Monday, 22 August 2016

மத்ரஸா மக்களின் கோட்டை




மத்ரஸாக்கள் மக்களைப் பாதுகாக்கும் கோட்டை என்று சொன்னால் மிகையாகாது. எதிரிகளின் தாக்குதலிருந்து மக்களைப் பாதுகாப்பவை நாட்டின் வலிமைமிக்க கோட்டைகள் தான். இஸ்லாத்திற்கு எதிராக கருத்துத் தாக்குதல் மற்றும் ஆயுதத் தாக்குதல் தொடுப்பவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுபவை ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் மத்ரஸாக்கள் தான்.

எனினும், அந்த இஸ்லாமியக் கல்லூரிகளின் மீது எதிரிகள் பல விதங்களில் சேற்றை வாரி வீசுவார்கள். நம்மில் சிலரும் கூட மத்ரஸாவிலிருந்து வெளியேறுபவர்களுக்கு உலகைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர்களால் எதையும் சாதிக்க முடியாது. பழமைவாத சிந்தனை கொண்டவர்கள், போன்ற கிண்டலான நகைப்புக்குரிய வாசகங்களை கண்டனங்களாக வெளிப்படுத்துபவர்களும் உண்டு.

இங்கே ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்ல நினைக்கிறோம்: அரபி மத்ரஸாக்கள் பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். ஆனால், இந்தியத் திருநாட்டில் தாருல் உலூம் தேவ்பந்த் முதற்கொண்டு அல்லாஹ்வின் உதவியால் தோற்றுவிக்கப் பட்ட இந்த மத்ரஸாக்கள் மட்டும் இல்லையானால், இந்நாட்டில் இஸ்லாத்தின் அடையாளங்கள் துடைத்தெறியப்பட்டிருக்கும். முஸ்லிம்கள் அவர்களுடைய இஸ்லாமிய அடையாளங்களுட.ன் பாதுகாக்கப் பட்டிருக்க மாட்டார்கள். இந்த நாட்டின் சரித்திரம் படித்தவர்களுக்கு இதை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்காது.

நூஹ் (அலை) கப்பல்:
நூஹ் (அலை) அவர்கள் மக்களை ஏக இறைவனின் பால் 950 வருட காலங்களாக அழைத்தார்கள். ஆனாலும் அந்த மக்களில் சொற்ப நபர்களைத் தவிர மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. இந்நிலையில் நபி நூஹ் (அலை) அவர்களிடம் ஒரு கப்பல் கட்டுமாறு அல்லாஹ் பணித்தான். நூஹ் (அலை) அவர்கள் கப்பல் கட்ட ஆரம்பித்தார்கள். மக்கள் நபியைப் பார்த்து கிண்டலித்தார்கள். பரிகாசம் செய்தார்கள். நூஹே! என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு நூஹ் (அலை) அவர்கள் நான் ஒரு வீடு கட்டுகிறேன். அநத வீடு தண்ணீரில் நடக்கும், என்று சொன்னார்கள். அதுவரையும் அந்த மக்கள் ஆற்றையோ கடலையோ பார்த்ததில்லை. நூஹ் (அலை) அவர்களுடைய அந்தப் பதிலைக் கேட்டுவிட்டு மக்கள் ஏளனம் செய்தார்கள்.  (தஃப்ஸீர் குர்துபீ)


வெளிப்படையாகப் பார்க்கும் போது நூஹ் (அலை) அவர்களுடைய பதில் ஏற்றக்கொள்ள முடியாதது போல் இருந்தது. ஆறோ கடலோ இல்லாத ஓர் ஊரில் எப்படி கப்பல் கட்ட முடியும். அது எப்படி ஓடும். எனினும் அது அல்லாஹ்வின் ஆணைப்படி வஹியின் உத்தரவுப்படி நூஹ் (அலை) செயல்பட்டார்கள். முடிவு என்ன ஆனது?

எந்தக் கப்பலைப் பார்த்து கிண்டலடித்தார்களோ அந்தக் கப்பலின் மூலம் தான் உலக முடிவு நாள் வரை சந்ததிகளைப் பாதுகாத்தான். நானும் நீங்களும் இன்று இந்த உலகில் இருக்கிறோம், என்றால் ஏளனம் செய்யப்பட்ட அந்தக் கப்பலின் மூலம் தான். ஏளனம் செய்தவர்களோ தண்ணீரில் மூழ்கி அழிந்தொழிந்து போய்விட்டார்கள். மலைக்கு மேல் ஏறி நின்றவர்களும் கூட வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு பெறமுடிய வில்லை.

அல்லாஹ்வின் வஹியின் மூலம் மட்டுமே பாதுகாப்பு கிடைத்தது. அவ்வாறே இந்த மத்ரஸாக்கள் அல்லாஹ்வின் வஹியின் கல்வி போதிக்கப்படும் இடங்கள். மக்களுக்கு இந்தக் கோட்டைகளில் தான் எல்லா வயைன பாதுகாப்பும் கிடைக்கும்.

கிள்ர் (அலை) கப்பல்:
களிர் (அலை) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் ஒரு கப்பலில் பயணித்தார்கள். போகும் வழியில் களிர் (அலை) அவர்கள் கப்பலில் ஓட்டையிட்டார்கள். மூஸா (அலை) அவர்கள் கப்பல் பயணிகளை மூழ்கடிக்கப் பார்க்கிறீர்களா? என்று விமர்சனம் செய்தார்கள். ஆனாலும் , அந்த ஓட்டைதான் அந்தக் கப்பலை அநியாயக்கார அரசனிமிருந்து காப்பாற்றியது, என்பது குர்ஆன் கூறும் வரலாறு.

ஓட்டை இருக்கத் தான் செய்தது. மக்கள் யாரும் மூழ்க வில்லை. இன்று மக்கள் மத்ரஸாக்கள் பற்றி ஏதாவது குறை சொல்லலாம். அவர்களுக்கு ஆங்கில அறிவோ மற்ற உலகியல் ரீதியான தகவல்ளோ தெரியாமல் இருக்கலாம். அது களிர் (அலை) கப்பலில் இருந்த ஓட்டையைப் போலத் தான். அவை மத்ரஸாவையும் மக்களையும் காப்பாற்றுமே தவிர அழித்துவிடாது.

டைட்டானிக் கப்பல்:
இவ்விரண்டு கப்பலுக்கும் முரணாக அல்லாஹ்வின் உத்தரவுகளுக்கு முரணாக இருக்கும் கப்பல் எந்நேரத்தின் அழிவைச் சந்திக்கலாம். இறைவனை மட்டுமே நினைக்க வேண்டிய பேரபாயத்தைக் கடந்து செல்லும் கப்பல்களில் கூட நாடக அரங்கு, திரைப்படத் தியேட்டர், சொகுசு ஹோட்டல், நீச்சல் குளம் போன்றவை இருக்கின்றன. டைட்டானிக் என்ற சொகுசுக்கப்பல் மூழ்கியது நவீன கப்பல் பயணத்தின் மிகப் பெரிய வடு.

