சமீப காலமாக மியான்மர் சர்வதேச அளவில் அதிகம் பேசப்படும் நாடாக மாறியுள்ளது. அந்நாட்டில்
வாழும் ரோஹிங்யா முஸ்லிம்கள் கொடூரத்திலும் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்படும்
செய்தி ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் பார்வையையும் பர்மாவை நோக்கி திரும்பச் செய்திருக்கிறது.
இப்படிப்படட சூழலில் பர்மாவில் முஸ்லிம்களின் வரலாறு என்ன?
அவர்கள்
அங்கு எவ்வளவு காலமாக தங்கியிருக்கிறார்கள்? அவர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்? இன்று வரை அவர்களுடைய உண்மையான நிலை என்ன? என்பது பற்றி நாம் அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பர்மாவின் இருப்பிடம்
பர்மா எனும் மியான்மர் ஒரு தென்கிழக்காசிய நாடாகும். பர்மாவின் பெரும்பகுதி கடலோரத்தோடு
சேர்ந்திருக்கிறது. பர்மாவின் தென்கிழக்கில் தாய்லாந்தும் கிழக்கில் லாவோஸும் வடகிழக்கில்
சீனாவும் வடமேற்கில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களும்
மேற்கில் பங்களாதேஷும் உள்ளன. கடைசி மொகலாய மன்னர் பகதூர் ஷா, ஆங்கிலேயனை எதிர்த்து போரிட்டதின் காரணமாக 1858 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அவரை ஆயுளுக்கும் பர்மாவில் உள்ள ரங்கூன்
நகருக்கு நாடு கடத்தி விட்டனர். நான்கு வருடங்களுக்குப் பிறகு 1862 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி அங்கேயே
அவர் மரணித்துவிட்டார்.
மியான்மர் முஸ்லிம்களின் எண்ணிக்கை
பர்மாவின் மக்கள் தொகை 2014 ஆம் ஆண்டின் கணக்குப்படி
ஐந்து கோடியைவிடவும் சிறிது அதிகம். 80 சதவீதத்தினர் பௌத்தர்கள்.
மற்றவர்கள் கிருத்தவர்கள், முஸ்லிம்கள் மற்ற சிறுபான்மையினர்களும்
உள்ளளர். அரசாஙக கணக்கின்படி முஸ்லிம்கள் 5 சதவீதம் என்று சொல்லப்பட்டாலும்
முஸ்லிம்களின் எண்ணிக்கை அதைவிடவும் அதிகமாகவே இருக்கும். ஒரு கணிப்பின்படி மொத்தமுள்ள
ஐந்து கோடி மக்கள் தொகையில் 50 லட்சத்திலிருந்து 80 லட்சம் வரை முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களில் ஒரு பெருந்தொகையினர்
பௌத்தர்களின் வன்முறைத் தாக்குதலுக்கானதின் காரணமாக இந்தியா, பங்களாதேஷ், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.
சமீபத்திய கொடூரரத் தாக்குதலின் போது கூட மூன்று லட்சம் முஸ்லிம்கள் வங்கதேசத்தில்
தஞ்சம் புகுந்துள்ளனர்.
அராகான் எனும் ராக்கைன் மாகாணம்
பர்மாவும் இந்தியாவைப் போன்று ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. 1937 ஆம் ஆண்டு பகுதி சுதந்திரம் கிடைத்தது. 1948 ஆம் ஆண்டு முழுமையான சுதந்திரம் அடைந்தது. எனினும், சிறுபான்மையினர்களைப் பொறுத்தவரை இன்றுவரை சுதந்திரம் பெறவில்லை, என்றே சொல்ல வேண்டும்.
இந்நாட்டின் பழைய பெயர் பர்மா. பின்னர், மியான்மர் என்று
பெயர் மாற்றம் செய்யப் பட்டது. இந்தப்பெயரை இன்று வரை சில நாடுகள் அங்கீகரிக்கவில்லை.
வங்க தேசத்தின் எல்லையை ஒட்டிய மியான்மரின் கடலோரத்தில் அராகான் (ராக்கீன்) என்றொரு
மகாணம் உள்ளது. அங்குதான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அராகனுடைய வடக்கு
எல்லை வங்கதேசத்துடன் இணைகிறது.
பர்மாவில் இஸ்லாம் வந்த வரலாறு
கி.பி. 763 ஆம் ஆண்டு முதல் 809 ஆம் ஆண்டு வரை அப்பாஸிய்யா
குடும்பத்தைச் சார்ந்த கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் இஸ்லாமிய உலகை ஆட்சி செய்தார்கள்.
