Friday, 9 January 2015

ராசி பலன் - இஸ்லாமியப்பார்வையில்



புத்தாண்டு பிறந்த உடன் விதவிதமான காலண்டர்கள் வர ஆரம்பித்துவிடும். அவை நாட்காட்டி என்ற விதத்தில் பலன்கொடுக்கக்கூடியது தான். ஆனால் அது ராசி பலனோடு வருவதுதான் முஸ்லிம்களின் நம்பிக்கையை கெடுத்துவிடுகிறது. எல்லா கணக்குகளுக்கும் சாப்ட்வேர் இருப்பது போல் ராகுகாலத்திற்கும் சாப்ட்வேர் இருக்கிறது.

குறிப்பிட்ட தேதியை கொடுத்துவிட்டால் அந்நாளின் ராகுகாலம் பற்றிய தகவல்களை கொடுத்துவிடும். ராகுகாலம், ராசிபலன், எண்கணிதம், போன்றவற்றின் மீது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை இருக்கக்கூடாது. அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே சர்வ வல்லமை படைத்தவனாக நம்பியிருக்கிறார்கள். அந்த சக்தி சூரியன், சந்திரன், நட்சத்திரம் உட்பட எதற்கும் கிடையாது.
பிறவிஎண்:
ஒன்று முதல் ஒன்பது தேதிகளில் பிறந்தவர்களுக்கு அந்தந்த எண்களே பிறவி எண்ணாகும். இரட்டைப்படை தேதிகளில் பிறந்தவர்களுக்கு தேதி எண்களின் கூட்டுத்தொகை பிறவி எண்ணாகும். இதன் மூலம் ஒருவரது பண்பு நலன்கள், விருப்பு வெறுப்பு , கல்வி, தொழில், லட்சியம் போன்றவை தீர்மானிக்கப்படுகின்றனவாம். விதி எண் என்பது பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றின் கூட்டுத் தொகையாகும். இதைக்கொண்டு வாழ்வின் சம்பவங்கள், முன்னேற்றம், கூட்டுலாபங்கள் போன்றவற்றை கணிக்கலாம், என்று கூறப்படுகிறது. முஸ்லிம்கள் இப்படி நம்புவதும் ராகுகாலம் பார்த்து தங்களுடைய காரியங்களை நடத்துவதும் அவர்களின் ஈமானை- இறைநம்பிக்கையை பறித்துவிடும்.

வான் படைப்புகள் எதற்காக?:
1. சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்றவற்றை அல்லாஹ் படைத்திருப்பதின் நோக்கம் மகா உயர்வானது. திண்ணமாக இரவு பகல் மாறி மாறி வருவதிலும் வானங்கள் மற்றும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் (தவறான நோக்கிலிருந்தும் நடத்தையிலிருந்தும்) தவிர்ந்து கொள்ள விரும்பும் மக்களுக்கு பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் - 10:6)

படைப்புகளைக் கொண்டு படைத்தவனை விளங்க முயற்சிக்க வேண்டுமே தவிர அவற்றின் வெளிப்படையான பலன்களைக் கண்டு அவற்றையே வணங்கும் பொருளாக ஆக்கிக்கொள்ளக்கூடாது. காலம் காட்டியாக:

2. இறைநம்பிக்கை தொடர்பான முக்கிய நோக்கத்திற்கு அடுத்த படியாக வாழ்க்கையின் முக்கிய தேவைகளை அவற்றின் மூலம் மனிதன் பெற்றுக்கொள்வதையும் அல்லாஹ் நோக்கமாக ஆக்கியுள்ளான். அவன சூரியனை வெளிச்சம் தரக்கூடியதாக அமைத்தான். சந்திரனுக்கு ஒளியைக் கொடுத்தான். மேலும் (வளர்ந்து தேயும்) படியாக பல நிலைகளை சந்திரனுக்கு நிர்ணயம் செய்தான். இவற்றின் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக! இவற்றையெல்லாம் அல்லாஹ் சத்தியத்துடனேயே தவிர படைக்கவில்லை. அறிவுடைய மக்களுக்கு அவனே சான்றுகளை தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன்-10:5)