மேற்கத்திலய பணக்கார நாட்டவர் அதை லேஸில் மறக்கமாட்டார்கள். அல்லாஹ்வை நினைக்க வேண்டிய கடலில் ஆடம்பரமும் உல்லாசமும் உச்சகட்டத்தை அடைந்தால் அல்லாஹ்வின் கருணை எங்கிருந்து கிடைக்கப்போகிறது? 1912 ல் டைட்டானிக் தன்னுடைய முதல் பயணத்திலேயே பெரிய பனிப்பாறையில் மோதி மூழ்கியது. இதில் 1500 பேர் இறந்தனர். அந்தக் கப்பல் மூழ்கிய இடத்தல் இன்றும் ஆராய்ச்சி நடக்கிறது. இன்றும் கடலுக்கடியில் கிடைக்கும் பழைய அலங்காரப் பொருள்கள் எல்லாம் ரொம்பத் தலைக் கிறுக்கி ஆடாதே! என்று மனிதனுக்கான எச்சரிக்கைகள். (நூல்: வினவுஙக்ள் விடைதருவோம்)

இல்மு என்பது... ?:
நபி (ஸல்) அவர்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் இல்மு - கல்வி என்றாலே இல்மு ஹதீஸ் - ஹதீஸ் கல்வியை மட்டுமே விளங்கப்படும். இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதாஃ  (ரஹ்) அவர்கள் ஒரு விஷயத்தைச் சொன்னால் அது இல்மா? அல்லது உங்கள் கருத்தா? என்று கேட்பேன். அது நபி மொழியாக இருந்தால் இல்மு என்று சொல்வார்கள். ஹதீஸிலிருந்து ஆய்வு செய்து பெறப்பட்ட கருத்தாக இருந்தால் (சொந்த) கருத்து என்று சொல்வார்கள். (தத்வீனெ ஹதீஸ்)


நபித்தோழர்களும் அவர்களுக்குப் பின் வந்த தாபியீன்களும் நடத்திய மத்ரஸாக்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்றிருக்கிறார்கள். அபூதர்தா (ரலி) அவர்கள் டெமாஸ்கஸில் ஒரு மத்ரஸா நடத்தினார்கள். ஒரு நாள் மாணவர்களை கணக்கிட்ட பொழுது 1600 க்கம் அதிகமாக இருந்தார்கள். இப்னு மஸ்வூத் (ரலி) தங்களுடைய வீட்டிலேயே ஒரு மத்ரஸா நடத்தினார்கள். எனவே அந்த வீட்டின் பெயரே தாருல் குர்ராஃ - ஓதுபவர்களின் வீடு என்று பிரபல்யமாகிவிட்டது.

என்னிடத்தில ஹதீஸ் - நபிமொழிகளைப் பயிலக்கூடிய மாணவர்கள் மிக அதிகமாக வரவேண்டும். என்னிடம் கல்வி பயின்று அவர்கள் மனநிறைவோடு செல்ல வேண்டும், என்பது தான் என்னுடைய ஆசையும் லட்சியமும், என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். தன்னுடைய லட்சியத்தை அடைந்து விட்டுத்ன் உலகை விட்டார்கள். (அஸ்ஹாபுஸ்ஸுஃப்பா) இன்று அந்த உயர்தரமான கல்வியை கற்பதற்கு மாணவர்களைத் தேடவேண்டியிருக்கிறது.

மத்ரஸா என்பது....?:
ஒரே நபர் எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. அதே போல் எல்லோரும் ஒரே வேலையையும செய்ய முடியாது. மத்ரஸா என்பது ஒவ்வொருவரும் மார்க்கத்தை அறிந்து கொள்வதற்கான இடம் என்பது மட்டுமல்ல. அதைவிடவும் விசாலமான அர்த்தம் உண்டு.

மார்க்கக் கல்வியை பயில்வதற்காகவும் பயிற்றுவிப்பதற்காகவும் ஒரு கூட்டம் தன்னை அர்ப்பணித்துத் தான் ஆகவேண்டும்.  இறைநம்பிக்கையாளர்கள் அனைவருமே (யுத்தத்திற்கு) புறப்பட வேண்டிய தேவையில்லை. ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு குழு (மட்டும்) புறப்பட்டு விட்டு (மற்றவர்கள் மதீனாவிலேயே) தங்கியிருக்க் கூடாதா? ஏனெனில் அவர்கள் மார்க்க விளக்கத்தைப் பெற்றுக் கொண்டு யுத்தத்திலிருந்து திரும்பிவரும் தம் சமுதாயத்தவரை எச்சரிக்க வேண்டும், என்பதற்காக  (அல்குர்ஆன்- 9:122)

நபி (ஸல்) அவர்கள் எங்காவது சிறு படையை அனுப்பி வைத்தால் எல்லா நபித்தோழர்களும் அதில் செல்லத் தயாராகிவிடுவார்கள். மதீனாவில் நபியுடன் சிலர் மட்டுமே இருப்பார்கள். அச்சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் சொல்லும் மார்க்க விஷயங்களைக் கேட்டு மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு போதுமான நபர்கள் (மாணவர்கள்) இருக்க மாட்டார்கள். அச்சமயம் அல்லாஹ் மேற்கூறிய வசனத்தை இறக்கிவைத்தான்.

மத்ரஸாக்களின் கடமையையும் அவசியத்தையும் இந்த வசனம் தெளிவாகவே உணர்த்துகிறது. கல்வி என்பது கற்பதற்காக மட்டுமல்ல. அதன்படி செயலாற்றுவதற்கும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அதன்படி செயல்பட வைப்பதும் தான் என்பதையும் உணர்த்துகிறது.

மத்ரஸா தான் நம்முடைய பாதுகாப்பு:
திட்டமாக நாமே இந்த வேதத்தை (குர்ஆனை) இறக்கிவைத்தோம். மேலும் நாமே அதைப் பாதுகாப்பாளராக இருக்கிறோம், என்பதும் நிச்சயம். (அல்குர்ஆன் - 15:9)


இந்த வசனத்தில் அல்லாஹ்வே குர்ஆனைப் பாதுகாப்பதாக கூறியிருப்பதில் விசாலாமான அர்த்தம் உள்ளது. குர்ஆனுடைய வார்த்தையை மட்டுமல்ல; அதன் கருத்துக்களையும் பாதுகாப்போம். குர்ஆன் நிலைத்திருக்கத் தேவையான எல்லாப் பணிகளும கியாம நாள் (இறுதி நாள்) வரை நடைபெறும்.

