Thursday, 4 April 2013

அல்லாமா கீரனூரி ஹள்ரத் (ரஹ்) ஒரு சகாப்தம்

பொருளடக்கம்

மார்க்க ரோஷத்திற்கு சொந்தக்காரர்

யூஸுஃபிய்யா என் தாஜ்மஹால்

மதரஸாக்களின் மாண்பை உணர்த்தியவர்

உயிரோட்டமுள்ள பாடத்திட்டம்

நிழலுக்கும் சிரமம் தராக உஸ்தாதுமார்கள்

உலமாக்களுக்கு பயிற்சியளித்த வல்லவர்

கீரனூரியின் பூந்தோட்டம் யூஸுபிய்யா நூலகம்

கண்ணான தஃவத்

படைப்புகள்

இறுதி நாட்கள்

சொல்லி வந்த மரணம்

யூஸுபிய்யா இயக்காமலே இயங்கும்


بسم الله الرحمن الرحيم

அழகான பயான் - சொற்பொழிவு, என்பது குறித்த நேரத்தில் முடிப்பது தான். பயானை ஆரம்பித்து விட்டு முடிக்கத் தெரியாமல் திணறக் கூடாது. நாம் சொல்வது எல்லாமே நல்ல விஷயம் தான். அதற்காக நமக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டிவிடக்கூடாது என்பது மட்டுமல்ல; ஒரு மணி நேரம் நமக்கு வழங்கப் பட்டிருந்தால் ஐம்பத்தைந்து நிமிடங்களில் பேச்சை முடித்து விட வேண்டும். இன்னும் சிறிது நேரம் பேசினால் நன்றாக இருக்குமே என்று மக்கள் சொல்லும் நிலையிலேயே பயானை முடித்து விட வேண்டும். இவையெல்லம் ஹள்ரத் அவர்கள் நமக்கு சொல்லித் தந்த பாடம். ஹள்ரத் அவர்கள் தங்களுடைய பயானை மட்டும் அப்படி அமைத்துக் கொள்ள வில்லை. வாழ்க்கையையும் அல்லவா அப்படி அமைத்துக் கொண்டார்கள். இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்ற பலரைச் சொல்ல வைத்துவிட்டு ஹள்ரத் அவர்கள் மரணித்துவிட்டார்கள். பெரும் பெரும் மூத்த உலமாக்களையும் கண்ணீர் வடிக்க வைத்து விட்டார்கள். ஹள்ரத் அவர்கள் இன்னும் இரண்டு மாதம் இருந்திருக்கலாமே என்று கூறி ஒரு மத்ரஸாவின் முதல்வர் தம்முடைய துக்கத்தை வெளிப்படுத்தினார். அதாவது மஜ்லிஸுல் மதாரிஸுடைய பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் சென்றுவிட்டார்களே! அவர்களுடைய சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவதற்காக இரண்டு மாதங்களாவது இருந்திருக்கக் கூடாதா? என்ற ஏக்கத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.
2009 - ஆம் வருடத்தில் 65 கோடையும் வசந்தமும் முடிந்துவிட்டது என்ற கருத்து நயமுள்ள ஒரு வாசகத்துடன் ஹள்ரத் அவர்கள் நினைவுகள் என்ற நூலை ஆரம்பிக்கிறார்கள். இப்பொழுது (16-12-2010 அன்று) நம்மை கோடையில் விட்டுவிட்டு அவர்கள் நிரந்தர வசந்தத்தை தேடியல்லவா சென்றுவிட்டார்கள். இதுவரை நாம் அனுபவித்திராத துயரத்தை இப்பொழுது அனுபவிக்கிறோம். அவர்களுடைய பேச்சுக்களும் நடைமுறைகளும் மாறிமாறி மனக்கண் முன் தோற்றமளித்துக் கொண்டே இருக்கின்றன.   

பிறப்பு:
ஹள்ரத் அவர்கள் 12-06-1944 (ஜமாதுல் ஆகிர் - 1363) அன்று கீரனூரில் பிறக்கிறார்கள். இன்றோ அவர்களைப் பற்றி யாருக்கும் தெரியாமல் இருக்கமுடியாது. நினைவுகளை, படித்தவர்கள் முழுமையாகவே அறிந்திருப்பார்கள். இறந்தவர்களெல்லாம் வாழ்ந்தவர்களுமல்லர், பிறந்தவர்களெல்லாம் வாழப் போகிறவர்களுமல்லர், பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டதெல்லாம் வாழ்க்கையுமல்ல, வாழ்ந்தால் இப்படி வாழவேண்டும் என்று சொல்ல வேண்டும் அதுவே வாழ்க்கை, என்று ஹள்ரத் அவர்கள் சொல்வார்கள். அப்படியொரு வாழ்வை முடித்துவிட்டு நம்மைவிட்டும் பிரிந்திருக்கிறார்கள். லால்பேட்டை மன்பவுல் அன்வார் மத்ரஸாவில் ஓதி ஸனது பெற்றிருக்கிறார்கள். தாருல் உலூம் தேவ்பந்தில் தௌரத்துல் ஹதீஸ் ஓதினார்கள்.  ஒரு வருட ஜமாஅத்தும் சென்றிருக்கிறார்கள்.  05-09-1979 அன்று யூஸுபிய்யாவுக்கு முதல்வராக பொறுப்பேற்கிறார்கள். அதற்கு முன்பு ஈரோட்டிலும் திருச்சியிலும் பணியாற்றியிருக்கிறார்கள்.

 மார்க்க ரோஷத்திற்கு சொந்தக்காரர்

மார்க்கப் பற்றுள்ளவராக மட்டும் இருந்தால் போதாது. மார்க்கப் பித்தனாக இருக்க வேண்டும். மார்க்கரோஷமுள்ளவராக இருக்க வேண்டும்.   ஹள்ரத் அவர்கள் அதற்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். வட்டியைப் பற்றி சில மேதாவிகள் உளறித் தள்ளிய போது ஹள்ரத் அவர்கள் கொதித்துப் போனார்கள். பெண்கள் உயர்கல்வி படிக்கும் விஷயத்திலும் ஹள்ரத் அவர்கள் மனம் வெதும்பியிருக்கிறார்கள் எந்தக் காரியத்திலும் ஹள்ரத் அவர்கள் பதற்றப்பட மாட்டார்கள். ஒரு இடத்திற்கு இன்ன நேரத்திற்குப்  போய்ச் சேரவேண்டும். ஆனால் வாகனப் போக்குவரத்தின் சூழ்நிலை அந்த நேரத்தில் போய்ச் சேரமுடியாத நிலையில் இருந்தாலும் எந்த பதற்றமும் இல்லாமல் அமைதியாக இருப்பார்கள். அல்லாஹ் நாடியது மட்டுமே நடக்கும் என்பதில் இருந்த அழுத்தமான நம்பிக்கை பதஷ்டத்தை போக்கிவிடும். பயானில் நிதானம் வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்கள். அவசரப்படக் கூடாது. பதற்றப் படக்கூடாது. கோபப்படக்கூடாது. எதிர் கருத்தைத் தாக்கலாம். நபரைத் தாக்கக் கூடாது. பயானில் நம் முன் உள்ள மக்களையும் நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும். நம்முடைய பேச்சையும் நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். நிதானமிழந்து விடக்கூடாது என்று ஹள்ரத் அவர்கள் சொல்வார்கள். அவ்வாறே தங்களுடைய பயானையும் அமைத்துக் கொண்டார்கள்.

இனிமையான இபாதத்:
அவர்களுடைய தொழுகை ரசிக்குமளவுக்கு அமைதியும் நிதானமும் நிரம்பியதாக இருக்கும். ருகூஃவுக்கும் ஸஜ்தாவுக்கும் இடையில் அவர்கள் தாமதிப்பதைப் பார்த்தால் ஓத வேண்டிய சுன்னத்தான துஆக்களையெல்லாம் ஓதிவிட்டுத் தான் செல்கிறார்கள், என்பது தெளிவாகவே விளங்கும். அவசர ருகூஃ, ஸுஜூதைக் காணமுடியாது. தொழுதால் இப்படியல்லவா தொழவேண்டும்.  பயணத்தில் சென்று விட்டு இரவு 12 அல்லது ஒரு மணிக்குத் திரும்பினாலும் தஹஜ்ஜுத் தவறிவிடாது. பயணத்தில் எந்தத் தொழுகையும் தப்பிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். அதற்காக பெரும்பாலும் மத்ரஸா விடுமுறையில் மாணவர்களை அனுப்பும் போது ஃபஜ்ருக்குப் பின்னால் அனுப்பி வைப்பார்கள். ஒரு சமயம், பயணத்தில் தொழுகை தப்பிவிடுமென்றால் அடுத்த தொழுகையின் நேரம் எந்த ஊருக்குப் பக்கத்தில் செல்லும் போது வருமோ அந்த ஊர் வரை மட்டுமே டிக்கட் எடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். எப்பொழுதும் தஸ்பீஹ் மணியை கையில் வைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். திக்ரு செய்வதாக இருந்தால் ஓரிடத்தில் அமர்ந்து ஓர்மையாக திக்ரை முடித்து விட்டுத்தான் எழுந்திருப்பார்கள். ஏறத்தாழ 13 வருடங்களுக்கு முன்னால் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்ட போது திண்டுக்கல்லில் மழைத் தொழுகை நடைபெற்றது. அதில் ஹள்ரத் அவர்கள் நீண்ட நேரம் அழுது அழுது துஆ செய்தார்கள். (கல்லும் கரைந்து விடும். ஆனால் கண்களிலிருந்து கண்ணீர் வருவது அவ்வளவு சாதாரணமானதல்ல.) அன்றிரவு திண்டுக்கல்லில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது, இன்றும் நம்முடைய மனதில் பசுமையாக இருக்கிறது. ஹள்ரத் அவர்கள் எப்பொழுதும் உளூவுடன் இருப்பதை விரும்புவார்கள். ஒரு தடவை இரவு நேரத்தில் பல தடவை சிறுநீர் கழிக்கச் சென்ற போது ஒவ்வொரு தடவையும் ஏறத்தாழ ஆறேழு தடவை (ஒரே இரவில்) உளூ செய்திருக்கிறார்கள்.  பொறுப்புகளின் பொறுப்பாளர்:
ஹள்ரத் அவர்கள் மௌத்தாவதற்கு சில தினங்களுக்கு முன் (ஞாயிற்றுக் கிழமை) கீரனூர் சென்றிருந்தார்கள். அப்போது அவர்களுடைய மனைவி கீரனூரில் சில நாட்கள் தங்கிவிட்டுச் செல்லுங்கள் என்று சொன்னதற்கு மாணவர்களுடைய பரீட்சை பேப்பரைத் திருத்த வேண்டும் என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள். அன்று தான் மாதப்பரீட்சை நடந்து முடிந்திருக்கிறது. அவற்றை உடனடியாக திருத்தி முடிக்க வேண்டுமென்பதில் முழுக் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். மதரஸா மாணவர்கள் சாப்பிடும் அறையில் விரிக்கப்பட்டிருக்கும் விரிப்புகளில் அழுக்கு இருந்தால் கூட நாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற நல்ல சிந்தனை கொண்ட வல்லவர் அவர். வஃபாத்தாவதற்கு சில தினங்களுக்கு முன் சமையல் காரர் பற்றாக்குறையாக இருந்த போது நாளைக்குள் சமையல் காரர் வந்து விடவேண்டும். இல்லையனால் நாம் தான் போய் சமைக்க வேண்டும். ஏனெனில் நாம் தான் பொறுப்பளர் என்று சொன்னார்கள்.  சில சமயம் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் டீ - தேனீரை வாங்கி வரும்படி கூறுவார்கள். சுகர் இருந்தும் அதைக் குடித்துப் பார்த்து மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் டீ தரமானதாக இருக்கிறதா? என்று பரிசோதிப்பார்கள். சில சமயம் தாங்களே சமையலறை சென்றும் கவனிப்பார்கள். மாணவர்களுடைய சாப்பாடு தரமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்கள். அது விஷயத்தில் மாணவர்களுடைய விருப்பத்தையும் கேட்டறிந்து பரிசீலித்து அதையும் நிறைவேற்றி வைப்பார்கள். மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் புரோட்டா போட வேண்டுமென்று ஆசைப்பட்ட போது அதையும் ஹள்ரத் அவர்கள் நிறைவேற்றித் தந்தார்கள். சாப்பாடு ருசியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்குத் தோதுவாகவும் இருக்க வேண்டும் என்றும் விரும்பினார்கள். ஒரு தடவை ஹள்ரத் அவர்கள் உஸ்தாதுமார்களோடு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மதரஸா சாப்பாட்டின் பட்டியலை விளக்கிக் கூறி இந்த உணவு சமச்சீர் உணவு என்று கூறினார்கள்.      அமானிதம் காத்தவர்:
ஹைஅத்துஷ் ஷரீஅத்துக்காக ஹள்ரத் அவர்கள் அயராது பாடுபட்டது நாடறிந்த உண்மை. அதற்குரிய செலவுக்காக ஹள்ரத் அவர்களின் பொறுப்பில் அமானிதப் பணம் இருக்கும். வஃபாத்திற்கு முன்னால் ஏறத்தாழ 88,000 ரூபாய் இருந்தது. ஹள்ரத் அவர்கள் தங்களுடைய கடைசிக் காலத்தில் அந்தப்பணத்தை முஹம்மது அலி ஹள்ரத் அவர்களிடம் ஒப்படைத்து எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் இந்தப் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்து விடவேண்டும் என்று கூறிச் சென்றார்கள். முஹம்மது அலி ஹள்ரத் அவர்களும் அவ்வாறே ஒப்படைத்து விட்டார்கள். மஜ்லிஸுல் மதாரிஸில் அரபிய்யாவுடைய நாஜிமாக பொறுப்பேற்ற பின் அதற்கும் பொருளாதாரம் தேவைப்பட்டது. ஹள்ரத் அவர்கள் ஹைஅத்துடைய பணத்தை அதற்காக செலவு செய்யவில்லை. ஹைஅத்துஷ்ஷரீஆ உடைய பணம் ஹைஅத்துடைய பெயரில் வந்தது. எனவே, அந்த பணத்தை மஜ்லிஸுல் மதாரிஸுக்காக செலவு செய்யக்கூடாது. உரியவர்களிடம் அனுமதி பெற்ற பின்பு தான் அது பற்றி யோசிக்கவேண்டும், என்று கூறிவிட்டார்கள். அனுமதி பெறுவதற்கு முன் வஃபாத்தாகி விட்டார்கள். பணமும் உரியவரிடம் ஒப்படைக்கப் பட்டுவிட்டது. இபாதத் எனும் வணக்க வழிபாடு, கிலாஃபத் எனும் இறைப் பிரதிநிதித்துவம்,  அமானத் ஆகிய மூன்று விஷயங்களிலும் செம்மையாகவே செயல்பட்டுக் காட்டியிருக்கிறார்கள்.    ஹள்ரத் அவர்கள் நிர்வாக விஷயத்தில் மாணவர்களைக் கண்டிக்கும் விஷயத்தில் உறுதியாக இருப்பார்கள். ஒரு தடவை ஒரு மாணவர் வந்து ஏதோ ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டி அது ஹள்ரத் அவர்களுடைய எண்ணப்படியே நடந்ததால் அல்லாஹ்வும் ஹள்ரத் அவர்களுடன் தானே இருக்கிறான் என்று கூறி சடைந்து கொண்டார். இந்த வாசகம் அன்றே நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. அவர்களுடைய நடவடிக்கைகள் சரியாக இருப்பதால் தானே அல்லாஹ் அவர்களுடைய திட்டத்தை சிறப்பான முறையில் நடத்தாட்டுகிறான்.

