Thursday, 20 June 2019

*மார்க்கவியல் என்பது.....*


*இஸ்லாமியக் கல்வியின் கல்வியாண்டு ஆரம்பமாகவிருக்கும் இந்நேரத்தில் மக்களிடம் குர்ஆன், சுன்னாவின் ஆக்கப்பூர்வமான அறிவும் அமலும் எந்த அளவுக்கு இருக்கிறது? என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய அதே சமயம் இஸ்லாமியக் கல்வியை போதிக்கக் கூடிய கலாசாலைகளும் அங்கிருந்து வெளியேறுபவர்களின் தரங்களைப் பற்றியும் அதிகம் சிந்திக்க வேணடிய கட்டாயத்தில் இருக்கிறோம்.*

மத்ரஸாக்களின் கல்வி போதனைக்கு உலக அளவில் ஏற்படக்கூடிய தடைகளும் எதிர்ப்புகளும் ஒரு புறம் இருந்தாலும் சமூகத்திற்குள்ளே மார்க்கத்தை முழுமையாக கற்றுத் தேர்ந்தவர்கள் பரவலாக இருக்க வேண்டும், என்ற சிந்தனை எந்த அளவுக்கு இருக்கிறது? என்பதையும் யோசிக்க வேண்டும்.

*ஏழு வருடத்திற்குள்ளே மார்க்கத்தையும் முழுமையாக படித்துவிட வேண்டும். பல டிகிரிகளையும் முடித்த பட்டதாரியாகவும் மத்ரஸாவிலிருந்து வெளியாக வேண்டுமென்று நினைத்தால் விளம்பரத்திற்கு வேண்டுமானால் அது பொருத்தமாக இருக்குமே தவிர நடைமுறை சாத்தியமில்லை, என்பதே நிதர்சன உண்மை.*

*ஏழு வருடமும் மார்க்கக் கல்வியை மட்டுமே போதித்தாலும் கூட திறமையான தகுதியான மார்க்கக் கல்வியாளரை உருவாக்குவது அவ்வளவு சாதாரண காரியமல்ல, என்பது சம்பந்தப் பட்டவர்களின் உள்மனம் கண்டிப்பாக சாட்சி சொல்லும், என்பதில் எந்த சந்தேதமுமில்லை.*
*கல்லூரிக் கல்வியுடன் மார்க்கத்தையும் தேவையான அளவுக்கு கற்றுக்கொடுக்கக் கூடிய பள்ளிக்கூடங்களையும் கல்லூரிகளையும் அதிகமாகவும் திறமையாகவும் சமூகம் கட்டாயம் நடத்த வேண்டும். இல்லையானால் நிறைய படித்திருந்தும் குளிப்பின் கடமை கூட தெரியாத அவல நிலை ஏற்படலாம். அவ்வப்போது சுத்தம், தொழுகை, நோன்பு போன்றவற்றின் சட்டங்களை கட்டாயம் திந்திருக்க வேண்டுமென்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயமாகும். (அப்படிப்பட்ட அவ்வப்போது அவசியம் அறிந்திருக்க வேண்டிய) கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமை, என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறியுள்ளார்கள்.*

*நல்ல கல்வி கிடைக்கிறது, என்பதற்காக ஓரிறைக் கொள்கைக்கு வேட்டு வைக்கக் கூடிய மற்ற பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளைச் சேர்த்து நிரந்தரப் பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.*

*இந்நிலையில் மார்க்கவியல் சார்ந்து போதிக்கும் கல்விக்கூடங்கள் பெருமளவில் நிறுவப்படுவது அவசியமாகிறது.*
*அதே சமயம் மார்க்கக் கல்வி என்பதை ஒரு குறிப்பிட்ட வருடத்திற்குள் அல்லது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் இருப்பதாக நாம் நினைத்துக் கொள்வது நம்முடய மாபெரும் சிந்தனைக் கோளாறு, என்றே சொல்ல வேண்டும்.*

ஷரீஆ கல்வியில் பல கலைகள் இருக்கின்றன. தஃப்ஸீர், தஃப்ஸீர் செய்வதற்கான அடிப்படை விதிகள் அடங்கிய உசூலுத்தஃப்ஸீர், குர்ஆனை முறையாக ஓதுவதற்கு உறுதுணையாக இருக்கும் தஜ்வீதுக்கலை, இஸ்லாத்தின் சரியான உண்மையான அகீதா எனும் கொள்கையியல்,
ஹதீஸ்,  நபிமொழிகளின் வார்த்தைகளுக்கு மொழியியல் மற்றும் மார்க்கவியல் விளக்கம் சொல்வதற்கான இல்மு திராயதில் ஹதீஸ், நபிமொழிகளை அறிவிக்கும் அறிவிப்பாளர் வரிசைகள் தொடர்பான இல்மு ரிவாயதில் ஹதீஸ், அதிலும் நபிமொழி அறிவிப்பாளர்களின் அறிமுக வரலாற்றை விளக்கும் இல்மு அஸ்மாயிர் ரிஜால், அறிவிப்பாளர் வரிசையின் பல படித்தரங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு நபிமொழியின் நம்பகத்தன்மையை நிர்ணயிக்கும் இல்மு திராஸதில் அஸானீத்,
மனதை சுத்தப்படுத்தும் தஸவ்வுஃப், மக்களின் வாழ்வியல் மற்றும் வணக்கவியல் தொடர்பான சட்டப்பிரச்சினை பற்றி அலசும் இல்முல்ஃபிக்ஹ், ஃபிக்ஹ் சட்டங்களை தொகுத்தெடுக்கும் வழிமுறைகளை வகுத்துக் கொடுக்கும் இல்மு உசூலில் ஃபிக்ஹ்,
சர்வதேச மற்றும் தேசிய அளவில் தொகுக்கப்படும் மார்க்க நூற்களின் மொழிகளான அரபி மற்றும் உர்தூ போன்ற மொழியறிவு, அரபி இலக்கண இலக்கியத்தை சொல்லித்தரும் மன்திக், மஆனீ, நஹ்வு, ஸர்ஃப்,  மற்றும் லுகா போன்ற அரபி மொழியைக் கற்றுத்தரும் மொழிச்சட்டவியல்,
தொழுகை நேரங்கள் அறிதல், கிப்லா அமைத்தல் மற்றும் தலைப்பிறைத் தொடர்பான தகவல்களை சொல்லித்தரும் இல்முல் ஃபலக் எனும் விண்ணியல்,
ஒருவர் இறந்த பின் சொத்துக்களை பங்கீடு செய்வதற்கான நடைமுறை அனுபவ உதாரணங்களின் மூலம் பயிற்சி கொடுக்கும் இல்முல் ஃபராயிள்,1440 ஆண்டுகள் மட்டுமல்ல ஆதம் நபி முதல் இன்று வரையிலான இஸ்லாமிய மற்றும் இந்திய வரலாற்றுத் துறை, அரபி, உர்தூ நூற்களை சுயமாக வாசித்து பயிற்சி பெறும் முதாலாஆ எனும் நூலாய்வு போன்ற எண்ணற்ற கலைகளை இந்த குறிப்பிட்ட ஆண்டுகளில் கற்றுத் தேர வேண்டும்.

*இந்த அனைத்துக் கலைகளிலும் குறிப்பிட்ட வருடங்களில் கண்டிப்பாக முழுமை அடைய முடியாது. ஒவ்வொரு துறையிலும் ஏதோ சில குறிப்பிட்ட நூற்களை மட்டுமே கற்றுக் கொடுக்க முடியும்.*

மத்ஹபுகளை மறுக்கும் கைரு முகல்லிதீன்கள் உருவாகும் வரை ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசை தொடர்பான துறைகளில் மத்ரஸாக்களில் கூட அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லை, என்று தான் சொல்ல வேண்டும். ஃபிக்ஹுடைய சட்டங்களில் சில கிதாபுகள் மட்டுமே படித்து விட்டு வெளியேறும் போது சமூகத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமன்று.
வரலாற்றுத் துறையை எடுத்துக் கொண்டால் மிகவும் விரிவானது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு, அதையடுத்து நபித்தோழர்கள், தாபியீன்கள், நல்லோர்கள், பின்னர் வந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வரலாறு, நபிமார்களின் வரலாறு, உலக நாடுகளில் இஸ்லாம் பரவிய வரலாறு, இன்றைய இஸ்லாமிய வளர்ச்சி வரலாறு, இஸ்லாமிய ஆட்சி உலகில் பரவிய வரலாறு, இஸ்லாமிய சமூகம் சாதித்த சாதனைகள் வரலாறு, சமூகம் சந்தித்த சோதனைகள் வரலாறு, யுத்த வரலாறு, இஸ்லாமிய அரசியல் கட்டமைப்பு வரலாறு என வரலாற்றுத் துறை விரிந்து கொண்டே செல்லும்.

*ஆனால்,  இவையனைத்தையும் முறையாகவும் முழுமையாகவும் சொல்லிக் கொடுப்பதற்கான அவகாசம் கிடையாது. இதற்கிடையே பட்டப்படிப்புகளையும் சேர்த்துக் கொண்டால் ஆலிமிய்யத்தின் தரம் எந்நிலையில் இருக்கும்? என்பதை புரிந்து கொள்ள முடியும்.*

எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் இருப்பது மட்டுமே திறமையான அறிஞருக்கு அடையாளம், என்பதை யாரும் ஏற்க மாட்டார்கள்.
இஸ்லாமிய வரலாற்றுத்துறை தொடர்பாக முழுத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்கள் தமிழகத்தில் எத்தனை பேர் இருப்பார்கள்?மார்க்கச் சட்ட விஷயத்தில் எக்கேள்விக்கும் உடனடியாக தீர்வு காண்பவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?

*ஹதீஸ் துறையில் இல்மு ரிவாயதில் ஹதீஸ், இல்மு திராயதில் ஹதீஸ், இல்மு அஸ்மாயிர்ரிஜால், இல்முல் அஸானீத், உட்பட நபிமொழியின் அனைத்துத் துறைகளிலும் கரை கண்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?*
*அப்படி யாருமே இல்லை, என்று சொல்ல வரவில்லை.*

*ஆனால், மார்க்கவியல் தொடர்பான தஃப்ஸீர்,  ஹதீஸ், ஃபிக்ஹ், தஜ்வீத், கிராஅத், அகீதா, என ஒவ்வொரு துறையிலும் முழுமையாக தேர்ச்சி அடைந்த ஒரு குழு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு காலத்திலும் இருக்க வேண்டாமா? அதிலும் ஒரு குழு தஃப்ஸீரில் மட்டுமே ஆய்வு செய்பவர்களாக இருக்க வேண்டும். மற்றொரு குழு ஹதீஸில் மட்டும் ஃபிக்ஹில் மட்டும் தஜ்வீதில் மட்டும் இப்படி ஒவ்வொரு துறையிலும் தடம் பதிக்கக் கூடிய தனித்தனிக் குழு இருக்க வேண்டாமா? அப்படியில்லையானால் உங்களில் ஒரு பிரிவினர் மார்க்கத்தை விளங்குவதற்கு தயாராக வேண்டாமா? என்று ஆர்வமூட்டக்கூடிய உத்தரவிடக்கூடிய குர்ஆன் வசனத்திற்கு என்ன தான் பொருளாகும்?!*

*மருத்துவத்துறை விவசாயத்துறை போன்ற ஒவ்வொரு துறைசார்ந்த வல்லுணர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் போது மார்க்கக்கல்விக்காககே தங்களை அர்ப்பணிக்கக்கூடிய தனித்தனி குழுக்கள் ஒவ்வொரு ஊரிலும் உருவாவதற்கு நாம் எப்பொழுது தான் முயற்சி செய்யப் போகிறோம்!*
                                     *(தலையங்கம்,* *யூசுஃபிய்யா ராஷித் மாதஇதழ் ஜூன் 2019)*



Monday, 11 February 2019

E CODE ஹலால் ஹராம்


எதைச் சாப்பிடலாம்? எதைச் சாப்பிடக்கூடாது? என்பதற்கும் இஸ்லாம் தெளிவான வரையறைகளை வகுத்திருக்கிறது. மனிதன் சாப்பிடும் உணவுப் பொருட்களுக்கும் அவனிடமிருந்து வெளிப்படும் செயல்பாடுகளுக்கும் மத்தியில் நெருங்கிய தொடர்பு உண்டு. நல்லவற்றைச் சாப்பிடும் போது அவனிடமிருந்து நல்ல செயல்பாடுகளையும் நல்ல குணங்களையும் எதிர்பார்க்கலாம்.

உணவுப்பொருட்கள் கெட்டவையாக இருக்கும் போது அவனிடமிருந்து வெளிப்படும் செயல்களும் குணங்களும் சகித்துக் கொள்ள முடியாதவையாகவே இருக்கும். எனவே தான், அல்லாஹ் குர்ஆனில் இறைத்தூதர்களுக்குக் கூட தூதர்களே! நீங்கள் நல்லவற்றிலிருந்து சாப்பிடுங்கள்! மேலும் (தரமான) நல்லமல்களைச் செய்யுங்கள்! , என்று உத்தரவிடுகிறான்.

உணவுக்கலாச்சாரம்
உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் உண்டுதான் உயிர்வாழ்கின்றன, உண்பதும் குடிப்பதும் உலகின் இயல்பான நடைமுறையாகவே பார்க்கப் பட்டாலும் இஸ்லாத்தின் பார்வையில் உண்பதும் குடிப்பதும் மிக உயர்ந்த இஸ்லாமிய கலாச்சாரமாகவும் கருதப்படுகிறது. யார் நம்முடைய தொழுகையைத் தொழுது நம்முடைய கிப்லாவை முன்னோக்கி நம்முடைய தபீஹா எனும் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட உணவைச் சாப்பிடுகிறாரோ அவர் தான் முஸ்லிம், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது இங்கு நினைவுகூரத் தக்கது. (புகாரி - 391)


தங்களுக்கு எது ஹலால்? எதைச் சாப்பிடலாம்? எதைச் சாப்பிடக்கூடாது? எந்த வியாபாரம் ஹலால்? எந்த வியாபாரம் ஹராம்? என்று நபித்தோழர்கள் கேட்ட கேள்விகளும் பதில்களும் குர்ஆனிலும் ஹதீஸிலும் நிரம்பவே காணக்கிடைக்கும். அதன் மூலம் உணவுப்பொருட்களுக்கான மார்க்க வரம்புகளின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களுக்கு தங்களுடைய முஸ்லிமல்லாத தாயார் கொண்டு வந்த அன்பளிப்பை வாங்கலாமா? வாங்கக் கூடாதா? என்பதை அறிவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் மார்க்கச் சட்டம் கேட்டிருக்கிறார்கள், என்றால் கிடைத்ததையெல்லாம் உண்பதென்பது உம்மத்தெ முஹம்மதிய்யாவின் உன்னத நடைமுயைக இருக்க முடியாது, என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

எது ஹராம்?
இஸ்லாத்தைப் பொருத்தவரை ஐந்து காரணங்களில் ஏதாவது ஒரு காரணம் ஒரு பொருளில் இருந்தால் அந்தப் பொருளைச் சாப்பிடுவது தடை செய்யப்பட்டதாகக் கருதப்படும்.

