தஜ்ஜாலிய கலாச்சாரமும் சூரத்துல் கஹ்ஃபும்
சூரத்துல் கஹ்ஃபுடைய முதல் பத்து வசனங்களை யார் மனனம்
செய்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாக்கப்படுவார் (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),
நூல்: முஸ்லிம்)
வெள்ளிக்கிழமை யார் இந்த அத்தியாயத்தை (முழுவதையும்) ஓதுவாரோ
அவர் (அடுத்த) எட்டு நாட்கள் வரை எல்லா (வகையான) ஃபித்னா- குழப்பங்களை விட்டும் பாதுகாக்கப்படுவார்.
(கொள்கை ரீதியான ஃபித்னாவாகிய) தஜ்ஜால் வெளிப்பட்டாலும் அவனிடமிருந்தும் பாதுகாக்கப்படுவார்.
(அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல் அல்முக்தாரா - லில் ஹாஃபிழில் ளியாவு முகத்தஸீ - தஃப்ஸீரு
இப்னு கஸீர்)
தஜ்ஜாலுடைய கொள்கைக் குழப்பம்:
இந்த அத்தியாயத்திற்கும் தஜ்ஜாலுடைய கொள்கைக் குழப்பங்களிலிருந்து
பாதுகாப்பு கிடைப்பதற்கும் மத்தியில் நெருங்கிய தொடர்பு இருப்பதை மேற்கூறப்பட்ட நபி
மொழிகளிலின் மூலம் விளங்க முடிகிறது. இந்த சூராவை அர்த்தம் விளங்கி ஓதும் போது தஜ்ஜாலுடைய
ஃபித்னாவிலிருந்து எதன் மூலம் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். சோதனை
பல விதங்களில் வரலாம். வறுமை, பஞ்சம், பசி, பட்டினி ஏற்படலாம். கொடுமையான வியாதிகள் ஏற்படலாம். இவற்றையெல்லாம்
கூட சிரமப்பட்டாவது மறுமையின் நன்மைகளை மனதில் வைத்து சகித்துக் கொள்ளலாம். ஆனால் நம்முடைய
இறைநம்பிக்கை எனும் கொள்கைக்கு வரும் சோதனை தான் மிக ஆபத்தானது. தஜ்ஜாலுடைய சோதனையின்
மூலம் மக்களுடைய ஈமானுக்கே ஆபத்து வந்துவிடும். அதிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதற்கு
குர்ஆனில் நமக்கு ஓர் அத்தியாயம் கிடைத்திருக்கிறது, என்றால் நாம் அதற்காக பெரும்பபடாமல்
இருக்க முடியுமா என்ன? தஜ்ஜாலுடைய அந்த கொள்கைக் குழப்பம் என்னவென்று சுருக்கமாக பார்க்கலாம். நபி ஆதம்
(அலை) அவர்ளைப் படைத்தது முதல் கியாம நாள் வரை (குழப்பத்தை விளைவிக்கும்) தஜ்ஜாலைவிட
ஒரு கொடிய படைப்பு எதுவும் இல்லை, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
தூரம் சுருங்கிவிடும்:
உலகின் இயற்கை சதானங்களின் மீது அவனுக்கு அசாதரணமான சக்தி
கிடைத்து விடும். அவனிடம் தூரம் என்பது ஒரு பொருட்டாகவே இருக்காது. அவனுடைய அதிவேகத்தைப்
பற்றி நபிமொழிகளில் காற்று மழையை இழுத்துச் செல்வதைப் போன்று (முஸ்லிம்) என்றும் கூறப்பட்டுள்ளது.
விமானங்களும் அதிவிரைவு விண்கலங்களும் இருக்கும் இன்றைய உலகில் இதை விளங்குவது சிரமமாக
இருக்காது. நபித்தோழர்கள் இவற்றின் மீது ஈமான் கொண்டது தான் மெச்சத் தக்கது.
