Monday, 9 October 2017

சந்திர (ஹிஜ்ரீ) வருடக் கணக்கில் நாம் சிந்திக்க மறந்தவை





ஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டு முடிந்து 1439 ஆண்டு துவங்கும் தருணம் இது. மார்க்க ரீதியான காரியங்களில் நம்முடைய காலண்டர் எந்த அடிப்படையில் அமைய வேண்டும்? என்பதை மார்க்கம் தெளிவு படுத்தியிருந்தாலும் பொதுவாக மக்களிடம அது தொடர்பான விழிப்புணர்வு மிகமிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். இன்று ஆங்கிலேய மாதங்கள் (சூரியக்கணக்கு) தான் நம்முடைய நடைமுறையில உள்ளன. ஆனால், ஷரீஅத்தில் காலம் தொடர்பான எல்லா சட்டங்களிலும் சந்திர (ஹிஜ்ரீ) ஆண்டையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் காலம் முதல் இதுவே நடைமுறை.

ஆரம்பக் காலங்களில் உலக நடைமுறையிலும் சந்திரனின் தோற்றத்தைப் பொறுத்தே ஆண்டு கணக்கிடப்பட்டது. இன்று வரை நம்முடைய சகோதர சமயத்தவர்கள் தீபாவளி கொண்டாடும் நாளைக் கவனித்தால் இதை நன்கு விளங்கிக் கொள்ள முடியும். ஒவ்வொரு ஐப்பசி மாதத்திலும் வரக்கூடிய அமாவாசை தினமே தீபாவளியாகக் கொண்டாடப்படும். அமாவாசை என்பது சந்திரனோடு தொடர்புள்ளது, என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. முதன் முதலில் 365 நாட்களைக் கொண்ட காலண்டர் ஆண்டு கி.மு. 4236 -ம் ஆண்டில் பழக்கத்திற்கு வந்தது. எனவே சந்திரனை வைத்துக் கணக்கிடுவதே இயற்கையானது. அடிவோ என்ற வார்த்தையும் கூட அடிடி என்ற சொல்லிலிருந்து வந்தது தான்.

இந்த இயற்கையான எளிதான வருடத்தையே மார்க்கமும் தேர்ந்தெடுக்கிறது. அல்லாஹ் குர்ஆனில், (தேய்ந்து வளரும் இந்த) பிறைகள் பற்றி (நபியே) உம்மிடம் கேட்கிறார்கள். அவை மக்களுக்குக் காலங்காட்டியாகவும் ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன, என்று நீர் கூறும்...., என்று கூறுகிறான். (அல்குர்ஆன் - 2: 189)

நோன்பு, பெருநாள், ஜகாத், ஹஜ், இத்தா, கர்ப்ப காலம் போன்ற காலம் தொடர்பான அனைத்து மார்க்கச் சட்டங்களுக்கும் சந்திர மாதம் மற்றும் வருடம் தான் அடிப்படையாகக் கொள்ளப்பட  வேண்டும். தலைப்பிறை மூலம் தான் சந்திர மாதத்தின் துவக்கம் உறுதி செய்யப்பட வேண்டும். ரமளானுடைய ஆரம்பமும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாளும் (பிறை பார்த்து) சந்திர மாதத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்யப் படவேண்டும். அரஃபாவில் தங்குவது கல்லெறிதல், தவாஃப் ஸயீ போன்ற ஹஜ்ஜின் அமல்களைச் சரியாக நிறைவேற்றுவதற்கும் பிறைபார்த்து மாத ஆரம்பத்தை துல்லியமாக முடிவு செய்வது கட்டாயமாக இருக்கிறது.

ஜகாத் ஆண்டு:
ஆண்டுக்கு ஒருமுறை ஜகாத் என்பது ஆங்கில மாதத்தின் அடிப்படையிலல்ல. சந்திர மாதத்தின் அடிப்படையில் தான் நிறைவேற்ற வேண்டும். அப்படி யாராவது தொடர்ந்து ஆங்கில மாதத்தின் அடிப்படையில் கொடுத்து வந்தால் 32 வருடங்களுக்குப் பிறகு ஒரு வருடம் ஜகாத் கொடுக்காத குற்றத்திற்கு ஆளாக நேரிடும். ஏனெனில் 32 சூரிய ஆண்டுகள் முடிந்தால் 33 சந்திர ஆண்டுகள் முடிந்திருக்கும்.