வெள்ளை நிறத்தில் கொள்ளை ஆசை:
வெள்ளை நிற ஆடைகளைப் பற்றி நபிமொழிகளில் சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது. ஹள்ரத் அவர்களுக்கும் கலப்படமில்லாத வெள்ளை நிற ஆடைகளில் கொள்ளை ஆசை. ஆடைகளில் மட்டுமல்ல; அனைத்துப் உபயோகப் பொருட்களிலும். வெள்ளை லுங்கியிலும் கூட ஓரத்தில் பல நிறங்களில் கறை இருக்கும். ஹள்ரத் அவர்கள் அந்தக் கறைகளும் இல்லாத லுங்கிகளை தேடிப் பார்த்து வாங்குவார்கள். அபா, தலைப்பாகை, செருப்பு, ஷு, கைக்கடிகாரம், செல்ஃபோன் என உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை வெள்ளை மயமாகத் தான் இருக்கும். வஃபாத்திற்கு முதல் நாள் மதுரை சென்றிருந்த போது அங்கு ஒரு பள்ளியின் இமாமிடம் எனக்கு எல்லாமே வெள்ளையாக இருக்க வேண்டுமென்று தான் ஆசைப்படுகிறேன். மக்கள், மனைவி மட்டும் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். மற்றவை வெள்ளையாக இருந்தால் அழுக்காகி விடும் என்று கவலைப் படுகிறார்கள், என்று நகைச்சுவையாக பேசியிருக்கிறார்கள். அன்று மதுரையில் வெள்ளைப் போர்வை வாங்க வேண்டுமென்று விரும்பி கடைகளில் தேடியும் கிடைக்கவில்லை. மதரஸா மாணவர்களும் வெள்ளை ஆடைகளையே அணிய வேண்டுமென்று சட்டமியற்றினார்கள். இப்பொழுதும் அந்தச் சட்டம் அமுலில் இருக்கிறது. யூஸுஃபிய்யா பள்ளிவாசலில் அனைத்து மாணவர்களும் வெள்ளை ஆடையில் இருப்பதால் வெளியிலிருந்து தொழ வருபவர்களில் சிலர் மலக்குமார்களுடன் சேர்ந்து தொழுவது போல் இருப்பதாக கூறியுள்ளனர். ஹள்ரத் அவர்கள் மறுநாள் வஃபாத்தாகும்போது எப்போதும் போல் வெள்ளை லுங்கி, வெள்ளை பனியன் அணிந்தவர்களாக வெள்ளைப் போர்வையைமுறையாக போர்த்திய நிலையிலேயே வஃபாத்தானார்கள்.         

 யூஸுபிஃய்யா என் தாஜ்மஹால் 
மொகலாய மன்னன் ஷாஜஹான் மும்தாஜின் நினைவாக காதலின் சின்னமாக தாஜ்மஹாலைக் கட்டினான். அதற்காக செலவு செய்த செல்வமும் காலமும் எண்ணிக்கையில் வராதவை. ஹள்ரத் அவர்கள் யூஸுஃபிய்யா மதரஸாவை என் தாஜ்மஹால் என்று கூறினார்கள். மனைவியுடன் இருந்த காலத்தை விட யூஸுபிய்யாவுடன் இருந்த காலம் தான் அதிகம். ஷாஜஹான் கட்டியது கட்டடம். ஆனால் இவர் கட்டியதோ கல்விக் கோபுரங்கள். ஒழுக்கமும் திறமையும் தென்றலாய் வீசும் மாணவத் தோட்டங்கள். யூஸுபிய்யாவுக்கு விளம்பரம் ஏதும் கிடையாது. தேவையுமில்லை. நம்முடைய மாணவர்கள் தான் விளம்பரப் பிம்பங்கள், என்பது ஹள்ரத் அவர்களுடைய ஆழ்மனதில் அமிழ்ந்து கிடக்கும் ஆசை.  

 ஊட்டச் சத்து நிறைந்த பாடம்:
ஹள்ரத் அவர்களுடைய பாடத்தில் இருந்தால் நேரம் போவதே தெரியாது. மாணவர்கள் சலிப்படையும் நிலையை ஏற்படுத்தமாட்டார்கள். மாணவர்களை, பாடத்தில் சுதந்திரமாகப் பேசவிடுவது என்பது மட்டுமல்ல; தங்களின் கருத்தை எதிர்த்துப் பேசுவதைப் பார்த்து சந்தோஷப்படுவார்கள். என்னுடைய மாணவர்கள் என்னைவிடத் திறமைசாலிகள் என்று பொது மேடைகளில் பேசுமளவுக்கு பரந்த மனப்பான்மையுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள். ஹள்ரத் அவர்கள் மிஷ்காத் என்னும் ஹதீஸ் நூலை பாடம் நடத்துவார்கள். ஷாபியீ மத்ஹபைச் சார்ந்த மாணவர்களும் பாடத்தில் இருப்பார்கள். மாணவர்களின் சிந்தனை ஆற்றலைத் தூண்டிவிடவேண்டும் என்பதற்காகவே ஹனஃபீ மத்ஹபுக்குரிய ஆதாரங்களைக் கூறி அதையே சரிகாண்பார்கள். அப்பொழூது ஷாபியீ மத்ஹபுடைய ஆதாரத்தை கூறி மாணவர்கள் எதிர்வாதம் புரிவார்கள். எத்தனையோ மஸ்அலாக்களில் மிஷ்காத் பாடத்தில் ஷாபியீ மத்ஹபுடைய சட்டம் தான் சரி என்பதற்குரிய ஆதாரங்களைக் கூறி சண்டையிடுவது போல் மாணவர்கள் பேசியது இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது. ஹள்ரத் அவர்கள் எந்த முகச்சுளிப்பும் இல்லாமல் சிரித்த முகத்தோடு அப்படிப் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். இன்று அந்த வதனத்தைக் காணாமல் ஏங்குகிறோம்.

மாணவர்கள் என் உயிரணுக்கள்:
நான் பெற்ற பிள்ளைகள் உடலணுக்கள் என்றால் என்னுடைய மாணவர்கள் உயிரணுக்கள், என்று சொல்வார்கள். உயிருக்கு உயிராக மாணவர்களை நேசித்தார்கள். மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அவர்கள் பாடுபட்டது கொஞ்சநஞ்சமல்ல. நீங்கள் முன்னேற நாங்கள் என்ன செய்யவேண்டும்? என்று அவர்களிடமே யோசனை கேட்பார்கள். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் பட்டம் பெறும் மாணவர்களிடம் பெற்றதும் பெறவேண்டியதும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதச் சொல்வார்கள். மாணவர்கள் ஓதுவதற்கு அவர்களுடைய பொருளாதாரம் தடையாக இருக்குமானால் அவர்களுக்கு தாங்களே பொருளாதார உதவியும் செய்து கொடுப்பார்கள்.

தரமான தர்பியத்:
மாணவர்களின் தர்பியத் மற்றும் ஒழுக்க நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்தினார்கள். தொழுயில் தாமதாமானால் நாஷ்டா பந்த் செய்யப்படும். எனினும் மாணவர்களுக்கு நாஷ்டா கொடுக்காமல் இருப்பதை நினைத்து ஹள்ரத் அவர்கள் மனம் வருந்துவார்கள். குற்றம் செய்த பிறகு தண்டிப்பதற்கு நாம் ஒன்றும் போலீஸ் அல்ல; அவர்களைத் தவறு செய்யவிடாமல் பார்த்துக் கொள்வதே நம்முடைய பொறுப்பு, என்பார்கள். அதே சமயம் தவறு செய்தது உறுதியாகிவிட்டால் தண்டிக்காமல் விட மாட்டார்கள். அந்தத் தவற்றை மற்றவர்கள் செய்யக்கூடாது என்பதற்காக பள்ளிவாசலில் வைத்தே எல்லோருக்கும் முன்னிலையில் விசாரிப்பார்கள். அஸரிலிருந்து மக்ரிப் வரை மட்டும் மாணவர்கள் வெளியில் சென்று வரலாம். அந்த சமயத்தில் மாணவர்கள் வெளியில் செல்வது வழக்கம். தவறு செய்த மாணவர் அஸருக்குப் பின் வெளியே செல்லக்கூடாது என்று சொல்வது கடுமையான தண்டனை. எனினும் பல சமயம் தவறிழைத்த மாணவர்களுக்கு அந்தத் தண்டனை வழங்கப்படும். அப்பொழுது ஹள்ரத் அவர்கள் இந்த மாணவர்களை அஸருக்குப் பிறகு எப்படி உட்கார வைக்கமுடிகிறது தெரியுமா? என்று கேட்டுவிட்டு தண்டனை கொடுப்பவர்கள் வெளியே செல்வதில்லை. எனவே தான் அது சாத்தியமாகிறது என்று சொல்வார்கள். ஹள்ரத் அவர்களும் மதரஸாவின் தற்போதைய முதல்வர் முஹம்மது அலி ஹஜ்ரத் அவர்களும் வெளியே செல்லமாட்டார்கள். மாணவர்கள் தஹஜ்ஜுத் தொழவேண்டுமென்று கூறினால் உஸ்தாதுமார்கள் முதலில் தஹஜ்ஜுத் தொழவேண்டும். மாணவர்களிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதை நம்மிடமிருந்து தான் ஆரம்பிக்கவேண்டும். ஓதும் காலத்தில் நாம் எப்படி இருந்தோம், எனபதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.  மாணவர்களை அவ்லியாக்களாக பார்க்கக் கூடாது. அதாவது அவர்கள் எந்தத் தவறும் செய்யக்கூடாது, என்று நினைக்கக்கூடாது. அப்படியானால் நமக்கு எந்த வேலையும் இருக்காதே! என்று கூறுவார்கள்.

உயிரோட்டமுள்ள பாடத்திட்டம்
மதரஸாக்களில் தர்ஸெ நிழாமீ பாடத்திட்டம் தான் அமுலில் உள்ளது. யூஸுபிய்யாவிலும் அதே திட்டம் தான் செயல்படுத்தப்படுகிறது. எனினும் தர்ஸெ நிழாமீயில் இன்னின்ன கலைகள் இருக்கிறது. அவற்றுக்குரிய கிதாபுகளை நடத்தவேண்டும் என்று சொல்லலாம். இன்னின்ன கிதாபுகள் இருக்கிறது. அந்த கிதாபுகள் தான் தர்ஸெ நிழாமீ. அவற்றில் எந்த கிதாபுகளையும் மாற்றக்கூடாது, என்று சொல்லக்கூடாது, என்று ஹள்ரத் அவர்கள் கூறுவார்கள். ஹள்ரத் அவர்களுடைய நீண்ட கால அனுபவத்தில், மாணவர்கள் பயிற்சி ஏதும் செய்யாமல் வெறும் சட்டங்களை மட்டும் படித்துக் கொண்டிருந்தால் அதனால் என்ன பயன்? என்ற கேள்வி தோன்றியுள்ளது. அதன் விளைவாக பயிற்சிகள் இருக்கும் படியான கிதாபுகளையும் பாடத்திட்டத்தில் சேர்த்தார்கள். அரபி இலக்கணம்:
அரபி இலக்கணத்தில் படித்த சட்டங்களை நன்றாக விளங்குவதற்கு பயிற்சி அவசியம் என்பதால் பயிற்சிகளுடன் கூடிய கிதாபாகிய அந்நஹ்வுல் வாளிஹ் என்ற கிதாபை (மீஜான், அஜ்னாஸ், ஜ்னஜானீ, ஹிதாயதுந்நஹ்வு, அல்ஃபியா போன்ற கிதாபுகளுடன்) பாடத்தில் இணைத்தார்கள். அரபி எழுத்துப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி வளர்வதற்காக பிரத்தியேகமாக அல்அதபுல் அரபீ என்ற பாடத்தை சேர்த்தார்கள். மன்திக், பலாகா ஆகியவை தர்ஸெ நிழாமீயில் இரு முக்கியமான கலைகள். இதற்காக மதரஸாக்களில் பல கிதாபுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் அவற்றின் மூலம் குர்ஆன் ஹதீஸுக்கு தொடர்புப் படுத்திக் காட்டப்படுவது அரிதாகவே இருக்கும். இவ்விரு கலைகளிலும் அல்கிஸ்தாஸ், அல்பலாகா ஆகிய இரு கிதாபுகளை ஹள்ரத் அவர்களே தொகுத்திருக்கிறார்கள். யூஸஸுபிய்யாவில் அவ்விரு கிதாபுகளும் நடத்தப்படுகிறது. அதைப் படித்துக் கொடுப்பதோடு நிறுத்திவிடாமல் அவற்றுக்குரிய பயிற்சிகளும் செய்விக்கப் படுகிறது. இதன் மூலம் ஹள்ரத் அவர்கள் பல கிதாபுகளைப் படிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்களை விட சிறப்பான ஒரு முன்னேற்றத்தை இந்த ஒரு கிதாபின் மூலம் கிடைக்கச் செய்தார்கள். ஸஹிஹ், ளயீஃப்:
மத்ஹபு மறுப்பாளர்கள் தமிழகத்தில் ஊடுருவிய போது ஹள்ரத் அவர்கள் ஹைஅத்துஷ் ஷரீஅத் மூலம் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார்கள். பொதுவாக மத்ஹபு மறுப்பாளர்கள் ஒரு ஹதீஸை எடுத்துக் கொண்டு இது ளயீஃப் - பலகீனமானது. இது ஸஹிஹ் சரியனானது, பலமானதுஎன்றும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் வரும் இந்த அறிவிப்பாளர் பலகீனமானவர். எனவே இந்த ஹதீஸை ஏற்க முடியாது, என்றும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் பலகீனமாக இருந்தால் பூஸ்ட் கொடுத்தால் பலமாகி விடுவார் என்று விளையாட்டாக பேசுவதைத் தவிர வேறெதுவும் தெரியாதவர்களாகவே நம்மவர்கள் (எல்லாரும் அப்படியல்ல) பேசிக்கொண்டிருந்தார்கள். ஸஹிஹ், ளயீஃப் என்ற பேச்சை எடுத்தாலே நமக்கு எதுவும் விளங்காதது போலவே இருந்தது. ஏனெனில் மதரஸாக்களில் அது பற்றி எதுவும் கற்றுக் கொடுக்கப்படாததே காரணம். மதரஸாக்களில் அந்தத் துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பாடம் நடத்தினால் ஸஹிஹ் ளயீஃப் என்று இவர்கள் பேசிக்கொண்டிருப்பது இவ்வளவு தான் என்று புரிந்துவிடும். இந்நிலையை மாற்றுவதற்காக ஹள்ரத் அவர்கள் யூஸுபிய்யாவில் திர்மிதீ ஹதீஸ் கிதாபையே இல்முல் ஜரஹ் வத்தஃதீல் மின் ஸுனனித் திர்மிதீ என்ற பெயரில் ஒரு பாடத்தைச் சேர்த்தார்கள். இதன் மூலம் மாணவர்களிடம் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களும் ஹதீஸுடைய அறிவிப்பாளர்களைப் பற்றி ஆய்வு செய்பவர்களாக மாறிவிட்டார்கள். இப்படியொரு பாடத்தின் கீழ் படிக்கும் போது தான் திர்மிதீ மிஷ்காத் ஷரீஃப் போல ஒரு ஹதீஸ் கிதாபு மட்டும் கிடையாது. ஹதீஸின் தரம் பற்றியும் அறிவிப்பாளர்களின் தரம் பற்றியும் திர்மிதீயில் நாம் படிக்க முடியும் என்பதை விளங்க முடிகிறது.             

மதரஸாக்களின் மாண்பை உணர்த்தியவர்

நீங்கள் நபியின் வாரிசுகள்:
ஒரு நேரத்தில் மதரஸாக்கள் சத்திரம் போல இருந்தது. ஏழைகள் வருவார்கள். யாராவது சாப்பாடு கொடுப்பார்கள். பாடங்களை ஓதிக் கொள்வார்கள். இந்நிலையில் ஓதினால் ஓதும் காலத்திலேயே நாம் மற்றவர்களை - தனவந்தர்களை நம்பித்தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது தான் யதார்த்தம். ஆனால் ஹள்ரத் அவர்கள் இந்நிலையை மாற்றினார்கள். நுபுவத்துடைய இல்மின் மகத்துவத்தையும் மாண்பையும் மாணவர்களுக்கு விளங்க வைத்தார்கள். நீங்கள் நபியின் வாரிசுகள். (மற்றவர்கள் ஈமான் இல்லையானால் ஃபிர்அவ்னுடைய வாரிசாக இருக்கலாம். காரூனுடைய வாரிசாக இருக்கலாம். ஹாமானுடைய வாரிசாக இருக்கலாம்.) நபிமார்கள் தான் ஸதகாவை சாப்பிட மாட்டார்களே! பிறகு ஏன் நீங்கள் ஸதகாவை எதிர்பார்க்கிறீர்கள்? மக்களுடைய அழுக்கு நபிமார்களின் வாரிசுகளுக்குத் தேவைதானா? என்று கூறி ரோஷமூட்டுவார்கள். அத்தோடு நிற்கவில்லை. யூஸுபிய்யாவில் கறுப்பு ஆடு அதாவது ஸதகா ஆடு வாங்குவதில்லை. அகீகா ஆடாக இருந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள். இந்த முடிவுக்குப் பிறகு மதரஸாவுக்கு ஆடுகளின் வருகை குறைய வேண்டும். ஆனால் நடந்தது அதுவல்ல. அல்லாஹ்வின் கிருபையால் முன்பை விட அதிகமாகவே விருந்தும் (அகீகா) ஆடுகளும் வர ஆரம்பித்தன.    

