Saturday, 22 April 2017

உலக புத்தக தினம் - வாசிப்பை வளப்படுத்துமா?



ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் புத்தக தினம் எதை அடிப்படையாக வைத்து முடிவுசெய்யப்பட்டாலும் நூல் என்று சொல்வதற்கு முழுத்தகுதிகளையும் பெற்றது முழு உலகிலும் குர்ஆன் மட்டுமே!, என்பது தான்  ஒவ்வெரு முஸ்லிமுடைய நம்பிக்கை. மற்றவையனைத்தும் குறையுள்ளதாகவே இருக்கும். அடிமைத்துவத்தில் முழுமையும் நிறைவும் பெற்றவர் ஒரே ஒரு மனிதர் (முஹம்மது ஸல்) தான் என்பது போல் எந்தக்குறையும் கோணலும் இல்லாத எல்லாத் துறையிலும் நிறைவும் முழுமையும் பெற்ற ஒரே ஒரு நூல் குர்ஆன் மட்டுமே!
குர்ஆன் என்பது அல்லாஹ் மனிதர்களுக்கு எழுதிய வாழ்வியல் வழிகாட்டல் கொண்ட ஒரு கடிதம். அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது? என்பதை அறிய முற்படுவது ஒவ்வொருவரின் கட்டாயக் கடமையாகும். நம்முடைய மகன் அமெரிக்காவிலிருந்து ஆங்கிலத்தில் கடிதம் எழுதி அனுப்பினால் நமக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியாது, என்பதற்காக அதை அவ்வப்போது எடுத்து கண்களில் ஒத்திக் கொண்டு பத்திரமாக பீரோவில் பாதுகாத்தா வைப்போம். அதை ஆங்கிலம் அறிந்தவர்களிடம் சென்று காசு கொடுத்தாவது மொழிபெயர்ப்பு செய்து அதனை விளங்க முற்படுவோம். அதைவிடம் உயர்வான முக்கியமான கடிதம் திருக்குர்ஆன்.

இன்று வாட்ஸப் ஃபேஸ்புக் வழியாக இணையதளச் செய்திகளை வாசிக்கத் தொடங்கியபின் மக்களிடம் நூல் வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து போய்விட்டது, என்று தான் சொல்ல வேண்டும். எனினும், இணைய தளம் என்பது முறையாக மார்க்கம் கற்பதற்கான இடம் அல்ல, என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். புத்தகத்தின் மூலம் ஒரு செய்தியைத் தெரிந்து அத்தகவலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வது போல் இணைய தளத்தில் அவ்வளவு சாதாரண காரியமல்ல. தவறான கொள்கைகள் பரவலாவதற்கு சமுதாயத்தின் அறியாமையும் ஒரு முக்கிய காரணம். படிப்பது என்றால் தொழிற்கல்வி மட்டுமே ஞாபகத்தில் வருமளவுக்கு சமூகசூழல் மூலம் மூலைசளவை செய்யப் பட்டுள்ளது. மார்க்கம் படிக்க வேண்டுமென்ற சிந்தனை மருந்துக்காவது இருகிறதா? என்பது கேள்விக்குறிதான்.

அரை தூக்கத்துடன் செல்லும் குழந்தைகள் மக்தப்களில் எதைத் தான் பெற்றுக்கொள்வார்கள்? பிறகு இரவு வரை பள்ளிப்படிப்பிலேயே முடங்கி விடுவார்கள். ஜூம்ஆ உரையின் மூலம் மார்க்க அறிவை வளர்த்துக் கொள்வதற்கு பள்ளிகளும் கல்லூரிகளும் தடையாக இருக்கின்றன. மாணவர்களுக்கு ஜூம்ஆ தொழுகை கிடைப்பதே கூட பல சமயங்களில் அரிதாகிவிடும். பள்ளி விடுமுறை காலமாக இருந்தால் சிறப்பு வகுப்புகள், கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு இறையாகி விடும். அல்லது விடுமுறை, சுற்றுலாவில் முற்றுப் பெற்றுவிடும். மார்க்க அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பமே கிடைக்காது போய்விடுகிறது.