வயதுக்கு வருதல்:
மார்க்கத்தின் பார்வையில் பதினைந்து வயதாகி விட்டால் அவரின் மீது தொழுகை, நோன்பு, ஹஜ் உட்பட மார்க்கத்தின் அனைத்துக் கடமைகளும் கட்டாயமாகிவிடும். அவர் வயதுக்கு வந்தவராகக் கருதப்படுவார். அந்த பதினைந்து வயது என்பதும் சூரிய ஆண்டின் கணக்கில் அல்ல, சந்திர ஆண்டின் படிதான் கணக்கிட வேண்டும்.

இதன்படி ஆங்கில வருடத்தின் பதினைந்து ஆண்டுகள் முடிவதற்கு 165 நாட்களுக்கு (ஐந்தரை மாதங்களுக்கு) முன்பாக சந்திர ஆண்டின் படி பதினைந்து வயதாகிவிடும். சந்திர ஆண்டின் படி பதினைந்து வயதாகி விட்டால் (அதாவது சூரிய ஆண்டின் பதினைந்து வருடம் முடிவதற்கு ஐந்தரை மாதங்களுக்கு முன்பாக) தொழுகை போன்ற கடமைகள் கடமையாகிவிடும், என்பதை நன்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மார்க்க விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படவேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை அனைத்துத் தரப்பு மக்களும் விளங்கவும் வேண்டும். அதற்கான செயல்பாட்டில் இறங்கவும் வேண்டும். செவிலித் தாய்மார்களிடம் குழந்தைகளை பால் குடிப்பாட்டுவதற்காக கொடுக்கும் போது இரண்டு வயதுக்குள் குழந்தை பால்குடித்தால் அந்தத் தாயுடன் பால்குடி உறவு ஏற்படும். அந்த உறவுக்காரர்களுடன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது, என்ற சட்டம் அமுலுக்கு வரும். இந்த இரண்டு வயது என்பதும் சந்திர மாதங்களின் அடிப்படையில் தான் கணக்கிட வேண்டும்.

ஏழு வயதாகிவிட்டால் பிள்ளைகளை தொழுமாறு ஏவுங்கள். பத்து வயதாகி விட்டால் அடித்துத் தொழச் செய்யுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த வயதுக் கணக்கும் சந்திர மாதங்களின் அடிப்படையில் தான் கணக்கிட வேண்டும். சந்திர வருடத்தின் ஏழு வயது என்பது சூரிய வருடத்தின் ஏழு வயதை விட 77 நாட்கள் குறைவாகும்.

பிறந்தநாள் யாருக்குத் தான் தெரியும்?:
பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதே மார்க்கத்தில் சொல்லப்படாத ஒன்று. அதையும் கூட 11 நாட்கள் தாமதமாக முடியும், சூரியஆண்டின் கணக்கின் படி தான் கொண்டாடுகின்றனர். சந்திர ஆண்டு சூரிய ஆண்டை விட 11 நாட்களுக்கு முன்பாகவே முடிந்துவிடும். தங்களுடைய குழந்தைக்கு ஒர் ஆண்டு  பூர்த்தியாகி 11 நாட்களுக்குப் பிறகு தான் ஒரு வயது நிறைவடைந்ததாக பெற்றோர்கள் கருதிக் கொண்டிருக்கின்றனர். இன்று (மார்க்கத்தில் இல்லாத) பிறந்த நாளைக் கொண்டாடும் எத்தனை பேருக்கு தங்களுடைய பிறந்த நாளை சந்திர ஆண்டின் கணக்கின்படி சரியாகச் சொல்லத் தெரியும்?!


