Wednesday, 26 November 2014

பற்றாக்குறை மின்சாரம்



பற்றாக்குறை மின்சாரம்


இன்று பணம், தண்ணீர், மின்சாரம், சமையல் எரிவாயு என எல்லா பொருட்களிலும் வரக்கூடிய வரவை விட செலவு மிகைத்து நம்மை திகைக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பற்றாக்குறை பட்ஜெட்டின் பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கிறது.

காலப்போக்கில் மின்சாரத்தையும் ரேஷன் கடையில் மட்டுமே பெறவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுமோ  என்று எண்ணத் தோன்றுகிறது. கடந்த 2001 ஆண்டு மின் உற்பத்தியில் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் தற்போது பற்றாக்குறையில் தவித்து வருகிறது. அரை நாள் மட்டுமே மக்களுக்கு மின்சாரம் வழங்க முடியும், என்று அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தற்போது 11500 மெகாவாட் மின்சாரம் அன்றாட உபயோகத்திற்கு தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பது 7500 லிருந்து 8000 மெகாவாட் மின்சாரம் தான். மின்உற்பத்தி குறையும் சமயங்களில் காற்றாலை மின்சாரம் கைகொடுத்து வருவதால் குறிப்பிட்ட சில மணி நேர மின்தடையுடன் மின்வாரியம் நிலைமையை சமாளித்து வருகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தனிமனித மின்நுகர்வு அதிகமாக, அதாவது ஆண்டிற்கு 1080 யூனிட் என்ற அளவில் உள்ளது. மற்ற மாநிலங்களில் 800 யூனிட் மின்சாரம் தான் தனிமனித நுகர்வாக உள்ளது. நாளுக்கு நாள் தொழில் பிரிவுகளின் எண்ணிக்கை, குடியிருப்புகளன் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மின்தேவை அதிகரிக்கும்.

தீர்வு என்ன?:
தற்போது மின்உற்பத்தியை அதிகரிப்பது என்பது அரசுக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல. மின் நிலையங்கள் அமைப்பதற்கான இடம், அதற்கான மூலப் பொருட்கள் பற்றாக்குறை உள்ளது. அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி பற்றாக்குறை அதிகளவில் உள்ளது.

ஒரு 500 முதல் 600 மெகாவாட் திறன் கொண்ட மின்நிலையம் ஆரம்பிக்க ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை ஆகிறது. இவற்றிற்கு மூலப்பொருட்கள் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தான் கொண்டு வரவேண்டும். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் மின்சாரம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

மின்துறை நிர்வாகத்தை சீர்படுத்துவது, மக்களை  சிக்கனமான மின்நுகர்வுக்கு தயார்படுத்துவது ஆகிய இருவழிகள் தற்போது கைகொடுக்கும். மற்ற மாநிலங்களில் குறைவான மின்நுகர்வுடன் மக்கள் வாழும் போது அது நம் மாநிலத்தில் மட்டும் சாத்தியமாகாதா?

தண்ணீர் - மின்சாரம்:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபுலகில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. அந்நிலையைச் சமாளிப்பதற்கு நபியவர்கள் இவ்விரண்டு முறையைத் தான் கையாண்டார்கள்.

மின்சாரம் தண்ணீரிலிருந்தும் உற்பத்தி செய்யப்படுகிறதை என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். மதீனாவை மழைகுறைவான பகுதியாக நபியவர்கள் அறிவித்தார்கள். (முஸ்னத் அஹ்மத் 3/177)

ஸஃது பின் உப்பாதா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் ஸஃதுடைய தாயார் மரணித்து விட்டார்கள். அவருக்காக எதை தர்மம் செய்வது சிறந்தது? என்று கேட்ட போது, நீர்ப்பற்றாக்குறையை உணர்ந்திருந்த நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் என்று பதிலளித்தார்கள். ஸஃது (ரலி) அவர்களும் உடனே ஒரு கிணற்றைத் தோண்டி, இது உம்மு ஸஃதுக்கு சமர்பபணம் எனறு தண்ணீர் தர்மம் செய்தார்கள். (நூல்: அபூதாவூத்)

இஸ்லாமிய பொதுப்பணித்துறையின் செயலாக்கம் இந்த தண்ணீர் தர்மத்தின் மூலமே ஆரம்பித்துள்ளது. (உஸ்வயே ஸஹாபா)

