நடப்பு நிதியாண்டு நிறைவடைகிற நிலையில் மக்கள் அரசின்
பட்ஜெட்டை எதிர்பர்த்திருக்கின்றனர். பட்ஜெட்டில் அதிகப்படியான வசதி இருக்குமா?
அல்லது அதிகப்படியான
வரி விதிப்பு இருக்குமா? என்ற எதிர்பார்ப்புக்டையே இஸ்லாமிய அரசின் வரிவிதிப்புக் கொள்கை பற்றியும் நாம் அறிந்து கொண்டாக
வேண்டும். இன்றைய அரசின் வரிவிதிப்பு விதிமுறைகளை மார்க்கத்தின் விதிமுறைகளுடன் ஒப்பு
நோக்கி பார்க்கும்போது இஸ்லாத்தின் நடுநிலையையும் இஸ்லாமிய அரசின் நேர்மையையும் மார்க்க
அறிஞர்களின் அரசிற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உலகின் ஆட்சியாளர்கள் அறிந்து கொள்ள
முடியும்.
நாட்டின் எந்தக் குடிமகனும் உணவு, உடை, இருப்பிடம் இல்லாமால் திண்டாடக்கூடாது.
அனைவருக்கும் மருத்து சேவை மற்றும் கல்வி போதனையும் போதாமல் இருக்கக் கூடாது. நாட்டு
முன்னேற்றத்திற்காக பாடுபடும் மக்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது. வறுமையில்
வாடும் மக்களை வாகை சூட வைப்பது அரசின் தலையாய பணி. ஆனால் ஓர் இஸ்லாமிய அரசுக்கு வருவாய்
பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் நிதி நெருக்கடியை எப்படி சமாளிப்பது? ஷரீஅத் விதிக்காத வரியை அரசு
தன்னிச்சையாக விதிக்க முடியுமா? என்றால் அதற்கு குர்ஆனும் சுன்னாவும் நமக்கு வழிகாட்டுகிறது.
ஏழை பணக்காரர்களுக்கு மத்தியில் இடைவெளி அதிகமாகும் போது அதை நிவர்த்தி செய்ய அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
சமூகக் கடமை:
அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதங்கள், நபிமார்களை ஈமான் கொள்பவர்கள் உறவினர்கள் அனாதைகள்,
ஏழைகள், வழிப்போக்கர்கள், யாசிப்பவர்களுக்காகவும் அடிமைகளை
விடுவிப்பதில் மன விருப்பத்துடன் செலவு செய்பவர்களும் தொழுகையை நிலைநாட்டுவோரும் ஜகாத்தை
நிறைவேற்வோரும் தான் நல்ல காரியம் செய்பவர்கள். (அல்குர்ஆன் 2:177)
இந்த வசனத்தில் ஜகாத்த் கொடுப்பதை தனியாகவும ஏழைகள்,
அனாதைகளுக்கு செலவு
செய்வதைத் தனியாகவும கூறப்பட்டுள்ளது. எனவே, செல்வத்தில் ஜகாத்தைத் தவிர மற்ற கடமைகளும்
இருக்கிறது, என்பது தெரிகிறது. நபி (ஸல்) அவர்ளும் செல்வத்தில் ஜகாத்தைத் தவிர (மற்ற) கடமையும்
இருக்கத் தான் செய்கிறது, என்று கூறிவிட்டு இந்த குர்ஆன் வசனத்தைத் தான் ஓதிக்காட்டினார்கள்.