இத்தாவுடைய காலம்:
கணவர் மரணித்து விட்டால் நான்கு மாதமும் பத்து நாட்களும் இத்தா இருக்க வேண்டும், என்று குர்ஆன் உத்தரவிட்டுள்ளது. இந்த இத்தாவுடைய காலம் சந்திர மாதத்தைக் கொண்டே கணக்கிட வேண்டும். கணவர் தலாக் கொடுத்து மனைவி மாதவிடாய் வராத அளவுக்கு வயது முதிர்ச்சி அடைந்து விட்டால் மூன்று மாதங்கள் இத்தா இருக்கா வேண்டும். இந்த மாதமும் சந்திர மாதத்தை அடிப்டையாக வைத்தே கணக்கிட வேண்டும். இத்தாவுடைய கால அளவை நன்கு கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்!, என்று குர்ஆன் உத்தரவிடுவதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

கர்ப்ப காலம்:
குறைந்த பட்ச கர்ப்ப காலம் ஆறு மாதங்கள், என்று இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் கூறுவார்கள். இதையும் சந்திர மாதத்தைக் கொண்டே கணக்கிட வேண்டும். இந்த கர்ப்ப காலத்துடன்  வாரிசுரிமைச் சட்டங்களும் குழந்தையின் வமிசத் தொடர்பு உறுதிப்படுத்தப் படவேண்டியதும் சம்பந்தப் படுவதால் அந்தக் காலத்தை துல்லியமாக கணக்கிடுவதின் முக்கியத்துவம் மேலும் அதிகமாகி விடுகிறது.  தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு இரண்டு வருடம் பால் குடிப்பாட்ட வேண்டுமென்று குர்ஆன் கூறுகிறது. அவ்விரண்டு வருடமும் சந்திர வருடத்தை அடிப்படையாகக் கொண்டதே! சந்திர மாதத்துடன் இதுபோன்ற இன்னும் அதிகமான சட்டங்கள் தொடர்பு கொண்டிருப்பதால் அந்த மாதத்தைச் சரியாக கணக்கிடுவதும் பிறை பார்ப்பதும் எவ்வளவு முக்கியமானது? என்பதையும் மனதில் பதிய வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
தலைப்பிறை பார்ப்பது எளிது!

ஷரீஅத்துடைய பல சட்டங்கள் காலத்தோடு சம்மந்தப்படுகின்றன, அவற்றில் சந்திரனின் கணக்குப்படியே கணக்கிட வேண்டும். அப்படியானால் ஒவ்வொரு மாதமும் தலைப்பிறை பார்ப்பதில் அதிக முக்கித்துவம் காட்ட வேண்டுமென்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ரமளான், இரு பெருநாட்கள் ஆகிய சமயத்தில் மட்டுமே தலைப்பிறை பற்றி பரவலாகப் பேசப்படுகிறது. மற்ற மாதங்களில் அதுபற்றி யாரும் கண்டு கொள்வதில்லை.

பல தடவை இலங்கையில் நமக்கு ஒரு நாள் முன்பாக பிறை பார்க்கப்பட்டு பெருநாளும் நோன்பும் அனுஷ்டிக்கப் பட்டிருகிறது. தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இக்காலத்தில் பெரும்பாலும் மக்ரிப் தொழுகை முடிந்தவுடன் அங்கிருந்து பிறை பார்க்கப்பட்ட தகவல் வந்து விடுகிறது.  இலங்கை நமக்கு கிழக்கே இருக்கும் நாடாகும். கிழக்குப் பகுதியில் பிறை தென்பட்டால் மேற்குப் பகுதியில் இருப்பவர்கள் ஏற்று அமல் செய்ய வேண்டுமென்று நம்முடைய (ஷாஃபியீ) ஃபிக்ஹ் (சட்ட) நூற்களில் கூறப்பட்டுள்ளது.

ஏனெனில், கிழக்கில் பிறை பார்க்கப்பட்டால் மேற்கில் கண்டிப்பாக பிறை தென்பட்டிருக்க வேண்டுமென்பதே இயல்பு. இலங்கையில் ஒவ்வொரு மாதமும் கரையோரப் பகுதிகள் உட்பட நாட்டின் பல பாகங்களில்  பிறை பார்ப்பதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப் படுகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளும் நினைவூட்டல்களும் அறிவிப்புகளும் ஒவ்வொரு மாதமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிறை பார்க்கப்பட வேண்டிய நாளில் அதற்கான விசேஷ அறிவிப்புகள் சமூக வலைதளங்கள் மூலம் செய்யப்படுகின்றன.