மதீனாவாழ் முஸ்லிம்களுக்கு தண்ணீர் பஞ்சம் இருந்த போது ஒரு யூதன் தனக்கு சொந்தமான கிணற்றுத் தண்ணீரை விலைக்கு விற்றுக் கொண்டிருந்தான். யார் இந்தக் கிணற்றையே விலைக்கு வாங்கி முஸ்லிம்களுக்கான நீர் வசதியைத் தாராளமாக்குவாரோ அவருக்கு சுவனம் பரிசாகக் கிடைக்கும், என அறிவித்தார்கள். உடனே உஸ்மான் கனீ (ரலி) அக்கிணற்றை வாங்கி முஸ்லிம்களுக்காக வக்ஃப் செய்தார்கள். (திர்மிதீ)

நீர் வாரியம்:
தண்ணீர் நிர்வகிக்கும் பொறுப்பாளர்கள் (அமைச்சர்கள்) எல்லோருக்கும் பங்கிட்டு விட்டு கடைசியில் தன் பங்கை எடுப்பராக இருக்க வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அபூதாவூத்)

இன்று மின் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், ஆட்சயாளர்களின் நிலை எப்படி இருக்கிறது? என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.  ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபியவர்களுடன் பிரயாணத்தில் இருந்தோம். தண்ணீர்ப்  பகுதியை நெருங்கிய போது தண்ணீரை முறைப்படுத்தி சுத்தமாக்கி உபயோகிப்பதற்குத் தோதுவாக ஒரு தடாகத்தில் சேகரிப்பதற்காக இரண்டு நபர்களை முன்கூட்டியே அனுப்பி வைத்தார்கள். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

அவ்விருவரின் உழைப்பால் உண்டான ஹவுள் என்பதால் நபி (ஸல்) அவர்கள் கூட அந்த இரண்டு தோழர்களின் அனுமதியுடன் தான் தண்ணீரை உபயோகித்தார்கள். (முஸ்லிம்)

மற்றொரு முறை நபி (ஸல்) தோழர்களுடன் சென்ற போது நாளை தபூக்கின் நீர் ஊற்றுக்கு வருவீர்கள். நீங்கள் அவ்விடத்தை அடைந்தால் நான் வருவதற்கு முன் அந்த தண்ணீரை யாரும் தொடக்கூடாது, என்று உத்தரவிட்டார்கள். அந்த ஊற்றில் சிறிதளவு நீரே ஊறிக் கொண்டிருந்தது. (முஸ்லிம்)

ஆறு, மற்றும் ஏரிகளை முறைப்படுத்தி தண்ணீர் பங்கீட்டுக்காக ஓர் அமைச்சகத்தையே இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் நிறுவியிருந்தார்கள். (அல்ஃபாரூக்)
தற்கால மின்துறையும் நிர்வாகச் சீர்திருத்தத்தை மேற்கொண்டால் மிகுந்த பலன் அடையலாம். மின் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும். மின் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்சமயம் நடைமுறையில் இருக்கும் மின் உற்பத்தி முறையைத் தவிர மற்ற தொழில் நுட்பத்தின் மூலம் மின் உற்பத்தி செய்ய முடியுமா? என்பது பற்றி யோசிக்க வேண்டும்.

ஜெர்மன் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறது. அந்த தொழில் நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்தியாவும் அந்நாட்டுடன் இணைந்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியிருப்பது வரவேற்கத் தக்கது.

இந்தியாவை விட அதிக அளவில் அணுசக்தியைப் பயன்படுத்தி வரும் ஜெர்மனி, சூரிய சக்தியை அதிக அளவில் ஊக்குவிக்கிறது. அதில் முக்கியமானது சூரிய ஒளி வீடு.
வீட்டின் கூரையில் சூரிய ஒளியை உள்வாங்கும் தகடுகளைப் பொருத்தி வீட்டிற்குள் உள்ள கருவி மூலம் சேகரித்து வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தைப் பூர்த்தி செய்கிறது. அதிலும் வீட்டில் சூரிய ஒளி படும் பிற பகுதிகளிலும் தகடுகளை வைத்து மொபைல் போன்களுக்கு சார்ஜ் செய்யப்படுகிறது. சூரிய சக்தியை உள்வாங்கி வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் திட்டத்தையும் முன்வைத்துள்ளது.

