வேலூர் மாவட்டம்
நாட்றம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் சமீபத்தில், வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று விழுந்தது. இதில் கல்லூரி வாகனங்கள், மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதில் கல்லூரி பணியாளர்கள் 3 பேர் காயமடைந்தனர். இதுவரை ஒருவர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வேலூரில் டிஜிபி அளித்துள்ள பேட்டியில், கல்லூரியில் விழுந்தது வெடிவிபத்து இல்லை. விண்கல் என ஆதாரம் கிடைத்துள்ளது என
தெரிவித்துள்ளார். இஸ்ரோ ஆராய்ச்சிக்குழு இதை உறுதி செய்துள்ளது.
ஆனால், நாசா அதை மறுத்துள்ளது. இதை விண்கல் இல்லை, என்று மறுத்துவிட்டு இந்த மார்ச் மாதம்
ஒரு விண்கல் கடந்து செல்லும். அது பூமியைத் தாக்கினால் பயங்கரமான பின்விளைவு ஏற்படும், என்று எச்சரித்துள்ளது. இது போன்ற ஏராளமான எச்சரிக்கைகளை விண்வெளி ஆய்வு மையங்கள்
வெளியிடுகின்றன. எனினும்,
அல்லாஹ், பெரும்பாலான சமயங்களில் மக்களை பாதுகாக்கிறான்.
மனிதன் எச்சரிக்காத
சமயத்தில் தான் ஏதாவது திடீர் ஆபத்து ஏற்படுகிறது. நடந்து முடிந்த பிறகு, ஆய்வு செய்கிறோம்,, என்ற பெயரில் பல கருத்துக்களை கூறிக்கொண்டிருக்கிறார்கள். விண்வெளியில் தினமும்
பல மாற்றங்கள் நிகழ்கின்றன. விண்கற்கள், எரிகற்கள் போன்றவை கீழே விழுந்து எரிந்து
சாம்பலாகின்றன. சூரியனில் இருந்து வெளிப்படும் அதிக சக்தி கொண்ட நெருப்பு போன்ற பந்துகளும்
விண்ணில் இருந்து கீழே விழுகின்றன. ஆனால், பூமிக்கு மேல் வளிமண்டல அடுக்குகள் பாதுகாப்பாக
இருப்பதால் பூமிக்கு வருவதற்குள் அவை எரிந்து முடிந்து விடுகின்றன. கூடைப்பந்து (பேஸ்கட்
பால்) அளவுக்கு தினமும் விண்வெளியில் இருந்து பல கற்கள் பூமி மீது விழுந்த வண்ணம்தான்
உள்ளன.
தினமும் 100 டன் அளவுக்கு விண்கல் விழுகின்றன. அவை எல்லாம் பூமியை நெருங்குவதற்கு முன்பே எரிந்து
சாம்பலாகி விடுகின்றன. ஆனால், மலை போன்ற பிரமாண்ட கற்கள்தான் பூமிக்கு மிக
அருகில் வருகின்றன. விண்கற்கள், எரிகற்கள் மிக பெரிய அளவில் இருக்கும் போது
அரிதாக பூமியில் விழுந்த சம்பவங்களும் உண்டு.
சரித்திரத்தில் பதியப்பட்ட
விண்கற்கள்:
1950 ஆம் ஆண்டு மேற்கு கெண்டுகி என்னுமிடத்தில்
விண்கற்கள் இடிமுழக்கத்துடன் விழுந்து மரங்கள் சேதமடைந்தன. 1910 ஆண்டில் சைபீரியாவில் பல எரிகற்கள் விழுந்து மரங்கள் சாய்ந்தன. ஒரு நகரத்தின்
மீது விழுந்தால் அதை அழித்திருக்கக்கூடும். பூமியின் மீது விழுந்து வடுக்கள் பல இடங்களில்
காணப்படுகின்றன.