நாற்பது நாட்களில் எந்த ஊரையும் சென்றடையாமல் விட மாட்டேன்
என்று தஜ்ஜால் தன்னைப்பற்றி சொல்லும் தகவலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:
முஸ்லிம்) ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என ஒவ்வொருகண்டத்திலும் உள்ள குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு மட்டுமோ அல்லது
நாடுகளின் தலைநகரங்களுக்கு மட்டுமோ அல்லது பெருநகரங்களுக்கு மட்டுமோ அல்ல. மக்கா,
மதீனா தவிர மூலை முடுக்கில்
உள்ள அனைத்து குக்கிரமாங்கள் சிற்றூர், பேரூர் உட்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் நாற்பது நாட்களில்
தஜ்ஜால் சென்றுவிடுவான்.
அவனுடைய வாகனம் கழுதை என்றும் அந்தக் கழுதையின் அதிவிரைவு
பற்றியும் சில அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது. அநேகமாக இதை ஒரு உதாரணத்திற்காக சொல்லப்பட்டிருக்கலாம்.
இன்று மீன் வடிவத்தில் விமானம் தயாரிக்கப்படுகின்றன. பிற்காலத்தில் கழுதை வடிவத்தில்
ஏதும் வாகனம் தயாரிக்கப்படலாம்.
உலகம் முழுவதும்
கேட்கும்:
சப்தத்தைக் கேட்கும் விஷயத்திலும் தஜ்ஜாலுக்கு உலகம் சுருக்கிக்
கொடுக்கப்ட்டிருக்கும். ஒரு தடவை அலி (ரலி) அவர்கள் தஜ்ஜால் பற்றி பேசிக்கொண்டிருக்கும்
போது, தஜ்ஜாலுடைய
சப்தம் மேற்கு, கிழக்கு திசைக்கு மத்தியில் உள்ள அத்தனையும் கேட்குமளவுக்கு பலமாக இருக்கும்,
என்று கூறினார்கள்.
(கன்ஜுல் உம்மால்) சிகிச்சை விஷயத்திலும் அபரிமிதமான முன்னேற்றத்தை அவன் அடைந்திருப்பான்.
பிறவிக்குருடையும் குஷ்டரோகத்தையும் குணப்படுத்தும் சக்தியையும் பெற்றிருப்பான். (
கன்ஜுல் உம்மால்)
நீர்வளமும் நில வளமும் அவன் வசம்:
பூமியின் ஆறுகள் அவனுக்கு வசப்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும்,
என்று நபி (ஸல்)அவர்கள்
கூறினார்கள். (மஜ்மவுஸ்ஸவாயித்) தண்ணீருடைய முழுக்கட்டுப்பாடும் அவன் வசம் இருக்கும்.
எனவே, நிலத்தின்
விளைச்சலை நிர்வகிப்பதும் அவனுடைய கையில் தான் இருக்கும். அதற்கும் மேலாக மேகத்தை தன்
இஷ்டத்திற்கு பயன்படுத்தும் தொழில்நுட்பமும் அவனுக்குத் தெரியும். வானத்திற்கு பெய்
என்று அவன் உத்தரவிட்டால் மழை பெய்யும். பூமிக்கு உத்தரவிட்டால் விளையும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்) தாவர இனத்தின் மீது மட்டுமல்ல; நிலத்தடிச் சுரங்கங்களில் உள்ள பொக்கிஷங்களை தஜ்ஜால் அசாதாரணமான
முறையில் வெளிப்படுத்துவான். பயன் படாத தரிசு நிலத்தை அவன் கடந்து சென்றால் பூமியைப்
பார்த்து உன்னுடைய பொக்கிஷங்களை வெளியாக்கு! என்று உத்தரவிடுவான். உடனடியாக அவனுக்குப்