நாம் இரவையும் பகலையும் இரு சான்றுகாளாக ஆக்கியுள்ளோம். இரவு எனும் சான்றினை ஒளியற்றதாக ஆக்கினோம். பகல் எனும் சான்றினை நன்கு ஒளி தரக்கூடியதாக ஆக்கினோம். இதன் மூலம் நீங்கள் உங்கள் இரட்சகனின் அருட்கொடையைத் தேடவேண்டும்; மேலும் மாதங்கள், ஆண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக! ... (அல்குர்ஆன்- 17:12)  


 (வளர்ந்தும் தேயந்தும் வரும்) பிறைகள் பற்றி நபியே உங்களிடம் அவர்கள் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக! அவை மக்களுக்கு காலங்காட்டியாகவும் ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பையாகவும் இருக்கின்றன... (அல்குர்ஆன்- 2:189)

இந்த இறைவசங்களின் மூலம் வான் படைப்புகளின் அதிகப்படியான நோக்கத்தையும் பயன்பாடுகளையும் விளக்குகிறான். அவை நமக்கு காலங்காட்டியாக பயன்படுகின்றன. சூரியன் மூலம் பகல் இரவு உண்டாகிறது. இதன் மூலம் நாட்கணக்கை அறிந்து கொள்ளமுடிகிறது. பூமி சூரியனை சுற்றி வருவதன் மூலம் வருடக்கணக்கை அறிந்து கொள்ளமுடிகிறது.  நான்கு பருவகாலங்களும் மாறிமாறி வருகின்றன. சந்திரன் பிறை, வளர்பிறை, பௌர்ணமி, தேய்பிறைகளாக தோற்றமளிப்பதன் மூலம் மக்கள் மாதங்களை முறையாக கணக்கிடமுடிகிறது. சந்திர வருடமே:

சந்திர வருடம், சூரியவருடம் இவ்விரண்டில் மார்க்கக்கடமைகளுக்கு சந்திர வருடத்தையே எடுத்துக் கொள்ளவேண்டும். மாதக்கணக்கிற்கு எளிதான வழி சந்திரனை அடிப்படையாக வைப்ப்து தான். ஏனெனில் 29 அல்லது 30 நாட்களில் அதனுடைய சுற்று முடிந்துவிடுகிறது. பிறைகளின் மாற்றங்களை வைத்து எளிதாக மாதத்தை கணக்கிட்டுக் கொள்ளமுடியும். சூரியன் அவ்வாறு மாற்றமைடைவதாக தோன்றுவதில்லை.

பாமரனுக்கு சூரியன் மூலம் மாதத்தையோ வருடததையோ அறிந்துகொள்வது சிரமம். (வருடத்திற்கு) மாதங்களின் எண்ணிக்கை 12 என்று குர்ஆன் தெளிவாக சொல்லிவிட்டது. எனவே, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்கங்கள் இத்தா போன்ற மாதம் தொடர்பான கடமைகளும் சந்திர (பிறை) மாதத்தின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்படவேண்டும். ஆரம்பகாலத்தில் சந்திர கணக்கு தான் நடைமுறையில் இருந்தது. தீபாவளி (ஐப்பசி மாதத்தின் அமாவாசை) போன்ற மற்ற மத பண்டிகைகள் கூட சந்திரக்கணக்கை அடிபடையாக வைத்து தான் கொண்டாடப்படுகிறது.

3. சூரியன், சந்திரன் மூலம் வாழ்க்கைக்கு தேவையான வெப்பமும் வெளிச்சமும் கிடைக்கிறது. இந்த நோக்கமும் மேற்கூறப்பட்ட வசனங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவை தவிர மற்ற பயன்களும் இருக்கின்றன. தற்கால விஞ்ஞானத்தின் மூலம் அவை அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன. சந்திரன் அதிக பிரகாசமாக இருக்கும் போது (பௌர்ணமி) பழங்களில் சார் வேகமாக அதிகமாகிறது. மற்ற காலங்களில் அதன் வேகம் குறைந்துவிடுகிறது. இது ஒரு ஆய்வுத் தகவல் (நூல்: அஷ்ஷம்சு வல்கமரு பிஹுஸ்பான்)