அமெரிக்காவில் அரிசோனா
என்னும் இடத்தில் எரிகற்கள் விழுந்து மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதன் விட்டம் சுமார்
ஒரு மைல் இருக்கும். அரிசோனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லின் நீளம், சுமார் 1220 மீட்டர் இருக்கும். 1944 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் ஒரு விண்கல் விழுந்தது. நாட்டின் பல்வேறு இடங்களில்
கிடைத்த விண்கற்கள் கல்கத்தாவில் உள்ள மியூசியத்தில் உள்ளன. தென்ஆப்பிரிக்காவிலும்
கிரீன்லாந்திலும் மிகப்பெரிய 36 அரை டன் எடையுள்ள எரிகற்கள் காணப்படுகின்றன.
அமெரிக்காவில் ஹோபா வெஸட் என்னுமிடத்தில் 60 டன் எடையுள்ள விண்கள் இருக்கிறது.
விண்கல் வழிபாடு:
1853 ஆண்டில் விண்கல் ஒன்று கிழக்கு ஆப்பிரிக்காவில்
அருகில் விழுந்தது. வானிகா எனும் ஆதிவாசிகள் இதற்கு வழிபாடு நடத்துகின்றனர். 1980 ஆண்டு டிசம்பரில் ஆந்திராவில் இரண்டு கற்கள் விண்ணில் இருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அற்புதச் சுவர்க்கலோக
மந்திரிமார் என்றும் அவை ஆராதிக்கப்படுகின்றன. இஸ்லாத்தைப் பொறுத்தவரை இறைவன் மட்டுமே
வணங்கத் தகுதியானவன். உலகில் ஆச்சரியமான ஒன்று நிகழ்ந்து விட்டால் அது அல்லாஹ்வின்பால்
அதிக கவனம் செலுத்துவதைத் தான் தூண்ட வ்ணடுமே தவிர அந்த அற்புதத்தையே வணங்க ஆரம்பித்துவிடக்
கூடாது.
சிலர், கஃபதுல்லாஹ்வில இருக்கும் ஹஜருல் அஸ்வத் என்பதும் இது போன்ற விண்கல் தான் என்று
கூறுகின்றனர். அல்ஜுஃராஃபிய்யா அல்ஃபலகிய்யா என்ற நூலிலும் ஷஃபீக் அப்துர்ரஹ்மான் அலீ
என்பவரும் அதை விண்கல் என்று கூறுகிறார். ஆனால் சில மாற்றுமத கட்டுரையாளர்கள், அப்ரஹாம் கடவுள் வடிவம், என்று போற்றப்பட்டு வருவதாகவும் கஃபாவின்
வடகிழக்கு மூலையில் பதிக்கப்பட்டு தொழுகை நடந்து வருகிறது, என்று கூறுகின்றனர். இது முற்றிலும் தவறு. இப்ராஹிம் (அலை) அவர்கள் இணைவைப்பை முற்றிலுமாக
ஒழித்தார்கள், என்பது தான் உண்மை வரலாறு. இன்றும்கூட எந்த முஸ்லிமும் ஹஜருல் அஸ்வதை வணங்குவதில்லை.
முத்தமிடுவது மட்டுமே மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கிறது. குழந்தையை முத்தமிட்டால்
யாரும் அக்குழந்தையை வணங்குவதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
விஞ்ஞானத்திற்கு
சவால்விடும் விண்கற்கள்:
ஆஸ்ட்ராய்ட் 2012 டிஏ14 என்ற விண்கல் பூமியை நோக்கி விழுந்து கொண்டிருக்கிறது. கால்பந்து மைதான அளவுக்கு
இந்த விண்கல் இருக்கிறது. 150 அடி அளவுக்கு இருக்கிறது. இந்த விண்கல் பூமியை தாக்கினால், தொலைதொடர்புகள் அத்தனையும் சிதைந்து விடும் என்று விஞ்ஞானிகள் 2013 ஆம் ஆண்டு கூறினர்.
