Tuesday, 7 April 2015

பெற்றோர்களே பிள்ளைகளின் எதிர்காலம்




மறுமை நாள் நெருங்கிவிட்டால் மனிதனுக்கு தன்னுடைய பிள்ளையை வளர்ப்பதை விட நாய்க் குட்டியை வளர்ப்பது நல்லதாகத் தெரியும் என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள. (ஹாகிம் - 3/386)

ஏறக் குறைய இன்று அதே நிலை தான் உள்ளது. பிள்ளைகளை ஒழுக்க சீலர்களாக ஆக்குவதற்காக பெற்றோர் படாதபாடு படுகின்றனர். குழந்தை பிற்நது விட்டால் முதலாவதாக குழந்தையின் வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் சொல்வது நபிவழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்கள்கள் பிறந்த சமயம் வலது காதில் அதானும்  இடது காதில் இகாமத்தும் சொன்னார்கள். (அல்பைஹகீ)

அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடாது. அவனை வணங்க வேண்டும். பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும், என பல விஷயங்களை லுக்மான (அலை) அவர்கள் தனது மகனுக்கு கற்றுக் கொடுத்தார்கள். தந்தையின் உபதேசத்தைக் கேட்டு அதன்படியே நடந்ததாகவும் வரலாறு. (தஃப்ஸீருல் ஜமல்)

விபச்சார சிந்தனை கூட இல்லாத ஒரு சூழலை உருவாக்குவதற்குத் தேவையான வழிகாட்டு நெறிகள் அனைத்தும் சொல்லப்பட்டுள்ளன. பிள்ளைக்ள வயதுக்கு வருவதற்கு முன்னரே வாழ்க்கையைப் பாழடிக்கக்கூடிய பாலியல் சிந்தனை தூண்டப்படாமல் இருபபதற்காக குர்ஆன் பின்வருமாறு போதிக்கிறது.:
இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுடைய அடிமைகளான ஆண்களும் பெண்களும் பருவ வயதை அடையாத உங்கள் சிறுவர்களும் உங்களிடம் வருவதற்கு மூன்று நேரங்களில் அனுமதி பெற்றுக் கொள்ளட்டும். ஃபஜ்ர் தொழுகைக்கு முன், மதிய வேளையில் நீஙகள் உங்கள் ஆடைகளை களைந்திருக்கும் போது இஷா தொழுகைக்குப் பின்னர் ஆகிய இம்மூன்று நேரங்களும் நீங்கள் மறைவாக இருக்க வேண்டிய நேரங்கள். (அல்குர்ஆன் - 24:58)

பெற்றோர் தனிமையில் இருக்கும் போது பிள்ளைகள் படுக்கையறைக்கு வந்துவிட்டால் தாங்கள் கண்டதை பிறரிடம் சொல்லிக்காட்டும் என்பது மட்டுமல்ல, அவர்களுடைய உள்ளங்களில் தவறான எண்ணங்களை விதைத்துவிடும். வீட்டுப் பிள்ளைகளுக்குக் கூட இது போன்ற உயரிய பண்பாட்டைப் போதிப்பது குர்ஆன் மட்டுமே!

படுக்கையைத் தனியாக்குங்கள்:
உங்களுடைய பிள்ளைகள் ஏழு வயதை அடைந்து விட்டால் தொழுமாறு ஏவுங்கள். பத்து வயதை அடைந்து(ம் தொழா)விட்டால் அவர்களை தொழச் சொல்லி அடியுங்கள். அவர்களுடைய படுக்கையை பிரித்து விடுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். (அபூதாவூத்)

தொழுகைக் கல்வி:
நபி (ஸல்) அவர்கள் எப்படி தொழுகிறார்கள்?, என்று பார்த்து அறிவதற்காகவே நபித்தோழர்கள் நீண்ட பயணம் செய்து மதீனா வந்திருக்கிறார்கள். வாயிலுப்னு ஹுஜுர் (ரலி) அவர்கள் யமன் தேசத்திலிருந்து வரும்போதே நபி (ஸல்) அவர்கள் தொழும் முறையை நன்கு கவனித்து பார்ப்பேன், என்று முடிவு செய்திருந்தார்கள். (திர்மிதீ)

நபியவர்களின் தொழுகையைப் பற்றி தங்களுக்கு மத்தியில் நபித்தோழர்கள் பேசிக் கொண்டவை தான் இன்று நம்முன் காட்சியளிக்கின்றன.

ஒரு தடவை பத்து நபித்தோழர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடினர். அப்பொழுது அபூகதாதா (ரலி) அவர்கள் நபியவர்களின் தொழுகையைப் பற்றி உங்களை விட எனக்கு நன்கு தெரியும், என்று கூறுகிறார்கள். அதற்கு மற்றவர்கள் நீங்கள் நபியவர்களிடம் எங்களை விட முந்நி வந்தவருமில்லை. நபியவர்களோடு எங்களைவிட அதிகமாக சேர்ந்திருக்கவுமில்லை. பிறகெப்படி அழகிய முறையில் அறிந்திருக்க முடியும்? என்று கேட்டனர்.

அதற்கவர் ஆம் உண்மைதான், என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப்பற்றி நிறைவாகவும் சிறப்பாகவும் எடுத்துக் கூறினார். (திர்மிதீ)

இன்று நமக்கு மத்தியில் தொழுகை முறைகளைப் பற்றி பேசிக் கொள்வதற்கு எங்கே நேரம் கிடைக்கிறது? இஸ்லாத்தின் முக்கியக் கடமை பற்றி முழுமையாகக் கற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் நபி (ஸல்) அவர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள்.