அந்த ஆட்சி காலத்தில் (ஏறத்தாழ இன்றிலிருந்து 1200 ஆண்டுகளுக்கு முன்பே)
அராகான் மாநிலத்தில் இஸ்லாம் பரவியது. பர்மாவில் இஸ்லாமியர்கள் எந்த ராணுவ நடவடிக்கையும்
மேற்கொள்ள வில்லை. அரேபிய முஸ்லிம் வியாபாரிகள் கடல் மார்க்கமாக அராகான் பகுதிக்கு
வந்தனர். தங்களுடைய வியாபாரச் சரக்குகளுடன் முன்மாதிரி இஸ்லாமிய நற்குணங்களையும் செயல்ரீதியாக
எடுத்து வந்தனர். அந்த வியாபாரிகளின் இஸ்லாமிய நற்குணங்களைப் பார்த்து அவர்களுக்கு
இஸ்லாத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. தங்களுக்கு அந்த அழகிய நல்வாழ்க்கை கிடைக்க வேண்டுமென்ற
பேரார்வத்தில் அந்த மக்கள் மனமுவந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அங்கு ஏராளமான மஸ்ஜிதுகள்
கட்டப்பட்டன.
பர்மாவில் முஸ்லிம்களின் ஆட்சி
பின்னர் வங்கதேசத்தின் உதவியுடன் கி.பி. 1430 ஆம் ஆண்டு முதல்
அராகான் மாநிலத்தில் இஸ்லாமிய ஆட்சி நடைபெற்றது. 1430 முதல் 1784 ஆம் ஆண்டு வரை 354 ஆண்டுகளில் 48 முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்தனர். 1784 ஆம் ஆண்டு பௌத்த மதத்தைச் சார்ந்த பர்மிய மன்னர் அநியாயாமாக
அராகானை கையகப் படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் முஸ்லிம்களின் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து
விட்டனர். மஸ்ஜித்கள், மதரஸாக்கள், இஸ்லாமிய நூலகங்கள் என ஒவ்வொரு இஸ்லாமியச் சின்னத்தையும் சிதைத்தனர்.
அதுமட்டுமல்ல. முஸ்லிம்களின் மீது தீவிரவாதத் தாக்குதல் தொடுத்து அவர்களை கொன்று குவித்தனர்.
புத்தமத ஆலயங்களைக் கட்டி முஸ்லிம்களையும் புத்த மத வழிபாட்டில் நிர்பந்தமாக பங்கெடுக்கச்
செய்தனர். இதனால் முஸ்லிம்கள் தங்களுடைய உயிரையும் ஈமான் எனும் இறைநம்பிக்கையையும்
தற்காத்துக் கொண்டு பர்மாவை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். (இன்றும் அது தான் நடந்து
கொண்டிருக்கிறது.)
பர்மிய முஸ்லிம்கள் மீதான வன்முறை வரலாறு
முஸ்லிம்களின் மீதான இந்த அடக்குமுறைத் தாக்குதலை நாற்பது வருடங்களாக கட்டவிழ்த்து
விட்டது, பௌத்த அரசு. அக்காலத்தில் அவர்கள் இழைத்த கொடுமைகளையும் கொடூரத்தையும்
இந்த வானமும் பூமியும் அது வரை பார்த்திருக்க முடியாது, என்கிற அளவுக்கு
கொடுமைப் படுத்தினார்கள். (அக்காலத்தில் இன்றிருப்பது போல் சமூக வலைதளங்கள் இல்லாததால்
அங்கு நடக்கும் கொடுமைகள் வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கப் பட்டுவிட்டன.)
நாற்பது வருடங்களுக்குப் பிறகு 1824 ஆம் ஆண்டு அராகான்
உட்பட முழு பர்மாவையும் பிரிட்டானிய அரசு தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. அப்பொழுதும் பௌத்தர்கள் முஸ்லிம்களுடன் வெறுப்புணர்வு
கொண்டே இருந்தனர். 1947 ஆம் ஆண்டு பர்மாவின் பல்வேறுபட்ட
பிரிவினரைச் சார்ந்தவர்களையும் அழைத்து ஒரு மாநாட்டை பௌத்தர்கள் நடத்தினர். ஆனால், அதில் கலந்து கொள்வதற்காக முஸ்லிம் பிரதிநிதிகள் யாருக்கும்
அழைப்பு கொடுக்கமால் தன்னுடைய விரோதத்தையே வெளிப்படுத்தியது.
