Saturday, 10 March 2018

அபாயச் சங்கு!


தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் முஸ்லிம் சமூத்தின் சிறிய ஒற்றுமையையும் குலைத்துக் கொண்டிருக்கும் சூழ்ச்சிகளைத் தான் அபாயச் சங்கு என்று சொல்கிறேன்.

சமூக ஒற்றுமை எவ்வளவு முக்கியம் என்பதை மார்க்கம் பல விதங்களில் வலியுறுத்துவதை யாரும் அறியாமல் இருக்க முடியாது. ஒற்றுமை குறித்து பேசப்பட்டவையும் எழுதப்பட்டவையும் எழுநூறு தலைமுறைகளுக்கும் போதுமானதாகி விடும். ஆனால், பேச்சிலும் எழுத்திலும் இருக்கும் ஒற்றுமை நடப்பில் மட்டும் காணல் நீராகிப் போய்விட்டது தான் நிதர்சனம்.

சமீப காலத்தில் இருந்த ஒற்றுமையைக் கூட தற்காலத்தில் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒற்றுமை சிதைந்து வருவதையே சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒற்றுமையின் ஒப்பில்லா உவமை சொல்லப்பட்டவர்களுக்கு மத்தியிலும் கூட ஆழமான அழுத்தமான பிளவுகள் உண்டாகியிருப்பவை ஜீரணிக்கப்பட முடியாதவை.

மார்க்கத்தின் பொறுப்பாளர்களுக்கிடையே ஏற்படும் கருத்து மோதல்கள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடுவதை நினைக்கும் போது நெஞ்சமே வெடித்து விடும் போலிருக்கிறது. ஒரு வலுவான ஒற்றுமை வலுவிழந்து வேற்றுமையின் சின்னங்களை உருவாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு இஸ்லாத்திற்கு வெளியே உள்ள நம்முடைய எதிரிகள் சந்தோஷப்படுவதை ஆச்சரியக் கண்கொண்டு பார்க்க முடியாது.

ஆனால், முஸ்லிம்களே கூட பல பிளவுகளையும் வேற்றுமைகளையும் கண்டு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும், என்று மனதிற்குள் சந்தோஷப்படுவதும் எள்ளி நகையாடுவதும் இந்த சமூகத்தின் வீழ்ச்சிக்கான படிகளாகவே அமையும்.


தேவை சிந்தனை தியாகம்
நமக்கு மத்தியில் எவ்வளவு பெரிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கருத்தொற்றுமை வாய்ந்த பிரச்சினைகளின் அடிப்டையில் ஓரணியில் தைரியமாக அணி திரள வேண்டிய நேரமிது. நல்ல திறமையும் அறிவும் அகண்ட சிந்தனையாற்றலும் கொண்ட அறிஞர்களுக்கிடையே கண்டிப்பாக கருத்து வேற்றுமைகள் ஏற்படவே செய்யும். அது தான் இயல்பானதும் கூட.

அதே சமயம் இந்த தேசத்தில் நம்முடைய உரிமைகளை அனுபவிப்பதற்காக நாம் சாதிக்க வேண்டிய நிறைய கடமைகளுள் மிக மிக முக்கியமானது சிந்தனை தியாகம் தான். நன்கு கற்றுத் தேர்ந்த சீரிய சிந்தனையாளருக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கருத்து சரியாகப் படுமேயானால் அதை வலியுறுத்தாமல் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டு அதை வெளிப்படுத்தாமலும் வலியுறுத்தாமலும் விட்டுவிடுவதே சமகாலத்தின் மிகப்பெரிய தியாகம்.

தன்னுடைய கருத்தை தனக்குள்ளே அடக்கிக் கொண்டு சமூக ஒற்றுமையின் கிளைகளை வானளாவ பரவ விடுவது எவ்வளவு உயர்ந்த அர்ப்பணிப்பின் அடையாளமாகிவிடும்?!

எதிரிகள் நம்முடைய ஒற்றுமையைக் குளைப்பதில் இரவு பகலாக திட்டமிடுகிறார்கள். சில பல சமயம் அதில் வெற்றியும் கண்டுவிடுகிறார்கள். இது இந்தியாவில் மட்டுமல்ல. சர்வ தேச அளவிலும் நடக்கும் சதியாகும்.