பிறை தென்படாமல் போவதற்கு மேகமூட்டம் ஒன்று மட்டுமே காரணமாக இருந்தால் அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதே சமயம், நம்முடைய பகுதிகளில் பிறை பார்ப்பதில் மக்கள் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார்கள்? என்பதையும் யோசிக்க வேண்டும். அவ்வாறே ஒவ்வொரு மாதத்திலும் பிறை பார்ப்பதில் முக்கியத்துவம் காட்டப்படுகிறதா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.    

பொதுவாக (ரமளான், ஷவ்வால், துல்ஹஜ் ஆகிய மாதங்களில் மட்டும்) தலைப்பிறை பற்றி முடிவு செய்யும் போது நமக்கு அறிமுகமானவர்களிடம் போன் செய்து பிறைத் தகவல் பற்றி கேட்கிறோம். மற்றவர்களும் நம்மிடம் கேட்கிறார்கள். இதில் கேட்கப்படுபவர்கள் யாரும் பிறை பார்ப்தற்கான பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டவர்கள் அல்ல. ஏதாவது தகவல் வந்தால் அதன்படி முடிவு செய்து விடுகிறோம். ஒவ்வொரு ஊரிலும் குறிப்பாக கிராமங்களில் பிறை பார்ப்பதற்கான குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். நகரத்தை விட கிராமங்களில் புகை, தூசி குறைவு என்பதால் பிறை தென்படுவதற்கான வாய்ப்பு அங்கு அதிகமாக இருக்கும். எனவே கிராமப் பகுதிகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கட்டிடம், மரம் போன்ற எந்தத் தடையும் இல்லாத இடத்திலிருந்து பார்க்க வேண்டும். சந்திரன் எந்த நேரத்தில் மறையும், என்பது வினாடி உட்பட துல்லியமாக கணிதத்தின் மூலம் இன்று அறிந்து கொள்ள முடியும். நவீன வசதி கொண்ட மொபைல் போன்களில் (sunmooncal போன்ற) அதற்குரிய மென்பொருளை இன்ஸ்டால் செய்து அதன் மூலமே இதை அறிந்து கொள்ளலாம். அந்தந்த மாதத்தில் (வடமேற்கு, தென்மேற்கு, நேர்மேற்கு போன்ற) பிறை (மறையும் இடத்தையும்) தெரியும் இடத்தையும் முன்னரே அறிந்து கொள்ள வேண்டும். சந்திரன் மறையும் நேரம் வரை (குறிப்பாக பிறை தெரியும் இடத்தை) தொடர்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில் விண்ணில் இடையிடையேயுள்ள மேகம், தூசி போன்ற தடைகளால் வானம் தெளிவாக இருக்கும் ஒரு சிறிய இடத்தில் எந்த வினாடியும் பிறை தெரிந்து பிறகு மீண்டும் அடுத்திருக்கும் மேகத்திற்குள் சென்றுவிடலாம்.

இதற்கு முன்பு, குறிப்பிட்ட குறுகிய நேரத்தில் பிறை தெரிந்து விட்டு, பிறகு மேகத்தில் மறைந்த காட்சிகளை நாம் நேரடியாகவே கண்டிருக்கிறோம். ஆனால், இன்று நாம் பாங்கு சொல்லி மக்ரிப் தொழுது முடித்துவிட்டு அதற்குப் பிறகு சுன்னத்தும் தொழுது முடித்த பிறகு தான் பிறை பார்க்க முற்படுகிறோம். பிறை தெரியும் நேரத்தை இடத்தை அறிந்து பார்ப்பதை விடுத்த நாம் பார்கக வேண்டிய நேரத்திலும் நாம் பார்க்கும் திசையிலும் பிறை தெரிய வேண்டுமென்று நினைக்கிறோம். ஒவ்வொரு மாதமும் பெருநகரங்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பாக மேற்குக் கரையோரங்களில் - கடற்கரைப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் பிறை பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் முன்னரே சென்று அதிமுக்கியத்துவம் கொடுத்து பிறை தென்படும் இடத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இப்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் பிறைபார்த்து அதற்கான தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் போது (தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில்) பரவலாக ஏற்படும் பிறைக் குழப்பத்தை ஓரளவு தவிர்த்துக் கொள்ள முடியும். ஆனால், நடைமுறையில் கடற்கரைப் பகுதிகளில் சென்று ஒவ்வொரு மாதமும் பிறை பார்ப்பதில் அதிக கவனம் செலுத்தப் படுவதில்லை. ஏன்? இருந்த இடத்தில் இருந்து கொண்டு கூட அதில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவு, என்றே சொல்ல வேண்டும். வானத்தில் பார்க்கப்பட வேண்டிய பிறையை நாம் வாட்ஸப்பில் தேடிக்கொண்டிருக்கிறோம், என்பதே நடப்பு உண்மை.