சாப்பிடப்பிறந்தவர்களல்ல:
கடையில் போய் ஏதாவது சாமான் வாங்கினால் நான் ஓதுகிற பிள்ளை. எனவே விலையைக் குறைத்துக் கொடுங்கள் என்று கேட்கக்கூடாது. ஏனெனில், நீங்கள் படிக்கும் இல்மு ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் (எவ்வளவு அதிகமான பணமாக இருந்தாலும் அதற்குப் பகரமாக) விற்கப்படுமளவுக்கு தரம் தாழ்ந்ததல்ல. மார்க்கக் கல்வி, நுபுவத்துடைய இல்மு விலை மதிப்பற்றது, என்பதை மனதில் பதிய வைப்பார்கள். கல்யாண வீட்டில் சாப்பாடு மீதமாகி விட்டால் அதை மதரஸா மாணவர்களுக்கு அனுப்பி விடுவது வழக்கம். ஆனால் இதை ஹள்ரத் அவர்கள் விரும்பவே மாட்டார்கள். ஏனெனில் மார்க்கக் கல்வி பயிலும் மாணவர்கள் அவ்வளவு கேவலாமனவர்கள் அல்ல. அவர்களுக்காக சமைத்து கொடுப்பது தான் மார்க்கத்திற்கு கொடுக்கும் மரியாதை. எச்சில் சோற்றை ஊரில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பங்கு வைத்து பிரித்துக் கொடுப்பதால் ஏற்படும் சிரமத்தை தவிர்ப்பதற்காக ஒரே இடத்தில் கொண்டுவந்து கொடுத்துவிட்டு மிக எளிதாக நன்மையை சம்பாதிக்க நினைக்கிறார்கள். இவர்கள் நபியின் வாரிசுகள். நபித்தோழர்கள் தங்களுக்கும் தங்களுடைய மனைவி மக்களுக்கும் சமைக்கப்பட்டிருந்த சாப்பாட்டை நபியவர்களின் விருந்தாளிக்குக் கொடுத்து விட்டு தாங்கள் பட்டினியாக இருந்து திருக்குர்ஆனில் இடம் பிடித்தார்கள். அல்லாஹ் அவர்களை புகழ்ந்து கூறினான் என்பதை இவர்கள் ஞாபகம் வைக்கட்டும். கல்யாண விருந்து முடிந்த பின் வரும் சாப்பாட்டை ஹள்ரத் அவர்கள் வாங்கமாட்டார்கள். எனவே யாராவது மதரஸா மாணவர்களுக்கு விருந்து கொடுக்க விரும்பினால் மூன்று நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும். என்று சட்டமியற்றினார்கள். இது தவிர இரவு உணவுக்குரிய சாமான்கள் மதரஸாவில் வாங்கப் பட்டிருக்கும். அன்று மாலை வரும் சாப்பாட்டை வாங்கினால் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடும் வீணாகிவிடும். மக்களிடம் மதரஸா மாணவர்களுக்காக சந்தா கேட்பதற்கு வெட்கப்பட வேண்டிய தேவையில்லை என்று கூறுவார்கள். ஏனெனில் நாம் அவர்களிடம் நமக்காக எதையும் கேட்பதில்லை. மார்க்கத்திற்கு உதவுமாறு அவர்களிடம் வேண்டுகிறோம். உதவினால் அது அவர்களுக்குத் தான் லாபம். அதற்குரிய நன்மைகளை அவர் பெற்றுக் கொள்வார். பாக்கியம் பெற்றவராகி விடுவார். அவர் எதுவும் கொடுக்க வில்லையானால் அவர்தான் பாக்கியமிழந்தவர். அதற்காக அவர் தான் கவலைப்பட வேண்டும். வெட்கப்பட வேண்டும். ஹள்ரத் அவர்கள் அமர்ந்து பாடம் நடத்துவதற்கு கம்பீரமான இருக்கை ஒன்றை செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட இருக்கை தேவைதானா? என்று ஹள்ரத் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஹள்ரத் அவர்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் பாடம் நடத்தும் போது, பார்த்தால் மன்னர்கள் இருப்பது போன்று கம்பீரமான இருக்கையில் அமர்ந்து பாடம் நடத்துவார்கள். நாம் தான் சிறியவர். மார்க்கக் கல்வி உயர்ந்தது என்று பதில் கூறினார்கள். இதே கேள்வியை மாணவர்கள் கேட்ட போது நான் செய்வதெல்லாம் எனக்காக அல்ல; (நான் சிறிது காலம் தான் இருப்பேன்) நான் செய்வதெல்லாம் முஹம்மது அலி ஹள்ரத் அவர்களுக்காகத் தான் என்று பதில் கூறினார்கள்.

கூட்டுக்குர்பானி:
யூஸுபிய்யாவில் கூட்டுக்குர்பானிக்கு வருடாவருடம் ஏற்பாடு செய்யப்படுகிறது. பங்குகள் சேர்க்கப்பட்டு மாடுகள் வாங்கப்படும். இதற்கிடையே மதரஸாவில் பங்குகள் சேராமல் சிலர் சொந்தமாக மாட்டை வாங்கி மதரஸாவில் கொண்டு வந்து விடுவார்கள். அறுக்கும் நாளில் அவர்களே வந்து அறுத்து கறியை எடுத்துக்கொண்டு தோலை மதரஸாவுக்கு கொடுத்து விடுவார்கள். ஆரம்பத்தில் ஹள்ரத் அவர்கள் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்க வில்லை. எனினும் காலப்போக்கில் இது மதரஸாவுக்கு அதிகப்படியான சிரமத்தைக் கொடுத்தது. அவர்கள் தங்களுடைய மாட்டை மெலிந்து விட்டதாக கருதினால் மதரஸா காரர்கள் தங்களுடைய மாட்டுக்கு முறையாக தீனி கொடுக்க வில்லையோ? என்ற எண்ணம் ஏற்படலாம். பிறகு அறுக்கும் நாட்களில் ஏற்கனவே பங்கு சேர்ந்தவர்களுக்கு முதலிடம் கொடுத்து அவர்களுக்கு மாடு அறுத்து இறைச்சி பங்கீடு செய்வதற்குரிய வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தங்களுடைய மாட்டை அறுக்க வேண்டுமே! என்று அவசரப்படலாம். மதரஸா மாட்டை அறுத்து உரிப்பதற்கு 20 நிமிடங்கள் ஆனால் தனியார் மாட்டுக்கு ஒரு மணிநேரம் வரை ஆகும். இதனால் மதரஸாவுடைய பொது வேலைகள் பாதிக்கப்படும். மதரஸா நிர்வாகத்துக்குள் அவர்களுடைய அதிகாரம் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது. ஒரு தடவை தனியார் மாட்டை அறுப்பதற்கு மதரஸாவில் முறையான ஏற்பாடு இல்லை என்று கூறி சிலர் உஸ்தாதுமார்களிடம்  சண்டையிட்டு கண்ணியக் குறைவாக நடந்து கொண்ட கசப்பான அனுபவமும் இம்மதரஸாவுக்கு இருக்கிறது. யூஸுபிய்யாவுக்கு தோல் வர வேண்டும். அது கண்ணியமாக வரவேண்டும். இந்த தனியார் மாட்டு விவகாரம் பங்குதாரர்களுக்கும் மதரஸாவுக்கும் சிரமத்தை உண்டாக்கும் வகையில் அமைவதை ஹள்ரத் அவர்கள் விரும்பவில்லை. எல்லாரும் அப்படி நடந்து கொள்ளமாட்டார்கள் தான். எனினும் மாட்டை ஒருவரிடம் வாங்கி ஒருவரிடம் வாங்காமல் இருக்கமுடியாது. எனவே யூஸுபிய்யாவில் பங்கு மட்டும் தான் சேர்க்கப்படும். தனியார் மாடுகள் அனுமதிக்கப்படாது, என்று ஹள்ரத் அவர்கள் புரட்சிகரமான ஒரு முடிவை எடுத்தார்கள். அது மதரஸாவுக்கு நல்லதொரு பலனைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மதரஸாவின் தேவையை மக்கள் நிறைவேற்ற வேண்டுமே தவிர மக்களின் தேவையை மதரஸா நிறைவேற்ற வேண்டும் என்று யாராவது சொன்னால் மார்க்கம் அவரை எப்படிப் பார்க்கும்?                       

 நிழலுக்கும் வருத்தம் தராத உஸ்தாதுமார்கள்
ஹள்ரத் அவர்கள் தங்களுடைய நினைவுகள் என்ற நூலில்  என் நிழலுக்குக் கூட வருத்தம் வராத வகையில் மிகப்பெரும் சகிப்புத் தன்மையோடும் பாசத்தோடும் ஒத்துழைத்து வருகிறார்கள்,என்று பெருமிதத்தோடு எழுதியுள்ளார்கள். இதை ஹள்ரத் அவர்களுடைய பெருந்தன்மை என்றே நினைக்கிறோம். உஸ்தாதுமார்கள் அனைவரும் ஹள்ரத் அவர்களுடைய மாணவர்களாக இருந்தும் அவர்களிடம் மிகவும் கண்ணியமாகவே நடந்துகொள்வார்கள். மஷ்வரா சமயத்தில் எதிர்க்கருத்து சொல்வதை வரவேற்பார்கள். என்னவேண்டுமானாலும் பேசுங்கள். என்னுடைய உள்ளம் ஒன்றும் கண்ணாடியல்ல, உடைந்து போவதற்கு! என்றும் கூறுவார்கள். ஹள்ரத் அவர்கள் இந்தோனோஷியாவுக்கு நான்கு மாதங்கள் தப்லீக் ஜமாஅத்தில் சென்று நாடு திரும்பினார்கள். அப்பொழுது திண்டுக்கல் வருவதற்கு முன் மதுரையில் ஒரு ஜோடில் கலந்து கொள்வதற்காக சென்றார்கள். நாங்கள் ஹள்ரத் அவர்களைப் பார்ப்பதற்காக மதுரை சென்றிருந்தோம். அவர்களைப் பார்த்து பேசிவிட்டு திண்டுக்கல் புறப்படத் தயாரோனோம். ஆனால் ஹள்ரத் அவர்கள் மதுரையிலேயே மற்றொரு பள்ளியில் தங்கவேண்டியிருந்தது. நாங்கள் புறப்படத் தயாரான போது ஹள்ரத் அவர்கள் அங்குள்ளவர்களிடம் உஸ்தாதுமார்கள் ஆரப்பாளையம் செல்வதற்கு வாகனம் கொண்டு வருமாறு கூறினார்கள். இதற்கிடையே ஹள்ரத் அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு வாகனம் தயாராகி விட்டது. ஹள்ரத் அவர்கள் வாகனத்தில் ஏறாமல் எங்களுக்கு வாகனம் வந்து விட்டதா? என்பதைக் கவனித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்குப் பின் ஹள்ரத் அவர்களை வாகனத்தில் ஏறுமாறு கூறப்பட்டும் ஏறவில்லை. எங்களிடம் உங்களுக்கு வாகனம் வந்துவிட்டதா? என்று கேட்டார்கள். கடைசியாக எங்களுக்கு வாகனம் வந்து அதில் நாங்கள் ஏறிச் சென்ற பிறகு தான் ஹள்ரத் அவர்கள் புறப்பட்டார்கள்.    உஸ்தாதுமார்களை தம்மிடம் அழைப்பதாக இருந்தால் கூட அவர்களுக்கு சிரமமில்லாத நேரத்தில் தான் வரச்சொல்வார்கள். அஸருக்குப் பிறகு வெளியே போகும் நேரம். அந்நேரத்தில் அழைப்பதை முடிந்த வரை தவிர்த்திடுவார்கள். எப்போதாவது நிர்பந்தமாக அழைப்பதாக இருந்தால் உங்களுடைய இந்த நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை, என்று பல தடவை கூறியிருக்கிறார்கள். நாஷ்டா சாப்பிடுவதற்கு ஹள்ரத் அவர்களுடைய ரூமைக் கடந்து தான் செல்லவேண்டும். எனவே பெரும்பாலும் நாஷ்டாவுக்கு பெல் அடித்த பின் கூப்பிடுவார்கள். சில சமயம் பெல் அடிப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் நாஷ்டாவுக்கு செல்லும் போது ரூமுக்கு வந்து விட்டு செல்லவேண்டும் என்று சொல்லியனுப்புவார்கள். உஸ்தாதுமார்களுக்கு தொல்லை தரக்கூடாது என்பதில் அவ்வளவு கவனமாக இருந்தார்கள். எங்களுக்கு மத்தியில் (முதல்வர் - உஸ்தாது என்றில்லாமல்) உஸ்தாது மாணவர்கள் என்ற தொடர்பு தான் மிகைத்திருந்தது. மாணவர்களை உற்சாகமூட்டுவது போல் உஸ்தாதுமார்களையும் அவ்வப்போது உற்சாகமூட்டி பாடம் நடத்தும் விஷயத்தில் சிறந்த வழிகாட்டுதலைக் கொடுக்கத் தவறமாட்டார்கள். அவ்வளவு உயர்ந்த மனிதர் இன்று கண்ணை விட்டு மறைந்திருப்பதை, எங்களுடைய கரங்களால் ஜனாஸாவை தூக்கி ஆம்புலன்ஸில் வைத்தபிறகும் எங்களால் நம்பமுடியவில்லை. மத்ரஸாவில் இல்லாத காலங்களில் நாம் ஹள்ரத் அவர்களுக்கு போன் போட்டு விசாரிக்க தாமதித்துவிட்டால் ஹள்ரத் அவர்களே விசாரித்துவிடுவார்கள். சொந்த விஷயங்களையும் அவர்களிடம் பேசி யோசனை பெற்றுக்கொள்வோம்.