பின்னால் அவையனைத்தும் வந்து விடும், என்றும் நபி (ஸல்) அவர்க்ள கூறினார்கள். (முஸ்லிம்)
இறந்தவர்கள் உயிர் பெறுதல்:
தஜ்ஜால் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். நல்ல வாலிபர் ஒருவரை
அழைத்து வாளால் இரண்டு துண்டாக வெட்டுவான். பிறகு அவனை அழைப்பான். அவன் மீண்டும் உயிர்
பெற்று சிரித்தவனாக வருவான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) கொள்கைக் குழப்பத்தை
உண்டாக்குவதில் தஜ்ஜால் இத்துடன் முடித்துக்கொள்ளமாட்டான். இறந்துபோன தாய்,
தந்தையர்கள்,
சகோதரர்கள் போன்றவர்களுடைய
உருவத்தில் ஷைத்தான்களை எழுப்புவான். அவர்கள் தம்முடைய தந்தை மற்றும் சகோதரரிடம் வந்து
நான் இன்னார் இல்லையா? என்னைத் தெரியாதா? என்று கேட்பார்கள். தஜ்ஜால் ஒரு கிராமவாசியிடம் சென்று நான் உன்னுடைய தாய்,
தந்தயர்களை உயிராக்கி
எழுப்பி விட்டால் என்னை இறைவன் என்று ஏற்றுக் கொள்வாயா? என்று கேட்பான். அதற்கு கிராமவாசி
சரி என்று கூறுவான். தாய், தந்தையின் உருவத்தில் இரண்டு ஷைத்தான்கள் தோன்றுவார்கள். அவ்விருவரும்
மகனே! தஜ்ஜால் சொல்வதைக் கேள்! அவன் தான் உன் இரட்சகன் என்று கூறுவார்கள். (இப்னுமாஜா) இப்படிப்பட்ட சூழலில் நம்முடைய இறைநம்பிக்கையை
பாதுகாப்பது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தஜ்ஜாலுடைய
கொடிய கொள்கைக் குழப்பத்தை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!
நவீனமயம் கூடாதா?
முனாஜிர் அஹ்ஸன் கீலானி (ரஹ்) அவர்கள் தஜ்ஜாலீ ஃபித்னா
கே நுமாயா கத்தோகால் என்ற தங்களுடைய நூலில் இந்த நபிமொழிகளை கூறியபின் இயற்கைச் சக்திகளை
அசாதாரணமாக உபயோகிப்பது மனிதனை தஜ்ஜாலாக ஆக்கி விடுமா? என்பது பற்றி ஓர் ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய ஆய்வின் சாராம்சம் இது தான்: கண்டிப்பாக அவனை தஜ்ஜாலாக ஆக்கிவிடாது. குர்ஆனுடைய
பார்வையில் விஞ்ஞான ரீதியான முன்னேற்றம் வரவேற்கத் தகுந்ததே! நபிமார்களுடைய அற்புதங்கள்
பற்றி குர்ஆனில் பரவலாக கூறப்பட்டுள்ளது. பலதுறைகளில்
விஞ்ஞான முன்னேற்றம் ஏற்படுதால் மனிதனுடைய நிலை எப்படி மாறுகிறது? அல்லாஹ்வின் பக்கம் நெருக்கி
வைக்கிறதா? தூரமாக்குகிறதா? என்பது தான் முக்கியம். தஜ்ஜால் தன்னுடைய இந்த அபரிமிதமான சக்தியைக் கொண்டு தானும்
அல்லஹ்வுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவான். மற்றவர்களையும் அல்லாஹ்வுக்கு எதிரிகளாக
ஆக்கிவிடுவான். தஜ்ஜாலுடைய கொள்கைக் குழப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு பெரிய
படிப்பறிவோ விஞ்ஞான அறிவோ தேவையில்லை. உண்மையான இறைநம்பிக்கை மட்டும் இருந்தால் போதும்.