1948 ஆம் ஆண்டு பர்மாவுக்கு ஆங்கிலேயனிடமிருந்து
சுதந்திரம் கிடைத்தாலும் அராகான் முஸ்லிம்களுக்கு பௌத்தர்களிடமிருந்து சுதந்திரம் கிடைக்கவில்லை.
முஸ்லிம்களின் மீதான அடக்குமுறை இன்று வரை தொடர்கிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற
ஆங் சான் சூச்சீ பர்மாவின் ஆட்சித் தலைவரான பிறகும் பலகீனமான முஸ்லிம்களின் மீதான கொடூரமான
படுகொலைகள் தொடர்ந்த வண்ண்மாகவே இருக்கிறது. பௌத்தர்கள் இன்று வரை சர்வதேச சட்டங்களையும்
கருத்தில் கொள்வதில்லை. எவ்வித மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்வதில்லை. கொடூரமான மிருகத்தனத்தையே
வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் புரியும் கொடூரத்தனத்தை மிருகங்களும் கூட சகித்துக்
கொள்ள முடியாதது.
ஆனால், எப்பொழுதுமே முஸ்லிம்களை குறை கூறிக்கொண்டிருக்கும்
மீடியாக்களும் உலக நாடுகளும் இதைக் கண்டித்து எழுதவும் கருத்து கூறவும் முன்வருவதில்லை.
உலகிலேயே மிகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சமூகம் முஸ்லிம் சமுதாயம்தான். ஆனால், உலகம், அவர்களைத் தான் தீவிரவாதிகள்
என்று குற்றம் சாட்டுகிறது. காட்டுமிரண்டித்தனமான
பர்மியத் தாக்குதல் பற்றி அப்படிப்பட்ட வாசகங்கள் பயன்படுத்தப் படுவதில்லையே, ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை. இஸ்லாத்தின் உண்மைத்துவம்
வெளிப்பட்டு கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் மக்களைப் பார்த்து இஸ்லாத்தின்
வெற்றியைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்களோ என்னவோ?! 1948 ஆம் ஆண்டுக்குப்
பிறகிலிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள்
விதவைகளாகி விட்டனர். குழந்தைகள் அனாதைகளாகி விட்டனர்.
குர்பானிக்கு தடை
முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அநியாய அடக்குமுறை என்பது 1550 ஆண்டிலிருந்தே ஆரம்பித்து விட்டது. அச்சமயம் ஆட்சி செய்த னுஹலுஐசூகூசூஹருசூழுடீ என்ற அரசன் ஹஜ்ஜுப் பெருநாள், மற்றும் குர்பானி கொடுப்பதில் கட்டுப்பாடுகளை விதிததார். பிறகு
17 ஆம் நூற்றாண்டில் பர்மிய அரசர் முஸ்லிம்களின் முக்கியமான நான்கு
இமாம்களைப் பிடித்து கொலை செய்யுமாறு உத்தரவிட்டார். 1782 ஆம் ஆண்டு ஆட்சி
செய்த மன்னர் முஸ்லிம் உலமாக்களை பன்றி இறைச்சி சாப்பிடுமாறு நிர்பந்தித்தார். அப்படி
சாப்பிடாவிட்டால் மரண தண்டனை விதித்தார். இதன் மூலம் நிறைய உலமாக்களை கொலை செய்தார்.
மொகலாயர்களின் காலத்திற்குப் பிறகு பர்மாவில் வாழும் முஸ்லிம்களுக்கு ரோஹிங்கயா
முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான்
பர்மாவின் மீது தாக்குதல் தொடுத்த சமயம் பிரிட்டானிய
அரசு பர்மாவில் உள்ள முஸ்லிம்களை ஜப்பானுக்கு எதிராக ஆயுதம் தரிக்கச் செய்தது. இதில்
ஏறத்தாழ ஐந்தாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சுமார் 22 ஆயிரம் பேர் உயிர்
பிழைத்து வங்கதேசம் சென்றனர்.
1937 ஆம் ஆண்டு பர்மா பர்மியர்களுக்கு
மட்டுமே என்றொரு இயக்கத்தை ஆரம்பித்தனர். அச்சமயம் முஸ்லிம்களை படுகொலை செய்ய ஆரம்பித்தனர்.
அத்துடன் 13 பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டுவிட்டது. முஸ்லிம்கள்
உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஜெனரல் வின் ஜிப் ஆட்சிக்கு வந்தபோது பர்மீஸ் நேஷனலீஸ்
சடடத்தை நடைமுறைப்படுத்தி ரோஹிங்யா முஸ்லிம்களின் குடியுரிமையை ரத்து செய்துவிட்டார்.
