தவறான கொள்கைகள்
பரவலாவதற்கு சமுதாயத்தின் அறியாமையும் ஒரு முக்கிய காரணம். படிப்பது என்றால் தொழிற்கல்வி
மட்டுமே ஞாபகத்தில் வருமளவுக்கு சமூகசூழல் மூலம் மூலைசளவை செய்யப் பட்டுள்ளது. மார்க்கம்
படிக்க வேண்டுமென்ற சிந்தனை மருந்துக்காவது இருகிறதா? என்பது கேள்விக்குறிதான். அரை தூக்கத்துடன் செல்லும் குழந்தைகள் மக்தப்களில் எதைத்
தான் பெற்றுக்கொள்வார்கள்?
பிறகு இரவு வரை பள்ளிப்படிப்பிலேயே முடங்கி விடுவார்கள்.
ஜூம்ஆ உரையின் மூலம்
மார்க்க அறிவை வளர்த்துக் கொள்வதற்கு பள்ளிகளும் கல்லூரிகளும் தடையாக இருக்கின்றன.
மாணவர்களுக்கு ஜூம்ஆ தொழுகை கிடைப்பதே கூட பல சமயங்களில் அரிதாகிவிடும். பள்ளி விடுமுறை
காலமாக இருந்தால் சிறப்பு வகுப்புகள், கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு இறையாகி
விடும். அல்லது விடுமுறை,
சுற்றுலாவில் முற்றுப் பெற்றுவிடும். மார்க்க அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு
சந்தர்ப்பமே கிடைக்காது போய்விடுகிறது. சுன்னத்தான முறைப்படி குளிப்பது எப்படி? என்று கூட தெரியாமல் மார்க்க ரீதியாக வியாக்கியானம் பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.
மார்க்க அறிவின் அடிப்படை கூட தெரியாமல் ஹலால், ஹராம் பேச முற்பட்டு விடுகிறார்கள். அவர்களில் மிகச் சீராகவும் சிறப்பாகவும் செயல்படுபவர்கள்
யார் என்று சோதிப்பதற்காவே பூமியின் மீது உள்ளவற்றை நாம் திண்ணமாக அந்த பூமிக்கு கவர்ச்சிய(த்தான்)
ஆக்கியிருக்கிறோம் (அல்குர்ஆன் - 18:07)
இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள
அஹ்ஸன் அமல் என்றால் சீராகவும் சிறப்பாகவும் அழகு நிறைந்ததாகவம் இருக்கும் செயலுக்கு
சொல்லப்படும். அதாவது, மனிதன் செய்யும் அமல்களில் இரண்டு தன்மைகள் இருப்பது கட்டாயம். ஒன்று இக்லாஸ் எனும்
மனத்தூய்மை. எந்த அமலைச் செய்தாலும் இறைப் பொருத்தத்திற்காக மட்டுமே செய்ய வேண்டும்.
இரண்டாவது ஒரு காரியத்தை முழு பக்தியுடன் செய்தால் மட்டும் போதாது, அந்த அமல் மார்க்கம் காட்டித் தந்த வழிமுறைப்படியும் இருக்க வேண்டும்.
ஜூம்ஆ போன்ற சமயங்களில்
நாம் கேட்கும் பயான்களின் மூலம் நம்முடைய மார்க்கப் பற்றை வளர்த்துக் கொள்ள முடியும்.
ஆனால், மார்க்கச் சட்டங்களை அறிந்து கொள்வதற்கு நாம் தனியாக நேரம் செலவு செய்து அதற்குரிய
நூற்களைப் பார்த்து படித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இன்று படிப்பதற்கு யாருக்கும்
நேரம் கிடைப்பதில்லை. பயணத்திலோ அல்லது வேறு ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போதோ
ஆடியோ மூலமாக ஏதாவது பதிவு செய்யப்பட்ட பயான்களைக் கேட்டுக் கொள்ள முடியும். ஒரு நேரத்தில்
இரு வேலைகளைச் செய்ய முடியாது. அப்படிக் கேட்பதன் மூலம் மனதில் பதியவும் செய்யாது.
டைம்பாஸ் பண்ணுவதற்கு வேண்டுமானால் அப்படி கேட்டுக்கொள்ளலாம்.
