அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 27-02-2016 சனிக்கிழமையன்று தாருல் உலூம்
யூஸுபிய்யா அரபிக் கல்லூரியில் யூசுஃபிகளின் சந்தித்தல் - சிந்தித்தல் கலந்தாய்வுக்
கூட்டம் காலை ஃபஜ்ரு முதல் அஸர் தொழுகை வரை நடைபெற்றது. அன்று காலை, முதல் அமர்வில் யூசுபிகளின்
சமுதாயப் பணிகள் பற்றிய கருத்துரையும் இர்திதாத் - இஸ்லாத்தைத் துறப்பதற்கான காரணங்களும்
தீர்வுகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெற்றது.
யூசுபிகள் தங்களின் மாக்கப் பணி பற்றியும் சமுதாயத்தின்
பொதுப்பணி தொடர்பான களப்பணி பற்றியும் அழகிய முறையில் எடுத்துரைத்தார்கள். அவர்களின்
சேவைகள் பாராட்டத்தக்கதாக இருந்தன, என்பதில் ஐயமில்லை.
இர்திதாதுக்கான காரணம் என்ற கருத்தரங்கத்தில் வறுமையும்
வட்டியும் தான் என்றொரு கண்ணோட்டத்திலும் கூடா நட்பே என்ற மற்றொரு கண்ணோட்டத்திலும்
ஊடகங்களும் சமூக சூழலுமே, என்ற பிறிதொரு கண்ணோட்டத்திலும் யூசுபிகள் கருத்துரைகள் வழங்கினர்.
காலை உணவுக்குப்பின் இரண்டாம் அமர்வில் கருத்தாழமிக்க
ஆய்வரங்கம் நடைபெற்றது. அதில் நம் தொழுகையும் நபி வழியே! அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின்
கொள்கைக் கோட்பாடு, நாட்டு நடப்பில் நமது பங்கு ஆகிய மூன்று தலைப்புகளில் யூசுபிகள் ஆய்வுரைகள் நிகழ்த்தினர்.
மதிய உணவுக்குப்பின் மூன்றாம் அமர்வில் சிந்தனை அரங்கம்
நடைபெற்றது. அதில், விஞ்ஞான வளர்ச்சி வரவேற்கத் தக்கதே! என்ற கருத்தை வலியுறுத்தி மூன்று யூசுபிகளும்
வருந்தத் தக்கதே! என்ற தலைப்பில் மூன்று யூசுபிகளும் சிந்தனையுரை நிகழ்த்தினர். விஞ்ஞான
வளர்ச்சி வருந்தத் தக்கதே! என்ற தீர்ப்புடன் சிந்தனை அரங்கம் நிறைவு பெற்றது.
இறுதியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தாருல் உலூம்
யூசுபிய்யாவின் முஹ்தமிம் ஸாஹிப் தாமத் பரகாதுஹும் அவர்களின் நிறைவுரை மற்றும் துஆவுடன்
நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. இதில் யூசுபி உலமாக்களும் மற்ற உலமாக்களுமாக சுமார்
முன்னூறு உலமாக்கள் கலந்து கொண்டு சிற்ப்பித்தனர்.
அன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து இரவு ஒன்பது முப்பது
மணி வரைக்கும் உலகப் புகழ் பெற்ற காரிகள் சங்கமிக்கும் கிராஅத் மஜ்லிஸ் நடைபெற்றது.
பல காரிகள் மனதை ஈர்க்கும் விதமாகவும் இறையச்சத்தை வரவழைக்கும் விதமாகவும் இறைமறையை
இனிய தொனியில் ஓதிக் காண்பித்து மக்களின் உள்ளங்களை கிராஅத் அரங்கத்துடன் கட்டிப் போட்டனர்.
மக்களுக்கு குர்ஆன் மீதுள்ள பற்றை மனதில் மென்மேலும் பதிய வைப்பதற்காகவும் தஜ்வீத்
முறைப்படி குர்ஆனை ஓதுவதில் மக்களுக்குள்ள பொறுப்புணர்வை உணர்த்துவதற்காகவும் யூசுபிய்யா
அரபிக் கல்லூரி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில், ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு பேர்
கலந்துகொண்டு பயன்பெற்றனர். இரவு உணவுடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவடைந்தன.
அல்ஹம்துல்லாஹ்.
No comments:
Post a Comment