Saturday, 6 January 2018

கண்டுகொள்ளப்படாத மழைநீர்!


 
அல்லாஹ் இந்த உலகத்தைப் படைத்து அதை முறையாக இயங்கவும் செய்திருக்கிறான். ஆனால், மனிதர்கள் அந்த இயக்கத்தில் - நிர்வாகத்தில் தலையிட்டு தங்களுக்குத் தாங்களே நஷ்டத்தைத் தேடிக் கொள்கிறார்கள். சூரியனிடமிருந்து வரும் தீங்கிழைக்கும் ஒளிக்கதிர்கள் இந்த பூமியில் வந்து தாக்கமால் இருப்பதற்காக எந்தக் கோள்களுக்கும் இல்லாமல் இந்தப் பூமிக்கு மட்டும் சிறப்பம்சமாக வளிமண்டலம் எனற பாதுகாப்புப் போர்வையைப் போர்த்தி பல அடுக்கு பாதுகாப்புக் கவசத்தைக் கொடுத்திருக்கிறான்.

ஆனால், மனிதன் தன்னுடைய நவீன கண்டுபிடிப்புகளின் மூலம் இந்த வளிமண்டலத்தை மாசடையச் செய்து ஓசோன் படலத்தில் ஓட்டை விழச்செய்தான். அதன் பாதிப்பை இன்று ஒட்டு மொத்த உலகமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. காடுகளை அழிப்பதால் எவ்வளவு பெரிய நஷ்டத்தை  மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறாகள், என்பது யாரும் அறியாததல்ல.

ஆனால், இன்று தங்களுடைய தொழிற்சாலைகளுக்காக டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதற்காக காடுகள் சர்வ சாதாரணமாக அழிக்கப்பட்டு வருகின்றன. எனவே தான் இஸ்லாம் மரம் வளர்ப்பதிலும் அதைப் பராமரிப்பதிலும் மிகுந்த நன்மைகள் கிடைக்கும், என்று கூறுகிறது.

யாராவது ஒரு முஸ்லிம் மரம் நட்டு அதன் மூலம் மனிதனோ மிருகமோ சாப்பிட்டால் அது மரம் வைத்தவனுக்கு ஸதகா எனும் தான தர்மம் செய்த நன்மை கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி - 6012)) நபி (ஸல்) அவர்கள் (எதிரிகளுடன் யுத்தம் செய்யும் போது கூட) மரங்களை வெட்டுவதைத் தடை செய்தார்கள். (முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக் - 9381)

எனவே, அல்லாஹ் திட்டமிட்டு ஏற்பாடு செய்திருக்கும் உலகின் இயங்கு விசைகளை இயற்கை அமைப்புகளை நாம் பாழாக்கும் போது அது நமக்கே பெரும் நஷ்டத்தை விளைவிக்கும். அவ்வறே அல்லாஹ் பருவ காலங்களை முறைப்படியாக அமைத்துள்ளான். வெயில் காலமும் குளிர் காலமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.

வீட்டில் மழைநீர் சேகரிப்பு
மழைக்காலத்தில் தேவையான அளவுக்கு மழை பொழியச் செய்கிறான். ஆனால், நாம் செய்யும் தவறுகனால் வெயில் காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் போது மழைத் தொழுகை தொழுதும் துஆ செய்தும் மழை பெய்வதில்லையே!, என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறோம்.

ஒவ்வொரு நாளும் குடிப்பதற்கும் மற்ற உபயோகத்திற்கும் தண்ணீர், தேவைப் படுகிறது. அதற்காக, ஒவ்வொரு நாளும் மழை பெய்ய வேண்டுமென்று எதிர்பார்க்க முடியுமா? வாரத்திற்கொருமுறை வரும் நகராட்சித் தண்ணீரைக் கூட ஒரு வாரத்திற்குத் தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்கிறோம். அப்படியிருக்கும் போது வருடத்தில் சில மாதங்களில் பெய்யும் தண்ணீரை சேமிப்பதற்கான ஏற்பாட்டினை ஏன் செய்யக்கூடாது?