1. உடலுக்கோ அறிவுக்கோ தொல்லை தரக்கூடியதாக இருந்தால் அவற்றை அருந்துவது கூடாது. தற்கொலை செய்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது, என்பது யாரும் அறியாத ஒன்றல்ல. உங்களை நீங்களே கொன்று விடாதீர்கள்! (அல்குர்ஆன் - 4:29)
உங்களுடைய கரங்களாலேயே நீங்கள் உங்களைஅழிவில் போட்டுக் கொள்ளாதீர்கள், (அல்குர்ஆன் - 2:195) என்பவை குர்ஆனுடைய உத்தரவுகள். எனவே தனக்கு தொல்லை தரும் பொருட்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். யார் விஷத்தைக் குடித்து தற்கொல் செய்து கொள்கிறாரோ அவர் விஷத்தை குடித்த நிலையிலேயே நரகில் சதாவும் நிரந்தரமாக கிடப்பார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது - 10198)
2.  போதையூட்டகூடிய பொருட்கள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது, என்பது வெளிப்படை.
3. அசுத்தமான பொருட்களை உண்பதும் குடிப்பதும் தடை செய்யப்பட்டவையாகும். (நபியே நீர் இவர்களிடத்தில்) கூறும்! எனக்கு அருளப்பபட்ட வஹியில் உண்பவர்களுக்கு எந்த உணவும் தடை செய்யப்பட்டதாக நான் பெற்றுக் கொள்ள வில்லை. ஆனால், செத்த பிராணியையும் ,ஓடும் இரத்தத்தையும் பன்றி இறைச்சியையும் தவிர. திட்டமாக இவை அசுத்தங்களாகும்... (அல்குர்ஆன் - 6:145)
4. நடுநிலையான மனித இயல்புக்கு ஒவ்வாத அருவறுப்பான அசூசையான பொருட்களும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. எச்சில், சலி போன்றவை அசுத்தம் இல்லையானாலும் மனித சுபாவத்திற்கு ஒவ்வாதவையாகும். இது போன்ற பொருட்களையும் சாப்பிடக்கூடாது. .... மேலும் (அந்த நபி) அவர்களுக்கு தூய்மையானவற்றை ஆகுமாக்கி அனுமதிக்கின்றார். தூய்மையற்ற அருவறுக்கத்தக்கவற்றை தடை செய்கிறார்.... (அல்குர்ஆன் - 7:157)
5. ஒருவர் தனக்கு சொந்தமில்லாத அடுத்தவர்களுடைய பொருட்களை அவருடைய முழு மனதிருப்தியுடனான அனுமதி இருந்தாலே தவிர அந்தப் பொருள் அவருக்கு ஹலலாகாது.

பன்றி, நாய் போன்ற பிராணிகள் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. அவ்வாறே ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை உண்பது ஆகுமாக்கப் பட்டிருந்தாலும் ஷரீஅத் முறைப்படி ஒரு முஸ்லிம் (அல்லாஹ்வின் பெயர் கூறி) முறைப்படியாக அறுத்திருக்க வேண்டும். இல்லையானால் அதை உண்பது ஹலாலாகாது. அவ்வாறே, அறுக்கப்படாமல் தானாகவே இறந்து விட்டாலும் அது செத்த பிராணி என்ற பட்டியலில் சேர்ந்து உண்பது ஹராமாகிவிடும்.

பன்றிக் கொழுப்பு
பெரும்பாலும் எல்லா மேற்கத்திய நாடுகளிலும் முதலாம் வகை மாமிசமாக தேர்ந்தெடுக்கப்படுவது பன்றியாகவே இருந்தது. எனினும், பன்றியின் கொழுப்பை ஒதுக்கி விடுவார்கள். அதை எதற்கு வீணாக்க வேண்டும், என்பதற்காக முதலகட்டமாக அதன் மூலம் சோப்புகளை தயார் செய்தனர். அதில் வெற்றி கண்டனர்.

அடுத்த கட்டமாக முழுவீச்சில் இந்த பன்றிக் கொழுப்பை பல வேதியியல் நொதிப் பொருட்களைக் கொண்டு அமிலங்களாக மாற்றி விற்பனைக்கு இறக்கி விட்டனர். எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் போது உணவுப் பொருளாக இருந்தாலும் மருந்துப் பொருளாக இருந்தாலும் அப்பொருட்களின் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகளை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். என்ற சட்டம் ஐரோப்பாவில் இருந்தது.

இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதை பன்றிக் கொழுப்பு (Pig fat) என்றே குறிப்பிட்டு வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இதனால், இஸ்லாமிய நாடுகளில் அப்பெருட்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது. எனவே, பன்றிக்கொழுப்பு என்பதற்குப் பதிலாக விலங்குகள் கொழுப்பு (Animals fat) என்று எழுதினர்.

ஆனால், அது எந்த விலங்கு என்று தெரியாது. ஆடு, மாடுகளாக இருந்தாலும் அவை இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்டவையா? என்பதும் தெரியாது. எனவே, இஸ்லாமிய நாடுகளில் அப்பொருட்கள் விலை போகவில்லை. எனவே, அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்று எழுதுவதையும் தவிர்த்துவிட்டு குறியீட்டு மொழியை (Coding language) பயன்படுத்தத் துவங்கினர்.

இந்த வகையான ஈ கோடு பற்றிய விபரம் அப்பொருட்களைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சற்றும் அறிய வாய்ப்பில்லை. பற்பசை, ஷேவிங் கிரீம், சிவிங்கம், சாக்லேட், பிஸ்கட்ஸ், இனிப்புப் பண்டங்கள், டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். (இணைய தளச் செய்தி)

E code குழப்பங்கள்
இணைய தளங்களில் சில ஈகோடுகளைக் கொடுத்து அவையனைத்தும் பன்றிக் கொழுப்பிலிருந்து செய்யப் பட்டவையாகும், என்றும் கூறப்பட்டுள்ளது. அவற்றில் சில: E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234. E252, E270, E280, அதே சமயம் இணைய தளங்களில் இதற்கு மாற்றமான செய்திகளும் வராமல் இல்லை. பல நு இலக்கங்களை ஹராம் என்று அடையாளமிடப்பட்டு அவற்றை விட்டு விலகி இருக்குமாறு அறிவுரை கூறப்ப்டுகிறது. இவற்றின் உண்மைநிலை என்ன? என்பது பற்றி அறியாமலேயே நல்ல தகவலைத் தான் பரப்புகிறோம், என்ற அடிப்படையில் பலரும் இவற்றை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

கேட்பதையெல்லாம் பேசிக் கொண்டிருந்தால் அவன் பொய்யன் என்பதற்கு அதுவே போதுமான ஆதாரமென்பது நபியவர்களின் கூற்றில்லையா? ஈ இலக்கத்தை வழங்கும் ஏக நிறுவனமான ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ கருத்துப் படி உணவு சேர்மானங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இலகுத் தன்மைக்காகவுமே இந்த ஈ இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

எல்லா ஈ இலக்கங்களும் பன்றிக் கொழுப்பைத் தான் உணர்த்துகின்றன, என்பது தவறான வாதமாகும். உதாரணமாக நு100 இது செம்மஞ்சள், மஞ்சள் நிறத்தைத் தருவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை நிறப்பொருளாகும். இவ்வகை நிறப்பொருள் மஞ்சள் தாவரத்தின் ஒரு வகை கிழங்கிலிருந்து பிரித்தெடுக்கப் படுகிறது.

ஈ 110 - மஞ்சள் நிறத்தை தரக்கூடிய ஒரு நிறப்பொருளாகும். இது இராசாயன செய்முறை மூலம் பெறப்படுகிறது.

ஈ 120 சிவப்பு நிறத்தைத் தரக்கூடிய நிறப்பொருளாகும். இது ஒரு வகை பெண்வண்டின் உலர்ந்த உடல் பகுதிகளிலிருந்து பெறப்படுகிறது.

ஈ 140 பச்சை நிறத்தைத் தரக்கூடிய நிறப்பொருளாகும். இது முழுக்க முழுக்க தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது.

ஈ 153 இந்த நிறப்பொருளும் தாவர மூலப் பொருட்களிலிருந்தே பிரித்தெடுக்கப்படுகிறது. ஆக மேலே கூறப்பட்டுள்ள பெரும்பாலான

ஈ இலக்கங்கள் பன்றிக் கொழுப்பை அறிவிக்காது என்பதையே ஆய்வுகள் உணர்த்துகின்றன.

ஈ 120 எனப்படும் உணவுச் சேர்மானம் மட்டுமே ஒரு வகை வண்டிலிருந்து பெறப்படுவதும் ஏனையவை பல தாவரப் பொருட்களாகவும் இரசாயனச் சேர்க்கைகளாகவும் காணப்படுகிறது. (டபிள்யூ டபிள்யூ டபிள்யூ . ஜஃப்னா முஸ்லிம் டாட் காம்)

இந்த ஈகோட் தற்பொழுது சர்வதேச ரீதியில் ஐ.என்.எஸ் எனவும் அழைக்கப்படுகிறது.  இருப்பினும் இது உணவுச் சேர்க்கைகளின் மூலங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு முமைமை அல்ல. ஒரே ஈ இலக்கம் கொண்ட பலபதார்த்தங்கள் ஹலால் மூலப் பொருட்களிலிருந்தும் ஹராம் மூலப் பொருட்களிலிருந்தும் தயாரிக்க முடியும். எனவே, இந்த முறைமையை வைத்து ஓர் உணவு உற்பத்தி ஹலாலா? இல்லையா? என்பதைக் கண்டுபிடிப்பது எளிதான காரியமல்ல(www.hac.ik/ta)

E code  பற்றிய தெளிவுகள்
ஈ இலக்கங்கள் தொடர்பான இணையதளத்தில் பரவலாக பகிரப்படும் செய்திகள் இவை. இந்நிலையில் ஹலால் ஹராம் தொடர்பாக நாம் எம்மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டுமென்பதற்கு சில அடிப்படையான செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.ஹலால் ஹராம் - வார்த்தைகளில் கவனம்
1. மார்க்கத்தில் ஹலால், ஹராம் என்கிற வார்த்தை யாரும் எந்த இடத்திலும் அவரவர் இஷ்டத்திற்கு உபயோகப்படுத்தும்படியான சாதாரண வார்த்தைகள் அல்ல. அந்த வார்த்தைகள் முழு மனித சமுதாயத்திற்கும் வாழ்க்கையின் வரம்பை வரையறுக்கக் கூடியவை. எனவே, தான் மார்க்கச் சட்ட வல்லுணர்கள் சட்டத்திற்குட்பட்ட வார்த்தைகளை தரம் வாரியாக வகைப்படுத்தியுள்ளனர்.
சிலவற்றுக்கு ஃபர்ளு, என்றும் சிலவற்றுக்கு வாஜிப் என்றும் சிலவற்றுக்கு சுன்னத் சிலவற்றுக்கு ஹராம் என்றும் சிலவற்றுக்கு மக்ரூஹ் தஹ்ரீமீ என்றும் சிலவற்றுக்கு மக்ரூஹ் தன்ஜீஹ் என்றும் இது போன்ற இன்னும் பல வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஏனெனில், குர்ஆன், சுன்னாவுடைய ஆதாரங்களின் தரங்களின் வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு அந்த மாறுபட்ட வார்த்தைகளின் மூலம் தெளிவு படுத்தியுள்ளனர்.

மனிதக் காரியங்களுக்கான (கூடும், கூடாது) போன்ற சட்டங்களை வகுக்கும் போது சட்டத்தின் வார்த்தைகள் மிக முக்கியமானவை. இது நாட்டுச் சட்டத்திலும் கவனிக்கப்படும் அம்சமாகும். சட்ட வல்லுணர்கள் மிகுந்த பேணுதலுடன் சட்டத்தின் நிலைகளை பல்வேறு வார்த்தைகளின் மூலம் தெளிவு படுத்தியுள்ளனர்.

நாமாக எதையும் ஹலால் என்றோ ஹராம் என்றோ எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் சில வெளிப்படையான அடையாளங்களை மட்டும் வைத்து முடிவு செய்துவிடக்கூடாது. அல்லாஹ்வின் மீது பொய்யை ஏற்றிச் சொல்வதற்காக உங்கள் நாவுகள் பொய்யாக வர்ணிப்பதை (சில பிராணிகள் பற்றி) இது ஹலால் (வேறு சில பிராணிகள் பற்றி) இது ஹராம், என்று கூறாதீர்கள்.... என்ற திருக்குர்ஆன் வசனம் (16:116) இங்கு நினைவு கூரத்தக்கது.

ஒரு ஹராமை ஹலாலாக்குவது எவ்வாறு குற்றமோ அவ்வாறே ஒரு ஹலாலை ஹராமாக்குவதும் குற்றமாகும். எனவே, நாங்கள் மிகவும் பேணுதலாக இருக்கிறோம், என்று நினைத்துக் கொண்டு சந்தேகத்திற்கிடமானவற்றையெல்லாம் ஹராம் ஹராம் என்று சொல்லிவிடக்கூடாது.

இறைவிசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலால் ஆக்கிய தூய்மையானவற்றை ஹராமாக்காதீர்கள்! . நீங்கள் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான். என்ற திருக்குர்ஆன் வசனமும் (5:87) கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.


துறை சார்ந்த ஆய்வுக் குழுக்களின் அவசியம்
2. பன்றி இறைச்சி, பன்றிக் கொழுப்பு உட்பட பன்றியின் அனைத்து பாகங்களும் ஹராம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆடு மாடுகளாக இருந்தாலும் முறைப்படியாக அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்படாவிட்டாலோ அல்லது தானாக இறந்து விட்டாலோ அவையும் ஹராம் என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை.