எனவே, மார்க்க விஷயங்களைப் படிப்பதற்கு தனியாக நேரம் ஒதுக்கியாக வேண்டும். சட்ட நூற்கள்
மற்றும் அவ்வப்போது வரும் மாத இதழ்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களைத் தவறாமல் படிப்பதற்கு நேரம் கிடைக்கும் போது மார்க்க
நூற்களுக்கு மட்டும் நேரம் கிடைக்காமல் போய்விடுமா? நம்முடைய வீட்டு டேபிள்களில்
உருவப்படம் நிறைந்த செய்தித் தாள்களுக்கு இடமிருக்கும் போது மார்க்க சட்ட நூற்களுக்கு
ஏன் இடமிருக்கக் கூடாது. செய்தித் தாள்களுடன் மார்க்க இதழ்களும் டேபிளில் இருந்தால்
யாராவது அதைப் படிக்கும் போது அவர் மார்க்க அறிவைப் பெற்றுக் கொள்வதுடன் நமக்கும் அதற்கான
நன்மையும் கிடைத்துவிடுமே!
வாலிபர்கள் தங்களுடைய
பள்ளி, கல்லூரி விடுமுறையை ஷரீஅத்தைக் கற்றுக் கொள்வதில் முக்கியத்துவம் கொடுத்தால் தவறான
கொள்கைகள் நமக்குள்ளே ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளலாம்! முஸ்லிம்கள் ஆட்சி செய்வதால்
மட்டும் அது இஸ்லாமிய ஆட்சியாகி விடாது, என்பதைப் போல முஸ்லிம்கள் பத்திரிக்கை
நடத்துவதால் மட்டும் அது இஸ்லாமிய பத்திரிக்கையாகி விடாது. எனவே, சரியான கொள்கைகளை சொல்லக்கூடிய இஸ்லாமிய பத்திரிக்கைகளை பத்திரிக்கைகளை தேடி படித்தறிவது
அவசியம்.
இல்லையானால் அசத்தியவாதிகள்
நம்மை மூளைச்சலவை செய்து விடுவார்கள். அல்லது மார்க்கம் தெரியாததால் நாம் பழகியதையெல்லாம்
ஊர் நடைமுறைகளையெல்லாம் மார்க்கம் என்று விளங்கி விட முற்பட்டு விடலாம். சீர் வரிசையின்றி
திருமணம் முடிப்பேன், என்று அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்தவர் சொன்னாலும் கூட அவர் மத்ஹபை ஏற்காதவரா? என்று கேட்பவர்களும் நம்மில் உள்ளனர்.
வெறும் குர்ஆன் ஹதீஸுடைய
மொழிபெயர்ப்பை மட்டும் பார்த்து விட்டு நாமாக எதுவும் முடிவு செய்து விடக்கூடாது. அல்லது
தஃப்ஸீரு இப்னு கதீர் போன்ற ஏதாவது தஃப்ஸீரின் மொழிபெயர்ப்பைப் படித்து விட்டு மார்க்க
சட்டங்களை முடிவு செய்து விடக்கூடாது. குர்ஆன், ஹதீஸ், மற்றும் தஃப்ஸீர்களின் மூலம் மார்க்கத்தின் படி நடப்பதற்காக தேட்டங்களை உண்டாக்கிக்
கொள்ளலாம். சட்டம் எடுப்பது அனைவருக்கும் சாத்தியமாகாது. எனவே, சட்டம் என்றால் தெளிவாக சட்டங்கள் எழுதப்பட்ட நூற்களைப் பார்த்தே அறிந்து கொள்ள
வேண்டும். இன்று சிலர் இப்னு கதீர் மொழிபெயர்ப்பைப் பார்த்து விட்டு ஜகாத் சட்டத்தை
முடிவு செய்வதோடு மட்டுமல்லாமல் சுன்னத் ஜமாஅத்தின் அங்கீகாரம் கிடைத்தது போல் அதை
பொது இடங்களிலும் சொல்ல முற்பட்டு விடுகின்றனர்.
காதியானிகளும் மத்ஹப்
மறுப்பாளர்களும் தோன்றுவதற்கு நம்முடைய உண்மையான சரியான கொள்கைகளையும் சட்டங்களையும்
அறியாமல் இருந்ததே முதல் காரணம். நாம் நம்முடைய மார்க்கத்தை முறையாக அறிந்திருந்தால்
தவறான கொள்கைக்கு வழி கிடைத்திருக்காது. குர்ஆனும் ஹதீஸும் அதிலிருந்து தொகுக்கப்பட்ட
மார்க்க நூற்களும் நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டப் போதுமானவை. நம்முடைய திருமணத்திற்கும்
தலாக்கிற்கும் குடும்பவியலுக்கும் வணக்கவியலுக்கும் ஷரீஅத் சொல்லித் தரும் வழிமுறைகளை
நாம் முன்னரே அறிந்திருந்தால் வழிதவறியவர்கள் நம்மை அடிபிரளச் செய்ய முடியுமா?
