உலகின் நாலாபுறத்திலிருந்தும் கஃபதுல்லாஹ்வை நோக்கி விரைந்து
செல்லும் நேரமிது. இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1 லட்சத்து 36 ஆயிரத்து 20 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள
சவுதி அரேபிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் ஹஜ் கமிட்டி மூலமாக 1 லட்சத்து 20 பேரும், தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள்
மூலமாக 36 ஆயிரம்
பேரும் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்
ஹாஜிகள் உலகியல் ரீதியாக எல்லா தயாரிப்புகளையும் மேற்கொள்வது போல், இல்லை, அதைவிடவும் மேலாக தங்களுடைய
பயணம் முழுவதும் இறைக்கோட்பாடுகளை மதித்து நடப்பதற்குத் தேவையான பயிற்சிகளையும் மேற்கொள்ள
வேண்டும். பயணத்தின் ஒவ்வொரு வினாடியும் அல்லாஹ்வின் கடமைகளோ அடியாரின் கடமைகளோ புறந்தள்ளப்
பட்டுவிடக் கூடாது.
யாருக்கும் எந்த தொந்தரவும் நம்மால் நிகழ்ந்து விடக்கூடாது.
யாருடனும் எந்த தர்க்கமும் செய்யக்கூடாது, என்று குர்ஆனே நேரடியாக உத்தரவிடுகிறது. ஹஜ் வணக்கத்தை
முழுஉலகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய இந்த வணக்கம் உலகத்தாருக்கு ஒரு
இஸ்லாமிய அழைப்பாக அமைய வேண்டும்.
ஹஜ்ஜுடைய நிய்யத் மனதில் வந்த நாள் முதற்கொண்டு எந்நேரமும்
அல்லாஹ்விடம், நம்முடைய ஹஜ் முறையாகவும் நிறைவாகவும் பூர்த்தியடைவதற்காகவும் அனைத்துலக ஹாஜிகளின்
நலனுக்காகவும் துஆ செய்து கொண்டிருக்க வேண்டும். ஊட்டி, கொடைக்கானல் செல்பவர்கள் அதற்குரிய
ரசனையோடு தான் செல்வார்கள். ஒருவர் கொடைக்கானலில்
தூண் பாறையை பார்த்து விட்டு இதைப் பார்க்கத்தான்
வந்தோமா? ஒரு உயரமான பாறை! அவ்வளவு தானே! என்று சொல்பவராக இருந்தால் அவரை எப்படிப் பார்ப்போம்.
அதே போன்று ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் சட்டங்கள் தெரிந்தால்
மட்டும் போதாது. மக்காவும் மதீனாவும் இஸ்லாம் உருவான இடங்கள். இஸ்லாத்தின் ஆரம்பகால
வரலாற்றுச் சின்னங் களையும், நபி இபுராஹீம் (அலை) அவர்களுடைய
குடும்பத்தினரின் தியாகச் சின்னங்களையும் சுமந்து நிற்கும் புண்ணிய பூமி தான் மக்காவும்,
மதீனாவும். அவற்றை ரசிப்பதற்கு
ஈமானிய சிந்தனை தேவை. அத்துடன் இஸ்லாமிய வரலாற்றுச் சிந்தனையும் அவசியம். மைதானங்கள், கட்டிடங்கள், பள்ளிவாசல்கள், மலைக் குகைகள், கப்ருஸ்தான்கள் போன்றவை மக்கா,
மதீனாவில் மட்டுமல்ல.
முழு உலகிலும் இருக்கின்றன. ஆனால் இரண்டுக்கும் மத்தியில் வானம், பூமிக்கு மத்தியிலுள்ள வேறுபாடு
இருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் நடந்த இடம், நபித்தோழர்கள் போரிட்ட இடம்,
நபியவர்களுக்கு நபித்துவம்
கொடுக்கப்பட்ட குகை என புண்ணியத்தலத்தின் ஒவ்வொரு இடமும் நம்மை இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்ப காலத்திற்கே இழுத்துச் சென்று
விடும். இவற்றை உணர்வதற்கு தனி ரசனை இருக்க வேண்டும். இது காசு கொடுத்து பெற வேண்டிய
பொருளல்ல. அதற்காக நீண்ட கால முயற்சியும் பயிற்சியும் தேவை. ஹாஜிகளுக்காக ஏற்பாடு செய்யப்படும்
சிறப்பு நிகழ்ச்சிகளில் முழுமையாக பங்கெடுத்துக் கொண்டு தங்களை ஆன்மீக ரீதியாக தயார்
படுத்திக் கொள்ள வேண்டும். படிப்பதாக இருந்தால் ஷைகுல் ஹதீஸ் ஜகரிய்யா (ரஹ) அவர் களுடைய ஹஜ்ஜின் சிறப்புகள் என்ற நூலையும், அர்ரஹீகுல் மக்தூம் (தமிழ்) என்ற நூலையும்
படிக்கலாம்.
இந்திய அரசாங்கமும் சவூதி அரசாங்கமும் ஹாஜிகள் எவ்வித
சிரமமுமின்றி பயணம் அமைவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்கின்றன. ஹாஜிகளை - அல்லாஹ்வின்
விருந்தாளிகளை முறையாக உபசரிப்பதில் சவூதி அரசாங்கம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.
உலகின் எந்த அரசாங்கும் செலவிட முடியாத அளவுக்கு பல பில்லியன் ரியால்களை தனது சொந்த
நிதியிலிருந்து சவூதி வாரி இறைக்கிறது.
நிமிடத்துக்கு நிமிடம் புனித இரு ஆலயங்களும், அதன் சுற்றுப்புற வீதிகளும்
துப்பரவு செய்யப்படுகின்றன. நீர் இல்லாத பாலைவனத்தில் லட்சோபலட்சம ஹாஜிகளுக்கான குளிப்பு,
உட்பட அத்தியாவசியத்
தேவையை நிறைவேற்றிக்கொள்ள நீர் வசதிகளும், கழிவறைகளும் எவ்விதக் குறைவுமின்றி செய்யப்பட்டிருக்கின்றன. மினாவில் தீப் பிடிக்காத
கூடாரங்கள் பல பில்லியன் ரியால்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. கல்எறியும் இடமாகிய
மினாவில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக நுணுக்கமாகவே
செய்யப்படுகின்றன. லட்சக்கணக்கான மக்கள் கூடுமிடத்தில் யாரும் யாருக்கும் எந்தத் தொந்தரவும்
கொடுத்து விடாமல் அவசரப்படாமல் வரவேண்டுமென்பதை அரசாங்கம் பல மொழிகளிலும் அறிவிப்புச்
செய்கிறது.
எனினும், மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் செல்வதால் எதிர்பாராத சம்பவங்கள்
நிகழ்ந்து விடுகின்றன. இஹ்ராமுடைய நிலையில் இருக்கும் ஹாஜிகள் ஒழுக்க மேன்மையை கடைபிடிப்பதில்
கவனமாக இருக்க வேண்டும். அல்லாஹ், இவ்வருட ஹாஜிகளின் ஹஜ்ஜை ஹஜ்ஜெ மப்ரூராக ஆக்கியருள்வானாக! பயணத்தின்
எல்லா நிலைகளிலும் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவானா!
No comments:
Post a Comment