Monday, 8 December 2014

ஊழல் இல்லா உலகம் காண்போம்




டிசம்பர் 9 ஆம் தேதி சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம். டிசம்பர் 18 ஆம் தேதியும் தமிழக அரசியலில் முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது. எத்தனை ஒழிப்பு தினங்களைக் கொண்டாடினாலும் ஊழல், உலகை விட்டும் ஒழிந்த பாடில்லை.

ஸையிதுல் கௌமி காதிமுஹும் - சமுதாயத்தின் தலைவர் அவர்களின் சேவகர், என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். ஆனால் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டி ஊழல் செய்தவர்கள் தங்களை மக்களின் மாண்புமிகு சேவகர்களாக அடையாளம் காட்டிக் கொள்வது தான் இன்றைய நிலை.

டிரான்பரன்சி இன்டர்நேஷனல் இந்தியா என்ற அமைப்பு ஊழல் நிறைந்த நாடுகள் எவை என்று ஆய்வு செய்யும் போது ஊழல் இல்லாத நாடே இல்லை, என்ற முடிவுக்குத் தான் வரமுடிந்தது.

தண்டிக்கப்படாத ஊழல் பெருச்சாளிகள்:
அதிகார வர்க்கத்தில் இருந்துகொண்டு ஊழல் புரிபவர்களை சட்டத்தின் ஓட்டை வழியாக தப்பிக்க விடாமல் இருந்தால் தான் ஊழலை ஒழிப்பதில் ஓரளவாவது வெற்றி பெறமுடியும். அமெரிக்காவைச் சேர்ந்த உலக நீதித் திட்டம் (டபிள்யூ. ஜே. பி.) என்ற அமைப்பு ஊழல்வாதிகளைக் கண்டறிந்து தண்டிக்கும் உலக நாடுகள் குறித்து ஆய்வு செய்து, முதல் பத்து நாடுகளின் பெயர்களை வெளியிட்டது. ஆனால், அவற்றில் இந்தியாவின் பெயர் இல்லை.

தென்ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கோடியில் உள்ள சிறிய நாடான போட்ஸ்வானா 88 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. அதாவது, அங்கு ஊழல் புரிபவர்களில் 88 சதவீதம் பேர் தண்டிக்கப்படுகிறார்கள்.

ஊழல் அதிகாரிகளைத் தண்டிக்கும் உலக நாடுகளின் வரிசையில் சிங்கப்பூருக்கு ஐந்தாம் இடம் கிடைத்துள்ளது. டென்மார்க் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. 99 நாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அவ்றில் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் 50 சதவீதம் பேரே ஊழல் வழக்கில் தண்டிக்கப்படுகின்றனர்.

உலக அளவில் 62 சதவீதம் ஊழல்வாதிகள் தங்களுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருந்தும் தண்டனையிலிருந்து தப்பிவிடுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. (தினமணி.காம் - மே-2, 2014)
இன்று அரசியல், சினிமா, விளையாட்டு, கல்வி, மருத்துவம் என அனைத்துத் துறைகளும் லஞ்ச ஊழலில் மூழ்கிக் கிடக்கின்றன. பட்டப்படிப்புக்கு மட்டுமல்ல; எல்கேஜி படிப்பதாக இருந்தாலும் லஞ்சம் இல்லாமல் சீட் கிடைப்பது சிரமம் தான்.

லஞ்சம் வாங்குபரையும் லஞ்சம் கொடுப்பவரையும் அல்லாஹ் சபிக்கிறான், என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (அபூதாவூத் - 3582)

வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியின் பெரும்பகுதி அந்தப் பணிகளுக்குப் போய்ச் சேர்வதில்லை. ஒரு சமயம் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி, திட்ட ஒதுக்கீடுகளில் 15 சதவீதம் தான் அந்தப் பணிகளுக்குப் போய்ச்சேர்கிறது. மீதி 85 சதவீதம் ஊழல் பேர்வழிகளால் கபளீகரம் செய்யப்படுகிறது. இதனால், வளர்ச்சி குன்றுகிறது, என்று கூறினார்.

