Tuesday, 17 April 2018

கருணைக் கொலை



கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி உச்சநீதி மன்றம் கருணைக்கொலை தொடர்பான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், தீராத நோயால் படுக்கையில் செயலற்று கிடக்கிற நோயாளிகள் வாழ விரும்பாத போது கண்ணியமாக உயிர் துறக்க ஏற்ற வகையில் மருத்துவ உபகரணங்களை நீக்கி கருணைக்கொலை செய்வதற்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் அவர்கள் வகுத்து அளித்தனர். வாழ்க்கையின் இறுதி நாள்களோடு போராடிக் கொண்டிருப்பவர்கள் இன்னல் படாமல் தங்களது உயிரைத் துறப்பதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம்,  தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.


கருணைக்கொலையின் வகைகள்
கருணைக்கொலை (ஆக்டிவ்யுதான்சியா) என்பது, ஒருவரை, விஷ ஊசி போட்டோ அல்லது வேறு முறைகளிலோ,  டாக்டர்கள் முன்னிலையில் உடனடியாக சாக அனுமதிப்பதாகும்.

அதே நேரத்தில் , கருணைக்கொலையின் அடுத்த கட்டமான, பாசிவ்யுதான்சியா என்பது, மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் ஒருவரை உயிர்வாழச் செய்வதை தவிர்த்து,  அவரது உயிரை,  சிறிது நேரத்தில் அகற்றுவதாகும். அதாவது,  நோயாளி மரணமடைய வேண்டும் என்பதற்காகவே,  அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையை வாபஸ் பெறுவது. உதாரணமாக, ஒருவர் உயிர்வாழ சிறுநீரக டயாலிசிஸ் அவசியம் எனில், அதை செய்யாமல், டயாலிசிஸ் இயந்திரத்துடனான இணைப்பை துண்டித்து,  நோயாளியை சாக விடுவதாகும்.

அதேபோல செயற்கை சுவாசக்கருவி இணைப்பைத் துண்டிப்பதும் மற்றொரு வகை. இதை, பேசிவ்யுதான்சியா எனலாம்.


விஷஊசி போட்டோ அல்லது மற்ற முறைகளிலோ , டாக்டர்கள் முன்னிலையில் ஒருவரை சாக அனுமதிப்பது (ஆக்டிவ்யுதான்சியா) சட்டவிரோதம் என, சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் , உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் இணைப்பை துண்டித்து, ஒருவரின் உயிர் போக அனுமதிப்பதை , அசாதாரணமான சூழ்நிலைகளில் மட்டுமே அமல் படுத்தலாம் என,  நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், இந்த இரண்டு விதமான கருணைக்கொலைகள் தொடர்பாக, பார்லிமென்டில் சட்டம் நிறைவேற்றப்படும் வரை, இந்தத் தீர்ப்பு அமலில் இருக்கும் என்றும் தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.


கொலைக்குற்றம்
இஸ்லாத்தின் பார்வையில் கொலை என்பது முற்றிலுமாக தடை செய்யப்பட்டதாகும். கருணைக்கொலை என்கிற பெயரால் விஷ ஊசி போட்டு கொடூரக்கொலை செய்வதை மார்க்கம் ஒருபோதும் அனுமதிக்காது. வாழும் ஒருவரை ஆக்டிவ்யுதான்சியா முறையில் விஷஊசியின் மூலம் மரணிக்கச் செய்வதும் கொலை செய்வதும் சமமாகவே பார்க்கப்படும்.

கொலை செய்தல் தொடர்பாக குர்ஆனில் அதிகமான வசனங்களில் பலவிதங்களில் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால், உலகில் வெளிப்படையாக முதன்முதலில் நடைபெற்ற பெருங்குற்றம் கொலைக்குற்றம் தான். ஆதம் (அலை) அவர்களுடைய இரண்டு மகன்களில் ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்து உலகிற்கு கொலைக்குற்றத்தை அறிமுகப்படுத்தி வைத்தனர். எனவே, உலகில் நடக்கும் ஒவ்வொரு கொலையின் பாவத்திலும் ஒரு பங்கு முதல் கொலைக் குற்றவாளிக்கு போய்ச்சேரும், என்று கூறப்படுகிறது.