அவ்வாறே சந்திரன் மூலம் கடல் அலைகளிலும் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்துகிறான். சூரியன் சந்திரன் பூமி இம்மூன்றும் நேர்கோட்டில் வரும்போது அதாவது பவுர்ணமி சமயத்திலும் அமாவாசை (மாத ஆரம்பத்திலும்) ஈர்ப்பு விசை காரணமாக கடல் அலைகள் மிக உயரமாக எழும். அந்நேரத்தின் முக்கியத்துவம் கருதி `முழுமையாக மலர்ந்து விடும் (பவுர்ணமி) சந்திரன் மீது சத்தியமாக!` என்று அல்லாஹ் குர்ஆனில் சத்தியமிட்டுக் கூறுகிறான். (84:18) நூல்: அல்மன்ஹஜுல் ஈமானீ லித்திராஸாதில் கௌனிய்யா.

4. விண்ணில் நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டிருப்பதை யாரும் பார்க்காமல் இருக்கமுடியாது. அவையும் அல்லாஹ்வின் வல்லமையை உணர்த்தக்கூடிய மாபெரும் அத்தாட்சிகள். நட்சத்திரங்கள் அவனுடைய கட்டளையைக் கொண்டு கட்டுபடுத்தப்பட்டிருக்கின்றன. (அல்குர்ஆன்- 16:12)

அவை மனிதனுக்காக வசப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவையனைத்தும் மனிதனுக்காக படைக்கப் பட்டவை தானே தவிர அவற்றை வணங்குவதற்காக படைக்கப்படவில்லை. அல்லாஹ்வுக்குரிய எந்த சக்தியும் அவற்றுக்கு இல்லை. அல்லாஹ் அவற்றின் மூலம் மனிதர்களுக்கு பல பயன்பாடுகளை வைத்திருக்கிறான்.

5. நட்சத்திரங்களின் மூலமாகவும் மக்கள் நேரான வழியினை அடைந்து கொள்கிறார்கள். (அல்குர்ஆன்-16:16) மக்கள் பயணத்தில் இருக்கும் போது மலைகள் மரங்கள் இன்று நாட்டப்பட்டிருக்கும் அடையாளப்பலகைகள் பாதைகளை அறிவித்துக் காட்டுவது போல் நட்சத்திரங்களின் மூலமும் திசைகளை - பாதைகளை அறிந்துகொள்ளலாம். இன்று வரை கடல் பயணத்திற்கு திசையை அறிவிப்பதில் ரொம்ப உதவியாக இருப்பது நட்சத்திரங்கள் தான்.

வானத்தில் ஆங்காங்கே நட்சத்திரம் சிதறிக்கிடப்பது போல் தோன்றினாலும் அவை வருடத்தின் அந்தந்த நாட்களில் அதே குறிப்பிட்ட இடத்தில் தான் இருக்கின்றன என்பது கவனித்து பார்ப்பவர்களுக்கு விளங்கும். எல்லா நட்சத்திரங்களும் உதயமாகி மறைவதாக தோன்றும். ஆனால் துருவத்தில் இருக்கும் நட்சத்திரம் ஒரே இடத்தில் தான் இருக்கும். வட துருவத்தில் இருக்கும் நட்சத்திரத்திரத்தை நோக்கியே காந்தமுல் நிற்கும். இதன் மூலம் வடதிசையை கண்டுகொள்ளமுடிகிறது. கிப்லா திசை தெரியவில்லையானால் நட்சத்திரங்களின் மூலம் திசையை அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்று ஃபிக்ஹ் நூற்களில் கூறப்பட்டுள்ளது.

நம்முடைய பகுதிகளில் சில குறிப்பிட்ட மாதங்களில் மூன்று நட்சத்திரங்கள் வரிசையாக ஏறத்தாழ கிப்லாவை நோக்கி இருப்பதை காணமுடியும். இதுபோல் மற்ற சில நட்சத்திரங்களைக் கொண்டும் திசையை அறிந்து கொள்ளமுடியும். மேலே கூறப்பட்ட எல்லா பயன்பாடுகளும் எல்லோராலும் விளங்கிக் கொள்ளமுடியும். இவற்றின் மூலம் இறைவனுக்கு இணைவைக்கக்கூடிய நிலை உண்டாகாது.

