Friday, 19 April 2013

ஸ்பெயினுடைய வரலாற்றை ஏன் படிக்க வேண்டும்?





ஸ்பெயினுடைய வரலாற்றை ஏன் படிக்க வேண்டும்?
لقد كان في قصصهم عبرة لاولي الالباب
முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் வரலாறுகளில் பகுத்தறிவுடையோருக்கு அரிய படிப்பினை உள்ளது....  (12:111) என்று கூறுகிறது குர்ஆன். எனவே தான் இறைவேதத்தில் சரித்திரங்கள் திரும்பத்திரும்ப கூறப்பட்டுள்ளன. வரலாற்றின் மூலம் படிப்பினை பெறுபவர்கள் தான் அறிவாளிகள் என்ற கருத்தை சூசகமாக விளக்கும் இந்த வசனம் சரித்திரத்தை எந்த நோக்கத்தில் படிக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. நாவல் படிப்பது போல் பொழுது போக்குவதற்காக இல்லாமல் வாழ்க்கையில் தேவையான திருப்பத்தை ஏற்படுத்துவகற்காக படிக்க வேண்டும்.       `உங்களில் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்கு அல்லாஹ் வாக்குறுதி அளிப்பது என்னவெனில் அவர்களை பூமியில் ஆட்சி (அதிகாரத்தை கொடுத்து) பிரதிநிதிகளாக்குவான்; அவர்களுக்கு முன் சென்ற மக்களை பிரதிநிதிகளாக்கியது போன்று! மேலும் அல்லாஹ் அவர்களுக்காக எந்த மார்க்கத்தை விரும்பினானோ அந்த மார்க்கத்தை வலுவாக நிலைநாட்டுவான். மேலும் அவர்களின் அச்சநிலையை அமைதிநிலையாக மாற்றித் தருவான். அவர்கள், என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணையாக்க மாட்டார்கள். இதன் பிறகும் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களே பாவிகள் ஆவர்` (அல்குர்ஆன் 24;55)
அல்லாஹ்வின் இந்த வாக்குறுதியை வரலாற்றின் ஒவ்வொரு பக்கமும் உண்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஃபிரான்சுடைய எல்லையிலிருந்து மங்கோலியா வரை முஸ்லிம்களின் பேரரசு முரசு கொட்டிக்கொண்டிருந்தது. பிறுகு என்ன ஆனது? அவர்கள் எங்கே போனார்கள்? சாதனை படைத்தவர்களின் வரலாற்றின் இறுதிப்பக்கங்கள் ஏன் இருட்டாகிவிட்டன? அந்த இறுதிப் பக்கங்கள் தான் இன்றைய சமுதாயம் படிப்பினை பெற வேண்டிய முதன்மைப்பக்கங்கள். நம்முடைய கடந்த கால வரலாற்றையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசத்தை உணரமுடிகிறது.
வரலாற்றின் நோக்கம்:
சரித்திரத்தை சரித்திரமாக படிக்கவேண்டுமே தவிர நாவலாக படிக்கக்கூடாது. சமுதாயத்தின் எதிர்காலம் கடந்த காலத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. காலம் என்பது அறுந்து போகமுடியாத ஒரு சங்கிலித்தொடர் நிகழ்காலத்தில், சாதனைகள் பல நிகழ்த்த வேண்டுமென்றால் கடந்த கால வரலாற்றின் மூலம் படிப்பினை பெற்றாக வேண்டும். நம்முடைய சரித்திரத்தை நாம் படிக்கவில்லையானால் நம்முடைய தகுதியையும் திறமையையும் நாம் சரியாக அளவிட முடியாது. `சரித்திரம் பெருமை பட்டுக்கொள்வதற்காக அல்ல; படிப்பினை பெறுவதற்காக` என்பதை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளவேண்டும். முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் எடுத்து - ஏற்று நட்பபதற்கும் ஒதுக்கி விலக்குவதற்கும் நிறைய பாடங்களை படிக்கமுடியும். குறிப்பாக ஏறத்தாழ 800 ஆண்டு காலமாக முஸ்லிம்களின் ஆட்சி நடந்த ஸ்பெயினுடைய வரலாற்றின் ஆரம்பம் ஆச்சரியத்திற்குரியதாக இருக்கிறது. நம்மை சந்தோஷப்படுத்துகிறது. `முஸ்லிம் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்று சொல்லவைக்கிறது. பாருங்கள் எங்களுடைய வெற்றி வரலாற்றை! என்று எல்லாரிடமும் பெருமிதம் கொள்ளவைக்கிறது.