அதே சமயம் பன்றிக் கொழுப்புகள் உட்பட ஹராமான பொருட்கள் கலக்கப் பட்டிருக்கின்றன, என்றால் வெறும் இணைய தளத் தகவல் மூலமாக மட்டுமோ அல்லது ஏதோ ஒரு ஆய்வாளர் அல்லது மருத்துவர் சொல்வதை வைத்து மட்டுமோ அதில் ஹராமான பொருட்கள் கலந்திருக்கிறது, என்று முடிவு செய்து ஹராம் ஃபத்வா கொடுத்து விடக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட சமயம் ஒரு பாலாடைக் கட்டிகைப் பார்த்துவிட்டு இது என்ன? என்று கேட்டார்கள். சுற்றி இருந்தவர்கள, இது அரபு நாட்டுக்கு வெளியே செய்யப்படும் ஒர் உணவு வகை. அதில் கத்தியை வையுங்கள்! அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடுங்கள்! , என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகீ - 20177)


நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பன்றிக் கொழுபு கலந்து செய்யப்படக்கூடிய ஆடை மற்றும் பன்றியின் கோரோசனை கலந்து செய்யப்படக்கூடிய ஷாம் தேசத்து பாலாடைக்கட்டி, என்று மக்களுக்கு மத்தியில் பிரபல்யமாக பேசப்பட்டது. நபியவர்களிடம் அங்கிருந்து பாலாடைக்கட்டி வந்த போது நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். அது பற்றி எதுவும் விசாரிக்க வில்லை, என்று பரவலாக ஃபத்ஹுல் முயீன் போன்ற ஃபிக்ஹ் நூற்களில் கூறப்பட்டுள்ளது.


ஈ இலக்கங்கள் தொடர்பான இணையதளத் தகவல்களை மேலே பார்த்தோம். அதிலேயே அவ்வளவு குழப்பம் இருக்கிறது. சிலர் சில இலக்கங்களை பன்றிக் கொழுப்பு என்று சொன்னால் வேறு சிலர் அவற்றில் முழுக்க முழுக்க தாவர இனம் என்று அடித்துக் கூறுகின்றனர். இது போன்ற நிலைகளில் அந்தத் துறை சார்ந்த வல்லுணர்கள் அறிஞர்கள் கொண்ட குழு இருக்க வேண்டும். அவர்களின் மூலம் முறையான ஆய்வுகள் செய்யப்பட்டு உண்மையிலேயே அவற்றில் ஹராமான பொருட்கள் கலந்துள்ளனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

எந்த ஆய்வும் இன்றி சில சமூக வலைதளங்களின் தகவல்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை சர்வ சாதாரணமாக ஹராம் என்று சொல்லி விடுவது மார்க்கச் சட்டங்களுடன் விளையாடுவதற்குச் சமமாகி விடும். எனவே, ஹராமான பொருட்கள் கலக்கப்படுகிறது, என்ற தகவல் சந்தேகத்திற்கிடமின்றி உறுதி செய்யப்பட வேண்டும்.

ஹராம் என்பதற்கான வரையறை
மது விநிகராக மாறிவிட்டால் ஹலாலாகிவிடும். எனவே, அந்த ஹராமான பொருள் தன்னுடைய ஒரிஜினாலிட்டியை இழக்காமல் அதன் அசல் தன்மையை விட்டும் மாறாமல் அப்படியே இருக்க வேண்டும். இதுவும் துறை சார்ந்த ஆய்வாளர்களின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.

கலக்கப்பட்ட ஹராமான பொருள் தன்னுடைய தனித்தன்மையை இழந்து மற்ற பொருட்களுடன் சேர்ந்து வேறொரு பொருளாக மாறிவிட்டால் அப்பொருள் கலக்கப்பட்ட பொருட்களை ஹராம் என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதை விட்டும் மக்களை தவிர்க்க முடியாத அளவுக்கு பரவலாகி விட்டபடியால் ஹராமான பொருட்கள் தன்னுடைய ஒரிஜினாலிட்டியை இழக்கும் போது அதை ஹராம் என்று சொல்லத் தேவையில்லை. (ரத்துல் முஹ்தார்)

அசுத்தமாகிவிட்ட ஜைத்தூன் எண்ணெய் அதை சோப்பாக ஆக்குவதின் மூலம் சுத்தமாகிவிடும்.  (அத்துர்ரு)

இறந்துவிட்ட கழுதை உப்பாகி விட்டால் அதை பயன்படுத்துவதில் தவறில்லை. இறந்து விட்ட பன்றி உப்பாகிவிட்டால் அதுவும் சுத்தமாகிவிடும். (ரத்துல் முஹ்தார்)

சர்கரையில் மாட்டின் எலும்புகள் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அது மார்க்க முறைப்படி அறுக்கப்பட்டதா? இல்லையா? என்று தெரியாது. எனினும், பரவலாக மக்கள் பயன்படுத்தும் அந்த சர்க்கரையை மார்க்க வல்லுணர்கள் ஹராம் என்று அவ்வளவு சீக்கிரத்தில் ஃபத்வா கொடுப்பதில்லை. அந்த எலும்புத்தூள்கள் தன்னுடைய ஒரிஜினாலிட்டியை - உண்மைத் தன்மையை இழந்து விடுவதாகவும் கூறுகின்றனர். (கிதாபுல் ஃபதாவா லி காலித் ஸைஃபுல்லாஹ் ரஹ்மானீ)

ஜெலட்டின்
ஹராமான பொருட்களைக் கலந்து தான் இன்று ஜெலட்டின் தயாரிக்கப்படுகிறது. ஜெலட்டின் கேப்ஸ்யூல்கள், வைட்டமின் சத்து மாத்திரைகள் போன்ற மருந்துப் பொருட்கள் மாட்டின் எலும்புகள், தோல், கால்நடைகளின் திசுக்கள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப் படுகின்றன.

2004 ஆம் ஆண்டு இந்திய இஸ்லாமிக் ஃபிக்ஹ் அகாடமீ நடத்திய செமினாரில் ஜெலட்டின் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. அதில், துறை சார்ந்த அறிஞர்கள், மிருகத்தின் எலும்புகள் மற்றும் தோல்கள் ரசாயண மாற்றங்களுக்கு உட்பட்டு தன்னுடைய அசல் உண்மைத் தன்மையை இழந்து விடுகிறது, என்று தீர்வு செய்ததை முன்வைத்து அதை உபயோகிப்பது தவறில்லை, என்று செமினாரில் முடிவு செய்யப் பட்டது. (நயே மஸாயில் அவ்ர் ஃபிக்ஹ் அகாடமீ கே ஃபைஸலே)

முஸ்லிம்களின் பொறுப்புணர்வு
இஸ்லாமிய உற்பத்தியாளர்கள் ஹராமான பொருட்கள் கலக்கப்படாத உற்பத்திகளை வெளிக்கொண்டுவருவதற்கான பெருமுயற்சி எடுக்க வேண்டும். அதன் மூலம் முஸ்லிம்கனை ஹராம் தொடர்பான சந்தேகத்திலிருந்து விலகிக் கொள்வதற்கான வழி ஏற்படும்.

முஸ்லிம்கள் ஹராமான பொருட்கள் கலந்திருப்பதாகக் கூறப்படும் திண்பண்டங்களை விட்டும் தவிர்ந்தே இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான பொருட்களை விட்டும் தவிர்ந்திருப்பதே மார்க்கப்பற்றுள்ள முஸ்லிமுக்கு ஏற்றதாகும்.

நபி (ஸல்) அவர்களும் உனக்கு சந்தேகம் தருபவற்றை விட்டும் விலகி சந்தேகத்திற்கிடமில்லாதயே தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு உபதேசித்துள்ளார்கள். எனவே, ஹராமான பொருட்கள் கலந்திருப்பதாக சந்தேகம் வரும் பொருட்களை விட்டும் தவிர்ந்து கொள்வதே உண்மை முஸ்லிமின் அடையாளமாகும்.

அதே சமயம் அப்படிப்பட்ட பொருட்களை யாராவது சாப்பிட்டால் அவரிடம் நீங்கள் ஹராமைச் சாப்பிடுகிறீர்கள், என்று சொல்வதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். மனித உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கிழைக்கக் கூடியதாக இருக்கக் கூடிய பொருட்களை முற்றிலும் ஒதுக்கி விட வேண்டும்.

அவற்றில் ஹராமான பொருட்கள் கலக்கப்படா விட்டாலும் சரியே! யார் மண்ணைச் சாப்பிடுவாரோ அவர் தன்னைக் கொலை செய்வதற்கு முயற்சி செய்தவரைப் போல் ஆகிவிடுவார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகீ) எனவே, தான், இறைச்சி துர்நாற்றம் எடுத்துவிட்டால் அதைச் சாப்பிடுவது கூடாது, என்று சட்டவல்லுணர்கள் கூறியுள்ளனர்.

அஜினமோட்டோ
அஜினமோட்டோ இயற்கையாக விளைவிக்கப்படும் கரும்பிலிருந்தே தயாரிக்கப் படுவதாக கூறப்படுகிறது. எனவே அதைத் தயாரிப்பவர்கள் அதில் தீங்கு இல்லை, என்று சொன்னாலும் பலவிதமான தீங்குகள் அதில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜினமோட்டோவின் மூலம் தலைவலி, நரம்பு பாதிப்பு, இதயப் பாதிப்பு, மலட்டுத் தன்மை போன்றவை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

உண்மையிலேயே இபபடியான தீங்குகள் அவற்றில் இருந்தால் அதைச் சாப்பிடக்கூடாது. தொடர்ந்து சாப்பிடுவதால் தர்ன இப்படியான தொல்லைகள் ஏற்படும், என்றால் எப்பொழுதாவது சாப்பிடுவதை ஹராம் என்று சொல்லக்கூடாது. அவற்றில் ஹராமான பொருட்கள் ஏதும் கலக்காத வரை பொதுவாக எல்லா நிலையிலும் தீங்கு இல்லாவிட்டாலும் அதை ஹராம் என்று சொல்லக்கூடாது.



இதுவல்லவா தலாக்!


இன்று பெண்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் மசோதாக்கள் தாக்கல் செய்யப் படுகின்றன, என்றால் அதற்கு நாமும் நம்முடைய செயல்பாடுகளும் முக்கியக் காரணம் என்பதை மறுத்துவிட முடியாது. நம்முடைய மார்க்கம் கூறும் குடும்பவியல் சட்டங்களை முறையாகக் கற்றுக் கொள்ளவும் இல்லை. அதைச் செயல்படுத்துவதிலும் போதிய ஆர்வம் காட்டப் படுவதில்லை. விவாகரத்து பற்றியும் விவாகரத்து கொடுக்கும் முறை பற்றியும் இஸ்லாம் காட்டிய சிறப்பான வழிகாட்டுதலைப் போல் உலகின் வேறெந்த மதமும் காட்டியிருக்க முடியாது.

ஏதோ சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த இஸ்லாத்தையும் குறைகாண முடியாது. திருமண சபையில் தலாக் பற்றிப் பேசுவதை யாரும் விரும்புவதில்லை. எனினும் மணமகன் மற்ற விஷயங்கைளப் போல் கணவன், மனைவியுடைய உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் தலாக் பற்றியும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். கற்றுக் கொள்ளப்பட வேண்டிய கல்வியில் ஹஜ்ஜையும் தலாக்கையும் ஒரே வரிசையில் தான் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

வாரிசுரிமைச் சட்டங்களையும் ஹஜ்ஜையும் தலாக்கையும் (அவற்றின் சட்டங்களை) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவை உங்களுடைய மார்க்க விஷயங்களில் கட்டுப்பட்டவையாகும், என்று இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அல்பைஹகீ)

சட்டத்தைப் படிக்காமல் முறை தவறி ஹஜ் செய்தால் அந்த ஹஜ் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற முடியாது. அவ்வாறே திருமணம் செய்யும் ஒவ்வொரு ஆணும் தலாக்கைப் பற்றியும் படிக்க வேண்டும். தலாக் கொடுப்பதற்காக அல்ல.

தலாக் கொடுக்காமல் இருப்பதற்கும் அப்படியே கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படியாக கொடுக்க வேண்டும், என்பதற்காக. ஹஜ் சரியாகச் செய்யவில்லையானால், அவனுடைய ஒரு கடமை பாழாகிவிடுகிறது. தலாக்கைப் படிக்காமல் முறை தவறி தலாக் கொடுப்பதால் அவன் இழிசொல்லுக்கு ஆளாகிறான், என்பது மட்டுமல்ல. அவனுடைய பிள்ளைகளைப் பாதிக்கிறது. ஆண், பெண் ஆகிய இரு குடும்பத்தையும் பாதிக்கிறது. ஏன்? முஸ்லிம்  சமூகத்தையே பாதிக்கிறது.

அதைவிடவும் மேலாக இஸ்லாத்திற்க அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் சிக்கல் சிரமங்களுக்கு தூவப்படும் விதையாகவும் முறையற்ற தலாக் மாறிப்போய்விட்டது, என்பதை யார் தான் மறுக்க முடியும்? ஒரு வியாபாரி, வியாபாரம் பற்றி தெரிந்து கொள்கிறார். விவசாயி, விவசாயம் பற்றி செரிந்து கொள்கிறார். வீடு கட்டுவதற்கு சிறந்த கட்டிடக்கலை நிபுணரை நாடுகிறோம். சிகிச்சை செய்தவற்கு சிறந்த மருத்துவரை அணுகுகிறோம். திருமணம் செய்பவர் தலாக் பற்றிய சட்டங்களை முறையாக அறிந்து கொள்வதற்கு ஏன் முயற்சிக்கக் கூடாது.

தலாக்கைப் படிப்பது முறையாகக் கொடுப்பதற்கு மட்டுமல்ல, தலாக்கை விட்டும் விலகிச் செல்வதற்கும் பயன்படும். தலாக் கொடுப்பதற்காகப் படிக்கச் சொல்லவில்லை. அப்படிப்பட்ட நிலையை வரவிடாமல் இருப்பதற்காகவே படிக்கவேண்டுமென்று சொல்லப்படுகிறது. தலாக் ஆகுமானதாக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு வெறுப்பானது. ஷைத்தானுக்கு விருப்பமானது, என்பது யாவரும் அறிந்ததே!

 நிகாஹ், தலாக், இத்தா போன்றவற்றின் சட்டங்களைப் பற்றி குர்ஆன் போதிக்கும் முறையை சிந்தித்துப் படித்தால் நிர்பந்த நிலைதவிர வேறெந்த நிலையிலும் தலாக் நிகழக்கூடாது, என்பது தெளிவாக விளங்கும். கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தலாக் மட்டுமே தீர்வல்ல.                     முடிந்த வரை பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைப்பதற்குத் தேயைன சிறந்த வழியைக் காட்டுகிறது குர்ஆன். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குடும்பப் பிரச்சினையை நபியவர்களிடம் கூறி தீர்வு பெறும் நடைமுறை இருந்தது. அவ்வாறே நபித்தோழர்களின் காலத்திலும் உமர் (ரலி) அவர்களிடம் குடும்பப் பிரச்சினையைக் கூறி தலாக் விஷயத்தில் ஆலோசனை பெற்ற நிகழ்வுகளை சரித்திரத்தில் காணமுடியும்.