குர்ஆனைப் பாதுகாக்கக் கூடியவர்களைப் பாதுகாப்போம். குர்ஆனுடைய கல்வியை பாதுகாக்கக் கூடியவர்களைப் பாதுகாப்போம். குர்ஆனுடைய கல்வியை கல்வியை படிப்பவர்களையும் பரப்புபவர்களையும் அதற்கு உதவியாக இருப்பவர்களையும் பாதுகாப்போம் போன்ற எல்லா அர்த்தங்களும் இதில் அடங்கும்.

அல்லாஹ்வின் இராணுவம்:
ஒரு மன்னர் தன் நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதற்காக அறிவித்தால் மன்னர் தானே எல்லைக்கு வந்து பாதுகாக்கப் போவதாக எடுத்துக் கொள்ளமுடியாது. அவருடைய ராணுவம் தான் பாதுகாக்கும். அதே போல், அல்லாஹ் தன் ராணுவத்தைக் கொண்டு இந்த குர்ஆனை பாதுகாக்கிறான். மத்ரஸாக்களில் தேர்ச்சி பெற்று வருபவர்கள் தான் அல்லாஹ்வின் ராணுவம்.

ராணுவத்தையே பலகீனமாக்கி விட்டால் எல்லைக் கோட்டை எப்படி பாதுகாக்க முடியும். நாட்டின் பொருளாதாரம் செழிக்க வேண்டும். சுகாதாரம் சிறக்க வேண்டும், என்பதற்காக பட்ஜெட்டில் அவற்றுக்கே அதிகப்படியான நிதியை ஒதுக்கிவிட்டால் ராணுவ பலம் என்னவாகும்? ராணுவத்தை பலகீனமாக்கிவிட்டு நாட்டின் எந்தத் துறை வளர்ச்சியடைந்தாலும் அதனால் என்ன லாபம்?

இஸ்லாம் தான் அதையும் படிக்கச் சொல்கிறது. இதையும் படிக்கச் சொல்கிறது, என்று விதண்டாவாதம் பேசி மத்ரஸாக்களை மறந்து விட்டால் இஸ்லாம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நம்முடைய நிலை என்னவாகும்? என்பதை யோசிக்க வேண்டும். யுக முடிவு நாள் வரை அல்லாஹ் மார்க்கத்தைப் பாதுகாப்பான், என்பதற்கு அர்த்தம் நாம் அதைப் பற்றி கவலைப் படத்தேவையில்லை, என்பதல்ல. பாதுகாப்பாளர்களை நாம் தான் உருவாக்க வேண்டும்.

கொள்கைக் கோளாறின் அடிப்படை:
மார்க்கக் கல்வியை புறக்கணித்துவிட்டு உலகக் கல்வியின் மீது ஏற்படும் மோகம் கொடூரமான பின்விளைவை ஏற்படுத்தாமல் விடப்போவதில்லை. அப்பாஸிய்யாக்களின் ஆட்சி காலத்தில் முஸ்லிம்கள் விஞ்ஞான ஆராய்ச்சியில் முன்னேறி இருந்தார்கள். கிரேக்க த்துவ நூற்கள் அதற்கு உதவின.

தற்கால முன்னேறிய விஞ்ஞானத்திற்கு வித்திட்டவர்கள் முஸ்லிம்கள் தான், என்பது பெருமைக்குரிய விஷயம். அதே சமயம் சில கிரேக்க தத்துவங்கள் இஸ்லாமியக் கொள்கைகளைக் காயப்படுத்தின. அப்பாஸியக் கலீஃபாவாக இருந்த மஃமூன் ரஷீத் கான்ஸ்டான்டிநோபிளுடைய (இஸ்தான்புல்) கிருத்தவ மன்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். மன்னரிடம் இருக்கும் கிரேக்க தத்துவ நூல்களை அனுப்பி வைக்கும்படி அதில் கேட்டிருந்தார். அந்த நூல்களை அனுப்பி வைப்பதில் மன்னருக்கு தயக்கம் இருந்தது. அப்பொழுது கிருத்தவ பாதிரிமார்கள், கிரேக்க தத்துவ நூற்களை முஸ்லிம் மன்னருக்கு அனுப்பி வைக்கும்படி வற்புறுத்தினர்.

ஏனெனில், இந்த நூற்களை படிப்பவர்களுக்கு கண்டிப்பாக தங்களுடைய மார்க்கக் கொள்கையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும், என்று கூறினர். பாதிரிமார்கள் நினைத்தது நிதர்சனமாக நடக்கவும் செய்தது. (முஸல்மானோங்கா உரூஜோ ஜவால்)

இஸ்லாமியக் கொள்கைகளை பாமரனும் விளங்கிக் கொள்ளும் வகையில் சாதாரண முறையில் குர்ஆன் விளக்கி வைக்கும். கிரேக்கத் தத்துவங்கள் முஸ்லிம்களின் சிந்தனையைக் கெடுத்துவிட்டது. கிரேக்க இறையியல் கோட்பாடுகள் குளறுபடியானவை. அ

ந்தத் தத்துவங்களின் விளைவாக இஸ்லாமியக் கொள்கைகள் தொடர்பாக வித்தியாசமான விசித்திரமான சர்ச்சைகள் உருவெடுத்தன. அல்லாஹ்வுடைய பேச்சு எப்படிப்பட்டது? குர்ஆன் படைக்கப்பட்டதா? படைக்கப் படாததா? போன்ற சர்ச்சைகள் தோன்றியதால் மார்க்கத்தின் பெயரால் முஃதஜிலா, முர்ஜியா போன்ற புதுப்புது கொள்கைவாதிகள் உண்டானார்கள்.

கிரேக்க தத்துவதும் வேதவாக்கா?: இஸ்லாம் தொடர்பான எந்தக் கொள்கையைப் பற்றி பேசப்பட்டாலும் கிரேக்க தத்துவம் என்ற அளவுகோல் வைத்து சரி பார்க்கப்படும். அதற்கு ஒத்துவரவிலலையானால் இந்த மார்க்கக் கொள்கை அறிவுக்கு முரண் என்று கூறி ஒதுக்கப்படும்.

நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகள் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் மார்க்கம் பற்றிய குர்ஆனுடைய கருத்தைக் கூறினால் தற்கால விஞ்ஞான ஆய்வுகளோடு - சிந்தனை கெட்ட அறிவோடு தொடர்பு படுத்திப் பார்க்கும் பழக்கம் மக்களிடம் உள்ளது. இவையனைத்தும் உயர்கல்வி செய்த மூளைச் சலவையின் விபரீத விளைவுகள். மார்க்கத்திற்கு முரணான எந்தக் கருத்தும் அறிவுக்குப் பொருத்தமாக இருக்க முடியாது, என்பது நிச்சயம்.