டீச்சர் ட்ரெய்னிங்:
 மாணவர்களுடைய முன்னேற்றத்தில் உஸ்தாதுமார்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும். திறமை இருபது சதவீதம் இருந்தால் போதும். ஆர்வம் 80 சதவீதம் இருக்க வேண்டும், என்று கூறுவார்கள். யூஸுபிய்யாவில் யூஸுஃபிகள் தான் உஸ்தாதாக இருக்க வேண்டுமென்று கூறுவார்கள். பாடம் நடத்துவது ஒரு கலை. பொதுவாக ஆசிரியர் பணிக்குச் செல்பவர் முதலில் அவர் பயிற்சி வகுப்புகள் எடுத்திருப்பார். ஆனால் மத்ரஸாக்களில் மட்டும் ஏன் அப்படியொரு நிலையில்லை? என்று ஹள்ரத் அவர்கள் கேட்பார்கள். பாடம் நடத்துவதற்கென பிரத்தியேகமான வழிமுறைகள் இருக்கின்றன. நாம் பாடம் நடத்திக் கொண்டே போகிறோம். விளக்கம் சொல்லிக் கொண்டே போகிறோம். ஆனால் மாணவனுக்கு நாம் எந்த இடத்தில் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாது. வகுப்பறையில் கடைசித் தரத்தில் இருக்கும் மாணவனும் பாடத்தை விளங்கும்படியாக நம்முடைய போதனாமுறை இருக்க வேண்டும்.
இந்நிலையை யூஸுபிய்யாவில் உருவாக்குவதற்காக ஹள்ரத் அவர்கள் ஒரு திட்டம் வகுத்தார்கள். அதாவது, கிதாபின் வாசகத்தை மாணவர்களே படிக்க வேண்டும். அதற்குத் தோதுவாக அவர்கள் முதல் நாளே புதிய பாடத்தை பார்த்து வரவேண்டும். அவர்களே பொருள் செய்ய வேண்டும். தவறு இருந்தால் திருத்த வேண்டும். அதற்குப் பிறகு தேவையான விளக்கத்தைக் கூற வேண்டும். பீரியடு முழுதும் நாமே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அப்படியானால் அது பாடமல்ல, பயானாகிவிடும். பரீட்சையிலும் கூட கேள்வித் தாள் கொடுத்து எழுதச் சொன்னாலும் கிதாபைப் படிக்க வைத்து வாய்ப் பரீட்சையும் கேட்க வேண்டும் என்று சொல்வார்கள். யூஸுஃபிய்யாவில் அப்படியே (எழுத்துப் பரீட்சையும் வாய்ப்பரீட்ச்யையும்) நடப்பில் உள்ளது. பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திறமையும் வளர வேண்டும் என்பதற்காக பட்ட வகுப்பு மாணவர்களை இஷ்ராக் தொழுகைக்குப் பின் உஸ்தாதுமார்களின் கண்காணிப்பில், கீழ் ஜும்ரா மாணவர்கள் நடந்து முடிந்த பாடங்களை சொல்லிக் கொடுக்க வைத்து அதற்குரிய பயிற்சியும் செய்விக்க வேண்டும் என்றொரு நடைமுறையும் யூஸுஃபிய்யாவில் உள்ளது.     யூஸுபிய்யாவில் சம்பளம் முதல் தேதியைக் கடந்தது கிடையாது. ஹள்ரத் அவர்கள் பயணத்தில் இருந்தாலும் 1 ம் தேதியே பட்டுவாடா செய்யப்பட்டுவிடும். மதரஸா விடுமுறை நாட்களுக்கிடையில் முதல் தேதி வந்தால் ஊர் போகும் போதே சம்பளம் கொடுக்கப்பட்டுவிடும். நீங்கள் சந்தோஷமாக குடும்பத்துக்குச் செல்வதில் தான் என்னுடைய மகிழ்ச்சி இருக்கிறது, என்று கூறி தந்தைப் பாசத்தை வெளிப்படுத்துவார்கள். விடுமுறை நாட்கள் முடிந்து மறுநாள் மாணவர்கள் மக்ரிபு நேரத்திற்கு வரவேண்டுமென்றால் உஸ்தாதுமார்கள் அன்று மதியமே வந்து விடுவார்கள். உஸ்தாதுமார்கள் சீக்கிரமாக வந்தால் தான் மறுநாள் சிரமமின்றி பாடம் ஆரம்பிக்கமுடியும், என்று கூறுவார்கள். இந்த வருடம் (2010) பக்ரீத் விடுமுறையை முடித்து விட்டு (ஹள்ரத் அவர்களுடைய வஃபாத்திற்கு ஏறத்தாழ 15 நாட்களுக்கு முன்) 30.11.2020 அன்று மதியம் நாங்கள் மதரஸா வந்து சேர மூன்று மணியாகிவிட்டது. அது வரை சாப்பிடவில்லை. அதற்கு முன் ஹள்ரத் அவர்களை சந்திக்கச் சென்றோம். அப்பொழுது அதுவரை நாங்கள் சாப்பிடாத தகவல் தெரிந்து மதுரை ஜங்ஷனில் சாப்பாடு ஏதும் விற்க்பபடவில்லையா? என்று விளையாட்டாகக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் மதரஸாவில் தயாரான உணவு வீணாகிவிடக்கூடாதே! என்று பதில் கூறினோம். அதற்கு ஹள்ரத் அவர்கள் மதுரையிலும் வீணாகத்தான் போகும், என்று கூறினார்கள். பிறகு நாங்கள் சாப்பிடப் போய் விட்டோம். இவையெல்லாம் விளையாட்டாகப் பேசிய பேச்சுக்கள் தான். எனினும் அதற்குப் பிறகு ஹள்ரத் அவர்களுடைய மனதில் இது எவ்வகையான உணர்வலையை ஏற்படுத்தியது? என்று தெரியவில்லை. அன்றே அஸர் தொழுகைக்குப் பின் எங்களைக் கூப்பிட்டார்கள். நான் மதுரையில் சாப்பிடுமாறு கூறினேன். அது அப்படி கிடையாது. நீங்கள் நான்கு மணிக்கு வந்தாலும் மதரஸா வந்த பிறகே சாப்பிடுங்கள். அப்பொழுது தான் நீங்கள் மதியமே மதரஸா வந்ததாக ஆகும். நான் நேற்று இரவு 12 மணிக்குத் தான் வந்தேன். எனினும் யார் கேட்டாலும் நேற்றே வந்து விட்டேன் என்று சொல்லமுடியும். என்று கூறினார்கள்.    உலமாக்களுக்குப் பயிற்சியளித்த வல்லவர்

சரித்திர சாதனை:

என்னிடத்தில் வந்து பேசுபவர்கள் வீண்பேச்சு பேசாமல் இல்ம் - மார்க்கம் தொடர்பான விஷயங்களையே பேசவேண்டுமென்று விரும்புகிறேன் என்று பல தடவை சொன்னது இன்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஹள்ரத் அவர்கள் ஹைஅதுஷ்ஷரீஅத்துக்காக உழைத்து, தமிழகத்தில் யாராலும் செய்திட முடியாத மாபெரும் சாதனை நிகழ்த்தியது யாருக்கும் தெரியாததல்ல. அவை இந்த காலத்தின் மாபெரும் சரித்திர சாதனைகள். இது பற்றி ஹள்ரத் அவர்கள் நினைவுகளிலும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஹைஅத்துஷ் ஷரீஅத் சார்பாக பல பயணங்களை ஹள்ரத் அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். சங்கரன் பந்தலில் எதிர்த்தரப்பு கொள்கைவாதிகள் வேகமாக நடந்து கொண்ட போதும் ஹள்ரத் அவர்கள் மென்மையாகவே நடந்து கொண்டார்கள். மதரஸா மாணவர்களுடைய முன்னேற்றத்திற்கு ஹைஅத்துஷ் ஷரீஅத் உதவியாக இருந்ததென்றால் அது மிகையானதல்ல. 

மஜ்மவுல் புஹூஃத்(ஸ்):
ஹள்ரத் அவர்கள் திறமையான உலமாக்களை உருவாக்க வேண்டும் என்பதில் மாபெரும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். நாமே பேசிக்கொண்டிருக்கக் கூடாது . இளம் உலமாக்களை திறமையானவர்களாக உருவாக்க வேண்டும். அவர்களுக்கு அதற்குரிய பயிற்சி கொடுக்க வேண்டும், என்பதில் அதிக கவனம் செலுத்தினார்கள். நாம் அவர்களுடன் ஒத்துழைக்கவில்லை என்பது தான் பெரிய தவறு. குறிப்பாக யூஸுபிய்யாவில் பட்டம் பெற்றுச் சென்றவர்கள் மீது அதிக கவனம் செலுத்தினார்கள். அதற்காக 2002 - ஆம் ஆண்டு மஜ்மவுல் புஹூசில் இல்மிய்யா லிஅப்னாயி யூஸுபிய்யா என்ற பெயரில் ஒரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. 4-5-2002 அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை ஹள்ரத் அவர்களுடைய தலைமையில் பொதுக் கூட்டமும் கருத்தரங்கமும் நடைபெற்றது. அதனையொட்டி அஃளாவு லஜ்னதி மஜ்மவுல் புஹூசில் இல்மிய்யா என்ற பெயரில் ஐந்து யூஸுபிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் இரண்டு மாதத்திற்கொருமுறை கூடி மஸாயில்- சட்டங்கள் பற்றி ஆய்வு செய்யவேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. கடைசி காலத்தில் நம்முடைய உற்சாகமின்மையால் அதில் தொய்வு ஏற்பட்டாலும் ஆரம்பத்தில் விறுவிறுப்பாகவே செயல்பட்டது.

ஃபிக்ஹ் செமினார்:
14,15-07-2002 ஆகிய இரு தினங்களில் ஐந்து பேர் கொண்ட குழு உட்பட உள்ளூர் உலமாக்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் ஹள்ரத் அவர்களுடைய தலைமையில் யூஸுபிய்யாவில் நடைபெற்றது. இதில் மாறும் சட்டங்கள் - மாறாத சட்டங்கள், இஸ்லாம் விரும்பும் ஆட்சியும் இந்தியாவில் நமது கடமைகளும் என்ற இரு தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. உம்மத்தைப் பெருக்கும் நோக்கத்தில் சிறுவயதிலேயே ஹலாலான முறையில் விந்தணுக்களை எடுத்து சேமித்து வைத்து வயதான பின் இரண்டாவது திருமணம் செய்து அந்த விந்தணுக்களை வைத்து இரண்டாம் மனைவியின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாமா? என்ற புதிய விவாதம் அஸருக்குப் பின் தொடங்கிவைக்கப்பட்டது. அது மக்ரிபுக்குப் பிறகும் நீடித்தது. அதே போல் டூத் பிரஷ் மூலம் மிஸ்வாக்குடைய சுன்னத் நிறைவேறுமா? என்ற விவாதமும் நீண்ட நேரம் நடைபெற்றது. 10,11-03-2004 ஆகிய இரு தினங்களில் ஹள்ரத் அவர்களுடைய தலைமையில் ஒர் ஆய்வரங்கம் நடைபெற்றது. அதில் தலைப்பிறை தொடர்பான ஒரு தலைப்பும் ஜனநாயக நாட்டில் தாருல்ஹர்ப்  (இஸ்லாமிய கிலாபத்துக்கு எதிரான நாட்டைப்) போல் வட்டியில் சட்டமாற்றம் ஏதும் உண்டா? என்ற இரு தலைப்புகளிலும் ஆக்கப் பூர்வமான விவாதம் நடைபெற்றது. திண்டுக்கல் ஜமாஅத்துல் உலமா சார்பாக ஒவ்வொரு வருடமும் ஸீரத்துந்நபி விழா நடைபெறும்.. விழா மாலை நேரத்தில் நடைபெறும். அன்று காலை உலமாக்களுடைய ஃபிக்ஹ் ஆய்வரங்கத்தை ஹள்ரத் அவர்கள் நடத்துவார்கள். திண்டுக்கல் நகரின் பல பள்ளிவாசல்களிலும் அது போன்ற கருத்தரங்கம் நடைபெற்றது யாருக்கும் தெரியாததல்ல. தமிழகத்தின் தலைசிறந்த உலமாக்கள் அதில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு தங்களது ஆய்வுக் கருத்துக்களை சமர்ப்பித்திருக்கிறார்கள். ஹள்ரத் அவர்களோடு நாம் ஒத்துழைக்காததால் அதுவும் சில வருடங்களாக நடக்காமல் இருக்கிறது.

கீரனூரி(ரஹ்)யின் பூந்தோட்டம் - யூஸுபிய்யா நூலகம்

குதுபுகானாவில் (நூலகத்தில்)குடியிருங்கள். இது ஹள்ரத் அவர்களின் தாரகமந்திரம். இதை எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். யூஸுபிய்யாவிலிருந்து வெளியாகும் ராஷித் மாத இதழில் ஒரு தடவை இப்படி எழுதினார்கள்: என்னைக் கேட்டால் உள்ளத்தை திறந்து வைத்து குதுபுகானாவிற்குள் நுழைந்தவன் சொர்க்கத்தில் நுழைந்தவன் என்று கூறுவேன். ஆனால் உள்ளத்தை திறந்து வைத்து என்ற நிபந்தனையில் குறைவு நிச்சயம் கூடாது. எனவே தான் குதுபுகானாவில் குடியிருங்கள் என்ற தாரக மந்திரத்தை இன்று மட்டுமல்ல இருக்கும் வரை - இறக்கும் வரை உங்கள் லட்சியமாக ஆக்கக் கோருகிறேன். நூலகத்தின் பரிணாம வளர்ச்சி:
நூலகமே கல்வியின் ஊற்று. அது இல்லாமல் எந்தக் கல்வி நிறுவனமும் தன்னிறைவு அடைய முடியாது. அரபி மத்ரஸாக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நூலகத்திற்கும் மாணவர்களுக்கும் மத்தியில் உள்ள தொடர்பு தான் மத்ரஸா மற்றும் மாணவர்களின் வெற்றியை நிர்ணயிக்கும் மாபெரும் சக்தி. இவையெல்லாம் ஹள்ரத் அவர்களின் செயல்பாட்டின் மூலம் நாம் அறிந்து கொண்டவை. குதுபுகானாவை - யூஸுபிய்யாவின் நூலகத்தை - செம்மைப்படுத்துவதில் ஹள்ரத் அவர்கள் மேற்கொண்ட முயற்சி கணக்கிலடங்காது. ஆரம்பத்தில் ஒரு அறையில் மட்டுமே குதுபுகானா செயல்பட்டது. பிறகு அது இரண்டு ரூம் ஆனது. இப்ழுது மூன்று அறைகளில் செயல்படுகிறது. மத்ரஸாவுக்கு மத்தியில் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கட்டடம் - நூலகம்- கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள். அவர்களின் மரணத்திற்கு முன்பே தயாரிக்கப்பட்ட திட்டத்தில் குதுபுகானா தனியாக கட்டுவதும் ஒரு அங்கமாக இருக்கிறது.

புத்தகத் தேடல்:
கிதாபுகள் சேர்ப்பதில் ஹள்ரத் அவர்கள் காட்டிய ஆர்வம் அளவிட முடியாதது. தற்சமயம் யூஸுபிய்யாவில் ஏறத்தாழ 6500 (அரபீ-உர்தூ) கிதாபுகள் உள்ளன. ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் தமிழ் நூற்கள் இந்த எண்ணிக்கையில் சேராது. இவை தவிர பழைய கிதாபுகள், கிழிந்த கிதாபுகள் என எண்ணக்கையில் இருந்து ஒதுக்கப்பட்டவை ஏராளம். ஹள்ரத் அவர்கள் எங்கு பயணம் மேற்கொண்டாலும் சந்தர்ப்பம் கிடைத்தால் மதரஸாவுக்கு கிதாபுகள் வாங்காமல் வரமாட்டார்கள். திண்டுக்கல்லில் புத்தகக் கண்காட்சி நடந்தால் நேரடியாகச் சென்று பொது அறிவு நூற்கள், விஞ்ஞான நூற்கள், தன்னம்பிக்கையூட்டும் நூற்கள் என பல வகையான நூற்களை அள்ளிக் கொண்டு வருவார்கள். பட்டம் பெறும் மாணவர்கள் அவர்களாக விரும்பி வருடக் கடைசியில் மத்ரஸாவுக்கு தமிழ் நூற்கள் வாங்கிக் கொடுப்பது வழக்கம். கடந்த வருடம் (2010) பட்டம் பெற்ற மாணவர்கள், அதிக பயனுள்ள நூற்களைத் தேடி வாங்குவதற்காக ஹள்ரத் அவர்களையே நூல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தார்கள். ஹள்ரத் அவர்களும் நான் வரத் தயார். ஆனால் என்னுடைய உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. வீல்சேரில் அமர்ந்து தான் அங்குமிங்கும் தேடமுடியும். அதற்குரிய ஏற்பாடு இருந்தால் வரலாம், என்று சொன்னார்களாம். மாணவர்கள் ஹள்ரத் அவர்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பாததால் அழைத்துச் செல்ல வில்லை. இப்படி கடைசிக் காலத்திலும் கூட கிதாபுகளைச் சேர்ப்பதில் அவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள்.
ஹள்ரத் அவர்கள் சில வருடங்களுக்கு முன் ஹஜ்ஜுக்கு சென்றிருந்த போது ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கிதாபுகள் வாங்கி வந்தார்கள். அப்பொழுதும் கூட இது ஒன்றும் பெரிய காரியமில்லை. மதரஸாவுக்காக செய்கிறோம் என்று இறங்கி விட்டால் அல்லாஹ் அதற்குரிய வழிகளை திறந்து கொடுக்கிறான், என்று கூறி பணிவை வெளிப்படுத்தினார்கள். சமீபத்தில் லெபனானுக்கு நான்கு மாதங்கள் ஜமாஅத்தில் சென்றிருந்த போதும் ஏராளமான கிதாபுகளை வாங்கி வந்தார்கள்.
உள்நாட்டில் கேரளா, தேவ்பந்த், சஹாரன்பூர், டெல்லி போன்ற நகரங்களிலிருந்தும் அவ்வப்போது கிதாபுகளை வரவைப்பார்கள். குறிப்பாக தேவ்பந்தில் தௌரத்துல் ஹதீஸ் ஓதிக் கொண்டிருக்கும் யூஸுபிகளை குதுபுகானாவுக்கு நேரடியாகச் சென்று மத்ரஸாவுக்குத் தேவையான கிதாபுகளைத் தேடி வாங்கி அனுப்பச் சொல்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள். நாங்கள் தேவ்பந்தில் தௌரா ஓதிக் கொண்டிருந்த போது (1998) கடிதத்தில் இப்படி எழுதினார்கள்: அங்குள்ள (தேவ்பந்தில்) விற்பனைக் கிதாபுகளில் ஏராளமான நம் பார்வைக்கு வராத கிதாபுகள் கிடைக்கின்றன. பலன் தரக்கூடிய, மாணவர்களுக்கு, பொது அறிவுக்குத் தேவையான ஏராளமான கிதாபுகள் வாங்கலாம். செலவு பற்றி கவலையில்லை. குதுபுகானாக்களில் போய்ப் பார்த்து மதரஸாவுக்கு வாங்குவதற்குத் தான் பார்க்கிறோம் என்ற விபரம் சொல்லி வாங்க வேண்டிய கிதாபுகளின் பெயர் கடைசி கிரயம் எல்லாம் முழுமையாக்கி எழுதவும். பணம் அனுப்புகிறோம். குதுபுகானா மூலம் அனுப்ப வேண்டும். நன்றாக விரிவாகப் பார்த்து விபரம் எழுதவும். குறிப்பாக ஹதீஸ், ஃபிக்ஹ் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் (பற்றிய நூற்களை தேடிப்பார்க்கவும்.) கிதாபுகள் சேர்ப்பதில் இப்படியொரு அக்கறை.

