கூடாது; வாரிசுரிமை கோரப்படக்கூடாது, என்று கூறி ஏழைகள், உறவினர்கள், அடிமைகள், விருந்தாளிகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்கும் அல்லாஹ்வின் பாதையிலும் செலவிடப்பட வேண்டுமென்று தர்மம் செய்து விட்டர்கள். அந்நிலத்தின் பொறுப்பாளர் நடைமுறையில் அறியப்பட்ட விதத்தில் சாப்பிட்டுக்கொள்ளலாம். நண்பருக்கு உணவளிக்கலாம். ஆனால் அதைக் கொண்டு சொத்து சேகரிப்பவராக இருக்கக் கூடாது, என்று கூறினார்கள். (புகாரி) 

ஒரு பொருளுக்கு சொந்தக்காரர் எப்படிப்பட்ட நல்ல காரியத்தில் செலவு செய்ய அவர் விரும்புகிறாரோ அதில் செலவழித்தால் தான் தனக்கு நிறைவான நன்மை கிடைக்கும், என்று நம்பினால் அதைத் தவிர வேறெதிலும் அது நல்ல காரியமாக இருந்தாலும் செலவு செய்ய மாட்டார். எனவே அவர் வக்ஃப் செய்யும் போது எப்படி செலவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரோ அதில் தான் கடைசி வரை செலவிட வேண்டும். நாமாக ஒரு காரியத்தை இதுவும் நல்ல காரியம் தானே! இதில் செலவு செய்தாலும் வக்ஃப் செய்தவருக்கு நன்மை போய் சேரத்தானே செய்யும், என்று நினைத்துக் கொண்டு நாம் விரும்பியவற்றில் செலவிடக்கூடாது. வாகிஃபின் நிபந்தனை:


வக்ஃப் செய்பவர் குறிப்பிடும் நிபந்தனையை எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே நிறைவேற்றியாக வேண்டும். வாகிஃபின் நிபந்தனை மார்க்கம் விதித்த நிபந்தனையைப் போன்று மதித்து செயல் படுத்த வேண்டும். அவர் விதித்த நிபந்தனை மார்க்கத்திற்கு முரணாக இருந்தால் அதை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை.

வக்ஃபுடைய லாபத்திலிருந்து முதலில் அந்த நிலத்தை அல்லது கட்டிடத்தை செப்பனிடுவதில் மராமத் செய்வதில் செலவிட வேண்டும். வக்ஃப் செய்தவர் அப்படி சொல்லாவிட்டாலும் சரியே. வக்ஃப் செய்யப்பட்ட பொருள் நிலையாக இருந்தால் தான் வக்ஃப் செய்தவரின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும்.   நான் இந்த நிலத்தை அல்லது ஏதாவது அசையாச் சொத்துக்களை மஸ்ஜித் அல்லது மத்ரஸா போன்றதற்காக வக்ஃப் செய்கிறேன், என்று வாயளவில் சொன்னால் மட்டுமே போதுமானது. ரிஜிஸ்டர் செய்தால் தான் வக்ஃப் செய்ததாக ஆகும், என்று கிடையாது. எனவே வாயளவில் வக்ஃப் செய்து விட்டாலும் வக்ஃபுக்குரிய எல்லா கட்டுப்பாடுகளும் சட்டங்களும் அமுலுக்கு வந்து விடும்.

எனினும் பிற்காலத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு வக்ஃப் சொத்துக்கு ஆபத்து வந்து விடக்கூடாது, என்பதற்காக ரிஜிஸ்டர் செய்து கொள்வதே பொருத்தம்னது. அசையாச் சொத்துக்களையே வக்ஃப் செய்ய வேண்டும். வக்ஃப் செய்யப்படும் பொருள் அசையும் சொத்தாக இருந்தால் அது போன்ற பெருட்களை (குர்ஆன், சன்தூக் போன்றவை) வக்ஃப் செய்வது நடைமுறையில் இருந்தால் அவற்றை வக்ஃப் செய்யலாம். நன்மையான காரியத்திற்காகவே வக்ஃப் செய்யப்பட வேண்டும். பாவமான காரியத்திற்காக வக்ஃப் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் அந்த வக்ஃப் செல்லாது. அதன் மூலம் பாவம் நடைபெற்றால் அந்த பாவத்தின் விளைவை அவரும் அனுபவிக்க வேண்டும்.