தலாக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கூட உடனடியாக அதைப் பயன்படுத்தி விடாமல் நிதானமாக நடந்து கொண்டு ஆலிம்களிடம் அலோசனை மேற்கொள்ள வேண்டும். ஆலோசனையை விட்டுவிட்டு உடனடியாக தாலக் சொல்லிவிடும் நடைமுறையை முற்றாக மாற்றிவிட வேண்டும்.

அலி (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில் கலீபாவிடத்தில் குடும்பப் பிரச்சினை தொடர்பாக பேசுவதற்காக ஒரு கூட்டமாக வந்தார்கள். கலீஃபா அவர்கள் கணவன், மனைவியுடைய குடும்பத்தினரிலிருந்து தலா ஒரு நபரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்யும்படி உத்தரவிட்டார்கள். (குல்தஸ்தயெ தஃபாஸீர்)

நபியே!  நீங்கள் பெண்களை விவாகரத்து செய்வீர்களாயின் அவர்களின் இத்தா (காலத்தை நிர்ணயிக்க) வசதியாக விவாகரத்து செய்யுங்கள். மேலும் இத்தாவின் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும் உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். (இத்தா இருக்கும் காலத்,தில் அப்பெண்களை அவர்களின் இலங்களிலிருந்து நீங்களும் வெளியேற்ற வேண்டாம். அவர்களாகவும் வேளியேற வேண்டாம். அவர்கள் ஏதேனும் வெளிப்படையான - மானக்கேடான செயல்கள் செய்தாலே தவிர. இவை அல்லாஹ்,வின் மூலம் நிர்ணயிக்கிப்பட்ட வரம்புகளாகும். யாரேனும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவாராயின் திண்ணமாக அவர் தனக்குத் தானே அநீதி இழைத்துக்கொண்டவராவார். இதற்குப் பிறகு (ஒத்துப் போவதற்கான) ஏதேனும் சூழலை அல்லாஹ் உருவாக்கக் கூடும், என்பதை நீங்கள் அறிவதில்லை. (அல்குர்ஆன் - 65:1)

இந்த வசனத்தில் தலாக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் கூட எப்படி தலாக் கொடுக்க வேண்டும்? என்பது அழகான முறையில் விளக்கப் பட்டுள்ளது. இத்தாவுடைய காலத்திற்கு தோதுவாக தலாக் கொடுங்கள் என்ற வாசகத்திற்கு நபிமொழிகளில் அருமையான விளக்கம் கூறப்பட்டுள்ளது.

அதாவது தலாக் கொடுப்பதாக இருந்தால் மாதவிடாய் காலத்தில் கொடுக்கக் கூடாது. சுத்தமான பிறகே கொடுக்க வேண்டும். அந்த சுத்த காலத்திலும் உடலுறவு கொண்டிருக்கக் கூடாது. அப்படி உறவு கொண்டுவிட்டால் அடுத்த மாதவிடாய் காலம் வந்து அதிலிருந்து சுத்தமான பின் தான் கொடுக்க வேண்டும். சுத்த காலத்தில் தலாக் கொடுக்கும் போது ஒரு தலாக் மட்டுமே கொடுக்க வேண்டும். இதுவே மார்க்கம் சொல்லித் தருகிற விவாகரத்து முறையாகும்.

இந்த விளக்கத்தைச் சிந்தித்துப் பார்த்தால் முடிந்த வரை தலாக் கொடுக்கும் சிந்தனையை மாற்றுவதற்கான நிலையை ஏற்படுத்துவதில் மார்க்கம் முனைப்பு காட்டுவதை புரிந்து கொள்ள முடியும். பொதுவாக மாதவிடாய் காலத்தில் மனைவியின் மனோநிலை நல்ல நிலையில் இருக்காது. உடல் நிலை மாற்றம் மனநிலையிலும் மாற்றத்தை உண்டாக்கியிருக்கும். கணவனுக்கும் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ள முடியாது, என்பதால் சின்ன பிரச்சினையும் கூட கோபத்தையும் விபரீத சிந்தனையுயம் உண்டாக்கி விடும். மாதவிடாய் முடியும் வரை காத்திருப்பதால் வெறுப்பு மனநிலை மாறுவதற்கு சந்தர்ப்பம் அமையலாம்.

அசுத்த காலத்தில் உடலுறவு கொள்ளாமல் இருந்ததால் சுத்தமானவுடம் தன்னுடைய ஆசையைப் பூர்த்தி செய்வத்தில் காட்டும் ஆர்வம் முன்னர் ஏற்பட்டிருந்த பிரச்சினையை மறக்கச் செய்துவிடலாம். இதனால் விவாகரத்து தவிர்க்கப்பட்டுவிடும். சுத்த காலத்திலும் உடலுறவு கொள்ளாத நிலையிலேயே தலாக் கொடுக்க வேண்டுமென்று சொல்லப் பட்டிருப்பதும் ஆழ்ந்து கவனிக்கத் தக்கது. அவனுக்கு உறவிற்கான தேட்டமும் ஆசையும் இருக்கும் போது உடலுறவு கொள்ளாமலேயே தலாக் கொடுக்கிறான், என்றால் கண்டிப்பாக ஏதாவது நிர்பந்த காரணம் இருக்கவே செய்யும். உறவு கொண்டுவிட்டால் அடுத்த சுத்த காலத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும்.

ஏனெனில், உறவு கொண்டுவிட்டதால் அவனுடைய தேவை நிறைவேறிய நிலையில் வெறுப்பும் கோபமும் மிகைத்து விடலாம். உறவு கொண்டதால் குழந்தை உண்டாகி இருப்பதற்கான சாத்தியமும் இருக்கிறது. இந்நிலையில் தலாக் கொடுப்பதால் மனைவியின் இத்தா காலமும் குழந்தை பெற்றெடுக்கும் வரை நீண்டுவிடும். குழந்தை உண்டாகி விட்டால் கூட பிரச்சினைகள் மறந்து விடலாம். குழந்தையின் எதிர்காலம் கருதி கணவனும் மனைவியும் இணங்கிப் போய்விடலாம். இந்நிலையிலும் விவாகரத்து விலகிப் போய்விடும்.

 எல்லாவற்றையும் மீறி மனைவியின் சுத்த காலத்தில் தலாக் கொடுக்க வேண்டிய நிர்பந்த நிலைக்கு வந்துவிட்டாலும் ஒரு தலாக் மட்டுமே கொடுக்க வேண்டும். நான் உனக்கு ஒரு தலாக் கொடுக்கிறேன், என்று மட்டும் சொல்லிவிட்டு நிறுத்திக் கொள்ள வேண்டும். வேறெதுவும் சொல்லிவிடக் கூடாது.                                          

இஸ்லாமிய குற்றவியல் சட்டம்



இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் குற்றங்களை வேரோடு பிடுங்கி எறியும் வகையிலானவை. திருட்டு, விபச்சாரம், அவதூறு பரப்புதல், வன்முறைத் தாக்குதல், கொலை போன்ற பெருங்குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை கூர்ஆன் நேரடியாக அறிவித்திருக்கிறது. கை வெட்டுதல், மாறுகால் மாறு கை வெட்டுதல் உட்பட பல தண்டனைகள் கூறப்பட்டுள்ளன. மற்ற குற்றங்களுக்கான தண்டனை விபரங்களை மார்க்கச் சட்ட நூற்களில் பல வால்யூம்களாக தொகுக்கப்பட்டுள்ளன. குற்றவியல் சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்களைத் தடுக்க முடியும். குற்றத்தின் கடுமைக்கு தகுந்தவாறு இஸ்லாமிய குற்றவியல் சட்டம் அமைந்திருக்கிறது, என்பதில் சந்தேகமில்லை. அந்நூர் என்ற அத்தியாயத்தின் ஆரம்பத்தில் விபச்சாரத்தின் தண்டனை பற்றி விளக்கப்படுகிறது.
விபச்சாரம் ஒரு குற்றம் என்பதுடன் ஏகப்பட்ட குற்றங்களை தூண்டக்கூடியதாகவும் இருக்கிறது, என்பதற்கு ஆதாரம் சொல்லத் தேவையில்லை. அதில் தான் முழு மனித சமுதாயத்தின் அழிவும் புதைந்திருக்கிறது. தவறான நடத்தைக்கு இணங்காததற்காக எத்தனையோ பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப் படுகின்றனர். அல்லது தற்கொலை செய்து கொள்கின்றனர். விபச்சாரி, விபச்சாரகன் ஆகிய இருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி கொடுங்கள். இவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி கொடுங்கள். நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மார்க்கத்(தில் விதிக்கப்பட்ட சட்டத்தை அமுல் செய்வ) தில் அவ்விருவருக்காக உங்களை (கொஞ்ம் கூட) இரக்கம் தொற்றிக்கொள்ள வேண்டாம். மேலும் அவ்விருவரின் வேதனையை விசுவாசிகளில் ஒரு சாரார் (நேரில் வந்து) பார்க்கவும். (அந்நூர் - 2)