மேற்கத்திய நாடுகள் இஸ்லாமிய நாடுகளை ஒன்றுபடாமல் பார்த்துக் கொள்வதில் எவ்வளவு சாதுரியத்துடன் செயல்படுகின்றன? என்பது நமக்குத் தெரியாதா என்ன?!


பெர்சனல்லா போர்ட்
தேசிய அளவில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன்னெடுத்துக் கொண்டு சென்று அதில் உறுதியான தீர்வுகளைப் பெற்று சமூகத்திற்கு மாபெரும் பணியாற்றிக் கொண்டிருப்பது முஸ்லிம் பெர்சனல் லா போர்டு, என்பதை யாரும் அறியாமல் இருக்க முடியாது.

1972 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட தனியார் சட்ட வாரியம் கடந்த 45 வருடங்களாக பல பிரச்சினைகளை எதிர் கொண்டு சாதித்துக் காட்டி மாபெரும் சமூகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. ஷாஹ்பானு வழக்கு முதல் முத்தலாக் பிரச்சினைகள் வரை சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். இந்திய முஸ்லிம்கள் போர்டுக்குப் பின் அணி வகுத்து நிற்பது இந்த மதவாத சிந்தனை கொண்டவர்களுக்கு மிகப் பெரும் சவாலாகவே இருக்கிறது.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தில் தீவிரவாதம் இருக்கிறது, என்று மதவாதிகளில் சிலர் உளறியிருப்பதே வாரியத்தின் பலத்தையும் தலைமைத் தன்மையையும் காட்டவில்லையா? எனவே, முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்திற்குள் கருத்து வேற்றுமையை உருவாக்க வேண்டும், என்பதிலும் பெர்ஸனல் லா போர்ட் இந்திய முஸ்லிம்களின் ஒட்டு மொத்த பிரதிநிதி இல்லை, என்ற நிலையை உருவாக்க வேணடும், என்பதிலும் முனைப்பு காட்டி போர்டுக்குள்ளேயும் குழப்பத்தை உண்டாக்கி நாட்டு முஸ்லிம்களின் ஒன்றுபட்ட தலைமையை ஒழித்து விட்டால் தங்களுடைய பாசிச திட்டத்தை அமுல்படுத்துவதற்கு எளிதாக இருக்கும், என்பதால் அப்படிப்பட்ட சூழ்ச்சியில் எதிரிகள் இறங்கியிருக்கிறார்கள்.

இதை நம்மவர்கள் - மார்க்கத்தின் பொறுப்பாளர்கள் கண்டிப்பாக புரிந்து கொண்டாக வேண்டும். நாட்டின் எதிர்கால சந்ததியினர்களின் ஈமானுக்கு ஆபத்து என்கிற நிலையை நோக்கி எதிரிகள் காய் நகர்த்திக் கொண்டிருக்கும் போது நமக்குள்ளே இருக்கும் சின்னச் சின்ன பிரச்சினைகளுக்காக பிரிவினையை வலுவாக்கும் விதத்தில் குரலெழுப்புவதும் பேனாவின் மையை வீணாக்குவதும் மிகவும் அபாயகரமானது, என்பதை ஏன் உணரமுடிய வில்லை, என்பது தான் தெரிய வில்லை.

சரித்திரமே சான்று
ஒற்றுமையின்மையால் வீழ்ந்த சரித்திரத்தை நம்முடைய வரலாற்றுப் பக்கங்களில் பரவலாகப் பார்க்க முடியும். பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுத்து விட்டு மஸ்ஜிதை இடித்தவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென்று சொல்வது எவ்வளவு விபரீதமானது? அவர்களுடைய பட்டியலில் அடுத்தடுத்து எத்தனை பள்ளிகள் இருக்கின்றன, என்பது நமக்குத் தெரியாதா? அவர்களிடம் செய்யும் ஒப்பந்தத்தின் படி அவர்கள் அப்படியே நடந்து கொள்வார்கள், எனபதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