ஏழைகளுக்காக செல்வந்தருக்காக அனாதைகளுக்காக விதவைகளுக்காக தன்னுடைய சந்ததியினருக்காக என பல விதத்தில் வக்ஃப் செய்யலாம். எனினும் அவர்களில் யாருமே இல்லாமல் போய்விட்டால் இறுதியில் முடிந்து போகாத (ஏழைகளுக்கு செலவிட வேண்டும், என்பது போன்ற) ஒரு நற்காரியத்திற்காக செலவிடப்படுவதை குறிப்பிட வேணடும்.  நிரந்தரமாக காலாகாலத்திற்கு வக்ஃப் செய்ய வேண்டும். ஒரு மாதத்திற்கு மட்டுமோ ஒரு வருடத்திற்கு மட்டுமோ வக்ஃபு செய்ய முடியாது. (அல்ஃபிக்ஹுல் ஹனஃபீ ஃபீ ஸௌபிஹில் ஜதீத்)    

மஸ்ஜித்:
ஒரு இடத்தில் மஸ்ஜித் உருவாக்க்கப்பட்ட பின் அது கியாம நாள் வரை மஸ்ஜிதாகவே இருக்கும். அதை வேறு எதற்காகவும் பயன்படுத்தக்கூடாது. ஒரு தடவை பள்ளிவாசல் என்ற முறையில் தொழுகை நடந்த பிறகு அங்கு ஏதோ ஒரு காரணத்தினால் முஸ்லிம்கள் யாரும் இல்லாமால் போய்விட்டாலும் அந்த இடம் மஸ்ஜிதாகவே இருக்கும். 

மஸ்ஜிதுக்கு அடிக்கல் நாட்டியதால் மட்டுமே அது மஸ்ஜிதாக ஆகிவிடாது. அதில் முறைப்படியாக அதான், இகாமத்துடன் ஜமாஅத் நடைபெற வேண்டும். அல்லது வக்ஃப் செய்பவர் அதற்கான பொது அனுமதியை கட்டிடம் கட்டுவதற்கு முன்னாலேயே வழங்கி இதை எக்காலத்திலும் விற்கவோ அன்பளிப்பாக வழங்குவதோ கூடாது, என்ற வக்ஃபின் வரையறையை குறிப்பிட்டு விட்டால் அந்நேரத்திலிருந்தே அது மஸ்ஜிதாகி விடும். மஸ்ஜிதில் செய்யக்கூடாதவற்றை அவ்விடத்திலும் செய்யக்கூடாது. (ஃபதாவா ஆலம்கீரி - மஹ்மூதிய்யா 14/388)


புதிய மஸ்ஜித் கட்டிக்கொண்டிருக்கும் போது தற்காலிகமாக ஓர் இடத்தில் தொழுது கொண்டிருந்தால் அந்த இடம் மஸ்ஜிதாகாது. (மஹ்மூதிய்யா 14/397)

எந்த இடத்தில் மஸ்ஜித் கட்டப்படுகிறதோ அதன் நிலத்தடியிலிருந்து வானம் வரை மஸ்ஜிதாகவே இருக்கும். தரை தளத்தை தன்னுடைய சொந்த உபயோகத்திற்காக வைத்துக்கொண்டு மேல் மாடியை மட்டும் மஸ்ஜிதாக ஆக்க முடியாது.