நான் மதரஸாவுக்காக:
நான் வேறு, மத்ரஸா வேறு என்று கிடையாது என்று அவ்வப்போது சொல்வார்கள். என்னுடைய கிதாபு, மத்ரஸாவுடைய கிதாபு என்ற வேறுபாடு கிடையாது. எனக்கு சொந்தமாக வரும் கிதாபுகளும் மதரஸாவுக்குரியது தான், என்றும் சொல்வார்கள். அவர்கள் ஹயாத்தாக இருக்கும் போதே தங்களுடைய ஏராளமான கிதாபுகளை மதரஸா நூலகத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். மரணத்திற்குப் பிறகும் என்னுடைய கிதாபுகள் மதரஸாவுக்க சொந்தம் என்று வஸிய்யத் செய்திருக்கிறார்கள்.
ஹள்ரத் அவர்கள் தங்களின் கடைசிக் காலத்தில் மஜ்லிஸுல் மதாரிஸில் அரபிய்யாவின் நாஜிமாக பொறுப்பேற்றிருந்தார்கள். அப்பொழுது மஜ்லிஸுல் மதாரிஸ் மூலம் நாம் மதரஸாக்களுக்கு உத்தரவு மட்டும் போட்டுக் கொண்டிருக்கக்கூடாது. மதரஸாக்களுக்குத் தேவையான உதவிகளை மஜ்லிஸ் செய்து கொடுக்க வேண்டும். பொருளாதார உதவி தேவையிருந்தால் அதையும் நிறைவேற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தார்கள். (கடைசி நேரத்தில் அதற்கான திட்டங்களையும் தீட்டினார்கள்.) அப்படி மஜ்லிஸ்  உதவி செய்வதாக இருந்தால் நம்முடைய மதரஸாவுக்கு நூலகத்திற்குத் தேவையான கிதாபுகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம், என்று கூறினார்கள். மதரஸா என்றால் சாப்பாடு, சம்பளம், கட்டடம் போன்ற செலவுகள் தான் எல்லாருக்கும் ஞாபகம் வரும். ஹள்ரத் அவர்கள் அந்நிலையை மாற்றி குதுபுகானா, நூலகம் என்றொரு சிந்தனையை உருவாக்கினார்கள்.

நூலக நிர்வாகம்:

உஸ்தாதுமார்களின் பொறுப்பில் குதுபுகானாவின் நிர்வாகத்தை திறமையாகச் செயல்பட வைத்தார்கள். குதுபுகானாவில் தஃப்ஸீர், ஹதீஸ், ஃபிகஹ் போன்ற கலைகள் வாரியாக கிதாபுகளை தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் ஹள்ரத் அவர்கள் அப்படி கலை வாரியாக பிரிக்கக் கூடாது. எல்லா கிதாபுகளும் கலந்து தான் அடுக்கப் பட்டிருக்க வேண்டும். தேவையான கிதாபுகளை நாமாகப் பார்த்து தேடி எடுக்க வேண்டும். அப்பொழுது தான் கிதாபின் அருமை விளங்கும். என்று கூறுவார்கள். கிதாபின் பெயரை சொன்னவுடன் அந்த கிதாபு இருக்கும் இடம் தெரிந்து உடனடியாக எடுத்து விடுமளவுக்கு கிதாபுகளை தேடிப் பழகிட வேண்டும், என்று கூறுவார்கள். தங்களுடைய ஜீவிய காலத்திலேயே அப்படிப்பட்ட மாணவர்ளையும் உருவாக்கியது அவர்களுடைய சாதனை. தமிழகத்தின் பல மதரஸாக்களிலிருந்தும் உஸ்தாதுமார்கள் யூஸுபிய்யாவுடைய குதுபுகானாவுக்கு வந்திருக்கிறார்கள். இங்குள்ள நூலகத்தின் கிகாபுகளின் பெயர்ப்பட்டியலைப் பார்த்து, தங்களுடைய மதரஸாவுக்குத் தேவையான கிதாபுகளை வாங்குவதற்காக அவற்றின் பெயர்களை குறிப்பெடுத்துச் செல்வார்கள். ஹள்ரத் அவர்கள் உலமாக்களையும் குதுபுகானாவுக்கு வந்து பயன் பெறுமாறு அழைப்பார்கள். திண்டுக்கல் நகர உலமாக்கள் அவ்வப்போது குறிப்பாக வெள்ளிக்கிழமை காலை கூட்டாக வருகை தந்து கிதாபுகளைப் பார்த்து ஜூம்ஆ பயானுக்குத் தேவையான கருத்துக்களை எடுத்துச் செல்வார்கள்.

நிறைவான நூலகம்:
நூலகத்தில் எல்லா வகையான கிதாபுகளும் கிடைக்கும். எந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டாலும் அந்தத் தலைப்பின் கீழ் ஒரு நூல் எழுதி விடுமளவுக்குத் தேவையான கிதாபுகள் யூஸுபிய்யா நூலகத்தில் கிடைக்கும். நான்கு மத்ஹபுகள் மட்டுமன்றி மற்ற கொள்கையுடையவர்களின் நூற்களும் கிடைக்கும். மத்ஹபை மறுப்பவர்கள், ஹதீஸை மறுப்பவர்கள், கத்மே நுபுவ்வத் - இறுதி நபித்துவத்தை மறுப்பவர்கள் - காதியானிகள் போனற தவறான கொள்கையாளர்கள் எழுதிய நூற்களும் இருக்கும். நூலகத்தில் எல்லா நூற்களும் இருக்க வேண்டும். அப்பொழுது தானே அவர்களுடைய உண்மையான கொள்கை என்னவென்று தெரிந்து அதற்குரிய பதிலைத் தேடமுடியும். தவறான கொள்கைகளுக்கு தெளிவான பதில்களைத் தரும்படியான நூற்களும் நம்முடைய குதுபுகானாவில் ஏராளமாக உள்ளன. தவறான கொள்கைகளைத் தகர்த்தெறியும் கிதாபுகளுக்கென யூஸுபிய்யாவின் நூற்களின் பெயர்ப்பட்டியலில் (கேட்லாக்) தனிப் பகுதியே ஒதுக்கப்பட்டுள்ளது. குதுபுகானா குப்பைத்தொட்டியல்ல:
நூலகத்தில் கிதாபுகள் அதிகமாக இருந்தால் மட்டும் போதாது. அவை எப்போதும் பயன்பாட்டில் இருக்க வேண்டும். கிகாபுகள் கண்ணாடிப் பெட்டியில வைத்து அழகு பார்ப்பதற்கு ஞாபகார்த்தப் பொருட்களுமல்ல. தூசி அடைய விடுவதற்கு குப்பைத் தொட்டியும் அல்ல. ஆனால் இன்று பெரும்பாலான நூலகங்கள் பொதுவான பயன்பாட்டுக்காக திறந்துவிடப்படுவதே இல்லை. அப்படியே திறந்திருந்தாலும் பொறுப்பாளர்கள் தவிர யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் இது நூலகத்தின் நோக்கத்தை நிறைவடையச் செய்யாது. குதுபுகானாவின் நூற்களை சுதந்திரமாக (எந்தத் தடையுமின்றி) உஸ்தாதுமார்களின் கண்காணிப்பில் பார்வையிட மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். கிதாபுகள் தூசி தட்டி எடுக்கப்படும் நிலை இருக்கக் கூடாது. எல்லா கிதாபுகளும் உலமாக்கள், மாணவர்களுடைய பயன்பாட்டில் இருக்கவேண்டும், என்பதில் ஹள்ரத் அவர்கள் கவனமாக இருந்தார்கள்
.
கிதாபுகள் கிழிந்து விடுமே!:
நூலகம் எப்பொழுதும் திறந்திருக்க வேண்டும். மாணவர்கள் கிதாபுகளை எடுத்துப் படிப்பதால் கிதாபுகள் சீக்கிரம் கிழிந்து விடலாம். அல்லது காணாமல் போய்விடலாம், என்று சிலர் யோசிக்கலாம். ஆனால் ஹள்ரத் அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள். கிழிந்தாலோ அல்லது காணாமல் போனாலோ வேறு கிதாபு வாங்கிக் கொள்ளலாம், என்று சொல்வார்கள். இந்த காரணங்களுக்கெல்லாம். கிதாபுகளை எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றால் பிறகெதற்கு நூலகம்? அழகு பார்ப்பதற்காக கிதாபுகளை வைத்திருந்தால் அதை மியூசிமாக ஆக்கிவிடலாம். மாணவர்கள் நூலாய்வில் ஈடுபடுவகற்காக அவ்வப்போது ஆர்வமூட்டுவார்கள். கிதாபை எப்படி வாசிக்க வேண்டும்? எப்படி ஆராய வேண்டும்? என்பது பற்றிய விளக்கங்களைக் கொடுப்பார்கள். ஒரு கிதாபை எடுத்தால் முதலில் நூலின் பெயர், நூலாசிரியரின் பெயர், அது எந்தக் கலையைச் சார்ந்தது? போன்றவற்றை அறிய முற்படவேண்டும். பிறகு அந்நூலின் முன்னுரையைப் படித்தால் கிதாபில் உள்ளவற்றை ஓரளவு விளங்கிக் கொள்ளலாம், என்றும் கூறுவார்கள். ஒரு தடவை இது பற்றி மாணவர்களுக்கு ஆர்வமூட்டி ராஷித் மாத இதழில் பின்வருமாறு எழுதினார்கள்:

படிப்பில் இனிப்பு:
உண்ணுவது, உடுத்துவது, உறவு கொள்வது போன்ற சொகுசுக் காரியங்களிலெல்லாம் கிடைக்காத ஒன்று இல்மிலே கிடைப்பதை உள்ளுணர்வு ருசிக்க வேண்டும். அறிவு ரசிக்க வேண்டும். மனம், வேண்டும் வேண்டும் என்று கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் பழமொழியையே திருப்பிப் போடவேண்டும். ஆம்! போதாத மனமே பொன் செய்யும் மருந்து என்று சொல்ல வேண்டும். முன்னோர்கள் எழுதி வைத்துச் சென்றுள்ள ஏராளமான கிதாபுகள் களஞ்சியங்கள். அவற்றைத் திறந்தவுடனே அந்த முன்னோர்கள் நம்முடன் பேசுகிறார்கள் அல்லவா? இதை விட இனிக்கும் எண்ணம் எதுவும் இருக்க இயலுமா? இஹ்யாவு உலூமித்தீனைத் திறந்தவுடன் இமாம் கஸ்ஸாலியே நம்முன் வந்து நிற்பதாக தோன்றாவிட்டால் அவர் என்ன படிப்பாளி? அதிலே அவருடைய உயிர் இன்பத்தை நுகராவிட்டால் அவர் என்ன அறிவாளி?
பாடங்களை படிப்பது முதல் வேலை. அதாவது விதை போடும் வேலை. விதை போடாமல் விளைச்சலை எதிர்பார்ப்பது சூனியத்தின் அடையாளம். விதை போட்ட பின் வெறுமனே இருந்து விடலாமா? வளர வழி செய்ய வேண்டாமா? துளிர் விட துணை நிற்க வேண்டாமா? வேறு பிற எண்ணற்ற நூல்களைப் படிக்கப் படிக்க தெளிவும் வலுவும் பிறந்து கொண்டே போகும். ஊட்டி மலர்க் கண்காட்சியைக் கண்டவர்கள் ரோஜாவில் மட்டும் 2000 வகை இருந்ததாகவும் மற்றவை அனந்தம் அனந்நமாக என்றும் கண்கொள்ளாக் காட்சி என்றும் கூறினார்கள். (ஊட்டியல்ல) போட்டி மனக் காட்சியைக் காட்டுகிறேன் என்று கூப்பிட்டேன். முகக்கண் அல்ல - அகக் கண் வேண்டும் என்றேன். மூக்கால் அல்ல அறிவால் நுகர வேண்டும் என்றேன். நீங்கள் கண்டது வாடும் மலர்கள். நான் காண்பிப்பது காலமெல்லாம் பாடும் கவிக்குயில்கள். ரசனை உடலுக்கல்ல, உயிருக்கு. பலன் நிரந்தரமில்லா இவ்வுலகுக்கல்ல. தரமும் நிரந்தரமும் கொண்ட மறு உலகுக்கும் என்று கூறினேன். இறுதியில் விஷயத்தைச் சுருக்கி குதுபுகானாவில் குடியிருங்கள் என்று கூறினேன். நம்மை விடத் திறமையான மாணவர்கள்:
சிறந்த குதுபுகானா நிர்வாகத்தை ஹள்ரத் அவர்கள் உருவாக்கினார்கள். மாணவர்கள் சுயமாக நூல்களை (முதாலஆ) ஆய்வு செய்ய வேண்டும், என்பதற்காக நான்காவது ஜும்ரா முதல் முதாலஆ என்றொரு பாடம் யூஸுபிய்யாவில் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பீரியடில் உஸ்தாதுமார்களின் கண்காணிப்பில் பாடத்தில் இல்லாத மற்ற நூற்களை ஆய்வு செய்வார்கள். அவற்றின் முக்கியமான கருத்துக்களை குறிப்பேடுகளில் எழுதி வைப்பார்கள். ஹள்ரத் அவர்கள் பரீட்சையில் அவற்றைப் பார்த்து அதற்கு தனி மதிப்பெண்கள் வழங்குவார்கள். பொதுவாக, நம்முடைய மாணவர்கள் சுயமாக நூற்களை ஆராய ஆரம்பித்து விட்டால் அவர்கள் நம்மிடம் விளக்கம் பேச ஆரம்பித்துவிடுவார்களே! என்று நினைக்கத் தோன்றும். ஆனால் ஹள்ரத் அவர்கள் அதைத் தான் விரும்புவார்கள். என்னுடைய மாணவர்கள் என்னை விடத் திறமையானவர்கள் என்று ஹள்ரத் அவர்கள் பெருமையாகச் சொல்வார்கள். பட்ட வகுப்பு மாணவர்களுக்கு தக்ரீஜ் எனற் பெயரில் இரண்டு பீரியடுகள் ஒதுக்கப்படும். மும்மூன்று மாணவர்களாக பிரித்து பல குழுக்களை உருவாக்கி  தற்காலத்திற்குத் தேவையான தலைப்புகளைக் அவர்களிடம் கொடுத்து விரிவான ஆய்வுக் கட்டுரைகளை எழுதச் சொல்வார்கள். அவர்களும் 25 அல்லது 30 பக்கங்களில் எழுதிக் கொண்டு வருவார்கள். இப்பொழுது 50 அல்லது 60 பக்கங்களுக்கும் எழுதுகிறார்கள். ஹள்ரத் அவர்கள் நம்முடன் இல்லாவிட்டாலும் இருக்கிறார்கள் என்ற சிந்கனையையே இது பறைசாற்றுகிறது. அவர்கள் பல கிதாபுகளைப் பார்த்துத் தான் எழுதுகிறார்கள். அது மட்டும் சாதாரண காரியமா என்ன? ஆர்வமாகத் தேடுவதும் தங்களுக்கு மத்தியில் போட்டி போட்டுக்கொண்டு ஒரு குழுவை விட மற்றொரு குழு அதிக பக்கங்கள் எழுத முயற்சிப்பதும் நம் பார்வைகக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஹள்ரத் அவர்கள் மாணவர்களுடைய முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய எதையும் செய்யாமல் விட்டுச் செல்லவில்லை என்று கூறினால் அது மிகையாகாது.

கடிதம் மூலம் ஆர்வமூட்டல்:
பாடத்தில் கேட்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளக்கூடாது; அதற்கு உறுதுணையான மற்ற நூற்களையும் ஆராயவேண்டும் என்று ஆர்வமூட்டுவார்கள். நாங்கள் தேவ்பந்தில் தௌரா ஓதிக் கொண்டிருந்த போது (16-3-98 என்று தேதியிட்ட ஒரு) கடிதத்தில் பின்வருமாறு எழுதினார்கள்: பழமுள்ள மரமானாலும் பறித்தால் தான் கிடைக்கும். திறமை சாலியாக அறிவு தேவை. ஆனால், அதைவிட 9 பங்கு முயற்சி தேவை. எனவே, எல்லா வகையிலும் ஒரு ஆழமான சிந்தனையை உண்டு பண்ணிக்கொள்ளவும். ஹதீஸ் விஷயத்தில் கேட்பதோடு நிறுத்தாமல் எப்படியாவது நேரம் உண்டாக்கிக் கொண்டு அவற்றை மேலும் ஆழமாக ஆய்வு செய்ய முயலவும். சொந்தச் சம்பாத்திய சொத்து தான் சொத்து, ஹதீஸிலும் மற்ற பொதுவான விஷயங்களிலும். தாருல் உலூமுடைய குதுபு கானா - நூலகம் மாதிரி வேறு எப்போதும் கிடைக்காது. பயன்படுத்திக் கொண்டு எப்படி முயற்சிக்கிறீர்கள்? என்பதை எழுதவும். இக்கடிதத்தில் முயற்சி செய்ய ஆர்வமூட்டுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. எப்படி முயற்சிக்கிறீர்கள் என்பது பற்றி எழுதுமாறும் கேட்டிருக்கிறார்கள். தேவ்பந்த் செல்லும் போது நீங்கள் தேவ்பந்தில் ஓதுவதை வைத்து சிறப்படைய முயற்சிக்கக் கூடாது. உங்கள் மூலம் தேவ்பந்துக்கு சிறப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆழமான கருத்தை உள்ளடக்கிய செய்தியையும் சொல்லியனுப்பினார்கள்.