எனவே தான் என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அப்படியே தொழுங்கள்!, என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் (தொழுகை முறைகளை நன்கு புரிந்து கிரகிக்கக் கூடிய) விளக்கமுள்ளவர்கள் எனக்குப் பக்கத்தில் (முதல் வரிசையில்) நிற்க வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். (திர்மிதீ)

குழந்தையை நல்லவனாகவும் தீயவனாகவும் மாற்றுவது பெற்றவர்களே! குழந்தையின் தொடக்கப்பள்ளி தாயுடைய மடி தான், என அலி (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் நூலைப் போல சேலை. தாயைப் போல பிள்ளை என்றும் தொட்டில் பழக்கம் சுடுகாடு முட்டும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்றெல்லாம் பழமொழிகள் உள்ளன.

இதே போன்று குழந்தையை மனிதப் புனிதனாக ஆக்கிய பெற்றோர்களும் இருக்கின்றனர். குழந்தையை மனிதகுலத்தின் அணுகுண்டுகளாக மாற்றிய பெற்றோர்களும் உண்டு.

ஒரு பெண்ணை அவளுடைய செல்வத்துக்காகவும் கோத்திர உயர்வுக்காகவும் அவளுடைய அழகுக்காகவும் அவளுடைய மார்க்கப் பற்றுக்காகவும் ஒரு பெண் திருமணம் முடிக்கப்படுகிறாள். எனவே, நீங்கள் மார்க்கப் பற்றுள்ள பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

மார்க்கப்பற்றுள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் அந்தப் பெண்மூலம் இவருக்கு கண்குளிர்ச்சி ஏற்படும். அவள் தனது கணவருடைய பொருளை பாதுகாப்பாள். குழந்தைகளுக்கு ஒழுக்கம் கற்பித்துக் கொடுப்பாள். தனது சொல், செயல் மூலம் முன்மாதிரியாக இருபபாள். குர்ஆன் மற்றும் நபிவழியை குழந்தைக்கு போதிப்பாள். ஹலால் ஹராம் பற்றி கற்றுக்கொடுப்பாள்.

நபி (ஸல்) மற்றும் நபித்தோழர்களின் தியாக வரலாற்றை அறியச் செய்வாள். எனவே, யார் தன்னுடைய பிள்ளைகள் நற்குண சீலர்களாக திகழ வேண்டும், என்று விரும்புகிறாரோ அவர் மார்க்கப்பற்றுள்ள ஸாலிஹான பெண்மணியை திருமணம் செய்து கொள்ள வேண்டும். 

மணப்பெண் கல்யாண பத்திரிக்கையில் மட்டும் தீன்குலச் செல்வியாக இருக்கக் கூடாது. வாழ்க்கை முழுவதும் தீன் மணம் கமழ வேண்டும்.

இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களுடைய தாயார் தனது மடியில் குழந்தை பால் குடிக்கும் போதும் தூங்கும் போதும் பேசும்போதும் எல்லா நிலையிலும் குர்ஆனைக் கற்றுக்கொடுத்தார்கள். இமாமவர்கள் பெரியவர் ஆனதும் ஏழு வயதிலேயே குர்ஆனை மனனமாக ஓதுபவர்களாக மாறிவிட்டார்கள்.

இது எப்படி சாத்தியமானது? குழந்தையை வளர்த்த தாயின் மும்முரமான முயற்சி என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? அவ்வாறே இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தங்களுடைய தாயிடமிருந்து குர்ஆனைக் கற்றுக் கொண்டார்கள், என்று வரலாறு கூறுகின்றது. (அஹ்வாலுத் தாபியீன்)


தாய் மார்க்க விரும்பியாக இருக்கும் போது குழந்தையையும் மார்க்க தண்ணீர் ஊற்றி வளர்க்கிறாள். தாய் மார்க்கத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாதவளாக இருந்தால் குழந்தையும் காலப்போக்கில் அதே நிலைக்கு ஆளாகவிடுகிறது.

நூஹ (அலை) அவர்களுடைய மனைவியைப் பார்த்து அவருடைய குழந்தையும் காஃபிராக மாறியுள்ளார். (இப்னு கதீர்) ஆனால் பிறக்கும் போது தந்தையை இழந்து பிறந்து தன்னுடைய ஆறாவது/ ஏழாவது வயதில் தாயையும் இழந்த நபி (ஸல்) அவர்கள் மனித சமுதாயத்திற்கே முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள், என்றால் அது அல்லாஹ்வுடைய கருணை என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இஸ்லாம் கூறும் நுகர்வோர் உரிமைகள்




மார்ச் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் தினம். டிசம்பர் 24 ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம்.
ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்ட தினங்களை அறிவித்து அதன் மூலம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டுமென்பதே நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. எனினும் வருடத்தில் அந்த ஒரு தினத்தில் மட்டும் அது தொடர்பாக விழாக்கள் நடத்துவதால் மட்டும் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது.

பொருட்களைத் தயாரிப்பவர்கள் உற்பத்தியாளர்கள். அவற்றை வாங்கி பயன்படுத்துபவர்கள், நுகர்வோர்கள் ஆவர். நாம் வாழ்நாள் முழுவதும் நுகர்வோர்களாக இருக்கிறோம். உணவு, மருந்து, துணி, வீட்டு உபயோகப் பொருட்கள், தொலைபேசி வசதி, மருத்துவ சேவை போன்ற பல சேவைகளைப் பெறுகிறோம். 

