நிஜ நோய்களுக்கு போலி மருந்துகள்
நுகர்வோர் தினம், சுகாதார
தினம் போன்ற தினங்களுக்கு மட்டும் எந்த பஞ்சமுமில்லை. ஆனால் சுகாதாரமோ நுகர்வோர் உரிமைகளோ
பேணப்படுகிறதா? என்றால் இன்றைய நடைமுறையே பதில் சொல்லிக்
கொண்டிருக்கிறது. சந்தையில் எந்த சரக்கை வாங்கினாலும் எந்த சேவையை பெற்றாலும் இது நிஜமா? போலியா? என்ற பயம் உள்ளத்தை ஆட்கொண்டு
விடுகிறது. காலாவதியாகிப்போன சரக்காக இருந்தாலும் காசாக வேண்டும் என்ற சிந்தனை காலாவதியாகாத
வரை நிஜத்தின் நிழலைக் கூட பார்க்க முடியாது. வியாபாரத்தில் போலி; விளம்பரத்தில் போலி; மருத்துவத்தில்
போலி; கல்வி போதனையில் போலி; அரசியலில் போலி;
ஆன்மீகத்தில்
போலி என அனைத்தும் போலி. பிரச்சினைகளெல்லாம் நிஜம். அதற்குரிய தீர்வுகளெல்லாம் போலி.
இது தான் இன்றைய உலக நடப்பு.
போலியாகிவிட்ட உலகம்:
அரசு அதிகாரிகள் எந்த வியாபார நிறுவனங்களில் ஆய்வு செய்தாலும்
போலிச்சரக்குகளை வெளிக்கொண்டுவரமுடியும். மருந்து குடோனில் நுழைந்தால் காலாவதியான மாத்திரைகள், பல சரக்கு கடைகளில் நுழைந்தால் வண்டு வைத்த மாவு முதற்கொண்டு
ஏகப்பட்ட மோசடி. அரசு நடத்தும் ரேஷன் கடைகளில்கூட காலாவதியான மிளகாய்ப் பொடிகள் இருந்ததாக
பத்திரிக்கை தகவல். மாம்பழம் சீக்கிரம் பழுக்க வேண்டுமென்பதற்காக கார்பைடு வைக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட சந்தை சரக்குகளை சாப்பிட்டால் உடல் நிலை என்னவாகும்? புதிய புதிய வியாதிகள். பெயர் தெரியாத காய்ச்சல்கள். நோய்களுக்கு
சிகிச்சை செய்ய மருத்துவமனை சென்றால் அங்கே போலி மருத்துவர்களும் போலி மருந்துகளும்
தான் இருக்கின்றன. இந்திய மருத்துவ சங்கம் 2000 போலி
டாக்டர்களின் பட்டியலை வைத்துக் கொண்டு தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
தலைமறைவானவர்கள் தவிரஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் போலிகள் பிடிபடுகின்றனர். இன்று நோய்களுக்கு பஞ்சமில்லை. ஒவ்வொரு நாளும் புதிய
புதிய நோய்கள் உண்டாகிக் கொண்டிருக்கின்றன. எந்த நோயும் போலி கிடையாது, என்பது மட்டும் நிஜம். வரக்கூடிய நோய்களெல்லாம் நிஜம். அவற்றுக்குரிய
மருந்துகளெல்லாம் போலி. மக்கள் நல்லா இருந்தால் என்ன? நாசமாகிப்போனால் என்ன? எங்களுக்கு
தேவை பணம், அவ்வளவு தான். நோயாளிகளின் பாடு தான்
திண்டாட்டம். மற்றவர்களுக்கு கேடு செய்யக்கூடாது எனபது பற்றி யாரும் பாடம் நடத்தத்
தேவையில்லை. தீங்கிழைக்காதே!