ஓர் இடத்தை மஸ்ஜித் என்று முடிவு செய்த பின் அதன் கீழ் மேல் பகுதிகளில் மஸ்ஜித் அல்லாத நோக்கத்திற்காக பயன்படுத்த முடியாது. மஸ்ஜிதின் மேல் மாடியில் ரூம்களை கட்டி வாடகைக்கு விடவும் முடியாது. மேல் மாடியை மஸ்ஜிதாக வைத்துக்கொண்டு தரை தளத்தில் கடைகளை கட்டி வாடகைக்கு விடக்கூடாது.  நிலத்தடியிலிருந்து வானம் வரை உள்ள இடத்தில் மஸ்ஜிதில் செய்யக்கூடாத எந்த காரியத்தையும் செய்யக்கூடாது. எனினும் வக்ஃப் செய்யும் போதே தரைதளத்தில் வருமானத்திற்கான வாடகைக் கடைகளும் மேல் தளத்தில் மஸ்ஜிதும் அமையப் பெறும் என்று முடிவு செய்து அப்படிச் செய்து விட்டால் பரவாயில்லை. (அத்துர்ரு - மஹ்மூதிய்யா 14/329)

மஸ்ஜிதின் பணத்தை யாரிடமாவது வியாபாரத்திற்காகக் கொடுப்பதற்கு முத்தவல்லிக்கு உரிமை கிடையாது. அது அவரிடம் அமானிதமாக இருக்கும் பணம். (ஃபதாவா மஹ்மூதிய்யா) 

வக்ஃப் செய்தவரின் நிபந்தனைகளுக்குட்பட்டு மஸ்ஜித் நிர்வகிக்கப்பட வேண்டும். வக்ஃப் வருமானத்திலிருந்து மின்சார கட்டணம் செலுத்தப்பட்டால் அதை உபயோகிப்பதிலும் வக்ஃப் செய்தவரின் நிபந்தனைகளை கவனத்தில் கொள்ளவேண்டும். அல்லது ஊரின் நடைமுறைக்குத் தோதுவாக அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சில விளக்குகள் இரவு முழுவதும் எரிய வேண்டிய தேவை இருக்கலாம். ஃபிக்ஹ் நூற்களில் இரவு முழுவதும் வக்ஃப் சொத்தலிருந்து விளக்கு எரிக்ககபடக்கூடாது, என்று கூறப்பட்டிருந்தாலும் வக்ஃப் செய்தவர் அப்படி எரிக்கலாம் என்று நிபந்தனையிட்டிருந்தாலோ அல்லது அந்த இடத்தில் அப்படியொரு பழக்கம் இருந்தாலோ இரவில் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாக விளக்கு எரித்துக் கொள்ளலாம், என்றும் கூறப்பட்டுள்ளது. (அல்ஃபதாவல் ஹிந்திய்யா)

வக்ஃப் வருமானத்திலிருந்து செலவிடாமல் சந்தாவின் மூலம் வசூலான பணத்திலிருந்து செலவிட்டால் சந்தா செலுத்தியவர்களின் நோக்கத்திற்குத் தகுந்தவாறு செலவு செய்ய வேண்டும். அல்லது அவர்கள் மஸ்ஜிதின் கமிட்டியை தங்களின் வகீலாக ஆக்கிவிட வேண்டும். அவர்கள் பள்ளிவாசலின் நலனைக் கவனித்து மார்க்க வரம்பிற்குட்பட்டு செலவிட வேண்டும். (நிழாமுல் ஃபதாவா 4-2/16)