கருப்புப் பணம்
சுவிஸ் வங்கியில் முடக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் பற்றியும் பரவலான தகவல்கள் வெளியாககிக் கொண்டிருக்கின்றன. கருப்புப் பணம் பதுக்கியவர்களில் 627 நபர்களின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.

இந்த எண்ணின் பின்னால் மறைந்திருப்பவர்களின் அடையாளம் தெரிந்து, அவர்களை அவமானம் அடையச் செய்துவிட்டால், அது கருப்புப் பணத்துக்கு எதிராக நாடு தொடங்கியிருக்கும் போரின் முதல் வெற்றியாக இருக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள். கருதுவது சரிதான் என்றாலும், கருப்புப் பணத்துக்கு எதிராக வெற்றி காண்பது அவ்வளவு எளிதல்ல.

அதில் 289 பேருடைய கணக்கில் பணமே இல்லை, எனவும் 122 பெயர்கள் இருமுறை இடம் பெற்றுள்ளதாகவும் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிவித்துள்ளது.

வங்கியின் ஒரு கிளையில் உள்ள கணக்குகளின் எண்ணிக்கைதான் 627.  ஆனால், இது போன்று பல வங்கிகளில் பல கிளைகளில் கணக்குகள் இருக்கின்றன. சராசரியாக ஒரு கணக்கில் 10 கோடி ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், மொத்தம் 6,270 கோடி ரூபாய்தான். இது கருப்புப் பண வெள்ளத்தில் ஒரு துளி. வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் பணத்தின் மதிப்பு 30 லட்சம் கோடி ரூபாய் என்று சிபிஐ இயக்குநர் சொல்கிறார்.

வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் 80,000 பேருக்கும் மேல் இருப்பார்கள் என்கிறார் பொருளாதார வல்லுநர் வைத்தியநாதன். இவர்களில் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கல்வி நிறுவனங்களின் சொந்தக்காரர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுபவர்கள் என்று பலரும் இருக்கிறார்கள் என்கிறார் அவர். பட்டியல் தயாரித்தால் அதில் பத்மவிபூஷண் வாங்கியவரிலிருந்து பத்மஸ்ரீ வாங்கியவர் வரை பலர் இருக்கலாம்.


இந்த நாட்டின் பல்வேறு அதிகார, பொருளாதார, கலாச்சார மையங்கள் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் கைகளில் இருக்கும்போது அதை வெளியில் கொண்டுவருவதற்கு அரசோ, பதவியில் இருக்கும் அரசியல் கட்சிகளோ மற்ற நிறுவனங்களோ பெருமுயற்சி எடுக்கும் வாய்ப்புகள் குறைவு.

இந்தியாவில் இருக்கும் கருப்புப் பணம்
வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணமே நம்மைத் தலையைச் சுற்ற வைக்கிறது என்றால், இந்தியாவுக்குள் அதை விட ஏழெட்டுப் பங்குகள் அதிகமாகக் கருப்புப் பணம் புழங்குகிறது.

சமீபத்தில் வந்த அறிக்கையின்படி, நாட்டில் புழங்கும் கருப்புப் பணத்தின் மதிப்பு நமது மொத்த உற்பத்தியின் மதிப்பில் 75 சதவீதம் இருக்கும். இப்போது உச்ச நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழுவுக்கு 31 மார்ச் 2015-க்குள் அறிக்கை தருமாறு கெடு விதித்திருக்கிறது. இதற்குப் பிறகுதான் நடவடிக்கை.

