'மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும்
முறை, ஒரு மதத்தில் தேவையில்லாத நடைமுறையாகும்' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய
அரசு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களிடையே வழக்கத்தில் உள்ள 3 முறை தலாக் நடைமுறைக்கும், பலதார மணத்துக்கும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் இவற்றுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பது இதுவே
முதல்முறை ஆகும்.
மனுவில் மத்திய அரசு கூறி இருப்பதாவது:
இந்திய அரசியல் சட்டம் பாலின சமத்துவத்தையும், மதச்சார்பின்மையையும் வலியுறுத்துகிறது. ஆண்பெண் சமத்துவமும், பெண்களின் கண்ணியமும் விவாதத்துக்கு அப்பாற்பட்டவை. அதில் சமரசத்துக்கு
இடமில்லை. ஆண்களின் பழக்கத்தால் பெண்கள் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக
பாதிக்கப்படும் எந்த நடைமுறையும் அரசியல் சட்டத்துக்கு முரணானது.
பெண்களுக்கான சம உரிமையை மறுப்பதற்கு மதம் காரணமாக
இருக்கலாமா என்ற அடிப்படை கேள்வியை கோர்ட்டுதான் தீர்மானிக்க வேண்டும். மேற்கண்ட அடிப்படையில், இந்த வழக்கத்தை கோர்ட்டு மறுஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சட்ட கமிஷன்
தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ்.சவுகான், நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரலாமா, தலாக் முறையை ரத்து செய்யலாமா என்பது குறித்து பொதுமக்கள் கருத்துக்களை
தெரிவிக்கலாம், என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பல தடவை பொதுசிவில் சட்டத்தைக்
கொண்டுவர அரசு முயன்றது. 1963 ஆம் ஆண்டு முஸ்லிம் தனியார்
சட்டத்தை மாற்றுவதைப் பற்றி ஆராய்வதற்கும் அதைச் செயல்படுத்தும் வழிமுறைகளைக் கண்டறிவதற்கும்
ஓர் ஆய்வுக்குழுவை நியமிக்க அரசு நாடியது. ஆனால், முஸ்லிம்களின் ஏகோபித்த
எதிர்ப்பினால் இவ்வாய்வுக்குழு நியமிக்கப்படவில்லை.
1972 ஆம் ஆண்டில் வளர்ப்பு
மகனுக்கு சொத்தில் பங்கு உண்டு, என்ற மசோதாவை நிறைவேற்றி
அப்போதைய சட்ட அமைச்சர் மிஸ்டர் கோக்லே பொது சிவில் சட்டத்தை அமுல்படுத்த இது முதற்படி
என்று கூறினார். அச்சமயம், 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 27, 28 ஆம் தேதிகளில் மும்பையில் ஏறத்தாழ ஒரு லட்சம் முஸ்லிம்கள் கூடிய
மாநாடு நடைபெற்றது. அப்து முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் (முஸ்லிம் பெர்ஸனல் லா போர்டு)
நிறுவப்பட்டது. அந்த மசோதா அரசால் வாபஸ் பெறப்பட்டது. முஸ்லிம்களின் ஒற்றுமை எனும்
பேராயுதம் பெர்ஸனல் லாவைக் காப்பாற்றியது.
1985 ஆண்டு ஷாபானு வழக்கு
ஒரு புயலைக் கிளப்பியது. ஜீவாணாம்சம் தொடர்பான அந்த வழக்கிலும் இஸ்லாத்திற்கு எதிராக
உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. சி. ஆர். பீ. சீ 125 ன் படி வாழக்கை
முழுவதும் ஷாபானுவிற்குப் பராமரிப்புத் தொகை தரவேண்டும், என்று உச்ச நீதிமன்றம்
தீர்ப்பளித்தது. அச்சமயம், ஒட்டுமொத்த முஸ்லிம்களின்
எதிர்ப்பால் அப்போதைய மத்திய அரசு சி. ஆர். பீ. சி 125 வது பிரிவிலிருந்து
முஸ்லிம் பெண்களுக்கு விலக்களிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி முஸ்லிம்களின்
தனிச்சட்டத்திற்கு மதிப்பளித்தது. ஆனால், இன்று மத்திய அரசே
இஸ்லாமிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது ஒரு சமூகத்திற்கெதிரான போர், என்றும் சட்டக் கமிஷனின் கேள்வித்தாளை நிராகரிப்போம், என்றும் கருத்து தெரிவித்தது. இன்று ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்
அமைப்புகளும் முஸ்லிம்களும் பெர்ஸனல்லா போர்டுக்குப்பின் அணிவகுத்து நிற்கின்றனர்.
