Sunday, 8 May 2016

இஸ்லாமிய அரசில் கருத்துச் சுதந்திரம்





முஆவியா (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்த சமயம், ஷாம் - சிரியா இஸ்லாமிய உலகின் தலைமையகமாக இருந்தது. ரோம் தேசத்துடன் அவ்வப்போது இஸ்லாமிய அரசுக்கு பிரச்சினை இருந்து வந்தது. சில சமயம் யுத்தமும் நடக்கும். ஒரு சமயம் முஆவியா (ரலி) அவர்கள் எதிரிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டார்கள். 


இருதரப்பும் ஒப்பந்த காலம் முடியும் வரை யுத்தத்தில் ஈடுபடக்கூடாது, என்று உறுதியளிக்கப் பட்டது. இந்நிலையில், ஒப்பந்த காலம் முடிவதற்கு முன் யுத்தம் தானே செய்யக்கூடாது. யுத்தத்திற்கான நடவடிக்கைகயை மேற்கொள்ளலாமே!, என்ற சிந்தனை முஆவியா (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டது. இதன்படி எல்லைப்பகுதியில் படைகளை குவிக்க ஆரம்பித்தார்கள். அதற்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தார்கள். 

ஒப்பந்த காலம் முடிந்தவுடன் உடனடியாக எதிரிகளின் மீது தாக்குதல் தொடுத்தால் மிக எளிதாக வெற்றி பெற்று விடலாம், என்று திட்டமிட்டார்கள். இதனால், ஒப்பந்தத்தை மீறியவர்களாகவும் ஆக மாட்டோம். எதிரிகளின் அலட்சியத்தைப் பயன்படுத்தி நம்முடைய நோக்கத்தை சாதித்து விடலாம், என்று திட்டமிட்டார்கள். அவ்வாறே செய்யவும் செய்தார்கள். ஒப்பந்த காலம் முடிந்தவுடன் எதிரிகளின் மீது திடீர் தாக்குதல் தொடுத்தார்கள். இதை சற்றும் எதிர்பாராத எதிரிகள் செய்வதறியாது, திகைத்து நின்றார்கள். 

இஸ்லாமியப் படை மிக எளிதாக நாட்டுக்குள்ளே நுழைந்து தொடர் தாக்குதலின் மூலம் பல நகரங்களை வெற்றி கொண்டனர். இந்நிலையில், ஒரு குதிரை வீரர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் - வாக்குறுதியை நிறைவேற்றுவது தான் முஸ்லிமின் அடையாளம். மோசடி செய்வதல்ல, என்று கூச்சலிட்டுக் கொண்டே பாய்ந்து வந்தார். மக்கள் அவரை உற்று நோக்கினார்கள். அவர் அம்ருபின் அபஸா (ரலி) . உடனே, முஆவியா (ரலி) அவர்கள் தொடர்ந்து முன்னேறுவதை நிறுத்திவிட்டு அவரிம் விபரம் கேட்டார்கள். 

அதற்கு அவர்கள், ஒரு சமுதாயத்துடன் உடன்படிக்கை ஏற்பட்டிருந்தால் ஒப்பந்த காலம் முடியும் வரை அதன் எந்த முடிச்சையும் அவிழ்க்கவும் கூடாது. அதை கடுமையாக்கவும் கூடாது, அல்லது எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியில் எந்த ஒப்பந்தமும் இல்லை, என்பதை பகிரங்கமாக அறிவித்துவிட வேண்டும். (அதற்குப் பிறகு தான் தாக்குதலுக்கான ஏற்பாடு செய்ய வேண்டும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன், என்று கூறினார்கள். இந்த நபிமொழியைக் கேட்டவுடன் முஆவியா (ரலி) அவர்கள் உடனடியாக முன்னேறுவதையும் தாக்குதலையும் மட்டும் நிறுத்தவில்லை. ஏற்கனவே வெற்றிகொண்ட பகுதிகளையும் விட்டுவிட்டு வெளியேறிவிட்டார்கள். (நூல்: அபூதாவூத் - 2761) 