இதனால் இங்கிலாந்து
உள்பட பல ஐரோப்பிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்தன. அதே நேரத்தில்
பூமியை அருகில் விண்கல் கடந்து செல்லும், ஒரு சில வினாடிகள் மட்டுமே இந்த நிகழ்வு
இருக்கும். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதே நாள் (பிப்-16) காலை 9 மணியளவில் மத்திய ரஷ்யாவின் யூரல் மலைப்பிரதேச பகுதியில் பிரமாண்ட எரிகல் ஒன்று
தகதகவென எரிந்தபடி மிக மிக அருகில் பறந்து சென்றது. அந்த கல் வெடித்து சிதறியதில் வீடுகளின்
ஜன்னல் கண்ணாடிகள், கடைகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின.
எரிகல் தீ ஜூவாலையுடன்
பறந்த போது திடீரென சாலைகளில் கருமேகம் சூழ்ந்தது போலவும், திடீரென வானில் இருந்து ஒளிவெள்ளம் பாய்ச்சியது போலவும் காணப்பட்டது. இதனால் மக்கள்
அதிர்ச்சி அடைந்தனர்.இதில் பலர் படுகாயம் அடைந்தனர். இதில் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை
1200ஐ தாண்டியுள்ளது.
இந்த அதிர்ச்சியில்
இருந்து உலக மக்கள் மீள்வதற்குள், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கால்பந்து மைதான
அளவு விண்கல் பூமிக்கு மேலே கடந்து சென்றதாக விஞ்ஞானிகள் கூறினர். ரஷ்யாவில் எரிகல்
வெடித்து சிதறிய சில மணி நேரம் கழித்து இந்த விண்கல் பூமியை கடந்து சென்றதாகவும், அதிர்ஷ்டவசமாக பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறினர்.
விஞ்ஞானிகள் எச்சரித்த
விண்கல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் எச்சரிக்காத ஒரு கல் ரஷ்யாவில் பெரும் பாதிப்பை
ஏற்படுத்தியிருக்கிறது. இதில்தான் மனிதனுடைய இயலாமையும் இறைவனின் வல்லமையும் வெளிப்படுகிறது.
பூமியைக் கடந்து சென்ற விண்ல் பற்றி தகவல் கொடுக்க முடிந்த விஞ்ஞானிகளுக்கு பூமியுடன்
மோதவிருந்த விண்கல் பற்றி தகவல் கொடுக்க முடியாமல் போனது. அல்லாஹ்வின் திட்டத்திற்கு
முன்பாக எவ்வளவு பெரிய விஞ்ஞான ஆய்வுகளும் வாலாட்ட முடியாது, என்பது தான் நிதர்சனம்.
இதற்கிடையே 2036 ஆண்டு பூமியின் மீது மோதவிருக்கும் விண்கல்லை தடுத்து நிறுத்துவதற்கு ரஷ்யா திட்டமிட்டுக்
கொண்டிருக்கிறது. 2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அபோபிஸ் என்னும் ராட்சத விண்கல் ஒன்று 2036 ஆம் ஆண்டு பூமியின் சுற் றுப்பாதைக்குள் நுழைந்து பூமி மீது மோத இருக்கிறது. இந்த
எரிகல் 1150 அடி விட்டம் உள்ளது. இது பூமி மீது மோதினால், அது மோதும் இடத்தில் உயிரினமே
இல்லாத அளவுக்கு அழிவு ஏற்படும்.
பிரான்ஸ் நாட்டின்
பரப்பளவுக்கு பூமியில் பாலைவனம் ஏற்படும், என்பது பத்திரிக்கைத் தகவல். இது 2029 ஆம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் அதாவது 30 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் வரும், அதற்கு அடுத்த 7 ஆண்டுகளில் அது தன் பாதையை மாற்றிக் கொண்டு பூமி மீது மோதும் என்று கருதப்படுகிறது.
அது பூமி மீது மோதுவதற்கான வாய்ப்பு 45 ஆயிரத்தில் ஒன்று ஆகும்.
