Thursday, 4 April 2013

இஸ்லாத்தில் சுத்தமும் சுகாதாரமும்

சுத்தமும் சுகாதாரமும்


உலகமே ஒரு குப்பைத் தொட்டியா? என்று வியக்குமளவுக்கு ஆகாயம் முதல் அதலபாதாளம் வரை குப்பையும் கூளமும் நிலையில் குப்பைக்கு குட்பை சொல்ல மக்கள் தாங்களாகவே முன்வரவேண்டும். யுவான் சுவாங் போன்ற வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவைப் பற்றி பயணக்குறிப்பு எழுதும்போது சென்னை மாநகரை, நாற்றமிகு சென்னை என்று செல்லமாக குறிப்பிட்டனர்.  எல்லாத் துறையிலும் வழிகாட்டியிருப்பது போல் இஸ்லாம் சுகாதார விஷயத்திலும் நிறைவான தெளிவான வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறது. மலஜலம் கழிக்கும் முறைகளையெல்லாம் உங்கள் நபி கற்றுக்கொடுக்கிறாரே என்று கேவலமாகக் கேட்ட ஒருவரிடம் நபித்தோழர் சல்மான் ஃபாரிஸீ (ரலி) அவர்கள் ஆம் என்று கூறி, தொழுகை, நோன்பு மட்டுமல்ல முறையாகச் செய்தால் இதுவும் கூட புனிதமாகிவிடும், என்பதை உணர்த்தினார்கள். முஹம்து நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு தோழர் தலைமையேற்று மக்களுக்கு தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது முன்பக்கமாக எச்சில் துப்பிவிட்டார். இதைக்கண்ட நபியவர்கள் இனிமேல் இவர் உங்களுக்கு தொழுகை நடத்த வேண்டாம் என்று கண்டித்தார்கள். (நூல்: அபூதாவூத்) சுத்தம் இறைநம்பிக்கையில் பாதி என்றும் போதித்தார்கள். அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையையே விரும்புகிறான். எனவே, உங்களுடைய வீட்டுத் திண்ணையையும் முன்பகுதியையும் சுத்தமாக வையுங்கள், என்று நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ) ஒவ்வொரு வீட்டாரும் தங்களுடைய திண்ணையை சுத்தமாக வைத்தால் தெருவே சுத்தமாகிவிடும். மதீனாவில் குப்பை கொட்டுவதற்கென்றே தனி இடம் இருந்திருக்கிறது. எனவே தான் நபியவர்கள் குப்பை கொட்டுமிடத்தில் தொழாதீர்கள் - இறைவணக்கம் புரியாதீர்கள், என தடுத்துள்ளார்கள். எச்சில் எங்கே துப்பலாம்?:
தன்னுடைய எச்சில் வெளியாக வேண்டும். அவ்வளவு தான். அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் இடைஞ்சலைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. வேகமாகச் சென்று கொண்டிருக்கும் பேருந்திலிருந்து வெளியே துப்புவா. எச்சில் கீழே விழுந்ததா? பின் இருக்கையில் இருப்பவர் மீது விழுந்ததா? சாலையோரம் சென்று கொண்டிருப்பவர்கள் மீது விழுந்ததா? அதைப்பற்றி அந்தக் கவலையும் இல்லை. துர்நாற்றம் தவிர்:
பூண்டு, வெங்காயம் சாப்பிட்டவர்கள் இறையில்லத்தின் பக்கம் நெருங்கவே வேண்டாம் என்று எச்சரித்தார்கள. பூண்டு, வெங்காயம் தடை செய்யப்பட்டவையல்ல. எனினும், அவற்றின் துர்நாற்றம் காரணமாக மக்கள் கூடுமிடத்திற்கு வருவதைத் தடை செய்தார்கள். இன்று பீடி, சிகரெட் குடித்துவிட்டு முகத்தில் ஊதுபவர்கள் பற்றி என்ன சொல்வது? நகரத் தூய்மை கருதி அரசாங்கமே ஆங்காஙகே எச்சில் துப்புவதற்கு தகுந்த ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதற்காக துப்புவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை என்பதற்காக எதிரே வருபவரின் முகத்திலா துப்ப முடியும். அவசரமாக எச்சில் வந்தால் (துப்புவதற்கு இடம் கிடைக்க வில்லையானால்) தன்னுடைய ஆடையில் மறைவாக துப்பிவைத்துக்கொள்ளட்டும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்) தன்னுடைய ஆடையை பிறகு கழுவிக்கொள்ளலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது. இந்தப்பூங்காவை சுத்தமாக வைக்க எங்களுக்கு உதவுங்கள், என்று அறிவுறுத்தப்பட்டிருந்தும் அதை அசுத்தமாக்குவது தான் மக்கள் கலாச்சாரம். இங்கு சிறுநீர் கழிக்காதே:
ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது, என்று கூறப்படுவதுண்டு. அதற்காக, சிறு பிள்ளைத்தனமாக கண்ட இடத்திலெல்லாம் சிறுநீர் கழித்துவிட முடியுமா? நம்முடைய மறைவிடத்தை யாரும் பார்த்துவிடக்கூடாது, என்றே யோசிப்பதில்லை. சுகாதாரச் சீர்கேட்டை நினைத்துப் பார்ப்பது பற்றி கேட்கவா வேண்டும். நபி (ஸல்) அவர்கள் வசிப்பதற்கு வீடு தேடுவதைப் போல் சிறுநீர் கழிக்க இடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள், என்று நபிமொழிகளில் வந்துள்ளது.  குடியிருக்கும் வீட்டை அவ்வளவு சீக்கிரத்தில் முடிவு செய்துவிடுகிறோமா? அதே போல் சிறுநீர் கழிக்கும் இடம் தன்னுடைய உடலையும் ஆடையையும் அசுத்தமாக்காத விதத்திலும் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்காத விதத்திலும் யார் கண்ணிலும் படாத விதத்திலும் தேர்ந்தெடுக்க வேண்டும். பொது இடங்களில் அரசு கட்டியிருக்கும் இலவச கழிப்பிடங்களைக் கூட மக்கள் முறையாக பயன்படுத்துவதில்லை, என்பதே உண்மை. நான்கு முழ தூரத்தில் கழிப்பிடம் இருந்தும் அதுவரை நடந்து செல்ல சோம்பல் பட்டு நின்ற இடத்திலேயே அடித்துவிட்டுச் செல்கின்றனர். இதனால், பேருந்து நிலையமே நாறிப்போகிறது, என்பது மட்டுமல்ல, அதன் மூலம் கிருமிகள் உருவாகி நோய் பரவ காரணமாக அமைகிறது. சிறுநீரை வீட்டில் பாத்திரத்தில் தேக்கி வைக்கக்கூடாது. அந்த வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள், என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மஜ்மவுஸ்ஸவாயித் - 1/204) ஆரேக்கியமான மனிதனுக்குப் பக்கத்தில் சிறுநீர் வைப்பதால் மட்டுமே கிருமிகள் தொற்றி நோய் ஏற்பட வாய்ப்புள்ளது, என்று விஞ்ஞானம் கூறுகின்றது. பள்ளிவாசல் எப்போதும் பொதுமக்கள் கூடும் இடாமாக இருப்பதால் இறையில்லத்தின் வாசல்களில் சிறுநீர் கழிப்பதை நபியவர்கள் தடை செய்தார்கள். (மராஸீலு அபீதாவூத்) தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் மட்டுமல்ல, ஓடும் தண்ணீரிலும் சிறுநீர் கழிப்பதை தடை செய்தார்கள். (மஜ்மவுஸ்ஸவாயித்) ஆற்றுத் தண்ணீர் சிறுநீர் கழிப்பதால் அசுத்தமாகிவிடாது, என்றாலும் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பராமரிப்பதில் ஒவ்வொரு தனிமனிதுனுக்கும் அக்கறை காட்ட வேண்டும் என்பதையே இந்த நபிமொழி வலியுறுத்துகிறது. சாபத்திற்கு பயப்படாதவர்கள்:
நடைபாதையிலும் நீர்த் தேக்கத்திலும் மக்கள் (இளைப்பாறுவதற்காக) நிழல் தரக்கூடிய நிழற்கூடங்களிலும் மலம் கழிக்க வேண்டாம். இது மக்களுடைய சாபத்திற்குக் காரணமாகிவிடும், என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) மக்களுடைய சாபத்தைப் பயப்படாதவர்களிடம் அபராதம் வாங்கித்தான் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணமுடியுமென்றால் வேறென்ன செய்வது? ஆற்றங்கரையிலும் பழம் தரும் மரத்தடியிலும் மலம் கழிக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மலஜலம் கழிப்பதில் கூட இவ்வளவு ஒழுக்கங்களை போதித்து அதையும் நன்மை