இதில் எடை குறைப்பு, கலப்படம், உரிய பில் வழங்காமை, போலியான கம்பெனி இப்படி நுகர்வோரின் உரிமை மீறல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சந்தையில் எந்த சரக்கை வாங்கினாலும் எந்த சேவையை பெற்றாலும் இது நிஜமா? போலியா? என்ற பயம் உள்ளத்தை ஆட்கொண்டு விடுகிறது.

1986 ஆம் ஆண்டு வரை வாங்குவோரே உஷார் என்ற தத்துவத்தின் கீழ் தான் விற்பனைச் சட்டம் அமைந்திருந்தது. ஒரு பொருளை விற்றுவிட்டால் விற்பவரின் கடமை முடிந்து விடுகிறது. அப்பொருள் எப்படியிருந்தாலும் அது வாங்குபவரின் தலையெழுத்து. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

1973 ல் மட்டும் உணவுக்கலப்படத்தால் 1063 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. 1980 ல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்று அந்தச் சட்டமும் நீதிமன்றமும் பாமரமக்களின் கைக்கு எட்டாத உயரத்தில் உள்ளது.

நுகர்வோர் தொடர்பான எல்லாத் துறைகளிலும் மோசடிகளே மேலோங்கியுள்ளன. இஸ்லாம் நுகர்வோர் தொடர்பான சட்டங்களை மட்டுமல்ல. அவற்றை நடைமுறைப்படுத்தக் கூடிய சமுதாயத்தையும் உருவாக்கியது. மறுமை நாள் பயத்தையும் நல்லுபதேசத்தையும் நல்கி மனிதனுக்குள்ளே புதைந்து விட்ட நியாய உணர்வை உசுப்பி விட்டது.

நுகர்வோர் தொடர்பான இஸ்லாத்தின் போதனையும் அதை இகழ்வோருக்கு இஸ்லாம் கொடுத்த வேதனையும் அலாதியானது. நேர்மையான உண்மையான வியாபாரிகள் - நபிமார்கள், உண்மையாளர்கள், ஷுஹதாக்களோடு இருப்பார்கள், என்றும் நபி (ஸல்) கூறினார்கள்.

இதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பிற்கு இஸ்லாம் கொடுத்த முன்னுரிமையை விளங்க முடிகிறது. இஸ்லாம் நுகர்வோர் உரிமைகளை பலவாறாகப் பட்டியல் போடுகிறுத. அவற்றை வியாபாரிகள் குறிப்பாக இஸ்லாமிய வியாபாரிகள் கவனத்தில் வைத்தால் உலகிற்கு நாம் தான் முன்மாதிரி சமுதாயம் என்பதை நிரூபிக்க முடியும்.

1. நேர்மை:
நேர்மையான முறையில் அளவை நிறுவையை முழுமையாக நிறைவேற்றுங்கள். (அல்குர்ஆன் - 6:152)    நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த சமயம், மக்கள் நிறுவை, அளவையில் மோசடி செய்ததை கண்டார்கள். அப்போது அல்லாஹுத்தஆலா (அளவை, நிறுவையில்) மோசடி செய்வோருக்கு நாசம் தான், என்ற வசனத்தை இறக்கி வைத்தான். உடனே மக்களும் திருந்தி நேர்மையாக நடந்து கொண்டார்கள், என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (இப்னுமாஜா)

நபித்தோழர்களுக்கு ஒரு இறைவசனம் அவர்களுடைய நீண்ட கால நடைமுறைகளையும் சரிசெய்வதற்குப் போதுமானதாக இருந்தது. இறைவனுக்கு இணை வைத்தவர்கள் இதற்கு முன்னர் அழித்தொழிக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஆனால் அவர்களில் ஷுஜப் (அலை) அவர்களின் சமுதாயத்தினர் அளவை, நிறுவையில் மோசடி செய்ததையும் அவர்களின் அழிவுக்குக் காரணமாகக் கூறுகிறது, அல்குர்ஆன்.(அளப்பதும் நிறுப்பதும் சாதாரண வேலையில்லை) அவ்விரண்டிலும் அநியாயம் செய்ததின் காரணமாக பல முற்கால சமுதாயத்தினர்கள் இறைவேதனையின் மூலம் நாசமாக்கப் பட்டிருக்கிறார்கள். (எனவே, நீங்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்) என்று அளவை, நிறுவை வேலையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இன்றைய அகராதியில் மக்களை ஏமாற்றி தன் சரக்கை தள்ளிவிடுபவன் தான் திறமையான வியாபாரி. நாம் வாங்கக் கூடிய ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஒரு எடை போடப்பட்டிருக்கும். ஆனால், நிறுத்துப்பார்த்தால் குறைவாக இருக்கும்.

குறைவது, இரண்டு கிராமாகக் கூட இருக்கலாம். ஆனால், அதன் மூலம் அந்நிறுவனம் பெரும் லாபத்தை ஈட்டுகிறது. 50 கிராம் காபிபொடி பாக்கெட்டில் 2.6 கிராம் குறைவாக கொடுத்து மூன்றே வருடத்தில் மூன்று கோடி ரூபாய் அநியாயமாக சம்பாதித்த நிறுவனங்களும் இருக்கின்றன. 

