Monday, 11 February 2019

தலாக் - புண்பட்டுப் போன புனிதம்!


இன்று பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக சூழ்ச்சிகள் பல செய்யப்படுகின்றன. அதற்கு இஸ்லாமிய சமுதாயம் விலைபோய் விடக்கூடாது. குறிப்பாக முஸ்லிம்கள் தலாக்கை நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தலாக் தொடர்பான மார்க்கத்தின் வழிகாட்டல்களை அறிய முற்படவேண்டும். இன்று சமூக வலைதளங்கள் வாயிலாக தலாக் சொல்வது அதிகரித்து வருகிறது.

திருமணமான பத்து நாட்களில் வாட்ஸ் அப்பில் கணவர் தலாக் அனுப்பிய செய்திகளை பத்திரிக்கையில் பார்க்க முடிகிறது. மனைவி, பெண் குழந்தை பெற்றெடுத்ததற்காக சவூதியிலிருந்து தொலைபேசியிலேயே மனைவியை தலாக் கூறி விவாகரத்து செய்திருக்கிறார்.

தலாக்கைப் படிப்போம்:
மார்க்கத்தின் பார்வையில் நிகாஹ் - திருமணத்தைப் போன்று தலாக்கும் புனிதமானது, அந்தப் புனிதத்தை விளங்குவதற்கு ஈமானிய - இறைநம்பிக்கையின் சிந்தனையும் இஸ்லாமிய அறிவும் அவசியம். குர்ஆன், தலாக்குடைய சட்டங்களை ஈமானுடன் தொடர்புப் படுத்திப் பேசுகிறது. இவற்றின் மூலம் (அதாவது மேற்கூறப்பட்ட தலாக் - விவாகரத்து பற்றி வழிகாட்டுதல் மூலம்) அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருக்கும் அறிவுரை வழங்கப்படுகிறது. (அல்குர்ஆன் - 65:2)

விவாகரத்து பற்றியும் விவாகரத்து கொடுக்கும் முறை பற்றியும் இஸ்லாம் காட்டிய சிறப்பான வழிகாட்டுதலைப் போல் உலகின் வேறெந்த மதமும் காட்டியிருக்க முடியாது. ஏதோ சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த இஸ்லாத்தையும் குறைகாண முடியாது.

திருமண சபையில் தலாக் பற்றிப் பேசுவதை யாரும் விரும்புவதில்லை. எனினும் மணமகன் மற்ற விஷயங்கைளப் போல் கணவன், மனைவியுடைய உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் தலாக் பற்றியும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். வாரிசுரிமைச் சட்டங்களையும் ஹஜ்ஜையும் தலாக்கையும் (அவற்றின் சட்டங்களை) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவை உங்களுடைய மார்க்க விஷயங்களில் கட்டுப்பட்டவையாகும், என்று இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அல்பைஹகீ)

ஒரு வியாபாரி, வியாபாரம் பற்றி தெரிந்து கொள்கிறார். விவசாயி, விவசாயம் பற்றி செரிந்து கொள்கிறார். வீடு கட்டுவதற்கு சிறந்த கட்டிடக்கலை நிபுணரை நாடுகிறோம். சிகிச்சை செய்தவற்கு சிறந்த மருத்துவரை அணுகுகிறோம். திருமணம் செய்பவர் தலாக் பற்றிய சட்டங்களை முறையாக அறிந்து கொள்வதற்கு ஏன் முயற்சிக்கக் கூடாது.

தலாக்கைப் படிப்பது முறையாகக் கொடுப்பதற்கு மட்டுமல்ல, தலாக்கை விட்டும் விலகிச் செல்வதற்கும் பயன்படும். தலாக் கொடுப்பதற்காகப் படிக்கச் சொல்லவில்லை. அப்படிப்பட்ட நிலையை வரவிடாமல் இருப்பதற்காகவே படிக்கவேண்டுமென்று சொல்லப்படுகிறது.

வழிகாட்டும் வான்மறை:
தலாக் ஆகுமானதாக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு வெறுப்பானது. ஷைத்தானுக்கு விருப்பமானது, என்பது யாவரும் அறிந்ததே!  நிகாஹ், தலாக், இத்தா போன்றவற்றின் சட்டங்களைப் பற்றி குர்ஆன் போதிக்கும் முறையை சிந்தித்துப் படித்தால் நிர்பந்த நிலைதவிர வேறெந்த நிலையிலும் தலாக் நிகழக்கூடாது, என்பது தெளிவாக விளங்கும்.

கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தலாக் மட்டுமே தீர்வல்ல.                     முடிந்த வரை பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைப்பதற்குத் தேயைன சிறந்த வழியைக் காட்டுகிறது குர்ஆன். எந்த பெண்கள் பற்றி அவர்கள் (தம் கணவருக்கு) மாறுசெய்வார்கள், என்று அஞ்சுகிறீர்களோ அந்தப் பெண்களுக்கு உபதேசம் செய்யுங்கள். படுக்கைகளிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். மேலும் அவர்களை (காயம் ஏற்படாதவறு நாகரிகமான முறையில்) அடியுங்கள்.

அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக எந்தப் பாதையையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உயர்வானவனும் பெரியவனுமாய இருக்கிறான். கணவன் மனைவிக்கிடையே உறவு முறிவதை அஞ்சினால் கணவனின் உறவினரிலிருந்து ஒரு நடுவரையும் மனைவின் உறவினரிலிருந்து ஒரு நடுவரையும் நியமியுங்கள். (4:34, 35) என்ற வசனத்தின் படி குடும்பப்பிரச்சினையை அணுக வேண்டுமென்பது யாருடைய ஞாபகத்திலும் இருப்பது போன்று தெரியவில்லை.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குடும்பப் பிரச்சினையை நபியவர்களிடம் கூறி தீர்வு பெறும் நடைமுறை இருந்தது. அவ்வாறே நபித்தோழர்களின் காலத்திலும் உமர் (ரலி) அவர்களிடம் குடும்பப் பிரச்சினையைக் கூறி தலாக் விஷயத்தில் ஆலோசனை பெற்ற நிகழ்வுகளை சரித்திரத்தில் காணமுடியும். அலி (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில் கலீபாவிடத்தில் குடும்பப் பிரச்சினை தொடர்பாக பேசுவதற்காக ஒரு கூட்டமாக வந்தார்கள். கலீஃபா அவர்கள் கணவன், மனைவியுடைய குடும்பத்தினரிலிருந்து தலா ஒரு நபரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்யும்படி உத்தரவிட்டார்கள். (குல்தஸ்தயெ தஃபாஸீர்)

வேண்டாமே முத்தலாக்:
பெண்களின் தலைமுடியில் சிக்கல் இருக்கிறது, என்பதற்காக மொட்டையடித்துக் கொள்வார்களா? அதே சமயம் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்தால் பிரிவினையைத் தவிர வேறு வழி இல்லையானாலும்  திருமண ஒப்பந்தத்தை ஒரே தடவையில் முறித்துக் கொள்ளக்கூடாது.

குடும்ப உறவின் முக்கியத்துவம் கருதி மூன்று தவணைகளை மார்க்கம் சலுகையாக தந்துள்ளது. எனவே, ஒன்று அல்லது இரண்டு தலாக் கொடுத்துவிட்டால் கூட திருமண ஒப்பந்தம் முழுமையாக முறிந்துவிடாது. மூன்று தலாக் என்பது கடைசி வரை குடும்ப உறவை நீடிக்கச் செய்வதற்காகத் தானே தவிர மூன்றையும் பயன்படுத்த வேண்டுமென்பதற்காக அல்ல. நிர்பந்த நிலையில் தலாக் கொடுப்பவர் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரே ஒரு தலாக் மூலம் இத்தா நிறைவடைந்து பெண் சுதந்திரமாவதையே நபித்தோழர்கள் விரும்பினார்கள். (முஸன்னஃப் இப்னி அபீஷைபா - 18040)

 மனைவி இத்தாவில் இருக்கும் போது கணவனுக்கு மனம் மாறி திரும்பவும் மீட்டிக்கொண்டு சேர்ந்து வாழலாம். இதைத் தான் குர்ஆனில், அதற்குப் பிறகு (ஒத்துப்போவதற்கான) ஏதேனும் சூழ்நிலையை அல்லாஹ் உருவாக்கக் கூடும் என்பதை நீங்கள் அறிவதில்லை, (65:1) என்று கூறுகிறான். இத்தா காலம் முடிந்து விட்டாலும் கூட இரண்டு பேரும் சேர்ந்து வாழ விரும்பினால் திருமண ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டு கணவன் மனைவியாக வாழலாம்.

மூன்று தலாக் கொடுத்து விட்டால் தலாக் கொடுக்கப்பட்ட பெண் தனது இத்தா காலம் முடிந்து வேறொரு ஆணை திருமணம் செய்து அந்தக் கணவரும் (மார்கக நிபந்தனைகளுக்குட்பட்டு) தலாக் கொடுத்து அதற்கான இத்தா முடிந்த பிறகே முதல் கணவரை மணந்து கொள்ள முடியும். இது குர்ஆனுடைய சட்டம். இது தெரியாமலோ அல்லது வேகப்பட்டோ முத்தலாக் கொடுத்துவிட்டு உடனடியாக சேர்ந்து வாழ வழி தேடுபவர்கள் தான் இன்று அதிகம்.