தமிழாக்கம் தேவை:
மக்கள் மார்க்கத்தை
அறிவது கட்டாயம் என்று சொல்லும் போது மார்க்க அறிஞர்கள் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்
கொடுக்க வேண்டும். முழு மார்க்கத்தின் செய்திகளும் தமிழில் தரப்பட வேண்டும். எல்லாத்
தூதர்களையும் அவரவரின் சமுதாய மொழியிலேயே (தூதுச் செய்தியை அறிவிப்பதற்காக) நாம் அனுப்பி
வைத்தோம், (14:4) என்று குர்ஆன் கூறும். நம்முடைய தாய் மொழியில் மார்க்கச் செய்திகள் பரவலாகாத வரை
மார்க்க அறிவாளர்களை உருவாக்க முடியாது.
இந்தயாவில் பல மொழிகள்
பேசப்பட்டாலும் தமிழகம், கேரளா தவிர ஏறத்தாழ மற்ற மாநிலங்களில் முஸ்லிம்கள் உர்தூ பேசுபவர்களாக இருப்பார்கள்.
வடநாட்டு உலமாக்கள் பிராந்திய மொழியில் மார்க்கத்தை தெளிவு படுத்துவதில் உலகிலேயே முதலிடத்தைப்
பெற்றிருக்கிறார்கள், என்றே சொல்லலாம். அரபி மொழிக்கு அடுத்த படியாக உர்து மொழியிலேயே மார்க்க நூற்கள்
அதிகமாக அமையப் பெற்றிருக்கின்றன.
உர்தூ நூற்களில்
எழுதப்பட்ட நூற்கள் அரபியிலும் கூட மொழிபெயர்க்கப் படுகின்றன. அவற்றுக்கு அரேபிய மார்க்க
அறிஞர்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் நல்ல வரவேற்பு இருக்கின்றன. இதே நிலையை ஏன் தமிழிலும்
உருவாக்கக் கூடாது. மக்கள் அரபியைப் படித்து மார்க்கத்தை விளங்க முற்பட வேண்டும். இஸ்லாத்தின்
ஆரம்ப காலத்தில் மக்களின் நிலை அப்படித் தான் இருந்தது. ஒரு நாடு முஸ்லிம்களால் வெற்றி
கொள்ளப்பட்டால் அந்நாட்டு மக்களும் அரபி பேச கற்றுக் கொள்வார்கள். ஆரம்பத்தில் அரபு
நாடாக இல்லாத நாடுகளிலும் இன்று அரபி பேசுகிறார்களென்றால் அது எப்படி சாத்தியமானது? அப்படி மக்கள் அரபியைக் கற்றுக் கொள்ளவில்லையானால் பிராந்திய மொழியில் மார்க்கத்தின்
தகவல்களை மாற்றுவதற்கு எல்லா வித முயற்சிகளையும் செய்தாக வேண்டும்.
மாபெரும் ஜிஹாது:
இஸ்லாம் ஈரனில் நுழைந்த
சமயம் அங்கே அரபி மொழி முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. (மக்களிடம் போதுமான அளவுக்கு
அரபி மொழித்திறன் இல்லாமல் இருந்தது.) அப்பொழது மார்க்க அறிஞர்களும் மதபோதகர்களும்
உடனடியாக மார்க்கத்தின் அனைத்து தகவல்களையும் பாரிஸீ மொழியில் மாற்றிவிட்டார்கள். இதன்
மூலம் அந்நாட்டின் ஒவ்வொரு மனிதரும் மார்க்கச் சட்டங்களை அறிந்து கொண்டனர்.