வெளிநாட்டில் பணம் வைத்திருப்பவர்கள் 80,000 பேருக்கும் மேல். உள்நாட்டுத் திருடர்கள் 80 லட்சம் இருந்தாலும் ஆச்சரியமில்லை. இவர்களுக்கு எதிராக என்று நடவடிக்கை எடுத்து எப்போது பணத்தைக் கொண்டுவருவார்கள், என்று தெரியவில்லை. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

மருத்துவத்துறை:
மருத்துவத்துறையிலும் ஊழல் மலிந்துள்ளது. இவ்வளவு காலமும் இல்லாமல் இன்று மூளைச்சாவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதென்றால் ஊழல்மயமாகிவிட்ட வணிகமயமாகிவிட்ட மருத்துவத்துறையின் சூழ்ச்சிகளும் சுயநலங்களும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அண்மையில், சென்னை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவடைந்தவரின் இதயம் 9 நிமிடங்களில் அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒரு இளம் பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. ஏன், அரசு மருத்துவமனையில் இதயம் தேவைப்படுவோர் யாருமே இல்லையா?

சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், பணத்திற்காக மருத்துவர்களும் ஸ்கேன் செண்டர்களும் இணைந்து விலையுயர்ந்த தேவையில்லாத டெஸ்ட்களை எடுக்க வைப்பதாக மக்களவையில் தெரிவித்தார்.

நோயாளிகள் எடுக்கும் ஒவ்வொரு டெஸ்டுக்கான கட்டணத்திலும் 50 சதவீதத்தை மருத்துவர்கள் கமிஷனாகப் பெறுவதாகக் கூறப்படுகிறது. போலியை கண்டுபிடிக்க வேண்டிய நிறுவனமே கூட லஞ்ச ஊழலில் மூழ்கிக்பிடப்பது தான் நாட்டின் நிலை.

பஞ்சாப் பாட்டியாலா மருத்துவக்கல்லூரியில் 2010-11 ம் ஆண்டு மாணவர் சேர்க்ககைக்கு அனுமதி வழங்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் கைது செய்யப்பட்டார்.

கல்லூரியை நேரில்ஆய்வு செய்த எம் சி ஐ குழு பல குறைகளை சுட்டிக்காட்டியிருந்தும் அதையும் மீறி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கவுன்ஸிலின் தலைவர் 2001-ல் 65 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு 2009 ம் ஆண்டு அது அவருக்கு கிடைத்த அன்பளிப்பு என்று கூறி வழக்கு கைவிடப்பட்டது.


நேர்மை போதிக்கும் இஸ்லாம்:
நீங்கள் ஒருவர் மற்றொருவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்... (அல்குர்ஆன் 2;188)) என்று குர்ஆன் எச்சரிக்கிறது.

யுத்தத்தில் கிடைக்கும் கனீமத் பொருட்களை போர் வீரர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கப்படும். எனினும், பங்கீடு செய்வதற்கு முன்னால் திருட்டுத்தனமாக யாராவது அதிலிருந்து ஒரு பொருளை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டால் மறுமை நாளில் அப்பொருளை சுமந்தவராக வருவார், என்றும் குர்ஆன் கூறுகிறது. (3:161)

நபி (ஸல்) அவர்கள் லஞ்சம் வாங்குபவர், லஞ்சம் கொடுப்பவர் இருவரையுமே சபித்தார்கள், என்று அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: அபூதாவூத்-  3109)
உமர் (ரலி) அவர்களின ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட நிர்வாக நடவடிக்கைகள் இன்றும் மேற்கொள்ளப்படுமேயானால் உலகமே லஞ்ச ஊழலிருந்து விடுதலை பெறமுடியும். இல்லாதவரை ஒவ்வொரு வருடமும் ஊழல் ஒழிப்பு தினம் கொண்டாடுவதில் எந்தப்பலனும் இல்லை.

உமர் (ரலி) அவர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் சில கொழுத்த ஒட்டகங்ளைக் கண்டார்கள். இது யாருடையது? என்று கேட்கும்போது இப்னு உமர் (ரலி) அவர்களுடையது, என்று பதில் கூறப்பட்டது. உடனே தங்களுடைய மகனை அழைத்து அதற்கான காரணம் கேட்டார்கள்.