சுன்னத்தான முறைப்படி குளிப்பது எப்படி? என்று கூட தெரியாமல் மார்க்க ரீதியாக வியாக்கியானம் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். மார்க்க அறிவின் அடிப்படை கூட தெரியாமல் ஹலால், ஹராம் பேச முற்பட்டு விடுகிறார்கள்.  ஜூம்ஆ போன்ற சமயங்களில் நாம் கேட்கும் பயான்களின் மூலம் நம்முடைய மார்க்கப் பற்றை வளர்த்துக் கொள்ள முடியும். ஆனால், மார்க்கச் சட்டங்களை அறிந்து கொள்வதற்கு நாம் தனியாக நேரம் செலவு செய்து அதற்குரிய நூற்களைப் பார்த்து படித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இன்று படிப்பதற்கு யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை. பயணத்திலோ அல்லது வேறு ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போதோ ஆடியோ மூலமாக ஏதாவது பதிவு செய்யப்பட்ட பயான்களைக் கேட்டுக் கொள்ள முடியும். ஒரு நேரத்தில் இரு வேலைகளைச் செய்ய முடியாது. அப்படிக் கேட்பதன் மூலம் மனதில் பதியவும் செய்யாது. டைம்பாஸ் பண்ணுவதற்கு வேண்டுமானால் அப்படி கேட்டுக்கொள்ளலாம். எனவே, மார்க்க விஷயங்களைப் படிப்பதற்கு தனியாக நேரம் ஒதுக்கியாக வேண்டும். சட்ட நூற்கள் மற்றும் அவ்வப்போது வரும் மாத இதழ்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களைத் தவறாமல் படிப்பதற்கு நேரம் கிடைக்கும் போது மார்க்க நூற்களுக்கு மட்டும் நேரம் கிடைக்காமல் போய்விடுமா?

நம்முடைய வீட்டு டேபிள்களில் உருவப்படம் நிறைந்த செய்தித் தாள்களுக்கு இடமிருக்கும் போது மார்க்க சட்ட நூற்களுக்கு ஏன் இடமிருக்கக் கூடாது. செய்தித் தாள்களுடன் மார்க்க இதழ்களும் டேபிளில் இருந்தால் யாராவது அதைப் படிக்கும் போது அவர் மார்க்க அறிவைப் பெற்றுக் கொள்வதுடன் நமக்கும் அதற்கான நன்மையும் கிடைத்துவிடுமே!


தஃப்ஸீர்
ஏகப்பட்ட புத்தகங்கள் உலகில் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால், குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதப்பட்டது போல் வேறு எதற்கும் நூற்கள் எழுதப்பட்டிருக்காது. குர்ஆனுக்கு இஸ்லாத்தின் ஆரம்பகாலம் முதற்கொண்டு இன்று வரை ஏகப்பட்ட தஃப்ஸீர் - விளக்கவுரைகள் எழுதப்பட்டுவிட்டன. இன்றும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. எவ்வளவு தான் எழுதினாலும் அல்லாஹுவுடைய வார்த்தைகளுக்கு விளக்கம் எழுதி முடிக்க முடியாது, என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும்.

சில விளக்கவுரைகள் ஒரே பாகத்திலும் மற்றும் சில இரண்டிரண்டு மும்மூன்று பாகங்கள் எனவும் மேலும் பல பத்து இருபது முப்பது பாகங்கள் கொண்ட தஃப்ஸீர்களும் எழுதப்பட்டுள்ளன. அதற்கும் மேலாக நூற்றுக்கணக்கான வால்யூம்கள் கொண்ட குர்ஆன் விளக்கவுரைகளும் உள்ளன. சில குர்ஆன் விளக்கவுரைகள் 300 வால்யூம்கள் கெண்டதாக உள்ளன, என்று அஷ்ஷைக் பின்னூரி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு கணிப்பின் படி குர்ஆனுக்கு இரண்டு லட்சம் தஃப்ஸீர் - விளக்கவுரைகள் எழுதப்பட்டுள்ளன. (நூல்: ஃபைளெ அப்ரார் - 8/31)