இதில் தனிமனிதர்களை விட அரசாங்கத்திற்குத் தான் மிகப்பெரும் பொறுப்பு இருக்கிறது. அதே சமயம் தனிமனிதர்களும் நமக்கென்ன? என்று ஒதுங்கி விடக்கூடாது. நம்முடைய வீட்டில் வரவேற்பரை, டைனிங் ஹால், கிச்சன், பாத்ரூம், டாய்லெட் போன்றவற்றுக்கு இடம் இருக்கும் போது மழைநீர் சேகரிப்புக்கு மட்டும் ஏன் இடம் இல்லாமல் போகிறது?!

நிலத்தடிநீர்
மேலும், நாம் வானத்திலிருந்து சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு தன்னீரை நாம் இறக்கி வைத்தோம். பின்னர், அதனைப் பூமியில் தேக்கி வைத்தோம். மேலும், நாம் அதனைப் போக்கிவிடவும் ஆற்றலருடையவர்களே! (அல்குர்ஆன் - 23:18) அல்லாஹ் இந்த வசனத்தில் நமக்கு தேவையான அளவு தண்ணீரை மழையாகப் பெய்யச் செய்கிறான்.

அதன்மூலம் அந்தத் தண்ணீர் பூமிக்குள் இறங்கி பாதுகாப்பாக இருக்கிறது. தேவையான சமயத்தில் நாம் அதை எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம், என்ற கருத்தை மக்களுக்கு உணர்த்தியிருக்கிறான். அப்படியானால், பெய்யும் மழைநீர் அனைத்தையும் நாம் கடல் நீரில் கலக்கச் செய்கிறோமே இது இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் இறைநிர்வாகத்திற்கு எதிராக நாம் செயல்படுகிறோமோ? என்கிற சிந்தனையைத் தூண்டுகிறது.

பூமி மழை நீரை உறிஞ்சி தேக்கி வைப்பதற்குத் தோதுவாக அல்லாய் படைத்திருக்கும் போது நாம்  நம்முடைய நாட்டையும் வீட்டையும் அதற்குத் தக்கவாறு அமைத்துக் கொள்ள வேண்டுமென்பது தான குர்ஆன் நமக்கு மறைமுகமாகச் செய்யும் உபதேசம். மழைநீரை பூமிக்கடியில் தேக்கி வைப்பது அல்லாஹ்வின் நிர்வாகம். அந்த நிர்வாகத்தில் மனிதன் தன்னுடைய அறிவைக் கொண்டு தலையிடாமல் இருக்கும் வரை மனிதனுக்கு எந்த ஆபத்துமில்லை.

அவனுடைய குறுகிய அறிவைக் கொண்டும் அல்லாஹ்வின் நிர்வாகத்தில் தலையிட்டால் மாபெரும் அழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எந்த துன்பமானாலும் அது உங்கள் கைகள் சம்பாதித்தவை தான். அதிகமானவற்றை மன்னித்தும் விடுகிறான்.  (அல்குர்ஆன் - 42:30) என்ற இறைவசனத்தை இந்த இடத்தில் நினைவுகூர்வது பொருத்தம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கட்டப்பட்ட வீடுகளில் முற்றம் இருக்கும். அந்த இடம் மண்தரையாக இருக்கும். அரசர்களின் அரண்மனையாக இருந்தாலும் மழை நீரை உறிஞ்சும் முற்றம் இருக்கவே செய்யும். ஆனால், இன்று நாம் நம்முடைய நவீன கட்டிட முறைகள் மற்றும் தார் சாலைகள் போன்றவற்றால்  பெய்யக்கூடிய மழை நீரில் ஐந்து சதவீதம் தண்ணீர் கூட நிலத்தால் உறிஞ்சப்படுவதில்லை.  பூமியில் தேங்கச் செய்வதை நாமே தடுத்து விடுகிறோம். அவையனைத்தும் ஆற்றிலோ கடலிலோ போய் கலந்து விடுகிறது.