உணவுக்கலப்படத்தால் உயிரிழப்புகள் ஆயிரக்கணக்கில் ஏற்படுவதாக
புள்ளி விவரங்கள் கூறிக்கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தை பொறுத்த வரை சின்ன சின்ன சிரமம்
கொடுப்பது கூட அவனை இஸ்லாத்தை விட்டுமே வெளியாக்கிவிடும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. தன்னுடைய கை மற்றும் நாவின் மூலம் (ஏற்படும் தீங்குகளை
விட்டும்) சக முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றால் தான் அவர் உண்மை முஸ்லிமாக முடியும், என்றும் (யாரும் யாருக்கும்) தீங்கிழைப்பதோ பரஸ்பரம் ஒருவருக்கொருவர்
சிரமம் கொடுப்பதோ கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள். இந்த நபி
மொழியிலிருந்து ஏராளமான சட்டங்களை மார்க்க வல்லுணர்கள் கூறியுள்ளனர். எந்த ஒரு தனி
நபரும் மற்றவர்களுடைய ஆரோக்கியத்திற்கு எந்த பங்கமும் ஏற்படுத்தக்கூடாது. (அல்லாஹ்வின்
நாட்டப்படி) நோயாளியின் கிருமி மற்றவர்களுக்கு தொற்றும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது.
ரொட்டி மாஸ்டராகவோ பொது சந்தையில் விற்பனையாளராகவோ இருக்கக்கூடாது. இது போன்ற விதிமுறைகளை
இந்த நபி மொழி நமக்கு சொல்லித்தருகிறது. நபி (ஸல்) அவர்களே தும்மினால் கூட உம்மத்தின்
படிப்பினைக்காக கையையோ அல்லது துணியையோ வாயருகில் வைத்துக்கொள்வார்கள். தும்மலின் சப்தத்தை
தாழ்த்திக் கொள்வார்கள்.(அபூதாவூத் 4374)
நபி (ஸல்) அவர்ளுடைய
எச்சிலை பரக்கத்தாக நினைக்கும் நபித்தோழர்கள் முன்னால் இருக்கும் போது கூட தும்மல்
நீர் யார் மேலும் பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள்.
தொற்று நோய் உண்டா?:
காலரா, அம்மை போன்ற கொடிய நோய் ஒரு ஊரில் பரவலாக இருந்தால் அந்த ஊருக்கு
நீங்கள் வராதீர்கள். நீங்ள் அந்த ஊரில் இருந்தால் அவ்வூரை விட்டும் வெளியேறாதீர்கள்.
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபி மொழி, ஒரு நோயாளி மற்றவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக
எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றியும் மற்றவர்கள் எப்படி தங்களை தற்காத்துக்
கொள்ள வேண்டும், என்பது பற்றியும் அழகான வழிகாட்டுதலை
கொடுக்கிறது. தொற்று நோயின் மீது ஈமான் கொள்ளக்கூடாது. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி
தான் நடக்கிறது. இந்த உலகம் காரணங்களின் அடிப்படையில் இயங்குகிறது. எனவே நோய்க்கிருமி
ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சென்றுவிட்டால் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அவருக்கும்
அதே நோய் வர வாய்ப்பிருக்கிறது. எனவே அந்த ஊருக்கு செல்லாமல் அந்த நோய் வராமல் தற்காத்துக்
கொள்ளவேண்டும். இதனால் தொற்று நோயின் மீது ஈமான் கொள்வதை விட்டும் தப்பிக்க முடியும்.
ஜாஹிலிய்யா (மௌட்டீக) காலத்தில் இந்த விஞ்ஞான அறிவெல்லாம் கிடையாது. ஏகத்துவத்துக்கு
முரணாக பல இணைவைப்பு கொள்கைகளை நம்பியிருந்தது போல் தொற்று வியாதியையும் நம்பியிருந்தனர்.
அந்த நம்பிக்கையை உடைத்தெறிவதற்காகவே தொற்று வியாதி என்பதே கிடையாது என்று நபி (ஸல்)
வலியுறுத்தினார்கள். தற்காலத்திலும் அது போன்றதொரு நம்பிக்கை இருந்தால் தொற்று நோய்
இல்லை என்று அழுத்தமாகச் சொல்லவேண்டும்.
