Sunday, 9 June 2013

வெட்கித் தலைகுனியும் வெட்க உணர்வு





படைப்புகளில் சிறந்தவன் மனிதன், என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு. அச்சிறப்பு அவனுக்கு எதன் மூலம் கிடைத்தது? மற்ற உயிரினங்களுக்கு இல்லாத பகுத்தறிவு அவனிடம் இருக்கிறது. மற்ற விஷயங்களில் (குழந்தைப் பெற்றுக்கொள்வதிலோ வீடு கட்டுவதிலோ) மிருகங்களுக்கும் மனிதனுக்கும் மத்தியில் பெரிய வேறுபாட்டை பார்க்க முடியாது. சொல்லத்தக்க வேறுபாடு ஒன்று இருக்கிறதென்றால் அது பகுத்தறிவும் அதன் மூலம் ஏற்படும் வெட்க உணர்வும் தான். ஆரம்ப மனிதர் ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு ஒவ்வொரு மனிதனிடமும் வெட்க உணர்வு பதிக்கப்பட்டிருந்தது. எனவே தான், சுவனத்தில் ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் தங்களுடைய ஆடை விலகியதும் உடனே சுவனத்தின் இலைகளை எடுத்து உடலை மறைத்துக் கொண்டதாக குர்ஆன் கூறுகிறது. ஆனால் இன்றைய ஆபாசக் கலாச்சாரத்தினால் அந்த வெட்க உணர்வு மனிதனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. வெட்க உணர்வே வெட்கித் தலைகுனிந்து மாண்டுவிடும் போலிருக்கிறது. காதலர் தினம் போன்றவை இந்த வெட்கமின்மையை வெளிச்சமாக்குவதற்காவே பயன்பட்டு வருகிறன்றன. சொல்லப் போனால் வெட்க உணர்வு வேண்டாத ஒன்றாகவும் அதை ஒரு வியாதியாகவும் பார்க்கப் படுமளவுக்கு சிந்தனை அடிமைப்படுத்தப் பட்டிருக்கிறது.
அனைத்து நபிமார்களும் சொன்ன செய்தி:
மக்கள் பெற்றுக் கொண்ட முந்தைய நபித்துவத்தின் முக்கியச் செய்தி - அதாவது - முன்வந்த நபிமார்கள் அனைவரும் கூறி வந்த செய்தி, உனக்கு வெட்கமில்லையானால் நீ நாடியதைச் செய்து கொள்!, என்பது தான, என்று நபி (ஸல்) கூறியுள்ளார்க்ள.  (புகாரி- 3484) வெட்கமில்லையானால் மனிதன் எவ்வளவு அசிங்கமான காரியத்தையும் செய்யத் துணிந்துவிடுவான், என்பதையே இந்த நபி மொழி சுட்டிகாட்டுகிறது. அது தான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டங்களில் பல ஒவ்வொரு காலத்திலும் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த வெட்கம் அனைத்து நபிமார்களின் மூலமும் போதிக்கப்பட்ட செய்தி. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உணர்வு இன்று மழுங்கடிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. அபூஸுஃப்யான் (ரலி) அவர்களிடம் அவர் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் ரோமப் பேரரசர், நபியவர்கள் எம்மாதிரியான போதனைகயைப் போதிக்கிறார்? என்று கேட்டபோது அவர், எங்களை தொழுகை, தர்மம், கற்பொழுக்கத்தில் சிறந்த தன்மை, உறவுகளுடன் சேர்ந்து வாழ்வது போன்ற விஷயங்களைப் போதிக்கிறார் (புகாரி) என்று கூறுமளவுக்கு வெட்கம், மற்றும் ஒழுக்கம் பற்றிய நபியவர்களின் போதனை முஸ்லிம்களையும் கடந்து அனைத்து மக்களிடமும் பரவலாகியிருந்தது. வெட்கமின்மையால் அரபுகளிடம் ஏற்பட்டுவிட்ட ஆபாச - அறியாமைக் கலாச்சாரத்தை கருவறுப்பதற்காக நபித்துவத்தின் ஆரம்பம் முதற்கொண்டே வெட்கம் மற்றும் ஒழுக்க மேன்மையின் முக்கியத்துவம் பற்றி அதிகம் பேசியிருக்கிறார்கள், என்பதை விளங்க முடிகிறது.  