பகிரங்க வழிகேடு:
நபித்தோழர் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் உபதேசம் செய்ய ஆரம்பிக்கும் போதெல்லாம் அல்லாஹ் தீர்ப்பு செய்பவன். அவன் நீதமாக நடந்து கொள்பவன். (அதில்) சந்தேகம் கொள்பவன் நாசமாகி விட்டான். என்று சொல்வார்கள். ஒரு நாள் அவர்கள் உபதேசம் செய்யும் போது இப்படி கூறினார்கள்: உங்களுக்கு பின்னால் நிறைய குழப்பங்கள் ஏற்படும். குழப்பங்கள் அதிகரித்துவிடும் (அனைவருக்காகவும்) குர்ஆன் திறந்து வைக்கப்படும். விசுவாசி, முனாஃபிக், (நயவஞ்சகன்) ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை என அனைவரும் அந்த குர்ஆன் மூலம் ஆதாரம் காட்டுவார்கள்.

ஒரு மனிதர் குர்ஆனை ஒதிவிட்டு, நானோ குர்ஆனை ஓதிவிட்டேன். (அதற்கு விளக்கமும் கூறிவிட்டேன்) பிறகும் மக்கள் ஏன் என்னை பின்பற்றுவதில்லை. குர்ஆனைத் தவிர ஏதாவது புதிய விஷயத்தை கூறினால் தான் பின்பற்றுவார்கள் போலும் என்று சொல்லுமளவுக்கு கால சூழ்நிலை மோசமானாலும் அது பாரதூரமான விஷயமல்ல. மேலும் முஆது (ரலி) அவர்கள் கூறினார்கள்: (மார்க்கத்திற்கு முரணான) புதுமையை விட்டும் உஙகளை எச்சரிக்கிறேன். ஏனெனில், இப்படிப்பட்ட புதுமைகள் வழிகேடுதான். அறிவாளியின் சருகுதலை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். ஷைத்தான் சில சமயம் அறிவாளியின் நாவில் வழிகேடான பேச்சை பேசச் செய்வான். நயவஞ்சகனும் சில சமயம் உண்மை பேசுவான்... (அபூதாவூத்) குர்ஆனை விட்டுவிட்டு வேறொன்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பகிரங்க வழிகேடு.

இறுதி நாளின் இருண்ட அடையாளம்:
மக்களிடம் மார்க்கக் கல்வி குன்றிப் போவதும் ஆலிம்கள் குறைந்து போவதும் கியாமத்துடைய அடையாளம், என நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். ஒரு நேரத்தில் மார்க்கத்தை கற்றறிந்த எந்த ஆலிமும் இருக்க மாட்டார். மக்கள் மார்க்க அறிவற்ற மடையர்களை தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் பிரச்சினைகளுக்கு மார்க்கத் தீர்வு கேட்கப்படும்.

அவர்கள் எதையும் தெரியாமலேயே ஃபத்வா விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். தாங்களும் வழிகெட்டுப் போவார்கள். மற்றவர்களையும் வழிகெடுத்து விடுவார்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இல்மு - மார்க்க அறிவு இவ்வுலகை விட்டும் உயர்த்தப்பட்டு விட்டால் அது போன்றதொரு பெரிய நஷ்டம் வேறெதுவும் இருக்க முடியாது. அதைத் தடுக்க வேண்டுமானால் இல்முடையவர்களை - ஆலிம்களை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். மத்ரஸாக்கள் செழிப்பாக இருக்க வேண்டும்.

மார்க்கக் கல்வியின் அக்கறையின்மை தொடருமேயானால் இன்னும் சிறிது காலத்திற்குப் பின் முறையான ஆலிம்களே கிடைக்க மாட்டார்கள். அக்பர் உருவாக்கிய தீனெ இலாஹி போல் வழிகேட்டின் வாசல் திறக்கப்படும். அக்பர் போன்ற முஹலாக மன்னர்களின் வரிசையில் மார்க்கப்பற்று மிக்க ஔரங்கசீப் வந்தாரென்றால் முஜத்தித் அல்ஃபெஸானீ ஷைக் அஹ்மத் ஸர்ஹிந்தி (ரஹ்) அவர்கள் இனைய தலைமுறையினரிடம் ஏற்படுத்திய மர்க்க எழுச்சி தான் காரணம். அது போன்றதொரு மார்க்க எழுச்சியை ஏற்படுத்துவதற்கு இன்றும் பாடுபட்டாக வேண்டும்.  

மத்ரஸாக்கள் தடம் பதிக்க வேண்டும்




இன்று மத்ரஸாக்களில் ஓதுவதற்கு மாணவர்கள் கிடைப்பதில்லை. பழம்பெரும் மத்ரஸாக்களும் கூட மாணவர்களைத் தேடி அலைய வேண்டிய நிர்பந்த நிலையில் இருக்கின்றன. எண்ணிக்கையை ஈடு கட்டுவதற்கு மக்தப் பிரிவு, நாளிரா பிரிவு, கோடைக்கால வகுப்பு, ஸ்கூல் மாணவர்களுக்கு பகுதி நேர வகுப்பு என பல திட்டங்களை தீட்ட வேண்டியிருக்கிறது.

மத்ரஸாக்களின் மாணவர்களுடைய எண்ணிக்கை குறைவதற்கு மக்களின் நவீன கால மனோநிலை ஒரு பெரிய காரணம் என்றால் மத்ரஸாக்களின் உள்கட்டமைப்பையும் ஒரு முக்கியக் காரணமாக எடுத்துக் கொண்டாக வேண்டும். தமிழகத்தில் சிறந்த பேச்சாளர்களுக்குப் பற்றாக்குறை. தரமான பேராசிரியர்களுக்குப் பற்றாக்குறை. தகுதியான இமாம்களுக்குப் பற்றாக்குறை. தடம்பதிக்கும் எழுத்தாளர்களுக்குப் பற்றாக்குறை. பேச்சாளர்களால் ஏன் பேச்சாளர்களை உருவாக்க முடியவில்லை. பேராசிரியர்களால் ஏன் பேராசிரியர்களை உருவாக்க முடியவில்லை. எழுத்தாளர்களால் ஏன் எழுத்தாளர்களை உருவாக்க முடியவில்லை, என்பது தான் விடை தெரியாத (கண்டிப்பாக தெரிந்தாக வேண்டிய) வினாக்களாக இருக்கின்றன. தரமான உலமாக்களை மத்ரஸாக்கள் சமூகத்திற்கு அர்ப்பணிக்க வேண்டுமென்றால் அதற்காக மிகச்சிறந்த திட்டங்களைத் தீட்டியாக வேண்டும்.
இந்தியாவில் மத்ரஸாவின் வரலாறு ஆழமானது. அழுத்தமானது. மத்ரஸா என்பது ஏதோ மார்க்கச் சட்டங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்பதோ அல்லது ஓதி முடித்த பின் ஏதாவதொரு மார்க்கப் பணி செய்து காலத்தைக் கடத்த வேண்டுமென்பது மட்டுமோ அல்ல.