(திர்மிதீ)
ஜகாத்தை வழங்கிய பிறகும் வறுமை தீரவில்லையானால் அரசு செல்வந்தர்கள்
மீது வரி விதிக்க முடியும், என்று முஃப்தி தகீ உஸ்மானீ அவர்கள் கூறுகிறார்கள். (தர்ஸெதிர்மிதீ
- 2/143) ஒவ்வொரு
நாட்டின் செல்வந்தர்களும் ஏழைகளை முக்கியத்துவத்துடன் கவனிப்பது கட்டாயமாகும். தனவந்தர்கள்
தானம் வழங்குவதிலிருந்து தவறிவிட்ல் அரசாங்கம் அவர்களை நிர்பந்திக்க வேண்டும்,
என்று இப்னு ஹஜம் (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள். இமாம் ஜஸ்ஸாஸ் (ரஹ்) அவர்களும் தேவை ஏற்படும் போது ஜகாத்தோடு
மட்டும் நிறுத்திக் கொள்ளக்கூடாது. என்று வலியுறுத்தியுள்ளார்கள். (அஹ்காமுல் குர்ஆன்
- 3/155)
நபி (ஸல்) அவர்கள், பஞ்சகாலத்தில் குர்பானி இறைச்சியைக்
கூட மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைப்பதைத் தடை செய்தார்கள். ( புகாரி) உமர்
(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் மோசமான பஞ்சம் ஏற்பட்டது. எவ்வளவோ நிவாரண நடவடிக்கை
எடுத்தும் சமாளிக்க முடியவில்லை. அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அல்லாஹ் அதை ஏற்று
உதவி செய்தான். அச்சமயம் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ் மட்டும் பஞ்சத்தை நீக்கவில்லையென்றால்
ஒவ்வொரு வசதியான வீட்டிற்கும் சென்று அந்த வீட்டின் நபர்களை கணக்கெடுத்து அதே அளவு
எண்ணிக்கையில ஏழைகளுக்கும் அந்த வீட்டை பொறுப்பாக்கியிருப்பேன். ஏனெனில், ஒருவருககுரிய உணவை இருவர்
உண்ணும்போது இருவரும் மரணத்திலிருந்து தப்பி விடுவர். (இல்லையேல் அந்த ஏழை பட்டினியால்
இறந்து விடுவார்.) (நூல்: அல்அதபுல் முஃப்ரத்- 195) எனவே, ஜகாத் போன்ற வருவாய்க்குப் பிறகும்
மக்களின் தேவை நிறைவேற வில்லையானால் நிறைவானவர்களிடமிருந்து நிதி பெற்றாக வேண்டும்.
மக்களின் சேவையே அரசின் பணி:
நாட்டின் முன்னேற்றத்திற்காக அரசு தீட்டும் திட்டங்களெல்லாம்
மக்களின் தேவைக்காகத் தான். அப்படியானால் மக்கள் தானே கொடுத்தாக வேண்டும். துல்கர்னைன்
அவர்களே! யஃஜுஜ் மஃஜுஜ் பூமியில குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும் அவர்களுக்கும்
இடையில் ஒரு தடுப்புச் சுவரை நீர் ஏற்படுத்த உமக்கு நாங்கள் வரி தரட்டுமா? என்று கேட்டனர். (அல்குர்ஆன்
16:94) பிரசித்தி
பெற்ற குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா குர்துபீ (ரஹ்) அவர்கள் இந்த வசனத்தின் விரிவுரையில்
இது மக்களின் (வரிப்) பணங்களின் மூலம் குடிமக்களின் தொல்லைகளை நீக்கி அவர்களைப் பாதுகாப்பது
மன்னரின் கடமையாகும். கஜானா காலியாகி விட்டால் மக்களிடமிருந்து அதற்குரிய உதவியைப்
பெற வேண்டும, என்று கூறுகிறார்கள். (தஃப்ஸீர் குர்துபீ 11/60)
அரசு வரிவிதிப்பதின் மூலம் செல்வந்தர்களுக்கு சிரமம் தான்.
