Tuesday, 3 June 2014

நோன்பை முறிப்பவை



(உள்ளே) நுழைவது தான் நோன்பை முறிக்கும். வெளியாவதின் மூலம் அல்ல, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்னது அபீயஃலா - 4826) (உடலுக்குள்) நுழைவதைக் கொண்டு தான் நோன்பு முறியும். வெளியானால் நோன்பு முறியாது, என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸன்னஃப் இப்னு அபிஷைபா)

நிர்பந்த நிலையில் பல் பிடுங்கலாம். எனினும் மருந்தோ அல்லது இரத்தமோ உள்ளே சென்றுவிடக்கூடாது. (அஹ்ஸனுல் ஃபதாவா - 4/435)  

உளூவை நிறைவாக செய். நாசிக்கு தண்ணீர் செலுத்து. நோன்பாளியாக இல்லையானால் நாசியின் உள்பகுதி வரை அதிகப்படியாக தண்ணீர் செலுத்தி சுத்தம் செய் என்று நபி (ஸல்) அவர்கள் எனக்கு கூறினார்கள், என்று லகீதுப்னு ஸப்ரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: திர்மிதீ - 718)


இதன் மூலம் வாய் வழியாக சாப்பிட்டால் தான் நோன்பு முறியும் என்றில்லை. நோன்பாளியின் மூக்கு வழியாக ஏதாவது உள்ளே சென்றாலும் நோன்பு முறியும் என்று விளங்க முடிகிறது. சளியை விழுங்குவதால் நோன்பு முறியாது. எனினும் ஷாஃபியீ மத்ஹபின்படி வாய்ப் பகுகதிக்கு வந்து விட்ட சளியை வேண்டுமென்றே விழுங்கினால் நோன்பு முறிந்து விடும். எனினும் ஒருவர் முறையாக முயற்சித்தும் துப்ப முடியவில்லையானால் நோன்பு முறியாது.      

யாராவது மறந்த நிலையில் சாப்பிட்டாலோ குடித்தாலோ தன்னுடைய நோன்பை பூர்த்தி செய்யட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ் தான் சாப்பிட வைத்தான். பருகவைத்தான். (நூல்: புகாரி- 1797,  முஸ்லிம்- 1952)


யாருக்காவது பேசும் போது உதட்டின் ஓரம் எச்சிலின் மூலம் ஈராமகிறது. பிறகு அது உள்ள சென்று விடுவதால் நோன்பு முறியாது.        

நோன்பாளி ஒரு பொருளை ருசி பார்ப்பதில் தவறில்லை, என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுனார்கள். (நூல்: பைஹகீ)
நோன்பாளி தக்க காரணமின்றி டூத் பேஸ்ட் உபயோகிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நோன்பு முறியாது என்றாலும் மக்ரூஹ் ஆகும். உடனடியாக வாய் கொப்பளித்து விட வேண்டும். எதுவும உள்ளே போகமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பேஸ்ட் உள்ளே போய் விட்டால் நோன்பு முறிந்து விடும். (மஸாயிலே ரோஜா, அஹ்ஸனுல் ஃபதாவா)     

ஒருவர் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் போது விந்து வெளியாகிவிட்டால் நோன்பைக் களா செய்ய வேண்டும். எனினும் கஃப்பாரா அவசியமில்லை.  

(தானாக) வாந்தி வந்தாலோ அல்லது தூக்கத்தில் விந்து வெளியானாலோ இரத்தம் குத்தி எடுத்தாலோ நோன்பு முறியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஹதீஸ் எண்: 2028) நபியவர்கள் நோன்பாளியாக இருக்கும் நிலையில் இரத்தம் குத்தி எடுத்திருக்கிறார்கள். எண்- 2024 நூல்- அபூதாவூத்) 

உடலிலிருந்து ஊசி மூலம் இரத்தம் எடுப்பதால் நோன்பு முறியாது. எனினும் இரத்த தானத்தின் மூலம் பலகீனம் ஏற்பட்டு நோன்பு முடியாமல் போய்விட்டால் மக்ரூஹ் ஆகும். (மஸாயிலே ரோஜா, அஹ்ஸனுல் ஃபதாவா)


தலை அல்லது வயிற்றில் காயம் உள்வரை ஊடுருவியிருந்தால் அந்த காயத்தில் (ஈரமான) மருந்து போடுவதால் நோன்பு முறிந்துவிடும். மற்ற காயங்களுக்கு மருந்திடுவதால் நோன்பு முறியாது. (மஸாயிலே ரோஜா)   

வாயில் ஈ நுழைந்து விட்டால் நோன்பு முறியாது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: மய்யஸூமு வமய்யுஃப்திரு ..... 2/204)


நறுமணம்:
நறுமணத்தை நுகர்வதால் நோன்பு முறியாது. காற்று மட்டும் வாய் அல்லது மூக்கினுள் போவதாலும் நோன்பு முறியாது. பத்தி போன்றவற்றின் புகையை வேண்டுமென்றே உள்ளிழுத்தால் நோன்பு முறிந்து விடும் (ஃபதாவா மஹ்மூதிய்யா) பீடி, சிகரெட் குடிப்பதன் மூலமும் நோன்பு முறியும். 