தரும் புனிதாமான காரியமாக மாற்றியிருக்கிறது இஸ்லாமிய மார்க்கம். சுற்றுச்சூழலின் தீங்கிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும் பல போதனைகளை போதித்திருக்கிறது இஸ்லாம். சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக நபியவர்களும் நபித்தோழர்களும் தோட்டங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். தோட்டங்களில் தொழுவதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரியப்பட்டிருக்கிறார்கள். (திர்மிதீ) அழுக்கு படிந்த ஆடையை அணிந்திருந்த ஒருவரைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவரிடம் தனது ஆடையைத் துடைப்பதற்கு எதுவும் இல்லையா? என்று கடிந்து கொண்டார்கள். (மிஷ்காத்) ஒரு நாளைக்கு ஐந்து நேரத்தொழுகையைக் கடமையாக்கியது மட்டுமல்ல, ஒவ்வொரு தொழுக்கு முன்பும் உளு எனும் கை, முகம், கால்களைக் கழுவும் முறையையும் கட்டாயமாக்கியிருக்கிறது, இஸ்லாம். பல் துலக்கும் கலாச்சாரத்தை கடமையாக்காத குறையாக வலியுறுத்தியுள்ளது. மக்களுக்கு சிரமமில்லையானால் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குவதை கட்டாயமாக்கியிருப்பேன், என்று முஹம்மது (ஸல்) அவர்கள் போதித்தார்கள். பல் துலக்குவது வாயைச் சுத்தப்படுத்தவது மட்டுமல்ல; இறைப் பொருத்தத்தையும் தேடித்தரும் என்று நபியவர்கள் கூறி அதையும் இறைவழிபாட்டின் வரிசையில் இணைத்தார்கள். (புகாரி - 1933) சாப்பாட்டுக்கு முன்பு கை கழுவிக்கொள்ள வேண்டுமென்பதும் இஸ்லாம் போதிக்கும் சுகாதாரக் கொள்கைகளில் ஒன்று. உணவருந்தும் முன்பும் பின்பும் கைகழுவிக் கொள்வது சாப்பாட்டில் அபிவிருத்தியை உண்டாக்கும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத் - 3763) நகஇடுக்குகளில் அழுக்கு படிவதால் அது உணவருந்தும் போது அழுக்கும் உடலுக்குள் சென்று உடல்நலத்ததைக் கெடுக்கக் கூடும். எனவே, இது போன்ற காரியங்களிலும் இஸ்லாம் கவனம் செலுத்தியிருக்கிறது. நகத்தை வெட்டுவதையும் இடுக்குகளில் உள்ள முடிகளைக் கலைவைதையும் மனிதனுடைய இயல்பான காரியங்களில் உள்ளவை என்று கூறி நபியவர்கள் உடல் சுத்தத்தின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளார்கள். நாற்பது நாட்களுக்கு அதிகமாக அவற்றை அகற்றாமல் விட்டுவைக்கக்கூடாது, என்று காலக்கெடுவையும் கண்டிப்புடன் கூறியுள்ளார்கள். (திர்மிதி - 2758) தண்ணீர் பாத்திரத்தை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பையைக் கட்டி வையுங்கள். தூங்கிவிழித்தால் தண்ணீர்ப் பாத்திரத்திற்குள் கைகளை நுழைப்பதற்கு முன் மூன்று முறை கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் அவனுயை கரங்கள் (அசூசையான இடங்களில்) உலாவிஇருப்பதை அவன் அறியமாட்டான் என்று கூறி தண்ணீரின் தூய்மையைப் பேணுவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள், நபியவர்கள். நாகரிகம் தெரியாத அந்தக் காலத்திலேயே அதிகமாக செருப்பணியுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். (ஸஹிஹ் முஸ்லிம்) செருப்பின் மூலம் கிருமிகளின் தாக்கத்தை விட்டும் பாதுகாப்புப் பெற முடியும். தண்ணீரில் நாய் வாய் வைத்துவிட்டால் அந்த பாத்திரத்தை ஏழுமுறை கழுவுங்கள். ஒரு முறை மண்ணால் தேய்த்து கழுவுங்கள். இவையனைத்தும் இறைத்தூதர் போதிக்கும் சுக ஆதாரங்களில் சில.

No comments:

Post a Comment