கண்ணான தஃவத்
என்னுடைய ஒரு கண் தஃலீம் (மத்ரஸா) என்றால்  தஃவத் மற்றொரு கண், என்று சொல்வர்கள்.. தஃலீமுடைய விஷயத்தில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். ஆனால் தஃவத்துடைய விஷயத்தில் நான் எவ்வளவு செய்யவேண்டும் என்று நினைத்தேனோ அதில் நூறில் ஒரு பங்கு கூட என்னால் செய்ய முடியவில்லை, என்று கூறுவார்கள். தஃவத் தப்லீகிற்காகப் பல உலக நாடுகளுக்குச் சென்றுள்ளார்கள். சூடான், பெல்ஜியம், ஹாலந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு தப்லீகுக்காகப் பயணம் செய்திருக்கிறார்கள்.
மாணவர்கள் விடுமுறை காலத்தில் தப்லீக் ஜமாஅத்தில் சென்று வந்தால் இந்த வேலையின் மூலம் என்ன பெற்றுக்கொண்டீர்கள்? என்று கேட்பார்கள். ஒரு தடவை அப்படி கேட்கும் போது மஸ்னூன் துஆக்களைக் கற்றுக்கொண்டோம். காலை மாலை தஸ்பீஹை பூர்த்தி செய்யப் பழகினோம். தஹஜ்ஜுத் தொழுதோம் போன்ற பல காரணங்களை நாங்கள் கூறிய போது அவற்றையெல்லாம் அமைதியாகக் கேட்டுவிட்டு இவற்றையெல்லாம் விட ஜமாஅத் வேலை நாம் செய்ய வேண்டிய வேலை, என்று விளங்கவேண்டும். அது தான் எல்லாவற்றையும் விட ரொம்ப முக்கியம் என்று கூறினார்கள். ஹள்ரத் அவர்கள் நினைவுகள் எனற நூலில் கூறுகிறார்கள்: லண்டனிலிருந்து அமெரிக்காவுக்குப் போகும் போது விமானத்தில் சூரியன் போகும் திசையான மேற்கிலேயே பயணம் செய்வதால் சூரியன் கூடவே வருவதாகத் தோன்றும். சீக்கிரம் அஸ்தத்தைப் பார்க்க முடியாது. நாங்களும் ரமளான் 29 ம் நோன்பு லண்டனில் ஸஹர் சாப்பிட்டு விட்டு பறந்து கொண்டே இருக்கிறோம். நியூயார்க் போய் இறங்கி ஏர்போட்டில் 8:30 மணிக்கு நோன்பு திறந்தோம். எங்கள் நோன்பு 23 மணி நேரம். மேலும் பல ருசிகர தகவல்களை நினைவுகளில் பார்க்கலாம். இந்தோனோஸியா வுக்கும் லெபனான், துபை போன்ற நாடுகளுக்கும் நான்கு நான்கு மாதங்கள் சென்று வந்தது யாவரும் அறிந்ததே! ஹள்ரத் அவர்கள் கடைசியாக கனவுகள் என்றொரு நூலை எழூதினார்கள். அதை, எழுதி முடிக்காமலேயே வாழ்க்கையை முடித்துவிட்டார்கள். அதில் மத்ரஸா, தஃவத், தப்லீக், பற்றி அதிகம் எழுதியுள்ளார்கள். 

படைப்புகள்

ஹள்ரத் அவர்களுடைய பயானைப் பற்றி யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இங்கு ஹள்ரத் அவர்களுடைய கடைசியான முக்கியமான படைப்புகளைப் பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம்.  அல்- அஃப்லாக் வல் அவ்காத் இந்த கிதாபு தமிழகத்தில் மட்டுமல்ல. கேரளாவிலும் வடஇந்தியாவிலும் குறிப்பாக தாருல் உலூம் தேவ்பந்த் வரை சென்றிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல; சிலோன் (இலங்கை)  லெபனான் உட்பட, பல நாடுகளுக்கும் சென்றிருக்கிறது. இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் லெபனானில் அச்சாகி முழு உலகுக்கும் செல்ல இருக்கிறது. அரபியல்லாத ஒருவர் இப்படி ஒரு கிதாபை எழுதியிருப்பதை லெபனான் பதிப்பாளர்களே புகழ்ந்திருக்கிறார்கள். வானியல் தொடர்பான விஞ்ஞான உண்மைகள் -உண்மையிலேயே உண்மை யாக இருந்தால் - அவை குர்ஆனுக்கு எவ்வகையிலும் முரண்படாது, என்ற கருத்தை ஹள்ரத் அவர்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கியிருக்கிறார்கள். நவீன விஞ்ஞானம் குர்ஆனுக்கு ஒத்திருப்பதைத் தெளிவுபடுத்தும் ஹள்ரத் அவர்கள் விண்ணியல் தொடர்பான அல்லாஹ்வின் வல்லமை பற்றிய கருத்துக்களை  ஆங்காங்கே எடுத்துக் கூறுவது நம்முடைய ஈமானுக்கு மெருகூட்டுவதாக அமையும். அது தவிர தொழுகை நேரம் அறிவது கிப்லா திசையை அறிவது பற்றிய கணிதவியலைத் தெளிவாகப் பல உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார்கள். அவற்றை கால்குலேட்டரின் மூலம் எப்படி அறிவது என்பதற்கான விளக்கத்தையும் தந்திருக்கிறார்கள். எந்தத் துறையையும் அதன் மூலத்திலிருந்தே அறிய முற்படவேண்டும். ஷாபியீ மத்ஹபுடைய  சட்டத்தை அந்த மத்ஹபுடைய கிதாபிலிருந்தே எடுக்க வேண்டும். ஹனஃபீ மத்ஹபுடைய நூற்களில் ஷாபியீ சட்டம் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கொண்டு மட்டும் முடிவு செய்திட முடியாது. மத்ஹபை ஏற்காதவர்களுடைய கொள்கையாக இருந்தாலும் அதையும் அவர்களுடைய நூற்களில் நேரடியாக பார்த்த பின் தான் முடிவு செய்யவேண்டும். மிஷ்காத்தில் உள்ள ஹதீஸை கூறும்போது  மிஷ்காத்தில் மேற்கோள் காட்டப்பட்ட நூலை, மூலநூலை பார்க்காமல் எழுதிவிடக்கூடாது. அந்த ஹதீஸ் எங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த கிதாபை நேரடியாகப் பார்த்த பின்பு தான் அந்த நூலை மேற்கோள் காட்டவேண்டும். இவையெல்லாம் ஹள்ரத் அவர்கள் எப்போதும் சொல்லக்கூடியவை. இந்த அல்அஃப்லாக் நூலை எழுதுவதற்கு ஹள்ரத் அவர்கள் அந்த துறை தொடர்பான ஏராளமான மூல நூற்களை ஆய்வு செய்திருக்கிறார்கள். கொடைக்கானலில் சூரியன் ஆய்வு மையம் உள்ளது. அதில் பொறுப்பாளராக இருந்த மர்ஹூம் அப்துல் ஹலீம் பாய் அவர்களிடமும் விண்ணியல் தொடர்பான நிறைய தகவல்களை பரிமாறியிருக்கிறார்கள். ஆய்வகத்தில் கண்டு வந்த தகவல்களையும் அல்அப்லாக்கில் கூறியிருக்கிறார்கள். வானில் சூரியன், சந்திரன் போன்றவற்றின் (உயர்) இருப்பிடத்தை அறிவதற்காக அர்ருபுவுல் முஜய்யப் என்ற கருவியை பெரிய வடிவத்தில் செய்து வைத்திருக்கிறார்கள். யூஸுஃபிய்யாவின் மேல் தளத்தில் டெலஸ்கோப் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பார்கள். கையில் வைத்து பார்கக்ப்படும் ஒரு சிறிய டெலஸ்கோப்பை டெல்லியிலிருந்து வாங்கிவந்தார்கள் என்பது அவர்களுடைய விண்ணியல் ஆசையை பறைசாற்றுகிறது.  

அல்அஃப்லாக் செமினார்:
ஆரம்பத்தில் (1990 களில்) இதன் கையெழுத்துப் பிரதியை வைத்தே பாடம் நடத்துவார்கள். கிதாபு அச்சான பிறகும் நீண்ட காலமாக ஹள்ரத் அவர்களே நடத்தினார்கள். தேவையான மாற்றங்களைச் செய்தார்கள். தங்களுடைய காலத்துக்குப் பிறகும் இந்தப் பாடம் தொய்வின்றி நடக்க வேண்டுமென்பதற்காக 11.07.2002 வியாழக்கிழமை அன்று (அரையாண்டுத் தேர்வு வரை அல்அஃப்லாக்கை நடத்திய பிறகு)  ஹள்ரத் அவர்களிடம் நேரடியாக அல்அஃப்லாக்கை ஓதிய ஒரு உஸ்தாதிடம் தொடர்ந்து நடத்துமாறு ஒப்படைத்தார்கள். தமிழக உலமாக்களுக்கு மூன்று நாட்களில் அக்கிதாபை யூஸுபிய்யாவில் வைத்து நடத்தினார்கள். அதன் மூலம் நிறைய உலமாக்கள் பயன் பெற்றார்கள். சமீபத்தில் மஜ்லிஸுல் மதாரிஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வேலூர் சென்றிருந்த போது ஒரு மௌலவீ, ஹள்ரத் அவர்கள் ஆரம்பத்தில் செமினார் நடத்தியது போன்று மீண்டும் ஒரு தடவை நடத்தவேண்டும்,  என்று வேண்டுகோள் வைத்தார். தமிழகத்தில் அஃப்லாக் செமினார் நடத்தியது போல் இலங்கையிலும் மூன்று நாட்கள் நடத்தினார்கள். அதில் அதிகமான உலமாக்கள் கலந்து பயனடைந்தனர். அவர்களில் 15 ஆலிம்கள் ஹள்ரத் அவர்களிடம் அஃப்லாக் கிதாபை விரிவாகப் படிப்பதற்காக இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்தனர்.  ஏறத்தாழ பத்து நாட்கள் இங்கு தங்கியிருந்து முழு கிதாபையும் படித்துவிட்டு அதற்கான ஸனது - சான்றிதழையும் பெற்றுச்சென்றார்கள்.  

தேவ்பந்தில் அல்அஃப்லாக்:
தாருல்உலூம் தேவ்பந்துக்கு ஹள்ரத் அவர்கள் சென்றிருந்த போது, தற்போதைய ஷைகுல் ஹதீஸ் முஃப்தீ ஸயீத் அஹ்மது பாலன்பூரி ஹள்ரத் தாமத் பரகாத்துஹும் அவர்களைச் சந்தித்து அல்அஃப்லாக் கிதாபை கொடுத்தார்கள். அதைப் பார்த்துவிட்டு நிரம்பவும் சந்தோஷப்பட்டவர்களாக தாருல் உலூமிலும் இந்தக் கலையை பாடத்திட்டத்தில் கொண்டுவரவேண்டும். அப்பொழுது உங்களைத் தான் தேவ்பந்துக்கு உஸ்தாதாக அழைப்போம், என்று சொன்னார்களாம். அப்பொழுது ஹள்ரத் அவர்கள், எனக்கு யூஸுபிய்யா என்றொரு குடும்பம் இருக்கிறது. அதைவிட்டுப் பிரிந்திருக்க முடியாது என்று கூறினார்களாம். இந்த வருடமும் யூஸுஃபீ மௌலவீகள் தேவ்பந்தில் தௌரா ஓதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஹள்ரத் அவர்கள் மரணித்த செய்தியை முஃப்தி ஸாஹிப் அவர்களிடம் போய்ச் சொன்ன போது உடனே கீரனூரியா? என்று கேட்டார்களாம். தாருல் உலூமுடைய ஷூரா கமிட்டி- கூட்டத்தில் அல்அஃப்லாக் கலையை நடத்துவதற்கு அவர்களை அழைப்பதற்கு யோசனை கொடுத்துள்ளேனே! என்றும் கூறினார்களாம்! ஹள்ரத் அவர்களுடைய இழப்பு பரவலான நஷ்டத்தை உண்டாக்கிவிட்டது. அல்ஃபராயிள்: அல்அஃப்லாக் கிதாபுக்குப் பின் சிராஜீ என்ற வாரிசுரிமை தொடர்பான கிதாபில் இருக்கும் சட்டங்களை மாற்றாமல் வடிவத்தை மட்டும் மாற்றி எளிதாக விளங்கும் விதத்தில் தேவையான உதாரணங்களுடன் அல்ஃபராயிள் என்ற பெயரில் அழகிய முறையில் கோர்வை செய்துள்ளார்கள். அந்த கிதாபும் யூஸுபிய்யாவில் பாடமாக நடத்தப்படுகிறது. அது இன்னும் அச்சாக வில்லை. எனினும் இலங்கையில் உள்ள சில மத்ரஸா உஸ்தாதுமார்கள் அதை ஜெராக்ஸ் எடுத்து வாங்கிச் சென்றிருக்கிறார்கள். இன்ஷாஅல்லாஹ் மிக விரைவில் அச்சாகி வரும்.

மன்திக், பலாகா:
மன்திக் (அளவை இயல்) மற்றும் பலாகாவுடைய (இலக்கியம்) கலையில்  அல்கிஸ்தாஸ், அல்பலாகா என்ற பெயரில் இரண்டு கிதாபுகளை எழுதியிருக்கிறார்கள். இரண்டு கலைகளும் அரபி மத்ரஸாக்களில் கற்றுக் கொடுக்கப்படும் முக்கியமான கலைகள். குர்ஆன் ஹதீஸை விளங்குவதற்கு எவ்வகையில் இவ்விரண்டு கலையும் உறுதுணையாக இருக்கின்றன? என்கிற ரீதியில் எளிமையான முறையில் தொகுத்துள்ளார்கள். இவ்விரு கிதாபுகளையும் ஹள்ரத் அவர்களிடம் ஓதிய ஒரு உஸ்தாதே நடத்திக் கொண்டிருக்கிறார். இவ்விரு கிதாபுகளும் இன்ஷாஅல்லாஹ் விரைவில் அச்சாகி வரும். ஹள்ரத் அவர்கள் கோர்வை செய்த சொந்த கிதாபுகளையும் அவர்கள் இவ்வருடம் நடத்திய புகாரீ, தஃப்ஸீர், மிஷ்காத் போன்ற கிதாபுகளையும் அவர்கள் ஹயாத்தாக இருக்கும் போதே (சிகிச்சைக்காக பயணம் மேற்கொண்ட போது) மற்ற உஸ்தாதுகளின் மூலம் நடத்த வைத்திருக்கிறார்கள்.

 மைபதீ:
மதரஸாக்களில் ஓதிக் கொடுக்கப்படும் மைபதீ என்ற நூலில் உள்ள தகவல்களையும் தற்காலத்திற்குத் தோதுவாக தொகுக்க வேண்டும் என்று பேரார்வம் கொண்டிருந்தார்கள். இதன் தேவை பற்றி நினைவுகள் என்ற நூலிலும் கூறியுள்ளார்கள். அந்த நூலைத் தொகுப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுவிட்டார்கள், என்பது ஹள்ரத் அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு தான் தெரியமுடிந்தது. அவர்கள் தங்கியிருந்த அறையில் அரபீ, உர்தூ, தமிழ் போன்ற எல்லா மொழிகளிலும் மைபதீ தொடர்பான நிறைய நூற்களை அடுக்கி வைத்திருந்தார்கள். நினைவுகளில் கூறிய படியே அந்த பொறுப்பை பின்னர் வரும் ஆலிம்களிடமே ஒப்படைத்துவிட்டார்கள்.  மொழிப்பாடம்:
மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி உண்டாக வேண்டும் என்பதற்காக மாணவர்கள் எழுதும் கட்டுரைகளுடன்  ராஷித் மாத இதழை கையெழுத்துப் பிரதியாக யூஸுபிய்யா நூலகம் வெளியிடுகிறது. அவர்கள் எழுதும் கட்டுரைகள் மொழித் தவறுகள் இல்லாமல் இருக்க வேண்டும், என்பதில் ஹள்ரத் அவர்கள் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டார்கள். அதற்காக பட்ட வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் மொழிப் பாடம் நடத்துவார்கள். அதற்கு ஏதுவாக ஒரு தமிழ் நூலையும் தொகுத்திருக்கிறார்கள்.         