வெட்கம் வியாதியல்ல:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் தம்முடைய சகோதரர் வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தார். அதற்கு நபி (ஸல்) அவரை விட்டு விடும். நிச்சயமாக வெட்கம் இறைவிசுவாசத்தோடு (ஈமானோடு) கலந்தது, என்று கூறினார்கள். (புகாரீ - 6118) புகரீ ஷரீஃபின் மற்றொரு அறிவிப்பில் கண்டிப்பாக வெட்கம் நல்லதைத் தவிர வேறெதையும் கொண்டுவராது, என்றும் கூறினார்கள். (6117) ஒருவர் வெட்கப்பட்டு தம்முடைய உரிமையைப் பெறுவதை விட்டுவிட்டால் அவருக்கு அது நற்பலனையே பெற்றுத் தரும். அதனால் அவர் ஒன்றும் நஷ்டப்பட்டுப் போய்விடமாட்டார். ஒரு உண்மை இறைவிசுவாசிக்கு மார்க்கத்தின் போதனைகளும் சட்டங்களுமே சரியாகவும் சிறந்ததாகவும் தெரிய வேண்டும்.
அழிவின் முதல்படி:
அல்லாஹ் ஓர் அடியானை நாசமாக்க நாடி விட்டால் அவனை முதலில் வெட்கமிழக்கச் செய்கிறான், ... கடைசியாக அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுகிறான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்..  (இப்னுமாஜா - 4054)   இன்று கோ எஜுகேஷன் மூலம் ஆரம்பம் முதற்கொண்டே வெட்க உணர்வு வெட்டி விடப்படுகிறது. அதற்கு முன், பிறந்ததிலிருந்து இசையின் விசையில் தான் பிள்ளைகள் வளர்கின்றன. தண்ணீர் விவசாயத்தை செழிப்படையச் செய்வது போல் இசை உள்ளத்தில் நயவஞ்சகத் தனத்தை தண்ணீர் ஊற்றி வளர்க்கும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய தகவல் ஸுனனுல் பைஹகீயில் அறிவிக்கப்பட்டுள்ளது. (அல்பைஹகீ - 21536) இன்று (உரடவரசந வாசடிரபா அநனயை) மீடியாவின் மூலம் தவறான கலாச்சாரத்தை மக்களுடைய சிந்தனையுடன் கலந்து விடுகின்றனர். இன்றைய இசை வெறும் இசை மட்டுமல்ல. அத்துடன் இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்களும் இசையுடன் நம்மை அறியாமலேயே நமக்குள் புகுத்தப்படுகின்றன. இசையில் ஆர்வம் கொண்ட வாலிபர்கள் இறைநிராகரிப்புக் கலாச்சாரத்திற்கு எதிராக எதையும் கேட்க விரும்ப மாட்டார்கள். உலமாக்களை நல்ல கண் கொண்டு பார்க்க மாட்டார்கள். அவர்கள் மஸ்ஜிதுக்கு வருவதை எதிர்பாக்க முடியாது. இது பற்றி நபி (ஸல்) அவர்கள் தெளிவாகவே எச்சரித்திருக்கிறார்கள்.