மழை துஆவும் மழைநீர் சேகரிப்பும்
நபி (ஸல்)அவர்கள்எந்த நிலையிலும் மழையை நிறுத்துவதற்கு துஆ செய்ததே கிடையாது. பெய்யும் மழையை நிறுத்து! என் று நபி (ஸல்) அவர்கள் துஆசெய்ததே கிடையாது. ஒரு தடவை நபி (ஸல்) அவர்களின் துஆவினால் மதீனாவில் ஒரு வார காலமாக மழை பொழிந்தது.  ஆறுநாட்கள் தொடர்ந்து மழை பெய்தும் அது வரையிலும் பெரும் நஷ்டம் மதீனாவில் தெரியவில்லை. அதற்குப் பிறகு தான் அதன் நஷ்டத்தை உணர்ந்தார்கள்.

ஆனால் நம்முடைய பெருநகரங்களில் இரண்டு நாள் தொடர்ந்து மழை பெய்தால் நகரமே நீரில் மூழ்கிவிடும். அப்படித்தான் நாம் நம்முடைய நவீன கட்டிடங்களை அமைத்திருக்கிறோம். இந்த விடா மழையால் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மழையை நிறுத்தும்படி துஆசெய்ய நபியிடம் மக்கள் வேண்டினர்.  உடனே நபி (ஸல்) அவர்கள் யா அல்லாஹ்! மழையை நிறுத்திவிடு என் று துஆ செய்துவிடவில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறியதெல்லாம் அல்லாஹும்ம ஹவாலைனா வலாஅலைனா என் ற வார்த்தைகளைத் தான் . யாஅல்லாஹ்! எங்களின் சுற்றுப்புறப் பகுதியில் மழை பெய்யச் செய். எங்களுக்கு  பாதகமாக ஆக்கிவிடாதே! அதாவது பெய்யும் மழையை நிறுத்திவிடாதே. அதே சமயம் அம்மழையை எங்களுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் ஆக்கி விடாதே!

இப்பொழுது எங்களுக்கு மழை தேவையில்லாதது போல் தெரியலாம். பிறகு தேவைப்படலாம். எனவே இம்மழையை ஊரைக் சுற்றியுள்ள மலைகளிலும், மணல்மேடுகளிலும் பெய்யச் செய்! நீர்நிலைகளில் பெய்யச் செய்! மரங்கள் வளருமிடங்களில் பெய்யச் செய்!, என் று துஆச் செய்தார்கள். இந்த துஆவில் கூட நீர்நிலைகளில் பெய்யச் செய்வாயாக, என்ற வாசகம் ஆழ்ந்து கவனிக்கத் தக்கது.

அதாவது, இந்த மழைநீர், கடல் நீரில் கலந்து வீணாகிப் போய்விடுவதைவிட சேகரிக்கப்பட வேண்டிய இடங்களில் போய்ச் சேரவேண்டும். அத்துடன் ஊரைச் சுற்றியுள்ள இடங்களில் பெய்து நிலத்தடி நீராக பாதுகாக்கப்பட வேண்டும். மரங்கள் வளருமிடங்களில் பெய்யச் செய்வாயாக, என்றும் துஆ செய்திருக்கிறார்கள். மரங்கள் வளருமிடங்களில் பெய்தால் ஒன்று தோட்டங்களுக்கு அப்போதைக்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதே சமயம், மரங்களின் வேர்களில் நீர் உறிஞ்சப்பட்டு விட்டால் அவை நிலத்தடி நீராகவும் பூமிக்கடியில் பாதுகாக்கப்படும். எனவே, நம்முடைய நடைமுறைகளும் இறைஇறைஞ்சல் எனும் வணக்க வழிபாடுகளும் மழைநீரை நீண்ட காலத்திற்கு நிலத்தடி நீராக சேமித்து வைப்பதற்கு உகந்ததாக இருக்க வேண்டும். 