நபி (ஸல்) நவின்ற நவீன மருத்துவக்கொள்கை:
வியாதி பாதித்த ஊரில் இருப்பவர் ஆரோக்கியமானவராக இருந்தாலும்
அந்த ஊரை விட்டும் வெளியே செல்லவேண்டாம் என்று நபி (ஸல்) அறிவுறுத்தியிருப்பது தூர
நோக்கு சிந்தனை மிக்கது என்பது மட்டுமல்ல; 19-ம்
நூற்றாண்டின் கடைசியில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன மருத்துவக் கொள்கையை 6-ம் நூற்றாண்டிலேயே நபி (ஸல்) அவர்கள் உலகுக்கு அறிவித்துள்ளார்கள்.
அதாவது, நோயால் பாதிக்கப்பட்ட ஊரில் ஒருவர்
வெளிப்படையாக ஆரோக்கியமாக தோன்றினாலும் அவருடைய உடலில் நோய்க்கிருமிகள் நுழைந்திருக்கலாம்.
ஆனால் மருத்துவ ஆய்வின் படி அவரிடமிருந்து நோய்க்கிருமிகள் மற்றவர்களுக்குபரவ வாய்ப்பிருக்கிறது.
அல்லது அவருக்கு சில நாட்களுக்குப் பின் நோயின் அறிகுறி தென்படலாம். சில நோய்க்கிருமிகள்
இரண்டு நாட்களிலேயே உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்னும்சில நோய்க்கிருமிகள் ஆறு
மாதங்களுக்கு பிறகே உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவர், நாம் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறோம்
என்று நினைத்து வெளியூருக்கு சென்றால் நோயின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஊர் மக்களுக்கும்
கிருமி பரவ காரணமாகிவிடுவார். (அல் அத்வா பைனத்திப்பி வஹதீஸி முஸ்தபா (ஸல்)) நோயால்
பாதிக்கப்பட்ட ஒட்டகம் வைத்திருப்பவர் (ஒட்டகத்தை) ஆரோக்கியமான ஒட்டகம் இருக்கும் இடத்திற்கு
கொண்டு வர வேண்டாம்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி) பொதுமக்களுடைய
நலனுக்காக நோயாளிகளுக்கே இப்படி உபதேசம் செய்யப்படுகிறதென்றால் மருந்து நிறுவனங்களும்
மருத்துவர்களும் எவ்வளவு பேணுதலாக நடந்து கொள்ள வேண்டும்?
போலிகளை களையெடுக்க வேண்டும்:
ஏற்கனவே மருத்துவம் பற்றி எதுவும் தெரியாமலேயே ஒருவர்
சிகிச்சை செய்தால் (அதனால் ஏற்படும் இழப்புக்கு) அவரே பொறுப்பாவார் என்று நபி (ஸல்)
கூறினார்கள். (நஸயீ-4748) இன்று எத்தனையோ மருத்துவமனைகளில்
டாக்டருடைய தவறுகளாலேயே பல மரணங்கள் நிகழ்கின்றன. பிறகு பிணத்தை வைத்துக்கொண்டே பணத்தை
பறித்துக்கொள்வார்கள். எனவே தான் நம்முடைய ஃபிக்ஹ் நூற்களில் (அல்-ஹிதாயா) மூன்று வகையான
போலிகளுக்கு தடை விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 1. மருத்துவம் முறையாக படிக்காத போலி மருத்துவர். இவரை, தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தால் மக்களுடைய உயிருக்கு உலை வைத்துவிடுவார்.
நாட்டின் பொது சுகாதாரத்திற்கோ ஆரோக்கியத்திற்கோ
உத்தரவாதம் இருக்காது. 2. மார்க்க சட்டங்கனை முறையாக
கற்றரியாத போலி முஃப்தி. ஷரீஅத்தில் ஹராமாக்கப் பட்டதை ஹலால்-கூடும் என்று கூறுவார்.
இவர்களின் மூலம் மக்களுடைய தீன் கெட்டுவிடும். 3. போண்டியாகிவிட்ட
போலி நிறுவனம். ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் மக்களிடம் ஹஜ்ஜுக்காகவோ அல்லது வெளிநாட்டு
பயணத்திற்காகவோ பணம் வசூலிக்கிறது. ஆனால் அவரிடம் அதற்குரிய எந்த ஏற்பாடும் இல்லை.