பலாத்காரம்
ஆண் பெண் இருவரில் யார் இச்செயலில் ஈடுபட்டாலும் சரி. அவர்களுக்கு தண்டனையுண்டு. பெண்ணைக் குறித்து விபச்சாரி என்றே சொல்லப்பட்டிருக்கிறது. விபச்சாரம் செய்யப்பட்டவள் என்றோ கற்பழிக்கப்பட்டவள் என்றோ சொல்லப்பட்டவில்லை. ஏனெனில் அவள் எவ்வித நிர்பந்தமுமின்றி இச்செயலில் ஈடுபட்டால் தான் தண்டிக்கப்படுவாள்.
 உமர் (ரலி) அவர்களின் காலத்தில் ஒரு பெண் தூங்கிக் கொண்டிருக்கும் போது அந்தப் பெண்ணிடம் ஒருவன் பலாத்காரம் செய்துவிட்டான். உமர் (ரலி) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு தண்டனை வழங்கவில்லை. (முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 29093) திர்மிதீ ஷரீஃபிலும் விபச்சாரத்தில் நிர்பந்திக்கப் பட்ட பெண்ணுக்கு தண்டனை இல்லை என்பதை வலியுறுத்தும் ஒரு நபிமொழி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை மனிதன் இயற்றிய சட்டமல்ல. அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட சட்டம். அதில் மனிதனுடைய மனோநிலை தலையிட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறிவிடும். இந்த தண்டனையை நிறைவேற்றும் விஷயத்தில் எவ்விதத்திலும் கொஞ்சம் கூட இரக்கம் காட்டி விடக்கூடாது, என்பதை இவ்வசனம் கோடிட்டுக் காட்டுகிறது. நூறு அடியை 99 அடியாகக் குறைத்து விடும் அளவுக்கு லேசான இரக்கத்தைக் கூட வெளிப்படுத்தி விடக்கூடாது.
தண்டனையில் இரக்கம்:
இரக்க உணர்வு வரக்கூடாது, என்பது இதன் பொருளல்ல. அது மனிதனுடைய சுபாவம். அதற்கு மார்க்கம் அணை போடவில்லை. அவன் வேதனைப் படுவதைப் பார்த்து பரிவு ஏற்படும் போது அவனுடைய பாவமன்னிப்புக்காக துஆ செய்து கொள்ள வேண்டும். ஆனால், அந்த இரக்க உணர்வு முறைப்படியான தண்டனையை நிறைவாக நிறைவேற்றுவதை விட்டும் தடுத்து விடக்கூடாது. மனிதனுடைய இயற்கை சுபாவம் அல்லாஹ்வின் கட்டளையை தடுத்து நிறுத்தி விடுமேயானால் நாம் நம்முடைய சுபவாத்திற்கு அடிமையா? அல்லது அல்லாஹ்வுக்கு அடிமையா? என்று கேள்வி எழும். எனவே தான், கருணை உங்களைத் தொற்றிக் கொள்ள வேண்டாம், என்று கூறும் போது நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மை என்று நம்பயிருந்தால் உங்களுடைய சுபாவத்தை செயல்படுத்துவதை வெறுத்து இறைச்சட்டத்தை செயல்படுத்துங்கள், என்று கூறுகிறான். அல்லாஹ் ஒருவன் தான் சட்டமியற்றத் தகுதியானவன் என்று நம்பிக்கை கொண்ட பிறகு அதற்கு மாறு செய்தால் நம்முடைய ஈமானுக்குத் தான் அர்த்தமென்ன?  எந்த இடத்தில் எப்படி கருணை காட்ட வேண்டும், என்பது பற்றி அல்லாஹ் மிக அறிந்தவன். அவனுடைய சட்டம் எவ்விதத்திலும் இரக்க உணர்வுக்கு முரணாக இருக்காது. அடியார்களை விட அல்லாஹ் மிகவும் கருணை வாய்ந்தவன், என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
குற்றவாளியின் மீது இரக்கப்படுவது நிரபராதியின் மீது செய்யப்படும் மாபெரும் அநீதி. நீதி மன்றத்தில் குற்றம் ஆதாரப்பூர்வமாக உறுதியான பின்  தண்டிக்கப் படாமல் இருந்தால் அது குற்றவாளிகளுக்கு தைரியத்தை உண்டாக்கி விடாதா? எனவே தான் நபி (ஸல்) அவர்கள், தண்டனை - ஹத்து - (கொடுப்பதை) உங்களுக்கு மத்தியில் (இரகசியமாக) இருக்கும் போது மன்னித்து விடுங்கள். ஆனால் என்னிடம் அந்த ஹத்து -  தண்டனை உறுதியாக (ஆதாரப்பூர்வமாக) வந்தடைந்து விட்டால் (அதை நிறைவேற்றுவது) கட்டாயமாகிவிடும், என்று கூறினார்கள். (அபூதாவூத் - 4378; தஃப்ஸீரு இப்னு கதீர்)
தண்டனை கொடுப்பதன் மூலம் தான் குற்றவாளியின் மீதும் முழு சமுதாயத்தின்  மீதும் பரிவு காட்டியதாக அமையும். அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் நோயாளியின் மீது தவறான இரக்க உணர்வு கொண்டு விட்டால் நோயாளி குணமடைய முடியுமா? ஒரு சமுதாயத்தின் சிகிச்சையே ஒரு குற்றவாளியைத் தண்டிப்பதில் புதைந்து கிடந்தால் அதை எப்பாடுபட்டாவது தோண்டி எடுக்காமால் இருக்க முடியுமா? ஆப்ரேஷன் செய்வது தான் மருத்துவர்களின் இரக்க உணர்வை வெளிப்படுத்தும். இப்பூவுலகில் நிறைவேற்றப்படும் தண்டனை - ஹத்து உலக மக்களுக்கு நாற்பது நாற்கள் மழை பொழிவதை விடச் சிறந்ததாகும் என்று நபிய (ஸல்) அவர்கள் கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது. (இப்னு மாஜா - 2538;
வசனத்தின் இறுதியில் தண்டனை நிறைவேற்றப் படும்போது ஒரு கூட்டத்தினர் அதைப் பார்க்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது. பார்ப்பவர்களுக்கு படிப்பினை கிடைக்கும். இந்தக் குற்றத்திற்கு மோசமான தண்டணை கிடைக்கும், என்ற உணர்வு ஏற்படும் போது பாவத்தை விடுமளவுக்கு இறையச்சம் இல்லாவிட்டாலும் தண்டனைக்குப் பயந்தாவது பாவத்தை விட்டுவிடலாம். ஆனால் இன்றைய ஆபாச உலகத்தில் சிந்தனையே சீர்குலைந்திருக்கும் சமயத்தில் இதை விளங்குவது கடினம் தான். தவறான அசிங்கமான ஒரு கலாச்சாரத்திற்காக மூளைச்சலவை செய்யப்படுவது தவறில்லை. ஒழுக்க மேன்மைக்காக மூளைச்சலவை செய்யப்பட்டால் மட்டும் தவறாகிவிடுமா? இஸ்லாமிய சட்டங்கள் மகா உண்மை என்றும் நேர்மையானது என்றும் நம்புவது தான் மார்க்க ரோஷத்தின் அடையாளம். இந்த தண்டனைக்குப் பிறகு அந்த குற்றவாளியை ஒரு வருடம் நாடு கடத்தப் படவேண்டும், என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். திருமணம் முடித்த பின் யாராவது விபச்சாரம் செய்தால் கல்லால் அடித்து கொலை செய்ய வேண்டும், என்றும் மார்க்கம் தெளிவு படுத்துகிறது. இந்தத் தவறு எக்காரணம் கொண்டும் சமூகத்தில் நடக்கக் கூடாது, என்பதற்காக இப்படி மிகக் கடுமையான தண்டனை அளிக்கப்படுகிறது. இன்று ஆபாசத்தை பரவலாக்க வேண்டுமென்று துடிக்கின்றனர். வெட்கத்தை வியாதியாகக் கருதும் சமுதாயத்தில் ஒழுக்கத்தின் துளியைக் கூட எதிர் பார்க்க முடியாது.              
ஒரு குற்றத்திற்கு கடுமையான தண்டனை கொடுக்காமல் விட்டுவிட்டால் பின்விளைவு கடுமையாக இருக்கும். பிறகு இந்நிலையை மாற்றுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும். தண்டனையை எளிதாக்கி விட்டு பிறகு கடுமையாக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். ரஷ்யாவுடைய சட்டவியல் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். (தஃப்ஸீரெ மாஜிதீ) இஸ்லாம் விபச்சாரத்திற்கு தண்டனை பற்றி மட்டும் பேசிவிட்டு வாய் மூடிவிடுவதில்லை. ஒரு சமூகத்தில் விபச்சாரத்தின் சிந்தனையே வராமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளைப் பற்றி தெளிவாகப் போதிக்கிறது. மனிதனுடைய இயற்கையான இச்சையைத் தீர்ப்பதற்குத் தேவையான வடிகால்களை அமைத்துத் தருகிறது. விபச்சாரத்தின் கொடுமையான பின்விளைவுகளைக் கவனித்து கடுமையான தண்டனை கொடுக்காமல் இருக்க முடியாது, என்றே இஸ்லாம் உணர்கிறது. தண்டனை பற்றி குறைபேசுவதற்கு வெறும் தண்டனை மட்டுமே இஸ்லாத்தின் போதனை அல்ல என்பதை விளங்க வேண்டும். தண்டனை பற்றி யோசிப்பவர்கள் அந்தக் காரியத்தின் பின்விளைவுகள் மற்றும் அதை விட்டும் விலகுவதற்காக கூறப்பட்டிருக்கும் வழிமுறைகளுடன் சேர்த்தே பார்க்க வேண்டும். வெறும் தண்டனையை மட்டும் பார்த்து விட்டு எதையாவது சொல்லி விடக்கூடாது. இன்று விபச்சாரம் ஒரு கூடாச் செயல் அல்ல, என்கிற அளவுக்கு மூளைச்சலவை செய்யப்படுகிறது, என்பதை விட தன்னுடைய சகோதரி, தாய் போன்றவர்கள் மற்றவர்களால் இந்தத் தவறுக்கு உட்படுத்தப்படுவதைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஒரு சிந்தனை மேற்குலகால் உருவாக்கப்படுவது தான் வேதனையிலும் வேதனை.            
உறவு எதற்காக?:
இந்த உலகிற்கு மனித வளம் மிகமிக முக்கியமானது. விபச்சாரத்தின் மூலம் ஒன்று அந்த வளத்தை இழக்க நேரிடுகிறது. அல்லது சிதைந்து போகிறது. திருமணம் என்றால் ஒரு ஆணுக்கு குடும்பப் பொறுப்பு ஏற்படுகிறது. மனைவியின் செலவுக்கு பொறுப்பாக வேண்டும். குழந்தை பெற்றால் அதை வளர்க்கும் பொறுப்பு தன் மீது விழும். விபச்சாரத்தின் மூலம் மனிதன் இந்தப் பொறுப்புகளை உதறித்தள்ளவே விரும்புகிறான். ஆண், பெண்ணுடைய உறவு என்பது குழந்தைக்காகவும் குடும்ப உறவுக்காகவும் குடும்பப் பிணைப்புக்காகவும் தான். பிரியாணியை வாயில் வைத்து ருசித்து விட்டு எந்த அறிவாளியாவது துப்பிவிடுவானா? ஒவ்வொரு தடவையும் அப்படிச் செய்தால் இறுதியில் அது அவனுடைய உயிருக்கே ஆபத்தாக முடியாதா? குழந்தையை வெறுத்து உறவு கொள்பவன் ருசித்து விட்டு புசிக்காமல் இருப்பவனைப் போலத்தான். பொறுப்பின்றி சுகம் அனுபவிப்பதற்கு சட்டப்படியான அங்கீகாரம் கொடுக்கப்பட்டால் பேருந்து மற்றும் ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதற்கு ஏன் அங்கீகாரம் வழங்கக்கூடாது?
தண்டனையின் தத்துவம்:
குற்றவாளிகளை பிடித்து பிடித்து தண்டனை கொடுத்துக் கொண்டிருப்பதற்கு வெறும் போலீஸ் வேலை பார்ப்பது மட்டும் இஸ்லாத்தின் வேலையில்லை. மனிதனைப் புனிதனாக்குவதற்குத் தேவையான தெளிவான போதனைகளைப் போதித்துக் கொண்டிருக்கிறது புனித மார்க்கம். மனிதனை பாவத்தை விட்டும் தடுபபதற்காக நிறைய வேலிகளை அமைத்திருக்கிறது இஸ்லாம். அந்த வேலிகளைத் தகர்த்தோ தாண்டியோ வந்து பெரும் குற்றம் புரிபவனுக்குத் தான் தண்டனை என்கிறது கருணையாளனின் சட்டம். குர்ஆன் பல இடங்களில் இறையச்சத்தைப் பற்றியும் நீடித்த நிலையான மறுமை வாழ்க்கை பற்றியும்  போதிக்கிறது. அந்நூர் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் கூட நீங்கள் நினைவில் வைக்கும் படியான உபதேசம் பெறவேண்டும், என்று வலியுறுத்திக் கூறுகிறது. ஏனெனில் இறையச்சம் தான் இறைநெறிக்கு முரணாக நடப்பதை விட்டும் தடுக்கிறது.
விபச்சாரத்தின் வாடை கூட சமூகத்தில நுகரப்படக்கூடாது, என்பதற்குத் தேவையான தெளிவான வழிகாட்டுதல்களை மார்க்கம் தெளிவு படுத்தத் தவறவில்லை. நிர்பந்த காரணமின்றி பெண்கள் வீட்டைவிட்டும் வெளியேறக்கூடாது. அப்படியே சென்றாலும் ஒரு முடி கூட வெளியே தெரியாமல் முழு உடலையும் மறைத்து பர்தா முறையில் தான் செல்ல வேண்டும். வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்படக்கூடாது, என்பதற்காக பெண்களின் வாழ்வாதாரத்தை வழங்கும் பொறுப்பு ஆணின் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆண்களும் பெண்களும் வெளியே செல்லும் போது பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். ஆண்கள் அந்நியப் பெண்களைப் பார்ப்பதோ பெண்கள் அந்நிய ஆண்களைப் பார்ப்பதோ கூடாது, என வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுடைய அலங்காரத்தை அந்நிய ஆண்களுக்கு முன்னால் வெளிப்படுத்தக் கூடாது. ஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது. ஆண்களும் பெண்களும் ஹஜ்ஜுடைய காலத்தில் கூட கலந்து விடக்கூடாது. நம்முடைய நெருங்கிய சொந்தக்காரர் வீட்டுக்குச் சென்றாலும் முன் அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்து விடக்கூடாது. அசிங்கமான பேச்சுக்களைப் பேசக்கூடாது. முறையான சாட்சிகள் இல்லாமல் விபச்சாரத்தைப் பற்றி வாய் திறக்கக் கூடாது.
சமூகத்தில் நல்ல வார்த்தை தான் காதில் விழ வேண்டும். நல்ல காட்சிகள் தான் கண்ணில் பட வேண்டும். மக்களிடையே அசிங்கம் பரவலாகக் கூடாது. பெண்களைக் கேலி செய்பவர் தண்டிக்கப் பட வேண்டும்.   மனிதனுக்கு இயற்கையிலேயே பெண்ணாசையை வைத்துத் தான் அல்லாஹ் படைத்திருக்கிறான். அந்த இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆகுமான வடிகால்களை மார்க்கம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. திருமணம் முடித்துக் கொள்வதை இறைவணக்கத்தின் ஒரு பகுதியாக இணைக்கப் பட்டுள்ளது. ஒரு மனைவியின் மூலம் தேவைகள் நிறைவேற வில்லையானால் நான்கு பெண்களை மணமுடித்துக் கொள்வதற்கும் மார்க்கம் நிபந்தனையுடன் அனுமதிக்கிறது. திருமணம் முடித்த பின் கணவன் மனைவிக்கு மத்தியில் சேர்ந்து வாழமுடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் மனைவியை வைத்துக் கொண்டே கணவன் தவறான பாதையில் செல்லத் தேவையில்லை. அது போன்ற நிர்பந்த சமயத்தில் மட்டும் உறவை முறித்து விட்டு மறுமணம் செய்து கொள்ளலாம்.
திருமணத்தையும் மார்க்கம் எளிதாக்கியுள்ளது. ஒரு பெண் அவள் பெண்ணாக இருப்பதைத் தவிர அவளுடைய திருமணத்திற்கு வேறெந்த சுமையையும் மார்க்கம் அவள் மீது சுமத்த வில்லை. அவ்வாறே ஆணின் மீதும் அவனுடைய வசதிக்குத் தக்கவாறு மஹர் தொகை மற்றும் மனைவியின் செலவினத்தைத் தவிர வேறெந்த சுமையும் அவன் மீது சுமத்தப்படவில்லை. திருமணம் என்பது பெரிய திருவிழா அல்ல. எளிதாக நிறைவேற வேண்டிய காரியம். வரசட்சணை, சீர்வரிசை போன்றவற்றின் மூலம் இன்று குமர்கள் தேங்குவதால் தான் தவறான உறவுகள் மலிவாகிவிட்டன. இந்த போதனைகள் மூலம் தவறான உறவு என்பது சமூகத்தின் சிந்தனையில் கூட வரமுடியாது. இவ்வளவு வேலிகளையும் தாண்டி ஒருவன் விபச்சாரம் செய்கிறான். அதுவும் மறைவாக இல்லை. நான்கு பேர் பார்ப்பது போல் பகிரங்கமாக செய்து கொண்டிருக்கிறான். ஏனெனில் குர்ஆனில் கூற்ப்பட்ட தண்டனை கொடுக்க வேண்டுமானால் அவன் அந்த தவற்றை செய்திருப்பது எவ்வித சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாக வேண்டும். நான்கு பேர் நேரடியாகப் பார்த்திருக்க வேண்டும். அவன் விபச்சாரம் தான் செய்கிறான், என்பதைத் தெளிவாகப் பார்த்திருக்க வேண்டும். நான்கு பேரும் தாங்கள் பார்த்ததை அப்படியே தெளிவாக நீதிமன்றத்தில் சாட்சி பகர வேண்டும். நடுச்சந்தியில் வைத்து இந்த தவற்றைச் செய்கிறான், என்றால் ஒரு தனிப்பட்ட பெண்ணுடைய கற்புப் பிரச்சினை மட்டும் இல்லை. இது ஒரு சமூகத்தையே ஆபாசச் சாக்கடையில் மூழ்கடித்துவிடும். மேற்குலகின் இன்றைய ஆபாசக் கலாச்சாரத்தினால் இன்று உலகம் முழுவதும் ஆபாசச் சாக்கடை ஓடிக்கொண்டிருக்க வில்லையா?
இப்படிப்பட்ட சூழலில் இந்தக் காமக் கொடூரனை சும்மா விட்டு வைக்க முடியுமா? இவனுக்கு தண்டனை கொடுக்காவிட்டால் யார் வேண்டுமானாலும் இதில் ஈடுபடத் துணிந்து விடுவார். இஸ்லாத்தின் விரோதிகள் வெறும் தண்டனையை மட்டும் பார்க்கின்றனர். அந்த குற்றத்தின் மோசமான பின்விளைவையும் யோசிப்பதில்லை. ஆபாசத்தைத் தடுப்பதற்காக மார்க்கம் செய்திருக்கும் ஏற்பாட்டைப் பற்றியும் சிந்திப்பதில்லை. தண்டனையை இஸ்லாத்தின் பெயரால் குறை கூறுபவர்கள் வெறும் தண்டனையை மட்டும் பார்க்கக் கூடாது. தண்டனையுடன் சேர்ந்திருக்கும் எல்லா அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். இட்ட்்ட்்ட்்ட்ட்ட்்ட்்்்

கண்டுகொள்ளப்படாத மழைநீர்!