தஜ்ஜாலை அடையாளம் கண்டு கொள்ளலாம். அவனுடைய இரண்டு கண்களுக்கு மத்தியில் காஃபிர் என்று
அறிவிக்கும் மூன்று எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கும். அதை எழுதத் தெரிந்தவர்,
எழுதத் தெரியாதவர் என
ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரும் படித்துக் கொள்வார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி) தஜ்ஜாலிடம் பெண்கள்:
தஜ்ஜாலுடைய கழுதைக் கலாச்சாரத்தின் மூலம் உலகமே இறைநிராகரிப்பை
நோக்கி சென்றுவிடும். எனவே தான், யாருக்காவது தஜ்ஜாலை சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டால்
அவர், அவனை விட்டும்
வெகு தூரத்தில் இருந்து கொள்ளட்டும், என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒரு மனிதர்
தன்னை தான் உண்மையான முஃமின் - முஸ்லிம் தான் (தஜ்ஜால் சொல்வதைக் கேட்க மாட்டேன்) என்று
நினைத்துக் கொண்டு தான் அவனிடம் வருவார். ஆனால் அவனிடம் வந்தவுடன் அவன் சொல்வதைக் கேட்க
ஆரம்பித்து விடுவார். அதனால் (இஸ்லாத்தைப் பற்றி தேவையில்லாத) சந்தேகங்கள் வர ஆரம்பித்து
விடும். (அபூதாவூத்) இந்த நபிமொழியின் மூலம், தஜ்ஜாலுக்கு மற்றவர்களின் சிந்தனையை
தவறான வழியில் திசை திருப்பி விடுவதிலும் அபரிமிதமான திறமை இருக்கும் என்று தெரிகிறது.
ஆண்களை விட பெண்களும் அதிகமாக அவனுடைய வலையில் சிக்குவார்கள். தஜ்ஜாலிடம் வரக்கூடியவர்களில்
அதிகமானோர் பெண்களாக இருப்பார்கள். ஒரு மனிதர், தன்னுடைய தாய், மகள், சகோதரி, மாமி போன்றோர்களை (அவனுடைய
தீங்கிலிருந்து காப்பதற்காக) கயிற்றால் கட்டி வைத்திருப்பார், என்றும் நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (முஸ்னத் அஹ்மது)
இது தஜ்ஜாலுடைய
காலமா?:
சிலர் அவசரப்பட்டு ஐரோப்பா, மற்றும் அமெரிக்காவின் முன்னேற்றத்தைப்
பார்த்துவிட்டு நபிமொழிகளில் அறிவிக்கப்பட்ட தஜ்ஜாலே வந்து விட்டதாக கூறிவிட்டனர்.
ஆனால் இந்த முடிவு சரியானதல்ல. அதிவிரைவு வாகனங்கள், அலைபேசிகள் போன்ற பல துறைகளில் மேற்கத்திய
நாடுகள் பெரும் முன்னேற்றத்தை கண்டிருக்கின்றன, என்பது மட்டுமல்ல; அவற்றின் மூலம் இறைநிராகரிப்பை
நோக்கியே செல்கின்றன. தேவாலயங்களில் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேற்கத்திய
நாடுகள் ஆத்திக நாடுகளாக இருந்தாலும் மதமே இல்லை என்ற சிந்தனையை உருவாக்குவதில் இந்த
தொழில்நுட்பங்கள் பெருமளவில் பங்கெடுத்துக் கொள்கின்றன, என்பதை விளங்குவதற்கு ஈமான் மட்டுமே
போதும். பெரிய படிப்பறிவு ஒன்றும் தேவையில்லை. இந்த நவீன மயம் தஜ்ஜாலுடைய கழுதைக் கலாச்சாரத்தையே
பரவலாக்கிக் கொண்டிருக்கிறது. (அவனுடைய வாகனம் கழுதை என்று கூறப்பட்டிருப்பதால் அவனுடைய
கலாச்சாரம் கழுதைக் கலாச்சாரம் என்று சொல்கிறோம்.) நபிமார்களின் போதனைகளை வேண்டாத ஒன்றாக
காட்டுகிறது. எவ்வளவு தான் உஷாராக இருப்பவரையும் அந்தக் கலாச்சாரம் இஸ்லாத்தைப் பற்றிய
தவறான சந்தேகங்களை உண்டாக்கி விடுகிறது. ஒரு இறைநம்பிக்கையாளன் தஜ்ஜாலிடம் செல்வான்.