எனினும், நாட்டின்
சமுதாயத் தேவை அதை விட முக்கியம். பொதுவாக (எல்லோருக்கும்) ஏற்படும் தொல்லைய - சிரமத்தை
நீக்குவதற்காக குறிப்பிட்ட (சிலருடைய) தொல்லையைத் தாங்கிக் கொண்டாக வேண்டுமென்பது போன்ற
அடிப்படை விதிகளையும் மார்க்க வல்லுணர்கள் கூறுகின்றனர். (ஃபிக்ஹுஜ் ஜகாத் - பக்-583)
எனவே நாட்டின் ஒட்டுமொத்த
நலனைக் கருதி செல்வந்தர்கள் சிரமத்தை ஏற்றாக வேண்டும். இதுபற்றி இமாம் கஜ்ஜாலி (ரஹ்)
அவர்கள் அல்முஸ்தஷ்ஃபா எனும் நூலில் கூறுவதாவது: அரசின் கஜானா காலியாகி விட்டது. நாட்டின்
பாதுப்பிற்கு குந்தகம் ஏற்பட்டு விட்டது. இந்த ஆபத்தை விட்டும் நாட்டை காப்பாற்றுவதற்காக
தேவைக்கேற்ப செலவந்தர்களின் மீது வரி விதிக்கலாம். ஏனெனில் இரண்டு தொல்லைகளில் கடுந்தொல்லைக்கே
முதலிடம் கொடுக்க வேண்டும், இமாம் ஷாதிபீ (ஹ்) அல்இஃதிஸாம்
என்ற நூலிலும இதே கருத்தை வலியுறுத்துகிறார். (ஃபிக்ஹு ஜகாத்- 583)
அதற்காக எதற்கெடுத்தாலும் எதைப் பற்றியும் சிந்திக்காமல்
மக்களின் மீது வரி சுமத்துவதையே கொள்கையாக்கவிடக் கூடாது. மக்களின் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள்
சுகபோகமாக இருந்துவிட முடியாது. மக்களைவிட ஆட்சியாளர்களுக்கு இதில் முக்கிய பங்கு இருக்கிறது,
என்பதை கவனத்தில் கொள்ள
வேண்டும். இஸ்லாம் முறையான உரிமைகளை முழுமையாக வழங்கியிருக்கிறது. ஒரு மனிதனுடைய பணம்,
சொத்து அனைத்தும் அவனுக்கே
சொந்தம். தக்க காரணமின்றி அவனுடைய செல்வத்தை யாரும் எடுத்துக் கொள்ள முடியாது. எனவே,
நியாயமான காரணங்களுக்காக
தேவையான அளவுக்கு மட்டுமே வரிவிதிப்பை அமுல்படுத்த முடியும்.
காலியான கஜானா:
அல்லாமா இப்னு ஆபிதீன் (ரஹ்) அவர்கள், பொது நிதியத்தில் போதுமான
அளவுக்கு நிதி இல்லையானால் மட்டுமே வரி விதிக்க முடியும், என்று அழுத்தமாகக் கூறுகிறார்கள்.
(ரத்து 2/337). பொது நிதியத்தில் பணம் இல்லாமல் இருப்பது என்பதின் கருத்து விசாலமானது. இஸ்ஸுத்தீன்
இப்னு அப்திஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் தாதாரியினரை எதிர்த்து தாக்க அரசிடம் வசதியில்லாத
போது மன்னர் வரிவிதிப்பது பற்றி உலமாக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது இஸ்ஸுத்தீன் (ரஹ்) அவர்கள், தாராளமாக வரி விதிக்கலாம்.