2. கலப்படம் கூடாது:
நபி (ஸல்) அவர்கள் கடைவீதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு தானியக் குவியலில் கையை நுழைத்துப் பார்த்தார்கள். உள்ளே ஈரமான தானியம் இருந்தது. உரிமையாளரிடம் விசாரித்த போது மழையின் காரணமாக ஈராமாகிவிட்டது, என்று கூறினார். ஈராமான தானியத்தை மேலே வைத்திருக்கலாமே! என்று கூறிவிட்டு, ஏமாற்று வேலை செய்பவர் என்னைச் சார்ந்தவர் அல்ல, என்று கூறினார்கள். (முஸ்லிம் - 147)


இங்கு வியாபாரி தானியத்தை தானாக ஈராமாக்கவில்லை. அப்படியிருந்தும் கூட கடுமையான வார்த்தை கொண்டு எச்சரித்துச் சென்றார்கள். அப்படியானால் இன்று நடக்கக் கூடிய கலப்படங்கள் முஸ்லிம் வியாபாரிகளை இஸ்லாத்திலிருந்து வெளியாக்காமல் இருக்குமென்பதற்கு என்ன உத்தரவாதம்

நவீன கால கலப்படம்:
ஒரு நேரம் வரை அரிசியில் கல்லைக் கலப்பது, பாலில் தண்ணீரைக் கலப்பது, ஆட்டிறைச்சியில் மாட்டிறைச்சியைக் கலப்பது தான் அதிகபட்ச கலப்படமாக இருந்தது. ஆனால் சமீப காலமாக வித்தியாசமான கலப்படதைக் கையாள ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாலில் ஜவ்வரிசியை கட்டிப்போட்டு விடுவர். இதனால் பால் கெட்டியாகி விடும். டீத்தூளில் முந்திரித் தோள், புளியங்கொட்டைத் தோல் கலக்கப்படுகிறது. இதனால் திடமான டீ கிடைக்கும். இட்லி மாவில் பழைய சோற்றை ஆட்டி கலந்து விற்கின்றனர்.

சில் ஹோட்டல்களில் அரிசியை உலை வைக்கும் போதே சுண்ணாம்பைத் துணியில் கட்டி அரிசியுடன் சேர்த்து கொதிக்க வைப்பர். இதில் வெந்த சோறு விரைப்பாக இருக்கும். அதிகம் சாப்பிட முடியாது. ஹோட்டல் காரர்களுக்கு அரிசி செலவு குறையும்.


3. தீங்கிழைக்கக் கூடாது:
இஸ்லாத்தை பொறுத்த வரை சின்னச் சின்ன சிரமம் கொடுப்பது கூட அவனை இஸ்லாத்தை விட்டுமே வெளியாக்கிவிடும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.  தன்னுடைய கை மற்றும் நாவின் மூலம் (ஏற்படும் தீங்குகளை விட்டும்) சக முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றால் தான் அவர் உண்மை முஸ்லிமாக முடியும், என்று நபி (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.

இந்த நபி மொழியிலிருந்து ஏராளமான சட்டங்களை மார்க்க வல்லுணர்கள் கூறியுள்ளனர். எந்த ஒரு தனி நபரும் மற்றவர்களுடைய ஆரோக்கியத்திற்கு எந்த பங்கமும் ஏற்படுத்தக்கூடாது. (அல்லாஹ்வின் நாட்டப்படி) நோயாளியின் கிருமி மற்றவர்களுக்கு தொற்றும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது.


ஆனால் இன்று உடல் நிலைக்கு மட்டுமல்ல, உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. உணவுக்கலப்படத்தால் உயிரிழப்புகள் ஆயிரக்கணக்கில் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் கூறிக்கொண்டிருக்கின்றன. சில முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை டெல்லியில் உள்ள அரசு சாரா அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம் ஒன்று சோதனை செய்த போது டிரான்ஸ் என்ற கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதனால் மாரடைப்பு, நீரிழிவு போன்ற வியாதிகள் வர வாய்ப்பிருக்கிறது, என்று அந்த சுற்றுச் சூழல் மையம் கூறியுள்ளது. யாரும் யாரையும் ஏமாற்றக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் கொடுக்கல் வாங்கல் பற்றி சிறந்த போதனைகளை உம்மத்துக்கு வழங்கியிருக்கிறார்கள்.

 தனக்கு பிரியப்படுவதையே தன்னுடைய சகோதரனுக்கும் பிரியப்படாத வரை உங்களில் யாரும் (உண்மையான) முஃமின்- விசுவாசியாக முடியாது என்று கூறி ஏமாற்று வேலை ஈமானுக்கே பங்கம் விளைவித்துவிடும், என்பதை உணர்த்தியுள்ளார்கள். (புகாரி) மார்க்கெட் நிலை பற்றி எதுவும் தெரியாதவனை ஏமாற்றுவது வட்டி என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகீ-10706)

4. இருக்கும் குறையை மறைக்கக் கூடாது:
சரக்கில் உள்ள குறைகளை தெளிவாக எடுத்தச் சொல்லிவிட வேண்டும். அதற்குப் பிறகு நுகர்வோரின் இஷ்டம். வாங்கலாம். வாங்காமலும் இருக்கலாம். ஆனால் இன்று குறைகளை மறைத்து விற்பது தான் வியாபாரியின் திறமையாக பேசப்படும் காலம்.

குறைவான வெளிச்சத்தில் சரக்கைக் காட்டி குறையை மறைத்து விடுகிறார்கள். அல்லது ஜவுளிக் கடைகளில் அளவுக்கதிகமான வெளிச்சத்தின் மூலம் துணியின் தரம் மற்றும் கலரின் உண்மைத் தன்மையை மறைத்து விடுகிறார்கள்.


