Tuesday, 16 April 2013

டுனீஸியா, எகிப்து கடந்த கால கவர்ச்சியும் நிகழ்கால எழுச்சியும்

டுனீஸியா, எகிப்து கடந்த கால கவர்ச்சியும் நிகழ்கால எழுச்சியும்
21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரபு மண்ணில் ஏற்பட்ட புரட்சி அரபுலகில் ஒரு புதிய தொடக்கமாக உருவெடுத்துள்ளது. துனீஸியா, எகிப்து என்று ஆரம்பித்த அரேபியர்களின் எழுச்சி இன்று லிபியா, பஹ்ரைன், ஏமன் என பல நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணங்களை ஏற்கனவே மனார் தெளிவு படுத்தியிருந்தது. புரட்சி வெடித்த நாடுகளின் சமூக மற்றும் மத உரிமைகளின் நிலை என்ன? புரட்சிக்குப் பின் இன்று வரை அந்நாடுகள் எவ்வகையான திருப்பங்களை பெற்றிருக்கின்றன, என்பது பற்றி பார்ப்போம். 
துனீஸியா:
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து  துனீஸியா 1957 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. சுதந்திர நாட்டின் முதல் அதிபர் அல்ஹபீப் போர்கீபா. மேற்கத்தியர்கள் அரபு நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கினாலும் அந்நாட்டின் கடிவாளம் தங்களின் கரங்களில் இருப்பதையே விரும்பினார்கள். முஸ்லிம்களை முஸ்லிம்களாக வாழ விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். எனவே, தங்களின் கைப்பாவைகளையே ஆட்சியில் அமர்த்தினர். இந்த அல்ஹபீப் போர்கீபா அந்த நோக்கத்தை எந்தக் குறைவுமின்றி நிறைவு செய்தார். ஷரீஅத்தை சரியில்லையென்றார்:
பலதார மணத்திற்கு தடை விதித்தார். அதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தார். கணவன் மனைவி ஆகிய இருவரும் ஒன்றிணைந்து விரும்பினால் மட்டுமே தலாக் கொடுக்க முடியும் என்பதை கட்டாயமாக்கினார். நீதிமன்றத்தின் மூலமே தலாக் - விவாகரத்து செய்ய வேண்டும் என்று சட்டமாக்கினார். பெண்களுக்கு கட்டுப்பாடில்லாத சுதந்திரத்தையே மார்க்கம் என்றார். பெண்களுடைய பார்தா முறை காற்றில் பறந்தது. அரசவைகளில் அந்நிய ஆண்களையும் பெண்களையும் அருகருகே அமரச் செய்தார். குர்ஆன் ஹதீஸை விமர்சித்தார்:
1974 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ம் தேதி பெய்ரூத்திலிருந்து வெளியாகும் அஷ்ஷிஹாப் என்ற பத்திரிக்கை டூனிஸிய அதிபர் போர்கீபா உடைய மார்க்கத்தையே பொய்யாக்கும் கொள்கைகளை பின்வருமாறு வெளியிட்டது. குர்ஆனில் முரண்பாடு இருக்கிறது. ஒரு இடத்தில் அல்லாஹ் நாடியது மட்டுமே நடக்கும் என்றும் மற்றொரு இடத்தில் மக்கள் தாங்களாக மாறாத வரை அவர்களிடம் அல்லாஹ் மாற்றத்தை கொண்டு வர மாட்டான், என்றும் உள்ளது. முஹம்மது (ஸல்) அவர்கள் அதிகமாக அரேபிய பாலவனங்களில் பயணம் செய்வதால் பயணத்திற்கிடையில் தான் கேட்டு வந்த பொய்யான செய்திகளையே குர்ஆன் என்று கூறினார். முஸ்லிம்கள் முஹம்மது (ஸல்) அவர்களை கடவுளாக ஆக்கிவிட்டனர் (நவூது பில்லாஹ்)  போர்கீபாவுடைய இந்த கொள்கைகள் பதில் சொல்வதற்கு தகுதியற்றவை. அவருடைய கொள்கைகள் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முரணானவை. (நூல்: அஸ்ஸிராஃ)
பின் அலீ:
போர்கீபாவை அடுத்து 1987 ம் ஆண்டு ஜைனுல் ஆபிதீன் பின் அலீ என்பவர் துனிஸிய அதிபரானார். இவரைத் தான் நம்முடைய ஊடகங்கள் பென் அலி என்றும் பின் அலி என்றும் கூறுகின்றன. இவரும் அல்ஹபீப் போர்கீபா உடைய பாதையிலேயே சென்றார். பெண்கள் பர்தா அணிவதற்கு கடுமையாக தடை விதித்தார். மேற்குலகம் விரும்பும் கவர்ச்சியும் ஆபாசமும் பரவலானது. கல்வி நிலையங்கள், பொது இடங்கள், பணி செய்யும் இடங்களில் பர்தா அணியக்கூடாது என்று சட்டமியற்றினார். பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் பர்தாவை ஒழிப்பதற்காக போலீஸ் துறையின் மூலம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். பர்தா அணிய மாட்டோம். தலையை மறைக்க மாட்டோம், போன்ற உறுதி மொழிகளை எடுக்க வேண்டுமென்றும் உறுதி மொழி வாங்கி கையொப்பமிட வேண்டும் என்றும் நிர்பந்தப்படுத்தினார். ஆண்கள் தாடி வைக்கக்கூடாது. சில நாட்களுக்கு முன் துனீசிய நாட்டின் தப்லீக் ஜமாஅத் ஒன்று திண்டுக்கல் வந்திருந்தது. அந்த ஜமாஅத்தில் ஒருவர் தாடி வைத்ததற்காக நான் இரண்டு முறை ஜெயிலுக்கு சென்றேன் என்று கூறினார்.  இஸ்லாமிய எழுச்சி:
வேலை வாய்ப்பின்மை, வறுமை, அரச குடும்பத்தின் எதேச்சதிகாரம், சுகபோகம், ஆடம்பரம் போன்றவை பொது மக்களை கிளர்ந்தெழுவதற்கு தூண்டிவிட்டிருக்கின்றன. அத்துடன் மக்களிடம் பல வழிகளில் மார்க்கப் பற்றும் வளர்ந்து கொண்டிருந்தன. மேற்கூறப் பட்ட காரணங்களுடன் அரசு இஸ்லாத்திற்கு முரணான சட்ட திட்டங்களை மக்களின் மீது திணித்ததும் அவர்களுடைய போரட்டத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்று அல்ஜஸீரா போன்ற அரேபிய ஊடகங்களின் மூலம் விளங்க முடிகிறது. முஸ்லிம்கள் நிறைந்து வாழூம் நாட்டில் முஸ்லிம் ஆட்சியாளர்களே இஸ்லாத்திற்கு முரணாக ஆட்சி செய்தால் அதை எப்படி மக்கள் பொறுத்துக் கொள்வார்கள். எல்லா நாடுகளையும் போல் துனீஸியாவிலும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். பெண்களுக்கு வழங்க்படும் அடையாள அட்டையில் அவர்களுடைய போட்டோ பர்தா இன்றி தலை முடி தெரியுமாறு இருக்க வேண்டுமென 1993 ஆம் ஆண்டு பின் அலி சட்டமியற்றியிருந்தார். பர்தா என்பது துனீசிய ஆடைக் கலாச்சாரத்தில் திணிக்கப்பட்டது தான் என்றும் கூறினார்.  அவ்வாறே ஆண்களுடைய போட்டோ தாடி இல்லாமல் இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப் பட்டிருந்தது. முஸ்லிம்கள் நிறைந்த இஸ்லாமிய நாட்டின் நிலை இது. நம்முடைய இந்தியாவின் நிலையை நிலையை நினைத்து நாம் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். சட்டத் திருத்தம்:
இவ்வாண்டு ஜனவரி 14 ஆம் தேதி பின் அலி துனீசியாவை விட்டு ஓடியதோடு அவருடைய ஆட்சி முடிவுக்கு வந்தது. இதன் பிறகு நாட்டில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. குறிப்பாக ஷரீஅத் சட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக தெரிகிறது. துனீசியாவின் உள்துறை அம்சசகத்திற்கு முன்பாக பர்தா அணிந்த பெண்கள் தேசிய அடையாள அட்டையில் தங்களுடைய போட்டோக்கள் பர்தாவுடன் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போரட்டம் நடத்தினர். தற்போதைய உள்துறை அமைச்சகம் பர்தாவுடன் கூடிய புகைப்படத்திற்கு அனுமதி  வழங்கியுள்ளது, என்று அல்ஜஸீரா தெரிவிக்கிறது. கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதியிலிருந்து  தாடி வைத்த ஆண்களின் புகைப்படத்தையும் அமைச்சகம் அனுமதித்துள்ளது. துனீஸியாவில் 1981 ஆம் ஆண்டு அந்நஹ்ளதுல் இஸ்லாமிய்யா - இஸ்லாமிய எழுச்சி இயக்கம் என்றொரு இயக்கம் ஆரம்பிக்கப் பட்டது. அந்த இயக்கம் ஆரம்பிக்கப் பட்டது முதல் தடை செய்யப்பட்டிருந்தது. புதிய அமைச்சகம் 2011 ம்ஆண்டு மார்ச் 1 ஆம் தேதியிலிருந்து இஸ்லாமிய எழுச்சி இயக்கத்திற்கு அங்கீகாரம் வழங்கிவிட்டது.  எகிப்து:
எகிப்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது. 1952 ஆம் ஆண்டு ஜூலை 23 ம் தேதியும் எகிப்தில் புரட்சி நிகழ்ந்த தினம் தான். இஸ்லாமிய வரலாற்றில் எகிப்து அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. உமர் (ரலி) அவர்களுடைடைய ஆட்சி காலத்தில் ஹிஜ்ரி 20 ஆண்டிலிருந்தே எகிப்தின் இஸ்லாமிய வெற்றி ஆரம்பமாகிறது. எனினும் பின்னர் வந்த ஆட்சியாளர்கள் இஸ்லாத்தின் தனித்தன்மையை கட்டிக்காக்க வில்லை. தாங்கள் அரேபியர்கள் என்பதை ஒரு தனி மதம் போல் சித்தரிப்பவர்களும் தோன்றினர். நாங்கள் அரேபியர்கள்; ஃபிர்அவ்னுடைய சந்ததியினர்கள் என்று கூறி பெருமைப் பட்டுக் கொள்பவர்களும் எகிப்தில் தோன்றினர். பிர்அவ்ன் மீது குர்ஆன் ஏற்படுத்திய இழிவை மறந்து விட்டனர். செய்தி ஊடகங்கள் அசிங்கத்தை பரப்பின. எகிப்தின் சில நகரங்கள் இது மேற்கத்திய நாட்டின் நகரங்களாக இருக்குமோ என்று நினைக்குமளவுக்கு ஆபாசங்கள் நிறைந்திருந்தன. ஜமால் அப்துந்நாஸர், அன்வர் ஸாதாத் போன்ற முன்னாள் எகிப்திய அதிபர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தைத் தான் தங்களுக்கு வழி காட்டியாக எடுத்துக் கொண்டனர்.  (அஸ்ஸிராஃ - அலீமியான்(ரஹ்)) கலிமா தய்யிபாவுக்குத் தடை:
விரட்டியடிக்கப்பட்ட ஹுஸைன் முபாரக்குடைய ஆட்சியிலும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஓரளவு  சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. இதனால் வாலிபர்களுக்கு மத்தியில் மார்க்கப் பற்று அதிகமாக ஆரம்பித்தது. இப்படி இஸ்லாமியமயம் பரவலாவதை ஆட்சியாளர் விரும்பவில்லை. எகிப்திய வாலிபர்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமா தய்யிபா எழுதப்பட்டிருந்த ஸ்டிக்கரை விநியோகம் செய்து அதை கார்களில் ஒட்டுமாறு கேட்டுக்கொண்டனர். இதன் விளைவாக கொஞ்ச காலத்தில் ஏறத்தாழ கெய்ரோவில் ஓடும் ஒவ்வொரு காரிலும் கலிமா தய்யிபாவுடைய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இதை அரசு ஆரோக்கிமானதாக கருதவில்லை. உடனடியாக எல்லா கார்களிலிருந்தும் அந்த ஸ்டிக்கர் அகற்றப் பட வேண்டும், என அரசு சட்டமியற்றியது.  (நூல்- ஜஹானெ தீதா, தகீ உஸ்மானீ) எகிப்திய புரட்சிக்கு முன்பும் பின்பும் இருந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் இஸ்லாமியத்தைத் தங்களுடைய எதிரியாக கருதினர் என்பது தான் வேதனையான விஷயம். எனினும் இது எகிப்தின் யதார்த்தத்திற்கு முரணான நிலை தான். எகிப்திய மண்ணில் புதைந்து கிடக்கும் இஸ்லாமியம் இந்நிலைக்கெதிராக கிளர்ந்தெழும் என்று இதற்கு முந்தைய புரட்சியை முன் வைத்து அலீமியான் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். தற்போதைய ஜனவரி 25 ம் தேதிப் புரட்சி எந்த மாற்றத்தை உண்டாக்கப் போகிறது என்பது பற்றி இப்போதைக்கு எதையும் கூற முடியாது. வரலாற்றில் பதிந்த தஹ்ரீர் சதுக்கம்:
ஹுஸைன் முபாரக் நாட்டை விட்டு ஓடிய பிறகும் தஹ்ரீர் சதுக்கம் அமைதியான பாடில்லை. ஒவ்ரு வெள்ளிக்கிழமையும் தஹ்ரீர் சதுக்கம் பரபரப்பாகிறது. கடந்த ஏப்ரல் 1 ம் தேதி ஜூம்ஆ தொழுகையை தஹ்ரீர் சதுக்கத்தில் நிறைவேற்றிய பிறகு பல்லாயிரக் கணக்கான மக்கள் போரட்டத்தில் குதித்தனர். இப்போதைய போரட்டத்தின்நோக்கம் ஜனவரி 25 ம் தேதியன்று ஏற்பட்ட புரட்சியின் நோக்கத்தை இராணுவ ஆட்சி நிறைவேற்ற வேண்டும் என்பது தான். ஏப்ரல் 8 ம் தேதியும் (வெள்ளிக்கிழமை) தஹ்ரீர் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான பேர் திரண்டனர். விரட்டப்பட்ட ஆட்சியாளரின் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரினர். (யடதயணநசய.நேவ)
நீதிமன்றங்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப் படவேண்டும். உடனடியாக அநியாயமான வரிகளை அகற்றவேண்டும். இஸ்ரேலுககு வழங்கப்படும் உதவிகள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும். எகிப்திய ஊடகங்களை ஒழுங்கு படுத்த வேண்டும். அவற்றுக்கு சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் போரட்டத்தில் வலியுறுத்தப் பட்டன. மக்கள் புரட்சியின் நோக்கங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை போரட்டம் தொடரும் என்றும் எச்சரித்துள்ளனர்.   கடந்த ஏப்ரல் 2 ம் தேதி சனிக்கிழமையன்று எகிப்தின் தலைமை முஃப்தீ அலீ ஜம்ஆ அவர்கள் அளித்த பேட்டியில் பின்வருமாறு கூறினார்: எகிப்தின் எல்லா கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு பெறுவதற்கு உரிமை உள்ளது. தனிப்பட்ட எந்த அமைப்புக்கும் இஸ்லாத்தின் பெயரைப் பயன் படுத்திக் கொள்ள முடியாது.  இஸ்லாத்தின் பெயரால் ஒரு புதிய சர்வாதிகாரத்தை எகிப்தியர்கள் விரும்ப மாட்டார்கள். (இஹ்(க்)வானுல் முஸ்லிமின்களை மனதில் வைத்து இப்படி சொல்லியருக்கலாம்.) எகிப்து ஒரு மார்க்கப்பற்றுள்ள நாடு. இஸ்லாமிய ஷரீஅத்திற்குத் தோதுவாக சுதந்திரமான ஆட்சி அமைய வேண்டும் என்றும் தம்முடைய பேட்டியில் கூறினார்.  (ளாடிசடிரம நேறள.உடிஅ)  எகிப்தில் மாற்றம் நிகழுமா? இப்படிப்பட்ட சூழலில் எம்மாதியான மாற்றம் ஏற்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது வரை எகிப்திலிருந்து ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் அரசுக்கு நன்கொடை வழங்கினால் தான் ஹஜ் விசா பெற முடியும் என்ற சட்டம் அமலில் இருந்தது. எனினும் ஜனவரி 25 புரட்சிக்குப் பிறகு முதன்முதலாகக் கூடிய எகிப்திய சுற்றுலாத்துறை அந்த சட்டத்தை அகற்றி விட்டது. எப்படி பொதுத்தேர்தல் நடத்துவது என்பது பற்றி இந்தியாவிடம் கேட்டிருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.      