நோன்பு நோற்ற நிலையில் நபியவர்கள் சுர்மா இட்டதாகவும் பைஹகீயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனஸ் (ரலி) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் சுர்மா போட்டிருக்கி-ர்கள். (நூல்: அபூதாவூத்-2030) 


ஊசி போடுதல் இரத்ததானம் செய்தல்:
நபியவர்கள் ஸஹர் நேரம் முடிந்து ஃபஜ்ர் உதயமான பின் குளித்திருக்கிறார்கள் நோன்பு வைத்திருக்கிறார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நூல்: புகாரீ - 1795) 
அனஸ் (ரலி) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தண்ணீரை ஊற்றி குளிர்ச்சியை ஏற்படுத்திக் கொள்வார்கள். (நூல்: மய்யஸூமு வமய்யுஃப்திரு.... 1/202) 
இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் ஒரு துணியை நனைத்து தங்களின் மேல் போட்டுக்கொண்டார்கள்.


குளிப்பதின் மூலம் உடலுக்கு உற்சாகமும் குளிர்ச்சியும் கிடைக்கிறது. நபியவர்களும் நபித்தோழர்களும் அந்த நோக்கத்திற்காக குளித்திருக்கிறார்கள். தண்ணீர் உடலுக்குள்ளே செல்வதால் தான் உடலுக்கு குளிர்ச்சியும் உற்சாகமும் ஏற்படுகிறது. 

நம்முடைய உடலில் கண்ணுக்குத் தெரியாத ஏகப்பட்ட துவாரங்கள் இருக்கின்றன.3 1/2 கோடி ரோம துவாரங்களும் 8 கோடி வியர்வை துவாரங்களும் இருக்கின்றன. 

உடலில் வெளிப்படையான துவாரங்களின் மூலம் ஏதாவது உள்ளே சென்றால் தான் நோன்பு முறியும். கண்ணுக்குத் தெரியாத ரோம, வியர்வை துவாரங்களின் மூலம் உள்ளே சென்றால் நோன்பு முறியாது, என்று மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் மூலம் அறிய முடிகிறது. 

ஊசி போடுவதாலோ குலுக்கோஸ் ஏற்றுவதாலோ நோன்பு முறியாது. எனினும் முடிந்த வரை நோன்பு காலத்தில் இதைத் தவிர்த்திட வேண்டும். நோன்பு திறக்கும் வரை ஒத்திப் போடுவதே நல்லது. ஊசியின் மூலம் மருந்து ஏற்றினாலும் சரி, சத்து ஏற்றினாலும் சரி அதன்மூலம் நோன்பு முறியாது.

 எனினும் நிர்பந்த நிலையின்றி சத்து ஊசி போடுவதும் தக்க காரணமின்றி குலுக்கோஸ் ஏற்றுவதும் மக்ரூஹ் என்று இந்திய இஸ்லாமிக் ஃபிக்ஹ் அகாடமீ 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடதிய ஃபிக்ஹீ செமினாரில் முடிவு செய்யப்பட்டது. 

இருதய வியாதியால் பாதிக்கப்ட்டவர்களுக்கு நாவுக்குக் கீழே ஒரு மாத்திரை வைக்கப்படும். இதன் மூலம் மிக விரைவில் பலன் கிடைக்கும். இந்த மருந்து தொண்டை வழியாக குடலை அடைவதில்லை. நாவுக்குக் கீழே உள்ள கண்ணுக்குத் தெரியாத துவாரங்களின் மூலம் இரத்தத்தை அடைகிறது. இது போன்ற மாத்திரை வைக்கும் போது எச்சிலுடன் மருந்தை விழுங்குவதை விட்டும் முழுமையாக தவிர்ந்து கொண்டால் நோன்பு முறியாது. 

குடல் தொடர்பான வியாதிகளுக்காக பின்துவாரம் வழியாக கருவியை ((endoscope)) மட்டும் நுழைப்பதால் நோன்பு முறியாது. (அதன் ஒரு பகுதி உடலின் வெளியே இருக்கும். இருக்க வேண்டும்) எனினும் அந்தக் கருவியில் மருந்தோ அல்லது ஈரமான பொருளோ இருந்தால் நோன்பு முறிந்து விடும். (நூல்: நவாகிளெ ஸொம் ஸே முதஅல்லிக் நயே மஸாயில் - இந்திய இஸ்லாமிக் ஃபிக் அகாடமீ)  

No comments:

Post a Comment