தலாக் என்ற வார்த்தை வாயில் வந்து விடக்கூடாது, என்பதில் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தையால் வாழ்க்கையே வீழ்ந்து விடும். குறிப்பாக முத்தலாக்கை நினைத்தே பார்க்கக் கூடாது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் மொத்தமாக முத்தலாக் கொடுத்துவிட்டார். அதைக் கேட்டு நபியவர்கள் கோபப்பட்டு எழுந்து விட்டார்கள். நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும் போதே அல்லாஹ்வின் வேதத்தோடு விளையாடுகிறீர்களா? என்று எச்சரித்தார்கள். (நஸயீ)

 இப்னு உமர் (ரலி) அவர்கள் மாதவிடாய் காலத்தில் தலாக் கொடுத்துவிட்டார்கள். அந்த தலாக் நிகழ்ந்து விட்டது என்பதையும் நபியவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அப்படியே விட்டுவிட்டால் தாலாக் பாயினாகிவிடும். எனினும் நபியவர்கள் அச்செயலை விரும்பவில்லை, என்பது மட்டுமல்ல. உடனடியாக மனைவியை மீட்டிக்கொள்ளும்படி உத்தரவிட்டார்கள். தேவைப்பட்டால் மாதவிடாய் முடிந்த பின் தலாக் கொடுத்துக் கொள்ளட்டும், என்று கூறினார்கள். (புகாரி)

 இஙகே தலாக்குடைய எண்ணிக்கை அதிகமாகிறது. எனினும் நபியவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. ஒரு காரியம் நபியவர்களின் வழிகாட்டலுக்கு முரணாக நடந்திருக்கும் போது அதைக் கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். அந்த மனைவியை மீட்டியாக வேண்டுமென்று சட்டமியற்றி இருக்கிறார்கள்.


தலாக் பற்றிய விழிப்புணர்வு:
இன்றைய சூழலில் தலாக் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லை. தலாக் என்றாலே முத்தலாக் என்பது மட்டும் தான் என்பது போல் மக்கள் செயல்படுகின்றனர். பிறகு தங்களுடைய அறியாமையை நினைத்து வருத்தப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தலாக் தொடர்பான எல்லா விபரங்களையும் ஜும்ஆ பயான், போன்ற பலவழிப் பிரச்சாரங்களுடன் தொடர்நது தெருமுனைப் பிரச்சாரமாகவும் மேற்கொண்டால் மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும். அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. சமூக வலைதளப் பிரச்சாரமும் பயன் தரும். எனினும், கடைசிப் பாமரன் வரை போய் சேருமென்று உறுதி கூறமுடியாது. அப்படிப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் வரை காரணமில்லா தலாக் நிகழ்வதை தடுக்கும் நோக்கத்தில் குடும்பத்தின் நல்லுறவுக்கான வழிகாட்டுக்குழு, ஒன்று அமைக்கப்பட்டு மக்கள் தங்களுடைய குடும்பப் பிரச்சினையை அக்குழுவின் குறிப்பிட்ட நபரிடம் கூறி அதற்கான தெளிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மார்க்கம் அனுமதித்த காரணம் இருந்தால் மட்டுமே வழிகாட்டுக்குழுவின் ஆலோசனையின் பேரில் சுன்னத்தான முறைப்படி தலாக் கொடுக்க வேண்டுமென்று கட்டாயமாக வலியுறுத்த வேண்டும். தக்க காரணம் இருக்கும் போது தலாக் கொடுப்பதற்கு அந்தக்குழு தடையாகவும் இருக்கக் கூடாது. குழுவின் கெடுபிடியினால் தலாக் கொடுக்காமலே மனைவியை வைத்துக் கொண்டே கொடுமைப் படுத்தும் அவலமும் நிகழ்ந்து விடக்கூடாது. வழிகாட்டுக்குழு, தலாக்கிற்கான மார்க்க வழிகாட்டலை எடுத்துக்கூறி அதன்படி நடப்பதற்கு அறிவுறுத்த வேண்டும். முடிந்தவரை இரு குடும்பத்தார் மட்டுமே சம்மந்தப்பட்டு பிரச்சினையைத் தீர்ப்பற்கு ஆவன செய்ய வேண்டும். கணவன், மனைவியுடைய இரகசியங்கள் முழுமையாக பாதுகாக்கப் படவேண்டும். இல்லையானால் தலாக்கிற்குப் பிறகு மறுமணம் செய்வதில் சிரமங்கள் ஏற்படலாம்.