அல்லாஹ் இந்த உலகத்தைப் படைத்து அதை முறையாக இயங்கவும் செய்திருக்கிறான். ஆனால், மனிதர்கள் அந்த இயக்கத்தில் - நிர்வாகத்தில் தலையிட்டு தங்களுக்குத் தாங்களே நஷ்டத்தைத் தேடிக் கொள்கிறார்கள். சூரியனிடமிருந்து வரும் தீங்கிழைக்கும் ஒளிக்கதிர்கள் இந்த பூமியில் வந்து தாக்கமால் இருப்பதற்காக எந்தக் கோள்களுக்கும் இல்லாமல் இந்தப் பூமிக்கு மட்டும் சிறப்பம்சமாக வளிமண்டலம் எனற பாதுகாப்புப் போர்வையைப் போர்த்தி பல அடுக்கு பாதுகாப்புக் கவசத்தைக் கொடுத்திருக்கிறான்.

ஆனால், மனிதன் தன்னுடைய நவீன கண்டுபிடிப்புகளின் மூலம் இந்த வளிமண்டலத்தை மாசடையச் செய்து ஓசோன் படலத்தில் ஓட்டை விழச்செய்தான். அதன் பாதிப்பை இன்று ஒட்டு மொத்த உலகமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. காடுகளை அழிப்பதால் எவ்வளவு பெரிய நஷ்டத்தை  மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறாகள், என்பது யாரும் அறியாததல்ல. ஆனால், இன்று தங்களுடைய தொழிற்சாலைகளுக்காக டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதற்காக காடுகள் சர்வ சாதாரணமாக அழிக்கப்பட்டு வருகின்றன.

எனவே தான் இஸ்லாம் மரம் வளர்ப்பதிலும் அதைப் பராமரிப்பதிலும் மிகுந்த நன்மைகள் கிடைக்கும், என்று கூறுகிறது. யாராவது ஒரு முஸ்லிம் மரம் நட்டு அதன் மூலம் மனிதனோ மிருகமோ சாப்பிட்டால் அது மரம் வைத்தவனுக்கு ஸதகா எனும் தான தர்மம் செய்த நன்மை கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி - 6012)) நபி (ஸல்) அவர்கள் (எதிரிகளுடன் யுத்தம் செய்யும் போது கூட) மரங்களை வெட்டுவதைத் தடை செய்தார்கள். (முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக் - 9381)


எனவே, அல்லாஹ் திட்டமிட்டு ஏற்பாடு செய்திருக்கும் உலகின் இயங்கு விசைகளை இயற்கை அமைப்புகளை நாம் பாழாக்கும் போது அது நமக்கே பெரும் நஷ்டத்தை விளைவிக்கும். அவ்வறே அல்லாஹ் பருவ காலங்களை முறைப்படியாக அமைத்துள்ளான். வெயில் காலமும் குளிர் காலமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.

வீட்டில் மழைநீர் சேகரிப்பு
மழைக்காலத்தில் தேவையான அளவுக்கு மழை பொழியச் செய்கிறான். ஆனால், நாம் செய்யும் தவறுகனால் வெயில் காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் போது மழைத் தொழுகை தொழுதும் துஆ செய்தும் மழை பெய்வதில்லையே!, என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறோம்.

ஒவ்வொரு நாளும் குடிப்பதற்கும் மற்ற உபயோகத்திற்கும் தண்ணீர், தேவைப் படுகிறது. அதற்காக, ஒவ்வொரு நாளும் மழை பெய்ய வேண்டுமென்று எதிர்பார்க்க முடியுமா? வாரத்திற்கொருமுறை வரும் நகராட்சித் தண்ணீரைக் கூட ஒரு வாரத்திற்குத் தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்கிறோம். அப்படியிருக்கும் போது வருடத்தில் சில மாதங்களில் பெய்யும் தண்ணீரை சேமிப்பதற்கான ஏற்பாட்டினை ஏன் செய்யக்கூடாது? இதில் தனிமனிதர்களை விட அரசாங்கத்திற்குத் தான் மிகப்பெரும் பொறுப்பு இருக்கிறது.

அதே சமயம் தனிமனிதர்களும் நமக்கென்ன? என்று ஒதுங்கி விடக்கூடாது. நம்முடைய வீட்டில் வரவேற்பரை, டைனிங் ஹால், கிச்சன், பாத்ரூம், டாய்லெட் போன்றவற்றுக்கு இடம் இருக்கும் போது மழைநீர் சேகரிப்புக்கு மட்டும் ஏன் இடம் இல்லாமல் போகிறது?!

நிலத்தடிநீர்
மேலும், நாம் வானத்திலிருந்து சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு தன்னீரை நாம் இறக்கி வைத்தோம். பின்னர், அதனைப் பூமியில் தேக்கி வைத்தோம். மேலும், நாம் அதனைப் போக்கிவிடவும் ஆற்றலருடையவர்களே! (அல்குர்ஆன் - 23:18)

அல்லாஹ் இந்த வசனத்தில் நமக்கு தேவையான அளவு தண்ணீரை மழையாகப் பெய்யச் செய்கிறான். அதன்மூலம் அந்தத் தண்ணீர் பூமிக்குள் இறங்கி பாதுகாப்பாக இருக்கிறது. தேவையான சமயத்தில் நாம் அதை எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம், என்ற கருத்தை மக்களுக்கு உணர்த்தியிருக்கிறான். அப்படியானால், பெய்யும் மழைநீர் அனைத்தையும் நாம் கடல் நீரில் கலக்கச் செய்கிறோமே இது இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் இறைநிர்வாகத்திற்கு எதிராக நாம் செயல்படுகிறோமோ? என்கிற சிந்தனையைத் தூண்டுகிறது. பூமி மழை நீரை உறிஞ்சி தேக்கி வைப்பதற்குத் தோதுவாக அல்லாய் படைத்திருக்கும் போது நாம்  நம்முடைய நாட்டையும் வீட்டையும் அதற்குத் தக்கவாறு அமைத்துக் கொள்ள வேண்டுமென்பது தான குர்ஆன் நமக்கு மறைமுகமாகச் செய்யும் உபதேசம்.

மழைநீரை பூமிக்கடியில் தேக்கி வைப்பது அல்லாஹ்வின் நிர்வாகம். அந்த நிர்வாகத்தில் மனிதன் தன்னுடைய அறிவைக் கொண்டு தலையிடாமல் இருக்கும் வரை மனிதனுக்கு எந்த ஆபத்துமில்லை. அவனுடைய குறுகிய அறிவைக் கொண்டும் அல்லாஹ்வின் நிர்வாகத்தில் தலையிட்டால் மாபெரும் அழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எந்த துன்பமானாலும் அது உங்கள் கைகள் சம்பாதித்தவை தான். அதிகமானவற்றை மன்னித்தும் விடுகிறான்.  (அல்குர்ஆன் - 42:30) என்ற இறைவசனத்தை இந்த இடத்தில் நினைவுகூர்வது பொருத்தம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கட்டப்பட்ட வீடுகளில் முற்றம் இருக்கும். அந்த இடம் மண்தரையாக இருக்கும். அரசர்களின் அரண்மனையாக இருந்தாலும் மழை நீரை உறிஞ்சும் முற்றம் இருக்கவே செய்யும். ஆனால், இன்று நாம் நம்முடைய நவீன கட்டிட முறைகள் மற்றும் தார் சாலைகள் போன்றவற்றால்  பெய்யக்கூடிய மழை நீரில் ஐந்து சதவீதம் தண்ணீர் கூட நிலத்தால் உறிஞ்சப்படுவதில்லை.  பூமியில் தேங்கச் செய்வதை நாமே தடுத்து விடுகிறோம். அவையனைத்தும் ஆற்றிலோ கடலிலோ போய் கலந்து விடுகிறது.

மழை துஆவும் மழைநீர் சேகரிப்பும்
நபி (ஸல்)அவர்கள்எந்த நிலையிலும் மழையை நிறுத்துவதற்கு துஆ செய்ததே கிடையாது. பெய்யும் மழையை நிறுத்து! என் று நபி (ஸல்) அவர்கள் துஆசெய்ததே கிடையாது. ஒரு தடவை நபி (ஸல்) அவர்களின் துஆவினால் மதீனாவில் ஒரு வார காலமாக மழை பொழிந்தது.  ஆறுநாட்கள் தொடர்ந்து மழை பெய்தும் அது வரையிலும் பெரும் நஷ்டம் மதீனாவில் தெரியவில்லை. அதற்குப் பிறகு தான் அதன் நஷ்டத்தை உணர்ந்தார்கள்.

ஆனால் நம்முடைய பெருநகரங்களில் இரண்டு நாள் தொடர்ந்து மழை பெய்தால் நகரமே நீரில் மூழ்கிவிடும். அப்படித்தான் நாம் நம்முடைய நவீன கட்டிடங்களை அமைத்திருக்கிறோம். இந்த விடா மழையால் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மழையை நிறுத்தும்படி துஆசெய்ய நபியிடம் மக்கள் வேண்டினர்.  உடனே நபி (ஸல்) அவர்கள் யா அல்லாஹ்! மழையை நிறுத்திவிடு என் று துஆ செய்துவிடவில்லை.


நபி (ஸல்) அவர்கள் கூறியதெல்லாம் அல்லாஹும்ம ஹவாலைனா வலாஅலைனா என் ற வார்த்தைகளைத் தான் . யாஅல்லாஹ்! எங்களின் சுற்றுப்புறப் பகுதியில் மழை பெய்யச் செய். எங்களுக்கு  பாதகமாக ஆக்கிவிடாதே! அதாவது பெய்யும் மழையை நிறுத்திவிடாதே. அதே சமயம் அம்மழையை எங்களுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் ஆக்கி விடாதே! இப்பொழுது எங்களுக்கு மழை தேவையில்லாதது போல் தெரியலாம். பிறகு தேவைப்படலாம். எனவே இம்மழையை ஊரைக் சுற்றியுள்ள மலைகளிலும், மணல்மேடுகளிலும் பெய்யச் செய்! நீர்நிலைகளில் பெய்யச் செய்! மரங்கள் வளருமிடங்களில் பெய்யச் செய்!, என் று துஆச் செய்தார்கள்.

இந்த துஆவில் கூட நீர்நிலைகளில் பெய்யச் செய்வாயாக, என்ற வாசகம் ஆழ்ந்து கவனிக்கத் தக்கது. அதாவது, இந்த மழைநீர், கடல் நீரில் கலந்து வீணாகிப் போய்விடுவதைவிட சேகரிக்கப்பட வேண்டிய இடங்களில் போய்ச் சேரவேண்டும். அத்துடன் ஊரைச் சுற்றியுள்ள இடங்களில் பெய்து நிலத்தடி நீராக பாதுகாக்கப்பட வேண்டும். மரங்கள் வளருமிடங்களில் பெய்யச் செய்வாயாக, என்றும் துஆ செய்திருக்கிறார்கள்.

மரங்கள் வளருமிடங்களில் பெய்தால் ஒன்று தோட்டங்களுக்கு அப்போதைக்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுக்கொள்ள முடியும். அதே சமயம், மரங்களின் வேர்களில் நீர் உறிஞ்சப்பட்டு விட்டால் அவை நிலத்தடி நீராகவும் பூமிக்கடியில் பாதுகாக்கப்படும். எனவே, நம்முடைய நடைமுறைகளும் இறைஇறைஞ்சல் எனும் வணக்க வழிபாடுகளும் மழைநீரை நீண்ட காலத்திற்கு நிலத்தடி நீராக சேமித்து வைப்பதற்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

இறைவல்லமையை நிளைவூட்டும் மழை
மழைபெய்வது அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை என்பதையும் உணர வேண்டும். அல்லாஹ்வின் வல்லமைகள் உலகில் வெளிப்படும் போது செய்யப்படும் துஆ அங்கீகரிக்கப்படும், ஹதீஸ்களின் மூலம் அறிய முடிகிறது. அந்த வகையில் மழை பெய்யும் போது துஆ ஏற்றுக் கொள்ளப்படும், என்ற நபிமொழி பைஹகீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (5/184)

நீர்நிலைகளிலுள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகிறது. நீராவி, வளிமண்டலத்திலுள்ள வாயுக்களுடன் சேர்ந்து காற்றினால் மேலே தள்ளப்படுகிறது. நீராவியைச் சுமந்து செல்லும் காற்று 150 அடி உயரும்போது ஒரு டிகிரி ஃபாரன்ஹிட் வீதம் குளிர்ச்சியடைந்து ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் நீராவியின் ஒரு பகுதி குளிர்ந்து சிறுசிறு நீர்த்திவலைகள் உண்டாகின்றன. இந்நீர்த் திவலைகள் நிறைந்த காற்றே மேகம் எனப்படும். இந்த மேகம் மேலும் குளிர்ச்சியடைந்தால் நுண் திவலைகள் பல (ஆயிரக்கணக்கில்) திரண்டு மழைத் துளிகளாக மழை பொழிகிறது. (நூல்: அறிவியல் 1000 - 1/78)

மழை பொழிவதற்கு மலையும் தேவை. மலைகளே இல்லையானால் நீராவியைத் தாங்கிய காற்று மேலே செல்லமுடியாது. அவை மலைகளில் மோதித் தான் மேலே செல்ல முடியும். ஆக மழை பொழிவதற்கு சூரியன், காற்று, மலை ஆகியவை முக்கியப் பகங்கு வகிக்கின்றன. இதுபற்றி குர்ஆன் சொல்வதையும் பார்ப்போம்:

மழையும் சூரியனும்
சுட்டெரிக்கும் விளக்கை (சூரியனை) நாம் ஏற்படுத்தினோம். மேலும் கார்மேகத்திலிருந்து கொட்டும் மழையை இறக்கினோம். (76: 13,14) இந்த வசனத்தில் சுட்டெரிக்கும் சூரியன், மழை இவ்விரண்டையும் இணைத்துக் கூறியிருப்பதைக் கவனிக்க வேண்டும். சூரிய வெப்பத்தால் கடல்நீர் ஆவியாகிறது, என்பதும் எல்லோரும் ஏற்றுக்கொண்ட விஷயம்.