வான்படைப்புகளுக்கு சுயமாக எந்த சக்தியும் இல்லை. அவற்றை அல்லாஹ்வே இயக்குகிறான். உலகில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது. ஆனால் நட்சத்திரங்களின் மீது நம்பிக்கை பெருகியதால் இப்றாகீம் (அலை) அவர்களுடைய காலத்தில் அவற்றுக்கும் சிலைகள் வைத்து வணங்கினார்கள். (நூல்: அஷ்ஷம்சு வல்கமரு பிஹுஸ்பான்)  நபியவர்கள் அதை எதிர்த்து போராடிய நிகழ்ச்சி குர்ஆனில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஜோடிப்பொருத்தம்:
களா கத்ரைப்பற்றி பேசப்பட்டால் (அது பற்றி வாதம் செய்யாமல்) தவிர்ந்து கொள்ளுங்கள்! நட்சத்திரம் பற்றி பேசப்பட்டால் தவிர்ந்து கொள்ளுங்கள்! என்னுடைய தோழர்கள் பற்றி (தவறாக) பேசப்பட்டால் வாய்மூடிக்கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கடலிலும் திடலிலும் பாதை அறிந்து கொள்வதற்குத் தேவையான அளவுக்கு நட்சத்திரத்தை பற்றி கற்றுக்கொள்ளுங்கள். பிறகு அது பற்றி வேறெதையும் கற்றுக்கொள்ளாமல் ஒதுங்கிக்கொள்ளுங்கள், என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (தப்ஸீரு மஆரிபில் குர்ஆன்7-451)

இன்று இந்த நட்சத்திரக்கணக்கில் நம்மவர்களும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். திருமணத்திற்கு முன் ராசி பலன் மூலம் ஜோடிப்ருத்தம் பார்ப்பதில் முனைப்பு காட்டுகின்றனர். மார்க்கம் சொல்லித்தரும் பொருத்தம் பற்றி யோசிப்பதில்லை. நல்லநேரம்:
நம்மிடம் நடைமுறையில் உள்ள காலண்டர்களும் நாம் உபயோகிக்கும் கிழமை மற்றும் மாதத்தின் பெயர்களும் இணைவைப்பைத் தழுவியே அமைந்துள்ளன. சூரியன் சந்திரன் மற்றும் கோள்களின் பெயர்களையே கிழமைகளுக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கோளுக்கும் குறிப்பிட்ட நாட்களின் மீது ஆதிக்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் ஞாயிறு முதல் சனி வரை உள்ள கிழமைகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளன. செவ்வாய் கிழமையையும் சனிக்கிழமையையும் மற்றவர்கள் கெட்டநாளாக நினைப்பது போல் முஸ்லிம்களும் நினைக்கிறார்கள்.  காலத்தின் மீதோ வேறு எந்த பொருளின் மீதோ அல்லாஹ்வின் ஆதிக்கத்தை தவிர நட்சத்திரத்திற்கோ கோள்களுக்கோ அணுவளவும் ஆதிக்கம் கிடையாது என்பது தான் நமது நம்பிக்கை. சித்திரை மாதத்தில் ஆண்குழந்தை பிறந்தால் பேராபத்து வரும் என்ற நம்பிக்கையும் ஷரீஅத்திற்கு முரணானது. அதற்காக சிலர் ஆடி மாதத்தில் திருமணம் செய்வதை தவிர்த்து விடுகின்றனர். உலகில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் சித்திரையில் பிறந்தவர்களா என்ன?

காலத்தை திட்டாதீர்கள் என்று நபி (ஸல்) எச்சரித்திருக்கிறார்கள். அல்லாஹ் படைத்த நாட்களில் எந்த நாளும் கெட்ட நாளல்ல. எந்த நேரமும் கேட்ட நேரமல்ல. அல்லாஹ்வுடைய கட்டளைக்கு முரணாக நடப்பதன் மூலம் வரும் முஸீபத்துக்கெல்லாம் காலத்தை காரணம் காட்டமுடியாது. (நன்மையோ தீமையோ) அல்லாஹ் எங்களுக்காக விதித்தவற்றைத் தவிர வேறெதுவும் எங்களை அடையாது. அவன் தான் எங்களின் பாதுகாவலன் - உதவியாளன். இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கட்டும் என்று நபியே நீர் கூறுவீராக! என்ற இறைவசனம் (9:51) ஒரு முஸ்லிமுக்கு போதுமானது.                       

No comments:

Post a Comment