அநேகமாக இந்த எண்ணிக்கை முழு குர்ஆனுக்கும் அல்லது சில அத்தியாயங்களுக்கு மட்டும் எழுதபட்ட தஃப்ஸீரின் எண்ணிக்கையாக இருக்கலாம். குர்ஆன் முழுவதற்கும் நிறைவான விளக்கவுரை ஹிஜ்ரி 13 ஆம் நூற்றாண்டு வரை 1200 க்கும் அதிகம், என்று மஃலூமாதெ குர்ஆன் எனும் நூலில் கூறப்பட்டுள்ளது. ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டில் ஷைக் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அவர்களால் எழுதப்பட்ட தஃப்ஸீரெ அலாயீ 1000 (ஆயிரம்) வால்யூம்கள் கொண்டதாக இருந்தது. (தாரீகுல் குர்ஆன் - பக்:169)

எவ்வளவோ அறிவு நுட்பங்கள் நூற்களுக்குள் வராமலேயே இதயங்களோடு சமாதியாகி விட்டன. இன்னும் எத்தனையோ நூற்கள் நூல் வடிவம் பெற்றாலும் கூட நம்வரை வந்து சேரமுடியாமல் போய்விட்டன. நம்முடைய சரித்திரத்தின் சாதனைக் காலத்தில் அறிவுப்பொக்கிஷங்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. பக்தாத் போன்ற ஒரு நகரத்தில் மட்டும் முப்பதாயிரம் நூலகங்கள் இருந்தன. (நூல்: ஃபைளெ அப்ரார் - 8/31)

தாத்தாரியினர்கள் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக போராடிய போது இஸ்லாமிய உலகத்துக்கு மாபெரும் நஷ்டத்தை விளைவித்தனர். அவற்றில் மாபெரும் நஷ்டம் இஸ்லாமிய அறிவு களஞ்சிகயங்களை தஜ்லா நதியில் தூக்கி வீசினர். அதன் மூலம் தண்ணீரே கருப்பாகிப்போனது. கொடியவர்கள் ஸ்பெயினிலும் இதே மாபாதகச் செயலை அரங்கேற்றினர். குர்ஆன், ஹதீஸ், கிதாபுகள் அரபியில் எழுதப்பட்ட லட்சக்கணக்கான அறிவியல் பொக்கிஷங்களை நெருப்புக்கு இரையாக்கினர்.

லார்ட் பிஷப் பதவியேற்ற ஃபிரான்ஸிஸ்கோ ஷைமன்ஸ், முஸ்லிகளிடமும் அவர்களுடைய அறிவுப் பொக்கிஷங்களிலும் கடுமையாக நடந்து கொண்டார். கிரானடாவில் உள்ள எல்லா வீடுகளையும் சோதனையிட்டு எவ்வளவு அரபி நூற்கள் கிடைத்ததோ அவையனைத்தையும் ஒன்று சேர்த்தார். குர்ஆன் மற்றும் மார்க்கவியல், உலகியல் சார்ந்த ஏறத்தாழ பத்து லட்சம் நூற்கள் கிடைத்தன. அவையனைத்தையும் பாபுர்ரஹ்லா என்ற இடத்தில் குவியாலாக வைத்து நெருப்பு மூட்டி பொசுக்கிவிட்டார். இந்நிகழ்ச்சியை எடுத்தெழுதிய எஸ் பீ ஸ்காட் என்ற வரலாற்றாசிரியர், இந்த மிருகத்தனமான மத வெறியினால் பொருளாதார நஷ்டமும் மிக அதிகம் தான். அதற்கும் மேலாக மனித சமுதாயத்திற்கு ஏற்பட்ட பயங்கரமான விளைவை எழுத்தில் விளக்க முடியாது. நிரந்தரமாக இருக்க வேண்டிய நிகரில்லாத அறிவுச்சுரங்கம் அழிந்து போனது ஈடு செய்ய முடியாத இழப்பாகும். நூற்றுக்கணக்கான வருடங்களாக முயற்சித்து ஒன்று சேர்த்த அரிய பொக்கிஷத்தை நொடிப் பொழுதில் மண்ணாக்கிவிட்டார், என்று கடுமையாக விமர்சிக்கிறார். (முஸல்மானோங்கா உரூஜோ ஸவால்)   