மலையும் மழையும்
பூமியில் உயர்ந்த மலைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம். (அல்குர்ஆன் - 77:27)

இநத வசனத்தில் மலையையும தண்ணீரையும் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மற்ற இடங்களில் பொதுவாக மலைகள் என்று கூறப்ட்டாலும் இந்த இடத்தில் மட்டும் உயர்வான மலைகள் என்ற வார்த்தையை அல்லாஹ் உபயோகித்திருப்பது விஞ்ஞான சிந்தனையில் வியப்பான செய்தி. ஏனெனில், நீராவி மலையில் மோதி உயரே செலவதற்கு மலையும் உயரமாக இருக்க வேண்டும். அதே சமயம் பெரிய மலையை நோக்கி காற்று வீசும் போது அந்த மலைக்கு அப்பால் உள்ள பகுதியில் மழை குறைவாக இருக்கும். அப்பகுதிக்கு மழைமறை பகுதி என்று கூறுவர்.

காற்றும் மழையும்
சூல் கொண்ட காற்றை நாமே அனுப்புகிறோம். வானத்திலிருந்து நாமே மழை பொழியச் செய்கிறோம். அதை நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். நீங்கள் அதை சேமித்து வைப்பவர்கள் அல்ல. (அல்குர்ஆன் - 15:22) அல்லாஹ் தான் காற்றை அனுப்புகிறான். அது (நீராவியை மேலே உயர்த்துவதின் மூலம்) மேகத்தை உண்டாக்குகிறது. (30:48)
இவ்விரு வசனங்களைப் போல் குர்ஆனுடைய ஏராளமான வசனங்களில் காற்றையும் மேகத்தையும் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. மேகம் உண்டாவதில் காற்று பெரும்பங்கு வகிக்கிறது, என்பதில் சந்தேகமில்லை. சொல்லப்போனால் நீர்த்திவலைகள் நிறைந்த காற்றே மேகம் என்று சொல்லப்படும்.

குழந்தை யாரிடம் வளர வேண்டும்?


கணவன், மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்டுவிட்டாலும் பிள்ளைகளுடைய நலன் எவ்விதத்திலும் பாதித்து விடக்கூடாது, என்பதில் இஸ்லாம் மிகவும் அக்கறை காட்டுகிறது. ஆனால், பிள்ளையைப் பெற்றவர்களும் இரு வீட்டாரும் இஸ்லாம் கூறும் வழிகாட்டல்களை புறம் தள்ளிவிடுவதால் பிள்ளைகளுடைய எதிர்காலம் கேள்விக்குரியதாகி விடுகிறது.

நம்முடைய கற்பனையையும் சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு மார்க்கம் சொல்லும் நெறிமுறைகளில் தான் பிள்ளைகளுடைய முன்னேற்றமும் வளர்ச்சியும் இருக்கிறது, என்பதில் முழூ நம்பிக்கை இருக்க வேண்டும். இன்று தங்களை தீன்தார் - மார்க்கப் பற்றுள்ளவர்கள், என்று சொல்லிக் கொள்வோரும் கூட குழந்தை வளர்ப்பு விஷயத்தில் மார்க்கத்தின் வழிகாட்டல்களைவிட தங்களுடைய சுயநலத்திற்கே முதலிடம் கொடுக்கின்றனர்.

குழந்தை யாருக்குச் சொந்தம்?
கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்டுவிட்டால், குழந்தை யாருக்குச் சொந்தம்? என்று சிலர் கேட்கின்றனர். ஆனால், இந்தக் கேள்வியே தவறு. ஏனெனில், குழந்தை சொந்தமாக்கிக் கொள்ளத் தக்க சந்தைச் சரக்கு அல்ல, குழந்தை. அந்தக் குழந்தை யாருக்கும் அடிமையுமில்லை.

எனவே, அக்குழந்தையை தாய் அல்லது தந்தை என யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஒருவர் மட்டும் அக்குழந்தையின் மீது ஏகபோக உரிமை கொண்டாடி மற்றொருவரை அக்குழந்தையை விட்டும் முற்றாக விலக்கி விடுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை. மார்க்கம் கொடுக்காத அதிகாரத்தை தாங்களாக சர்வாதிகாரமாக எடுத்துக் கொண்டுவிட்டு தங்களை எப்படி முஸ்லிம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்?

தாய்,தந்தையரின் திருமண உறவு முறிந்து விடுமேயானால் குழந்தைகளின் வளர்ப்பு நிலைகள் பற்றி தெளிவு படுத்துவதற்காகவே அல்ஹளானா - குழந்தையைப் பராமரித்தல், என்றொரு தலைப்பில் எல்லா மார்க்கச் சட்ட நூற்களிலும் மிகுந்த முக்கியத்துவத்துடன் அதற்கான விரிவான சட்டங்கள் தொகுப்பட்டிருக்கின்றன. ஹதீஸ் கிரந்தங்களில் அந்தத் தலைப்பில் அவை தொடர்பான நபிமொழிகள் கூறப்பட்டிருக்கும். மார்க்கம் இவ்வளவு அக்கறையுடன் சட்டநுணுக்கங்களை தெளிவு படுத்தும் போது மக்கள் அதுபற்றி கண்டுகொள்ளாமல் தங்களுடைய முடிவை மட்டுமே இறுதி முடிவாக உறுதி செய்துவிட்டால் மார்க்க வழிகாட்டல்களும் சட்ட நூற்களும் எதற்குத் தான் இருக்கினறன?!

ஹளானா என்றால்...
குழ்ந்தைக்கு எந்தத் தொல்லையும் ஏற்படாமல் பாதுகாத்து குழந்தைக்குத் தேவையான உணவு தண்ணீர் கொடுப்பது, உடல், உடையைச் சுத்தம் செய்வது, ஆடை அணிவிப்பது, எண்ணெய் தேய்ப்பது, தூங்க வைப்பது, விழிக்கச் செய்வது போன்ற குழந்தைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து பராமரிப்பதே ஹளானா ஆகும்.

ஒரு குழந்தை இந்தக் காரியங்களை தானாகச் செய்யும் வரை இந்தப் பராமரிப்பு அவசியமாகும். ஆண்குழந்தையாக இருந்தால் பொதுவாக ஏழுவயதில் அதற்கான தகுதியை அடைந்து விடுவான், என்று சட்ட வல்லுணர்கள் கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் ஏழு வயதாகி விட்டால் தொழுமாறு உத்தரவிட வேண்டுமென்று கூறியுள்ளார்கள்.

அப்படியானால், பையன் அந்த வயதில் தானே உளூ செய்வதற்கான தகுதியை பெற்றிடுவான், என்பதை சூசகமாக விளங்கிக் கொள்ள முடியும். பெண்குழந்தையாக இருந்தால் வயதுக்கு வரும் வரை தாயிடம் வளரலாம். இமாம் முஹம்மது (ரஹ்) அவர்கள் ஒன்பது வயது வரை மட்டுமே தாயிடம் வளர வேண்டும், என்று கூறுகிறார்கள். ஹனஃபி மத்ஹபில்  கால சூழ்நிலை கெட்டுவிட்டதின் காரணமாக இமாம் முஹம்மது (ரஹ்) அவர்களின் கருத்தின் படியே ஃபத்வா கொடுக்கப் படவேண்டும். (ரத்துல் முஹ்தார்)

தாயாருக்கு முதலிடம்:
மேற்கூறப்பட்ட ஹளானா தொடர்பான காரியங்களை ஓர் ஆணை விட ஒரு பெண்ணே சிறப்பாகச் செய்ய முடியும், என்பதை யாரும் மறுக்க முடியாது. பெற்ற தாயாருக்கு குழந்தையின் மீது இருக்கும் பிரியத்தையும் இரக்கத்தையும் வேறு யாரிடமும் பார்க்க முடியாது.

எனவே, ஆரம்ப வயதுகளில் ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண்குழந்தையாக இருந்தாலும் பிள்ளையின் தாயே பராமரிக்கும் உரிமையைப் பெறுவாள். தாய் மரணித்துவிட்டால் தாயாரின் தாயாருக்கு அந்த உரிமை கிடைக்கும். நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய மகனுக்கு என்னுடைய வயிறு பாத்திரமாகவும் என்னுடைய மார்பு தண்ணீர் பையாகவும் என்னுடைய மடி வசிப்பிடமாகவும் இருந்தது. அவருடைய தந்தை எனக்கு தலாக் கொடுத்து விட்டார். இப்பொழுது என்னிடமிருந்து மகனை பறித்துவிட நாடுகிறார், என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ மறுமணம் செய்து கொள்ளாத வரை நீயே உன்னுடைய மக (னை பராமரிப்பதற்)கு மிகவும் உரிமையுள்ளவன், என்று கூறினார்கள். (அபூதாவூத் - 2278)

ஏழு வயதுக்குப் பிறகு பையனுக்கு கல்வி மற்றும் ஒழுக்கம் கற்பித்தல் அவசியமாகிறது. கல்வி மற்றும் ஒழுக்கத்தைக் கொண்டு தான் ஒரு மனிதருடைய மரியாதையும் மாண்பும் உயர்கிறது. கல்வி போதனைக்கான ஏற்பாடுகளை தாயை விட தந்தையே சிறப்பாகச் செய்ய முடியும். எனவே, அந்தப் பருவத்தில் குழந்தை தந்தையிடம் வளர்வதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அத்துடன் குழந்தை பெரிதாக வளர்ந்து வந்த பிறகு நற்குணத்துடன் வளர்ந்தால்

அதன் பெருமையும் சிறப்பும் தந்தையையே வந்தடையும். கெட்ட குணத்துடன் வளர்ந்து விட்டால் அதன் இழிவும் கேவலமும் தந்தையையே சாரும். எனவே தான் ஷாஃபியீ மத்ஹபில் பையன் ஏழு வயதைக் கடந்த பிறகு தாய், தந்தை இவர்களில் யாரை பையன் தேர்ந்தெடுக்கிறானோ அவரிடம் வளர்வான், என்று கூறப்பட்டாலும் அங்கும் கூட இந்த ஒழுக்க போதனைகள் விஷயத்தில் தந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது.

ஏனெனில், பையன் ஏழு வயதிற்குப் பிறகு தாயிடம் வளர்வதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் கூட இரவு நேரங்களில் தான் தாயிடம் இருக்க வேண்டும். கல்வி, ஒழுக்கப் போதனைநேரமான பகல் நேரத்தில் பையனை தந்தையிடமே ஒப்படைக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இன்று இந்தச் சட்டங்களை யார் கண்டு கொள்கிறார்கள். அதைச் செயல்படுத்துவதற்கு யார் முன் வருகிறார்கள்?

பையன் தாயிடம் வளர்வதையே விரும்பினாலும் கூட மார்க்க போதனைகளைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் உலகியல் ரீதியான அறிவையும் அனுபவத்தையும் போதிபதற்காகவும் பகல் நேரத்தில் பையன் தந்தையிடம் வளர்வதே பொருத்தமானது. பராமரிப்பவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர் பாவியாக இருக்கக் கூடாது.

மது அருந்தும் பழக்கமுள்ளவராகவோ திருட்டு, விபச்சாரம் மற்றும் ஹராமான காரியங்களை பகிரங்கமாகச் செய்பவராக இருக்கக் கூடாது. அவருடைய பாவத்தின் மூலம் குழந்தை வீணாகிப் போய்விடுமளவுக்கு குற்றம் புரிபவராக இருந்தால் அவர் பராமரிக்கும் பொறுப்பை இழந்து விடுவார்.

ராஃபிஃ பின் ஸினான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், அவருடைய மனைவி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருந்தாள். அவருடைய மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து என்னுடைய மகள் இப்பொழுது தான் பால்குடி நிறுத்தப் பட்டிருக்கிறாள், என்று கூறினாள். ராஃபிஃ (ரலி) அவர்கள் அவள் என்னுடைய மகள், என்று கூறி இருவரும் அக்குழந்தைக்கு உரிமை கோரினார்கள். நபி (ஸல்) குழந்தையின் தாயை ஒரு ஓரத்திலும் தந்தையை ஒரு ஓரத்திலும் உட்கார வைத்து விட்டு குழந்தையை இருவருக்கும் மத்தியில் உட்காரச் சொன்னார்கள். பின்னர், இருவரையும் குழந்தையை அழைக்குமாறு பணித்தார்கள். இருவரும் பிள்ளையை அழைத்தார்கள். குழந்தை தாயின் பக்கம் சாய்ந்தது. நபி (ஸல்) அவர்கள் யா அல்லாஹ் இந்த குழந்தைக்கு நேர்வழி காட்டு, என்று துஆ செய்தார்கள். உடனே அக்குழந்தை தந்தையின் பக்கம் சாய்ந்தது. தந்தை அக்குழந்தையை எடுத்துக் கொண்டார். (அபூதாவூத் - 2246)

அவருக்கு கடுமையாக வியாதி இருக்கிறது. அதனால் குழந்தையைக் கவனிப்பதில் கவனம் செலுத்த முடியாது. அல்லது அந்த வியாதியின் மூலம் அக்குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும், என்றிருந்தாலும் பராமரிப்பு உரிமையை இழந்து விடுவார்.

பார்க்கும் உரிமை:
பொதுவாக இன்று குழந்தையை தாய் வளர்த்தால் தந்தையிடமோ தந்தை வளர்த்தால் தாயிடமோ குழந்தையைக் காட்டுவதில்லை. அவர்களுடைய பார்வை குழந்தை மீது படாமலே வளர்க்கின்றனர்.

தங்களை மார்க்கப் பற்றுள்ளவர்கள் என்று சொல்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மார்க்கம் ஒருவருக்குக் கொடுத்த உரிமையை பறித்துக் கொள்வதற்கு நமக்கு என்ன அருகதை இருக்கிறது. குழந்தை தாயிடம் இருந்தாலும் தந்தையிடம் இருந்தாலும் தன்னுடைய பிள்ளையை தாயோ தந்தையோ பார்ப்பதற்கும் சந்திப்பதற்கும் முழு சுதந்திரமும் உரிமையும் உண்டு, என்பதே மார்க்கத்தின் நிலைபாடு.

தாய், தந்தையார்களில் யாராவது நோய்வாய் பட்டுவிட்டால் குழந்தை யாரிடம் வளர்ந்தாலும் அவர்களை நோய்நலம் விசாரிப்பதற்கு குழந்தையை அனுமதிக்க வேண்டும். கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவு ஏற்பட்டாலும் குழந்தையைப் பொறுத்தவரை தாய் தாய்மையின் உறவையோ தந்தை, தகப்பனின் உரிமைமையோ இழந்து விட மாட்டார்கள். தாய், தந்தை உறவை யாராலும் பிரிக்கவும் முடியாது. மாற்றவும் முடியாது.

ஒரு தாய், தந்தையின் பார்வை பட்டுவிடாமல் வளர்த்து தந்தை பாசம் என்னவென்றே தெரியாமலாக்கி தந்தை யாரென்றே தெரியமலாக்கி வளர்ப்பதை மார்க்கம் அங்கீகரிக்கவில்லை.