உணர்வலைகள்
ஸ்பெயினுடைய வரலாற்றை படிக்கும் போது சில சமயம் உங்களுடைய மனதில் சந்தோஷம் ஏற்படும். முஸ்லிம்கள் இவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறார்களே! சுல்தான்கள் மக்களை ஆட்சி செய்தால் உலமாக்கள் ஆட்சியாளர்களையே ஆண்டிருக்கிறார்களே! எவ்வித பயமுமின்றி ஜாமிஆ மஸ்ஜிதில் ஜும்ஆ உரையில் ஆட்சியாளர்களின் குறைகளை சுட்டிக்காட்டியிருக்கிறார்களே! நிர்வாகத்தில் இவ்வளவு சிறந்து விளங்கியிருக்கிறார்களே! உலக நாடுகளே ஸ்பெயினைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனவே! இவற்றையெல்லாம் படிக்கும் போது ஆனந்தம் பெருகும். ஆனால் நீடிக்காது.  காலம் மாறியது; சூழ்நிலையும் மாறியது; மக்களும் மாறினார்கள்; நிலைமை தலைகீழானது. தாழ்வு மனப்பான்மை மனதை கவ்விக்கொள்கிறது. இபபடியும் நடக்கவேண்டுமா? இந்தத் துயரம் எங்கிருந்து வந்தது? என்று திகிலடையச் செய்கிறது. வெற்றிவாகை சூடிய வாய்மையாளர்கள் எங்கே சென்றார்கள்? முஸ்லிம்களுக்கு இவ்வளவு பெரிய சோதனை எங்கிருந்து எப்படி வந்தது? வரலாற்றின் ஆரம்ப பக்கங்கள் பொன்னெழுத்துக்ககளால் பதிக்கப்பட வேண்டிய அளவுக்கு இருந்த நிலை மாறி இரத்தக் கண்ணீரால் எழுதப்படுமளவுக்கு இறுதிப் பக்கங்கள் இருண்டு போனதற்கு என்ன தான் காரணம்? வரலாறே பதில் சொல்லட்டும்; சரித்திரமே சான்றாகட்டும்.
அறிவின் ஊற்று ஸபெயின்:
ஸ்பெயினில் உலகப்பிரசித்தி பெற்ற உலமாக்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களால் தொகுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பக்கங்களில் பல வால்யூம்கள் கொண்ட நூற்கள் உலகம் முழுவதும் உள்ள நூலகங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. தஃப்ஸீருல் குர்துபீ எழுதிய அல்லாமா குர்துபீ (ரஹ்), இப்னு ஹஸம் ளாஹிரீ (ரஹ்) என்று அழைக்கப்படும் தனிப்பெரும் ஆய்வாளர், ஹதீஸ் கலையில் பிரசித்தி பெற்றவரும் ஏராளமான நூற்களை இயற்றியவருமான இப்னு அப்துல் பர் (ரஹ்), முவத்தா மாலிக் என்று பிரபல்லியமாக பேசப்படும் ஹதீஸ் கிரந்தத்தை நேரடியாக இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்டு நமக்கு அறிவித்த யஹ்யப்னு யஹ்யல்லய்தீ (ரஹ்), ஐரோப்பிய நாடுகளில் பரவலாக பேசப்படும் இப்னு ருஷ்து மாலிகீ (ரஹ்), தலை சிறந்த வரலாற்றாசிரியர் இப்னு கல்தூன் (ரஹ்) 800 வருட முஸ்லிம்களின் ஆட்சியை முழுமையாக தொகுத்துத் தந்த மக்கிரீ (ரஹ்) போன்ற பிரசித்தி பெற்ற உலமாக்களை கொண்ட நாடு தான் ஸ்பெயின். இவர்களுடைய ஆக்கங்களின் மூலம் நாம் இன்றும் பயன் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஸ்பானிய முஸ்லிம்கள் எவ்வளவு