பள்ளியின் வருமானத்தை முழுக்க முழுக்க ஹலாலானதாக வைத்திருக்க வேண்டும். கையிருப்பு பணத்தை (தேவ்பபட்டால்) கரண்ட அக்கவுண்டிலேயே வைக்க வேண்டும். சேவிங் அக்கவுண்டில் போட்டு வைக்கக்கூடாது. இதன் மூலம் சில பள்ளிகளுக்கு இலட்சக்கணக்கில் வட்டிப்பணம் சேர்ந்து விடுகிறது. பிறகு அந்த பணத்தை என்ன செய்வது? என்ற கேள்வி எழுகிறது. பொதுவாக ஹராமான பணத்தை அதற்கு உரியவர்களிடம் சேர்த்து விட வேண்டும். முடியவில்லையானால் ஏழைகளுக்கு நன்மையை நாடாமல் கொடுத்து விடவேண்டும். இதே சட்டம் பள்ளிவாசல் பணத்திற்கும் பொருந்தும். மஸ்ஜிதின் கட்டடங்களை பேங்க் நடத்துவது போன்ற பாவமான எந்த காரியத்திற்காகவும் வாடகைக்கு கொடுக்கக் கூடாது. மஸ்ஜிதுடைய அதிகப்படியான கட்டங்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வக்ஃப் வருமானத்தை அதிகப்படுத்த வேண்டுமென்றால் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியங்களுக்காக வாடகைக்கு விடலாம். இதன் மூலம் பிற்காலத்தில் வக்ஃப் சொத்துக்கு எந்தப் பங்கமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அரசு தன்னுடைய ஆகுமான வருமானத்தையும் ஹராமான வருமானத்தையும் கலந்து விட்ட பிறகு மஸ்ஜிதுக்கு பணஉதவி செய்தால் அதைப் பெற்றுக்கொள்வது தவறில்லை. (ஃபதாவா மஹ்மூதிய்யா 14/520)

நோன்புக் கஞ்சிக்காக அரசு அரிசி வழங்கினால் அதை வாங்கி உபயோகிப்பதில் தவறில்லை. அதே சமயம் அரசு கொடுக்கும் அரிசியை வாங்கி வெளியே விற்றுவிட்டு அரசுக்கு தவறான கணக்கு காட்டுவது மோசடி வேலை. இதை ஒரு மஸ்ஜிதுடைய நிர்வாகம் செய்கிறதென்றால் அதை விடக் கேவலம் வேறெதுவுமில்லை.

பள்ளிவாசலில் ஒரு பொருள் அல்லது பணம் விழுந்து கிடக்கிறதென்றால் அதை எடுத்து அதற்குரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு லுக்தா எனும் விழு பொருளை எடுத்ததற்குரிய சட்டத்தின் படியே செயல்பட வேண்டும். அதை பள்ளிவாசல் உண்டியலில் போட்டுவிடக்கூடாது. ஏனெனில் அந்தப் பொருளுக்குரியவர் கிடைக்க வில்லையானால் ஏழைகளுக்கு ஸதகா செய்ய வேண்டும்.   பேங்க் வட்டிப் பணத்தை பள்ளியின் எந்தத் தேவைக்கும் பயன்படுத்தக் கூடாது. கழிவறை கட்டுவதற்கும் பயன்படுத்தக் கூடாது. (நிழாமுல் ஃபதாவா)

கப்ருஸ்தானை பாதுகாப்பதற்காக அதைச்சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்புவதற்குத் தேவையான பொருளாதார வசதி நிர்வாகத்திடம் இல்லையானால் முன் வாடகை என்ற பெயரில் கடைகளை வாடகைக்கு எடுப்பவர்களிடமிருந்து பணம் வாங்கி கப்ருஸ்தானைச் சுற்றிலும் கடைகள் கட்டிக்கொள்ளலாம். கடைகளின் வாசல் கப்ருஸ்தானுக்கு வெளியே இருக்க வேண்டும். கடைகளின் மூலம் வரும் வருமானத்தை கப்ருஸ்தானைப் பாதுகாப்பது மற்றும் அதனுடைய அவசியத் தேவைகளுக்காக செலவிட வேண்டும். கடைகள் கட்டும் போது இன்னும் அடையாளம் இருக்கக் கூடிய கப்ருகள் பாதிக்கப் படக்கூடாது, என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். (அஹம் ஃபிக்ஹி ஃபைஸலே)

கப்ருஸ்தான் அடையாளம் தெரியாத அளவுக்க உக்கிப் போய்விடட்ல் அந்த இடத்தில் விவசாயம் செய்யலாம். அல்லது கட்டடம் கட்டிக் கொள்ளலாம், என்று ஃபிக்ஃ நூற்களில் கூறப்பட்டுள்ளது. (அல்ஃபதாவல் ஹிந்திய்யா)