அரசின் மேய்ப்பகத்தில் மற்றவர்களுடைய ஒட்டகங்கள் மேய்வதைப் போன்று என்னுடைய ஒட்டகங்களும் மேய்ந்தன, என்று கூறினார்கள். அப்படி இருக்க முடியாது. உங்களுடைய ஒட்டகங்களைப் பார்த்தவுடன் மக்கள் இது கலீஃபாவின் மகனுடைய ஒட்டகங்கள். எனவே அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், என்று நினைத்து உங்களுடைய ஒட்டகங்களுக்கு முதலிடம் கொடுத்திருப்பார்கள்.

எனவே, நீங்கள் ஒட்டகம் வாங்குவதில் எவ்வளவு முதலீடு போட்டீர்களோ அதை மட்டுமே உங்களுக்குரியதாக வைத்துக்கொள்ளுங்கள். அவை கொழுத்ததின் காரணமாக எவ்வளவு லாபம் கிடைக்குமோ அதை பைத்துல் மாலில் சேர்த்துவிடுங்கள், என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் ஜனாதிபதியாக இருந்தும்  வியாதி ஏற்பட்டிருக்கும் சமயத்திலும் கூட அதற்கான சிகிச்சையை பைத்துல் மாலிலிருந்து மக்களுடைய பொது அனுமதியின்றி பெற்றுக் கொள்ள வில்லை என்பது பிரபல்யமான செய்தி.

இன்று ஆட்சியாளர்களின் இசட் பிரிவு பாதுகாப்புக்கும் இலவச சுற்றுலா செல்வதற்கும் ஆகும் செலவுகளே ஏராளம். ஹாஷிம் குடும்பத்தார்களை அரசுப் பணிகளில் உமர் (ரலி) அவர்கள் அமர்த்த மாட்டார்கள்.

ஏனெனில் உமர் (ரலி) அவர்களின் கருத்துப்படி கனீமத்திலிருந்து ஐந்தில் ஒரு பாகம் என்பது பனூஹாஷிமில் தேவையுடையவர்களுக்கு மட்டுமே (கலீஃபாவின் ஆய்வுக்குட்பட்டு) கொடுக்கப்பட வேண்டும். ஹாஷிம் குடும்பத்தார் அனைவருக்கும் அதில் உரிமை கோரமுடியாது, என்பதாகும்.

எனினும், உமர் (ரலி) அவர்களுடைய கருத்துக்கு முரணான கருத்தையே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கொண்டிருந்தர்கள். எனவே, ஹிம்ஸ் நகரத்து ஆட்சியர் .இறந்த பிறகு இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்களை அந்நகரத்தின் ஆட்சியராக நியமிக்க நாடினார்கள். எனினும், அவர்கள் ஹாஷிம் குடும்பத்தாராக இருந்ததால் பைத்துல் மாலுடைய நிதியை உபயோகிப்பதில் தவறேதும் நிகழ்ந்து விடக்கூடாது, என்ற எண்ணத்தில் அவர்களை ஆட்சியராக நியமிக்க மறுத்துவிட்டார்கள்.

நீதித்துறை:
நீதித்துறையை லஞ்ச ஊழலிருந்து காப்பாற்றுவதற்காக உமர் (ரலி) அவர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

1. நீதிபதிகளுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்தார்கள்.

2. செல்வந்தராகவோ மக்களிடம் செல்வாக்கு பெற்ற கண்ணியமானவராகவோ இல்லாத ஒரு நபர் நீதிபதியாக நியமனம் செய்யப்படக்கூடாது. ஏனெனில், செல்வந்தர் லஞ்சம் வாங்க முற்படமாட்டார். மதிப்பிற்குரியவர்கள் தீர்ப்பு செய்யும் போது யாரையும் பயப்படமாட்டார், என்று உமர் (ரலி) அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.

அத்துடன் எந்த நீதிபதியும் வியாபாரத் தொழிலில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப் பட்டிருந்தது. இவற்றின் பலன்களை அனுபவப்பூர்வமாக கண்டபிறகு வளர்ந்த நாடுகளும் அவற்றை ஏற்று அமுல்படுத்தின. (அல்ஃபாரூக்)

No comments:

Post a Comment