45 ஆயிரத்தில் ஒன்று என்ற விகிதத்தில்
உள்ள வாய்ப்பு உண்மையில் நடந்து விடக்கூடாதே என்பதற்காகவும் அப்படி நடப்பதை தவிர்ப்பதற்காகவும்
ரஷியா நடவடிக்கை எடுத்து வருகிறது. அது விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி, அதை அபோபிஸ் விண்கல் மீது மோதச் செய்வது என்று ரஷியா திட்டமிட்டு உள்ளது.
விண்கற்கள் ஏன்?:
இந்த விண்கற்கள்
குறித்து குர்ஆன் பல தகவல்களைத் தருகிறது. 1. வான அலங்காரம். 2. ஷைத்தானை விரட்டியடிக்குதல். 3. இறைவேதனைக்கு இலக்காகுதல். போன்ற பல
நோக்கங்களை குர்ஆன் முன்வைக்கிறது.
நாம் விளக்குகளைக்
கொண்டு (நீங்கள் காணும் இந்த) உலக வானத்தை அலங்கரித்திருக்கிறோம். மேலும் நாம் ஷைத்தான்களை
எறிந்து விரட்டுவதற்கான (கருவிகளாக) ஆககியுள்ளோம்... அல்குர்ஆன் - 67:05)
நாம் பார்க்கும்
இந்த வானம் அழகிய நட்சத்திரங்களின் மூலம் ஒவ்வொரு நாளும் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
விண்ணில் நாம் பார்ப்பது அனைத்தும் ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும் அவை வெவ்வேறானவை.
நம்முடைய மில்கீவே கேலக்ஸி அல்லாமல் வேறொரு கேலக்ஸியின் நட்சத்திரங்களையும் நாம் காணமுடியும். நம்முடைய சூரியக் குடும்பத்தின் கோள்களையும் காண
முடியும். அத்துடன் குறுங்கோள்கள், வால்நட்சத்திரங்கள், எரிநட்சத்திரங்கள், எரிகற்கள் போன்றவற்றையும் இந்த வானில் நாம் காண முடியும். இவையனைத்தும் சேர்ந்து
இந்த உலகின் முகட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
விண்கற்கள் குறிப்பிட்ட
இரவுகளில் மிக அதிகமாக பூமியை நோக்கி வருகின்றன. அவை விரைந்து வந்து பூமியின வளிமண்டலத்துடன்
உராய்ந்து அங்கேயே எரிந்து போகும்போது வானத்தின் அழகை மென்மேலும் அதிகரிக்கிறது, என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். (நூல்: அல்மன்ஹஜுல் ஈமானீ லித்திராஸாதில் கௌனிய்யா)
இரண்டாவது, அவை ஜின், ஷைத்தான்களை விரட்டியடிக்கும் கருவிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், சூரியனுக்கு இணையான நட்சத்திரங்கள், கோள்கள் கொண்டு அவை தாக்கப்படுவதில்லை.
அவற்றிலிருந்து பிரிந்து வரக்கூடிய பொருட்கள் நமக்கு எரிநட்சத்திரங்களாக தென்படுகின்றன.
மறைவான செய்திகளை ஜின், ஷைத்தான் ஒட்டுக்கேட்க எத்தனிக்கும் போது அந்த எரிநட்சத்திரங்களின் மூலம் அவை விரட்டப்படுகின்றன.
இதற்கு முன்உள்ள
சமுதாயத்தினரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்திற்கு
வானிலிருந்து கற்கள் எறியப்ட்டன, என்று குர்ஆன் சொல்லும். நமது கட்டளை வந்த
போது நாம் அந்த ஊரை தலைகீழாகப் புரட்டிப் போட்டோம். மேலும், அதன் மீது சுட்ட களிமண் கற்களைத் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து பொழியச் செய்தோம்.
அக்கற்கள் உம் இறைவனின் புறத்திலிருந்து (யார் மீது விழ வேண்டுமென்ற பெயருடன்) அடையாளமிடப்
பட்டிருந்தது. மேலும் அநியாயக் காரர்களுக்கு இது (போன்ற தண்டனை) வெகு தொலைவில் இல்லை.