வக்ஃபை விற்பது:
ஒரு வக்ஃப் சொத்தின் மூலம் ஓரளவுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது. எனினும் அதை விற்று விட்டு வேறொரு இடத்தில் அதுபோன்றதொரு சொத்து வாங்கிவிட்டால் அதை விட அதிகமான வருமானம் வரும் என்றிருந்தாலும் அந்த சொத்தை விற்கக்கூடாது. இது வக்ஃபுகள் வீணாவதற்கே வழிவகுக்கும்.

அதே சமயம் அந்த வக்ஃபுடைய வருமானத்தின் மூலம் அந்த வக்ஃபைக் கூட பராமரிக்க முடியவில்லை. அதற்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் அந்த வக்ஃபை விற்று விட்டு வேறொரு சொத்து வாங்கலாம். வக்ஃப் செய்தவர் உயிருடன் இருந்தால் அவரிடம் அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் பின்வரும் நிபந்தனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. சந்தைவிலையை விடக் குறைவாக விற்கக்கூடாது. பொருளாதார நிபுணர்களால் மதிப்பிட முடியாத அளவுக்கு குறைந்த விலையில் வக்ஃபை விற்கக்கூடாது.

2. வக்ஃப விற்கும் பொறுப்பாளர் தன்னுடைய சொந்தக்காரர்களுக்கோ வேண்டியவர்களுக்ககோ விற்கக்கூடாது. விற்கக்கூடியவர் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டியிருந்தால் அப்படிப்பட்ட நபரிடமும் விற்கக்கூடாது.

3. வக்ஃப் சொத்துக்களை பணத்திற்குப் பகரமாக விற்காமல் நிலம் போன்ற பொருட்களுக்குப் பகரமாக விற்க வேண்டும். ஏதாவது சட்ட நிர்பந்தத்தின் காரணமாகவோ நடைமுறை சாத்தியமில்லாததின் காரணமாகவோ பணத்திற்குப் பகரமாக விற்றுவிட்டால் உடனடியாக அந்த பணத்தின் மூலம் சொத்து வாங்கிவிட வேண்டும். வக்ஃபை விற்பதற்கோ மாற்றம் செய்வதற்கோ வக்ஃப் போர்டுடைய அனுமதி மட்டும் போதுமானதல்ல. மார்க்க நிபந்தனைகளுக்குட்டபட்ட காஜியோ அல்லது வக்ஃபுடைய சட்டங்ககளை நன்கு அறிந்த இயைச்சமுள்ள உலமாக்களும் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம் சட்டவல்லுணர்களைக் கொண்ட வக்ஃப் கமிட்டியோ அனுமதி கொடுக்க வேண்டும். (அஹம் ஃபிக்ஹி ஃபைஸலே) வக்ஃப் அபகரிக்கப் பட்ட வரலாறு:


கி.பி. 17 ம் நூற்றாண்டு வரை இந்தியாவில் மொகலாயர்கள் முழு பலத்துடன் ஆட்சி செய்து கெர்ணடிருந்தனர். எனவே அக்காலத்தில் நாட்டின் மீது அந்நியத் தாக்குதல் எதுவும் நடக்க வில்லை. கி.பி 1705 ஆம் ஆண்டு மன்னர் ஔரங்கசீப் அவர்கள் மரணித்த பின் ஆட்சி பலகீனமடைந்தது. ஆங்கிலேயர்கள் நாட்டில் தடம் பதிக்க ஆரம்பித்தனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது ஆரம்பமாக அவர்கள் இஸ்லாமிய மதச்சட்டங்களில் கை வைக்கவில்லை. பின்னர் அவர்கள் பலம்பெற்றபின் மதச்சட்டங்களிலும் கைவைத்தனர். அதில வக்ஃப் சட்டங்களும் தப்பவில்லை. இஸ்லாத்தில் வக்ஃப் இரண்டு வகையாக உள்ளது.