ஓர் உயிரைக் கொன்றால் அவன் மனித சமூகத்தையே கொன்று விட்டது போன்றும் ஓர் உயிரை வாழவிட்டால் மனித சமூகத்தையே வாழ வைத்தது போன்றும் ஆகும், என்று குர்ஆன் தீர்ப்பளித்தது. நபி (ஸல்) அவர்கள் பெரும்பாவங்களின் வரிசைப் பட்டியலில் கொலைக்குற்றத்தையும் இடம்பெறச் செய்தார்கள்.  தேடித்தேடி அநியாயமாக இரத்தம் ஓட்டுபவன் அல்லாஹ்விடத்தில் மிகவும் கோபத்திற்குள்ளானவன், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

பாசிவ்யுதான்சியா முறையில் கருணைக்கொலை செய்யப்படுவதிலும் கூட பலருடைய  சுயநலத்தின் காரணமாக தவறாகப் பயன்படுத்தப் பட்டு விடலாம். எனவே, அப்படியொரு நடவடிக்கையில் இறங்குவதை இஸ்லாம் அனுமதிக்காது. சில சமயங்களில் சொத்துக்காகவோ அல்லது சொந்த ஆதாயத்திற்காகவோ சிலர் இதை அடுத்தவரை கொலை செய்ய உபயோகப் படுத்திக்  கொள்ளக்கூடும். சாதாரணமாக கருணைக்கொலை அனுமதிக்கப்பட்டால் , பல குடும்பங்களில் பெற்றோரையே கருணைக்கொலை செய்யும் வாரிசுகள் பலர் உருவாகும் வாய்ப்பும் உண்டு.


மருத்துவர்கள்,  உளவியல் ரீதியாகப் பார்த்தால் கருணைக்கொலைக்கான தேவை இருக்கிறது, என்று கூறுகின்றனர். வலி மற்றும்  உடல் அவர்களது கட்டுப்பாட்டில் இல்லை, என்கிற உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் தான் கருணைக்கொலை செய்யச் சொல்லிக் கேட்கிறார்கள்.



மரண ஆசை கூடாது
இஸ்லாத்தைப் பொறுத்தவரை தனக்கு ஏற்பட்டிருக்கும் வியாதி, துக்கம், கஷ்டம், வேதனை போன்ற வற்றின் காரணமாகவும் மரணத்தை ஆசைப்படக்கூடாது. தனக்கு வழங்கப்படும் சிகிச்சையையும் நிறுத்துமாறு கோரிக்கை வைக்கக் கூடாது. தன்னுடைய மரணத்தைத் தானே தேடிக்கொள்வதை எந்த வகையிலும் இஸ்லாம் அனுமிதிப்பதில்லை.

உச்சகட்ட வேதனையில் இருந்தால் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையில் இருந்தால் யாஅல்லாஹ்! நான் வாழ்வதில் எனக்கு நலவு இருந்தால் என்னை வாழவை! நான் இறப்பதில் தான் எனக்கு நன்மை இருந்தால் என்னை மரணிக்கச் செய்!, என்று துஆ செய்யலாம்.

வியாதியிலும் நன்மை உண்டு
மருத்துவர்கள் கூறும் உளவியல் ரீதியான காரணத்தை, மறுமையின் இன்பங்களைச் சொல்லி நோயாளியின் மனோநிலையை மாற்றிவிட முடியும், என்பது தான் இஸ்லாம் எடுத்து வைக்கும் மாற்று யோசனையாகும். ஒரு முஸ்லிம் அனுபவிக்கும் துக்கம், கஷ்டம், மனவேதனை, துன்பம் என எதுவாக இருந்தாலும் ஏன் காலில் குத்திவிடும் முள்ளாக இருந்தாலும் கூட அவற்றுக்கெல்லாம் பகரமாக அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

ஒரு முஸ்லிம் அனுபவிக்கும் எந்தக் கஷ்டமும் பலனின்றி வீண்போய்விடாது. அவன் படும் துன்பங்களால் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். பாவக்கடலில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படுவதை விட உயர்ந்த அந்தஸ்து வேறென்னவாக இருக்க முடியும். அல்லது அவர் அனுபவிக்கும் கஷ்டங்களின் மூலம் மறுமையில் அவருடைய அந்தஸ்து உயர்த்தப் படும்.

மரணத்திற்குப் பின் சுவனத்தில் தன்னுடைய நல்லமல்களின் மூலம் உயர்நிலையை அடைய முடியாதவர்களுக்கு உலகின் உடல் மற்றும் உள்ள ரீதியான துயரங்களின் போது பொறுமை செய்வதன் மூலம் அடைந்துவிட முடியுமென்று இஸ்லாம் போதிக்கிறது.