நினைவுகள், கனவுகள்:
ஹள்ரத் அவர்கள் தங்களுடைய சுய சரிதையை நினைவுகள் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள், என்பது யாவருக்கும் நினைவில் இருக்கும். அந்நூலை ஒரே மூச்சில் படித்து முடித்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அது 2009 ம் வருடம்  வெளியானது. சில தினங்களுக்கு முன்னால், நினைவுகள்  எழூதி  நாளாகிவிட்டது. இனி, இறுதி நாட்கள் என்ற பெயரில் ஒரு நூல் எழுத வேண்டும் போலிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதனிடையே உடல்நிலை சரியில்லாமல் இருந்தும் சைலண்டாக கனவுகள்  என்றொரு நூலை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நூல் இன்னும் நிறைவடையவில்லை. எழுதிய நோட்டுக்குள்ளே வைத்த பேனாவை எடுக்காத நிலையிலேயே அல்லாஹ் அவர்களுடைய ரூஹை எடுத்துவிட்டான். அவர்களும் பேனாவை எடுத்துக் கொடுப்பது போல் ரூஹை விட்டுவிட்டார்கள்!  இவை தவிர தப்லீக் பற்றிய தவறான குற்றச்சாட்டுகளும் தக்க பதில்களும் என்ற மொழி பெயர்ப்பு நூல், அரபி மற்றும் தமிழில் எழுதிய கட்டுரைகள், ராஷித் மாத இதழில் தொடராக (இதய ஒலி என்ற தலைப்பில்) வந்த கட்டுரைகள் போன்றவையும் உள்ளன.

குடும்பத்தோடு நெருக்கம்:
இவ்வளவு எழுதிய பின் நம்முடைய குடும்பத்துடன் ஹள்ரத் அவர்குளுக்கு இருந்த நெருக்கமான தொடர்பை எழுதாமல் இருக்க முடியவில்லை. கண்ணியத்திற்குரிய என்னுடைய உஸ்தாது முஹம்மது அலி ஹள்ரத் அவர்களுடைய குடும்பத்தோடு ஹள்ரத் அவாகள் நெருக்கமாக இருந்தார்கள். ஹஜ்ரத் அவாகள் ஊருக்கு வந்தால் தங்குவதற்குத் தோதுவாக வீட்டை அமைத்திருந்தார்கள். அவர்களுடைய தாயாரின் வஃபாத்தின் போது ஹள்ரத் அவர்கள் குடும்பத்தோடு மேலப்பாளையம் வந்தார்கள். அதே போல் எங்களுடைய குடும்பத்தோடும் ஹள்ரத் அவாகள் நெருக்கமாக இருந்தார்கள். நான் ஓதிக்கொண்டிருக்கும் போது ஒரு தடவை மேலப்பாளையம் வந்திருந்த சமயம் நம்முடைய வீட்டுக்கு வந்தார்கள். சாப்பிட்டு முடித்து புறப்படும்போது என்னுடைய தகப்பனாரிடம் நிஜாமுத்தீனை என்னிடமே ஒப்படைத்துவிடுங்கள்! இந்த கருத்தை உறுதிப்படுத்துவதற்காக நானே பெண் பார்த்து கல்யாணம் முடித்து விடுகிறேன் என்றும் கூறினார்கள். இவையெல்லாம் இப்பொழுதும் காதில் ரீங்காரமாக ஒலிக்கிறது. ஹள்ரத் அவாகளுடைய கடைசி மகளுடைய திருமணத்தில் நானும் எனது தந்தையும் முஹம்மது அலி ஹள்ரத் அவர்களுடன் சென்று கலந்து கொண்டோம். நான் மத்ரஸாவுக்கு வந்தபின் அநேகமாக எங்கள் வீட்டில் நடைபெற்ற எல்லாருடைய கல்யாணத்திலும் ஹள்ரத் அவர்கள் வருகை தந்து சிறப்பித்திருக்கிறார்கள்.

இறுதி நாட்கள்
இந்த வருடம் (2010) பக்ரீத் விடுமுறை முடிந்து உஸ்தாதுமார்கள், மாணவர்கள் வருவதற்கு ஒரு நாள் முன்பே  மத்ரஸாவுக்கு ஹள்ரத் அவர்கள் வந்து விட்டார்கள். அதற்குப்பிறகு வழக்கம் போல் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்கள். நீண்ட நாட்களுக்கு முன்பே நான் முப்பத்தைந்து வருட சுகர் பேஷண்ட், என்று சொல்லியிருக்கிறார்கள். கால் வலி, உடல் வலிக்கும் சிகிச்சை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஹள்ரத் அவர்கள் கடைசிக் காலத்தில்,  நான் என்னுடைய தந்தையாரை கனவில் கண்டதே கிடையாது. ஆனால் சமீப காலமாக அடிக்கடி அவர்களை கனவில் காண்கிறேன் என்று முஹம்மது அலி ஹள்ரத் அவர்களிடம் கூறியுள்ளார்கள். 

குடும்பத்துடன் கடைசி சந்திப்பு:
12-12-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று (மௌத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்)  பாலக்காட்டுக்கு சிகிச்சைக்காகச் சென்றார்கள். மாலை திண்டுக்கல் திரும்பும்போது வழக்கத்துக்கு மாறாக கீரனூர் போய்விட்டுச் செல்லலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்று அஸர் பொள்ளாச்சியிலும் மக்ரிப் கீரனூரிலும் இஷா யூஸுபிய்யாவிலும் தொழவேண்டுமென்று திட்டமிட்டார்கள். பொள்ளாச்சியில் அஸர் தொழச் செல்லும்போது அங்கே ஹாஜிகள் ஜோடு நடந்து கொண்டிருந்தது. ஹள்ரத் அவர்களைப் பார்த்ததும் சிறிது நேரம் பேசுமாறு கூறினார்கள். அப்போது ஹள்ரத் அவர்கள், என்னை வற்புறுத்த வேண்டாம். மக்ரிப் கீரனூரிலும் இஷா யூஸுபிய்யாவிலும் தொழவேண்டுமென்று நினைத்துள்ளேன், என்று கூறி விட்டார்கள். அவர்களும் வற்புறுத்தவில்லை. பிறகு கீரனூருக்குச் செல்வதற்கு முன் வழக்கத்துக்கு மாறாக வடை வாங்கி வருமாறு உடன் சென்ற மௌலா பாயிடம் சொல்லியிருக்கிறார்கள். அவ்வாறே வடை வாங்கி வந்தார். பிறகு கீரனூர் சென்று மக்ரிப் தொழுது விட்டு மனைவி மற்றும் இளையமகளுடன் வடை, சாப்பிட்டுக்கொண்டு நிரம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுதும் உடல்நிலையைப் பற்றியும் வாழ்க்கையின் முடிவைப்பற்றியும் பேசியிருக்கிறார்கள். அவர்களுடைய சகோதரர் ஒரு கனவு கண்டிருந்தார். அதாவது, ஹள்ரத் அவர்கள், 5 - வது ஹஜ்ஜை முடித்துவிட்டு வருகிறார்கள். மக்கள் அவர்களை ஒரு பல்லக்கில் தூக்கி வருகிறார்கள். பெரும் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கனவை ஹள்ரத் அவர்கள் மனைவியிடம் சொல்லி இது வாழ்க்கை முடிவதற்கான அடையாளம் என்றும் கூறியிருக்கிறார்கள். உடல் நிலை சரியில்லாததால் மனைவியும் சில நாட்கள் கீரனூரில் தங்கிவிட்டுச் செல்லலாமே! , என்று யோசனை கூற, இல்லை! நான் இஷாவை யூஸுபிய்யாவில் தொழ நாடியுள்ளேன், என்று கூறி இஷாவுக்கு யூஸுபிய்யா வந்து சேர்ந்துவிட்டார்கள். இது தான் குடும்பத்தோடு  (சந்தோஷமாக) நடந்த கடைசிச் சந்திப்பு! ...

பிறகு ஏன் வாழ வேண்டும்?:
அதன் பிறகு வழக்கம் போல் பாடம் நடத்தியிருக்கிறார்கள். ஆனாலும் உட்காருவதற்கு சிரமப்பட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். உட்காரும்போது மெதுமெதுவாக உட்கார்ந்தாலும் பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுவது போல் சட்டென உட்காருவார்கள். அப்படியெல்லாம் சிரமப்பட்டும் கூட பாடத்தில் டேபிள், சேர் போட்டுக்கொள்ளவில்லை. கொள்கையில் அவ்வளவு உறுதி! 15- ம் தேதி புதன் கிழமை (மௌத்துக்கு ஒரு நாளைக்கு முன்) வைத்தியரைப் பார்ப்பதற்காக மதுரை சென்றார்கள். வைத்தியரிடம், எனக்கு வாழப் பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதற்கவர் ஏன்? என்று கேட்டார். மக்களுக்கு எவ்வகையிலும் பயன் கொடுக்க முடியவில்லை. மாணவர்களுக்குப் பாடமும் நடத்த முடியவில்லை. பிறகு நான் எதற்கு வாழ வேண்டும்? என்று கேட்டிருக்கிறார்கள். அவர் கை பிடித்துப் பார்த்துவிட்டு இன்னும் நான்கு வருடம் வாழ்வீர்கள்!  என்று சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகு நான் என்ன ஆவேன்? என்று கேட்டிருக்கிறார்கள். இதுவெல்லாம் மரணத்துக்கு ஒரு நாளைக்கு முன் நடக்கும் சம்பாஷணை. மக்களுக்கு அதிகம் பயன் கொடுக்கக் கூடியவர் தான் மக்களில் சிறந்தவர் என்ற நபி மொழிக்கேற்ப ஹள்ரத் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்திருக்கிறார்கள். 

சொல்லி வந்த மரணம்

மதுரையிலிருந்து வந்த மறுநாள் முஹர்ரம் 9 ஆம் நாள். மத்ரஸாவில் மாணவர்கள் 9, 10 ஆகிய இரு நாட்கள் நோன்பு வைப்பது வழக்கம். ஹள்ரத் அவர்களும் நோன்பு வைப்பதில் உறுதியாக இருந்தார்கள். எனினும்  உடல் நிலை சரியில்லாததால் நோன்பு வைக்க வேண்டாம் என்று மதுரைப் பயணத்தில் உடனிருந்த மௌலா பாய் கூறியிருக்கிறார். அப்படியானால் மத்ரஸாவில் சமையல் கிடையாது, என்று சொன்னதும் மௌலா பாய் தானாகவே  நாளை நாஷ்டாவும் மதிய சாப்பாடும் கொண்டுவருகிறேன், என்று சொல்லிவிட்டார். பிறகு மறுநாள் காலை ஸஹர் நேரத்தில் எழுந்து பெல் அடித்து யாரையாவது வருமாறு அழைத்தார்கள். அந்நேரத்தில் கண்ணியத்திற்குரிய எங்களுடைய உஸ்தாது முஹம்மது அலி ஹள்ரத்  அவர்கள் சென்ற போது ஹள்ரத் அவர்கள் உளூ செய்து விட்டு தஹஜ்ஜுதுக்காக சேரில் உட்கார்ந்து கையை உயர்த்தினார்கள். அப்போது அலி ஹள்ரத்திடம் ஸஹருக்கு உணவு கொண்டு வருமாறு கூறியிருக்கிறார்கள். உடல் நிலை சரியில்லையே என்று கேட்டதற்கு மத்ரஸாவே நோன்பு வைக்க நான் நோன்பு வைக்காமல் இருப்பதா? என்று கேட்டிருக்கிறார்கள். பிறகு ஸஹர் செய்தார்கள். நாளை இருப்பேனா?
மாணவர்கள் முஹர்ரம் நோன்பு வைத்திருந்தாலும் யூஸுபிய்யாவில் அந்நாட்களில் பாடம் நடைபெறுவது தான் வழக்கம். காலையில் சிறிது ஓய்வுக்குப் பின் எழுந்து பாடம் நடத்தியிருக்கிறார்கள். மிஷ்காத் பாடத்தில் தொழுகை பற்றிய ஹதீஸ் நடத்தும் போது ஒவ்வொரு தொழுகையையும் வாழ்க்கையின் கடைசித் தொழுகையாக நினைத்து தொழ வேண்டும் என்று கூறிவிட்டு என்னை பார்க்கும் போதும் தீதார் பார்ப்பது போல இது தான் கடைசி தடவை பார்க்கிறேன் என்று நினைத்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். பிரியமான மாணவர்கள் இந்த கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தார்கள். சட்டென நாளை நான் இருப்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று கேட்டிருக்கிறார்கள். தஃப்ஸீர் பாடத்தில் என்ன கேள்விகளை வேண்டுமானாலும் கேளுங்கள்! என்று கூறியுள்ளார்கள். ஒரு மாணவர் நான் ஒரு கேள்வி கேட்க வேண்டும். தனியாக வந்து கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு ஹள்ரத் அவர்கள் தனியாகக் கேட்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமா? என்று தெரியவில்லை. இப்பொழுதே கேட்டவிடு! என்று கூறியிருக்கிறார்கள். குர்ஆனைக் கற்று அதனை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பவர்கள் தான் உங்களில் சிறந்தவர் என்ற நபி மொழிக்கேற்ப கடைசி நேரம் வரை ஹள்ரத் அவர்கள் இல்மைக் கற்றுக்கொடுப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கிடையே ஒரு மாணவர் முந்தைய திங்கட்கிழமை வந்து லீவு கேட்டிருக்கிறார். அவர் தான், ஹள்ரத் அவர்களுக்கு தினமும் சிகிச்சைக்காக மருந்து, எண்ணெய் தேய்த்து விடுவார். அவரிடம், எப்ப வருவாய்? என்று கேட்டதற்கு, வியாழக்கிழமை வருவேன் என்று சொல்லியிருக்கிறார். அப்படியானால் வெள்ளிக்கிழமை குளிப்பாட்ட வருவாய்!. என்று சொல்லியிருக்கிறார்கள்.

2010 டிசம்பர்:
2001 ம் ஆண்டில் பேசிய பயானில் மௌத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். அதில், இன்னும் பத்து வருடத்துக்குப் பின் யார் இருப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? 2010 டிசம்பரில் நான் இறந்து விட்டால் உங்களால் என்ன செய்யமுடியும்?என்றும் கேட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் லால்பேட்டை ஜல்ஸாவுக்கு முக்கியத்துவத்துடன் செல்வார்கள். கடந்த வருடம் உடல் நிலை சரியில்லாமல் சிரமப்பட்டுத் தான் சென்றார்கள். அப்பொழுது, நான் அடுத்த வருடம் வருவேனா? என்பது சந்தேகம் தான், என்றும் கூறியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ரமளானுக்கு முன் சிலோன் சென்றிருக்கிறார்கள். இது தான் சிலோனுக்கு கடைசி பயணமாக இருக்குமென நினைக்கிறேன் என்று சொன்னார்கள்.

கடைசி மணித்துளிகள்:
நோன்பு வைத்த நிலையிலேயே பாடங்களை முடித்துவிட்டு மதியம் ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார்கள்.  மதியத்துக்கு மேல் மனைவியிடம் போன் பேசியிருக்கிறார்கள். உடம்பு வலி கடுமையாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். மனைவியாரும் ஸதகா செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். என்ன செய்வது? என்று கேட்டதற்கு மாணவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்களே! உங்கள் செலவில் சிக்கன் பஜ்ஜி போட்டுக் கொடுங்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். இப்பொழுது மத்ரஸாவில் இஃப்தாருக்கு ஏற்பாடு ஆகியிருக்குமே! சமையல் காரரும் புதியவர், அவருக்கு பக்குவம் தெரியுமா என்று தெரியவில்லை, என்று பேசிக்கொண்டிருக்கும் போதே லைன் கட்டாகிவிட்டது. பிறகு மூத்த மகளுக்கு போன் போட்டிருக்கிறார்கள்.    மதியம் ழுஹருக்குப் பின் ஒரு மாணவரைக் கூப்பிட்டிருக்கிறார்கள். அவர் வந்த பின் அஸருக்கு வருமாறு சொல்லிவிட்டார்கள். 4.30 மணிக்கு மேல் பெல் அடித்து ஆள் வரச் செய்து இஃப்தாருக்கு நேரம் ஆகிவிட்டதா? என்று கேட்டிருக்கிறார்கள். பிறகு 4.50 மணிக்கு ஏற்கனவே வரச் சொன்ன மாணவர் சென்றிருக்கிறார். அப்பொழுது வெள்ளைத்துணிகளை சலவைக்காக கொடுத்திருக்கிறார்கள். பிறகு வேண்டாமென்று துணியை வாங்கி வைத்துவிட்டார்கள். பின்னர் உளூ செய்ய சென்றார்கள். மாணவர் வெளியேறிவிட்டார். மணி 5-10 க்கு வைத்தியருக்கு போன் போட்டிருக்கிறார்கள். அதன் பிறகு நடந்தது என்ன?!?!?!?!?!