1. நற்காரியங்களுக்கு பொதுவாக வக்ஃப் செய்வது.

2. சந்ததியினருக்காக வக்ஃப் செய்வது.

ஆங்கிலேய அரசு முதல் வகையை அங்கீகரித்தது. வக்ஃபின் இரண்டாவது வகையை சட்டதிற்கு முரண் என அறிவித்தது. 1838 ஆம் ஆண்டு ஒரு நீதிமன்றம் சந்ததிகளுக்கான வக்ஃப் சட்டத்திற்கு முரணானது, என்று தீர்ப்பளித்தது. 1873 ஆம் ஆண்டு மும்பை ஹை கோர்ட்டும் இது போன்றதொரு தீர்ப்பை வெளியிட்டது. 1894 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஒரு நீதிமன்றம் ஆங்கில மொழியை அடிப்படையாக வைத்து பின்வருமாறு வக்ஃப் பற்றி தீர்ப்பு வழங்கியது: ஆங்கிலத்தில் கைராத் - நன்மையாக காரியம் என்பது ஏழைகளுக்கு வழங்கினால் தான் நல்ல காரியமாக ஆகும். குடும்பத்தினருக்கு வழங்குவதால் அதை நன்மையான காரியம் என்று சொல்ல முடியாது, என்று கூறி சந்ததியினருக்காக செய்யப்பட்ட வக்ஃப் செல்லாது என்று தீர்ப்பு கூறினர். கைராத் (நன்மைகள்) என்ற வார்த்தையை ஆங்கில மொழிக்குத் தோதுவாக விளங்கியே நான் தீர்ப்பு கொடுத்துள்ளேன், என்று நீதிபதி பிடிவாதமாகக் கூறினார்.  இந்த தீர்ப்பின் காரணமாக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. (நூல்: இஸ்லாம் கா கானூனெ வக்ஃப்)

இன்றும் வக்ஃப் சொத்துக்கள் அபகரிக்கப் படுகின்றன. அல்லது வீணாக்கப் படுகின்றன. முன்னால் வக்ஃப் சேர்மன் ஒருவர், 80000 கோடி வக்ப் சொத்து பணமுதலைகளால் திண்ணப்படுகிறது, என்று கூறிய தகவலை இணையத்தில் பார்க்க முடியும். சமீபத்தில் டெல்லியில் நடந்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் தேசியக் கருத்தரங்கில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் புதிய வக்ஃப் திருத்த மசோதா விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், என்று பேசியுள்ளார்.

போபாலில நடைபெற்ற அனைத்து மாநில வக்பு வாரியங்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பேசும்போது, நாடு முழுவதும் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வக்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன.

சில மாநிலங்களில் வக்பு நிலங்கள் குறித்த விபரங்கள் பாதுகாப்பாக வைக்கப் படவில்லை. இதனால் வக்பு சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்துவது தொடந்து கொண்டிருக்கிறதுஎன்று கூறினார். வலுவான வக்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும், என்று பீகார் அமைச்சரும் கூறியுள்ளார் (பள்ளிவாசல் டுடே- 24-30.6.2012; 17-23.6.2012).

பேசிக்கொண்டே இருக்காமல் விரைந்து செயல் பட்டு வக்ஃபு சொத்துக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் நல்லது. பொதுச் சொத்துக்கள் சொந்த சொத்துக்களைப் போல் உபயோகப் படுத்தப் படுகின்றன. பல இடங்களில் வக்ஃபு சொத்துக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது. அது செலவாக வேண்டிய இடமே இல்லாததால் அவற்றை சம்மந்தப்பட்டவர்கள் அபகரித்துக்கொள்கிறார்கள். நிச்சயமாக சில மனிதர்கள் அல்லாஹ்வுடைய செல்வதத்தில் தலையிடுகிறார்கள். (அதைச் சாப்பிடுகிறாகள்.) கியாம நாளில் அவர்களுக்கு நரகம் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள். (புகாரி)