திரும்பி வரும் போது விதவிதமான சந்தேகத்துடன் திரும்பி வருவான் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறியதை இங்கு நினைவுகூரத்தக்கது. எனினும் இன்னும் தஜ்ஜால் வரவில்லை. தஜ்ஜால் வருவதற்குரிய
உலகத்தை இன்றைய தஜ்ஜாலிய கலாச்சாரம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது, என்று சொல்லலாம். தஜ்ஜால்
வராவிட்டாலும் அவனுடைய கொள்கைக் குழப்பத்திற்கான சூழல்கள் வெளிப்பட்டுவிட்டன,
என்றே சொல்ல வேண்டும்.
ஏன்? நபி (ஸல்)
அவர்களே மஸீஹுத் தஜ்ஜால் வருவதற்கு முன்னால் நிறைய தஜ்ஜால்கள் தோன்றுவார்கள்,
என்று கூறியிருக்கிறார்களே! (முஸ்னத் அஹ்மத், முஸ்னத் அபு யஃலா, தப்ரானீ) அவர்களுக்கும் தஜ்ஜால் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதால்
கடைசியில் வரும் தஜ்ஜாலுடைய கொள்கைக் குழப்பத்திற்கு முன்மாதிரியாகவே இவர்களுயை குழப்பங்களும்
அமையும் என்பதை விளங்க முடிகிறது.
தஜ்ஜால் - சூரத்துல் கஹ்ஃப்:
கஹ்ஃப் அத்தியாயத்தின் மூலம் இந்தக் கொடுமையான கொள்கைக்
குழப்பத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது, என்றால் இந்த அத்தியாயத்தில் அப்படி
என்ன தான் இருக்கிறது? என்று கேட்கத் தோன்றுகிறது. நிறையவே இருக்கிறது. தஜ்ஜாலுடைய தாக்குதலை எதிர்க்கக்
கூடிய ஈமானுடைய - இறைநம்பிக்கையின் பலத்தை அதிகரிக்கக் கூடிய ஏராளமான செய்திகள் இந்த
அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளன. இறைநம்பிக்கைக்கும் காசு, பணம், போன்ற உலகியல் ரீதியான சக்தியின் மீது
ஏற்படும் நம்பிக்கைக்கும் மத்தியில் நடக்கும் போராட்டம் தான் தஜ்ஜாலுடைய ஃபித்னாவாகும்.
இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அழிந்து போகக் கூடிய உலக சக்தி எதற்கும்
உதவாது, உறுதியான
இறைநம்பிக்கையே உண்மையான வெற்றியைத் தேடித்தரும் என்ற கருத்தை வலியுறுத்தக் கூடிய வசனங்களும்
சரித்திரங்களும் உதாரணங்களும் போதுமான அளவுக்கு கூறப்பட்டுள்ளன. குகைவாசிகளுக்கு ஒரு
பக்கம் அரச மரியாதையுடன் நிம்மதியான வாழ்க்கை. மறுபக்கம் இருண்ட, குறுகிய குகையில் நெருக்கடியான
வாழ்க்கை. ஆனால் வெளிப்படையான உலகியல் சுகத்தைத் தேர்ந்தெடுத்தால் அவர்கள் கொண்டிருந்த
ஏகத்துவக் கொள்கையை விடவேண்டியிருக்கும். அதே சமயம் வெளிப்படையாக இருண்ட குகையில் நெருக்கடியான
வாழ்க்கை வாழ்ந்தாலும் ஈமானைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும். தஜ்ஜாலுடைய ஃபித்னாவுக்கு
ஒப்பான இந்த போராடட்த்தில் குகைவாசிகள் ஈமானுக்கே முதலிடம் கொடுத்தார்கள். அவர்கள்
சுகபோக வாழ்க்கையை விட்டு விட்டு கொள்கைக்காக நெருக்கடியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார்கள்.
எனவே, அல்லாஹ்
அவர்களுக்கு தன்புறத்திலிருந்து நேரடியாக உதவினான். இது போன்ற நிறைய தகவல்கள் இந்த
அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுகிறான். அவற்றை விளங்கி ஓதும் போது மனதில் மாற்றம் ஏற்பட
வாய்ப்பு இருக்கிறது. அல்லாஹ் தௌஃபீக் செய்யட்டும்.
Essential facts to save our Eeman! Jazakallah Hairen!
ReplyDeleteAnsar