மார்க்கப் பற்றுள்ளவர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக பின்வரும் தகவலையும் படித்துக் கொள்ளுங்கள்: மதீனாவாசிகள் மார்க்கரீதியாக எந்தக் காரியம் செய்தாலும் அதுவும் இஸ்லாத்தில் உள்ள காரியம் தான். நபியவர்களின் நகரத்தார்கள் செய்கிறார்கள் என்பது மட்டுமே அது மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்டது என்பதற்கு போதுமான ஆதாரம், என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள், ஒரு அடிப்படைச் சட்டத்தைக் கூறியுள்ளார்கள். அதே போன்று ஸ்பெயினுடைய தலைநகராக இருந்த குர்துபா (cordoba) வுடைய (அந்த கால) மக்கள் மார்க்க ரீதியாக செய்யும் காரியங்களும் மார்க்கத்தில் உள்ள காரியம் தான். குர்துபாவாசிகள் செய்கிறார்கள், என்பது மட்டுமே மார்க்கத்தில் அது அங்கீகரிக்கப்பட்ட காரியம் தான் என்பதும் மாலிகீ மத்ஹபினர்களின்  அடிப்படைச் சட்டங்களில் ஒன்று என்றும் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளதாக அபுல் ஹஸன் அலீ நத்வீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: இஸ்லாம் மே அவ்ரத் கா தரஜா... )
விண்ணியல்:
உலகியல் ரீதியாகவும் திறமையான விஞ்ஞானிகள் ஸ்பெயினில் உருவாகியுள்ளனர். இங்குள்ள யுனிவர்சிடியில் ஐரோப்பிய நாட்டிலிருந்தும் மாணவர்கள் வந்து கல்வி பயின்றிருக்கிறார்கள். விண்ணியலில் புதிய விஞ்ஞானக் கோட்பாட்டை முதன்முதலில் அறிவித்தவர் ஸ்பெயினைச் சார்ந்த முஸ்லிம் விஞ்ஞானி ஜர்காலீ (arzachel) தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? முஸ்லிம்கள் ஸ்பெயினை வெற்றிகொண்ட நாள் முதல் இன்று வரை ஜர்காலியைப் போன்று ஒரு வானவியல் ஆய்வாளரை ஸ்பெயின் தந்திடவில்லை என்று அல்அஃலாம் என்ற நூல் கூறுகிறது. (1-79) பூமி மையக் கொள்கை - அதாவது பூமியைத் தான் சூரியனும் மற்ற கோள்களும் சுற்றிவருகின்றன என்ற கொள்கை தவறானது, சூரிய மையக்கொள்கை - அதாவது பூமியும் மற்ற கோள்களும் சூரியனை சுற்றிவருகின்றன என்ற கொள்கை தான் சரி என்ற புதிய விஞ்ஞானக் கோட்பாட்டை முதன்முதலில் 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோபர்நிகஸ் தான் அறிவித்தார் என்று மேற்குலகம் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் 11 ம் நூற்றாண்டில் ஸ்பெயினில் வாழ்ந்த ஜர்காலி அந்தலுஸி என்ற முஸ்லிம் விஞ்ஞானி அந்தக் கொள்கையை அறிவித்துவிட்டார். முஸ்லிம்களின் திறமைகளை இருட்டடிப்பு செய்யும் மேற்குலகம் இதையும் மறைத்து விட்டது. எனினும் உண்மை எப்பொழுதும் உறங்காது என்பதற்கிணங்க 1950 க்குப் பிறகு மேற்குலக ஆய்வாளர்களில் சிலர் புதிய விஞ்ஞானக் கொள்கைக்கு அரேபியர்களே சொந்தக்காரர்கள் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். கோபர்நிகஸும் அந்தக் கொள்கையை முஸ்லிம்களிடமிருந்து பெற்றுக்கொண்டதாக தம்முடைய நூற்களில் கூறியிருக்கிறார். (அல்அஃப்லாக் வல்அவ்காத்- கீரனூரி (ரஹ்) )