வெற்றிகொள்ளப்பட்ட நகரங்களை எதிரிகளிடம் ஒப்படைத்து விட்டு நாட்டைவிட்டும் வெளியேறிவிட்டார்கள். உலக சரித்திரத்தில் எந்த மதத்தினரும் இப்படி வெற்றி கொண்ட நகரங்களையும் விட்டு வெளியேறியதை வேறெங்கும் காண முடியாது. (நூல்: ஹதீஸ் கே இஸ்லாஹி மஸாமீன் 9/183)
அபூ முஸ்லிம் அல்கௌலானீ (ரஹ்) அவர்கள் ஒரு தடவை முஆவியா (ரலி) அவர்களிடம் வந்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹல் அஜீர் - வேலைக்காரரே! என்று அழைத்து ஸலாம் சொன்னார்கள். மக்களெல்லாம் அபூமுஸ்லிமிடம் வேலைக்காரர், என்ற சொல்லாதீர்கள். அமீர், என்று சொல்லுங்கள், என்று எச்சரிக்கை செய்தனர். எனினும், முஆவியா (ரலி) அவர்கள், அவரை விடுங்கள். அவர் சொல்வதைப் பற்றி அவர் மிக அறிந்தவர் தான், என்று கூறி தொடர்ந்து பேச அனுமதித்தார்கள். அபூமுஸ்லிம் கௌலானீ அவர்கள் முஆவியா (ரலி) அவர்களைப் பார்த்து, ஒருவர் ஒரு வேலையாளிடம் தன்னுடைய ஆடுகளை ஒப்படைத்து அவற்றை நல்ல முறையில் மேய்த்து அபரிமிதமான லாபத்தைக் கொண்டுவந்தால் அவருக்கு நற்கூலி கிடைக்கும். 

இல்லையானால் முதலாளி மிகுந்த கோபத்திற்குள்ளாகி விடுவார். நீங்களும் இப்படிப்பட்ட ஒரு கூலிக்காரரைப் போலத்தான், என்று (சற்று விரிவாகக்) கூறி தங்களுடைய உரையை முடித்தார்கள். இதைக் கேட்ட முஆவியா (ரலி) அவர்கள் கோபப்பட வில்லை. மாற்றமாக அபூமுஸ்லிம் அல்கௌலானியைப் புகழ்ந்தார்கள். (நூல்: ஸியரு அஃலாமிந் நுபலா, முக்தஸரு தாரிகி திமஷ்க்)

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒரு பக்கம் முஆவியா (ரலி) அவர்களின் மார்க்கப்பற்றும் நபிப்பற்றும் விளங்குகிறது, என்றால் மற்றொரு பக்கம் ஆட்சியாளர்களிம் சுதந்திரமாக சத்தியத்தை எடுத்துச் சொல்லக்கூடிய தைரியத்தை மார்க்க அறிஞர்கள் பெற்றிருந்தார்கள், என்பதையும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு முழுமையான கருத்து சுதந்திரத்தை வழங்கியிருந்தார்கள், என்பதையும் விளங்க முடிகிறது. 

இது போன்ற பல நிகழ்வுகளை இஸ்லாமிய அரசியல் சரித்திரம் நெடுகிலும் காண முடியும்.  இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் தாதாரியினரை எதிர்த்து தாக்க அரசிடம் வசதியில்லாத போது மன்னர் வரிவிதிப்பது பற்றி உலமாக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இஸ்ஸுத்தீன் (ரஹ்) அவர்கள், தாராளமாக வரி விதிக்கலாம். 

ஆனால் பைத்துல்மால் காலியாக இருக்க வேண்டும், என்பது மட்டுமல்ல. உங்களிடம் முடங்கிக் கிடக்கும் விலையுயர்ந்த பொருட்களை விற்றுவிடுங்கள். அதன்பிறகு மக்களிடம் வரி வசூலிப்பது பற்றி பேசுங்கள், இராணுவ வீரர்களிடம் ஏகப்பட்ட செல்வங்களும் பெருமைப் படத்தக்க கருவிகளும் இருக்கும் போது பொதுமக்களிடம் வரிவிதிக்கக் கூடாது, என்று உறுதியாகக் கூறிவிட்டார்கள். இமாம் நவவீ (ரஹ்) அவர்களும் இவ்வாறே கூறினார்கள். மன்னர்களிடம் ஆயிரக்கணக்கில் அடிமைகள் இருக்கின்றனர். தங்க நகை, தங்க ஆடை என கோடிக்கணக்கில் செல்வம், ஆளும் வர்க்கத்திடம் தேங்கிக் கிடக்கும் வரை மக்கள் மீது வரி விதிக்கும் ஃபத்வா - சட்டத்தில் கையெழுத்திட மாட்டேன், என்று கையை விரித்துவிட்டார்கள். (நூல்: ஃபிக்ஹுஜ் ஜகாத்)
இதைப் படித்துவிட்டு இன்றைய ஆட்சியாளர்களையும் நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். 

No comments:

Post a Comment