ஆனால் இன்று இஸ்லாமிய நூலகம் என்று எடுத்துக் கொண்டால் ஊர் முழுவதும் தேடிப்பார்த்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கலாம். எத்தனையோ நகரங்களில் ஒரு இஸ்லாமிய நூலகத்தைக் கூடி பார்க்க முடியாத நிலை தான் இருக்கும். அரபி மத்ரஸாக்கள் இருந்தால் அங்கு நூலகம் இருக்கலாம். அவற்றில் எத்தனை நூலகங்கள் மாணவர்களின் முழுமையான பயன்பாட்டில் இருக்கிறது? என்பதும் கேள்விக்குறி தான். பெரும்பாலான நூலகங்ளின் நூற்களை தூசு தட்டித்தான் எடுக்க வேண்டும்.


நூலகம்
நூலகமே கல்வியின் ஊற்று. அது இல்லாமல் எந்தக் கல்வி நிறுவனமும் தன்னிறைவு அடைய முடியாது. அரபி மத்ரஸாக்களும். இதற்கு விதிவிலக்கல்ல. நூலகத்திற்கும் மாணவர்களுக்கும் மத்தியிலுள்ள தொடர்பு தான் மத்ரஸா மற்றும் மாணவர்களின் வெற்றியை நிர்ணயிக்கும் மாபெரும் சக்தி. ஊர் ஊராகச் சுற்றுகிறார்கள் சுற்றுலா விரும்பிகள். நூற்களை ஆய்வதே என் இன்பச் சுற்றுலா. நூற்கள் தான் என்னுடைய தோட்டம் என்கிறது ஓர் உர்தூ கவிதை.

இன்று பல நூலகங்களின் நிலை என்ன? ஏதாவது ஒரு கிதாபை - நூலை எடுக்க வேண்டுமானால் தூசு தட்டுவதற்கான துடைப்பான் கையில் இல்லையானால் வரிசையாக நாம் தும்மல் போட வேணிடியிருக்கும். எல்லா நூற்களும் எல்லா நேரத்திலும் பயன்பாட்டில் இருந்தால் இந்நிலை ஏற்படாது.

நூலாராய்வு கோர்ஸ்
நூலகத்தை அணுகும் முறையை செயல்ரீதியாகவே காட்டிச் சென்றிருக்கிறார்கள், நம் முன்னோர்கள். அவர்கள் புத்தகப் புழுக்களாக இருந்ததால் தான் ஏகப்பட்ட ஏடுகளைப் படைக்க முடிந்திருக்கிறது. மத்ரஸாக்களில் ஏழு வருடம் ஓதுவதால் மட்டும் கல்வியின் கடைக்கோடியை அடைந்து விட முடியாது. அவருக்கு நூற்களை சுயமாக வாசித்து ஆய்வு செய்தவற்கான ஏதோ சிறு தகுதி வேண்டுமானால் உண்டாகியிருக்கலாம். அதை வைத்து அவர் தன்னுடைய நூலாராய்வை ஆயுள் முழுவதும் தொடர வேண்டும்.