திட்டமிடப்பட்ட சூழ்ச்சிகள்
1942 ஆம் ஆண்டு பௌத்தர்கள் முஸ்லிம்களுக்கு
எதிராக திட்டமிட்டு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தனர். 1942 ஆம் ஆண்டு மார்ச்
மாதம் முதல் ஜூன் மாதம் வரை மூன்று நாட்களில் மட்டும் ஒன்றரை லட்சம் முஸ்லிம்களை ஷஹிதாக்கினார்கள்.
பிறகு 1950 ஆம் ஆண்டில் மீண்டும் வன்முறை வெறியாட்டம் நடத்தி
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள். முஸ்லிம்களை வீட்டை விட்டும் வெளியேற்றினார்கள்.
1962 ஆண்டு பர்மாவில் இராணுவ
ஆட்சி அமைந்தது. பர்மிய ராணுவமும் அராகான் முஸ்லிம்களை பத்து வருடங்களாக கொடுமைப் படுத்தியது.
அச்சமயம் 20 லட்சம் முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஷஹிதாக்கப்பட்டனர். 1971 ஆம் ஆண்டு முதல்
1978 ஆம் ஆண்டு வரை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அராகான் பகுதிகளில்
புத்த பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி இங்கு வாழும் முஸ்லிம்களை வங்கதேசத்திற்கு
அனுப்பி விட வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். வங்கதேசமோ அவர்களை ஏற்க மறுத்துவிட்டது.
பௌத்தர்களும் இனஅழிப்புக்கான சந்தர்ப்பத்தை தேடிக் கொண்டிருந்தார்கள். மஸ்ஜிதை தரைமட்டமாக்கி
பர்மிய அரசு
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்த போது அவர்கள் புத்தருடைய சிலையை இடித்தனார்.
அச்சமயம் பர்மாவில் பௌத்தர்கள் முஸ்லிம்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டனர். தாங்கோ
நகரில் இருந்த பழமை வாய்ந்த பள்ளிவாசலை இடித்துவிட வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம்களை கொலை செய்ய ஆரம்பித்தனர். அவர்களுடைய உடமைகளை
நெருப்பிட்டு கொளுத்தினர். கடைசியாக அரசும் மஸ்ஜிதை புல்டோசர் கொண்டு தரை மட்டமாக்கியது.
1997 ஆம் ஆண்டு ஒரு பழமையான புத்த சிலையின் ஒரு பகுதி உடைக்கப்பட்டததையும்
ஒரு பௌத்த பெண்மணி மானப்பங்கப் படுத்தப் பட்டதையும் முஸ்லிம்களின் மீது பலி சுமத்தினர்.
கடைசியில் அது பொய் என்பது நிரூபணமானது. முஸ்லிம்களின் மீது தவறான முறையில் பலிசுமத்தி
1500 முஸ்லிம்களை கொன்று குவித்தனர். வீடுகளை நெருப்பிட்டு கொளுத்தினர்.
அடக்குமுறைகள் முடிந்த பாடில்லை
அராகான் முஸ்லிம்கள் சுய தொழில் செய்ய அனுமதி கிடையாது. பெரும்பாலும் விவசாயம்
மட்டுமே அவர்களுடைய வாழ்வாதாரம். அந்த விவசாயம் செய்வதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்
விதிக்கப் படும். தங்குவதற்கான வீடுகள் கட்டுவதற்கும் மராமத் வேலை பார்ப்பதற்கும் பல
எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். வாக்குரிமையும் அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
கடைசியாக வாழ்வுரிமையும் மறுக்கப் படுகிறது. உலகம் அதையும் வேடிக்கை பார்க்கிறது.
எமினிஸ்டீ இன்டர்னேஷனல் ஐநாவிடம் தற்சமயம் (ஆக - செப் 2017) நடக்கும் பர்மியர்களின் தாக்குதல் தொடர்பாக) தாக்கல் செய்த அறிக்கையில்
வெறும் ஐந்து நாட்களில் 2100 கிராமங்கள் முஸ்லிம்கள்
இருக்கவே நெருப்புக்கு இரையாக்காப் பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. நடமாடும் மனிதர்களை
பிடித்து கட்டி வைத்து அவர்களுடைய உறுப்புக்கள் வெட்டப்படுகின்றன. அவர்களுக்கு முன்பாகவே
அந்த வெட்டப்பட்ட உறுப்புக்களை மிருகங்களுக்கு உணவாகப் போடுகிறார்கள்.