மருத்துவம்:
மருத்துவத் துறையிலும் முஸ்லிம்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஸ்பெயினைச் சார்ந்த அபுல் காஸிம் அல்ஜஹ்ராவீ (alzaharawius) அறுவை சிகிச்சை முறைக்கு வித்திட்டார். அது வரை மருந்து கொடுத்து சிகிச்சை செய்யும் முறை தான் நடப்பில் இருந்தது. அறுவை சிகிச்சை முறையை முதன்முறையாக உருவாக்கியவர் ஜஹ்ராவீ தான். அவர் கிபி பத்தாம் நூற்றாண்டின் மிகப் பெரும் அறுவை சிகிச்சை நிபுணராக (surgeon) விளங்கினார். ஜஹ்ராவீ அரபியில் எழுதிய தஸ்ரீஃப் என்ற நூல் அறுவை சிகிச்சை பற்றி விரிவாக விளக்குகிறது. அந்நூலில் கண் ஆப்ரேஷன், தொண்டை ஆப்ரேஷன், சிறுநீரகக்கல், மூலம் போன்ற வியாதிகளுக்கு செய்யும் ஆப்ரேஷன், வயிற்றில் குழந்தை இறந்து விட்டால் தாயிக்கு ஆபத்து இல்லாமல் குழந்தையை வெளியாக்கும் முறை, நிர்பந்த நிலையில் கருக்கலைப்பு முறை போன்றவை பற்றி இந்நூல் தெளிவக விளக்குகிறது. 18 ம் நூற்றர்ண்டு வரை அறுவை சிகிச்சை பற்றி நூல் எழுதிய மேற்கத்திய ஆய்வாளர்கள் ஜஹ்ராவியுடைய இந்நூலிலிருந்து ஆங்காங்கே மேற்கோள் காட்டியுள்ளனர். பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவுடைய எல்லா யூனிவர்சிடிகளின் பாடத்திட்டத்தில் ஜஹ்ராவீயுடைய தஸ்ரீப் என்ற நூல் இடம் பெற்றிருந்தது. ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி பறிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆன பிறகு (1497 ம் ஆண்டு) இந்நூல் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. 1881 ம் ஆண்டு ஒரு பிரெஞ்சு டாக்டர் இந்நூலை பிரெஞ்சு பாஷையில் மொழிபெயர்த்தார். (நூல்- நாம்வர் முஸ்லிம் ஸாயின்ஸ்தான்) இப்படி விண்ணியல் மற்றும் மருத்துவத்துறை உட்பட எல்லா துறைகளிலும் திறமையாளர்கள் ஸ்பெயினில் தோன்றியிருக்கிறார்கள். முழு ஐரோப்பாவும் இருண்டு கிடந்த போது ஸ்பெயின் மின்னிக் கொண்டிருந்தது. மேற்குலகுக்கு நவீன விஞ்ஞானம் இடம் பெயர்ந்ததே ஸ்பெயின் முஸ்லிம்களின் மூலம் தான். அவர்களிடமிருந்து தான் சிறந்த நாகரிகத்தையும் கற்றிருக்கிறார்கள். பீரங்கி உட்பட நவீன ஆயுதங்களையும் கண்டுபிடித்தனர். இன்று ஸ்பெயினில் விவசாயம் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு முஸ்லிம்கள் தான் காரணம். நிலத்தில் மடடுமல்ல; மலைகளிலும் விவசாயத்தை செழிப்படையச் செய்தனர்.