5. போலி உத்தரவாதம் கூடாது:
விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. ஆனால் அவை அனைத்தும் கவர்ச்சிக்காக மிகைப்படுத்தப் பட்டதாகவே இருக்கும். போலியான சரக்கை தரமான சரக்கு என்று சத்தியம் செய்து விற்கிறார்கள் சரக்கும் போலி; சத்தியமும் போலி.

(பொய்) சத்தியம் செய்து வியாபாரம் செய்பவனை அல்லாஹ் தஆலா முகம்  திரும்பி கூட பார்க்க மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (திர்மிதீ) வியாபாரிகள் பாவிகள் ஏனெனில் அவர்கள் பேசுகிறார்கள்; பொய் சொல்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மூன்று பேர் இருக்கிறார்கள். அவர்களை மறுமை நாளில் அல்லாஹ் (கருணைக் கண் கொண்டு) பார்க்கவும் மாட்டான். (நரகை விட்டும் பாதுகாத்து) அவர்களை தூய்மைப் படுத்தவும் மாட்டான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறய போது அல்லாஹ்வின் தூதர் அவர்களே! கைசேதத்திற்குள்ளாகி விட்டார்கள். நஷ்டப்பட்டுப் போனார்கள் அவர்கள் யார்? என்று நபித்தோழர்கள் கேட்டனர்.

1. உபகாரம் செய்து விட்டு சொல்லிக் காட்டுபவர்.
2. கரண்டைக்குக் கீழ் உடை உடுத்துபவர்.
3. பொய் சத்தியம் செய்து சரக்கை தள்ளிவிடுபவர், ஆகிய மூவர் என்று கூறினார்கள் (திர்மிதி - 1132)


6. பதுக்கல் கூடாது:
மக்களுக்கு தேவை இருக்கும் போது சரக்கை விற்காமல் விலை கூடும் வரை பதுக்கி வைப்பது. மக்களுக்கு தேவையான பொருள் கிடைக்காததால் எந்த விலைக்கும் வாங்கத் தயாராகி விடுவார்கள். இந்த பதுக்கலை மார்க்கம் தடை செய்திருக்கிறது.

 பதுக்கல் காரன் சபிக்கப்பட்டவன்; அவன் பாவி, என்று நபியவர்கள் எச்சரித்திருககிறார்கள். நாற்பது நாட்களுக்கு உணவுப் பொருட்களை பதுக்கி வைத்துவிட்டு பிறகு அவற்றை செய்தாலும் அது பதுக்கல் குற்றத்திற்கு பரிகாரமாக முடியாது. (மிஷ்காத் 1/251)


7. வாக்குறுதிகளை நிறைவேற்றுவது:
வியாபாரிகள் நிறைய வாக்குறுதிகள் கொடுப்பார்கள். நுகர்வோர் அவற்றை நம்பியருக்கும் பட்சத்தில் ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும். கியாரண்டி, வாரண்டி கொடுக்கும் போது அதற்குரிய சேவைகளை அந்நிறுவனம் முறையாக அளித்திடல் வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் நபியாக ஆவதற்கு முன் வியாபாரம் செய்திருக்கிறார்கள். அச்சமயம் அப்துல்லாஹ் பின் அபில்ஹம்ஸா (ரலி) அவர்கள் நபியவர்களுடன் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். தன்னுடைய அனுபவத்தை இவ்விதம் கூறுகிறார்கள்: நான் ஒரு தடவை நபி (ஸல்) அவர்களிடம் வியாபார ஒப்பந்தம் செய்தேன். ஒப்பந்தம நிறைவடைவதற்கு முன் இதே வருகிறேன், என்று வாக்குறுதி கொடுத்து விட்டு சென்றுவிட்டேன். பிறகு எதிர்பாராவிதமாக மூன்று நாட்களுக்கு அந்த வாக்குறுதி ஞாபகத்திற்கு வரவில்லை. மூன்று நாட்களுக்குப் பின் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது அதே இடத்தில் எதிர்பார்த்திருப்பதைக் கண்டேன். (அபூதாவூத் - 4344)


இப்படிப்பட்ட உயர்தரமான போதனைகளை மார்க்கம் போதிக்கிறது. தென்னிந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இஸ்லாமிய வியாபாரிகளின் மூலம் தான் இஸ்லாம் பரவியது. இஸ்லாமிய பொருளாதார போதனைகளின் படி நடந்து காட்டிய வியாபாரிகள் முஸ்லிமல்லாதவர்களையும் இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தனர். ஆனால் இன்று அதே போதனைகளின் படி நடப்பது முஸ்லிம்களுக்குக் கூட சிரமமாக இருக்கிறது. அநத போதனைகளின் படி நடந்தால் வியாபாரத்தில் முன்னேற முடியாது, என்று பேசினால் கோளாறு கொள்கையில் இல்லை. மனித சிந்தனை தான் கோளாரு இருக்கிறது, என்றே அர்த்தமாகும்.