முத்தலாக்கிற்கு தண்டனை:
இந்த வழிகாட்டுக்குழுவின் நல்லெண்ணத்தை மனதிற்கொண்டு மக்கள் அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அதே சமயம் யாராவது எந்த ஆலோசனையுமின்றி தாங்களாக தலாக் கொடுத்துவிட்டால் கண்டிப்பாக அந்த தலாக் நிகழ்ந்து விடும். அவர் ஒன்று அல்லது இரண்டு தலாக் கொடுத்திருந்தால் அவரை அழைத்து விளக்கம் கொடுத்து மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான நிலையை வழிகாட்டுக்குழு ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

ஆனால், அவர் தக்க காரணமின்றி தலாக் கொடுத்து விட்டு மனைவியை மீட்டிக்கொள்வதை ஏற்கா விட்டாலோ அல்லது தக்க காரணமின்றி மூன்று தலாக்கையும் மொத்தமாக கொடுத்து விட்டாலோ அவரைத் தண்டிக்கலாமா? இஸ்லாமிய அரசு இருந்தால் கண்டிப்பாக அப்படிப்பட்ட நபர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கலாம். உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில் முத்தலாக் மொத்தமாக கொடுத்த நபருக்கு கசையடி கொடுத்திருக்கிறார்கள். (முஸன்னஃப் அப்துர்ரஜ்ஜாக் - 11345)

இந்தியாவைப் பொறுத்தவரை அது மாதிரியான தண்டனை கொடுக்க முடியாது. இந்திய அரசுக்கு அப்படியொரு அதிகாரத்தை நாம் கொடுத்தால் அது தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிடும். (கிதாபுல் ஃபதாவா 5/40)

 இஸ்லாமிய ஆட்சி இல்லாவிட்டால் அல்லது அரசு அதை கண்டுகொள்ளாவிட்டால் மார்க்க வழிகாட்டலுக்கு முரணாக தலாக் விடுபவர்களை ஜமாஅத், ஊரைவிட்டும் விலக்கி வைப்பது பொருத்தமானது, என்று முஃப்தீ ரஷீத் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அஹ்ஸனுல் ஃபதாவா  5/195) ஃபதாவா மஹ்மூதிய்யாவிலும் அவருடனான தொடர்பை துண்டித்து தண்டிக்கலாம், என்று கூறப்பட்டுள்ளது. (12/147)

வழிகாட்டுக்குழுவின் ஆலோசனையின்றி தக்க காரணத்துடன் தலாக் கொடுத்திருந்தால் எவ்வகையிலும் அவரை தண்டிக்க முடியாது. ஆனால், அநியாயமான முறையாக காரணமின்றி முத்தலாக் கொடுத்துவிட்டால் மனைவிக்கு நஷ்டயீடு வாங்கிக் கொடுக்கலாமா? பொதுவாக பணம் வாங்கி தண்டனை கொடுப்பது என்பதை பெரும்பாலான ஃபுகஹாக்கள் அங்கீகரிக்கவில்லை. ஃபதாவா மஹ்மூதிய்யாவிலும் தலாக் கொடுத்த குற்றத்திற்காக பணம் வாங்கி தண்டிக்கக் கூடாது, என்றே கூறப்பட்டுள்ளது.


எனினும், ஐரோப்பிய ஃபதாவா கவுன்சில் 2005 ஆண்டு அயர்லாந்தில் நடத்திய 14 ஆம் செமினாரில், தவறான தலாக்கின் மூலம் ஏற்படும் மனஉளைச்சலுக்காக சில நிபந்தனைகளுடன் மான நஷ்டயீடு பெற்றுக்கொள்ளலாம், என்றும் முடிவு செய்யப்பட்டது. (முஸ்லிம் அகல்லிய்யத்தோங்கே மஸாயில்)

நாம் நம்முடைய மார்க்கத்தை செயல்படுத்தவில்லையானால் பொதுசிவில் சட்டம் போன்ற போர்வையில் பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும். நம்முடைய தவறான நடைமுறைகளினால் இஸ்லாமும் களங்கமடைய வேண்டாம். நம்முடைய குடும்பப் பாரம்பரியமும் குடிமுழுகிப் போய்விட வேண்டாம். அதற்காக முத்தலாக் கொடுத்தாலும் ஒரு தலாக் தான் நிகழும் என்று கூறி சட்டத்தில் கையாடல் செய்து மார்க்கத்தை மாற்றும் முயற்சியும் வேண்டாம். அல்லாஹ் பாதுகாக்கட்டும்!

No comments:

Post a Comment