இதனிடையே தஹ்ரீர் சதுக்கத்தின் போராட்டம் எகிப்து என்ற வட்டத்தைத் தாண்டி அரபுலகப் போராட்டமாக மாறி வருவதாக அல்ஜஸீரா தெரிவிக்கிறது. தஹ்ரீர் சதுக்கத்தில் ஒரு எகிப்திய போராட்டக்காரர், ஃபலஸ்தீன் தான் எங்களுடைய வாழ்க்கைப் பிரச்சினை என்று கூறினார். ஒவ்வொரு அரேபியனும் அரபு நாடுகளில் எந்த நாடுகளுக்குச் செல்வதாக இருந்தாலும் விசா இல்லாமல் செல்ல வேண்டும். அது வரை இந்த அரபுலகப் புரட்சி வெற்றி பெறாது என்று மற்றொருவர் கூறினார். ஏப்ரல் 8 ம் தேதியன்று ஆயிரக்கணக்கான மக்கள் எகிப்தில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்னால் ஃபலஸ்தீனுடைய கொடியை ஏந்தியவாறு போராட்டம் நடத்தினர். இஸ்ரேலிய தூதரை எகிப்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றும் இஸ்ரேலிய தூதரகத்தை மூட வேண்டுமென்றும் கேஷமிட்டனர். புரட்சிக்குப்பின் இஸ்ரேலுக்கு எதிராக நடந்த முதல் போராட்டம் இது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் தஹ்ரீர் சதுக்கம் போரட்ட களமாக மாறி வருகிறது. இந்த மக்கள் புரட்சியன் மூலம் இஸ்லாமிய உலகத்திற்குத் தேவையான முறையான - சரியான மாற்றம் நிகழ்ந்தால் முழு உலகிற்கும் நன்மையாக அமையும்.
லிபியா:
லிபியாவில் இப்பொழுது மும்முரமாக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. லிபிய அரசு தன்னுடைய ஆயுத பலத்தைக் கொண்டு போராளிகளை அடக்கிக் கொண்டிருக்கிறது. லிபிய அதிபர் முஅம்மர் கதாஃபீ எப்படிப்பட்டவர்? 1969 ஆம் ஆண்டு லிபியாவில் ராணுவப் புரட்சி ஏற்பட்ட போது முஅம்மர் கதாஃபீ அதிபரானார். இவரும் டுனீஸிய அதிபர் போர்கீபாவைப் போல குர்ஆனும் ஹதீஸும் தற்காலத்தின் முன்னேற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாது, என்று கூறி மார்க்கத்தை வணக்க வழிபாடுகளோடு மட்டும் கட்டுப்படுத்த முயன்றார். வணக்க வழிபாடுகள் தவிர மற்றவை தொடர்பான நபி மொழிகளை வாழ்க்கைக்கு ஒவ்வாததாகக் கருதினார். நபிமொழிகளின் நம்பகத் தன்மையிலேயே சந்தேகம் கொண்டார். பல தரப்பட்ட இஸ்லாமிய நாடுகளின் மார்க்க அறிஞர் கள் அடங்கிய ஒரு குழு ராபிததுல் ஆலமில் இஸ்லாமிய்யா சார்பாக கதாஃபியை சந்தித்து நபி மொழிகள் விஷயத்தில் தங்களுடைய கொள்கையை மாற்றிக் கொண்டு பகிரங்கமாக தௌபா (பாவமன்னிப்பு) செய்யுமாறு கூறிய போதும் அதை அவர் ஏற்கவில்லை. (அஸ்ஸிராஃ) இப்படிப்பட்ட நபருக்கு எதிராகத் தான் இன்று கிளர்ச்சி வெடித்திருக்கிறது. இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் போது லிபிய அதிபரின் நிலை என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. எனினும் லிபியாவின் போராட்டம் அவ்வளவு சீக்கிரத்தில் முடிய சாத்தியமில்லை, என்றே அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.        

No comments:

Post a Comment