ஆனால் பைத்துல்மால் காலியாக இருக்க வேண்டும், என்பது மட்டுமல்ல. உங்களிடம் முடங்கிக்
கிடக்கும் விலையுயர்ந்த பொருட்களை விற்றுவிடுங்கள். அதன்பிறகு மக்களிடம் வரி வசூலிப்பது
பற்றி பேசுங்கள், இராணுவ வீரர்களிடம் ஏகப்பட்ட செல்வங்களும் பெருமைப் படத்தக்க கருவிகளும் இருக்கும்
போது பொதுமக்களிடம் வரிவிதிக்கக் கூடாது, என்று உறுதியாகக் கூறிவிட்டார்கள். இமாம் நவவீ (ரஹ்) அவர்களும்
இவ்வாறே கூறினார்கள். மன்னர்களிடம் ஆயிரக்கணக்கில் அடிமைகள் இருக்கின்றனர். தங்க நகை,
தங்க ஆடை என கோடிக்கணக்கில்
செல்வம் ஆளும் வர்க்கத்திடம் தேங்கிக் கிடக்கும் வரை மக்கள் மீது வரி விதிக்கும் ஃபத்வா
- சட்டத்தில் கையெழுத்திட மாட்டேன், என்று கையை விரித்துவிட்டார்கள். (நூல்: ஃபிக்ஹுஜ் ஜகாத்)
இன்றைய நிலை:
இந்த இடத்தில் இன்றைய அரசாங்கத்தின் நிலையையும் சிந்தித்துப்
பார்க்க வேண்டும். நாட்டின் பிரதிநிதிகளுக்கு சம்பளம் என்ற பெயரில் ஒரு தொகை கொடுக்கப்
பட்டாலும் அவர்கள் பெறக்கூடிய சலுகைகளும் சொகுசு வாழ்க்கையும் சாதாரணமானவையா?
ஆட்சியாளர்களின் சுற்றுப் பயணத்திற்கும் சுற்றுலாப் பயணத்திற்கும்
இசட் பிரிவு பாதுகாப்புக்கும் ஏகப்பட்ட கோடிகள். இது தவிர மக்களின் வரிப்பணத்தில் இயங்கும்
நாடாளுமன்றம், சட்டமன்றம் ஒவ்வொரு நாளும் அமளிக்குள்ளாகிறது. இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து
கொண்டு மேலும் மேலும் மக்களின் மீது வரிச்சுமையை திணிப்பதில் எப்படி நியாயம் கற்பிக்க
முடியும்?!. எனவே தான், மார்க்கச் சட்ட வல்லுணர்கள், பேங்க் போன்றவற்றின் மூலம் வரும் வட்டித் தொகையை (அது அரசுக்கே
போய்ச் சேருகிறது, என்பதாலும்) வருமானவரியில் செலுத்தலாம், என்று கூறியுள்ளனர்.
நியாய வரி:
விதிக்கப்படும் வரி நியாயமானதாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரின்
வருமானத்தை - நிதி நிலையை அனுசரித்து செல்வந்தர்கள் மீது மட்டுமே விதிக்க வேண்டும்.
வருமானத்தை மட்டும் பார்க்காமல் குடும்பத்தேவை போக வருங்காலத்திற்கு சேமித்து வைப்பதற்கு
தோதுவாகவும் விதிகள் தளர்த்தப்பட வேண்டும். வறுமை, பஞ்சம் போன்ற காலங்களில் வரி பெரும்
சுமையாகி விடக்கூடாது. இஸ்லாமிய ஆட்சி இதற்கு சிறந்த வழிகாட்டி. அப்பாஸிய்யாக்களின்
ஆட்சிக் காலத்தில் (ஹி 279-289) பஞ்சமேற்பட்ட போது மக்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக நிதியாண்டையே
மார்ச் 15 லிருந்து
ஜுன் 17 க்கு
தள்ளி வைக்கப்பட்டது, தான் வரலாறு. (தாரீகுல் இஸ்லாம்)
நியாயச் செலவு:
வரிப்பணங்கள் முறையாகச் செலவிடப்பட வேண்டும். நாட்டு மக்களின்
நலன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அடித்தட்டு மக்களும் அரசின் பலனை
தெளிவாக உணர வேண்டும். ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் சுகபோக வாழ்க்கைக்காக, மக்கள் பணத்தை தாரை வார்க்கக்
கூடாது. அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) போன்றவர்களின் ஆட்சி உலகுக்கே வழிகாட்டியாக இருக்கிறது.
பொதுப்பணத்தில் கையாண்ட பேணுதல் சரித்திரம் முழுவதும் விரவிக் கிடக்கிறது.
No comments:
Post a Comment