சிந்திக்க வைக்கும் சூரியன்



 ஏப்ரல், மே மாதம் வந்து விட்டால் சூரியக்கதிர் செங்குத்தாக நம்மீது விழுவதால் வெப்பம் அதிகமாகிவிடுகிறது. வெப்பத்தைத் தணிப்பதற்கான எல்லா முறைகளையும் கையாளுகிறோம். அவசியம் செய்யவும் வேண்டும். உடல் நலத்தைப் பாதுகாப்பதற்காக உணவு, உடை போன்றவற்றில் வெயிலுக்குத் தோதுவாக மாற்றம் செய்யதுகொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள்) வெப்பம் அதிகமாக இருக்கும் போது ளுஹர் தொழுகையை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். (புகாரி)

சூரிய வெப்பத்தின் கடுமையை நரக வெப்பத்தின் பரவல் என்று கூறி நரகைப் பற்றியும் ஞாபகமூட்டி அல்லாஹ்வின் பக்கம் சிந்தனையை திருப்பி விட்டிருக்கிறார்கள். நயவஞ்சகர்கள், மக்களிடம் கடுமையான வெப்பத்தில் (தபூக்) யுத்தத்திற்கு செல்லாதீர்கள், என்று கூறும் போது நரக வெப்பம் அதைவிடக் கொடுமையானது என்று தௌபா அத்தியாயத்தில் எச்சரிக்கிறான். 

எனவே, வெப்பத்தைக் கொட்டிக் கொண்டிருக்கும் சூரியன் கற்றுத் தரும் பாடத்தையும் படித்தாக வேண்டும். சூரியன் எப்படி அல்லாஹ்வின் வல்லமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது, என்பதை சிந்தித்துணர வேண்டும். அதைப் பற்றி குர்ஆனும் பல இடங்களில் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

எரியும் ஒளி விளக்கு:
அதிக வெப்பமும் ஒளியும் கொண்ட ஒரு விளக்கையும் நாம் ஆக்கினோம். அல்குர்ஆன் - 78:13) இந்த வசனம் சூரியனை அதிக வெப்பம் கொண்டதாகக் கூறுகிறது. நெருப்பாக எரிந்து கொண்டிருக்கும் விளக்கு. பார்ப்பதற்கு வட்டமான ஒளிவிளக்காகக் காட்சயளித்தாலும் அது கொழுந்து விட்டு எரியும் ஒரு நெருப்பு மலை.

பூமியில் ஹைட்ரஜன் குண்டுகளை வெடித்தால் என்ன நிகழுமோ அது சூரியனில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சூரியன் தோன்றியது முதல் அதன் உட்பகுதியில் ஒவ்வொரு வினாடியும் 584 மில்லியன் டன் ஹைட்ரஜன் 580 மில்லியன் டன் ஹீலியமாக மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

எனவே, ஒவ்வொரு வினாடிக்கும் நான்கு டன் பொருட்செரிவை இழக்கிறது. இவ்வாறு இழந்து கொண்டே போனால் ஒரு நாள் இந்த சூரியன் ஒன்றுமில்லாமல் போய்விடும். அதற்கு இன்னும் 500 கோடி ஆண்டுகள் ஆகும், எனக் கருதுகின்றனர்.

சூரியனுடைய மேற்பரப்பில் அதனுடைய வெப்பம் 6000 டிகிரி சென்டிகிரேட். அதன் உட்பகுதியோ இரண்டு கோடி டிகிரி சென்டிகிரேட் ஆகும். இவ்வளவு வெப்பம் கொண்ட சூரியன் நேரடியாக முழு வெப்பத்தையும் அப்படியே அள்ளிக்கொட்டினால் ஒரு வினாடி கூட நாம் இந்த பூமியில் உயிர் வாழமுடியாது. சூரிய வெப்பத்தை 200 கோடியாக பிரித்தால் அதில் ஒரு பகுதி மட்டுமே பூமியை வந்தடைகிறது.


அபாயகரமான கதிர்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்காக நம்மைச்சுற்றியுள்ள வளிமண்டலம் - ஓசோன் படலம் மூலம் வெப்பம் வடிகட்டப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் வெயிலை திட்டாமல் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.  

இரவும் அவர்களுக்கோர் அடையாளச் சின்னமே. அதிலிருந்து பகலை உறித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில மூழ்கி விடுகிறார்கள். சூரியன் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலைக்களத்தை நோக்கி விரைந்தோடுகிறது. அது, அறிந்த - மேலோங்கியவனின் நிர்ணய ஏற்பாடு.  (அல்குர்ஆன் - 36:3738)


குர்ஆன் இறக்கப்பட்டதன் நோக்கம், மக்கள் நேர்வழி - ஹிதாயத் பெறவேண்டும், என்பது மட்டுமே! விஞ்ஞானம், மருத்துவம், போன்றவற்றின் கொள்கைகளை அறிவிப்பது முழுமுதல் நோக்கமல்ல. எனவே, கால ஓட்டத்தில் மாறிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு விஞ்ஞானக் கருத்தையும் குர்ஆனில் தேடிக் கொண்டிருப்பதற்கு குர்ஆன் ஒன்றும் அறிவியல் நூலல்ல.

எனினும், அல்லாஹ் ஒருவன். குர்ஆன் அவனால் இறக்கி வைக்ப்பட்டது. மறுமை வாழ்க்கை நிச்சயம் போன்ற கொள்கைகளை உண்மையென நிரூபிப்பதற்கு இந்தப் பிரபஞ்சத்தில் பரவிக்கிடக்கும் படைப்புகளை ஆதாரமாகக் கூறுகிறான். இந்த வேதம் கியாம நாள் வரை வரும் மக்களுக்கு வழிகாட்டி என்பதால் குர்ஆனில் கூறப்படும் விஞ்ஞான (நவீன) கருத்துக்கள் அக்காலத்தவர்களும் விளங்கிக்கொள்ளும் படியான வாசகங்களாகவே அமைந்திருக்கும்.