எனவே தான் முஃப்தீ ஷஃபீ (ரஹ்) அவர்கள் எட்டு வருடங்கள் கல்வி பயின்றபிறகு அதிகப்படியாக இரண்டு வருடங்கள் நூலாராய்வில் மட்டுமே ஈடுபட்டார்கள். தாருல் உலூம் தேவ்பந்துடைய நூலகம் எவ்வளவு பெரியதாக இருக்கும்? என்பது அங்கு சென்று வந்தவர்களுக்கு தெரியாத ஒன்றல்ல. அந்நூலகத்தின் ஒவ்வொரு நூலின் இருப்பிடமும் எனக்கு துல்லியமாகத் தெரியும். நூலக பொறுப்பாளர் எதாவது நூல் கிடைக்க வில்லையானால் என்னிடம் கேட்டு தெரிந்து கொள்வார், என்று தமது நூலாராய்வின் நுண்ணிய திறமையை வெளிப்படுத்துகிறார் முஃப்தி ஷஃபீ (ரஹ்) அவர்கள். (நூல்: மேரே வாலித் மேரே ஷைக்)


வாசிப்பு சுவாசிப்பை அதிகரிக்குமாம்
சிலர் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தையோ அல்லது செய்தி தாள்களையோ வாசித்துக் கொண்டிருப்பர். அவ்வாறு இருப்பவர்களை புத்தகப் புழு என்று அழைப்பார்கள். அவ்வாறு இருப்பவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.சமீபத்தில் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் இந்த ஆய்வு 3 பிரிவுகளில் நடத்தப்பட்டது. அதில் ஒன்று புத்தகத்தையே படிக்காதவர்கள், மற்றொன்று வாரத்தில் 3 மணி நேரம் படிப்பவர்கள், இன்னொன்று அதற்கும் அதிகமாக நேரம் படிப்பவர்கள் என பிரித்து 12 ஆண்டுகள் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.   இவர்களில் வாரத்துக்கு 3 மணி நேரத்துக்கு மேல் புத்தகம் படிப்பவர்கள் மற்றவர்களை விட 23 சதவீத கூடுதல் ஆயுளுடன் வாழ்வது தெரிய வந்தது. எனவே, புத்தக புழுக்களாக இருப்பவர்களின் ஆயுள் நீடிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (ளுநவைல.உடிஅ)

அந்த இரண்டு இரவுகள்
வாழ்நாள் முழுவதும் நூல் வாசிப்பிலேயே ஈடுபட்டிருந்த அல்லாமா இப்னு ருஷ்த் (ரஹ்) என்ற மாமேதை எனது வாழ்வின் இரண்டு இரவுகளில் மட்டுமே நூலாராய்வில் ஈடுபட முடியாமல் போனது. 1.எனக்கு திருமணமான இரவு 2. எனது தந்தை வஃபாத்தான இரவுஎன்று கூறுகிறார்கள். இமாம்  ஜாஹிள் (ரஹ்) படுத்த படுக்கையிலும் கிதாபுகளை விடவில்லை. தம்மைச் சுற்றி நூற்களை அடுக்கி வைத்துக்கொண்டு எந்நேரமும் அவ்றறோடு பேசிக் கொண்டிருப்பார்கள். ஒரு தடவை அந்நூற்கள் அவர் மீது சரிந்து விழுந்து அவற்றுக்கடியிலேயே தம் உயிரையும் விட்டார்கள். (நூல்: கிதாபேய் ஹைய் சமன் அப்னா)

இவர்களைப் போன்ற புத்தகப் புழுக்கள் வரலாறு நெடுகிலும் நிறைந்திருக்கின்றனர். நமக்கு வழிகாட்டிகளாக நம் மூதறிஞர்களின் படுக்கையறையும் சமயலறையும் கூட நூலகமாக காட்சியளித்தன. ஆனால், இன்று வாசிக்கும் பழக்கம் என்பது, வடை சுருட்டிக் கொண்டுவரப்பட்ட பேப்பரோடு சரி என்றாகி விட்டது.  மார்க்கத்தை நேசிப்பதற்காக வாசிப்பை வளமாக்குவோம்

No comments:

Post a Comment