கொடுமைகள்:
இப்படி எல்லா வகையிலும் ஸ்பெயினுக்கு உதவியாக இருந்த முஸ்லிம்களை எந்த நன்றி விசுவாசமும் இல்லாமல் மதத்தின் பெயரால் கொன்று குவித்துவிட்டனர். லட்சக்கணக்கான முஸ்லிம்களை நெருப்பில் பொசுக்கியும் கொலை செய்தும் ஸ்பானியர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டது போல் உலகின் எந்த மூலை முடுக்கிலும் நடந்தது கிடையாது. முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை நியாயமாக சிந்திக்கக்கூடிய ஒவ்வொரு உள்ளத்ததையும் உலுக்கிவிட்டது. ஸ்பெயின் முஸ்லிம்கள் மூலம் நிறைவான விஞ்ஞான லாபத்தை அடைந்த ஐரோப்பியர்கள் தான் முதன்முதலாக இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தனர். ஸ்பானியர்கள் நிகழ்த்திய கொடுஞ்செயல் முழு சரித்திர காலத்திலும் நடந்திடாத அட்டூழியமும் அழிசசாட்டியமும் நிறைந்த மூர்க்கத்தனமான செயல் என்று பிரஞ்சு அரசியல்வாதி கார்டினால் ரிஷலு (உயசனயேட சஉநடநைர) கடுமையாக சாடியுள்ளார். (மிஹ்னதுல் அரப் ஃபில் அந்தலுஸ்)
ஸ்பெயினுடைய உலமாக்களின் படைப்புகள் மூலம் முழு இஸ்லாமிய உலகமும் பயன் பெற்றுக் கொணடிருக்கிறது. முஸ்லிம் விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் மூலம் மேற்குலகம் அடைந்த லாபம் ஏராளம். உலமாக்கள் ஆட்சியாளர்களையும் தட்டிக் கேட்கும் அளவுக்கு பலம் பெற்றிருந்தனர். தவறுகளை சுட்டிக்காட்டுவதில் எந்தக்குறைவும் செய்யவில்லை. வரலாற்றை பார்க்கும் பொழுது மக்களும் ஈமானில் உறுதியாக இருந்ததாகவே தெரிகிறது. முஸ்லிம்கள் தோல்வியடைந்த பிறகும் கூட கஷ்டங்களை சகித்துக்கொள்ள தயாராக இருந்தனர். நிர்பந்தமாக கிருத்துவர்களாக ஆக்கப்பட்டாலும் மறைமுகமாக தங்களுடைய ஈமானை பாதுகாத்துக்கொண்டனர். எதிரிகளுக்கு தெரியாமல் தொழுது கொண்டனர்.. தங்களுடைய பிள்ளைகளுக்கு மார்க்கத்தை படித்துக்கொடுத்தனர். வீழ்ச்சி ஏன்?
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்பெயின் நம் கையை விட்டும் போனதற்கு என்ன காரணமாக இருக்கும? என்ற கேள்விக்கு முஸ்லிம்களின் ஒற்றுமையின்மையும் எதிரிகளின் ஒற்றுமையும் தான் என்பது ஸ்பெயினுடைய வரலாற்றைப் படிப்பவர்கள் பதில் சொல்லிவிட முடியும். இதயத்தை வெடிக்கச் செய்யும் இந்த சரித்திரத்தை படித்துவிட்டு ஸ்பெயினுக்கு இரங்கட்பா பாடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் இறைவேதத்தின் கீழ் மார்க்கப்பற்றோடு ஒற்றுமையாக இருப்பதற்கு மகத்தான படிப்பினை பெற்றுக்கொண்டால் இந்த வரலாற்றை படிப்பதில் நமக்கு நன்மைகள் ஆயிரம் கிடைக்கும். 

No comments:

Post a Comment