இஸ்லாத்தின் பார்வையில் எந்த மொழியின் மீதும் வெறுப்பும்
கிடையாது. விருப்பும் கிடையாது. மொழி வெறுப்பையும் இஸ்லாம் விரும்பவில்லை. மொழி வெறியையும்
விரும்பவில்லை. யாரும் தங்களுடைய மொழியை வைத்து சிறந்தவர்களாக ஆகிவிடமுடியாது.
தாய் மொழியல்லாத மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதில் தடையேதுமில்லை.
மாற்று மொழி இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு உறுதுணையாக இருந்தால் அந்த மொழியை கற்றுக்கொள்வது
விரும்பத்தக்கதாகும். சில சமயம் கட்டாயமும் கூட.
நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களை மாற்று மொழிகளை
கற்றுக்கொள்வதற்கு உத்தரவிட்டுள்ளார்கள். ஜைது பின் தாபித் (ரலி) அவர்களுக்கு யூதர்ளுடைய
மொழியைக் கற்றுக்கொள்ளும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் தவறேதுமில்லை. எனினும்
இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு முரணான ஆங்கிலேய கலாச்சாரத்தை முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில்
பரவலாக்கிவிடக்கூடாது.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலணியாதிக்கம் செய்தபோது இந்திய
உலமாக்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளக்கூடாது, என்று கூறியதாக பரவலாக பேசப்படுகிறது. எனினும் ஸைய்யித்
முனாஜிர் அஹ்ஸன் கீலானீ (ரஹ்) அவர்கள் தங்களுடைய நூலில் இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
அவர்கள் கூறுவதாவது: உலமாக்கள் ஆங்கிலம் படிக்கக்கூடாது, என்று ஃபத்வா கொடுத்ததாக சொல்லிக்
கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இந்த மார்க்கத் தீர்ப்பை யார் வழங்கியது? எந்த கிதாபில் இந்த ஃபத்வா
உள்ளது? என்பது
பற்றி யாரும் பேசுவதில்லை. இதற்கு மாற்றமாக ஷாஹ் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களும் மொளலானா
அப்துல் ஹை (ரஹ்) அவர்களும் ஆங்கிலம் படிப்பது ஆகுமானது. அதற்கு தடையேதுமில்லை,
என்று ஃபத்வா கொடுத்துள்ளார்கள்.
(நூல்: ஹிந்துஸ்தான் மே முஸல்மானோங்கா நிஜாமெ தஃலீமோ தர்பியத் - பக்: 1/408,
409)
No comments:
Post a Comment