தாய், தந்தை, பிள்ளை உறவு கடைசி வரை தொடரவே செய்யும். திருமணப் பதிவேட்டில் தந்தையுடன் தொடர்பு இல்லை என்பதற்காக உண்மையான தந்தையின் பெயரைப் பதியாமல் வளர்ப்புத் தந்தையின் பெயரை தந்தையின் பெயராகப் பதிவதை மார்க்கம் அனுமதிக்காது. தந்தை இல்லாத ஒருவரை தந்தையாகக் கூறுவது இஸ்லாத்தின் பார்வையின் பெருங்குற்றம்.

தாய், தந்தை, பிள்ளைகளில் யார் இறந்து விட்டாலும் ஒருவர் மூலம் மற்றவருக்கு சட்டப்படியாக சொத்திலும் பங்கு கிடைக்கும். மகனைத் தந்தையை விட்டும் பிரித்துவிட்டாலும் தந்தையின் மூலம் மகனுக்கும் மகனின் மூலம் தந்தைக்கும் சொத்து கிடைக்காமல் போகாது. நாமாக கற்பனை செய்து கொள்வதை சரியென்று செயல்படுத்துவதை நிறுத்தவில்லையானால் இந்தச் சமூகத்தின் எதிர்காலம் எப்படியிருக்குமென்று சொல்ல முடியாது.   

ஜகாத் - அறிந்ததும் அறியாததும்

ஜகாத் விஷயத்தில் முழுக்கவனம் இருக்க வேண்டும். மார்க்கம் வெறும் இரண்டரை சதவீதம் மட்டுமே கேட்கிறது. அந்தக் குறைந்த அளவு ஜகாத்தை முழுமையாக நிறைவேற்றிவிட்டு நம்முடைய சொத்துக்களை ஹலாலாக்கிக் கொள்வதற்கான வழியைத் தேடிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நம்முடைய ஹலாலான செல்வமும் பாதிப்புக்குள்ளாகிவிடும். ஒவ்வொரு நபருக்கும் ஜகாத் கடமையாகும் தேதியன்று கணக்கிட்டு ஜகாத் கொடுத்து விடவேண்டும்.

வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு தேதிகளில் ஜகாத் கடமையாகலாம். அந்தத் தேதியில் செல்வத்தைக் கணக்கிடுவது கட்டாயமாகும். எனினும், ஒருவருக்கு ஜகாத் கடமையாகும் தேதி தெரியாமல் இருந்தாலோ அல்லது மறந்து விட்டாலோ வருடத்தில் சந்திர மாதத்தின் ஏதாவதொரு மாதத்தின் ஏதாவதொரு தேதியை (பிறையைக்) குறிப்பிட்டு அந்தத் தேதியில் ஒவ்வொரு வருடமும் கணக்கிட வேண்டும். சந்திர மாதத்தின் அடிப்படையிலேயே கணக்கிட வேண்டும்.

ஆங்கில மாதத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. உதாரணமாக, ரமளான் பத்தாம் நாள் என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு வருடமும் ரமளான் பத்தாம் நாள் கணக்கிட்டு ஜகாத் கொடுக்க வேண்டும்.

ஸஹர் உணவுக்கு நன்கொடை

ரமளான் மாதத்தில் தமிழகத்தின் பல பாகங்களில் ஸஹர் உணவுக்கான ஏற்பாடு செய்யப் படுகிறது. சில இடங்களில் ஒரு விலை நிர்ணயித்து டோக்கன் கொடுக்கிறார்கள். இன்னும் சில  இடங்களில் இலவசமாகவே கொடுக்கிறார்கள். இப்படி இலவசமாக ஸஹர் உணவுக்கான ஏற்பாடு செய்பவர்கள் நன்கொடை வசூலில் ஈடுபட்டால் அவர்களுக்கு (நேர்மையான முறையில் ஏற்பாடு செய்து பொதுசேவை சிந்தனையுள்ளவர்களாக இருந்தால்) நம்முடைய செல்வத்திலிருந்து தாராளமாக உதவி செய்யலாம். அதற்காக அபரிமிதமான நன்மைகள் கிடைக்கும்.

எனினும், ஸஹர் உணவுக்காக நாம் கொடுக்கும் நன்கொடையை ஜகாத் கணக்கில் எழுதி விடக்கூடாது. ஏனெனில், ஸஹர் உணவை சாப்பிடுபவர்கள் அனைவரும் ஏழைகள் அல்லர். வசதியானவர்களும் இருப்பார்கள். அத்துடன் ஸஹர் உணவு பார்சலாக அவர்களிடம் முழுமையைக ஒப்படைக்கப் படுவதில்லை. வந்து சாப்பிடுவதற்கான அனுமதி மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஜகாத் பணத்தை அதற்காகக் கொடுக்க முடியாது.

குமர் காரியத்திற்காக ஜகாத் பணம்
இன்று பலர் குமர் காரியத்திற்காக வசூல் செய்கிறார்கள். அவர்களில் உண்மையிலேயே குமர் காரியத்திற்காக உதவி நாடுபவர்களுக்கு வாரி வழங்குவது நன்மைக்குரிய செயலாகும். இன்று பெண்ணைத் திருமணம் செய்து வைப்பது என்பது பொருளாதார ரீதியாக மிகவும் சிரமமான காரியமாகி விட்டது.  இந்நிலையில் அவர்களுக்கு ஜகாத் பணத்திலிருந்து உதவி செய்யலாம்.

ஏற்கனவே, அவர்களிடம் 612 1/2கிராம் வெள்ளி அளவுக்கு ரொக்கம் இருந்தாலும் ஜகாத்தாக அவர்களுக்குக் கொடுக்கலாமா? அப்பொழுது அவர்களுக்கு ஜகாத் கொடுப்பது கட்டாயமாகி விடுமே, என்ற சந்தேகத்திற்கு அல்லாமா காலித் ஸைஃபுல்லாஹ் ரஹ்மானீ அவர்கள் பின்வருமாறு விளக்கம் கொடுக்கிறார்கள்:


ஜகாத் பெறத் தகுதியானவர்கள் இரண்டு வகையினர்களாக இருக்கிறார்கள்.
1. ஏழைகள், வசதி வாய்ப்பில்லாதவர்கள்.
2. குறிப்பிட்ட தேவையுள்ளவர்கள். உதாரணமாக வழிப்போக்கர்கள், கடனாளிகள்.

இவர்களில் முதல் வகையினருக்கு 612 1/2 கிராம் வெள்ளியின் அளவை விடக் குறைவாகக் கொடுக்க வேண்டும். அதைவிட அதிகமாகக் கொடுப்பது மக்ரூஹ் ஆகும். இரண்டாம் வகையினருக்கு அவர்களுடைய தேவை நிறைவேறும் அளவுக்கு கொடுக்க வேண்டும். வழிப்போக்கர்கள் பயணத்தின் செலவுக்கு போதுமானதாக இருக்க வேண்டும். அது மேற்கூறப்பட்ட தொதைகயை விட அதிகமாக இருந்தாலும் சரியே!

கடனாளிகள் தங்களுடைய கடனை அடைப்பதற்குத் தேவையான அளவுக்குக் கொடுக்க வேண்டும். குமர் காரியத்திற்கான தேவையுள்ளவர்கள் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு அதிகமாகக் கொடுக்கலாம். எனினும், பேணுதல் என்னவெனில் அதிகப்படியான தொகையை பெண்ணுடைய தாய், தந்தையின் பெயரிலும் கொடுக்கலாம். (நூல்:கிதாபுல் ஃபதாவா 8/336. 337)

வியாபாரப் பொருட்கள்
இறைவிசுவாசிகளே! நீங்கள் சம்பாதித்த நல்லவற்றிலிருந்து செலவு செய்யுங்கள். (2:267) என்று கூறுகிறது, வியாபாரச் சரக்கிலிருந்து நாங்கள் ஸதகா கொடுக்க வேண்டுமென எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள், என்று ஸம்ரா பின் ஜுன்துப் (ரலி) கூறுகிறார்கள். (அபூதாவூத்)
ஒரு வியாபாரி ஒவ்வோர் ஆண்டும் தன்னுடைய சரக்கை கணக்கிட்டு பணத்திற்கு ஜகாத் கொடுப்பது போல் 2 1/2 சதவீதம் கொடுக்க வேண்டும். கடையில், குடோனில் எவ்வளவு சரக்குகள்  இருக்கின்றன, என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு இரண்டரை சதவீதம்  ஜகாத் கொடுக்க வேண்டும். எனினும், பெரிய அளவில் வியாபாரம் நடக்கும் போது அதிகமான விற்பனைப்  பொருட்கள் இருக்கின்றன.

அவற்றை ஒவ்வொன்றாக எண்ணி துல்லியமாக கணக்கிடுவது நடைமுறை சாத்தியமில்லாமல் இருந்தால், எவ்வளவு சரக்கு இருக்கும் என்பதை தோரயமாகக் கணக்கிட்டு ஜகாத் கொடுக்கலாம். இது போன்ற சமயத்தில் நாம் போடும் கணக்கு ஜகாத் கொடுக்க வேண்டிய அளவைவிடக் கூடுதலாக இருக்க வேண்டுமே தவிர குறைந்து விடக்கூடாது. எனவே, பேணுதல் அடிப்படையில் விசாலமாகவே கணக்கிட  வேண்டும். (கிதாபுந் நவாஜில்)

வியாபாரத்திற்காக வைக்கப்பபட்டிருக்கும் எல்லாப்  பொருளையும் கணக்ககில் எடுத்துக் கொள்ள வேண்டும். வியாபார நோக்கத்திற்காக இல்லாத ஃபர்னிச்சர்ஸ் போன்ற தளவாடப்பொருட்கள் கணக்கில் வராது. இவை உபயோகப் பொருட்களின் வரிசையில் சேர்ந்து விடும்.

ஜவுளிக்கடை பொம்மை உடுத்தியிருக்கும் புடவை வியாபாரப் பொருளாக கணிக்கப்படும். பொம்மை அதில் சேராது. கோழிகள் வளர்த்து முட்டை வியாபாரம் செய்தால் முட்டை மட்டுமே வியாபாரச் சரக்காகும். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் தளவாடப் பொருட்களில் சேரும். எனினும், இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள், கடிகாரம், ரேடியோ போன்றவற்றை பழுது பார்க்கும் போது அவற்றோடு இணைக்கப்படும் உதிரிபாகங்கள் தளவாடப் பொருள்களாக ஆகாது. அவற்றை வியாபாரப் பொருட்களாக கருதப்படும். தொழிற்சாலைகளில் சரக்குகளை இடமாற்றம் செய்வதறக்காக உபயோகிக்கப்படும் வாகனங்களின் கிரயத்திற்கு ஜகாத் கொடுக்கத் தேவையில்லை.

வீடு, நிலம்
வீடு, நிலங்களை விற்பதற்காகவே வாங்கினால் அவை வியாபாரப் பொருளாகிவிடும். ஒவ்வொரு வருடமும் அதன் விலையைக் கணக்கிட்டு ஜகாத் கொடுக்க வேண்டும். தன்னுடைய உபயோகத்திற்காக ஒரு வீட்டை வாங்குகிறார். வியாபார நோக்கம் எதுவும் இல்லை. எனினும், லாபம் கிடைத்தால் விற்றுவிடலாம் என்ற எண்ணமிருப்பதால் மட்டும் அந்த வீடு வியாபாரப் பொருளாக ஆகிவிடாது. ஒருவர் நிலத்தை விற்பனைக்காக வாங்கினார்.

ஆனால் பிறகு அந்த இடத்தில் வீடு கட்டி வசிக்கலாம் என்று முடிவு செய்து விட்டால் அதன் பிறகு அந்த நிலத்திற்கு ஜகாத் தேவையில்லை. (அல்ஃபதாவல் ஹிந்திய்யா - துஹ்ஃபயெ ஜகாத்) வீடு, நிலம் தவிர எல்லாப் பொருளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.

வீட்டுப் பாத்திரங்களில்:
வீடுகளில் ஏராளமான பாத்திரங்கள் உபயோகிக்கப் படாமல் இருக்கும். விசேஷ காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும். இவை, வீட்டு உபயோகப் பொருள் என்பதாலும் வளர்ச்சியின்மையாலும் ஜகாத் கடமையாகது.

வாடகை வீடுகளில்
வீடு, கடை (ஆட்டோ, டேக்ஸி, ஃபர்னிச்சர்) மற்றும் பாத்திரங்கள் போன்றவற்றை வாடகைக்கு விட்டால் வரும் வாடகை வருமானத்திற்கு மட்டுமே ஜகாத் கடமையாகும். வாடகைக்கு விடப்பட்டிருக்கும் வீடு அல்லது வாகனத்தின் கிரயத்திலிருந்து ஜகாத் கொடுக்க வேண்டிய கட்டாயமிலலை.

விலை நிர்ணயித்தல்
வியாபாரச் சரக்கை நாம் ஒரு விலையில் வாங்கியிருப்போம். அதன் பிறகு விலையில் மாற்றம் ஏற்படும். பெரும்பாலும் விலை கூடும். இந்நிலையில் எந்த விலையை கணக்கில் எடுத்துக் கொள்வது? சிலசமயம் குடோனில் ஏகப்பட்ட சரக்குகள் இருக்கும், அவை எப்பொழுது விற்பனையாகும், என்றும் சொல்ல முடியாது. இது போன்ற சமயங்களில் அவற்றுக்கு எந்த விலையை நிர்ணயம் செய்வது என்ற கேள்வி எழலாம்,

ஜகாத் கொடுக்கும் போது அப்பொருளின் மார்க்கெட் விலையை அடிப்படையாகக் கொண்டே ஜகாத் கொடுக்க வேண்டும். அதாவது வருடம் நிறைவு பெறும் போது அப்பொருளின் மார்க்கெட் விலையை அடிப்படையாகக் கொண்டே ஜகாத் கொடுப்பது கடமையாகும். மொத்த விலை, சில்லரை விலை என இரண்டு விலை இருக்கிறது. மொத்த வியாபாரியாக இருந்தால் மொத்த விலையை வைத்து கணக்கிட வேண்டும். சில்லரை வியாபாரியாக இருந்தால் சில்லரை விலையை கணக்கிட வேண்டும். இரண்டு விதமாகவும் வியாபாரம் இருந்தால் ஏழைகளுக்கு அதில் பலன் கிடைக்கும் (சில்லரை) விலைக்கு முதலிடம கொடுக்க வேண்டும்