மிருகவெறி கொண்ட பர்மியர்கள் முஸ்லிம்களுடைய உடலில் பல இடங்களில் வெட்டுகிறார்கள்.
அந்த இடத்திலிருந்து இரத்தம் ஓடும்போது அந்த இடத்தில் மிளகாய்த் தூளை தூவிவிட்டு சித்திரவதை
செய்கிறார்கள். உலகில் எங்காவது குண்டு வெடிப்பு நடந்து வெறும் ஐந்து பேர் இறந்திருந்தாலும்
சர்வதேச மீடியாக்களும் உலக நாடுகளில் தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு கண்டனம் தெரிவிப்பார்கள்.
ஆனால் இன்றோ மிருகத்தனமான சித்திரவதை பற்றி ஒரு வார்த்தை கூற ஆளில்லை.
2012 ஆம் ஆண்டு மனித உரிமைக் கலகம் மற்றும் ஐநாவின்
முயற்சியால் நடக்கும் நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்கான ஒரு கமிஷன் உருவாக்கப்பட்டது. ஆனால், தக்க தருணத்தில் மியான்மர் அரசு அந்தக் கமிஷனை நிராகரித்துவிட்டது.
2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐநா சபையின் உயர்மட்டக் குழு பாதிக்கப்
பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு நடந்த அநியாயங்கள் தொடர்பான ஒரு அறிக்கையை தயார் செய்தது.
எனினும், கொடூரத் தாக்குதல்கள் குறைந்தபாடில்லை.
கார்ஜீன் என்ற பிரிட்டானிய பத்திரிக்கைக்கு சமீப காலமாக பர்மாவில் கொடூரத் தாக்குதலுக்குள்ளான
பெண்கள் பின்வருமாறு தங்களுடைய வேதனைகளை வருணிக்கிறார்கள்: என்னுடைய கண்களுக்கு முன்னாலேயே
என்னுடைய கணவரும் என்னுடைய ஏழு பிள்ளைகளும் துண்டு துண்டாக வெட்டப்பட்டார்கள், என்று நூர் ஆயிஷா என்ற பெண்மணி கூறுகிறார். மற்றொரு நாற்பது
வயது பெண்மணி கூறியதாவது: என்னுடைய வீட்டின் மீது இருபது ராணுவ வீரர்கள் தாக்குதல்
தொடுத்தனர். பிறகு என்னுடைய ஐந்து பிள்ளைகளையும் ஒரு அறையில் அடைத்து அந்த அறைக்கு
நெருப்பு வைத்து விட்டனர். அவர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். அதன் பிறகு என்னை
ஒரு தூணில் கட்டி வைத்தனர். என் கண்ணெதிரிலேயே என்னுடைய இரண்டு மகளையும் கற்பழித்து
கொன்று விட்டனர். பின்னர், என்னுடைய கணவரையும் கொன்று
விட்டனர்.
இது போன்று மேலும் பல நெஞ்சை உறுக்கும் நேர்காணல்கள் வெளிவந்துள்ளன. பச்சிளங்குழந்தைகளை
கண்டதுண்டமாக வெட்டிக் கொலை செய்து இந்த உலகில் எதை சாதிக்கப் போகிறார்கள்? என்பது தான் புரியவில்லை. இவ்வளவு கொடூரமான எந்த செய்திகளையும்
நம்முடைய மீடியாக்கள் வெளியிடுவதில்லை. ஆனால், தினமணி, ரோஹிங்ய முஸ்லிம்களின் சண்டை நிறுத்த அறிவிப்பை ரோஹிங்கயா தீவிரவாதிகள்
சண்டை நிறுத்த அறிவிப்பு என்று (11 செப் - 2017 12:49 டெய்லி ஹன்ட்) செய்தி
வெளியிட்டுள்ளது. மீடியாக்களின் இந்த நடைமுறை நமக்கு பழகிப்போன ஒன்று. கண்டிப்பாக எல்லாவற்றுக்கும்
பதில் சொல்ல வேண்டிய நேரம் அனைவருக்கும் வந்தே தீரும் என்பதில் எந்த சந்தேகமும். இல்லை.
மறுமையின் சுவர்க்க நரகம் மட்டுமே நமக்கு மாபெரும் ஆறுதலான செய்தி.
யூசுபிய்யயா ராஷித் - அக்டோபர் 2017
No comments:
Post a Comment