வாகனத்தை தயார் செய்வதற்குரிய எந்த வசதியும் அவரிடம் இல்லை. மக்களிடம் வாங்கிய பணத்தை
விழுங்கிவிட்டு தலை மறைவாகிவிடுவார். இப்படிப்பட்ட நபருக்கும் நிறுவனத்திற்கும் தடை
விதிக்கவேண்டும். இல்லையானால் மக்களுடைய பணத்திற்கு எந்த பாதுகாப்பும் இருக்காது. இது
போன்ற போலி நிறுவனங்கள் பற்றிய பிரச்சினை இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. டாக்டருக்கான நெறிமுறைகள்:
ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும்? என்பது பற்றி ஃபிக்ஹ் நூற்கள் பின்வருமாறு அழகாக கூறுகின்றன:
டாக்டரிடம் சிகிச்சைக்குத் தேவையான எல்லா சாதனங்களும் நிறைவாக இருக்கவேண்டும். ஒவ்வொரு
நகரத்திலும் தலைமை மருத்துவர் என ஒருவர் இருக்கவேண்டும். அவர் மற்ற மருத்துவர்களின்
தரம் பற்றி ஆய்வு செய்வார். யாராவது தன்னுடைய பொறுப்பை ஒழுங்காக செய்யவில்லையானால்
அவரை சிகிச்சை செய்வதை விட்டும் தடுத்துவிடுவார். (தரச்சான்றிதழ் வழங்கப்படாது), சிகிச்சை பலனின்றி நோயளி இறந்து விட்டால் அவருடைய உறவினர்கள்
டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்து விபரங்களை தலைமை மருத்துவரிடம் சமர்பிப்பார்கள். சிகிச்சை
முறையில் எந்த தவறும் இல்லையானால் உறவினர்களுக்கு அது பற்றிய விளக்கம் கொடுப்பார்.
இல்லையானால் டாக்டர் தான் தவறான சிகிச்சையினால் நோயாளியை கொண்றுவிட்டார். அதற்குரிய
நஷ்ட ஈட்டை அவரிடம் பெற்றுக் கொள்ளுங்கள், என்று
கூறுவார். இது போன்ற சிறந்த வழிகாட்டுதல்கள் அல்லாமா ஷீராஸீ (ரஹ்) அவர்களுடைய நூலில்
கூறப்பட்டுள்ளது. (ஹிமாயதுல் முஸ்தஹ்லிக் ஃபில் ஃபிக்ஹில் இஸ்லாமீ) ஒர் டாக்டர் மருத்துவ
அறிவில் தேர்ச்சி பெற்றவராகவும் அனுபவ சாலியாகவும் இருப்பதுடன் நம்பத்தகுந்த (மருத்துவ
கவுன்ஸில் மூலம் ) அதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அப்படி எந்த திறமையும்
சான்றிதழும் இல்லாவிட்டாலோ அல்லது உண்மையான டாக்டராக இருந்தும் சிகிச்சை முறையில் தவறிழைத்துவிட்டாலோ
நோயாளிக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். (திப்பீ அக்லாகிய்யாத்)
முஸ்லிம் டாக்டர், நோயாளிகளுக்கு ஷரீஅத் கொடுத்துள்ள சலுகைகள் பற்றிய சட்டவிதிகளை
அறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை செய்ய வேண்டும். உதாரணமாக, காயத்திற்கு கட்டு போடும் போது காயம் இருக்கும் இடத்தை எந்தஅளவுக்கு மறைக்க வேண்டிய தேவை உள்ளதோ அந்த அளவுக்கு
மட்டுமே மறைக்க வேண்டும். உளூ செய்வதற்குத் தோதுவாக கட்டின் எந்த பகுதியை அவிழ்த்தால்
காயத்திற்கு இடைஞல் இல்லை என்பதையும் நோயாளிக்கு அறிவுறுத்த வேண்டும். (ஜாமிஉல் ஃபதாவத்திப்பிய்யா)
முதல் மருத்துவ கவுன்ஸில்:
பனூ அன்மார் கோத்திரத்தை சார்ந்த இரண்டு மருத்துவர்களிடம்
உங்களில் யார் சிறந்த சிகிச்சை நிபுணர்? (அபூதாவூத்-4586) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டடிருப்பதன் மூலம் ஒரு மருத்துவ
கவுன்சில் இயங்க வேண்டுமென்பதை உணரமுடிகிறது. 4-ம் நூற்றாண்டில்
அப்பாஸிய்யாக்களின் ஆட்சி நடந்தது, முதவக்கில் கலீஃபாவாக இருந்தபோது
ஒரு மருத்துவரின் கவனக்குறைவால் நோயாளி இறந்துவிட்டார். கலீஃபா உடனடியாக ஒரு மருத்துவ
கவுன்ஸிலை அமைத்தார். டாக்டர் அபூஸயீத் ஸினான் பின் தாபித் என்பவரை தலைமை மருத்துவராக
நியமித்தார். அவர் மருத்துவர்களிடம் நேர்காணல் மூலம் ஆய்வு நடத்தி 68 பேருக்கு மட்டும் மருத்துவராக பணியாற்ற தரச்சான்றிதழ் வழங்கினார்.