பூமி உருண்டையில் இரவின் பவனி:
நாம் ஒவ்வொரு நாளும் இரவைப் பார்க்கிறோம். சூரியன் மறைகிறது. உடனடியாக நம் கண்ணுக்கெட்டிய தூரம் முழுவதும் இருளாகி விடுகிறது. இதனால், உலகமே இருண்டு விட்டதாகவே கருதுகிறோம். ஆனால், உண்மை அவ்வாறல்ல. உலகின் மறுபகுதி பகலாகவே இருக்கிறது. இந்த உண்மையை குர்ஆன் சூசகமாக தெளிவு படுத்துகிறது.

இவ்வசனத்தில் பயன் படுத்தப்பட்ட நஸ்லகு என்ற பதம் ஆட்டின் தோலை உறிப்பதற்கும் பாம்பு சட்டை கழட்டுவதற்கும் சொல்லப்படும். தோலை உறிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சதைப்பகுதி வெளிப்பட்டுக் கொணடே வரும். அப்படியானால் ஏனைய பகுதிகள் பகலாகவே இருக்கும்.

வசனத்தின் இறுதியில் ஃபயிதா ஹும் முள்லிமூன் பகலை கழட்டிய உடன் அவர்கள் இருளில் மூழ்கிவிடுகிறார்கள் என்று தான் கூறப்படுகிறதே தவிர முழு பூமியும் இருண்டு விடுகிறது, என்று கூறவில்லை. பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் இரவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இது உலக முடிவு நாள் வரை தொடரும் அல்லாஹ் பூமியை சுற்றவைத்துக் கொண்டே இருக்கிறான். இதனால், பகல் நேரம் முடிந்து இரவு நேரம் வந்து கொண்டே இருக்கிறது.

பூமி தட்டையா? பூமி தட்டையாக இருந்தால் ஒரே நேரத்தில் ஒரு பகுதி பகலாகவும் மறுபகுதி இரவாகவும இருக்க வாய்ப்பில்லை. எனவே, இவ்வசனம் பூமி உருண்டை என்பதை பறைசாற்றுகிறது. 

சூரிய ஓட்டங்கள்:
வஷ்ஷம்சு தஜ்ரீ சூரியன் ஓடுகிறது, என்ற வாசகத்திலிருந்து கிழக்கிலிருந்து மேற்காக ஓடும் வெளிப்படையான ஓட்டத்தையே ஆரம்ப காலத்தில் விளங்கப்பட்டது. தவிர, நீண்ட காலமாக, சூரியன் இயங்கவில்லை. ஒரே இடத்திலேயே இருக்கிறது, என்றே விஞ்ஞானிகள் கருதி வந்தனர்.

பிற்கால விஞ்ஞான வளர்ச்சியால், சூரியன் 30 நாளைக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுகிறது, என்றும் வினாடிக்கு 20 கி.மீ. மற்றும் 206 கி.மீ. என்ற வேகத்தில் இரு வேறு இயக்கத்தோடு சூரியன் பறந்து கொண்டிருக்கிறது, என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, சூரியன் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்த நம்முடைய கேலக்ஸி - பால்வழிமண்டலம் (மில்கீவே) வினாடிக்கு 980 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் விண்வெளியில் பாய்ந்து கொண்டிருக்கிறது.

குர்ஆன் பயன்படுத்திய தஜ்ரீ என்ற வார்த்தை சாதாரண ஓட்டமல்ல, விரைந்தோடும் பலத்த ஓட்டத்திற்கே சொல்லப்படும். இதன் மூலம் குர்ஆனுடைய உண்மைத்துவமும் புனிதத்துவமும் பளிச்சிடுகிறது.


சூரிய இலக்கு:

லிமுஸ்தகர்ரின் லஹா - என்ற வாசகத்தில் உள்ள முஸ்தகர் என்பது, ஒரு பொருள் இயன்ற வரை இயங்கி ஒரு நேரத்தில் - ஒரு இடத்தில் தன் இயக்கத்தை முடித்துகொண்டு நிலைபெறும் இடத்தையோ அல்லது காலத்தையோ குறிக்கும்.

அப்படியானால் சூரியனின் இலக்கு எது? எந்த நேரத்தில் எந்த இடத்தில் தன் இயக்கத்தை முடித்துக் கொள்கிறது? வெளிப்படையாகப் பார்த்தால் காலையிலிருந்து மாலை வரை இயங்குகிறது. பிறகு மேற்கே அஸ்தமிக்கிறது. ஆனல், உண்மையில் மாலை நேரத்தோடு சூரிய இயக்கம் முடிவடைவதில்லை, என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சூரியன் படைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை ஆகாயத்தில் பறந்தோடிக் கொண்டிருக்கிறது. இன்ஷாஅல்லாஹ் கியாமத் நாள் வரை இந்தப் பேரோட்டம் தொடரும். இக்கருத்தை முற்கால முஃபஸ்ஸிரீன்களும் கூறியுள்ளனர். இப்னு அப்பாஸ் (ரலி) இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் லா முஸ்தகர்ர லஹா (அதற்கு ஓய்வோ அமைதியோ கிடையாது. இரவு பகலாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும்.) என்று ஓதியிருக்கிறார்கள்.