இறைவல்லமையை நிளைவூட்டும் மழை
மழைபெய்வது அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை என்பதையும் உணர வேண்டும். அல்லாஹ்வின் வல்லமைகள் உலகில் வெளிப்படும் போது செய்யப்படும் துஆ அங்கீகரிக்கப்படும், ஹதீஸ்களின் மூலம் அறிய முடிகிறது. அந்த வகையில் மழை பெய்யும் போது துஆ ஏற்றுக் கொள்ளப்படும், என்ற நபிமொழி பைஹகீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (5/184)

நீர்நிலைகளிலுள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகிறது. நீராவி, வளிமண்டலத்திலுள்ள வாயுக்களுடன் சேர்ந்து காற்றினால் மேலே தள்ளப்படுகிறது. நீராவியைச் சுமந்து செல்லும் காற்று 150 அடி உயரும்போது ஒரு டிகிரி ஃபாரன்ஹிட் வீதம் குளிர்ச்சியடைந்து ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் நீராவியின் ஒரு பகுதி குளிர்ந்து சிறுசிறு நீர்த்திவலைகள் உண்டாகின்றன. இந்நீர்த் திவலைகள் நிறைந்த காற்றே மேகம் எனப்படும். இந்த மேகம் மேலும் குளிர்ச்சியடைந்தால் நுண் திவலைகள் பல (ஆயிரக்கணக்கில்) திரண்டு மழைத் துளிகளாக மழை பொழிகிறது. (நூல்: அறிவியல் 1000 - 1/78)

மழை பொழிவதற்கு மலையும் தேவை. மலைகளே இல்லையானால் நீராவியைத் தாங்கிய காற்று மேலே செல்லமுடியாது. அவை மலைகளில் மோதித் தான் மேலே செல்ல முடியும். ஆக மழை பொழிவதற்கு சூரியன், காற்று, மலை ஆகியவை முக்கியப் பகங்கு வகிக்கின்றன. இதுபற்றி குர்ஆன் சொல்வதையும் பார்ப்போம்:

மழையும் சூரியனும்
சுட்டெரிக்கும் விளக்கை (சூரியனை) நாம் ஏற்படுத்தினோம். மேலும் கார்மேகத்திலிருந்து கொட்டும் மழையை இறக்கினோம். (76: 13,14) இந்த வசனத்தில் சுட்டெரிக்கும் சூரியன், மழை இவ்விரண்டையும் இணைத்துக் கூறியிருப்பதைக் கவனிக்க வேண்டும். சூரிய வெப்பத்தால் கடல்நீர் ஆவியாகிறது, என்பதும் எல்லோரும் ஏற்றுக்கொண்ட விஷயம்.

மலையும் மழையும்
பூமியில் உயர்ந்த மலைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம். (அல்குர்ஆன் - 77:27) இநத வசனத்தில் மலையையும தண்ணீரையும் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மற்ற இடங்களில் பொதுவாக மலைகள் என்று கூறப்ட்டாலும்

இந்த இடத்தில் மட்டும் உயர்வான மலைகள் என்ற வார்த்தையை அல்லாஹ் உபயோகித்திருப்பது விஞ்ஞான சிந்தனையில் வியப்பான செய்தி. ஏனெனில், நீராவி மலையில் மோதி உயரே செலவதற்கு மலையும் உயரமாக இருக்க வேண்டும். அதே சமயம் பெரிய மலையை நோக்கி காற்று வீசும் போது அந்த மலைக்கு அப்பால் உள்ள பகுதியில் மழை குறைவாக இருக்கும். அப்பகுதிக்கு மழைமறை பகுதி என்று கூறுவர்.

காற்றும் மழையும்
சூல் கொண்ட காற்றை நாமே அனுப்புகிறோம். வானத்திலிருந்து நாமே மழை பொழியச் செய்கிறோம். அதை நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். நீங்கள் அதை சேமித்து வைப்பவர்கள் அல்ல. (அல்குர்ஆன் - 15:22) அல்லாஹ் தான் காற்றை அனுப்புகிறான். அது (நீராவியை மேலே உயர்த்துவதின் மூலம்) மேகத்தை உண்டாக்குகிறது. (30:48) இவ்விரு வசனங்களைப் போல் குர்ஆனுடைய ஏராளமான வசனங்களில் காற்றையும் மேகத்தையும் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. மேகம் உண்டாவதில் காற்று பெரும்பங்கு வகிக்கிறது, என்பதில் சந்தேகமில்லை. சொல்லப்போனால் நீர்த்திவலைகள் நிறைந்த காற்றே மேகம் என்று சொல்லப்படும்.

No comments:

Post a Comment