கடந்த (1438) துல்கஃதா மாதம் தமிழகத்தில் பரவலாக பிறை தென்படவில்லை, என்ற தகவலே வந்தது. என்று சொல்வதை விட பிறை தெரிந்தது, என்றோ தெரியவில்லை என்றோ அது தொடர்பான எந்தத் தகவலும் வரவில்லை. ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு பேர் தலைப்பிறை பார்ப்பதற்கு முயற்சி செய்தார்கள், என்பது தெரியவில்லை. ஆனால், துல்கஃதா மாதத்தின் தலைப்பிறை பார்க்கப்பட வேண்டிய நாளான ஜூலை மாதம் 24 ஆம் தேதி திண்டுக்கல்லில் சூரியன் மறைவு 6 மணி 43 நிமிடங்களாகும். அன்று சந்திரன் மறைவு 7 மணி 40 நிமிடங்களாகும். சூரியன் மறைவுக்கும் சந்திரன் மறைவுக்கும் மத்தியில் ஏறத்தாழ ஒரு மணி நேரம் வித்தியாசம் இருந்துள்ளது. தமிழகத்தின் மற்ற ஊர்களில் ஒரு சில நிமிடங்கள் வித்தியாசமிருக்கும்.

 பிறை தெரிவதற்கான வாய்ப்பு மிகத் தெளிவாக இருந்தும் பரவலாக தமிழகத்தில் பிறை பார்க்கப்பட வில்லை. ளரஅடிடிஉயட  என்ற மென்பொருளிலும் பிறை புறக்கண்ணுக்கு எளிதாக தென்படும் என்ற தகவலே கொடுக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் அன்று திண்டுக்கல்லில் மக்ரிப் தொழுகை முடிந்த பின் வானம் தெளிவாக இருந்தது. பிறையும் மிகத் தெளிவாகத் தெரிந்தது. பிறை பார்த்தவர் திண்டுக்கல்லில் மற்றொருவருக்கும் அதே நேரத்தில் போன் மூலம் தகவல் கொடுத்து குறிப்பிட்ட இடத்தில் பிறை பார்க்குமாறு கூறியதை அடுத்தும் அவரும் அவ்விடத்தில் இருந்த வேறு சிலரும் துல்கஃத் தலைப்பிறையைத் தெளிவாக பார்த்துள்ளனர். அதன் பிறகு காரைக்காலிலும் (பாண்டிச்சேரி) பிறை பார்த்ததாக தகவல் கிடைத்தது. அதன் படி 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை துல்கஃதா பிறை ஒன்று என தமிழ்நாட்டில் மட்டுமல்ல. வடநாட்டிலும் அறிவிக்கப்பட்டது.

இந்தியா முழுவதற்கும் திண்டுக்கல்லில் பார்க்கப்பட்ட பிறை மூலமே முடிவு செய்யப்பட்டது, என்பதும் ஓர் அரிய செய்தி. ஏனில், தாருல் உலூம் தேவ்பந்த் - தாருல் இஃப்தாவிலிருந்து பிறை பார்த்தவரை போனில் அழைத்து பிறைத் தகவலை உறுதிப் படுத்திக் கொண்டார்கள்.  திண்டுக்கல்லிலும் கூட சிறிது நேரம் மறதியாக இருந்துவிட்டால் அந்தப் பிறை பார்க்கப் படாமல் போயிருக்கலாம். அந்த அளவுக்கு மிக மெல்லியதாகவும் அதுவும் அடிவானத்தில் தெரிந்தது. பரவலாக தமிழகத்தின் கிராமங்கள் உட்பட பல ஊர்களில் அன்று பிறை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் கண்டிப்பாக தமிழகத்தின் ஏராளாமான இடங்களில் பிறை தெரிந்திருக்கும், இன்ஷாஅல்லாஹ். ஒரு மாதத்தில் நிகழும் அலட்சியம் அடுத்தடுத்த மாதங்களிலும் பிரதிபலிப்பை ஏற்படுத்திவிடும், என்பதை யார் தான் மறுக்க முடியும்?!