சூரியனையும சந்திரனையும் (முறைப்படி தத்தம் வழிகளில் தொடர்ந்து) அவ்விரண்டும் சென்று கொண்டேயிருக்க அவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். என்ற வசனமும் இந்த கருத்தை உறுதிப்படுத்துகிறது. (14:33)

 சூரியன் ஸஜ்தா செய்கிறதா?:

ஒவ்வொரு நாளும் சூரியன் அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் ஸஜ்தா செய்கிறது. மீண்டும் உதயமாவதற்கு அனுமதி கேட்கிறது, என்ற கருத்தில் ஹதீஸ் வந்துள்ளது. ஆனால், விஞ்ஞான ரீதியாக அப்படியொன்றும் நடப்பதாகத் தெரியவில்லையே!, என்று தோன்றலாம். சூரியன் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் பேசும்போது விஞ்ஞானக் கொள்கைகளை விளக்கும் நோக்கத்தில் பேசுவது கிடையாது. அல்லாஹ்வின் பக்கம் கவனத்தை திருப்பும் பேச்சாகவே இருக்கும். சூரியன் மறையும் போது மனிதனுடைய பார்வையில் உலகமே இருட்டாகி விடுகிறது. உதயமாகும் போது உலகமே வெளிச்சமாகி விடுகிறது.

உலகில் பெரும் மாற்றம் ஏற்படும் இந்நிலையை நபியவர்கள் மனிதன் அல்லாஹ்வுடைய வல்லமையை விளங்கி அல்லாஹ்வுக்கு கட்டுப்பட வேண்டுமென்ற நோக்கில் சூரியனுடைய நிலையை வர்ணிக்கிறார்கள்.

சூரியனே அல்லாஹ்வுடைய கட்டளைக்கு கட்டுப்படும் போது மனிதன் ஏன்? அப்படியிருக்கக்கூடாது?, என்று சிந்திக்க வைக்கிறார்கள். சந்திரன் வளர்வது தேய்வது பற்றி மக்கள் கேட்ட போது கூட விஞ்ஞான உண்மையைப் பற்றிச் சொல்லாமல் அது மக்களுக்கு ஹஜ் போன்ற வணக்கம் உட்பட மக்களுக்கு காலம்காட்டியாக இருக்கிறது, என்று தான் அல்லாஹ் பதில் கூறினான். எனினும் குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்ட எந்தக் கருத்தும் உறுதியான உண்மையான விஞ்ஞானக் கோட்பாடுகளுக்கு முரணாக இருக்காது.

சூரியன் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியதும் நவீன அறிவியலுக்கு முரணானதல்ல. ஏனெனில் அல்லாஹ்வுடைய அர்ஷ், வானங்களிலும் பூமியிலும் விசாலமாக பரவியிருக்கிறது. எனவே, சூரியன் ஒவ்வொரு வினாடியும் அர்ஷின் கீழ் தான் இருக்கிறது. அவ்வாறே சூரியன் ஒவ்வொரு வினாடியும் ஒரு இடத்தில் உதயமாகி மற்றொரு இடத்தில் மறைந்து கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வினாடியும் அல்லாஹ்விடம் அனுமதி கேட்டு உதயமாகிக் கொண்டிருக்கிறது. மறைந்து கொண்டிருக்கிறது. சூரியன் சுற்றி முடிந்து கடைசியாக நிலைபெறும் இடம் எதுவாக இருக்கும்? என்ற கேள்விக்கு உறுதியான பதிலை யாரும் சொல்ல முடியாது.

நம்முடைய சூரியன் வீகா என்ற நட்சத்திரத்தை நோக்கி வினாடிக்கு 20 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. வீகா தான் சூரியனின் நிலைக்களமாக இருக்கும், என்று கூறப்படுகிறது. உண்மையிலேயே வீகா தான் நிலைக்களம் என்றால் இரண்டுக்குமிடையில் உள்ள தூரம், சூரியனுடைய வேகம் இவற்றை வைத்து உலக அழிவு நாளை கணக்கு போடலாம்.

இது தான் நிலைக்களம், என்பது உறுதியானதல்ல, என்பதை விட விந்தை என்னவெனில் வீகா என்ற அந்த நட்சத்திரமும் விண்ணில் விரைந்தோடிக் கொண்டிருக்கிறது. யார் கணக்கு போடுவது? கியாமத் எப்போது வரும்? என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும், என்பது மகாஉண்மை.

வியக்க வைக்கும் அளவீடு:
சூரியனும் சந்திரனும் பார்ப்பதற்கு ஒரே அளவாகத் தெரியும். உண்மையில் சூரியன் சந்திரனைவிட 400 மடங்கு பெரியது. எனினும், சந்திரன் பூமியிலிருந்து இருக்கும் தூரத்தைப் போல் 400 மடங்கு அதிகமான தூரத்தில் சூரியன் இருக்கிறது. எனவே தான், கிரகண சமயத்தில் அளவில் சிறிய சந்திரன் பெரிய சூரியனை துல்லியமாக மறைக்க முடிகிறது. இது தான் அல்லாஹ்வின் நிர்ணய அளவீடு.

புள்ளி மாறாமல் துல்லியமாக தேவையான தூரத்தில் சூரியனையும் சந்திரனையும் நிறுத்தி ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பாதை போட்டுக் கொடுத்து கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே அதனதன் வேலையை செய்ய வைத்திருப்பது அல்லாஹ்வின் வல்லமை. ஏகவலிமை கொண்ட யாவற்றைம்யும் அறிந்த அல்லாஹ்வின் துல்லியமான நிர்ணய ஏற்பாட்டையே இப்படைப்புகள் பிரதிபலிக்கின்றன.