கடைசி நிமிடங்கள்: நோன்பு திறப்பதற்கு நேரம் நெருங்குகிறது. ஹள்ரத் அவர்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை. அவர்களாக எழுந்திருப்பது தான் வழக்கம். இப்தாருக்கு ஏற்பாடுகள் ஆகிவிட்டன. நேரமும் நெருங்கி விட்டது. பாங்கு சொன்ன பிறகும் எழுந்திருக்க வில்லையானால் எழுப்பி விடுமாறு மாணவரிடம் சொல்லிவிட்டு அவரவர் நோன்பு திறக்கும் இடத்திற்குச் சென்றுவிட்டோம். பாங்கும் சொல்லப்பட்டது. பேரீத்தம் பழத்தை எடுத்து சுவைத்து விட்டு வடையைத் தான் கடித்திருப்போம். அப்பொழுது தான் அதிர்ச்சி காத்திருந்தது. அதை நாங்கள் உணரவில்லை. அந்த மாணவர் ஓடோடி வந்து ஹள்ரத் அவர்கள் எழூப்பியும் எழுந்திரிக்கவில்லை! என்று கூறியது தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. நோன்பு திறக்கும்போது  நோன்பாளிக்கு சந்தோஷம் உண்டு என்று ஹதீஸில் வந்துள்ளது. ஆனால் அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. பதறிப்போய்ப் பார்த்தால் எல்லாம் முடிந்து நிரந்தர உலகத்திற்கு போய்விட்டிருந்தார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.  இறந்துவிட்டதை நம்பவும் முடியவில்லை. சொல்லவும் முடியவில்லை. ஹள்ரத் அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தது போலவே கொஞ்ச நேரத்தில் பெயர் ஜனாஸா என்று மாறிவிட்டது.  சிறந்த மௌத்:
இது, அவர்களைப் பொறுத்தவரை மிகச்சிறந்த மௌத். வாழ்க்கையின் கடைசித் தொழுகையாக அஸர் தொழுகை (ஸலாத்துல் உஸ்தா - நடுத்தொழுகை) யைத் தொழுதிருக்கிறார்கள். முஹர்ரமுடைய நோன்பு வைத்த நிலையில் நோன்பு எங்களோடு திறக்காமல் மக்ரிப் நேரம் வருவதற்கு முன் சென்றுவிட்டார்கள். அவ்வளவு உடல் வலியிலும் கடைசி நாளிலும் தஹஜ்ஜுத் தொழுதிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் குடும்பத்தோடு சந்தோஷமாக இருந்து விடை பெற்றிருக்கிறார்கள். கடைசி நாளிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்தியிருக்கிறார்கள். அது மட்டும் முஹர்ரம் நோன்பு அல்லாமல் ரமளானுடைய நோன்பாக இருந்திருந்தால் மாணவர்களுக்குப் பாடம் நடத்தியிருக்க முடியாது. குடும்பத்தினருடன் பேசியிருக்கிறார்கள். மத்ரஸாக்களுடைய முன்னேற்றத்திற்காக மஜ்லிஸுல் மதாரிஸில் அரபிய்யா மூலம் செயல்படுத்துவதற்கு கடைசி நேரத்திலும் தலைசிறந்த திட்டங்களைத் தயார் செய்து அதைப் பொறுப்பாளர்களிடம் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். யாருக்கும் எந்தச் சிரமமும் கொடுக்காமல் தங்களுடைய சுய வேலைகளை தாங்களே செய்த நிலையில் சென்றிருக்கிறார்கள். வெள்ளைப் போர்வையால் முறையாகப் போர்த்திக் கொண்டு ஜனாஸா படுத்திருப்பது போல படுத்திருக்கிறார்கள். எல்லாம் சரி! நாங்கள் என்ன செய்வது? எங்களைப் பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்தார்களே! எங்களை தவிக்க விட்டுவிட்டு அவர்கள் போர்த்திக்கொண்டு புன்முறுவலோடு  சென்றுவிட்டார்களே!.

ஹள்ரத் அவர்களுக்கு இது கடைசி நேரம் என்று கற்பனையில் கூட நாங்கள் நினைக்க வில்லையே! தகப்பனார் இறந்து விட்டார். பிள்ளைகள் கண்ணீர் வடிக்கிறார்கள். தாங்கிக் கொள்ளமுடியாத சோதனை. யூஸுபிய்யா யூஸுபிய்யா என்று காலமெல்லாம் கட்டிக்காத்தார்கள். இன்று அந்த யூஸுபிய்யாவின் சிறிய அறையில் ஒரு ஓரத்தில் ஒய்யாரமாக படுத்துக்கொண்டு இனிமேல் யூஸுபிய்யாவை நீங்களே நல்ல விதமாக பார்த்துக்கொள்ளுங்கள்! என்று கூறி விட்டு இறை சன்மானத்தை பெறுவதற்காக சென்றுவிட்டார்கள். இன்றும் கூட (23.01.2011) ஹள்ரத் அவர்கள் வஃபாத்தாகி ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் நடந்து முடிந்ததெல்லாம் கனவா? நனவா? என்று தான் எங்களுடைய உள் மனது கேட்டுக்கொண்டிருக்கிறது.   யூஸுபிய்யாவில் மக்கள் வெள்ளம்:
யூஸுபிய்யா இன்று மௌத் வீடு. மரணச்செய்தி சில நிமிடங்களில் உலகெங்கும் பரவிவிட்டது. கொஞ்ச நேரத்தில் சவூதியிலிருந்தும் சிலோனிலிருந்தும் துபையிலிருந்தும் போன்கள் வர ஆரம்பித்தன. திண்டுக்கல் மாவட்டமே திரண்டுவிட்டது. யூஸுபிய்யா, மக்கள் வெள்ளத்தால் திணறுகிறது. ஆனால் பட்டமளிப்பு விழா எதுவும் இல்லை. பட்டமளித்தவரே படுத்துக் கொண்டார். பத்து மணி வரை ஜனாஸா மத்ரஸாவில் இருந்தது. 9.30 மணிக்கு ஜனாஸாவை ஒட்டியிருந்த பள்ளியில் இஷா தொழுகை நடந்தது. இமாம் வல் ஃபஜ்ரி சூராவை ஓதினார். கடைசியாக யாஅய்யதுஹன் நஃப்ஸு.... ஓ நிம்மதியடைந்த ஆன்மாவே! செல் உன் இறைவனின் பக்கம்! (உன் நல்ல முடிவைக் கண்டு ) மகிழ்ந்த நிலையில்! (மேலும் உன் இறைவனின்) திருப்தியைப் பெற்ற நிலையில்! இணைந்து விடு என்னுடைய அடியார்களுடன்! நுழைந்து விடு என்னுடைய சுவனத்தில்!என்று ஹள்ரத் அவர்களைப் பார்த்துச் சொல்வது போலவே காதில் ஒலித்தது. ஹள்ரத் அவர்கள் வழமையாக குர்ஆன் ஓதும்போது கடைசியாக ஓதி முடித்த வசனமும் சுவனத்தை பற்றிய வசனம் தான்! இதோ அந்த வசனத்தின் மொழிபெயர்ப்பு: எவர்கள் அல்லாஹ் எங்கள் இறைவன் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து  நின்றார்களோ திட்டமாக அவர்கள் மீது வானவர்கள் இறங்குகிறார்கள். மேலும் அவர்களிடம் கூறுகிறார்கள்: அஞ்சாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப் பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்! நாங்கள் இந்த உலகிலும் மறுமையிலும் நேசர்களாக உற்ற துணையாய் இருப்போம். அங்கு நீங்கள் விரும்புகின்றவை அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் கேட்கக்கூடிய ஒவ்வொன்றும் உங்களுடையதாகி விடும். பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் உள்ள இறைவனிடமிருந்து கிடைக்கும் விருந்தாகும் இது!  (அல்குர்ஆன் - 41: 30-32). யூஸுபிய்யாவில் அவர்கள் கடைசியாக நடத்திவைத்த பட்டமளிப்பு விழாவில் (கடந்த வருடம்) இதே வசனங்களை அழுது கொண்டே ஓதி அவற்றின் விளக்கத்தைப் பேசினார்கள். பத்தரை மணிக்கு ஆம்புலன்ஸ் கீரனூர் நோக்கிப் புறப்படுகிறது. எப்பொழுதும் காரில் செல்வார்கள்; திரும்பி வருவார்கள். ஆனால் இப்பொழுது வழியனுப்பி வைக்கிறோம். திரும்ப மாட்டார்களே என்ற ஏக்கத்துடன்! காலையில் கீரனூர் நிரம்பி வழிகிறது. பாதைகளெல்லாம் மக்கள் வெள்ளம். கீரனூர் சரித்திரத்தில் இதுவரை அது போன்றதொரு கூட்டத்தை கண்டிருக்காது. எல்லாருக்கும் இரங்கல் பேசிய ஹள்ரத் அவர்களுக்கு இன்று மற்றவர்கள் இரங்கல் பேசுகிறார்கள். இந்த காட்சியையும் காணவேண்டுமா? மௌத்துக்கு வந்தவர்கள்  சென்றுவிட்டார்கள். பிறகென்ன இருக்கவா செய்வார்கள்? அது சரி. ஆனாலும் மௌத் வீட்டார்(யூஸுபிய்யா மற்றும் யூஸுஃபி)களுக்கு இன்னும சோகம் தீரவில்லை. 

யூஸுஃபிய்யா இயக்காமலே இயங்கும்!
அதே சமயம் ஹள்ரத் அவர்களுடைய விருப்பம் என்னவோ அதை நடைமுறைப்படுத்துவதில் கண்ணியத்திற்குரிய உஸ்தாது முஹம்மது அலி ஹள்ரத் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டார்கள். ஒரு பக்கம் எல்லோரையும் விடத் தாங்கமுடியாத துக்கம் அலி ஹள்ரத் அவர்களுக்குத் தான். ஹள்ரத் அவர்களுடைய மரணச்செய்தியைக் கேட்டு அலி ஹள்ரத் அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்று தான் கேட்கிறார்கள். அதே சமயம் மறுநாள் சனிக்கிழமை பாடநாள். என்னுடைய ஜனாஸா அந்தப் பக்கமாக சென்றால் இங்கே (மத்ரஸாவில்) பாடம் நடக்கும் சப்தம் கேட்க வேண்டும். என்னுடைய மௌத்தின் காரணமாகக் கூட பாடத்திற்கு இடைஞ்சல் வரக்கூடாது, என்று சொல்வார்கள். அதே போன்று பாடநேரம் முடிந்து வியாழன் மக்ரிபு சமயத்தில் வஃபாத்தாகியிருக்கிறார்கள். மறுநாள் வெள்ளிக்கிழமை அடக்கம் முடிந்துவிட்டது. சனிக்கிழமை வழக்கம் போல் பாடம் ஆரம்பமாகிறது. பாட நேரம் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே ஹள்ரத் அவர்களுடைய பாடங்களை மற்ற உஸ்தாதுமார்களிடம் பிரித்துப்போடுவதற்கு முஹம்மது அலி ஹள்ரத் அவர்கள் மஷூரா செய்தார்கள். அப்பொழுது அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களுடைய ஞாபகம் தான் வந்தது. சவூதியில் மேகனைட் ரோட்டில் வாகனங்கள் இயக்கப்படாமலே ஓடுவது போல இந்த மத்ரஸா வருகின்ற தடைகளை தகர்த்தெறிந்து விட்டு தானாக இயங்கும் அளவுக்கு ஹஜ்ரத் அவர்கள் தன்னையே உருக்கி ஊற்றியிருக்கிறார்கள். (மேகனைட் போல) எனவே ஹள்ரத் அவர்கள் இல்லையானாலும் அவர்கள் இருக்கும் போது யூஸுபிய்யா எப்படி முன்னேற்றப் பாதையில் செம்மையாகவும் நிறைவாகவும் செயல்பட்டதோ அதே போன்று அல்லது இன்ஷாஅல்லாஹ் அதை விட சிறப்பாகவும் அல்லாஹ் நடத்தி வைக்கப் போதுமானவன். ஹள்ரத் அவர்கள் ஒன்றும் மதரஸாவை சும்மா விட்டுவிட்டுப் போகவில்லை. தகுதியானவர்களை உருவாக்கி விட்டுத் தான் சென்றிருக்கிறார்கள். எழுதுபவனுக்கு இதில் எந்தப் பெருமையும் இல்லை. ஏனெனில் ஹள்ரத் அவர்கள் ஹயாத்தாக இருக்கும் போது சொன்னதைத் தான் எழுதுகிறேன். கடந்த வருடம் 30-06-2010 அன்று  மாணவர்களுடைய திறன்வெளிப்பாடு மஜ்லிஸ்,  நாள் முழுவதும் ஹள்ரத் அவர்களுடைய தலைமையில் நடந்தது. ஹள்ரத் அவர்கள் நிறைவாக சில விஷயங்கள் பேசும்போது முன்னால், மாணவர்கள் இருக்கிறார்கள். வலதுபக்கமும் இடதுபக்கமும் உஸ்தாதுமார்கள் இருக்கிறார்கள். அப்பொழுது ஹள்ரத் அவர்கள், வலது பக்கமும் இடது பக்கமும் திரும்பி இரண்டு தடவை இவர்களோடும் மாணவர்களைப்பார்த்து உங்களோடும் நான் வாழ்கிறேன் என்று கூறினார்கள். இன்று அந்த வாசகம் கண்ணீரை வரவழைக்கிறது. எனவே இன்றும் அவர்கள் உடன் இருப்பதாகவே நினைத்து மாணவர்களும் மற்றவர்களும் செயல்படுகிறார்கள். ஹள்ரத் அவர்கள் வளர்த்து விட்ட இந்த மத்ரஸாவை நிர்வாக உதவியுடன் எப்பாடு பட்டாவது கட்டிக்காக்க மாணவர்களும் உஸ்தாதுமார்களும் உறுதி பூண்டிருக்கிறார்கள்.
யாராவது ஏதாவது முஸீபத்தில் பீடிக்கப்பட்டால் என்னை நினைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய இழப்பைப் போன்று யாரும் சோதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள் என்ற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் தான் ஆறுதலைத் தரமுடியும். ஹள்ரத் அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். அடக்கம் செய்யப்பட்டு ஒரு நாளுக்குப் பின் 5 ம் ஜும்ரா ஓதும் ஒரு மாணவர் வந்து , நான் ஒரு கனவு கண்டேன். அதில் ஹஜ்ரத் அவர்கள் வந்து, நான் மலக்குமார்களைப் பார்க்கிறேன். ஜன்னத்தில் இருக்கிறேன்.  நீங்கள் ஏன் கவலைப் படுகிறீர்கள் என்று கேட்டதாக சொன்னார். இதே போன்று கப்ரில் சந்தோஷமாக இருக்கும் கனவை பலரும் கண்டிருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுடைய அந்தஸ்தை மென்மேலும் உயர்த்துவானாக! சுவனத்தில் அவர்களோடு நம்மையும் ஒன்று சேர்த்தருள்வானாக! மத்ரஸாவை கியாம நாள் வரை இக்லாஸுடன் எந்தத் தொய்வும் இல்லாமல் நடத்தாட்டுவானாக!! அவர்களுடைய மரணத்தை மக்களுடைய ஹிதாயத்துக்கு காரணமாக்குவானாக!

2 comments:

  1. Assalamu Alaikum Moulana,

    All the Praise to ALLAH Subahanuathalah! - ALHAMDULILLAH!!!

    In the Holy Quran ALLAH(sub) says in many Ayatha's that
    HE(ALLAH) has created "Many Proves/Evidences" for mankind to learn and obey the Commandments of ALLAH(sub).

    I observe this narration-
    "அல்லாமா கீரனூரி ஹள்ரத் (ரஹ்) ஒரு சகாப்தம்"
    as similar ONE from ALLAH(sub).

    Jazakallah hairen.
    Wishing you, ALLAH will give the strength to continue this work in
    how HE'll accept from YOU & ALL of US.

    INSHAALLAH keep going more!

    Rgds
    Ansar Basha

    ReplyDelete