அதன்பிறகு தலாக் விவகாரத்தையும் பொது சிவில் சட்டத்தையும் தொடர்பு படுத்தக் கூடது, என்று மத்திய அரசு கருத்து தெரிவித்தது. ஆனால், இதை எந்த முஸ்லிமாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
தலாக், என்பது முஸ்லிம்
தனியார் சட்டத்தின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. தலாக் கொடுப்பதை இஸ்லாம் விரும்பவில்லை.
அதே சமயம் சேர்ந்து வாழமுடியாத நிர்பந்த நிலை ஏற்படும் போதும் தலாக் கூடாது, என்று கூறினால் அதன் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும். பெண்கள்
மிகவும் கொடுமைக்கு உள்ளாவார்கள். இஸ்லாம் அப்படிப்பட்ட சூழலில் தலாக்கின் மூலம் வேறொரு
ஆணை மணந்து கொண்டு வாழ்க்கையைத் தொடர்வதற்கு இஸ்லாம் வழிவகை செய்கிறது.
இஸ்லாத்தின் குடும்பவியல் சட்டம் மிகவும் புனிதமானது.
அந்த வகையில் இஸ்லாத்தின் தலாக் கொடுப்பதற்கான
வழிகாட்டல்களை ஆழ்ந்து சிந்தித்தால் தலாக்கும் கூட புனிதமானதாகவே தெரியும்.
தலாக் என்பது பிரிவதற்கான ஒரு வழி. ஆனால் அதைச் செயல்படுத்தும் விதத்தைப் படித்துப்பார்த்தால்
அதன் மூலம் கணவன் மனைவி பிரிந்து விடாமல் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான சந்தர்ப்பங்களை
ஏற்படுத்திக் கொடுப்பதை நன்கு உணரமுடியும். எனவே தான், தலாக் புனிதமானது, என்று கூறுகிறேன்.
தலாக் தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்களை முஸ்லிம்கள்
முழுமையாக செயல்படுத்துவார்களேயானால் அதுவே மற்றவர்களை இஸ்லாத்தின்பான் சுண்டி இழூத்துவிடும்.
ஆனால், முஸ்லிம்கள் செய்யும் தவறால் இஸ்லாத்திற்குக் கெட்ட பெயர் என்பது
மட்டுமல்ல, இஸ்லாமிய சட்டத்தையே தேவையற்றது, என்று சிலர் கொக்கரிக்கின்றனர்.
முஸ்லிம்களில் சிலர் தலாக் கொடுப்பதற்கான வழிகாட்டல்களை
முறையாகப் பின்பற்றாமல் இருக்கலாம். அதனால், சிலசமயம் பெண்கள்
பாதிப்புக்கும் உள்ளாகலாம். கண்டிப்பாக நாம் அதை ஏற்றுக்கொள்ள வில்லை. தலாக் தொடர்பான
இஸ்லாத்தின் வழிகாட்டல்களை ஆண்களும் பெண்களும் முழுமையாக கவனத்தில் கொண்டு செயல்பட
வேண்டுமென்றே வலியுறுத்துகிறோம். அதற்காக சட்டத்தை மாற்ற வேண்டுமென்று யாரும் சொல்ல
முடியாது. சொல்லக்கூடாது. இஸ்லாமிய சட்டங்களை முஸ்லிம்கள் தங்களுடைய உயிரை விடவும்
பல்லாயிரம் மடங்கு மேலாக மதிக்கிறார்கள். இது இன்று மட்டுமல்ல. இந்த உலகம் உள்ளவரை
முஸ்லிம்கள் தங்களுடைய சட்டத்தை விட்டுக் கொடுப்பதற்கு எள்முனையளவும் இணங்க மாட்டார்கள்.
தலையங்கம்
யூசுபிய்யா ராஷித்
நவம்பர் - 2016
No comments:
Post a Comment