இவற்றுக்கெல்லாம் மேலாக ஆக உயர்ந்த லட்சியத்தை நோக்கமாகக் கொண்டது தான் மத்ரஸா. குர்ஆன், சுன்னா மற்றும் அது தொடர்பான துறைகளில் மிகப்பெரும் திறமையை வளர்த்துக் கொண்ட  தகுதியுள்ள உலமாக்களை உண்டாக்குவதுதான் மத்ரஸாக்களின் நோக்கம், என்று அல்லாமா முஃப்தீ தகீ உஸ்மானீ தாமத் பரகாதுஹும் அவர்கள் சொல்வார்கள். (தர்ஸெ நிஜாமீ கீ கிதாபெய் கெய்ஸே படாயே)

உண்மையும் அது தான். உலகில் மார்க்கத்தை நிலைநாட்டுவதற்கும் அதைப் பரத்துவதற்கும் அதன் பாதையில் குறுக்கிடும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வதற்கும் அதை மட்டுமே தங்களுடைய முழுநேரப் பணியாகச் செய்யக்கூடிய தரமும் தர்பியத்தும் நிறைந்த ஒரு பிரிவினர் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நபர்களை உருவாக்குவது தான் மத்ரஸாக்கள். இந்த லட்சியத்தை அடைவதற்காக மத்ரஸாக்கள் பெருமுயற்சி செய்தாக வேண்டும்.

முதலாவது மாணவர்களின் நேரம் முழுமையாக பயன்பெறுமளவுக்கு ஒழுங்கு படுத்தப்பட வேண்டும். அவர்களுக்குரிய பாட வகுப்புகளில் ஆசிரியர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். ஓராண்டில் அவர்களுக்குக் கொடுக்கப் பட வேண்டிய கல்வி போதனைகள் வகுப்புகள் நிறைவாக வழங்கப்பட வேண்டும். பாடநாட்களின் எண்ணிக்கையும் பாடத்தின் அளவும் வகுக்கப்பட வேண்டும். மற்ற மத்ரஸாக்களில் ஓதிவிட்டு இடையில் வருபவர்களை எண்ணிக்கையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எந்த விசாரணையும் இல்லாமல் சேர்த்து விடக்கூடாது.

மத்ரஸா விட்டு மத்ரஸா தாவி ஒன்றிருண்டு வருடங்களில் ஸனது - பட்டம் கிடைக்கிறது, என்றால் மத்ரஸாவின் உயர்ந்த நோக்கம் எப்படி நிறேவேற முடியும்? மாணவர்களின் தரமான தர்பியத்திற்கு நல்ல திட்டங்கள் இருக்க வேண்டும்.

மாணவர்களுடைய முழு நேரமும் மத்ரஸாவிடம் ஒப்படைக்கப் படும்போது அவர்களுடைய உணவு, படுக்கை வசதி மட்டுல்ல. அவர்களுடைய தர்பியத் - ஒழுக்க குணநலன்களில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். ஒழூக்கமின்மை ஏற்படும் போது அதை சீர்செய்வதற்கு முழூமுயற்சி எடுத்தாக வேண்டும். அதற்காக முறையான கடுமையான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். ஒரு மாணவர் இப்பொழுது இப்படி இருந்தாலும் என்றாவது ஒரு நாளைக்கு திருந்திவிடுவார், என்பது எல்லா நிலைகளிலும் ஒத்துவராது.

உடலில் ஏதாவது ஒரு உறுப்பில் பழுது ஏற்பட்டாலும் உயிரைப் பாதுகாப்பதற்கு ஆப்ரேஷன் செய்வது கட்டாயமாகிறுத. எல்லாவற்றையும் விட மேலாக மாணவர்களுக்கு ஆசிரியர்களே மிகச் சிறந்த முன்மாதிரி, என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆசிரியர்களின் உயர்தரமான பேணுதலும் நன்னடத்தையும் மாணவர்களிடத்தில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும், என்பதில் சந்தேகமில்லை.

பெரும்பாலான மக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் கற்று டிகிரி பெறுவதையே விரும்புகிறார்கள், என்று கூறுவது காதில் விழுகிறது. அவர்கள் அதற்கான பள்ளிக்கூடங்களை நாட வேண்டும். முஸ்லிம்கள், உலகக்கல்வியையும் மார்க்கக் கல்வியையும் படித்துத் தரக்கூடிய பள்ளிக்கூடங்களை உருவாக்க வேண்டும். மற்ற மதத்தவர்கள் தங்களுடைய பள்ளிக்கூடங்களின் வாயிலாக மதக்கொள்கையையும் ஓசையின்றி மனதில் பதிய வைத்துவிடுகிறார்களே!

முஸ்லிம்கள் ஏன் தங்களுடைய பிள்ளைகளுக்கு அப்படிப்பட்ட இருகல்வியையும் போதிக்கும் பள்ளிக்கூடங்களை உருவாக்கக் கூடாது? மேலே கூறியது போல் மத்ரஸா என்பது மார்க்கத்தைப் படித்து அறிந்து கொள்வதற்கான இடம் மட்டுமல்ல. ஒரு துறையில் எல்லையை அடைந்து முழுநேரத்தை மார்க்கப் பணியில் அர்ப்பணிக்கும் மார்க்க ஸ்பெசலிஸ்ட்களை உருவாக்கும் இடம்.

மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற டாக்டரிடம் அவர் ஏன் பொறியியல் படிக்கவில்லை, என்று யாராவது கேட்பார்களா? அப்படி படித்தால் அவர் சமூகத்தில் ஒரு மருத்துராக பணியாற்றுவரா? என்ஜீனியராகப் பணியாற்றுவாரா? ஏன்? குழந்தை நல மருத்துவர் பெரியவர்களுக்கான சிகிச்சையைக் கூட செய்வதில்லையே! எனவே, மத்ரஸாக்களில் உலகக் கல்வியைப் படித்துக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கை அடிப்படையிலேயே தவறானது.

மத்ரஸாக்களின் நோக்கத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவு தான் இது. இருகல்வியையும் ஒன்றாகப் படித்துக் கொடுத்தால் தான் எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும், என்ற வாதமும் தவறானது. எண்ணிக்கை மட்டுமே நோக்கமல்ல. எல்லா மக்களும்  தங்களுடைய பிள்ளைகள் இரு கல்வியையும் படிக்க வேண்டுமென்று விரும்பினால் அது மத்ரஸாக்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்.

ஒட்டுமொத்த மக்களிடமும் இப்படிப்பட்ட ஆர்வம் இருந்தால் அதுவும் சீர்செய்யப் படவேண்டியதே! அப்படியானால், மார்க்க ஸ்பெஷலிஸ்ட்கள் எப்படி உருவாவார்கள்? சமூகத்தில் மருத்துவத்துறை, பொறியியல் துறை போன்ற உலகியல் ரீதியாக எல்லா துறைகளிலும் சிறப்பு வல்லுணர்கள் இருப்பார்கள். மார்க்கத்துறையில் மட்டும் அப்படிப்பட்ட சிறப்பு வல்லுணர்கள் இல்லையானால் அது இந்த சமூகத்தின் மிகப் பெரும் குற்றமாகிவிடாதா?