இருபது அணுசக்தி நிலையங்கள் முழு வீச்சில் தயாரிக்கக் கூடிய 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை, சூரிய சக்தி மூலம், ஒரு மணி நேரத்தில் தயாரித்து உலக சாதனை படைத்திருக்கிறது ஜெர்மன். மின்சாரத் தேவை அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்நிலையில் இது போன்ற புதிய புதிய தொழில் நுட்பத்தை ஆராய்ந்தால் மட்டுமே எதிர் காலத்தின் நெருக்கடியை சமாளிக்க முடியும்.
மின் சிக்கனம்:
இரண்டாவதாக மக்களை சிக்கனமான மின்நுகர்வுக்கு தயார் படுத்த வேண்டும். மின்சார சக்தியை வீண்விரயமின்றி பொறுப்புணர்வுடன் பயன்படுத்தினாலே ஓரளவுக்க மின்சக்தியை சேமித்து விடமுடியும். இதில், இருக்கும் சக்தியைப் பாதுகாத்து அதைச் சிக்கனமாக செலவு செய்வது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இஸ்லாம், உணவு, நீர், பணம், போன்ற அனைத்திலும் வீண்விரயத்தை தடை செய்திருக்கிறது. சாப்பிடுங்கள் குடியுங்கள் என்று கூறும் குர்ஆன் வீண்விரயம் செய்யாதீர்கள்! என்றும் உத்தரவிடுகிறது.

விளைச்சலுக்குரிய ஜகாத்தை கொடுங்கள் என்று கடமையை நிறைவேற்றும்படி குர்ஆன் கட்டளையிடும் போது கூட எல்லை மீறி விடாதீர்கள்! விரயம் செய்திடாதீர்கள்! என்பதையும் சேர்த்தே கூறுகிறது. இப்படி தனக்காக உபயோகித்தாலும் மற்றவர்களுக்கு கொடுத்தாலும் எதிலும் இஸ்ராஃப் எனும் வீண்விரயம் விலக்கப்பட வேண்டுமென்பதை மார்க்கம் வலியுறுத்துகிறது.

தொழுகை போன்ற வணக்கத்திற்காக செய்யப்படும் உளூவிலும் கூட நீர் விரயத்தை நபியவர்கள் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். ஓடும் ஆற்றில் உளூ செய்தாலும் வீண்விரயம் கூடாது, என எச்சரித்தருக்கிறார்கள். (இப்னுமாஜா)

ஓடும் நீரில் இஸ்ராஃப் ஏற்படவே செய்யாது, என்றாலும் நபியவர்கள் தோழர்களுக்கு கொடுத்த முதல் தரமான பயிற்சி. அத்துடன் நேர விரயமும் தடுக்கப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் சிறுதுவாரமுள்ள தோல் பையிலிருக்கும் தண்ணீரால் உளூ செய்வார்கள். தண்ணீரை மிகவும் குறைவாக விழச் செய்வார்கள், என இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இப்னுமாஜா)

இன்று நாம் உளூ செய்ய நீர்க்குழாயைத் திறந்தால் அந்த தண்ணீரால் குளித்தே விடலாம். தண்ணீரை சிக்கனமாக செலவு செய்வது அவசியம் என்பது போல் மின்சாரத்தையும் சிக்கனமாக செலவு செய்து பழக வேண்டும். இதில் நமக்கும் இலாபம் இருக்கிறது. அரசுக்கும் இலாபம் இருக்கிறது.

பொது மக்களுடைய மின்சாரத் தேவைக்கும் நாம் உதவி செய்தவர்களாகி விடுவோம். அறைக்குள் நுழைந்தாலே மின்விசிறியை இயக்க வேண்டும், என்பது கட்டாயமல்ல. பசித்தால் சாப்பிட வேண்டுமென்பது போல் வியர்க்கும் போது ஃபேனை உபயோகிக்கலாம். ஒரு விளக்கு எரிவதால் எவ்வளவு இலாபம்? எரியாவிட்டால் எவ்வளவு நஷ்டம்? என்பதை யோசித்து செயல்படலாம். அறையை விட்டு வெளியே வரும் போது மறக்காமல் மின்விசிறி மற்றும் மின்விளக்குகளை சுவிட்ச் ஆஃப் செய்வதில் கவனம் இருக்க வேண்டும்.

பல சமயங்களில் வீடுகளில் தேவையின்றி ஃபேன் ஓடிக்கொண்டிருக்கும். விளக்கு எரிந்து கொண்டிருக்கும். கழிவறைகளில் விளக்குகள் அணைக்கப்படாமல் இருக்கும். இவற்றைக் கவனித்து சீர் செய்து விட்டாலே போதுமான அளவுக்கு மின்சாரத்தை சேமித்து விட முடியும்.  அவசியத் தேவை தவிர மற்ற சமயங்களில் சி.எஃப். எல் பல்புகளை உபயோகிக்கலாம். 


No comments:

Post a Comment