ஸ்பெயினுடைய வரலாறு நம் கண்முன்னே இருக்கிறதே! எவ்வளவு அழகான ஒப்பந்தம் போட்டார்கள். ஆனால் முஸ்லிம்கள் அங்கு பரிதாப நிலைக்கு ஆளாக வில்லையா? தேன் வடியும் அந்த ஒப்பந்தத்தின் சில வரிகளை நீங்களும் படித்துப் பாருங்கள்.
1. முஸ்லிம்களுடைய உயிர் உடமைக்கு எவ்வகையிலும் குந்தகம் விளைவிக்கப் படமாட்டாது.
2. இஸ்லாமிய மத விவகாரங்களில் கிருத்தவர்களின் எந்தத் தலையீடும் இருக்காது.
3. கிருத்தவர்கள் யாரும் மஸ்ஜிதுக்குள் நுழைய மாட்டார்கள்.
4. மஸ்ஜிதுகளும் வக்பு சொத்துக்களும் இதற்கு முன்னர் இருந்த நிலையிலேயே தொடரும்.
5. முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை ஷரீஅத் சட்டத்திற்குத் தோதுவாக இஸ்லாமிய நீதிபதிகளே தீர்த்து வைப்பார்கள்.
6, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் இஸ்லாத்தை விடும்படி நிர்பந்திக்கப்பட மாட்டார்கள்.

இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் சிறிது காலத்திலேயே காற்றோடு கலந்து விட்டது. அதற்குப் பிறகு சொல்லொனாத் துயரத்திற்குத் தான் முஸ்லிம்கள் ஆளானார்கள். மஸ்ஜித்கள் சர்ச்சுகளாக மாற்றப்பட்டன. எனினும், முஸ்லிம்கள் தங்களுடைய இஸ்லாத்தையும் ஈமானையும் இழப்பதற்குத் தயாராகவில்லை.
ஹிஜ்ரி 904 ம் ஆண்டு (கி பி 1499) முஸ்லிம்கள் அனைவரும் கிருத்தவ மதத்தை ஏற்க வேண்டும். இல்லையானால் அவர்கள் கண்ட இடத்திலேயே கொல்லப்படுவாகள், என்று ஒரு பொது அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதை எதிர்பார்க்காத முஸ்லிம்கள் ஊரை விட்டும் வெளியேறி மலைப்பிரதேசங்களுக்கு போய்த் தங்க ஆரம்பித்தனர். முஸ்லிம்கள்

எந்த சிரமத்ததையும் தாங்கத் தயாராக இருந்தனர். ஆனால் ஈமானை இழக்கத் தயாராக இல்லை. சில முஸ்லிம்களையும் குழந்தைகளையும் நிர்பந்தமாக கிருத்தவர்களாக ஆக்கினர். இவர்களுடைய மூதாதையர்கள் கிருத்தவர்களாக இருந்தனர். ஸ்பெயினில் இஸ்லாம் வந்த பிறகு அவர்களாக விரும்பியே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். இப்படி புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கூட இஸ்லாத்தை விட்டுவிட்டு பழைய மதத்தை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. நிர்பந்தமாக கிருத்தவர்களாக ஆக்கப்பட்டாலும் மறைமுகமாக யாருக்கும் தெரியாமல் வீட்டிலேயே தொழுது கொண்டிருந்தார்கள்.

கிலாஃபத்தை இழந்தோம்
சர்வதேச அளவில் முஸ்லிம்களை பிளவு படுத்த வேண்டுமென்ற யூத நஸ்ரானிகளின் சூழ்ச்சிகள் நீண்ட காலமாக அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன. துருக்கியின் தலைமையில் கிலாஃபதெ உஸ்மானிய்யா ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

நிறமும் மொழியும் வேறுபட்டிருந்தாலும் இஸ்லாத்தின் போதனைகளை ஏற்றுக் கொண்ட சமுதாயம் ஒற்றுமையுடன் வீர நடை போட்டுக் கொண்டிருந்தது. இதைப் பொறுத்துக்கொள்ளாத ஜரோப்பிய நாடுகள் தேசிய வாதத்தையும்  பிரிவினை வாதத்தையும் உருவாக்கி அரபு மக்களிடம், அரபிகள் தான் ஆட்சி செய்ய வேண்டுமென்றும் துருக்கியர்களிடம் துருக்கி தேசியம் பாதுக்காக்கப்பட வேண்டுமென்றும் சிந்தனையை உருவாக்குவதற்காக திட்டமிட்டு பல மையங்களை - இயக்கங்கங்களை ஆரம்பித்தன.