இருகல்வியையும் படிப்பதால் மேலோட்டமாக மார்க்கம் தெரிந்தவர்கள் வேண்டுமானால் உருவாகலாம். சிறந்த பேராசிரியர்களையோ தரமான மார்க்க ஆய்வாளர்களையோ பெற்றுக் கொள்ள முடியாது. சமூகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் ஆழமாக ஆய்வு செய்து ஆய்வுப் பூர்வமான உறுதியான தீர்வுகளை எடுத்துச் சொல்பவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள். சிறப்புநல மருத்துவர்கள் இல்லையானால் எவ்வளவு பெரிய நஷ்டத்தை சமூகம் சந்திக்குமோ அதைவிட கொடுமையான மாபெரும் நஷ்டத்தை இந்த சமூகம் சந்திக்க நேரிடும்.

உலகியல் துறைகளில் உயர்அந்தஸ்தை அடைவதற்கு 12+4 பதினாறு அல்லது அதைவிடவும அதிகமான வருடங்கள் தேவைப்படும் போது மார்க்கத்துறையில் மட்டும் ஏதோ சில வருடங்களில் இருகல்வியையும் சேர்த்து படித்துவிட்டால் மார்க்கத்துறை வல்லுணராகி விடமுடியுமா என்னமத்ரஸாக்களில் குறைகள் இருந்தால் முறையாக அதை சீர்திருத்தம் செய்தாக வேண்டும். அதற்காக மார்க்கத் துறையை பின்தள்ளிவிட்டு சீர்திருத்தம் செய்து விட்டோமென்று யாராவது கருதினால் அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது. மத்ரஸாக்கள் தடம் பதிக்க வேண்டுமே தவிர தடம் புரண்டு விடக்கூடாது.

ஹாஜிகளின் கவனத்திற்கு...




உலகின் நாலாபுறத்திலிருந்தும் கஃபதுல்லாஹ்வை நோக்கி விரைந்து செல்லும் நேரமிது. இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1 லட்சத்து 36 ஆயிரத்து 20 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் ஹஜ் கமிட்டி மூலமாக 1 லட்சத்து 20 பேரும், தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலமாக 36 ஆயிரம் பேரும் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் ஹாஜிகள் உலகியல் ரீதியாக எல்லா தயாரிப்புகளையும் மேற்கொள்வது போல், இல்லை, அதைவிடவும் மேலாக தங்களுடைய பயணம் முழுவதும் இறைக்கோட்பாடுகளை மதித்து நடப்பதற்குத் தேவையான பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். பயணத்தின் ஒவ்வொரு வினாடியும் அல்லாஹ்வின் கடமைகளோ அடியாரின் கடமைகளோ புறந்தள்ளப் பட்டுவிடக் கூடாது.

யாருக்கும் எந்த தொந்தரவும் நம்மால் நிகழ்ந்து விடக்கூடாது. யாருடனும் எந்த தர்க்கமும் செய்யக்கூடாது, என்று குர்ஆனே நேரடியாக உத்தரவிடுகிறது. ஹஜ் வணக்கத்தை முழுஉலகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய இந்த வணக்கம் உலகத்தாருக்கு ஒரு இஸ்லாமிய அழைப்பாக அமைய வேண்டும்.

ஹஜ்ஜுடைய நிய்யத் மனதில் வந்த நாள் முதற்கொண்டு எந்நேரமும் அல்லாஹ்விடம், நம்முடைய ஹஜ் முறையாகவும் நிறைவாகவும் பூர்த்தியடைவதற்காகவும் அனைத்துலக ஹாஜிகளின் நலனுக்காகவும் துஆ செய்து கொண்டிருக்க வேண்டும். ஊட்டி, கொடைக்கானல் செல்பவர்கள் அதற்குரிய ரசனையோடு தான்  செல்வார்கள். ஒருவர் கொடைக்கானலில் தூண் பாறையை பார்த்து விட்டு இதைப் பார்க்கத்தான்  வந்தோமா? ஒரு உயரமான பாறை! அவ்வளவு தானே! என்று சொல்பவராக இருந்தால் அவரை எப்படிப் பார்ப்போம். 

அதே போன்று ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் சட்டங்கள் தெரிந்தால் மட்டும் போதாது. மக்காவும் மதீனாவும் இஸ்லாம் உருவான இடங்கள். இஸ்லாத்தின் ஆரம்பகால வரலாற்றுச் சின்னங் களையும்நபி இபுராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தினரின் தியாகச் சின்னங்களையும் சுமந்து நிற்கும் புண்ணிய பூமி தான் மக்காவும், மதீனாவும். அவற்றை ரசிப்பதற்கு ஈமானிய சிந்தனை தேவை. அத்துடன் இஸ்லாமிய வரலாற்றுச் சிந்தனையும்  அவசியம். மைதானங்கள், கட்டிடங்கள், பள்ளிவாசல்கள், மலைக் குகைகள், கப்ருஸ்தான்கள் போன்றவை மக்கா, மதீனாவில் மட்டுமல்ல. முழு உலகிலும் இருக்கின்றன. ஆனால் இரண்டுக்கும் மத்தியில் வானம், பூமிக்கு மத்தியிலுள்ள வேறுபாடு இருக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் நடந்த இடம், நபித்தோழர்கள் போரிட்ட இடம், நபியவர்களுக்கு நபித்துவம் கொடுக்கப்பட்ட குகை என  புண்ணியத்தலத்தின்  ஒவ்வொரு இடமும் நம்மை இஸ்லாமிய  வரலாற்றின் ஆரம்ப காலத்திற்கே இழுத்துச் சென்று விடும். இவற்றை உணர்வதற்கு தனி ரசனை இருக்க வேண்டும். இது காசு கொடுத்து பெற வேண்டிய பொருளல்ல. அதற்காக நீண்ட கால முயற்சியும் பயிற்சியும் தேவை. ஹாஜிகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளில் முழுமையாக பங்கெடுத்துக் கொண்டு தங்களை ஆன்மீக ரீதியாக தயார் படுத்திக் கொள்ள வேண்டும். படிப்பதாக இருந்தால் ஷைகுல் ஹதீஸ்  ஜகரிய்யா (ரஹ) அவர் களுடைய ஹஜ்ஜின் சிறப்புகள்  என்ற நூலையும், அர்ரஹீகுல் மக்தூம் (தமிழ்) என்ற நூலையும் படிக்கலாம்.
இந்திய அரசாங்கமும் சவூதி அரசாங்கமும் ஹாஜிகள் எவ்வித சிரமமுமின்றி பயணம் அமைவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்கின்றன. ஹாஜிகளை - அல்லாஹ்வின் விருந்தாளிகளை முறையாக உபசரிப்பதில் சவூதி அரசாங்கம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. உலகின் எந்த அரசாங்கும் செலவிட முடியாத அளவுக்கு பல பில்லியன் ரியால்களை தனது சொந்த நிதியிலிருந்து சவூதி வாரி இறைக்கிறது.