(அல்குர்ஆன் - 11:82,83)
இந்த கற்கள் மூலம்
முற்கால சமுதாயத்தினர் அழிக்கப்பட்டதை தற்கால தொல்லியல் ஆய்வுகள் உண்மையென நிரூபிக்கின்றன.
(அல்மன்ஹஜுல் ஈமானீ) இறைக்கட்டயை மீறியவர்களுக்கு வேதனை வந்த செய்தியைப் பற்றி குர்ஆன்
சொல்லும் போது சில இடங்களில் வானத்திலிருந்து ஒரு நெருப்பு வந்து கரித்துச் சென்றுவிடும, என்றும் கூறுகிறது. இவற்றின் மூலம் விண்கற்களின் விசாலமான பயன்பாடுகளை உணரமுடிகிறது.
இந்த விண்கற்கள்
எப்படி உருவாகிறது? ஏன் இப்படி பூமியை நோக்கி வருகிறது? இது போன்ற வினாக்களுக்கு தெளிவான சரியான
விடையை இன்னும் விஞ்ஞானம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. நடப்பதைப் பற்றி தகவல் சொல்லலாம்.
ஆனால், ஏன் நடக்கிறது? அதன் தாத்பரியம் என்ன?
என்பது பற்றி சொல்வது அவ்வளவு சாதாரண காரியமல்.
இறைப்பாதுகாப்பு
- வளிமண்டலம்:
விண்கற்கள் எப்பொழுதுமே
பூமியை நோக்கி வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் பூமியின் மீது வந்து மோதுவதில்லை. காரணம், பூமியைச் சுற்றி இருக்கும் வளிமண்டலம் தான் காரணம். வளிமண்டலம் தொடர்பான செய்திகளைக்
கூறிவிட்டு சில வசனங்களுக்குப்பின் அல்லாஹ் இப்படிக் கேட்கிறான்: இரவு பகலாக கருணையாளனின்
வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவது யார்? ஆனாலும் அவர்களுடைய இரட்சகனின் உபதேசத்தை
புறக்கணிக்கவே செய்கிறார்கள். (அல்குர்ஆன்- 21:42)
உண்மையில் இந்த உலகை
பேராபத்திலிருந்து பாதுகாப்பது வளிமண்டலம் தான். பூமியிலிருந்து 16 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை ஓசோன் வாயு பரவியுள்ளது. இதன் மூலம் ஆபத்தான கதிர்வீச்சுகள் உடலைத்
தாக்குவததை விட்டும் பாதுகாக்கப்படுகிறது. 50 கி.மீ. முதல் 80 கி.மீ வரை உள்ள வளிமண்டல அடுக்கு விண்கற்கள் பூமியின் எல்லைக்குள் நுழைவதை தடுக்கிறது.
இல்லையானால் எப்பொழுதும் பூமியில் விண்கற்கள் விழுந்து கொண்டே இருக்கும்.
நம் உடலில் கோடிக்கணக்கான
வியர்வை, ரோம துவாரங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் மூலம் இரத்தம் வெளியேறுவதில்லை. இந்த வளிமண்டலம்
மூலம் தான் அல்லாஹ் இந்த பாதுகாப்பைக் கொடுக்கிறான். முழு உலகமும் இணைந்து பாடுபட்டாலும்
இதுபோன்ற ஒரு பாதுகாப்பு வளையத்தை - முகடை உருவாக்க முடியாது. பாதுகாப்பு சாதனமின்றி
வளிமண்டலத்தைத் தாண்டி வெளியே சென்றுவிட்டால் வியர்வை துவாரம் முதற்கொண்டு அத்தனை துவாரங்களிலிருந்து
இரத்தம் கொட்ட ஆரம்பித்து விடும். சந்திரனுக்குப் போய் பார்த்த பிறகுதான் மனிதனுக்கு
வளிமண்டலத்தின் அருமை தெரிந்தது. (மார்ச் - 2016)
No comments:
Post a Comment