மருத்துவர்களின் ஒரு உயர்மட்டக்குழு அந்த மருத்துவர்களின் சேவையை கண்காணிக்கும். மருத்துவர்
நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்துகளை ஒரு டைரியில் குறித்து வரவேண்டும். பிறகு தலைமை
மருத்துவர் கொடுக்கப்பட்ட மருந்துகள் மெடிக்கல் சட்டத்திற்கு ஒத்தவை தானா? என்று ஆய்வு செய்வார். சிகிச்சையில் ஏற்பட்ட கவனக்குறைவால் நோயாளி
இறந்திருந்தால் மருத்துவர் தண்டிக்கப்படுவார். (தாரீகுல் இஸ்லாம் 3-387) மருத்துவ கவுன்சில் அமைப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாகத்
திகழ்ந்தவர் அப்பாஸீ கலீஃபா தான். (கவாயிதுவ்வஆதாபுன் ஃபீமுஸவலதித்திப் ஃபித்துராதில்
இஸ்லாமீ)
இன்றைய கவுன்ஸில்:
இன்றும் மருத்துவ கவுனஸில் செயல்படுகிறது. போலியை கண்டுபிடிக்க
வேண்டிய நிறுவனமே போலியாக இருந்தால் யாரிடம் போய் முறையிடுவது? பஞ்சாப் பாட்டியாலா மருத்துவக்கல்லூரியில் 2010-11 ம் ஆண்டு மாணவர் சேர்க்ககைக்கு அனுமதி வழங்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் இந்திய மருத்துவ கவுன்சிலின்
தலைவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கல்லூரியை நேரில்ஆய்வு செய்த எம் சி ஐ குழு
பல குறைகளை சுட்டிக்காட்டியிருந்தும் அதையும் மீறி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கவுன்ஸிலின்
தலைவர் 2001-ல் 65 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு 2009 ம் ஆண்டு அது அவருக்கு கிடைத்த அன்பளிப்பு என்று கூறி வழக்கு
கைவிடப்பட்டது. இந்த மருத்துவ கவுன்ஸில் தான் நாட்டில் உள்ள 300 க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகளை கண்காணித்து வருகிறது.
புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது, படிப்பை
முடித்த டாக்டர்களை பதிவு செய்வது, டாக்டர்கள் தங்தளது பணியில்
ஒழுங்காக நடந்து கொள்கிறார்களா? என்று கவனிப்பது போன்ற பல
பொறுப்புகள் இந்த கவுன்சிலுக்கு இருக்கிறது. (தினமலர்-2.5.2010) இந்த கவுன்சிலே மோசடி செய்தால் மருத்துவக்கல்லூரியில்
போதிக்கப்படும் கல்வியின் தரம், மருத்துவர்களின் தரம் எப்படி
இருக்கும்? போலி மருந்துகளும் போலி மருத்துவர்களும்
ஏன் உருவாக மாட்டார்கள்?
No comments:
Post a Comment