நிமிடத்துக்கு நிமிடம் புனித இரு ஆலயங்களும், அதன் சுற்றுப்புற வீதிகளும் துப்பரவு செய்யப்படுகின்றன. நீர் இல்லாத பாலைவனத்தில் லட்சோபலட்சம ஹாஜிகளுக்கான குளிப்பு, உட்பட அத்தியாவசியத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள நீர் வசதிகளும், கழிவறைகளும் எவ்விதக் குறைவுமின்றி  செய்யப்பட்டிருக்கின்றன. மினாவில் தீப் பிடிக்காத கூடாரங்கள் பல பில்லியன் ரியால்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. கல்எறியும் இடமாகிய மினாவில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக நுணுக்கமாகவே செய்யப்படுகின்றன. லட்சக்கணக்கான மக்கள் கூடுமிடத்தில் யாரும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுத்து விடாமல் அவசரப்படாமல் வரவேண்டுமென்பதை அரசாங்கம் பல மொழிகளிலும் அறிவிப்புச் செய்கிறது.


எனினும், மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் செல்வதால் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. இஹ்ராமுடைய நிலையில் இருக்கும் ஹாஜிகள் ஒழுக்க மேன்மையை கடைபிடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அல்லாஹ், இவ்வருட ஹாஜிகளின் ஹஜ்ஜை ஹஜ்ஜெ மப்ரூராக ஆக்கியருள்வானாக! பயணத்தின் எல்லா நிலைகளிலும் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவானா!

வரலாற்றுச் சிறப்பு மிக்க துல்கஃதா




குர்ஆனில் சரித்திரமும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. அத்துடன் ஒரே சரித்திரமே கூட மீண்டும் மீண்டும் வேறு வேறு போங்கில் கூறப்படுகிறது. ஏனெனில் உலகம் தோன்றிய காலம் முதற்கொண்டு வரலாறும் உருவாக ஆரம்பித்தது. எனவே, வரலாற்றுக்கலை என்பது உலகில் முக்கியத்துவம் வாய்ந்த கலை. வரவலாற்றின் மூலம் மனித அறிவு வளர்ச்சியடைகிறது. மனிதனுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக பல படிப்பினைகளையும் உள்ளடக்கியிருக்கிறது, சரித்திரம். ஷவ்வால், துல்கஃதா ஆகிய இரண்டு மாதங்களுக்கு மத்தியில் உள்ள மாதம் துல்கஃதா. ஆனால், இந்த மாதம் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. எனினும், வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் பல இந்த மாதத்தில் நடந்துள்ளன.

கஃபதுல்லாஹ்:
ஹாஜிகள் கஃபதுல்லாஹ்வை நோக்கி லப்பைக் முழக்கத்துடன் விரைந்து செல்லும் காலமிது. ஆரம்பமாக ஆதம் (அலை) அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கட்டினார்கள். பிறகு நூஹ் (அலை) அவர்களுடைய காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சிதைந்துவிட்ட பிறகு நபி இபுறாகீம் (அலை) அவர்களும் இஸ்மாயீல் (அலை) அவர்களும் அதே இடத்தில் கஃபதுல்லாஹ்வைக் கட்டினார்கள். அவர்கள் கஃபதுல்லாஹ்வுக்கு அஸ்திவாரமிட்டது, துல்கஃதா ஐந்தாம் தேதியாகும்.

மீன் வயிற்றிலிருந்து விடுதலை:
யூனுஸ் (அலை) அவர்கள் தங்களுடைய சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் வேதனை வரும், என்று எச்சரித்திருந்தார்கள். வேதனை வரத் தாமதமானதால் ஊரை விட்டும் வெளியேறி விட்டார்கள். ஒரு கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென கப்பல் நின்று விட்டது. தம்முடைய எஜமானரிடமிருந்த அனுமியின்றி யாரோ இந்த கப்பலில் இருக்கிறார், என்று கப்பல் மாலுமி கூறினார். அச்சமயம் சீட்டு குலுக்கப்பட்டதில் யூனுஸ் (அலை) அவர்களுடைய பெயர் வந்தது. கடலுக்குள் இருந்த ஒரு மீன் அவர்களை விழுங்கி விட்டது.

யூனுஸ் (அலை) அவர்கள் லாயிலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக இன்னீ குன்த்து மினள்ளாலிமீன், என்று ஓதினார்கள். கடைசியாக, குறிப்பிட்ட நாட்கள் மீன் வயிற்றில் இருந்த பிறகு அல்லாஹ் அவர்களை வெளியேற்றினான். அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றப்பட்ட நாள் துல்கஃதா பதினான்காம் தேதியாகும். அவர்கள் வெளியேற்றப்பட்ட சமயம் மிகவும் பலகீனமாக இருந்தார்கள். அவர்களின் பாதுகாப்புக்காக அல்லாஹ் துல்கஃதா மாதம் பதினேழாம் தேதி ஒரு சுரைக்காய் செடியை வளரச் செய்தான்.

மூஸா (அலை) அவர்களின் நோன்பு:
பிர்அவ்ன் அழிக்கப்பட்ட பிறகு பனூஇஸ்ரவேலர்களுக்கு ஹலால், ஹராமை விளக்கி வைக்கும் ஒரு வேதத்தை வழங்குவதாக அல்லாஹ் வாக்களித்திருந்தான். எனவே, பிர்அவ்ன் மூழ்கி அழிந்த பிறகு மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் வேதத்தை வழங்குமாறு வேண்டினார்கள். அப்போது அல்லாஹ் மூஸா (அலை) அவர்களை முப்பது நாட்கள் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டான். அந்த மாதம் துல்கஃதா மாதமாகும். (நூல்: இஸ்லாமீ மஹினோங்கே ஃபஸாயிலோ அஹ்காம்)

ஹிஜ்ரி - 5:
இந்த ஆணடின் துல்கஃதா மாதத்தில் தான் (மார்ச் - 627) பர்தாவுடைய சட்டம் இறங்கியது. கந்தக் யுத்தம் துல்கஃதா எட்டாம் தேதி (மார்ச் - 31, 627) நடந்தது. ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டதும் இநத மாதத்தில் தான்.

ஹிஜ்ரி - 6:
இந்த ஆண்டின் துல்கஃதா மாதத்தில் (மார்ச் - 628) உம்ரா செய்வதற்காக நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் மக்காவுக்கு புறப்பட்டார்கள். எனினும் மக்காவாசிகள் முஸ்லிம்களை வரவிடாமல் ஹுதைபியா என்ற இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட்டார்கள். பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் திரும்பி வருவது தாமதமானதால் உஸ்மான் (ரலி) கொலை செய்யப்பட்டுவிட்டார்கள், என்ற வதந்தி பரவியது.