இந்தத் தகவலைத் தரும்
தாருல் உலூம் தேவ்பந்தின் முன்னாள் முஃப்தி நிழாமுத்தீன் (ரஹ்) அவர்கள், இன்று இந்தியாவிலும் (பள்ளிப் பாடத்திட்டத்தின் காரணமாக உர்தூ மொழிக்குப் பகரமாக)
பிராந்திய பாஷைகள் பரவலாகி விட்டதால் ஈரானைப் போன்ற ஒரு நிலை இந்தியாவில் ஏற்பட்டு
விட்டது. எனவே, தம்முடைய எல்லா மார்க்க போதனைகளையும் முடிந்த வரை சீக்கிரமாக பிராந்திய மொழிக்கு
மாற்றுவது அவசியமாகும். சமுதாயத்தின் ஒவ்வொரு நபரையும் அவரவருடைய பொருளாதார வளம் மற்றும்
மார்க்க அறிவுக்குத் தகுந்தவாறு (மார்க்க சட்டங்களை மொழி மாற்றம் செய்வதில்) அல்லாஹ்வுடைய
கட்டளை எதிர்கொள்கிறது. இந்நேரத்தில் இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவது மிகப் பெரும் மார்க்கப்
பணியாகவும் மார்க்க சாதனையாகவும் இருக்கிறது. மேலும் இது பெரும் ஜிஹாதாகவும் இருக்கிறது, என்று கூறியுள்ளார்கள். (முன்தகபாத் நிழாமுல் ஃபதாவா - 1/186)
நம் உள்ளத்தில் நீங்கா
இடம் பெற்றிருக்கும் நம்முடைய ஆசான் அல்லாமா கீரனூரி ஹள்ரத் கிப்லா (ரஹ்) அவர்கள், மார்க்க அறிஞர்கள், பிழையின்றி சரியாக தமிழில் பேசவும் எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் பேராவல்
கொண்டிருந்தார்கள். தங்களுடைய மாணவர்களிடம் அந்தத் திறமை முழுமையாக வெளிப்பட வேண்டுமென்பதற்காக
முழு முயற்சி எடுத்துக் கொண்டார்கள்.
அதற்காக தமிழ் இலக்கண
சட்டங்கள் மற்றும் சரியான தமிழ் எழுதுவதற்கு தேவையான தகவல்களையும் அத்தலீலு இலத் தமிழ்
என்ற ஒரு சிறு நூலில் தமிழ் மொழியிலேயே தொகுத்து பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் அதைத்
தாங்களே கற்றுக் கொடுத்தார்கள். அல்பலாகா எனும் அணி இலக்கணத்தைப் பயிலக்கூடிய மாணவர்கள்
குர்ஆன் ஹதீஸில் உள்ள கருத்து நயத்தை விளங்குவதுடன் உலமாக்கள் தங்களுடைய பேச்சிலும்
எழுத்திலும் அணி இலக்கணத்தைப் பயன்படுத்தி மார்க்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க
வேண்டுமென்பதை ஆர்வமூட்டி ஹள்ரத் அவர்கள் இப்படி எழுதுகிறார்கள்:
அணியைப் பொறுத்தவரை
உலக மொழிகள் அனைத்துக்கும் ஒரே அடிப்படை தான். ஒரு மொழியில் அணியைப் படித்தவர் பிற
மொழிகளிலும் அதனை அழகாகக் கையாள முடியும். ஏனெனில் பொருள், கருத்து, வார்த்தை, வாக்கிய அழகு, நிலைமைக்கேற்க நயமாக உரைத்தல் என்பவை மொழிகளால் மாறுபடுவதில்லை.
எனவே, உலகிலேயே தன்னிகரற்ற மகா உன்னதமான அரபி அணியை படிக்கிற மாணவர்கள் அதனைத் தமிழில், முறையாக - அழகாக - உயர்வாகக் கையாளப் பழகி, அதை சேவை மனப்பான்மையோடு இஸ்லாமிய உயர்வுக்காக
தமது பேச்சு - எழுத்து மூலமாக பயன்படுத்த வேண்டும். அதற்குரிய சரியான பயிற்சி தாய்
மொழியான தமிழ் மொழியிலும் எடுத்துக் கொள்ள வேண்டும், என்பது என் நீண்ட கால ஏக்கம்.
அதற்கிணங்க அல்பலாகா உடைய பல நூல்களிலிருந்து சேகரித்த விஷயங்களை அரபியில் சுருக்கமாக
கோர்வை செய்துள்ளேன். அத்துடன் தமிழில் பயிற்சிகளையும் சேர்த்துள்ளேன். காரணம் தமிழ்
அணி தான் உங்களுக்கு முதல் தேவை. குர்ஆன், ஹதீதிலுள்ள அணி நயங்களையும் தமிழில்
தான் எடுத்து வைக்கப்போகிறீர்கள். (அல்பலாகா)
இன்று வரை இந்த மார்ககம்
நிலைத்திருக்கிறதென்றால் அது இந்த மார்க்க சேவையாளர்களின் தங்களை அர்ப்பணித்து பணியாற்றியதன்
விளைவு தான், என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க முடியாது.
No comments:
Post a Comment