பெற்றோர் பாசம்
பிள்ளைகளின் தாயும் தந்தையும் வேலைக்குச் சென்று விட பணிப்பெண்ணை வைத்து பிள்ளைகளை வளர்க்கும் கலாச்சாரம் கொண்ட சமூகத்தில் அத்துடன் பெற்றோர் வயதாகி விட்டால் தாய், தந்தையர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் கலாச்சாரம் கொண்ட சமூகத்தில் பெற்றோர்கள் நோயாளியாகி விட்டால் எப்படி கனிவுடன் கவனிப்பார்கள். ஆனால், இஸ்லாம் இது போன்ற கலாச்சாரத்திற்கு முற்றிலும் எதிரானது.

பெற்றெடுக்கும் குழந்தையை தாயே தன்னுடைய அரவணைப்பில் வளர்த்து தாய்ப் பாசத்தையும் தந்தைப் பாசத்தையும் கற்றுக்கொடுத்து பிள்ளைகளை வளர்க்க வேண்டுமென்று போதிக்கும் மார்க்கம் இஸ்லாம். அத்துடன், தாய், தந்தையர்கள் எவ்வளவு தான் வயதானாலும் அவர்களிடம் மனம் நோகும்படியான வார்த்தையைக் கூட பேசக்கூடாது. பெற்றறோர்களுக்கு பணிவிடை செய்து அவர்களின் துஆவைப் பெற்றுக் கொள்ளாதவன் மறுமையில் நரக வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்கும், என்று எச்சரிக்கும் மார்க்கம் இஸ்லாம்.

பெற்றோர்களிடம் மட்டுமல்ல, மற்ற எல்லா உறவினர்களிடமும் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென்று போதிக்கிறது. இந்த சிந்தனையில் - கலாச்சாரத்தில் வளரக்கூடிய மக்களுக்கு கருணைக்கொலையின் தேவை ஏற்படாது. எவ்வளவு சிரமமாக இருந்தாலும் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரை உயிருக்கு உயிராய் பார்த்துக் கொள்வார்கள். தாங்க முடியாத வேதனையின் காரணமாக யாரையும் விஷ ஊசி போட்டு இறக்க வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் மார்க்கத்தின் பார்வையில் அது கொலைக் குற்றமாகக் கருதப்படும். நல்ல வசதி வாய்ப்பு இருந்தும் சீக்கிரம் மரணித்து விட வேண்டும், என்ற நோக்கில் சிகிச்சையை நிறுத்திவிடுதையும் மார்க்கம் அனுமதிக்காது.

செயற்கை சுவாசக் கருவியை அகற்றலாமா?
அதேசமயம் ஒருவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசதத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. போகப்போக சுயமாக மூச்சுவிடும் நிலையை நோயாளி பெற்றுவிடுவார், என்று மருத்துவர்கள் கூறினால் சிகிச்சையைத் தொடர வேண்டும். எனினும், நோயாளி சிகிச்சைக்கான பொருளாதார வசதியைப் பெற்றிருக்கவில்லை. வாரிசுகளும் பொருளாதாரச் சுமையை சுமக்க முடியாமல் இருக்கின்றனர். அவருடைய சிகிச்சைக்கான வேறு எந்த வழியும் இல்லையானால் இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் செயற்கை சுவாசக் கருவியை அகற்றிவிடலாம். நோயாளி செயற்கை சுவாசக் கருவியின் மூலம் சுவாசித்துக் கொண்டிருக்கிறார். எனினும். எவ்வளவு நாட்கள் ஆனாலும் இதே நிலையில் தான் சுவாசிக்க முடியும்., இயல்பாக சுவாசிக்கும் நிலையை நோயாளி அடையவே முடியாது, என்று மருத்துவர்கள் உறுதியாகச் சொல்லிவிட்டால் செயற்கை சுவாசக் கருவியை அகற்றிவிடலாம் (அதனால் அவர்கள் அல்லாஹ்விடம் குற்றவாளியாக ஆக மாட்டார்கள்.)                                                பார்க்க: நயே மஸாயில் - இந்திய இஸ்லாமிக் ஃபிக்ஹ் அகாடமீ


பயங்கரமான காயங்கள் ஒருவருக்கு இருக்க மருத்துவர்களின் மூலம் அவருக்கு சிகிச்சை செய்வதன் மூலம் சுகம் பெறுவார், என்றோ அல்லது சுகமும் கிடைக்கலாம், மரணிக்கவும் செய்யலாம் என்றோ சொன்னால் அவருக்கு சிகிச்சை செய்யப்பட வேண்டும். அவர் சுகமடையவே மாட்டார், இந்த வியாதியிலே அவர் இறந்து விடுவார், என்று கூறப்பட்டால் சிகிச்சை செய்யாமல் அப்படியே விட்டுவிடலாம். (அல்ஃபதாவல் ஹிந்திய்யா)

No comments:

Post a Comment