உடனே, எல்லா நபித்தோழர்களும் நபி (ஸல்) அவர்களின் கையில், சாகும் வரை போராடுவோம், என்று ஒப்பந்தம் செய்து கொண்ட வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பைஅதுர் ரிள்வான் என்ற உடன்படிக்கை நடந்ததும் இநத மாதத்தில் தான். இந்த ஒப்பந்தம் செய்து கொண்டவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டதாக குர்ஆன் வசனம் இறங்கியது. கடைசியாக மக்கா காஃபிர்களே இறங்கி வந்து முஸ்லிம்களிடம் செய்து ஹுதைபியா உடன்படிக்கையை தெளிவான வெற்றி - மாபெரும் வெற்றி என்று குர்ஆன் வர்ணிக்கிறது. போர்க்காலத்தில் படையை இரண்டாகப் பிரித்து ஒவ்வொரு ரக்அத்தாக (வித்தியாசமான முறையில்) தொழும் தொழுகை போர்த்தொழுகை. இந்த போர்க்காலத் தொழுகையின் சட்டம் இறங்கியதும், முதன் முதலாக அமுல்படுத்தப் பட்டதும் இந்த மாதததில் தான். இந்த ஆண்டு துல்கஃதா முதல் தேதி (13, மார்ச் - 628) முஸ்லிம்கள் இணைவைப்பாளர்களை திருமணம் முடிப்பது தடைசெய்யப்பட்டது.

ஹிஜ்ரி - 7:
மக்காவாசிகள் ஏற்படுத்திய தடையின் காரணமாக கடந்த வருடம் செய்ய முடியாத உம்ராவை நிறைவேற்றுவதற்காக ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு துல்கஃதா 1- ம் தேதி (மார்ச் - 629) மக்காவுக்கு புறப்பட்டார்கள். இதே மாதத்தில் தான், மைமூனா (ரலி) அவர்களை அவர்களை நபி (ஸல்) திருமணம் முடித்துக் கொண்டார்கள். நபியவர்கள் செய்த கடைசி திருமணம் இதுதான்.

ஹிஜ்ரி - 8:
இந்த ஆண்டின் துல்கஃதா வில் கைஸ்பின் ஸஃத் (ரலி) அவர்களின் தலைமையில் 400 பேர் கொண்ட சிறுபடையை ஸுதா என்ற கோத்திரத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் துல்கஃதா பதினெட்டாம் தேதி (9, மார்ச் - 630) நேரடியாக நபி (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். .இதே மாதத்தில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் சிறு படையை யமன் தேசத்திலுள்ள ஹம்தான் என்ற பிரிவினரிடம் நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்களும் ஆறு மாதமாக இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுத்தார்கள்.

எனினும், அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்களை திரும்ப அழைத்துக் கொண்டு அலீ (ரலி) அவர்களை சில தோழர்களோடு அங்கு அனுப்பி வைத்தார்கள். அலீ (ரலி) அவர்களுடைய கரத்தில் அவர்கள் அனைவருமே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். இதே மாதம் 18 ஆம் இரவு (9, மார்ச் - 630) நபி (ஸல்) அவர்கள் ஜியிர்ரானா என்ற இடத்திலிருந்து உம்ராவுக்குப் புறப்பட்டார்கள்.

ஹிஜ்ரி - 9:
இந்த ஆண்டு துல்கஃதா மாதம் (பிப்ரவரி - 631) அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். இது, ஒரு கருத்தின்படி ஹஜ் கடமையாக்கப் பட்ட பிறகு முஸ்லிம்கள் செய்யும் முதல் ஹஜ்ஜாகும்.


ஹிஜ்ரி - 10:
இந்த ஆணடு துல்கஃதா மாதம் 25 ஆம் தி (22. பிப்ரவரி - 632) நபி (ஸல்) அவர்கள் மதீனாவலிருந்து ஹஜ்ஜத்துல் விதாவுக்காக புறப்பட்டார்கள். இந்த துல்கஃதா மாதத்தில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பல நபித்தோழர்களும் நல்லவர்களும் உலகை விட்டும் பிரிந்திருக்கிறார்கள். அபூதர் கிஃப்பாரி (ரலி) (ஹிஜ்ரி- 32; ஜூன் - 653) அபூஹுரைரா (ரலி) (ஹிஜ்ரி- 57; செப்டம்பர் - 677) பர்ரா இப்னு ஆஜிப் (ரலி), (ஹிஜ்ரி- 72; மார்ச் - 792) அலா இப்னுல் ஹள்ரமீ (ரலி) (ஹிஜ்ரி- 21; அக்டோபர் - 642)  கப்பாப் பின் அரத் (ரலி) (ஹிஜ்ரி- 37; ஏப்ரல் - 658) போன்ற நபித்தோழர்களும் இமாம் தாரமீ (ரஹ்) (ஹிஜ்ரி- 255; அக்டோபர் - 869) இமாம் தாரகுத்னீ (ரஹ்) (ஹிஜ்ரி- 485; அக்டோபர் - 995) போன்ற இமாம்களும் துல்கஃதா மாதத்தில் வஃபாத்தானார்கள். மொகலாயப் பேரரசின் மிகச் சிறந்த ஆட்சியாளர் ஔரங்கசேப் (ரஹ்) அவர்களும் இம்மாதத்தில் (28, 1118; கி.பி. பிப்ரவரி - 1707) மரணித்தார்கள்.

விடுதலைப் போராட்டம்:
வங்கதேசத்தில் ஆங்கிலேயனுக்கு எதிராகப் போராடிய ஸிராஜுத்தௌலாவும் (ஹிஜ்ரி - 1170; கி.பி. ஜூலை - 1757) தென்னிந்தியாவில் ஆங்கிலேயனுக்கு எதிராகப் போராடிய திப்பு சுல்தானும் இம்மாதத்தில் (ஹிஜ்ரி - 1213; கி.பி. ஏப்ரல் - 1799) ஷஹிதாக்கப் பட்டார்கள். ஆங்கிலேயனுக்கு எதிராகப் போராடிய மாபெரும் மார்க்க ரோஷமுள்ள தியாகி ஷாஹ் இஸ்மாயீல் ஷஹித், சைய்யித் அஹ்மத் ஷஹித் ஆகியோர் இம்மாதத்தில் தான் (ஹிஜ்ரி - 1246; கி.பி. - மே, 1881) ஷஹிதாக்கப் பட்டார்கள். ஆதார நூற்கள்: இஸ்லாமீ மஹினோங்கே ஃபாளாயிலோ அஹ்காம், அஹ்தெ நுபுவ்வத் கே மாஹொஸால்)