ஐரோப்பியர்களின் மறைமுக சூழ்ச்சியால் இளந்துருக்கியர் இயக்கம்என்றொரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஃபிரான்சின் சிந்தனைகளாலும் பிரெஞ்சு புரட்சி தொடர்பான கருத்துக்களாலும் சிந்தனைகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் இணைந்து முதன்முதலில் பாரிஸ் நகரில் இந்த இயக்கத்தை நிறுவினார்கள். புரட்சிக்குழு என்ற அந்தஸ்தில் இந்த இயக்கம் இரகசியமாக உருவாக்கப்பட்டது.

இந்த இளந்துருக்கியர் இயக்கத்தை மேற்குலகம் ரிமோட் மூலம் இயக்கி கிலாபத்த அரசின் மீது தாக்குதல் தொடுப்பதற்கும் அதனை முழுமையாக வீழ்த்தி விடுவதற்கும் திட்டமிட்டு செயல்பட்டது. அரசின் அதிகார மையத்தை எட்டிப் பிடித்திருந்த இளந்துருக்கியர் இயக்க உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் நவீன காலத்திற்கு இஸ்லாம் பொருத்தமற்றது. துருக்கிய தேசிய வாதத்தை நிலைநாட்டி அதனைப் பாதுகாப்பது தான் தங்களுடைய பிரதான பணி என்று கருதுமளவுக்கு அவர்கள் மேற்குலகின் மூலம் மூளைச்சலவை செய்யப் பட்டிருந்தார்கள்.

இறுதியாக, 1924 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி முழு இஸ்லாமிய உலகின் தலைமையாக இருந்த கிலாபதெ உஸ்மானிய்யா தகர்க்கப் பட்டுவிட்டது. இன்று 2024 ஆம் ஆண்டு வரப்போகிறது. நூற்றாண்டை நெருங்கியும் இன்று வரை நம்முடைய ஒன்றுபட்ட தலைமையை மீட்டெடுக்க முடியவில்லை.

நவீன இஸ்லாம் எனும் அபாயச் சங்கு
இன்றும் கூட மேற்குலகின் சூழ்ச்சியால் இஸ்லாமிய உலகம் பிரிந்தே கிடக்கிறது. புனிதத் தலங்களை தாங்கி நிற்கும் சவூதியும் கூட மேற்குலகின் மோசமான கலாச்சாரத்திதற்கு அடிமைப் பட்டுக் கிடப்பதை நவீன இஸ்லாம் என்று எக்காளமிடுவதை விட அபாயச் சங்கு வேறென்ன இருக்கிறது?!

சமீபத்தில் இந்தியா வந்திருந்த ஈரானுடைய அதிபர் ஹஸன் ரூஹானீ அவர்கள் (அவர் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தாலும்) ஹைதாராபாத்தில் உரையாற்றும் போது மேற்குலகின் சூழ்சிக்கு இரையாகி கருத்து வேறுபாடுகளிலும் சண்டை சச்சரவுகளிலும்  சிக்கி அழிந்து போவதை விட்டுவிட்டு ஓரிறைச் கொள்கையின் அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார்.

வேண்டாமே சோக வரலாறு
சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் முஸ்லிம்களை அரசியல் ரீதியாக பலகீனப்படுத்துவதில் படுமோசமான திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இரண்டு பேர் கூட ஒற்றுமையாக இருந்துவிடக் கூடாது, என்ற நோக்கில் சதிகள் செய்யப்படுகின்றன. பிரிவினையைத் தூண்டி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டிருக்க நினைப்பவர்கள் ஊதும் அபாயச் சங்கை நாம் கண்டு கொள்ளமால் நம்மைச் சுற்றி என்னென்ன சதிவலைகள் பின்னப் பட்டுக் கொண்டிருக்கினறன, என்பது பற்றி நாம் சிறிதும் கவனமில்லாமல் சாதாரண பிரச்சினையும் மலை போலாக்கி விவாதித்து மக்களின் மனதுக்குள்ளே மீண்டும் மீண்டும் தேவையில்லாத வெறுப்புணர்வுகளை தண்ணீர் ஊற்றி வேரூண்றச் செய்து கொண்டிருந்தால் நம்முடைய சந்ததிகளுக்கு கண்ணீர் வடிக்கும்படியான சோக வரலாற்றையே விட்டுச் செல்ல வேண்டியிருக்கும். அல்லாஹ் பாதுகாப்பானக!  
                                                                                                  யூசுபிய்யா ராஷித் - மார்ச் - 2018


No comments:

Post a Comment