Night sky tools
நைட் ஸ்கை டூல்ஸ் என்ற மென்பொருளை உங்களுடைய மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டால் அதன் மூலம் பிறையை எந்தத் திசையில் பார்க்க வேண்டும், என்பதை துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும்.  நீங்கள் மொத்த வானிலும் பிறையை சிரமப்பட்டுத் தேட வேண்டியதில்லை. பிறை இந்த இடத்தில் இருக்கிறது, என்பதை மிகத் துல்லியமாக இந்த மென்பொருள் காட்டும்.
இந்த மென்பொருளில் உள்ளே சென்று ஜெனரல் - செலக்ட் செய்து ஸ்கை மேப் என்பதை அழுத்தினால் நான்கு சுவர்களுக்குள்ளே இருட்டறையில் உட்கார்ந்து கொண்டு மொத்த வானத்தையும் மொபைல் திரையில் பார்க்கலாம். சூரியன் உச்சத்தில் இருக்கும் போது உங்களுடைய அறைக்குள்ளே  இருந்தவாறு மொபைலை தலைக்கு மேல் வானத்தை நோக்கிக் காட்டினால் மொபைல் ஸ்கிரீனில் வானில் இருக்கும் சூரியன் தெளிவாகத் தெரியும். சூரியன் மட்டுமல்ல. நீங்கள் மொபைலை எந்தத் திசையில் வானத்தை நோக்கி காட்டுகிறீர்களோ அந்தத் திசையில் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் எதுவெல்லாம் இருக்கிறதோ அனைத்தையும் காட்டிவிடும்.

போனை உங்கள் மூடிய அறைக்குள் இருந்து கொண்டே வானை நோக்கிக் கட்டினால் போதும். நீங்கள் காமெராவில் போட்டோ எடுப்பது போன்று வானில் இருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களும், கோள்களும், ராசிகளும் அவற்றின் பெயர்களுடன் உங்கள் போனின் திரையில் தெரியும்.  தலைப்பிறை பார்க்கும் நாளில் சூரியன் மறைந்த பிறகு உங்கள் போனில் உள்ள நைட்ஸ்கை டூல்ஸ்  - ஜெனரல் - ஸ்கை மேப்பை ஓப்பன் செய்து மேற்கு வானத்தை நோக்கிக் காட்டினால் அடிவானத்திற்குக் கீழே மறைந்த சூரியனையும் காட்டும். அதற்கு மேல்பகுதியில் தலைப்பிறை எந்த இடத்தில் இருக்கிறது, என்பதையும் காட்டும்.

போனை விலக்கி விட்டு வானத்தில் அந்த இடத்தில் பிறையைத் தேடிக் கொள்ளலாம். வானம் முழுவதும் அலச வேண்டிய தேவையில்லை. பிறை நேர் மேற்கில் தெரியுமா? அல்லது மேற்கிலிருந்து தெற்காக சாய்ந்து தென்மேற்கில் தெரியுமா? அல்லது மேற்கிலிருந்து வடக்காகச் சாய்ந்து வடமேற்கில் தெரியுமா? என்பதையும் இந்த மென்பொருள் தெளிவாகக் காட்டிவிடும்.

குறிப்பு: இந்த மென்பொருள் உங்கள் மொபைலில் இயங்குவதற்கு accelerometer வசதி மட்டும் இருந்தால் போதாது. உங்களுடையடைய மொபைலில் காம்பஸ் சென்ஸார் வசதி இருக்க வேண்டும். அந்த வசதி இல்லையானால் இந்த மென்பொருளைப் பயன்படுத்த முடியாது. கிப்லா காட்டி தொடர்பான எந்த மென்பொருளும் இயங்காது. உங்கள் மொபைலில் கிப்லா காம்பஸ் செயல்பட்டால் இந்த மென்பொருளும் இயங்கும்.

No comments:

Post a Comment