மொபைல் மூலம் இசை இன்று பரவலாக்கப் பட்டிருக்கிறது. சிறுவயதிலேயே அந்த இசையில் இனிமை பெற்று அதைத் தவிர வேறெதிலும் காதுக்கு இனிமை கிடைப்பதாக உணரமாட்டார்கள். இது உச்சகட்டத்தை அடையும் போது மார்க்கத்தின் போதனைகளின் மீது வெறுப்பு ஏற்படுகிறது. பெரியவர்களும் நல்லவர்களும் விபரமில்லாதவர்கள், என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இஸ்லாத்தின் கட்டுப்படுகளும்  பெற்றோர்களின் கட்டுப்பாடுகளும் அவர்களுக்கு கொடுமைப்படுத்தும் மடமைச்சட்டங்களாகவே தெரிகிறது. இவையெல்லாம் அவர்களுடைய சுதந்திரத்தில் தலையிடுவாகக் கருதும் அளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டுவிடுகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையை - ஒழுக்கத்தைச் சீரழிக்கும் சுதந்திரத்தில் மார்க்கமோ பெற்றோர்களோ தலையிடுவதை தண்டனையாக நினைக்க தலைப்பட்டு விடுகிறார்கள். இசை நயவஞ்சகத்தனத்தை தண்ணீர் ஊற்றி வளர்க்கிறது, என்ற நபிமொழியின் உண்மைத்துவம் மேலும் மேலும் உறுதியாகிறது. வெட்க உணர்வை நபி (ஸல்) அவர்கள் ஈமான் - இறைவிசுவாசத்தைச் சார்ந்தது, என்று கூறினார்கள். ஈமானுக்கு முரணாக இறைநிராகரிப்பை விட மோசமான நயவஞ்சகத்தனத்தை விதைக்கும் இசையின் மூலம் அந்த வெட்க உணர்வு வேரோடு பிடுங்கப்பட்டு விட்டுவிடுவதில் என்ன சந்தேகம் இருக்கப் போகிறது. 
அசத்தியம் பெட்ரூம் வரை:
தப்லீக் ஜமாஅத்தினர்கள் கூட தீனைப்பற்றி பேசுவதற்கு வாசலில் நின்று கொண்டு அழைக்க வேண்டியிருக்கிறது. அவர் வெளியே வரவும் செய்யலாம். வராமலும் இருக்கலாம். அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்கள் வாசலோடு அனுப்பி விடப்படுகிறார்கள். ஆனால், குஃப்ர், இறைநிராகரிப்பாளர்கள் எந்த ஊடகத்தின் மூலம் நம்முடைய பிள்ளைகளின் சிந்தனையில் அசிங்கத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார்களளோ அதை டீ. வி. யின் உருவத்தில் வீட்டிற்குள்ளே வைத்திருக்கிறார்கள். சத்தியம் வீட்டுவாசலைத் தட்டுகிறது. அசத்தியம் பெட்ரூம் வரை வந்து வெற்றியும் பெறுகிறது. (ஃபகீர் கா பயாம் நயீ நஸ்ல் கே நாம்) இன்று டீ வி, வீடியோ போன்றவை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிற ஒழுக்கச் சீர்கேடு சாதாரணமானதல்ல. விபச்சாரம் பெருகியிருக்கிறது, என்பது மட்டுமல்ல; ஒருவர் தன்னுடைய மகள், சகோதரி போன்ற இரத்த உறவுப் பெண்களைக் கூட இச்சையோடு பார்க்க ஆரம்பித்து விடுகிறார். சிலர் அவர்களுடன் விபச்சாரமும் செய்து விடுகின்றனர். (ஹயா அவ்ர் பாக்தாமனீ)  மஹ்ரமான (இரத்த உறவுப்) பெண்ணுடன் விபச்சாரம் செய்தவனைக் கொன்று விடுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ - 1462)
இரத்த உறவுப் பெண்களைத் தவறான பார்வையாக பார்க்கக் கூடாது, என்பதும் அவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது, என்பதும் மனிதனுடைய இயற்கை சுபாவத்துடன் கலந்து விட்ட ஒரு தன்மை. மனிதனையும் மிருகத்தையும் வேறுபடுத்திக் காட்டுவதே இந்த தன்மை தான். ஆடு, மாடு, நாய் போன்ற பிராணிகளுக்கும் மனிதனுக்கும் மத்தியில் பிரித்துக் காட்டக்கூடிய தன்மையே மாறிவிட்டதென்றால் இது வெட்க உணர்வு  மட்டும் இழந்து போகவில்லை. மனித உணர்வும் மாண்டுவிட்டதாகவே தோன்றுகிறது. வெட்கத்தின் அளவுகோல்:
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம், அல்லாஹ்விடமிருந்து வெட்கப்பட வேண்டிய முறைப்படி வெட்கப்படுங்கள், என்று கூறினார்கள். நபித் தோழர்களும் அல்லாஹ்வின் தூதர் அவர்களே நாங்கள் வெட்கப்படுகிறோம். அல்ஹம்துலில்லாஹ்! - எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள் அவ்வாறல்ல. (சாதாரண வெட்கத்தைப் பற்றி நான் கூறவில்லை) அல்லாஹ்விடமிருந்து வெட்கப்படும் முறைப்படி வெட்கப்பட வேண்டுமென்றால் (அதற்கென ஒரு முறை இருக்கிறது. அதாவது)  தலையையும் தலை ஒன்று சேர்த்து வைத்திருப்பதைப் பாதுகாக்க வேண்டும. வயிற்றையும் அதைச் சுற்றியுள்ளவற்யும் பாதுகாக்க வேண்டும். மரணத்தையும் அதற்குப்பிறகு உடல் உக்கிப்போவதைப் பற்றியும் நினைக்க வேண்டும். மறுமை வாழ்க்கையில் நாட்டம் கொண்டவர் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை விட்டுவிடுவார். யார் அப்படிச் செய்தாரோ அவரே அல்லாஹ்விடம் வெட்கப்பட வேண்டிய அளவுக்கு முறைப்படியாக வெட்கம் கொண்டாவராவார், என்று கூறினார்கள். (திர்மிதீ - 2458)   தலையைப் பாதுகாப்பதென்றால் அல்லாஹ்வுக்காகவே தவிர சிரம் பணியக்கூடாது. மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக (தொழக்கூடாது) ஸஜ்தா செய்யக்கூடாது. தலை ஒன்று சேர்த்து வைத்திருப்பவை என்றால் கண், காது, மூக்கு, நாவு போன்றவற்றை எடுத்துக்கொள்ளும். பார்க்கக் கூடாதவற்றையோ அந்நியப் பெண்களையோ பார்க்கக் கூடாது. கேட்கக்கூடாதவற்றை கேட்கக்கூடாது. பேசக்கூடாதவற்றை பேசக்கூடாது. வயிற்றைப் பாதுகாப்பதென்றால் ஹராமானவற்றைச் சாப்பிடக்கூடாது.  அதைச் சுற்றியிருக்க்கூடிய மறைவிடங்கள், கால்கள் போன்றவற்றை மனோ இச்சைக்கு அடிபணிய வைக்கக்கூடாது. அல்லாஹ்விடம் வெட்கப்படுவதற்கென ஒரு இலக்கணம் இருக்கிறது. ஆனால் இன்று பல சமயங்களில் நன்மையை ஏவுவதிலும் தீமையைத் தடுப்பதிலும் வெட்கம் குறுக்கிடுகிறது. மார்க்க விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு வெட்கம் தடையாக இருக்கிறது. மார்க்கத்தில் இந்த வெட்கம் விரும்பத்தக்கதல்ல. நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த பின் அன்ஸாரிப் பெண்கள், பெண்களுக்கான மார்க்கச் சட்டங்கள் பற்றி நபியவர்களிடம் தெளிவாகக் கேட்டறிந்து கொண்டனர். எனவே, அவர்களைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களில் சிறந்தவர்கள் அன்ஸாரிப் பெண்கள். வெட்கம் அவர்களுக்கு மார்க்க விஷயத்தில் விளக்கம் பெற்றுக்கொள்வதற்குத் தடையாக இருக்கவில்லை என்று புகழ்ந்து கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இன்று பாவம் செய்! நாளை திருந்தலாம்!:
இன்று பொதுவாக வாலிபர்களிடம் வெட்க உணர்வையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, இப்பொழுது மனம் போனபடி செய்து கொள்ளலாம். விளைவுகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம், என்ற சிந்தனை தான் மிகைத்திருக்கிறது. மன்னிப்பு கேட்பது நல்ல தன்மை தான் என்பதற்காக யாரிடமும், பிறகு மன்னிப்பு கேட்கும் படியான வார்த்தையைப் பேசிவிடக்கூடாது. அவ்வாறே பின்னர் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம் என்ற அசட்டுத் துணிச்சல் வந்து விடக்கூடாது. இதற்கு யஃகூப் (அலை) அவர்களுடைய வாலிபப் பிள்ளைகளை உதாரணமாகச் சொல்லலாம். யூஸுஃப் (அலை) அவர்களின் மீது அவர்களுடைய சகோதரர்களுக்கு பொறாமை இருந்தது. எனவே, இப்பொழது யூஸுபை கொலை செய்து விடலாம். அதற்குப் பிறகு தௌபா செய்து திருந்திவிடலாம், என்று நினைத்தனர். (யூஸுஃபைக் கொன்று விடுங்கள். அல்லது அவரை பூமியில் எங்கேனும் எறிந்து விடுங்கள். (அப்படிச் செய்தால்) உங்கள் தந்தையின் முகம் (கவனம்) முற்றிலும் உங்கள் பக்கமே இருக்கும். அதற்குப் பின்னர் நீங்கள் (அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடிக்கொண்டு ) நல்லவர்களான கூட்டத்தினராகிவிடுவீர்கள், என்று கூறினார்கள். (அல்குர்ஆன் - 12:9) ஆனால் யூஸுப் (அலை) அவர்களை ஒரு பெண் தவறான செயலுக்கு அழைக்கும் போது இப்பொழுது தவறு செய்து விட்டு பிறகு திருந்திக் கொள்ளலாம், என்று நினைக்கவில்லை. அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடி அந்தத் தவற்றை விட்டும் ஒதுங்கிக் கொண்டார்கள்; வெருண்டோடினார்கள்.  யூஸுப் (அலை) அவர்களுக்கு தவறு செய்வதற்கான எல்லா சூழ்நிலைகளும் சாதகமாக அமைந்திருந்தன. தவறு செய்யாவிட்டால் சிறைத்தண்டனை கிடைக்கும் என்ற நிலையிலும் பாவத்தை விட்டும் வெருண்டோடினார்கள். ஆனால் அவர்களுடைய சகோதரர்களுக்கு தவறு செய்வதற்கு சாதகமான சூழ்நநிலையோ நிர்பந்தமோ இருக்கவில்லை. மாற்றமாக தவறு செய்வதற்கான சூழ்நிலையை உண்டாக்குவதற்காக வேண்டுமென்றே திட்டம் தீட்டினார்கள். அதற்காக பொய்யும் சொன்னார்கள். யூஸுஃப் (அலை) அவர்கனை கிணற்றில் வீசினார்கள். பிறகு தௌபா செய்து திருந்திக் கொள்ளலாம், என்ற தைரியம் தான் இந்த எல்லா காரியத்தையும் செய்ய வைத்தது. இன்றைய வாலிபர்களுக்கும் இதே துணிச்சலில் தான் தவறுகளைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இப்பொழுது செய்து விட்டு நடப்பதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம், என்று நினைக்கிறார்கள். நபியின் பிள்ளைகளுக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம் அனைவருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அல்லாஹ்வைப் பயந்து தவறு செய்யாமல் ஒதுங்கிக் கொண்ட யூஸுப் (அலை) அவர்கள் பிற்காலத்தில் அரசில் அங்கம் வகிக்கும் அளவுக்கு சிறப்பைப் பெற்றார்கள். ஆனால், அவர்களுடைய சகோதரர்கள் யூஸுப் (அலை) அவர்களிடமே உதவி கேட்டு கைகட்டி நிற்க வேண்டிய நிலையைத் தான் அல்லாஹ் உருவாக்கினான், என்ற குர்ஆனுடைய சரித்திரத்தை வாலிபர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

1 comment:

  1. Yes, totaly agree with you. As Prophet.Mohammed (Saw) said, "Haya (modesty) is an important branch of Iman"

    ReplyDelete